<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பாலியல் வன்முறைகள் நீங்கி உண்மையான சமத்துவ சமூகம் எப்போது உருவாகும் "--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Tuesday, January 1, 2013

"பாலியல் வன்முறைகள் நீங்கி உண்மையான சமத்துவ சமூகம் எப்போது உருவாகும் "
--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

தில்லியில் 16.12.2012 அன்று இரவு 23 அகவை இளம் பெண்ணும் அவருடைய ஆண் நண்பரும் தனியார் பேருந்தொன்றில் பயணம் செய்தபோது அவ்விளம்பெண்ணை பேருந்துக்குள் இருந்த ஓட்டுநரின் நண்பர்கள் ஆறுபேர் பாலியல் வன்முறை செய்து நாசப்படுத்திவிட்டனர். அப்பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருடைய ஆண் நண்பரைத் தாக்கிக் கீழே தள்ளி விட்டுள்ளனர் அக்கொடியவர்கள்.
புதுதில்லியில் ஏகாதிபத்திய அரச பீடங்கள் அமைந்திருக்கும் படகுக்குழாம் பகுதி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு முன் உள்ள திறந்த வெளி ஆகியவை கடந்த டிசம்பர் 22,23,24 நாள்களில் போர்க்களம் ஆயின. நீதிகேட்டு வீதிக்கு வந்தனர் மக்கள். இவர்களில் இளம் ஆண்களும் இளம் பெண்களும் அதிகம். போராடிய மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகைக்குண்டுகள் வீசினர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தடியடி நடத்தினர். போராடிய இளைஞர்கள் காவல்துறையினரைத் திருப்பித் தாக்கினர். அதில் ஓர் உதவி ஆய்வாளர் உயிர் இழந்தார்.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தது. நரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஊளையிட்டன. நாட்டின் ஒழுக்கக் கேடுகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லாததுபோல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசப்பட்டனர். நாட்டின் அலங்கோலங்களின் மூல ஊற்று நாடாளுமன்றம்தான் என்பதை அவர்கள் தங்களின் பகட்டு ஆவேசத்தால் திரை போட்டு மறைத்தனர்.
தில்லிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த போது, 20.12.2012 அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், தாதன்குளம் தொடர்வண்டி நிலையம் அருகே, கிளாக்குளம் கிராமத்திலிருந்து பள்ளி செல்ல நடந்து வந்த 7ஆம் வகுப்பு மாணவி 13 அகவை நிரம்பாத, பருவமடையாத சிறுமியைச் சீரழித்துக் கொலை செய்தான் ஒரு காமக் கொடூரன். புனிதா என்ற இச்சிறுமியின் கொடூரக் கொலை குலைநடுங்க வைத்தது அடங்குவதற்குள் விழுப்புரம் அருகே ஒரு பாலியல் வன்முறை, அதற்கு முன் காரைக்கால் அருகே பாலியல் வன்முறை.
பேத்தியை வல்லுறவு கொண்ட தாத்தா, பெற்ற மகளை வன்புணர்வு செய்த தகப்பன், சித்தப்பன் மகளை வன்கொடுமை செய்த பெரியப்பன் மகன் என காமக் கொடூரன்களின் கண்மண் தெரியாத வெறியாட்டங்கள் நீள்கின்றன; தொடர்கின்றன.
காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை என்ற மருதகாசியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நம் முன்னோர்கள் “காமத்துக்குக் கண் இல்லை“ என்று ஒரு பழமொழியை உருவாக்கியுள்ளார்கள்.
கல்வி வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் காமக் கொடூரங்களும் அதிகரித்து வருவது ஏன்? பொருளியல் வளர்ச்சி முன்பிருந்ததைவிட அதிகரித்து வரும் நிலையில் திருட்டும் கொள்ளையும் அதிகரித்துவருவது ஏன்?
ஒழுக்கத்தை விதைக்காத கல்விப் பெருக்கமும், அறத்தைச் சாராத பொருள்வளர்ச்சியும் காட்டு மிராண்டிக் காலத்தைவிடக் கொடுமைகளைக் கூடுதலாக்கும்.
காமக் கொடூரன்களின் கைவரிசைகள் பெருகுவதற்கு பெண்ணடிமைத் தனத்தின் – ஆணாதிக்கத்தின் சூழல்தான் காரணம் என்று பொதுவாகக் கூறுகிறார்கள். இக்கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இது மட்டுமே முழுக் காரணம் அன்று.
உலகில் அதிக விகிதத்தில் பாலியல் வன்முறைகள் நடக்கும் நாடு அமெரிக்காதான் (யு.எஸ்.ஏ.). இந்தியாவில் இருப்பதைவிடப் பெண்ணுரிமை அதிகமுள்ள நாடு அமெரிக்கா. அதே போல் திருட்டும் கொள்ளையும் அதிக விகிதத்தில் நடக்கும் நாடு அதே அமெரிக்காதான். உலகில் மிகப்பெரிய பணக்கார நாடும் அதுதான்.
2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த பாலியல் வல்லுறவுகளுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 83,425. குத்து, வெட்டு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைக் குற்றங்களுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 12,03,564. கொலை வழக்குகள் 14,612. கொள்ளை வழக்குகள் 3,54,396. மோட்டார் வாகனத் திருட்டு வழக்குகள் 7,15,373. இப்படி இன்னும் நீள்கிறது பட்டியல்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 20,19,234. அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை 2011 இல் 31,15,91,917. இந்தியாவின் மக்கள் தொகை 121,01,43,422. இந்திய நாடெங்கும் 2011 இல் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 3,13,635.
அமெரிக்கா கிட்டத்தட்ட 100 விழுக்காடு கல்வி வளர்ச்சி பெற்ற நாடு. பொருளியல் வளர்ச்சியில் இந்தியாவை விட எத்தனையோ மடங்கு உயரத்தில் இருக்கிறது. அவை போலவே பெண்ணுரிமையும் இந்தியாவை விட மிக அதிகமாக அங்குள்ளது. பிறகு அங்கு ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக உள்ளன?
அறிவு வளர்ச்சி இருக்கிறது. உரிமைகள் பல இருக்கின்றன. பொருள் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் மன வளர்ச்சி இல்லை. அதனால் அங்கு ஒழுக்கமும் வளரவில்லை. அறமும் வளரவில்லை.
மன வளர்ச்சி என்பது சாரத்தில் மனதைக் கட்டுப் படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளும் ஆற்றல்தான். பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல் மனம் எப்போதும் அற்ப மகிழ்ச்சிகளை நோக்கித் தாவுகிறது. எளிய செய்திகளையே விரும்பி ஏற்கிறது. சுற்றுப் பாதையில் போவதைவிடக் குறுக்கு வழியில் சென்று இலக்கைத் தவற விடுகிறது.
இப்படிப்பட்ட மனதைக் கட்டுப்படுத்துவது என்பது எப்படி? மனநிறைவுதான் மனதைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. மனதில் பற்றாக் குறைகள் நிறைந்திருக்கும்போது மனநிறைவு எப்படி ஏற்படும்? பற்றாக்குறை என்பது எது எதில் பற்றாக்குறை?
மனித நுகர்வில் ஏற்படும் பற்றாக்குறைகள்தான் முதன்மையான பற்றாக்குறைகள். நுகர்வில் முதன்மையானவை இரண்டு. ஒன்று பொருள் நுகர்வு. இரண்டு பாலியல் நுகர்வு. இவ்விரண்டையும் சார்ந்தே மனித மனநிலை பெரிதும் இயங்குகிறது.
இயற்கையைப் பொறுத்தவரை, பொருள் நுகர்வுக்கும் பாலியல் நுகர்வுக்கும் பற்றாக்குறை வைக்கவில்லை. உண்ணவும் உடுத்தவும் உறைந்திடவும் போதிய பொருள்களை இயற்கை வழங்குகிறது. அதைப் போலவே ஆணையும் பெண்ணையும் பொதுவாக சம எண்ணிக்கையில் உருவாக்குகிறது. பிறகு ஏன் இவ்விரண்டிலும் பற்றாக்குறை?
சமூகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொருள்களைப் பேராசை கொண்ட தனி மனிதர்கள் தங்களுக்கென்று மிகையாக வளைத்துக் கொள்கிறார்கள்.
இதனால் சமூகத்தில் பெரும்பாலோர் பொருள் பற்றாக் குறையினால் அதாவது வறுமையினால் துன்பப்படுகிறார்கள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஏற்றத் தாழ்வை – ஒரு தரப்புப் பற்றாக்குறையை நீக்கிச் சமன் செய்து, அனைவரும் பகிர்ந்து வாழும் சமூக அமைப்பை உருவாக்க வந்ததுதான் நிகரமை (சோசலிச)த் தத்துவம். வர்க்கப் போராட்டம், வர்க்கப் புரட்சி என்பவை எல்லாம் நிகரமை இலக்கு நோக்கியவையே!
பாலியல் பற்றாக்குறை எப்படி ஏற்படுகிறது? பெண் பற்றாக்குறையினால் அல்லது ஆண் பற்றாக்குறையினால் ஏற்படுவதன்று பாலியல் பற்றாக்குறை.
பாலியல் வேட்கை உடல் சார்ந்தது மட்டுமன்று. மனம் சார்ந்ததும் ஆகும். பாலியல் வேட்கைக்கு உடல் அடிப்படையானது. ஆனால் மனம் முகாமையானது. உடல் மனதைத் தூண்டுவதும் மனம் உடலைத் தூண்டுவதும் சேர்ந்தும் நடக்கும்; ஒன்றுக்குப் பின் ஒன்றும் நடக்கும். அதாவது உடல் தேவை மனதைத் தூண்டுவதும் மன வேட்கை உடலைத் தூண்டிவிடுவதும் உண்டு.
பாலியல் பற்றாக்குறையில் பெரும்பங்கு வகிப்பது மனதில் ஏற்படும் பற்றாக்குறையே! அதாவது மனம் நிறைவு பெறாமையே! இணையராகிவிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் பொருத்தமின்மை அல்லது உறுப்புக் குறைபாடு காரணமாகப் பாலியல் பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. கலவிக் கலை பற்றிய புரிதல் இன்மையும் பாலியல் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் ஆகும். இவை அனைத்தையும் விட மனதால் ஏற்படும் பற்றாக்குறையே அதிகம்.
பாலியல் இன்பத்தை மனம் கற்பனை செய்து, கற்பனைசெய்து பாலியல் வேட்கையைப் பெருக்கிக் கொள்கிறது. பொருள் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதை விட சுவைப்பதை விட பாலியல் நுகர்வைக் கற்பனையில் அனுபவிப்பதும் சுவைப்பதும் அதிகம். அதனால்தான் கனவில் பாலுறவுக் காட்சிகள் தோன்றுவதும் அதனால் இளம் ஆண்களுக்கு விந்து வெளிப்படுவதும் பெண்களுக்கு திரவக் கசிவுகள் ஏற்படுவதும் நடக்கிறது.
இந்த மானசீக – கற்பனை வயப்பட்ட பாலியல் வேட்கைகளில் ஆண்களும் பெண்களும் எளிதில் சிக்கித் தவிக்கிறார்கள். இதனால் நிறைவேறாத ஆசைகள் அடிமனதில் நிரம்பிக் கிடக்கின்றன.
கற்பனைப் பாலியல் நுகர்வுக்கும் நிறைவேறாத ஆசைகளுக்கும் தீனி போடுவதன் மூலம் வாசகர்களை, பார்வையாளர்களை ஈர்த்துத் தமது தொழிலை, வணிகத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் பல எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், விளம்பரதாரர்கள் மற்றும் பல நிறுவனத்தினர்.
திரைப்படத்திலோ, விளம்பரப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, கதைகளிலோ, ஏடுகளிலோ ஆணும் பெண்ணும் பாலுறவுச் சொற்களைப் பரிமாறிக் கொள்ளும்போதும் பாலுறவுக்கான உடல் மொழிகளைப் பகிர்ந்து கொள்ளும் போதும் அக்காட்சியைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஆண் அல்லது பெண் அந்தக் கதாபாத்திரத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு சுகம் காண்கிறார்கள். துக்கக் காட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டு அழுகிறார்கள். இதுதான் மானசீக வாழ்க்கை அல்லது கற்பனை வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்தக் கற்பனை வாழ்க்கை விலங்குகளுக்குக் கிடையாது. எனவே அவற்றிடையே பாலியல் வக்கிரங்கள் கிடையாது. இயற்கையோடியைந்த பாலியல் ஒழுக்கம் அவற்றிடையே நிலவுகிறது. விலங்குகளிடையே பாலியல் வல்லுறவு என்பது கிடையாது.
விலங்குகளுக்கு இல்லாத அளவில் மனவளர்ச்சி மனிதர்களுக்கு இருப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. எப்போதுமே தீமைகளை மனம் எளிதில் பற்றிக் கொள்ளும். கற்பனைப் பாலியல் துய்ப்புகளை மிகைபடத் தூண்டிவிட்டு, ஆண்களையும் பெண்களையும் தங்கள் வசம் ஈர்ப்பதில், சமூகப் பொறுப்பில்லாத வணிக நோக்கு எழுத்தாளர்கள், கலைப்படைப்பாளிகள், தொழில்-வணிக முதலாளிகள் முதலியோர் இடையறாது ஈடுபட்டு வருகின்றனர்.
விளம்பரப் படங்கள் கூடப் பாலியல் உணர்வைத் தூண்டி விட்டுத்தான் தமது பொருளை விளம்பரம் செய்கின்றன. ஓர் ஊர்தி நிறுவன விளம்பரத்தில், இளம் ஓட்டுனர் இளம் பெண்ணைப் பார்த்து “பட்டன் திறந்திருக்கும்மா“ என்று சொல்வார். அப்பெண்ணின் மார்பகங்கள் காட்டப்படாமலே சொல்லின் மூலம் மார்பகங்களைக் கற்பனை செய்ய வைத்துக் கவனத்தை ஈர்க்கிறது அவ்விளம்பரம்.
மறைபொருளாகச் சொற்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் இந்த விளம்பரக் காட்சியே பாலுணர்வைத் தூண்டுகிறது. கால்பங்கு, அரைப்பங்கு, முக்கால்பங்கு என உடலுறவுக் காட்சிகளைக் காட்டும் திரைப்படங்கள், விளம்பரங்கள், கதைகள் மற்றும் கட்டுரைச் சித்தரிப்புகள் எந்த அளவு தீவிரப் பாலுணர்வைத் தூண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிறுவர்களுக்கான தொலைக்காட்சித் தொடர்களும் பாலுணர்ச்சியைத் தூண்டும்படிதான் அமைக்கப்படுகின்றன. தெருக்களில், சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், விளம்பரங்கள்!
எந்நேரமும் காமப் பசியோடும் காம ஏக்கத்தோடும் மனம் அலைபாயும்படி மனிதர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் தன்னல வெறியர்கள்.
“எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் கொடுத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை என்னும் விஷம் கொடுத்தான்“
என்று கண்ணதாசன் எழுதினார்.
பாலியல் பற்றாக்குறையை – பாலியல் வறுமையை ஒவ்வொருவர்க்கும் செயற்கையாக உருவாக்கி விடுகிறார்கள் தன்னலப் படைப்பாளிகளும், தன்னலத் தொழில்-வணிக நிறுவனங்களும்!
புயல் காற்றில் சிக்கிக் கொண்ட மனிதர்களில் பலவீனமானவர்கள் விழுந்து விடுகிறார்கள். வலிவுள்ளவர்கள் தப்பி விடுகிறார்கள். அதுபோல காமச் சூறாவளி சுற்றிச் சுழன்றடிக்கும் சூழ்நிலையில் மனதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கு படுத்தும் பண்பு, பழக்கவழக்கம், பயிற்சி உள்ளவர்கள் தப்பிவிடுகிறார்கள். அவ்வாறில்லாதவர்கள் சீரழிகிறார்கள். மற்றவர்களைச் சீரழிக்கிறார்கள்.
சமூக உறுப்பினர்கள் அனைவர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய பொருளைப் பேராசைக்காரர்கள் தங்களுக்கு மட்டுமே குவித்துக் கொண்டு மற்றவர்களைப் பற்றாக்குறையில்-வறுமையில் தள்ளுவது போல் தன்னல வெறிப் பேராசைக்காரர்கள் மற்றவர்களுக்குப் பாலுணர்ச்சியை மிகைபடத் தூண்டிவிட்டு அவர்களை செயற்கையான பாலியல் பற்றாக்குறையில் தள்ளிவிட்டு சீரழிக்கிறார்கள்.
சிலரின் மிகைப் பொருள்குவிப்பால் பலர் வறுமையுறுகின்றனர்; அப்பலரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்குள்ளாகி திருடுவதிலும் கொள்ளையடிப்பதிலும் இறங்குகின்றனர். அதேபோல் பாலியல் பற்றாக்குறைக்கும்-வறுமைக்கும் உள்ளானோரில் சிலர் ஒழுக்கச் சிதைவுகளுக்கு உள்ளாகி பெண்களை வல்லுறவு கொள்வதுடன் கொலையும் செய்கின்றனர்.
இந்த பாலியல் குற்றங்களை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக மட்டும் ஒற்றைப் பரிமாணத்தில் குறுக்கிவிடக் கூடாது. ஆணாதிக்கம், சமூகம் தழுவிய அளவில் தன்னல வெறியர்களால் தூண்டிவிடப்படும் பாலியல் வெறி, மதுப்பழக்கம் போன்றவை பாலியல் குற்றங்களின் தூண்டுவிசைகளாக இருக்கின்றன. பெண்களிடமும் பாலியல் வெறி தூண்டிவிடப்படுகின்றது. அதற்காகப் பெண்கள் தங்களுக்குத் தொடர்பில்லாத ஆண்களை வல்லுறவு கொள்வதில்லை. பாலியல் வெறிக்கு உள்ளான பெண்களில் சிலர் மனக்கட்டுப்பாட்டை இழந்து வரம்பற்ற பாலுறவை நாடுகிறார்கள். அதற்கு வன்முறையை நாடாமல் ஆண்களைக் கவர்தல் என்ற உத்தியைக் கையாள்கிறார்கள்.
பாலியல் வன்முறை புரியும் ஆண்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோருவது உணர்ச்சி வசப்பட்ட வெளிப்பாடே தவிர உரிமையின்பாற்பட்டதன்று. வழக்குகளை விரைந்து முடித்தல், காவல்துறையினர் பாலியல் வன்முறைக் குற்ற வழக்குகளை உரிய அக்கறையோடும் கவனத்தோடும் நடத்துதல், தனி நீதிமன்றங்கள் அமைத்தல் என்ற வழிகளில்தாம் பாலியல் குற்றங்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். குற்றம் புரியாத அப்பாவிகளை இவ்வழக்குகளில் சிக்கவைக்கக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும்.
பாலியல் குற்றம் புரிந்த ஆண்களின் ஆண்மையை அகற்றுதல் அதாவது காயடித்தல் – அதற்கான ஊசி போடுதல் போன்ற தண்டனைகளையும் சிலர் முன் மொழிகின்றனர். இவ்வாறான தண்டனைகள் மனித நேயம், மனித உரிமை ஆகிய துறைகளில் சனநாயகத் தன்மை இல்லாத எதேச்சாதிகாரக் காலங்களில் வழங்கப்பட்டவை. கண்ணுக்குக் கண் பறிக்கும் தண்டனைகளும், மரண தண்டனைகளும் கூடாது என்ற மனித நேயமும் மனித உரிமைக் கோட்பாடும் வளர்ந்து வரும் இக்காலத்தில் பாலியல் குற்றங்களுக்குக் காயடித்தல் அல்லது மரண தண்டனை வழங்குதல் ஏற்கக் கூடியதன்று. தவிரவும் கொடுந்தண்டனைகள் குற்றங்களை நூற்றுக்கு நூறு தடுத்துவிடுவதில்லை. “தாங்கள் தப்பித்துக் கொள்வோம்“ என்ற துணிச்சலிலும், விளைவுகளைச் சீர்தூக்கிப் பார்க்காத கண நேர வெறியிலும்தாம் பெரும்பாலும் குற்றங்கள் நடக்கின்றன.
தங்கள் சொந்த இலாபத்திற்காகத் தன்னல வெறியோடு சமூகத்தில் காம வெறியைத் தூண்டி விடும் கயவர்களுக்கு என்ன தண்டனை வழங்குவது? இதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் இவர்களும் தண்டனைக்குள்ளாக வேண்டும். இவர்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுப்பாடுகள் வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் தன்கட்டுப்பாட்டுணர்ச்சியை வளர்க்க வேண்டும். பெரும்பாலான மக்கள் குற்றமிழைக்காதவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் தண்டனைக்கு அஞ்சுவதால் அன்று. பொது ஒழுக்கம் பேணுவதில் அவர்களுக்குள்ள மனப்பக்குவமும் அவர்களிடம் உள்ள பண்பு நிலையுமே காரணங்களாகும்.
எதிலுமே மிகைப்பற்று கூடாது. இயல்பான பற்று இயற்கைவிதி; மிகைப்பற்று மன நோய். மிகைப்பற்று காலப்போக்கில் வெறியாக மாறுகிறது. வெறியானது குற்றச் செயல்புரியத் தூண்டுகிறது.
இயல்பான தேவைகளை அடைய முயல வேண்டும். அது தவறன்று. அம்முயற்சி பிறரின் உரிமையைப் பறிப்பதாக அமையக்கூடாது. செயற்கையாகத் தூண்டிவிடப்பட்ட தேவைகள் மனதில் எழுந்தால் அவற்றை மறக்கவும் புறந்தள்ளவும் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்.
ஆசைப்பட்டதையெல்லாம் அடைய வேண்டும் என்று பின்நவீனத்துவ வாதிகளில் சிலரும் பெருநிறுவனச் (கார்ப்பரேட்) சாமியார்களில் சிலரும் கூறிவருகின்றனர். ஒழுக்கச் சிதைவின்றியோ அல்லது நேர்மையான வழியிலோ அல்லது பிறரது உரிமைகளையும் இன்பங்களையும் பறிக்காமலோ ஒருவர் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியாது. “எல்லாவற்றுக்கும் ஆசைப்படு“ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது நுகர்வு வெறி தவிர வேறன்று. இந்நுகர்வு வெறி பிறர்க்கு உரிமையாய் உள்ள நுகர்வுகளைப் பறிப்பதிலோ அல்லது சிதைப்பதிலோ போய் முடியும்.
இலாப வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் உலகமயக் கோட்பாடு தனியார்மய – தாராளமயக் கோட்பாடு தனிநபர் நுகர்வு வெறியைப் பல்வேறு “சுதந்திரங்களின்“ பெயரால் கட்டமைக்கிறது. பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவுப்பிணைப்பை மட்டுமின்றி கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள உறவுப் பிணைப்பைக் கூட உலகமயமும் தாராள மயமும் “தனிமனித சுதந்திரத்தின்“ பெயரால் அறுத்தெரிகிறது. சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் அன்று, தனிமனிதரே என்பதுதான் உலகமயப் பண்பாடு. சமூக மனிதர்களை உதிரிகளாக்கி விடுகிறது.
பெரும்பெரும் முதலாளிய நிறுவனங்களின், வணிக நிறுவனங்களின் பொருள்கள் அனைத்தையும் வாங்கிக் குவிக்கும் வாடிக்கையாளர்கள் உலகமயத்திற்குத் தேவை. உலகமயத்தைப் பொறுத்தவரை தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, கணவன், மனைவி, தமிழன், தமிழச்சி என்பது முக்கியமல்ல. இவர்கள் அனைவரும் நுகர்வாளர்கள். எனவே இவர்கள் அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள்!
வாடிக்கையாளர் மனநிலையை உருவாக்குவதும் வளர்ப்பதும்தான் முதலாளிய நிறுவனங்களின் இலட்சியம்! பற்பல பெயர்களில் சிறப்பு விற்பனை நாள்களை அந்நிறுவனங்கள் உருவாக்குகின்றன. ஆடித்தள்ளுபடி, அட்சய திரிதி என்று ஆண்டு முழுவதம் சிறப்பு நாள்களை அறிவித்து விற்பனை நாட்களை உருவாக்கிக் கொள்கின்றன நம் நாட்டு நிறுவனங்கள். வெளி நாட்டு நிறுவனங்களோ “காதலர் நாள்“ போன்று பல விற்பனை நாள்களை உருவாக்கிக் கொள்கின்றன.
கணக்குப் பார்த்தால் 365 நாள்களும் காதலர் நாள்கள்தாம். “காதலர் நாள்“ என்று குறிப்பிட்ட நாளை வரையறுத்துக் கொண்டாடச் செய்வதில் பன்னாட்டு நிறுவனங்களின் பண்டவிற்பனை உத்தி அடங்கியுள்ளது. அந்நாளில் தமிழ்நாட்டு இளம் ஆண்களும் பெண்களும் குறிப்பாக மாணவர்கள் சாலைகளில், தொடர்வண்டிகளில், பூங்காக்களில், கடற்கரைகளில் கட்டிப் பிடித்துக் கொண்டு திரிவதும், முத்தம் கொடுத்துக் கொள்வதும் பரவி வருகிறது. சுவை மிகுந்த தின்பண்டங்களை பிறர் சாப்பிடும்போது, அதைப் பார்ப்பவர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும், பாலியல் நுகர்வைப் பகிரங்கமாகச் செய்யும் போது பிறருக்கு ஏற்படும் தூண்டுணர்ச்சி, தின்பண்டங்கள் உண்பதைப் பார்ப்பதால் ஏற்படுவதை விடப் பன்மடங்கு அதிகமாகும்.
மேலை நாட்டுப் பண்பாடு நமக்கு அப்படியே ஒத்துவராது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வார்கள். குழந்தையும் பெற்றுக் கொள்வார்கள். பின்னர் ”பிடிக்கவில்லை” என்று கூறிப் பிரிந்து விடுவார்கள். திருமணம் செய்து கொள்பவர்களும் அடிக்கடி மணமுறிவு செய்து கொள்கிறார்கள். இப்பண்பாட்டால் அந்நாடுகளில் பரவலான மக்கள் மன அமைதியற்று வாழ்கிறார்கள்.
தமிழ்நாட்டுக் குடும்ப உறவில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் இருக்கின்றன. கணவன் – மனைவி சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தில் சனநாயகத் தன்மை வேண்டும். பெண்ணுரிமை நிலைநாட்டப்பட வேண்டும். மணமுறிவு உரிமை வேண்டும். அதே வேளை மணமுறிவு உரிமையை வேறு வழியில்லாத நிலையில் கடைசியாகப் பயன்படுத்தும் மனமுதிர்ச்சி வேண்டும். மேலை நாடுகளைப் போல் நம் நாட்டில் குடும்பங்களை அழித்துக் கொண்டு மன அமைதியின்மையையும் உதிரித் தன்மையையும் விலைக்கு வாங்கக் கூடாது.
மேலை நாட்டு ஆண்களையும் பெண்களையும் பின்பற்றி நம் நாட்டு இளைஞர்கள் அரை குறை ஆடை உடுத்த வேண்டியதில்லை. ஆண்கள் “பர்மிடாஸ்“ என்று முழங்காலுக்கு மேல் கால்சட்டை அணிந்து கொண்டு வீதிகளில் செல்வது நாகரிகக் குறைவானது, கண்ணியக் குறைவானது. அதே போல் பெண்கள் மார்பகப் பிளவு தெரிவது போலும் பாதி உடல் தெரிவது போலும் இரவிக்கை அணிந்து செல்வதும் கண்ணியக் குறைவானது. ஆண்களும் பெண்களும் முழுக்கால் சட்டை அணிந்து கொள்வதோ, பெண்கள் சுடிதார் அணிந்து கொள்வதோ தவறன்று.
பிறர், குறிப்பாக எதிர்ப்பாலினர் தம்மைப் பொருட்படுத்தி நோக்கும்படி தாம் அழகாக ஒப்பனை செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது சராசரி ஆண்களின் மற்றும் பெண்களின் உளவியலாகும். அது உறுப்புக் கவர்ச்சி காட்டுவதாக மிகைபடக் கூடாது.
மனித மூளையும் மனமும் எண்ணங்கள் அற்ற வெற்றிடமாக ஒரு நொடி கூட இருப்பதில்லை. ஏதாவது எண்ணங்கள் இருந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணங்கள் பிறர்க்குத் துன்பம் தராததாக, நல்ல பண்பு சார்ந்ததாக, உயர்ந்த இலட்சியம் சார்ந்ததாக இருந்தால் திருட்டு, கொள்ளை, பாலியல் வன்முறை போன்றவை அதிகம் நடக்காது.
சனநாயகக் காலத்தில் சமூகத்தை நல்வழிப்படுத்தும் எண்ணங்கள் சிறந்த அரசியல் இலட்சியங்கள் வழியாகவே வருகின்றன. அரசியல் தலைமைகளிலிருந்து வரும் சமூக மேம்பாட்டுக் கருத்துகள் பெரும் மக்கள் திரளை எளிதில் கவ்வுகின்றன. இப்போது உயர்ந்த இலட்சியமில்லாத அரசியல், ஒட்டுண்ணி முதலாளிய அரசியலாகச் சீரழிந்துள்ளது. இவ்வரசியல் சமூகச் சீரழிவுகள் அனைத்திற்கும் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் தேர்தல் சீரழிவு அரசியல் சமூக அறத்தை, மனித மதிப்பீட்டைச் சீர்குலைத்துச் சிதைத்து விட்டது. தில்லிப் பாலியல் வன்முறைக்காக தேர்தல் கட்சிகள் விடும் கண்ணீர் முதலைக் கண்ணீர். அக்கட்சிகளில் பாலியல் குற்றமிழைத்தவர்கள் எத்தனை பேர் வேட்பாளர்களாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள் என்பது தேர்தல் ஆணையப் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழர் அறத்தின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ்த் தேசிய இலட்சிய அரசியல், தமிழ் மக்களிடம் ஆணாதிக்கத்தை நீக்கி பெண்களின் உரிமையை நிலைநாட்டி உண்மையான சமத்துவ சமூகத்தை உருவாக்கும் வல்லமை படைத்தது.

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்