<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

இப்போதுள்ள காவிரி ஆணையத்தை கலைத்து புதிய ஆணையம் அமைக்கவேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!

Saturday, June 29, 2019


இப்போதுள்ள காவிரி ஆணையத்தை கலைத்து
புதிய ஆணையம் அமைக்கவேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
ஐயா பெ. மணியரசன் கோரிக்கை!


புது டில்லியில் இன்று (25.06.2019) நடந்த காவிரி மேலாண்மை ஆணையம் வழக்கம் போல் ஆசை வார்த்தைகூறி தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டது. கடந்த 28.05.2019 அன்று கூடிய மேலாண்மை ஆணையம் சூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று “ஆணையிட்டது”. ஆனால் அந்த ஆணையை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. கர்நாடக அணை திறந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரவில்லை. கர்நாடகத்திலிருந்து காவிரியில் கலந்த சாக்கடை கழிவு நீரை கணக்கில் எடுத்து 1.8 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட்டதாக ஆணையம் கூறுகிறது. 

இன்று காவிரி ஆணையத் தலைவர் மசூத் உசேன் சூன் மாதத்திற்குள் பாக்கித் தண்ணீரையும் சூலை மாத்திற்குரிய 31.3 டி.எம்.சி தண்ணீரையும் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட ஆணையிட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த கூட்டத்தில் அவர் இட்ட ஆணையை கர்நாடகம் செயல்படுத்தவில்லையே என்று செய்தியார்கள் கேட்டதற்கு பருவமழை பெய்தால் கர்நாடகம் திறந்துவிடும் என்று ஆணையர் மசூத் உசேன் பதில் கூறினார். அதாவது தான் வெளியிட்ட ஆணை செயல்படுத்தபடவில்லை என்ற சிறு கூச்சம் கூட இல்லாமல் சூலை மாதத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடும் என்று கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களை அந்த அளவுக்கு முட்டாள்களாக அவர் நினைக்கிறார். 

அவ்வாறு தமிழர்களை தரக்குறைவாக மசூத் உசேன் நினைப்பதற்கு இடம் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் சட்டப்படியான காவிரி நீரைப் பெறுவதில் உரிய அக்கறைக் காட்டாமல் ஒப்புக்குப் பேசி வருகின்றன என்ற உண்மையை இந்திய அரசும், காவிரி ஆணையமும் புரிந்து கொண்டுள்ளன. 

தமிழ்நாட்டு வேளாண்மைக்கு மட்டும்மின்றி குடிநீர் ஆதாரமும் காவிரி தான். எனவே இது விவசாயிகள் பிரச்சினை என்று சுருக்கிவிடாமல் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டு உயிர் பிரச்சினை என்பதை உணர்ந்து தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து போராடத் தேவை வந்துள்ளது.

ஓய்வு நேரப் பணியாக மசூத் உசேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை உச்சநீதித் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகின்றன. எனவே இப்போது உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் கலைத்து விட்டு செயல்படுத்தும் அதிகாரமுள்ள முழுநேரப் பணியாக புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தையும், புதிய ஒழுங்காற்றுக்குழுவையும் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, இந்திய அரசைக் கோரவேண்டும். காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இக்கோரிக்கையை முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்து கொள்கிறேன். 

Labels:

இந்தி கட்டாயமில்லை என்பது ஏமாற்று வேலை! மும்மொழித் திட்டம் இந்தித் திணிப்பே! பெ. மணியரசன்

Tuesday, June 4, 2019

இந்தி கட்டாயமில்லை என்பது ஏமாற்று வேலை!
மும்மொழித் திட்டம் இந்தித் திணிப்பே!

தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


கஸ்தூரிரெங்கன் குழு பரிந்துரையில் இந்தி கட்டாயம் என்று முன்மொழியப்பட்டது நீக்கப்பட்டு, விரும்பும் மொழியை மூன்றாவது மொழியாக மாணவர்கள் 6ஆம் வகுப்பிலிருந்து எடுத்துப் படிக்கலாம் என்று செய்யப்பட்ட திருத்தம் மறைமுகமாக இந்தியைத்தான் திணிக்கிறது. எவ்வாறெனில், மும்மொழிப் பாடம் கட்டாயம் என்பது இதில் நீக்கப்படவில்லை!
கஸ்தூரி ரெங்கன் பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்போது அனைத்திந்தியாவிலும் பள்ளிப் படிப்பில் மூன்று மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் இப்போதுள்ள இருமொழித் திட்டம் மாற்றப்பட்டு, மூன்று மொழிகள் கற்பது கட்டாயம் ஆகும். தமிழ், ஆங்கிலம் போக மூன்றாவது மொழியாக மாணவர்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள்? இந்தியைத்தான்!
தமிழ்நாட்டில் ஏற்கெனவே தனியார் நடத்தும் பல்லாயிரக்கணக்கான நடுவண் வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கற்பிக்கப்படுகிறது. அத்துடன் இந்திய அரசு தமிழ்நாட்டில் அதன் அலுவலகங்கள், நிறுவனங்கள், மக்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் தொடர்வண்டித்துறை, வங்கிகள், அஞ்சலகம் அனைத்திலும் இந்தியே கோலோச்சுகிறது.
அது மட்டுமல்ல நகரங்கள், கிராமங்கள், தெருக்கள், சந்து பொந்துகள் அனைத்திலும் நடுவண் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தியில் எழுதப்படுகின்றன. “சுவாஜ் பாரத்” என்பது போல் இந்தி தமிழில் எழுதப்படுகின்றது.
இருபத்து நான்கு மணி நேரமும் இந்தியையும், சமற்கிருதத்தையும் பரப்பும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தீவிரப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில்தான் மாணவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள்.
எந்தக் காலத்திலும் மும்மொழித் திட்டம் இந்தி மாநிலங்களில் செயல்பட்டதே இல்லை! அம்மாநிலங்களில் இந்தி அல்லாத வேறொரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டுமென்று கஸ்தூரிரெங்கன் கூறுவது கானல் நீர் குடிநீராகும் என்று சொல்வதுபோல் உள்ளது. ஏனெனில், மும்மொழிக் கொள்கையின் முதன்மை நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான்!
இந்தித் திணிப்பு வெறும் மொழிச்சிக்கல் அல்ல – அடிப்படையில் இனச்சிக்கல்! இந்தி பேசும் இனம் இந்தியாவை ஆள்கிறது என்பதை எல்லா முனையிலும் நிலைநாட்ட வேண்டுமென்பதே வடநாட்டின் முழு இலட்சியம்.
பல மொழி பேசும் கூட்டாட்சி நாடுகளில் எங்கேயும் பெரும்பான்மை பேசுவோர் மொழி ஒற்றை அலுவல் மொழியாகவோ கட்டாயக் கல்வி மொழியாகவோ இல்லை. அவரவர் தாய்மொழியே அலுவல் மொழி – கல்வி மொழி. எடுத்துக்காட்டு – முன்னாள் சோவியத் ஒன்றியம், சுவிட்சர்லாந்து, கனடா.
மாணவர்கள் மூன்று மொழிகள் கட்டாயம் படிக்க வேண்டுமென்பது அவர்களுக்கு பெரும் சுமையாகும். எந்த நாட்டிலும் மாணவர்களுக்கு மூன்று மொழிக் கட்டாயச் சுமை இல்லை! மாணவர்கள் அறிவியல், கணக்கு, வரலாறு போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி திறமை பெறும் ஆற்றலை மூன்று மொழிக் கல்வி முடக்கிவிடும்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் இருக்கும்; மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறுகிறார்; துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகிறார்.
மும்மொழித் திட்டத்தை அனைத்திந்தியாவிலும் செயல்படுத்த நடுவண் அரசு புதிய சட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைச் சட்டம் செல்லுபடி ஆகாது. ஏன்? கல்வி பொது அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. பொது அதிகாரப் பட்டியலில் இருக்கும் ஒன்றுக்கு மாநில அரசும் நடுவண் அரசும் தனித்தனியே சட்டம் இயற்றி இருந்தால் நடுவண் அரசு சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். மாநில அரசின் சட்டம் செல்லாது!
புதிதாக மாநில அரசு சட்டம் இயற்ற முயன்றால், அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும். நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாகத் தமிழ்நாடு இயற்றிய சட்ட முன்வரைவு குடியரசுத் தலைவர் ஒப்புதல் இல்லாமல் செயலற்றுப் போனதை நாம் பார்த்தோம்.
தமிழ்நாடு அரசின் ஏறு தழுவுதல் சட்ட முன்வரைவிற்கு குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டபின் தான் சட்டமானது என்பதும் நமக்குத் தெரியும். மெரினாக் கடற்கரையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களின் நகரங்களிலும் இலட்சோப இலட்சம் மக்கள் இரவு பகலாகக் காத்திருப்புப் போராட்டம் நடத்தியதால்தான் குடியரசுத் தலைவரின் கையொப்பம் ஏறு தழுவுதலுக்குக் கிடைத்தது.
எனவே, இந்தித் திணிப்பில் இந்திய அரசு பின் வாங்கிவிட்டது என்று கருதினால் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு சுகம் காணும் சோம்பேறித்தனமாகவே அமையும்; உரிமைப் போராட்டத்திற்குத் தயங்கி ஒதுங்குவதாக அமையும்!
“இந்திய அரசே, மாநிலத்தின் கல்வி உரிமையில் கை வைக்காதே! மிச்சம் மீதி இருக்கும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு வேட்டு வைக்காதே! கஸ்தூரி ரெங்கன் அறிக்கையை முற்றிலுமாகக் கைவிடு!” என்ற உரிமை முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். இப்போது நாம் தனியாக இல்லை! மேற்கு வங்கம், கர்நாடகம் போன்ற மாநிலங்களின் முதலமைச்சர்களே இந்தித் திணிப்பை எதிர்க்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் பா.ச.க. பரிவாரங்கள் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஊசலாட்டமின்றி இந்தித் திணிப்பையும் கஸ்தூரி ரெங்கன் குழு அறிக்கையையும் எதிர்க்க வேண்டும்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்