<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? -- தோழர் பெ. மணியரசன்

Monday, March 27, 2017

===========================================
தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள்
அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா?
===========================================
இந்திய அரசே உடனே தலையிடு!
===========================================
காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
===========================================


இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வஞ்சித்து விட்டதாலும், பருவமழைப் பொய்த்து விட்டதாலும் வரலாறு காணாத வறட்சியில் தமிழ்நாடு தத்தளித்துக் கொண்டுள்ளது. இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு உழவர்கள், தண்ணீரின்றி வாடிய பயிர்களைக் கண்டு அதிர்ச்சியில் இறந்துள்ளனர். 

இந்நிலையில், உயிரிழந்த உழவர் குடும்பங்களுக்கும், நட்டமடைந்துள்ள உழவர்களுக்கும் உரிய வறட்சி நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு சற்றொப்ப ரூ. 39,565 கோடி கேட்ட நிலையில், இந்திய அரசு வெறும் 1,748 கோடி ரூபாயே வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டு உழவர்களுக்கு முழுமையாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச்சு மாதம் முதல் வாரத்திலிருந்து இந்தியத் தலைநகர் புதுதில்லியின், ஜந்தர் மந்தர் பகுதியில், கடும் குளிரையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் - தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழ்நாட்டு உழவர்கள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் தற்போது அனைத்திந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

உரிய அளவில் வறட்சி நிவாரணம் வழங்காத இந்திய அரசு, தலைநகர் தில்லியில் நாள்தோறம் நடைபெற்று வரும் தமிழக உழவர்களின் போராட்டத்திற்கு உரிய மதிப்பைக் கூட அளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு உரியவாறு இந்த உழவர் போராட்டத்தைப் பயன்படுத்தி, இந்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க இதுவரை தகுந்த முயற்சி எடுக்கவில்லை. அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு துறையினரும் மட்டுமே அவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்திய அரசு, தமிழ்நாடு அரசு கோரிய அளவுக்கு முழு அளவிற்கு வறட்சி நிவாரணத்தை அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து ஆணையிட வேண்டும். 

இந்த கோரிக்கைகளுக்காகவும், காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் விற்பனையை நிறுத்திவிட்டு – உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அது குறித்து ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, நாளை (மார்ச்சு 28) முதல், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாள்தோறும் தொடர்ந்து முற்றுகையிடப்படும் அறப்போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels: ,

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு.அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! -- தோழர் பெ.மணியரசன்

Friday, March 24, 2017

========================================
கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத்
அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு
மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!
========================================

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன. 

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்கானிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இப்பொழுது திரு. அமர்நாத் அவர்களை அசாம் தலைநகர் கவுகாத்திக்கு மாற்றியுள்ளார்கள். 

கீழடி அகழாய்வில் அக்கறை, அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வந்த திரு. அமர்நாத் அவர்களின் பணியை கீழடி இழப்பது அந்த ஆராய்ச்சித் தொடர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் உணர்வாளர்கள் ஐயுறுகிறோம்; அச்சப்படுகிறோம்.

எனவே, இந்தியத் தொல்லியல் துறை தலைமையானது திரு. அமர்நாத் அவர்களின் பணிமாற்ற ஆணையை மறு ஆய்வு செய்து கீழடியிலேயே அவரை மீண்டும் அதே பணியில் அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை என்று காட்டிக் கொள்கிறதா? -- தோழர் பெ. மணியரசன்

Wednesday, March 22, 2017

============================================
உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் 
கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை
என்று காட்டிக் கொள்கிறதா?
============================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
============================================

காவிரி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவராய், நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று (21.03.2017) கூடி, சில உரையாடல்களை நடத்திவிட்டு, வழக்கை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து 11.07.2017 அன்று ஒத்தி வைத்துள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஓரங்க நாடகம் கடந்த 2016 – மார்ச் 28ஆம் நாள் முதன் முதலாக அரங்கேறியது. அப்பொழுது, நீதிபதி செலமேஷ்வர் தலைமையில் நீதிபதி ஆர்.கே அகர்வால், நீதிபதி எ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு காவிரி வழக்கை - தனிக்கவனம் செலுத்தி தொடர்ந்து விசாரித்து விரைந்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அமர்வு என்று கூறிக்கொண்டது. ஆனால், நேற்று வரை ஓராண்டு காலத்தில் இந்த சிறப்பு அமர்வு சாதித்தது என்ன என்ற கேள்வி தமிழர்கள் நெஞ்சில் கனலாய் எரிகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஓரங்க நாடகத்தில், நகைச்சுவைக் காட்சிக்குப் பஞ்சமில்லை! தொடர்ந்து நாலாவது அமர்வாக கர்நாடகம் 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நேற்றும் சிறப்பு அமர்வு “கட்டளையிட்டுள்ளது”. 

இதுவரை ஏன் திறந்துவிடவில்லை என்ற வினாவுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாத குற்றத்திற்காக கர்நாடக முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் போடவில்லை என்ற கேள்விக்கோ உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கவில்லை. 

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறது என்று தோன்றுகிறது அல்லது இவ்வாறு நாடகமாடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை என்று கருத நேரிடுகிறது. 

காவிரி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற நரேந்திர மோடி அரசின் சட்ட விரோத முடிவை தகர்த்து, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு என்று 09.12.2016 அன்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றம், காவிரி வழக்கில் ஏற்கெனவே தான் கட்டளையிட்டபடி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு ஏன் கட்டளையிடவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன் தமிழர்களுக்கு சம நீதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருதுகிறதா? 

கடந்த 15.03.2017 அன்று நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மக்களவையில் முன் வைத்துள்ள “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் – 1956” – திருத்த முன் வடிவிற்கான நோக்கம் குறித்த அறிக்கையில், காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்படும் என்று கூறியுள்ளார். 

காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்படும் என்றால், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு இரத்து செய்யப்படும் என்று பொருள்! காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்த பின், புதிதாக உருவாக்கப்படும் அனைத்திந்தியாவுக்கான ஒற்றைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசை புதிதாக மனுப் போடச் சொல்கிறார், உமாபாரதி!

இந்த அநீதி பற்றி தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் எடுத்துப் பேசியதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றமும் அது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை. உமாபாரதி முன்வைத்துள்ள சட்ட முன் வடிவு ஏற்கப்பட்டு, காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு அதன் தீர்ப்பும் இரத்து செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு உச்ச நீதிமன்றம் சூலை மாதம் தொடங்கி எந்த வழக்கை விசாரிக்கும்? 

இந்திய அரசு தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைக்கு எதிராக நயவஞ்சகமாக செயல்படுகிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக நாம் அடையாளம் கண்டு வந்தோம். இப்பொழுது உச்ச நீதிமன்றமும் தமிழர்களுக்கு எதிராக திரும்பியுள்ள அநீதி, சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. 

இதற்கெல்லாம் சட்டப்படியான மற்றும் அரசியல் வழிகளின்படியான எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமிழ்நாடு அரசு யாரோ எவரோ போல் இருப்பது – எட்டுக் கோடித் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல, இழிவுபடுத்தும் செயலும் ஆகும்!

இவ்வாறான பின்னணியில், அனைத்துப் பகுதித் தமிழ் மக்களும் அங்கங்கே ஒருங்கிணைந்து இருபது மாவட்டங்களுக்குக் குடிநீரும், பன்னிரெண்டு மாவட்டங்களுக்குப் பாசன நீரும் அளிக்கும் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவதே நம் உரிமையை மீட்டுத்தரும்! 

வருகின்ற 28.03.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் – காவிரித் தாய் காப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களும் வருமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் காவிரி வழக்கை நடத்திக் கொண்டிருப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். 

Labels: ,

"காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப் போராட்டம் - தேதி மாற்றம்! " -- தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!

Sunday, March 12, 2017
===============================
காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப் 
போராட்டம் - தேதி மாற்றம்! 
===============================
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
===============================

காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், முழுமையான வறட்சி நிவாரணப் பணிகளைச் செய்தல், காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் ஆகிய மிக மிக இன்றியமையாக் கடமைகளில் தமிழ்நாடு அரசு செயலற்ற நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 14.03.2017 அன்று தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

நெடுவாசல் போராட்டத்தையொட்டி, இப்போராட்டம் 28.03.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் என்றும், தொடர் போராட்டமாக அம்முற்றுகை நடைபெறும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

உழவர் பெருமக்களும், உணர்வாளர்களும் 28.03.2017 முற்றுகைப் போராட்டத்திற்குத் திரளாக வருமாறு கேட்டுக் கொள்கிறேன். 

போராட்டக் கோரிக்கைகள்
-------------------------------------------
1. தமிழ்நாடு அரசே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து! 

2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடு!

3. இந்திய அரசிடம், வறட்சி நிவாரண சிறப்பு நிதி பெற்று சாகுபடி இழந்த உழவர்களுக்கு 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கு. உழவுத் தொழிலாளர்களுக்கு 1 குடும்பத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கு. மக்களுக்குக் குடிநீர் கிடைக்க உறுதி செய்! 

அனைத்துக் கால்நடைகளுக்கும் தீவனமும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்! 

4. சாகுபடி அழிந்ததைக் கண்டு உயிரிழந்த உழவர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் தலா 15 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கு!

5. இந்திய அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள் பெற்ற கடன் அனைத்தையும் எந்த வரம்புமின்றித் தள்ளுபடி செய்!

6. தனியார் கடன் வசூலை ஓராண்டிற்குத் தள்ளி வை!

7. காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! காவிரிச் சமவெளியில் மீத்தேன், எரிவளி, பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட எந்தக் கனிம வளமும் எடுப்பதற்குத் தடை போடு! முற்றிலுமாக மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்து! 

பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

Labels:

"மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் " -- தோழர் பெ. மணியரசன் பங்கேற்பு.

====================================
மீனவத் தமிழன் பிரிட்சோ
படுகொலைக்கு நீதி கேட்டு...
இராமேசுவரம் நடக்கும் தொடர்
போராட்டத்தில் . . . 
====================================
தோழர் பெ. மணியரசன் பங்கேற்பு..!
====================================

தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, இராமேசுரம் - தங்கச்சி மடத்தில் மீனவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று (12.03.2017) பிற்பகல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழா பெ. மணியரசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டப் பந்தலில் உரையாற்றினார். மீனவர் பிரிட்சோவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மதுரை இரெ. இராசு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இலெ. இராமசாமி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தோழர்கள் கரிகாலன், சிவா, தங்கப்பழனி, நாடக வினோத் உள்ளிட்டோர் பேரியக்கத் தோழர்களும் உடன் வந்தனர்.

Labels:

"அனைவர்க்குமான இலட்சிய திசையில் பெண்ணுரிமைப் பயணம்!" -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Wednesday, March 8, 2017
======================================
அனைவர்க்குமான இலட்சிய திசையில்
பெண்ணுரிமைப் பயணம்!
======================================
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
======================================

தமிழ்நாட்டில் தமிழர் உரிமைப் போராட்டங்கள் வீறு பெற, வீறு பெற மகளிர் விழிப்புணர்ச்சியும், மகளிர் உரிமைக் களங்களும் விரிவடைந்து வருகின்றன.

தைப்புரட்சிப் போராட்டங்களில் மகளிர் பங்களிப்பு அளப்பரியது; கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகராக – சரிபாதிப் பங்களிப்பு மகளிர் வழங்கினர். இப்போபது நெடுவாசல் சுற்று வட்டாரத்தில் நடந்து வரும் நச்சுக் குழாய் எதிர்ப்புப் போராட்டத்திலும் மகளிர் பங்கேற்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது.

சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர அகவையினர், அகவை முதிர்ந்தோர், அதிகம் படித்தோர், அதிகம் படிக்காதோர் எனப் பலவகைப் பெணகளும் இப்போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழ்த்தேசியப் பாவலர் பாரதிதாசன் இக்காட்சிகளைப் பார்த்திருந்தால் பூரித்துப் பொங்கி, புதுப்புது மகளிர் புரட்சிப் பாக்கள் புனைந்திருப்பார்.

அவர் வாழ்ந்த காலத்தில் கல்லூரி சென்று கற்றுத் திரும்பிய மாணவிகளைக் கண்டபோது, பூரித்து அவர் எழுதிய பாடல் வரிகள் இதோ:

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
நீலப்பூ விழி மங்கைமார்
தலையாய கலைகள் ஆய்ந்து
தம்வீடு போதல் கண்டேன்
உலவிடு மடமைப் பேயின்
உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
(அழகின் சிரிப்பு, பட்டணம், 16).

ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவே தமிழ்நாட்டில் பெண்கள் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை படிக்கிறார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த முற்போக்குக் கருத்தையும் முதலில் முன்மொழிவது அல்லது முதலில் வரவேற்பது தமிழ்நாடே! தொழிற்சங்க உரிமை, பொதுவுடைமை, மகளிர் உரிமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கருத்துகளை ஏற்பதில் பிரித்தானிய இந்தியாவில் தமிழ்நாடே முன்னணியில் நின்றது.

தமிழ் இனத்தின் சிந்தனை வளம் மிகவும் பழைமையானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் சமநிலையில் பேசிய மொழி தமிழ்மொழி!

ஆண்டவனைக்கூட ஆண்பாதி – பெண்பாதி என்று சிந்தித்த இனம் தமிழினம்!

சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெண் புலவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக – பெண் பால் அறிஞர்கள் அந்தக் காலத்தில் வேறெந்த மொழியிலும் இல்லை. சங்க காலத்தில் திருமணச் சடங்கை நிறைவேற்றியவர்கள் மூத்த பெண்களே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்ணகி என்ற பெண்ணைக் காப்பியத் தலைவியாக்கி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார். அடுத்து வந்த மணிமேகலைக் காப்பியத்தின் பெயரும் தலைவியும் பெண்ணே!

இப்படிப்பட்ட தமிழினத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட ஆணாதிக்கக் கொடுமைகள் – பெண்ணடிமைத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர். சென்னை லௌகீக சங்கத்தினர், அயோத்தி தாசப் பண்டிதர் போன்றோர் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண் விடுதலை எழுச்சிப் பாக்களை பாரதியார் படைத்தார்!

பெரியார் தலைமையில் இயங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18 நாட்களில் நடந்தது. இதில் பல்வேறு முற்போக்குத் தீர்மானங்கள் போடப்பட்டன. அவற்றில் ஒன்று, பெண்களுக்குச் சம உரிமை அளிப்பது!

இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் டபுள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனார்; இம்மாநாட்டில் கொடி ஏற்றி உரையாற்றியவர் சர் பி.டி. இராசன்! இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கூடி இருந்தனர்!

மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தி வந்த பொதுநிலைக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு மாநாடு சென்னைப் பல்லாவரத்தில் 1931 – பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் நடந்தது. அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களில், “கோயில்களில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிப்பது, பெண்களுக்கு ஆடவரைப் போல் பெற்றோர் சொத்தில் சம பங்கு அளிப்பது, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது, சாதிக் கலப்புத் திருமணத்தை ஏற்பது, கைம்பெண் (விதவை) திருமணத்தை ஏற்பது” என்பவையும் இடம் பெற்றிருந்தன.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டை அடுத்து, பெரியார் பெண்ணுரிமைச் செயல்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வந்தார். தாலி மறுப்புத் திருமணம், கைம்பெண் மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் பலவற்றை நடத்திக் காட்டினார். அவர் வழியில் அண்ணாவும் செயல்பட்டார்.

இந்த முற்போக்குச் செயல்பாட்டிற்குரிய சிறந்த களமாக விளங்கியது. இதற்கு மரபு வழி முற்போக்குத் “தமிழ் மனம்” தக்க வாய்ப்பளித்தது. திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படும் வேறு மாநிலங்களிலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு இனங்களிலோ இவ்வாறான பெண் விடுதலைச் செயல்பாடுகள் தமிழ்நாட்டைப் போல் நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி பெற்ற மாநிலங்களில்கூட இவ்வாறு நடைபெறவில்லை!

அரசியலில் எவ்வளவோ சீரழிவுகளுக்கும், ஊழல்களுக்கும், கங்காணித்தனங்களுக்கும் கொள்கலனாகிப் போன தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிகள்கூட பெண்ணுரிமைக்கான புதிய சட்டங்களை இயற்றியமை, மேற்கண்ட தமிழின மரபு வழி முற்போக்கு அழுத்தங்களால்தான்!

துல்லியப்படுத்தப்பட்ட புதிய பெண் சொத்துரிமைச் சட்டத்தை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியது (1989). உள்ளாட்சிப் பதவிக்கான தேர்தல்களில் ஐம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி (2016).

இப்படிப்பட்ட பெண்ணுரிமைச் சிந்தனைகளையும் பெண் விடுதலைச் செயல்பாடுகளையும் மரபு வழியில் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள தமிழினத்தில், இன்று நிகழ்ந்து வரும் பெண் ஒடுக்குமுறை வன்செயல்களும், பெண்ணுரிமை மறுப்புக் கொடுமைகளும் அறப்பண்பாடு கொண்ட தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியாகக் குத்துகின்றன.

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பதினாறு அகவைச் சிறுமி நந்தினையை கொடியவர்கள் கூட்டு வல்லுறவு கொண்டு கொலை செய்து தூக்கி எறிந்தனர்.

சென்னை மவுலிவாக்கத்தில் ஏழு அகவைப் பெண் குழந்தை ஆசினி காமவெறியனால் வல்லுறவு கொண்டு கொல்லப்பட்டது.

இந்த வரிசையில் வெளியே வந்தவை சில; வெளியே வராதவை பல!

காதலிக்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்வது, அப்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசி சிதைப்பது அல்லது அப்பெண்ணை அழிப்பது, திருமணம் செய்வதற்கு மணமகனுக்குக் கொள்ளை விலை கொடுப்பது, அந்தக் கொள்ளை விலையில் பாக்கி இருந்தால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவது, அல்லது சமையல் எரிவளியைத் திறந்து விட்டு தீக்கு இரையாக்குவது, அப்பப்பா – எத்தனை, எத்தனை வடிவங்களில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்!

பெண் கல்வி, ஆண் கல்வி பெருகியுள்ள காலத்தில், விழிப்புணர்ச்சி வளர்ந்துள்ள காலத்தில் பெண்களுக்கெதிரான இத்தனை வன்கொடுமைகள் ஏன்? புதுப்புது வடிவங்களில் பெண்ணடிமைத்தனம் ஏன்? அதுவும் மரபு வழியில் முற்போக்குத் “தமிழ் மனம்” படைத்தத் தமிழினத்தில் இக்கொடுமைகள் ஏன்?

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு வளர்ச்சி, பொருளியல் வளர்ச்சி, நுகர்வு வளர்ச்சி, செய்தித் தொடர்பு வளர்ச்சி, உள்கட்டுமான வளர்ச்சி போன்றவை ஒப்பீட்டளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் அவற்றிற்கு இணையாக மன வளர்ச்சி ஏற்படவில்லை! மன வளர்ச்சி என்பது மேற்கண்டவற்றிற்கு இணையாக அல்ல, மேற்கண்டவற்றை மேலாண்மை செலுத்தும் அளவில் வளர வேண்டும்.

மன வளர்ச்சி என்பது பெரிதும் சமூகம் சார்ந்தது. சமூகத்தின் மன வளர்ச்சிக்கேற்பவே, சராசரித் தனி மனித மன வளர்ச்சியும் இருக்கும்.

இலட்சியங்களை நோக்கிச் சமூகம் பயணம் செய்யும் போதுதான், சமூகத்தில் உயர் பண்புகள் வளரும்; அதுவே மன வளர்ச்சி!

அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்று: தைப்புரட்சியில் சென்னைக் கடற்கரையில் இலட்சக்கணக்கிலும், மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கிலும் இளம் ஆண்களும் பெண்களும் இரவும் பகலும் பல நாள் ஒரே இடத்தில் தங்கி கோரிக்கை முழக்கமிட்டனர். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தீய நிகழ்வுகூட அங்கு இல்லை! அவர்களை வழி நடத்தியது இலட்சியம்!

சமூகம் முழுவதற்குமான இலட்சியம் உருவாகிட – அதற்கான அடிப்படை சமூக அலகு எது? ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டம்! அதன் பெயர் என்ன? இனம் அல்லது தேசிய இனம்!

உலக மானிடம் எப்படி சமூகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? தேசிய இனம், தேசிய மொழி அடிப்படையில்! அந்தந்தச் சமூகத்திற்கு அந்த அடிப்படையிலேயே இறையாண்மை அதாவது சுதந்திரத் தாயகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக சுதந்திரத் தாயகம் அமைக்கப்படாத தேசிய இனங்கள் அதற்காகப் போராடிக் கொண்டுள்ளன!

தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழின அடிப்படையிலான மறுமலர்ச்சி தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் இன அரசியலோடு, தமிழர் மறுமலர்ச்சி செயல்பட்டது. அக்காலத்தில்தான் பெரியார், மறைமலை அடிகளார் சீர்திருத்தக் கருத்துகள் பகுத்தறிவுத் தளத்திலும் ஆன்மிகத் தளத்தில் மக்கள் அரங்கில் செயல்பட்டன.

தமிழ் இனத்தில் தொடங்கி, ஆரிய உருவாக்கமான திராவிடக் கற்பனை இனத்திற்குப் பெரியார் சென்றாலும் அவரின் செயற்களம் தமிழினத் தாயகம்தான்! இப்பின்னணியில் தனித்தமிழ்நாடு, தனித் திராவிட நாடு கோரிக்கைகள் தமிழ்நாட்டில் மக்கள் கோரிக்கைகளாக, சமூக இலட்சியங்களாக வளர்ச்சி பெற்றன!

மகளிர் விடுதலைக்கு உழைப்போர், போராடுவோர் இந்த வரலாற்றுப் படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் – தொழிலாளர் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கம் செயல்படுவதுபோல், தமிழ்ப் பெண்களின் உரிமைப் போராட்டத்தை, பெண்களுக்கான அரங்க நடவடிக்கையாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. பெண்ணியம் பேசுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழர்களின் இலட்சிய இயங்கு திசையில் பிரிக்க முடியாததாகப் பெண்ணுரிமை இணைக்கப்பட வேண்டும்.

தைப்புரட்சியின் “தமிழன்டா” முழக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர் உரிமை உணர்ச்சியின் பொது முழக்கமாகவே ஆண்களும் பெண்களும் “தமிழன்டா” முழங்கினர்.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் அமைக்கும் தமிழ்த்தேசிய இலட்சியம்தான் சமகாலத் தமிழர்களுக்கான இன்றைய சமூகப் பொது இலட்சியம்! இந்த இலட்சியத்தின் ஊடாகவே, ஆண் – பெண் சமத்துவம் உள்ளிட்ட சமூகச் சமத்துவங்கள் அனைத்தையும் முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்பே மக்கள் பங்கெடுக்கும் சமூக மாற்றமாக அமையும்!

Labels: ,

"இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை. இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால் இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?" -- தோழர் பெ. மணியரசன் வினா!

Tuesday, March 7, 2017
=========================================
இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை:
=========================================
"இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால்
இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?"
=========================================
தோழர் பெ. மணியரசன் வினா!
=========================================

நேற்றிரவு (06.03.2017), இராமேசுவரம் – தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற்படைக் காடையர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். அதில், பிரிட்சோ என்ற இளைஞர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். சரோன் என்ற இளைஞர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். 

சிங்களக் காடையர் நடத்திய இந்தத் தமிழினப் படுகொலை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியதுபோல் கொடுந் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய அரசு வழக்கம்போல் தனது இலங்கைத் தூதரகத்தின் வழியாக “கவலை” தெரிவித்து, கபட நாடகமாடியுள்ளது. இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி, இந்த இனக் கொலையை ஏன் கண்டிக்கவில்லை? கண்டனம் தெரிவித்தால் அவருடைய தகுதிக்கு அவமரியாதையா? அல்லது “அடிமைத் தமிழனுக்காக” தனது நட்பு நாடான இலங்கையைக் கண்டிப்பது நல்லுறவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற பாசப் பிணைப்பா? 

உலகில் எங்கேனும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனே கண்டிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மீனவர் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டால் அவர் கண்டிக்க மறுக்கிறார். தமிழர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை, இந்தியாவின் அடிமைகள் என்று அவர் கருதுகிறாரா? 

சிங்களக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்போதும், மீனவர்களைக் கடத்திக் கொண்டுபோகும் போதும், இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு இந்திய சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் இதுவரை ஒரு தடவைகூட அவ் வன்செயல்களைத் தடுக்கவில்லை. 

தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள்ளும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் தமிழக மீனவர்களை பலதடவை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஒரு தடவை கூட அக்கொலைகாரர்களைப் பிடித்துக் கொண்டு வந்து வழக்கு நடத்த முன் வரவில்லை, இந்திய அரசு!

இந்திய அரசின் மறைமுக ஒப்புதலோடும் ஆதரவோடும்தான் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை – தமிழ்நாட்டுக் கடற்பரப்பிலும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் சுட்டுக் கொல்கிறார்கள். தாக்குகிறார்கள். சிறைகளில் அடைக்கிறார்கள். படகுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்கள். அது மட்டுமின்றி, சிங்களக் கடற்படைக்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறது. 

தமிழர்களுக்கு எதிரான தனது கொலைவெறி நடவடிக்கைகளை இந்திய அரசு கண்டிக்காது என்ற துணிச்சலில் இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. அத்துடன், பிரிட்சோவை தனது கடற்படை கொல்லவில்லை என்று இந்தியாவை நம்பித் துணிந்தும் பொய் சொல்கிறது. 

ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்த போது, அதற்குத் துணை நின்றது இந்திய அரசு! அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து கொலை செய்து வருவதை இந்திய அரசு தடுக்கவில்லை என்பதுடன், கண்டிக்கவுமில்லை! 

நாடாளுமன்றத்தில் இதுபற்றி தமிழ்நாட்டு உறுப்பினர்கள் வினா எழுப்பினால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று இந்திய அரசு விடை கூறுகிறது. தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை, இந்தியாவின் “நட்பு நாடு” என்றால், தமிழ்நாட்டுக்கு இந்தியா “எதிரி நாடு” என்று தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறதா? 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்த உண்மையை உணர்ந்து, அதற்குரிய எதிர்வினையாற்ற சிந்தனையாலும் செயலாலும் அணியமாக வேண்டும். தமிழ்நாடு அரசு என்பது இந்தியாவின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்காத, தடுத்து நிறுத்தாத கங்காணி அரசாகவே தி.மு.க. ஆட்சியிலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது.

எனவே, இந்தத் தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு வெளியே தமிழர்கள் இனத்தற்காப்புப் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையுள்ளது. சிங்களக் கடற்படைக் காடையர்களால் கொல்லப்பட்ட இளந்தமிழன் பிரிட்சோ மீது ஆணையிட்டு தமிழினத் தற்காப்பு அரசியலையும், அறப்போராட்டங்களையும் முன்னெடுப்போம்!

Labels: ,

" நெடுவாசலில் காவிரி உரிமை மீட்புக் குழு! "

Saturday, March 4, 2017
=======================================
நெடுவாசலில் காவிரி உரிமை மீட்புக் குழு!
=======================================
புதுக்கோட்டை மாவட்டம் - நெடுவாசலில், இந்திய அரசின் ஐட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் எழுச்சிமிகுப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் தலைமையில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, தோழர் பழ. இராசேந்திரன் உள்ளிட்டோர் இக்குழுவில் வந்தனர்.
போராட்டப் பந்தலில், தோழர் பெ. மணியரசன் அவர்கள் போராட்டத்தை ஆதரித்தும், மக்களை ஊக்குவித்தும் உரையாற்றினார். அதன்பின், ஓ.என்.ஜி.சி. சோதனைக் குழாய் பதித்துள்ள இடத்தை தோழர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து போராட்டம் வீரியத்துடன் நடைபெற்று வருகின்றது.
நெடுவாசல் மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

Labels:

" ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்! " -- தோழர் பெ. மணியரசன்,

Friday, March 3, 2017
==========================================
ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்!
==========================================
தோழர் பெ. மணியரசன்,
=========================================

"ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்!" என்ற தலைப்பில், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது : 

தமிழ்நாடு கொந்தளிக்கிறது! மூத்த அரசியல்வாதிகளோ பதவி வேட்டைக்காகக் கொந்தளிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள்!

இளைஞர்கள்தாம் தமிழர் உரிமைகளுக்காக, தமிழர் நலன்களுக்காகக் கொந்தளிக்கிறார்கள்!

தைப்புரட்சியின் வெற்றியை அடுத்து, நெடுவாசல் புரட்சியில் இறங்கியுள்ளார்கள்.

காவிரிச் சமவெளியில் மீத்தேனை விரட்டியது, காளை தழுவும் உரிமையை மீட்டது போன்ற தமிழர் வாழ்வுரிமை மற்றும் பண்பாட்டு உரிமைகளைக் காத்ததில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் எந்தப் பங்கும் இல்லை!

இப்போதும், எப்போதும் இந்தக் கட்சிகள் பதவி வேட்டைக்காக - பண வேட்டைக்காகப் பரபரப்பாகச் செயல் படுகின்றன. ஒன்றை எதிர்த்து மற்றொன்று போராடுகின்றன. அப்பப்பா, அதில் காட்டும் விறுவிறுப்பும் வேகமும் புயலைக்கூடத் தோற்கடிக்கும்.

அந்த வேகத்தில் நூற்றில் ஒரு பங்கு வேகம் கச்சத்தீவு, காவிரி, பாலாறு, பவானி உரிமைகளைக் காப்பதில், மீட்பதில் இவை காட்டியதில்லை. 

இக்கட்சிகளின் குறிப்பாகக் கழகங்களின் தலைவர்களை இப்படியே கோயில் மாடுகளைப் போல் ஊர்மேய அனுமதித்துவிட்டு, தமிழர் உரிமைப் போராட்டங்களில் மட்டும், இளைஞர்கள் கவனம் செலுத்துவது போதுமா?

நெடுவாசலில் நச்சுக்குழாய் இறக்கும் அறிவிப்பை நடுவண் அமைச்சகம் 15.2.2017 அன்று அறிவித்தது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அச்சமும் பீதியும் பற்றிக் கொண்டது. மறுநாள் நெடுவாசல் போராட்டக் களமாகியது.

போராட்டத்தின் 12ஆம் நாள், இந்திய அரசு அறிவிப்பு வந்த 13ஆம் நாள் (28.02.2017) தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அமைச்சர் கே.சி. கருப்பணன், நெடுவாசல் எரிவளித்திட்டத்திற்குத் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையிடம் நடுவண் அரசு அனுமதி பெறவில்லை என்று ஒரகடத்தில் கூறினார். எப்படி இவர்களின் தமிழர் காப்பு அக்கறை! இவர்தான் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!

அத்தோடு விட்டாரா கருப்பணன்? இல்லை. அடுத்து அவர் கூறியது, அதிர்ச்சி தருகிறது.

“எரிவளி எடுக்க எங்களிடம் வரும்போது, அனுமதிப்பதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது”.

இத்தனை நாட்களாக சசிகலா அரசு இதில் ஒரு முடிவெடுக்கவில்லை! மதில் மேல் பூனை போல் இருக்கிறது.

காவிரியில் கசிவு நீரும் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க, மேக்கேதாட்டில் 66.5 ஆ.மி.க. கொள்ளளவில் பெரிய நீர்த்தேக்கம் கட்டுவோம் என்று திரும்பத் திரும்ப கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் அறிவித்து வருகிறார்கள். அதற்கான திட்டச் செலவாக ரூ. 5,912 கோடி தொகையும் ஒதுக்கிவிட்டார்கள்.

இதற்கு எதிர்வினையாக, ஒரு கண்டன அறிக்கை - ஒரு மறுப்பறிக்கை அ.தி.மு.க. முதல்வரோ, அமைச்சர்களோ வெளியிடவில்லை. இதற்கு சசிகலா வழிகாட்டவில்லையா? அல்லது அவர்களின் ‘குலதெய்வம்’ செயலலிதா வழி காட்டவில்லையா?

கர்நாடக அணைகளிலிருந்து கசிந்து வரும் நீரையும் மேட்டூருக்கு மேற்கே கோவிந்தபாடி அருகே தமிழ்நாட்டிற்குரிய காவிரி எல்லைக்குள் பெரும்பெரும் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. தமிழ்நாடு அரசு இதைத் தடுக்கவில்லை!

இன்னும் சில நாட்களில் மேட்டூரிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத அபாயம் காத்திருக்கிறது. இதனாலும் வறட்சியாலும் வரும் மாதங்களில் தமிழ்நாடு குடிநீர் கிடைக்காமல் தவிக்கப் போகிறது. தண்ணீர் இன்றித் தவிக்கும் கால்நடைகளை அறுப்புக்கு அனுப்ப நேரிடும்; அல்லது அவை சாகும்!

நெருங்கி வரும் இந்த பேராபத்தை அரசு கட்டிலில் வீற்றிருக்கும் சசிகலா அமைச்சரவையும் கவனத்தில் கொள்ளவில்லை; ஆட்சியைக் களவாடத் துடிக்கும் மு.க. ஸ்டாலினும் கவனத்தில் கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசின் ஞாயவிலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக ஏற்கெனவே மலிவு விலையில் விற்கப்பட்ட பருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் விற்கப்படவில்லை. இந்திய அரசின் உணவுப் பொருள் வழங்கல் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எதற்காக என்ற விவரம் சொல்லாமல் இந்திய அரசு வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

கூரைவீடா, கட்டட வீடா, மாடிகள் எத்தனை, குளிர்ப்பதனப் பெட்டி இருக்கிறதா, இருசக்கர வண்டி, நாற்சக்கர வண்டி, வருமானம் முதலியவற்றை எல்லாம் கணக்கெடுக்கிறார்கள். இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இக்கணக்கை எடுக்கிறார்கள்.

இக்கணக்கெடுப்பு முடிந்த பின் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு மக்களுக்கு ஞாயவிலைப் பொருள்கள் கிடைக்காது - இலவச அரிசியின் நிலையும் வினாக் குறியே!

ஞாயவிலைக் கடைகளை மூட வேண்டும் என்று உலக வங்கி, அமெரிக்க - ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைத் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் இந்தியாவின் தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடியின் ஆட்சி வெளிநாட்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் நீரை மீட்டர் வைத்து அளந்து விற்கும் முறையை மோடி அரசு கொண்டு வர உள்ளது. அதற்கான தேசிய நீர்க் கொள்கையை அது அறிவித்து விட்டது. இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் கட்சி எது?

அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ அல்லது வேறு பெயரில் சின்ன தி.மு.க.க்களாகப் பவனி வரும் எதுவுமோ தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போராடப் போவதில்லை; ஈகம் செய்யப் போவதில்லை!

பதவி, பணம், விளம்பரம் மூன்றும்தான் இக்கட்சிகளின் உண்மையான இலக்கு!

எழுச்சி பெற்றுள்ள இளைஞர்களே, எதிர்வினையாற்றுவது தேவைதான்; ஆனால் அது மட்டும் மக்களைக் காக்காது! நேர்வினையாற்ற வாருங்கள்! மாற்றுத் திட்டங்களை முன்மொழியுங்கள்! மாற்று அரசியலை முன்மொழியுங்கள்!

பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத பண்பை அடிப்படை விதி ஆக்கிக் கொள்ளுங்கள்! ஒரு தலைமுறை உழைத்துப் புதிய தமிழ்த்தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்!

போலிகளைத் தோலுரியுங்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்தித் தலைமையைக் கைப்பற்றி வேறு பெயரில் புதிய சந்தர்ப்பவாதத் தேர்தல் ஆதாயக் கட்சியை உருவாக்கிட முயலும் தன்னலவாதிகளுக்கு இடம் கொடாதீர்கள்!

தமிழினத் தற்காப்பு அரசியல் உண்மையானதாகப் புதிய வடிவெடுக்க வேண்டும். அந்தப் பாதை பற்றியும் சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!

இந்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை - தமிழர் விரோதச் செயல்பாடுகளை எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டு அரசின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராட வேண்டும். நடுவண் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து நாம் போராடும்போது, பார்வையாளராக வீற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் தமிழினத் துரோகத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

கோயில் மாடுகளைப் போல் ஊர் மேயும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தன்னல அரசியலை எதிர்த்து, சர்வாதிகாரத் தலைமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டும்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)

Labels:

" தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்! "

Wednesday, March 1, 2017
==============================================
தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம்
ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்!
==============================================
காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!
==============================================

ஆந்திரத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான டன் நெல்லை, தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் அரைவை ஆலைகளுக்கு தனியார் வணிகர்கள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் காவிரி நீர் மற்றும் பாலாற்று நீர் தடுக்கப்பட்ட நிலையிலும் கடுமையான வறட்சியிலும் உழவர்கள் பெருஞ்செலவு செய்து உற்பத்தி செய்த நெல், விலை போகாமல் தேங்கிக் கிடக்கிறது. 

கடும் உழைப்பைச் செலுத்தி விளைவித்த நெல், அரசு நிர்ணயித்த குறைந்த விலை அளவுக்குக் கூட விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் பெரும் சோகத்தில் உள்ளார்கள். 

இந்த அவலத்தைப் போக்க உடனடியாகத் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை அனுப்பி, தனியார் நடத்தும் பெரும் பெரும் அரவை ஆலைகளை சோதனையிட்டு வெளி மாநிலங்களிலிருந்து நெல் வாங்கக் கூடாது என்று கூறி தடுத்திட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டு எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகளில் வெளி மாநில நெல் வராமல் தடுத்திட, என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு தடுத்திட வேண்டும். 

தமிழ்த்தேசியப் பேரியக்கமும், காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடு தனி உணவு மண்டலமாக்கப்பட்டால், பாலாற்று நீரையும் காவிரி நீரையும் தடுக்கின்ற ஆந்திர – கர்நாடக மாநிலங்களிலிருந்து நெல் வருவதை சட்டப்படியே தடுக்க முடியும். இக்கோரிக்கையை தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் எழுப்பி, தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டும். 

இப்பொழுது எழுந்துள்ள சிக்கலை கையாளும் உத்திகளை வகுத்து, ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். அத்துடன் நேரடி கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களுக்கெல்லாம் விரிவுபடுத்தி, வரும் நெல் அனைத்தையும் உடனுக்குடன் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடி கொள்முதல் நிலையங்களில் விதிகளுக்கு முரணாக, கட்டணமின்றி கூடுதலாக நெல் எடுக்கும் செயலை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்