<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

டெசோ போராட்டம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? -- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Saturday, March 16, 2013

டெசோ போராட்டம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? 
-- தோழர் பெ.மணியரசன் கட்டுரை.


ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையினான டெசோ அமைப்பு கடந்த மார்ச்சு 12 ஆம் நாள் தமிழகம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் நடத்தியது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படு கொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக ”பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது.
அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படவில்லை. அமெரிக்காவின் முன் மொழிவில் இலங்கை அரசின் இனப்படுகொலைக்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று எந்தக் கோரிக்கையும் இல்லை. மாறாக சிங்களஅரசு அமைத்த “கற்றுக்கொண்ட படிப்பினைகளுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணையம் (எல்.எல்.ஆர்.சி) கண்டறிந்தவைகள் மற்றும் அதன் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் மீது இலங்கை அரசு முழுமையாக நடவடிக்கையெடுக்காதது கவலையளிக்கிறது. என்றுதான் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்திலும் இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி முடிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்குமாறுதான் அமெரிக்கத் தீர்மானம் கூறியது.
இப்பொழுது முன்வைத்துள்ள அமெரிக்கத் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது:
“2: இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி.அறிக்கையில் கூறியுள்ளபடி நீதி, சமத்துவம், நடந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்வது, இலங்கையர் அனைவருக்குமான நல்லிணக்கம் ஆகியவை குறித்து எல்.எல்.ஆர்.சி கூறியுள்ளவற்றை நம்பத்தகுந்த முறையிலும் ஆக்கப்பூர்வமான வழியிலும் இலங்கை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
“3:நீதிபதிகள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அமைப்பு நடத்தும் சுதந்திரம் ஆகிய வற்றைப் பாதுகாக்கவும் விசாரணையின்றியும் அவசரகதியிலும் எதேச்சாதிகாரமாகவும் மரண தண்டனை அளித்தல், சிறு பான்மை மக்களுக்கான பிரச்சினைகள், சிலர் காணாமல் போய் விடுவது, பெண்களுக் கெதிரான பாகுபாடு ஆகியவை தொடர்பான வேண்டு கோள்களுக்கு இலங்கை அரசு மறுமொழி கூறவேண்டும் எதிர்வினை புரிய வேண்டும்..
“4: மேற்கண்ட முடிவுகளைச் செயல்படுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளும் இலங்கை அரசுடன் கலந்து பேசி அதன் ஒப்புதல் பெற்று தங்களுடைய அறிவுரைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.
“5: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரும் மற்றும் அதிகாரிகளும் மேற்கண்ட வகையில் செயல்பட்டு இலங்கையில் மக்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவும் நடந்த நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்றுக் கொண்டதற்கும், இலங்கையில் நடந்த பன்னாட்டுச்சட்ட மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தயாரித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 25 ஆவது கூட்டத்தில் அளிக்க வேண்டும்.”
மேற்கண்டவைதான் அமெரிக்கத் தீர்மானத்தில் உள்ள கூறுகள். இதில், தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றம் பற்றி விசாரிப்பதற்கு எதுவும் கூறப்படவில்லை. அதிக அளவாக அமெரிக்கத் தீர்மானம் கூறுவது எல்.எ.ல்.ஆர்.சி கண்டறிந்த குற்றங்கள் மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.
இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஏற்கெனவே வெளிவந்துள்ளது. அதில், 2008 - 2009 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் தமிழ்ப் பயங்கரவாதிகள் மீது போர் நடத்தி அவர்களை தோற்கடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போரில் இலங்கை அரசுக்குத் தலைமை தாங்கியோரும்,இலங்கை இராணுவத்திற்குத் தலைமை தாங்கியோரும் எந்தக்குற்றமும் செய்யவில்லை என்று நற்சான்று அளித்துள்ளது. இலங்கைப் படையின் கீழ் நிலைப் பொறுப்பிலுள்ள சிலர் மனித உரிமை மீறல்கள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் கூறியுள்ளது.
அதிகாரப் பகிர்வு, வடக்கு மாநிலத்திலிருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ளுதல், பேச்சு உரிமையளித்தல் போன்றவற்றை எல்.எல். ஆர்.சி பரிந்துரைத் திருந்தாலும் அப்பரிந்துரைகளை இராசபட்சேக் கும்பல் எள்ள ளவும் சட்டை செய்யவில்லை. மேலும் 13 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று பகிரங்கமாக கோத்தபய இராசபட்சே கொக்கரித்தார். கடந்த இலங்கை சுதந்திரநாள் உரையில் தமிழர் களுக்குத் தன்னாட்சி நிர்வாகம் தர முடியாது என்று அறிவித்தார் இராசபட்சே இதே இராச பட்சேக் கும்பல் எல்.எ.ல்.ஆர்.சி பரிந்துரைகளை எப்படி நிறை வேற்றும்?
எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை முழுமையாக செயல் படுத்தும் படி மட்டுமே அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறது. இதில் தி.மு.க.வின் டெசோ அறிக்கையில் கூறியுள்ளது போல் “இலங்கை அரசின் இனப்படு கொலை குற்றத்தைக் கண்டித்து அமெரிக்கத் தீர்மானம் வருகிறது” என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
2008 - 2009 இல் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இலங்கை அரசு இனப்படு கொலை செய்தது. உயிரைப்பாது காத்துக்கொள்ள “போரில்லா மண்டலமான பாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் வாருங்கள் என்று ஈழத் தமிழர்களை வற்புறுத்தி அழைத்தது இலங்கை இராணுவம். அந்த வாக்குறுதியை நம்பி சென்ற இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை வான்குண்டு வீசிக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.
போர் நடந்தபோது இரு தரப்புத் துப்பாக்கிச் சூட்டுக்கு இடையே மடிந்தவர்கள் அல்லர் இவர்கள். உயிரைப் பாதுகாத்துக் கொள்ளச் சென்ற அப்பாவி மக்களைத்தான் சிங்களப் படையினர் இனப்படுகொலை செய்தார்கள். என்பது ஐயமற்ற உண்மையாகும்.
பால்வடியும் முகத்துப் பாலகன் பாலச்சந்திரன் படு கொலையே இதற்குத் தெளிவான சான்று. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளையமகன் பாலச்சந்திரனை சிங்கள இராணுவம் கடத்திக் கொண்டுவந்து தங்களுடைய இராணுவப் பதுங்குகுழியில் வைத்திருந்து 2009 மே 19 அன்று ஐந்து முறை சுட்டுக் கொன்றுள்ளது.
அந்நிகழ்வுகள் பற்றிய புகைப் படங்கள் வெளிவந்து உலகத்தின் மனச்சான்றை உலுக்கிக் கொண்டுள்ளன. உலகத்தின் தலைச் சிறந்த தடயவியல் வல்லுநர்கள் அப்புகைப்படங்கள் புனையப் பட்டவை அல்ல என்றும் உண்மையானவையென்றும், அவை 2009 மே 19 ஆம் நாள் எடுக்கப் பட்டவையென்றும் உறுதி செய்துள்ளனர்.
இலங்கையில் போர் 2009 மே 18 அன்று முடிந்து விட்டதென்று இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் அறிவித்தன. போர் முடிந்து விட்ட நிலையில் மே 19 ஆம் நாள் பாலகன் பாலச்சந்திரனைச் சுட்டுக்கொள்ள வேண்டிய தேவையென்ன வந்தது. எனவே தான் இலங்கை அரசு நடத்தியது மிகக் கொடூரமான தமிழின அழிப்புப் போர் என்பதை நாம் உறுதியாகக் கூறுகிறோம்.
போர் முடிந்து நான்காண்டுகள் ஆன பின்னும் தமிழீழப் பகுதிகளில் தங்கள் சொந்த இல்லங்களில் தமிழர்கள் வாழ முடியவில்லை. ஈழத்தமிழர்கள் அனைவரையும் பணயக் கைதிகள் போல் இலங்கை அரசு வைத்துள்ளது. தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். சிங்கள அரசு தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை புத்தவிகாரைகளாக மாற்றி வருகிறது. தமிழர்களின் ஊர்ப்பெயர்களையும் சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறது. இவ்வாறான இன அழிப்பு, இனப் பண்பாட்டு அழிப்பு ஆகிய குற்றங்களைச் செய்த, செய்து கொண்டுள்ள இராசபட்சே-- பொன்சேகா கும்பல் மீது நட வடிக்கையெடுக்க எந்தக் கோரிக்கையும் இல்லை அமெரிக்கத் தீர்மானத்தில்.
இராசபட்சே - பொன்சேகா கும்பலின் இனப்படுகொலை மற்றும் இனப்பண்பாட்டு அழிப்புக் குற்றங்களை உலகத்தின் கண்களிலிருந்து மறைப்பதற்கான மூடு திரையாகவே அமெரிக்கத் தீர்மானம் உள்ளது. அதனால் தான் இராசபட்சேக் கும்பலின் ஒப்புதலோடு இந்தத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன் மொழிந்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒரு மனதாக நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு அமெரிக்க பிரதிநிதிகளும் இலங்கைப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்பேச்சு வார்த்தையை இந்தியாதான் ஏற்பாடு செய்தது. இந்திய நாடாளுமன்றத்தில். 27.2.2013 அன்று மாநிலங்களவையில் ஈழம் குறித்து நடந்த விவாதத்தில் முன்மொழிந்து பேசிய நடுவண் வெளிவுறவு அமைச்சர் சல்மான் குர்சித் ஜெனிவாவில் அமெரிக்க அரசுப் பிரதிநிதிகளும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளும் பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துடன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்திய அரசின் இத்திட்டம் இனப்படு கொலை செய்த கொலைக்காரர்களைத் தப்பவைக்கும் திட்டம் மட்டு மல்ல அவர்களையே நீதிபதிகளாக்கும் திட்டமாகும்.
ஈழத்தில் நடந்த இனப்படு கொலைகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதோ தமிழீழ மக்களின் தேச விடுதலைப் போராட்டத்திற்கு செவிகொடுப்பதோ அமெரிக்க அரசின் நோக்கமல்ல. சிறிய அளவில் இலங்கையை மிரட்டி அதுமேலும் மேலும் சீனாவுடன் நெருக்கம் கொள்ளாமல் தடுப்பதே அமெரிக்காவின் உத்தி.
இனப்படுகொலை போரில் அழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கும் இன்றும் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்டு பணயக்கைதிகள் போல் வாழும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கும் உலக அரங்கில் நீதியும், அங்கீ காரமும் கிடைக் காமல் தடுப்பதே இந்திய அரசின் நோக்கம். மேலும் சிங்கள அரசு நடத்திய இனப்படு கொலைப் போரில் கூட்டுக் குற்றவாளி இந்திய அரசு. இப் பின்னணியில்தான் இந்தியா - அமெரிக்கா- இலங்கை கூட்டணி இன்று இயங்குகிறது.
இக்கூட்டணிக்கிடையே இணக்கம் ஏற்படுத்திடும் பேச்சாளராக அமெரிக்கத்தரகர் சுப்பிரமணியசாமியை இந்திய அரசு அனுப்பியுள்ளது. அவர் கொலும்பிலிருந்து ஊடகங்களுக்குக் கொடுத்த செவ்வியில் “அமெரிக்காவின் உதவியோடு தான் புலிகள் அமைப்பு ஒழிக்கப் பட்டது. எனவே அது மீண்டும் புத்துயிர் பெறும்படி இலங்கை அரசைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டா மென்று நான் அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்’’ என்கிறார். (தினமணி: 12.3.2013)
ஒரு வேளை இலங்கை அரசு முரட்டுத்தனமாக நடந்து கொண்டு அமெரிக்காவின் இணக்க முயற்சிகளுக்கு ஒத்துழைக்காத நிலையில் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி அது வெற்றிபெற்றாலும் என்ன நடக்கும்? இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழ் அது அனுமதித்தால் மட்டுமே போர்க் குற்றங்களின் மீதான நடவடிக் கைகளுக்கு ஐ.நா. மனித உரிமை மன்றம் அறிவுரையும் மற்ற உதவிகளும் செய்ய முடியும். இதே தீர்மானம் கடந்த ஆண்டு நிறை வேற்றப்பட்டு ஓர் ஆண்டு கடந்த பின்னும் ஓர் அங்குலம் கூட முன்னேற்றமில்லை.
கலைஞர் கருணாநிதி அவர்கள் இராசபட்சேக் கும்பலை நீதிபதிகளாக்கும் இப்படிபட்ட அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியஅரசு ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது பல ஐயங்களை எழுப்புகிறது. தி.மு.க. டெசோ போராட்டங்களின் திரைமறைவில் இந்திய அரசு இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
ஈழத்தமிழர்களை இனப்படு கொலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கையெடுக்கவும் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு அரசுரிமைக் கிடைத்து அமைதியாக வாழவும் பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.
1. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர்பான்கிமூன் அமைத்த தாருசுமான் தலைமையிலான மூவர் குழு 2008 -- 2009 இல் இலங்கை அரசு தமிழர்களுக் கெதிராக நடத்திய போர்க்குற்றங்கள், மனித குலத்திற் கெதிரான குற்றங்கள் என்றும் அவற்றின் மீது பன்னாட்டுப் புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் பரிந்துரைத்துள்ளது.
ஈழத்தில் நடந்த இனப்படு கொலைப் போரில் ஏற்பட்ட மனித அழிவுகளை தடுத்து நிறுத்த ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் பான்கிமூனும் விஜய் நம்பியார், கோம்ஸ் போன்ற அதிகாரிகளும் தவறியதை ஐ.நா. வின் இன்னொரு அதிகாரியான சார்லஸ் பெட்ரி தயாரித்த உள்ளக அறிக்கை அம்பலப்படுத் தியுள்ளது.
எனவே இனப்படு கொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவை நடந்ததற்கான புதிய விசாரணை (inquiry) எதுவும் தேவையில்லை. மூவர் குழு கண்டறிந்த குற்றச் சாட்டுகள் மீது நடவடிக்கை யெடுப்பதற்கான புலன் ஆய்வு விசாரணை (investigation) தேவை. தாருசுமான் குழு தனது பரிந்துரையில் புலனாய்வு விசாரணைக்குத் தற்சார்புள்ள பன்னாட்டு புலன் விசாரணை அமைப்பு (Independent International Investigation) உடனடியாக ஐ.நா. மன்றத்தால் அமைக்கப்பட வேண்டும் என்றது. அதன் புலனாய்வு விசாரணை முடிவு களின் அடிப்படையில் இராச பட்சே உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தில் வழக் குத் தொடுக்க வேண்டும். (Trial)
2. இவ்வளவு பெரிய இனப் படுகொலை நடந்த பிறகு இன்றைக்கும் ஈழத் தமிழர்களின் தாயக உரிமை மறுக்கப்பட்டு அது ஆக்கிரமிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் குடிமை உரிமை மறுக்கப்பட்டு பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளார்கள் இந்நிலையில் அம்மக்களை சிங் களர்களுடன் நல்லிணக் கமாக வாழும்படி சொல்வது சிங்கள இனவெறிக்குத் துணை போவ தாகும்.
 எனவே இன்று இலங்கையில் இனங்களுக்கிடையே நல்லி ணக்கம் பேசுவது மனித நேய மற்றது; மனித உரிமை மீறலாகும். ஈழத்தமிழர்கள் சிங்களர்களோடு ஒரே நாட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது பிரிந்து தனி நாடு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதை அறிந்து அவர்களின் பெரும்பான்மை முடிவை செயல் படுத்துவதற்குரிய கருத்து வாக் கெடுப்பு நடத்தப் பட வேண்டும். இக்கருத்து வாக்கடுப்பு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடக்க வேண்டும்.
3.இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்கள் ஈழத்தமிழர்களின் தொன்மைத் தாயகமாகும். அங்கு அவர்கள் தங்கள் குடியிருப்பு களில் சுதந்திரமாக வாழவும் பேச்சுரிமை, எழுத்துரிமை, தொழில் செய்யும் உரிமை, கூட்டம்கூடும் உரிமை, அமைப்பு நடத்தும் உரிமை ஆகிய அனைத்துஉரிமைகளையும் செயல்படுத்தவும் உரிமை வேண்டும்.
இன அழிப்புப் போரினால் உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிதி உதவி செய்தல் உள்கட்டமைப்பு வசதி செய்து தருதல் உள்ளிட்ட அனைத்து துயர்துடைப்பு பணி களும் உடனடியாகச் செய்யப் படவேண்டும். இவை அனைத் தையும் ஐ.நா. மன்றமே நேரடியாகச் செய்ய வேண்டும். இத் துயர் துடைப்புப் பணிகளைச் செய்வதற்கு ஐ.நா. மன்றத்திற்கு உதவியாக வடக்கு கிழக்கு மாநிலங்களில் தமிழர்களைக் கொண்ட இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் உருவாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்படுவதே ஈழத் தமிழர் சிக்கலுக்குச் சரியான தீர்வாகும். இவ்வாறான தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் கொண்டுவர உலக நாடுகளை வலியுறுத்தித் தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் போராட வேண்டும். இவ்வாறான தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் முன்மொழிய வேண்டும் என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராட வேண்டும்.
மொட்டையாக இந்திய அரசு, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது இராசபட்சேக் கும்பல் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களை மறைத்திடும் மூடு திரையாகவே அமையும். அது மட்டுமின்றி அன்றும், இன்றும் இராசபட்சே கும்பலின் போருக் கும், இன ஒதுக்கல் செயல் களுக்கும் துணைநிற்கும் இந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களுக்குத் தமிழர்களே இராசபாட்டை போட்டுக் கொடுத்ததாகவே அமையும்.
அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. வின் தலைமையில் உள்ள டெசோ கோருவது சிங்கள-- இந்திய அரசுகள் நடத்திய இனப் படுகொலைப் போரின் குற்றங்களை மறைக்கும் மூடு திரையாகும்.

Labels: ,

"பிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பதவி அரசியல் மறுப்பும், ஈகமும் தான்" -- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Friday, March 1, 2013

"பிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பதவி அரசியல் மறுப்பும், ஈகமும் தான்" 

-- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

கோவை காந்திபுரத்தில், 17.02.2013 ஞாயிறு அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க அரங்கக் கூட்டம் நடை பெற்றது. நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் ஸ்டீபன் பாபு தலைமையேற்றார். தோழர் இராசேசுக்குமார் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க.அமைப்பாளர் தோழர் விளவை.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். தழல் ஈகி முத்துகுமார் உருவபடத்தை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ,ஆனந்தன் திறந்து வைத்தார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராம கிருட்டிணன்,விடுதலை சிறுத்தைகள் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் சுசி. கலையரசன், திரு. திருக்குறள் இரவி, மொழிப்போர் ஈகி திரு. ப.பெரியசாமி, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்.
நிறைவாகப் உரையாற்றும் போது,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேசியதாவது:
 “மாவீரன் முத்துக்குமார் தன்னை எரித்து கொண்ட போது தமிழர்களுக்காக ஒரு அரிய ஆவணத்தை எழுதி விட்டுச் சென்றுள்ளார். அதில், தமிழீழத்தை அழிக்கும் போரை இந்திய ஏகாதிபத்தியம்தான் நடத்துகிறது எனக் குறிப்பிட்டார்.அந்தப் போரை ஞாயம் என்று இந்தியா கருதினால் அதை பகிரங்காமாகச் செய்ய வேண்டியது தானே.ஏன் கள்ள மவுனம் காக்கிறது என்றார் முத்துகுமார்.
இந்தியாதான் ஈழத்தமிழரை அழிக்கும் போரை பின் நின்று கொண்டு இயக்கியது என்பதை நாம் அறிவோம்.ஆனால் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசு என்ற வரையறுப்பை இளைஞர் முத்துகுமார் சொன்னது வியப்பாகயிருக்கிறது.நம் தமிழ் உணர்வாளர்கள் பலருக்கு அந்த வரையறுப்பு புரியாது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்றவைதான் ஏகாதிபத்தியம் என்று கருதுகிறோம். இந்தியஅரசும் ஒரு ஏகாதிபத்தியம் தான்.தமிழகம் மட்டுமல்லாமல்,பல்வேறு தேசிய இனங்களையும் அது ஒடுக்குகிறது.பல்வேறு தேசிய மொழிகளை அது நசுக்குகிறது. பக்கத்து நாடுகளில் ஆதிக்க அரசியலை புரிய முனைகிறது.அந்த வகையில் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசுதான்.
இந்திய அரசு தமிழினப் பகை அரசு.தமிழீழ மக்களை 2009ல் மட்டும் ஒன்றரை லட்சம் பேரை அழித்ததோடு மட்டுமல்ல,தமிழகத் தமிழர்களையும் இந்திய அரசு ஒடுக்கி வருகிறது. அவர்களது உரிமைகள் பறிக்கத் துணை நிற்கிறது இந்திய அரசு.
சுண்டைக்காய் சிங்கள நாடு இந்திய அரசு துணையோடு தான் 600தமிழக மீனவர் களை சுட்டு கொன்றது,காவிரி உரிமை பறிக்க கர்நாடகத்திற்கும்,முல்லை பெரியார் உரிமை பறிக்க மலையாளிகளுக்கும் இந்திய அரசு துணை நிற்கிறது.எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழர்களுக்கும் பகை அரசாகவே செயல் படுகிறது.
இந்திய ஏகாதிபத்தியத்திற்கு கீழ் ஒடுக்கப்பட்டு கிடக்கும் தமிழகத்தில்,மாநில ஆட்சியை பெறுவதன் மூலம் நமது உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இழந்த உரிமைகளை மீட்க முடியாது. இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து முழு வெற்றி பெற முடியாது.
மொழி விடுதலை என்பது,அந்த இனத்தின் தாயக விடுதலையோடு இணைந்தது தான். இனம் விடுதலையடைந்தால் தான், மொழி விடுதலையடையும்.
வங்காள தேசம் பாகிஸ்தானோடு இணைந்து இருந்த காலத்தில்,மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியைத் திணித்தது. அந்த மொழித் திணிப்பை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் போராடினார்கள். கிட்டத்தட்ட 11 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள். வங்கதேச மக்கள் மொழி போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.தாயக விடுதலையையும் நடத்தி வெற்றி பெற்றார்கள். வங்காள தேசம் உருவாகி ஐ.நா.மன்றத்தில் உறுப்பு வகித்த பின்னர் தங்களுடைய மொழிக்காக,11பேர் உயிர் ஈகம் செய்த நாளான பிப்ரவரி 21-ஐ உலகத் தாய் மொழி நாளாக அறிவிக்கும் படி ஐ.நா.மன்றத்தில் கேட்டு, அதில் வெற்றியும் பெற்றார்கள்.இன்று உலகத் தாய் மொழி நாளாக வங்கதேச மொழிப்போர் நாள்தான் உலகெங்கும் நினைவு கூறப்படுகின்றது.
1965 மொழிப்போரில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய தமிழர்கள், இந்திய அரசின் இராணுவத்தால் காக்கைக் குருவிகளைப் போல,300க்கும் மேற்பட்டோர் சுட்டு கொள்ளப் பட்டார்கள். பத்து பேர் வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள்.
நம்முடைய மொழிப் போர் நாளான சனவரி 25,ஏன் உலகத் தாய் மொழி நாளாக ஏற்கப்படவில்லை?ஏன் என்றால் நாம் தேச விடுதலைப் போராட்டத்தை நடத்த வில்லை. நமக்கான தேசத்தை உருவாக்கி ஐ,நா.மன்றத்தில் உறுப்புவிகிக்கவில்லை.தாய்மொழிக் காக்க உலகத்தில் எந்த இனமும் தமிழர்களை போல் 300பேருக்கும் மேல் உயிரீகம் கொடுத்ததில்லை. ஆனால் நமக்கு சொந்த நாடு இல்லாத தால் நமது தியாகம் உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது.
மொழி உரிமைப் போராட்டம் தேசிய விடுதலைப் போரோடு இணைக்கப்பட்டதால் தான், வங்க மொழி ஆட்சி அதிகாரத்தை பெற்றது.
ஈழவிடுதலைப் போரும் முதலில் தமிழ் உரிமைப் போராகவே வெடித்தது.ஊர்தியில் சிங்கள எழுத்தில் சிறி மட்டுமே எழுதகூடிய அளவுக்கு இலங்கையில் சிங்கள அரசு உத்தரவு பிறப்பித்தது தமிழ் மொழியை ஒடுக்கியது.அன்று தமிழ் மொழி உரிமை காக்க ஈழத்தமிழ் இயக்கம்,ஈழ விடுதலை இயக்கமாக பரிணாமம் பெற்றது.அந்தஈழ விடுதலையில் தேர்தல் கட்சியான அமிர்தலிங்கம் கட்சி உறுதியாக நில்லாமல் சந்தர்ப்ப வாதம் செய்த போது,இளைஞர்கள் ஈழவிடுதலைக்காக ஆயுதம் புரட்சிக்கு முன்வந்தார்கள்.அப்படி உறுதியான ஆயுதப் போராட்ட அமைப்புகளில் தமிழீழ விடு தலைப் புலிகள் அமைப்பு தகுதியானதாக வலிமை மிக்கதாக நிலைத்து மலர்ந்தது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள்,சரியான மொழிக் கொள்கை, சரியான தேசிய இனக் கொள்கை முன்வைக்கப்படவில்லை. தேசிய விடு தலைப் போராட்டத்தோடு, மொழிப் போராட்டத்தை இணைக்கவும் இல்லை.
தில்லிக்காரர்கள் இந்தியை திணித்த போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத் தலைவர்கள் இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும் என்றார்கள். இந்தியும் அயல் மொழி ஆங்கிலமும் அயல் மொழி, சொந்த மொழியான தமிழ் மொழிக் குரிய கொள்கையை அவர்கள் வகுக்கவில்லை.அதே போல் தமிழர் தாயகம் –தமிழ்த் தேசம் என்ற வரையறுப்புகளைக்கூட அவர்கள் வகுக்கவில்லை.
தமிழர்களை திராவிடர்கள் என்றார்கள். தமிழருக்குரியத் தாயகத்தை திராவிட நாடு என்றார்கள்.இவ்வாறான குளறுபடிகள் நிறைந்தாகவும் தொலைநேக்கு அற்றதாகவும், மொழிப் போர் நடத்தப்பட்டதால் தான், உலகத்தில் யாரும் செய்யாத தியாகத்தை தமிழர்கள் செய்தும் கூட உரியப்பலனை நாம் இன்னும் அடையவில்லை.
எனவே தான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தெளிவான தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறது. எமது தேசம் தமிழ்த் தேசம், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசிய இனம் தமிழர், எமது இலக்கு இறையாண்மையுள்ளத் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது என்றும் இதுவே தமிழ்த் தேசியம் என்றும் தமிழ்த்தேசியம் உறுதிபடத் தெரிவிக்கிறது.
மக்கள் திரள் பங்கேற்கும் மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சி, தமிழ்த் தேச விடு தலையை உருவாக்கித் தரும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இதற்கு இடையில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது இலட்சியம் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது தமிழ்த் தேசியம் ஆகாது. தனித் தமிழ்நாட்டு விடுதலையை முன்வைக்காத எந்தக் கருத்தியலும் தமிழ்த் தேசியம் ஆகாது.
ஒரு இனம் ஒரு ஏகாதிபத்தித்தின் கீழ் காலனியாக இருக்கும் போது முதலமைச்சர் பதவியை காலனி மக்களுக்கு ஏகாதிபத்தியம் வழங்குவது ஏன்? தங்களை அயலார் ஆள்கிறார்கள் என்று அடிமைப்படுத்தபட்ட மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இறுதி அதிகாரம் அற்ற கங்காணிப் பதவியாக முதலமைச்சர் பதவியை ஏகாதி பத்தியம் உருவாக்கித் தருகிறது. அதில் கிடைக்கக்கூடிய, அதிகாரங்களையும் பதவி சுகங்களையும் துய்ப்பதற்காக தமிழர்களில் பலர் போட்டியிடுகிறார்கள். இப்போது தமிழ்த் தேசியம் பேசி போட்டி இடுகிறவர்களுக்கு, புதுக்கவர்ச்சி யாக ஒரு முழக்கம் வேண்டும் என்பதை தாண்டி அவர்களுக்கு தமிழ்த் தேசிய இலட்சியம் கிடையாது.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை தேடி இரண்டு முறை முதலமைச்சர் பதவி வந்தது. ஒரு முறை சார்க் மாநாடு பெங்களூரில் நடந்த போது, சிங்கள அதிபர் செயவர்த்தனா அங்கு வந்திருந்தார். பிரபாகரன் அவர்களை வரவழைத்தனர். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரபாகரன் அவர்களிடம் பேசச் சொல்லி முதலமைச்சர் பதவியை ஏற்க வற்புத்துமாறு கேட்டார்கள். எம்.ஜி.ஆர். சென்று பிரபாகரன் அவர்களிடம் பேசினார்.
ஆனால் பிரபாகரன் அவர்கள், “அண்ணா முதலமைச்சர் பதவி ஆசைக்காட்டி தமிழீழ விடுதலை கோரிக்கையை மழுங்கடித்து விடுவார்கள். எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக நான் ஈழவிடுதலையைக் கைவிட்டு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டால். அது என்னை நம்பிய இனத்தை விற்றது போல் ஆகிவிடும்” என்று கூறி பிரபாகரன் முதலமைச்சர் பதவி ஏற்க மறுத்து விட்டார்.
அடுத்ததாக 1987இல் பிராபாகரன், ஆண்டன் பாலசிங்கம் உள்ளிட்டோரை தில்லிக்கு தனி விமானத்தில் வரவழைத்து ராசீவ்காந்தி பிரபாகரன் அவர்களிடம் நேரடியாக பேசினார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு நீங்கள் முதலமைச்சர் ஆகுங்கள் என்று ராசீவ்காந்தி வலியுறுத்தினார். அப்போது பிரபாகரன் நாங்கள் கேட்பது தமிழீழ விடுதலை, இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு முதலமைச்சர் ஆனால் பதவிக்காக என் இனத்தை விற்று விட்டது ஆகும் என்று பிராபாகரன் மறுத்து விட்டார்.
தமிழ்நாட்டில் பிரபாகரன் அவர்களை தங்கள் தலைவர்களாகவும், வழிக்காட்டியாகவும் கூறிக்கொள்ளும் நண்பர்கள் அடிமைப் பெற்ற தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். அவர்கள் பிரபாகரனிடம் எதைக் கற்று கொண்டார்கள்? புரட்சி யாளர் பிரபாகரனை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்கான வணிக சின்னமாக பயன்படுத்தக் கூடாது.
புரட்சியாளர் பிரபாகரனிடமிருந்து தேசிய விடுதலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த இலட்சியப் பயணத்தில், கங்காணிப் பதவியாக முதலமைச்சர் பதவியை துட்சமாக கருதும் துணிச்சல் வேண்டும். கொள்கை பிடிப்பு வேண்டும். எத்தனை ஆண்டுகளில் தமிழ்த் தேசிய விடுதலை கிடைக்கும் என்று கணக்கு பார்க்க கூடாது. அடிமைப்பட்ட தேசத்தின் விடுதலைக்கு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போராட ஆயத்தமாக இருக்க வேண்டும்.
மாவீரன் முத்துகுமார் நினைவேந்தல் நிகழ்வில் மாற்று அரசியலான, தமிழ்த் தேசிய அரசியலை விரிவுபடுத்த வீச்சுபெறும்படி செய்ய உழைப்போம் போராடுவோம் என்று உறுதி ஏற்போம்”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், தோழர் சுகந்தி பாபு கலந்து கொண்டோருக்கு, நன்றி தெரிவித்துப் பேசினார்.

Labels: ,

"பாலகன் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பினைகளும்" ---தோழர் பெ.மணியரசன் கட்டுரை.


 "பாலகன் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பினைகளும்" 
---தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

பன்னிரண்டு அகவைக்கான பால் வடியும் முகம்; சிங்களப் படையினரின் பதுங்கு குழியில் பதற்றமில்லாமல் உட்கார்ந்திருக்கும் பாங்கு;பகைவர்கள் கொடுத்த தின்பண்டத்தை மெல்லும் மென்மை; அடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடக்கும் கொடூரம்!
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனி ஆகியோரின் இளைய மகன் பாலச்சந்திரன் 2009மே மாதம் சிங்களப் படையாட்களால் கடத்தப்பட்டு,காவலில் வைக்கப்பட்டு,கொல்லப்பட்ட கொடிய காட்சி இது.இராசபட்சே-பொன்சேகா கும்பல் நடத்திய தமிழின அழிப்பின் கொடூரத்தை இது வெளிக் காட்டுகிறது.சேனல்4என்ற இலண்டன் தொலைக்காட்சி. இலங்கை அரசு 2009 இல் ஈழத்தில் நடத்திய தமிழின அழிப்புப் போரின் படுகொலைகளை, பிணக்குவியல்களை, கொல்லப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப் பெண்கள் மீது வல்லுறவு நடத்திய சிங்களப் படையாட்களின் வக்கிரத்தை உலகுக்கு ஏற்கெனவே அம்ப லப்படுத்தியது.
இப்போது, “போரில்லா மணடலத்தில் - இலங்கையின் கொலைக்களம்” என்ற தலைப்பில் ஆன இரண்டாவது ஆவணப்படத்தை அத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அப்படத்தின் இயக்குநர் கல்லம் மக்கரே பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை பற்றி ஒரு கட்டுரையும் 19.2.2013 இந்து நாளேட்டில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகிறார்:
பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிங்கள இனவெறிப் படையாட்கள்கடத்திக் கொண்டு வந்து தங்களின் பதுங்கு குழியில் வைத்திருக்கிறார்கள்.திருவிழாக் கூட்டத்தில் தவறிப் போன சிறுவன் பெற்றோர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தேடும் விழிகளோடு அவன் உட்கார்ந்திருக்கிறான்.
அவன் கண்கள் கட்டப்படவில்லை;அவன் பார்க்கும் வகையில் அவன் கண்முன்பாக அவ னுக்குப் பாதுகாப்பாக இருந்த விடுதலைப் புலிகள் சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அடுத்து பாலச்சந்திரனைக் கைதொட்டு விடும் தொலைவில் துப்பாக்கியை நீட்டி மார்பில் சுடுகிறார்கள்.மல்லாந்து விழுகிறான் சிறுவன்.மறுபடியும் மறுபடியும் நான்கு முறை மார்புப் பகுதியில் சுடுகி றார்கள்.
இந்தக் காட்சிகள் அடங்கிய ஒளிப்படங்கள் உலகப் புகழ் பெற்ற தடயவியல் அறிஞர் மற்றும் நோய்க்குறி ஆய்வு வல்லுநர் பேராசிரியர் மெட்ரிக் பவுண்டர் அவர்களால் சோத னைக்குட் படுத்தப் பட்டன. இவை உண்மையான படங்கள்; புனையப்பட்டவை அல்ல என் பதை அவர் உறுதி செய்தார்.
“மதிப்பு மிகுந்த பன்னாட்டு மனித உரிமை வழக்கறிஞர் பேராசிரியர் வில்லியம், ஏ. சாப்பஸ் எங்கள் ஆவணப்படத்தில் கூறுகிறார்:
“கைது செய்யப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக அம்மண மாக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கும் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சித்திரவதைகள் என்பது விளங்கும்”
பேராசிரியர் சப்பாஸ் கூற்றுக்குப்பின் இயக்குநர் கல்லம் மக்கரே இது இலங்கை இராணு வத்தின் உயர் அதிகாரிகள் மட்டும் அல்ல, இலங்கை அரசின் உயர் பதவியில் உள்ள இராச பட்சே அவர் தம்பி இராணுவத் துறைச் செயலர் கோத்தபய இராசபட்சே ஆகியோரும் பதில ளிக்க வேண்டிய படு கொலைகள் என்று கூறுகிறார்.
சேனல் 4காட்டிய மேற்படி இரண்டாம் பாக ஆவணப் படத்தில் விடுதலைப் புலிகளின் மதிப்புமிக்கத் தளபதி இரமேசு பிடித்து வைக்கப்பட்டு, சிங்களப் படை ஆட்களால் சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உண் மைக் காட்சியும் இடம் பெற்றுள் ளது.
ஐ.நா.மன்றத்தின் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டு ஆயுதங் களின்றி,வெள்ளைக் கொடி யுடன் அமைதிப் பேச்சு நடத்தப் போன விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைவர்கள் நடேசன்,புலித்தேவன் போன்றவர் களையும் பிடித்து வைத்து சித்தி ரவதை செய்து இழிவுபடுத்தித் தான் கொன்றார்கள் என்ற ஒரு செய்தியும் இப்போது இணை யதளங்களில் பேசப்படுகிறது.
பாலச்சந்திரன் ஆனாலும், இலட்சக்கணக்கில் கொல்லப் பட்ட தமிழ் மக்கள் ஆனாலும் இரு தரப்பினர் போரிட்டுக் கொண்ட போது இடையில் சிக்கி கொல்லப்பட்டவர்கள் அல்லர். போரில்லா பாதுகாப்பு வளையத்திற்குள் வாருங்கள் என்று பொது மக்களை அழைத்து வந்து,அங்கு வைத்துக் கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்பட்டார்கள்.பாலகன் பாலச்சந்திரனைக் கடத்தி வந்து இராணுவப் பதுங்கு குழிக்குள் வைத்திருந்து விட்டுப் பின்னர் சுட்டுக் கொன்றிருக்கி றார்கள்.
இவையெல்லாம் இலங்கை அரசும் இலங்கை இராணுவமும் செய்த போர்க் குற்றங்கள் அல்ல;அவை நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள்.இவை அனைத்தும் இனப்படு கொலைக் குற்றங்கள்.
இந்தத் தமிழின அழிப்புக் கொலைக்களத்தில் ஓடிய குருதி வெள்ளத்தில் குளித்தவர்கள் இராசபட்சே கும்பல் மட்டுமல்ல, சோனியா- மன்மோகன் கும்பலும் தான்!
“இந்த (இன அழிப்பு)ப் போரை நான் இந்தியாவுக்காக நடத்தினேன்” என்று இலங்கை நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டே இராசபட்சே தெரிவித் தான். அவனது அக்கூற்றை இன்று வரை இந்தியஅரசு மறுக்க வில்லை. 2011 இல் இராகுல் காந்தி, ஈழத்தில் இன்னும் என் கணக்குத் தீரவில்லை என்றார்.
சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழ் இன அழிப்பில் பங்கெடுத்துக்கொண்டு ஆயுதங் கள், நிதி உதவி, பன்னாட்டு அரசியல் உதவி அனைத்தும் வழங்கியது இந்திய அரசு.
2013 மார்ச்சு 4 ஆம் நாள் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், இராசபட்சே - கோத்தபய - பொன்சேகா கும்பலின் இன அழிப்புக் குற்றங்களை,- மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிக்க தற்சார் புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்படும் வாய்ப்புள்ளதா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள கேள்வி.
மார்ச்சு மாதம் ஜெனிவாவில் கூடுகின்ற மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக் கெதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் தமிழின அமைப் புகளின் தலை வர்கள் சிலர் கோரிக்கை வைக் கின்றனர். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கொடுத்துள்ளார் என்று நடுவண் இணையமைச்சர் நாராயணசாமி கூறு கிறார்.
தமிழின உணர்வாளர்களும் மனித உரிமையில் அக்கறை உள்ளோரும் இந்த இடத்தில் ஏமாந்து விடாமல் சிந்திக்க வேண்டிய செய்திகள் இருக்கின்றன.
முதலில் அமெரிக்கா என்ன தீர்மானம் கொண்டு வரப்போகிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.அல்லது அமெரிக்கா என்ன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நமக்கொரு கோரிக்கை இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இராசபட்சே கும்பலை நீதிபதிகளாக்கும் தீர்மானம்.ஆம்,தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய இராசபட்சே கும்பல் அமைத்த “கற்றுக் கொண்ட படிப்பிணைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகள் ஆணையம்”விசாரித்து, போர்க்குற்றங்கள் நடந்திருக்கிறதா என்று அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம். அத் தீர்மானத்தில் அந்த எல்.எல். ஆர்.சி விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமை மன்றம் உதவி செய்ய வேண்டும் என்று அமெ ரிக்கா முன் மொழிந்திருந்த பகுதியை நீக்கி, “இலங்கை அழைத்தால் ஐ.நா. மனித உரிமை மன்றம் உதவும்” என்று திருத்தச் செய்து அதன் பிறகு அதனை ஆதரித்து வாக்களித்தது இந்தியா.
இதையே முதல் கட்ட வெற்றி என்று நம்மில் ஒரு பகுதியினர் வரவேற்றனர்.த.தே. பொ.க.வும் மற்றும் சில அமைப்புகளும் “இது இராசபட்சே கும்பலை இனப் படுகொலையிலிருந்தும்,போர்க்குற்றத்திலிருந்தும்,விடுவிக்கும்தீர்மானம்’என்றுகண்டித்தோம். கடந்த ஓராண்டாக அத்தீர்மானம் சாதித்தது என்ன? எதுவுமில்லை. கடந்த ஓராண்டுக்குள் இராசபட்சே இந்திய அரசின் சிறப்பு விருந்தினராக இரண்டு முறை வந்து அரசு மரியாதை பெற்றுத் திரும்பிப் போனான்.
அமெரிக்க அரசு, தனது மேலாதிக்க அரசியல் நோக்கத் தோடு அத்தீர்மானத்தைக் கொண்டு வந்ததே தவிர, மனித உரிமைக் காப்பு நோக்கில் கொண்டு வரவில்லை. அமெரிக் காவுடன் கூட்டுக் களவாணியாக இந்திய ஆட்சிக் கொலைகாரர் களும் சேர்ந்து கொண்டார்கள். இந்த உண்மைகள் தோண்டித் துருவிக் காணப்பட வேண்டிய அளவுக்குப் புதைகுழிக்குள் இல்லை.எல்.எல்.ஆர்.சி.விசாரிக் கட்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் கூறும் போதே பாமரர்களும் அதன் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அரசைச் சிறிது மிரட்டித் தன்பக்கம் இழுத்துக் கொள்வதுதான் ஏகாதிபத்திய வாதியான ஒபாமாவின் திட்டம்.இவ்வாண்டும் அதே பாணியில் தான் ஒபாமா ஆட்சி நடந்து கொள்ளும் என்று இணைய தளங்களில் செய்திகள் கசிகின்றன.
இலங்கைக் கெதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதியும் அவரது கையடக்கப்பிரதியான டெசோவும் கூறுவது பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் தந்திரம் என்பது ஊரறிந்த உண்மை!
தமிழக முதல்வர் செயலலிதா போர்க்குற்றங்கள் புரிந்த இலங் கைக்கு எதிராகப் பொருளியல் தடை விதிக்க வேண்டும் என்று அவ்வப்போது பேசித் தீர்மானம் நிறைவேற்றி விட்டு அடுத்த வேலைகளைப் பார்த்துக் கொண் டிருப்பார். சிங்களர்கள் கலந்து கொள்ளும் ஆசியத் தடகளப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்று அவர் எடுத்த நிலைபாடு பாராட் டத்தக்கது. இவரும், அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறுவது ஒரு சடங்குத்தனம் தவிர வேறன்று.
உண்மையான தமிழின உணர் வாளர்களும் மனித உரிமைப் பற்றாளர்களும் மனித உரிமை மன்றத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முன் மொழிந்து, உலகநாடுகளின் ஆதரவை அதற்குக் கோர வேண்டும். ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக் குற்றங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க,தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்க வேண் டும். அத்துடன் தமிழ் ஈழ மக்க ளிடம் “சிங்களர்களுடன் சேர்ந்தி ருக்கிறீர்களா அல்லது தனி நாடு அமைத்துக் கொள்கிறீர்களா”என்று கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்விரு தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் அந்தந்த நாடு களில் போராட்டங்கள் நடத்த வேண்டும். உலகு தழுவிய மனித உரிமை அமைப்புகளை, பல் வேறு அரசுகளைத் தமிழர்கள் அணுக வேண்டும்.
இனப்படுகொலை நடந்த கிழக்குத் திமோரில் பன்னாட்டு விசாரணை மன்றம் விசாரித்தது. அதன் தொடர்ச்சியாகத் கருத்து வாக்கெடுப்பு நடந்தது. கிழக்குத் திமோர் தனி நாடு ஆனது. அதே போல் தெற்குச் சூடானில் நடந்த இனப்படுகொலைகளைப் பன் னாட்டு விசாரணை மன்றம் விசாரித்தது. கருத்து வாக்கெடுப்பு நடந்தது. தெற்கு சூடான் தனி நாடானது. அந்த வழிமுறையில் ஈழத்திலும் பன்னாட்டு விசாரணை மன்றமும் கருத்து வாக் கெடுப்பும் தேவை.
இலங்கையில் இரு தரப்பு மக்களும் சமத்துவமாக வாழவும், நல்லிணக்கம் காணவும் உலக நாடுகள் முயல வேண்டும் என்று யார் பேசினாலும் அவர்கள் தமிழின அழிப்புப் போரை நடத்தி முடித்து,எஞ்சியுள்ள தமிழர்களை சொந்த மண்ணில் பணயக் கைதிகள் போல் வைத் துள்ள சிங்கள இனவெறியர் களைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஆதரிக்கிறார்கள் என்று பொருள்.
அண்மையில் தில்லியில் நடந்த நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத் தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி “இலங்கையில் இருதரப்பு மக்களிடையே நல்லி ணக்கம் மேம்படப் பாடுபடுவோம் என்று கூறினார்.எஞ்சியிருக்கின்ற தமிழர்களை சிங்கள இனவெறியர்களின் ஆதிக்கத் திற்குக் கட்டுப்பட்டு,எதிர்த்துப் பேசாத கொத்தடிமைக் கும்பலாக மாற்றுவது தான் இன்றைக்கும் இந்திய அரசு வைத்துள்ள திட்டம் என்பதைத்தான் பிரணாப் முகர்சியின் உரைமறைமுகமாக “நல்லிணக்கம்”என்று சுட்டிக் காட்டுகிறது.
அண்மையில் திருப்பதிக்கு வருவதற்கு இருநாட்கள் முன்,இராசபட்சே “தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தரமுடி யாது”என்று கொக்கரித்து விட்டுத்தான் இங்கு வந்தான். இராசபட்சேயின் இந்தக் கொக் கரிப்பைக் கேட்டு உள்ளூரப் பூரித்துப் போயிருக்கும் இந்திய ஏகாதிபத்தியம்.
இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் “சமஅதிகாரத் துடன் நல்லிணக்கம் காண வேண்டும்” என்ற உண்மையான பேராவல் இந்திய அரசுக்கு இருந்திருக்குமேயானால், இராசபட்சேயின் “தன்னாட்சி மறுப்புக்” கூற்றுக்கு மறுமொழி, கூறியி ருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் 22.2.2013அன்று புது தில்லியில் தம்மைச் சந்தித்த தமிழகக் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் “இராசபட்சே 13வது திருத்தத்தை மட்டுமல்ல அதைவிடவும் கூடுதலான (13+)அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்” என்று கூறினார்.(இந்து 23.2.2013) எவ்வளவு ஏமாற்று வேலை!
எனவே இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கக்கூடாது; அதனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
சேனல்4 தொலைக்காட்சி சார்பில் “போரில்லா மண்டலத் தில் இலங்கையின் கொலைக் களம்”என்ற ஆவணப்படம் எடுத்த இயக்குநர் கல்லம் மக்கரே தமது கட்டுரையிலும் 22.2.2013 அன்று அப்படம் தில்லியில் திரை யிட்டபோது அவர் இலண்டனி லிருந்தவாறு ஆற்றிய உரையிலும் திரும்பத் திரும்ப இந்திய அரசு, பன்னாட்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.இதன் பொரு ளைப் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு விசாரணையை இந்தியாதான் இது வரை தடுத்து வைத்துள்ளது, இனிமேலும் அவ்வாறு தடுக்கக் கூடாது என்பதே இதன் பொருள்.
அதே வேளை,கல்லம் மக்கரேயும் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றார்.அவர் வெளி நாட்டுக்காரர். ஆவணப்படக்காரர். ஆய்வாளர். அந்த அளவு தான் அவர் கூறமுடியும். நாம் அந்த வரம்புடன் நிற்கக் கூடாது.நாம் இன அழிப்புக்கு உள்ளா னவர்கள்.இன்றும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத் தமிழர்களுக்கு எதிராகவும் செய்யும் நயவஞ்சக வேலைகளை நேரடியாக அனுபவிப்பவர்கள்.நாம் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கக் கூடாது. இந்தியாவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.
இந்தியா தனது மண்டல மேலாதிக்கக் காரணங்களுக்காக இராசபட்சேயைக் கூட எதிர்க் கலாம்.எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரம சிங்கேயை ஆதரிக்கலாம்.கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணிலை ஆதரிக்கும்படி சம்பந்தன் குழு விடம் இந்தியா கூறியது. இதெல்லாம், இந்தியா ஈழத் தமிழர்களை ஆதரித்து, சிங்கள இனவெறியை எதிர்க்கிறது என்பதற்கான செயல்கள் என்று தமிழின உணர்வாளர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
பாலகன் பாலச்சந்திரன் படு கொலைப் படங்களைப் பார்த்த பின் கூட இந்தியாவின் மனம் இரங்கவில்லை. அப்படங்கள் ஒட்டு வேலை செய்து தயாரிக்கப் பட்டிருக்கலாம் என்று இந்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் சிண்டே கூறினார். இதையே தான் இந்தியாவின் சிங்களத் தூதர் காரியவம்சம் கூறினார்.
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபட்சே கும்பலைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் கேட்போம்! ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தக் கோருவோம். இவற்றுக்குக் குறைவாக பிச்சை கேட்பது போல் எதையும் இந்தியாவிடமும் வேறு யாரிட மும் கேட்க வேண்டாம்.நம் கோரிக்கை ஏற்கப்படும் நாள் வரும். அது வரை போராடுவோம்!


(இக்கட்டுரை, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2013 மார்ச் 1 இதழில் வெளியானது.)

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்