<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற அலட்சியத்தால் உயிரிழந்தாரா?" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, October 28, 2016
==========================================
பேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற
அலட்சியத்தால் உயிரிழந்தாரா?
==========================================
தமிழ்நாடு அரசு உடனே தலையிட வேண்டும்!
==========================================
தோழர் பெ. மணியரசன் அறிக்கை !
==========================================
கடந்த 24.10.2016 அன்று, அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்து, இரங்கல் அறிக்கை அளித்தேன்.
தற்போது, தோழர் மூர்த்தி அவர்கள் அலிகர் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் உயிரிழக்க நேர்ந்தது என்று வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
கடந்த 23.10.2016 அன்று காலை அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மூர்த்திக்கு அன்று மாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக் கட்டியை அகற்றியிருக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலை 9 மணிக்கு அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கிறது என்றும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர்.
சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் உடனடியாக வரவில்லை. காலதாமதமான பின் அங்குள்ள தமிழர்கள் முயற்சியால் சிறப்பு மருத்துவர் வந்து பார்த்துள்ளார். அவர் உயர் சிகிச்சை அளிக்க தில்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளார். அதற்கான ஆம்புலென்ஸ் மற்றும் மருத்துவர்கள் ஏற்பாடு செய்ய மிகவும் காலதாமதமாகி இரவு 7மணிக்கு மேல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
காலையிலிருந்து சிறுநீர் பிரியாமல் துன்பப்பட்ட பேரா. மூர்த்தி மிகவும் உடனடி சிகிச்சை அளிக்காமல் மிகவும் காலதாமதமாக ஆம்புலன்சில் ஏற்றிய போது இறந்து விட்டார். மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்கள்.
அலிகரிலிருந்து 2.30 மணி நேர பயணமுள்ள தில்லி உயர் மருத்துவமனைக்கு கொண்டு போகாமல் பல மணி நேரம் தாமதப்படுத்தியதால் பேரா. மூர்த்தி அவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. தமிழர் என்பதால் இந்த அலட்சியமா?
தமிழ்நாடு அரசு, உடனே தலையிட்டு அலிகர் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரித் தலைமையிடம் அறிக்கை கோரவேண்டும்.

Labels:

"பேராசிரியர் து.மூர்த்தி மக்களுக்கான வாழ்க்கை வாழ்ந்தவர்" -- தோழர் பெ. மணியரசன் இரங்கல்!

Tuesday, October 25, 2016
==================================
பேராசிரியர் து. மூர்த்தி மறைவுக்கு
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
==================================
பேராசிரியர் முனைவர் து. மூர்த்தி அவர்கள், நேற்று (24.10.2016) புதுதில்லி மருத்துவமனையில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.
அலிகர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ் பரப்பும் பணியை மொழிபெயர் தேயத்தில் சிறப்பாகச் செய்து வந்தார் தோழர் து. மூர்த்தி. அண்மையில்தான், அப்பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக, அவர் பணியாற்றியபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் உருவாயின. அவர் ஆய்வுப் பணியில் துடிப்புடன் செயல்பட்டது போலவே, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் துடிப்புடன் செயல்பட்டார். இதற்காக அவர் பழிவாங்கப்பட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின், போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பேராசிரியராக பணியாற்றினார். அதன்பிறகு, அவர் அலிகர் பல்கலைக்கழகம் சென்றார்.
அவர் தமிழ்நாட்டில் இருந்தபோது, “சிந்தனையாளன்” இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “1989 - அரசியல் சமுதாய நிகழ்வுகள்” என்ற நூல் வெளிவந்தது. அது குறித்த அறிமுகக் கூட்டத்தை, தஞ்சையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடத்தினோம். அதில், பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார்.
மார்க்சிய – பெரியாரிய கருத்தியலாளரான பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள், துணிந்த நெஞ்சும் தூய நோக்கும் கொண்டவர். மக்கள் மீது மிகுந்த அக்கறையும் தமிழ்ச் சமூக மாற்றம் குறித்த பேரார்வமும் கொண்டவர். அவர் பணி ஓய்வு பெற்று, தமிழ்நாடு திரும்பி, தமிழ்ச் சமூகவியல் சிந்தனைக் களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவருடைய திடீர் மறைவு பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
பேராசிரியர் து.மூர்த்தி வாழ்ந்தபோது மக்களுக்கான வாழ்க்கை வாழ வேண்டுமென்று கருதியவர். அதற்கேற்ப அவர் உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நாளை ஒப்படைக்கப்படுவதாக நண்பர்கள் கூறினார்கள். இறப்பிலும் ஒரு சாதனையோடுதான் தோழர் மூர்த்தி விடைபெற்றுள்ளார்.
பேராசிரியர் து. மூர்த்தி அவர்களின் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை..! தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பை உண்டாக்கக் கூடியது!" -- தோழர் பெ. மணியரசன் எதிர்வினை!

Friday, October 21, 2016
============================================
சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை..!
தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பை உண்டாக்கக் கூடியது!
============================================
தோழர் பெ. மணியரசன் எதிர்வினை!

==========================
==================
“தி இந்து” தமிழ் நாளிதழில் (21.10.2016) திரு. சமஸ் எழுதியுள்ள “காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி.. உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?” என்ற கட்டுரையில், விவரப்பிழைகள் மலிந்துள்ளன; பன்னாட்டுச் சட்டங்கள், இந்திய நாட்டுச் சட்டங்கள் ஆகியவை கூறும் ஆற்று நீர் உரிமை நீதியை மறுக்கும் கருத்துகள் நிறைந்துள்ளன.

“நமக்கான தண்ணீரைத் தர வேண்டும் என்று பேசுகிறோம். அந்த வரலாற்றின் அடிப்படை என்ன? அந்த நியாயத்தின் அடிப்படை என்ன? ஆதிக்க நியாயம்! ஈராயிரம் வருஷங்களுக்கு முன்பே காவிரியில் நாம் கல்லணையைக் கட்டி விட்டோம். கன்னடர்களோ முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு முதல் அணையைக் கட்டினார்கள்” என்கிறார் சமஸ்.

சமகாலத் தமிழர்களை மட்டுமின்றி, தமிழர்களின் பாட்டன் கரிகால் சோழனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் கட்டுரையாளர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணை, ஒரு நீர்த்தேக்கம் அல்ல! அது ஒர் நீர் ஒழுங்கி (Regulator). ஒவ்வொரு வெள்ளப் பெருக்கின் போதும் வெவ்வேறு திசையை உருவாக்கிக் காவிரி ஓடியது. பழைய நீர்த் தடத்தில் உரிய தண்ணீர் வருவதில்லை. இப்பொழுதுள்ள கொள்ளிடம் பகுதியில் முழுமையாகக் காவிரி சென்று விடும் காலமும் உண்டு. அதை ஒழுங்குபடுத்த, கொள்ளிடம் தலைப்பில் ஒரு சுவரை எழுப்பினான் பேரரசன் கரிகாலன். பெருவெள்ளம் வரும்போது, மிகை நீர் அந்தச் சுவரின் மேல் மிதந்து கொள்ளிடத்தில் ஓடும். அளவாக தண்ணீர் வரும்போது மரபு வழிப்பட்ட பாதையில் காவிரி ஓடும். அந்த ஒரு சுவருக்கு அப்பால் கல்லணையில் கரிகாலன் வேறு அணை எதுவும் கட்டவில்லை.

இப்பொழுதுள்ள கல்லணையும் நீர் ஒழுங்கிதான். இது நீர்த்தேக்கமன்று. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், புதாறு ஆகியவற்றின் தண்ணீரைப் பிரித்துவிடும் நீர் ஒழுங்கிதான் இது! இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் கட்டப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கல்லணையில் எழுப்பிய நீர் ஒழுங்கியால் கர்நாடகத்திற்கு என்ன இழப்பு? கர்நாடகத்துக்குப் போக வேண்டிய எந்தத் தண்ணீரைத் தடுத்தது கல்லணை?

கரிகாலன் கட்டிய கல்லணை வரலாற்றை “ஒரு வகையில் அது ஆதிக்க வரலாறு; ஆதிக்க நியாயம்” என்கிறார் சமஸ். அவரின் இந்தத் தருக்கம் உண்மை விவரங்களுக்குப் புறம்பானது.

“பாரம்பரிய நதிநீர் உரிமைச் சட்டங்களையெல்லாம் தாண்டி கொஞ்சம் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். காலத்தே வளர்ச்சியில் பின் தங்கிய ஒரு மாநிலம் பின்னாளில் தன் வளர்ச்சியை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைப்பதில் என்ன தவறு காண முடியும்? காலத்தே யார் முன்னேறியவர்களோ, அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?” என்று சமஸ் கேட்கிறார்.

கர்நாடகம் வேளாண் நிலங்களைப் பெருக்கிக் கொள்ளத் தமிழ்நாடு என்றும் தடையாக இல்லை. 1924-இல் ஏற்பட்ட காவிரி ஒப்பந்தத்தில் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை ஒன்றரை இலட்சம் ஏக்கரிலிருந்து ஆறு இலட்சம் ஏக்கராகப் பெருக்கிக் கொள்ள உறுதியளிக்கப்பட்டது. காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்புக் கர்நாடகம் பதினோரு இலட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய உரிமை அளித்தது. இறுதித் தீர்ப்பு 18 இலட்சம் ஏக்கர் சாகுபடி செய்து கொள்ள கர்நாடகத்திற்கு உரிமை அளித்தது. ஆனால் கர்நாடகம் அதை 21 இலட்சமாக அதிகரித்துக் கொண்டது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் காவிரியில் கர்நாடகத்திற்கு 177 ஆ.மி.க. (டி.எம்.சி.) ஒதுக்கியது. காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு கர்நாடகத்திற்கு 270 ஆ.மி.க. (டி.எம்.சி.) ஒதுக்கியது.

1974 வரை தமிழ்நாடு 29 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் காவிரி நீர் கொண்டு சாகுபடி செய்தது. காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் 24,50,000 ஏக்கர் பரப்பில்தான் தமிழ்நாடு சாகுபடி செய்ய வேண்டும் என்று சுருக்கியது.

அன்றையத் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி அமைத்த காவிரி உண்மை அறியும் குழு நான்கு மாநிலங்களிலும் கள ஆய்வு செய்து 1972-இல் அளித்த அறிக்கையில், 1934லிருந்து 1970வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி நீர் 372.8 ஆ.மி.க. என்றது. 1984ஆம் ஆண்டு மேட்டூர் அணையின் பொன் விழா கொண்டாடப்பட்ட போது, கர்நாடகத்திலிருந்து மேட்டூர் அணைக்கு 50 ஆண்டுகளில் வந்த தண்ணீரின் ஆண்டுச் சராசரி 363.4 ஆ.மி.க. என தமிழ்நாடு பொதுப்பணித்துறை மலரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 ஆ.மி.க. என்றது.

காவிரி நீரைப் பயன்படுத்திக் கொள்வதில் கர்நாடகம்தான் முன்னுரிமை பெறுகிறது. கூடுதல் நீர் பெற்று வருகிறது. கர்நாடகம் பெற்று வரும் கூடுதல் தண்ணீர் ஒதுக்கீட்டையும், கூடுதல் சாகுபடிப் பரப்பையும் எதிர்த்துத் தமிழ்நாட்டில் நாம் போராட்டம் நடத்தவில்லை. ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழ்நாட்டிற்குத் தர முடியாது என்பதை கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் தங்களின் பொது முழக்கமாக வைத்துக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட சிறிதளவுத் தண்ணீரைக்கூடத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களையும் தமிழர்களைத் தாக்கி – தமிழர் உடைமைகளை எரிக்கும் தமிழினப்பகை வெறியாட்டத்தையும் கர்நாடகத்தின் இந்த அட்டூழியங்களுக்குத் துணை போகும் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலையும் எதிர்த்துத்தான் தமிழ்நாட்டில் போராடுகிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துங்கள் எனப் போராடுவது குற்றமா? இந்திய அரசே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்காதே என்று கேட்பதும் குற்றமா?

காலத்தே முன்னேறிய தமிழர்கள் தங்களின் முன்னுரிமை மட்டுமே தொடர வேண்டும் என்று போராடுவது சமூகநீதியா என்று கேட்கிறார் கட்டுரையாளர். கர்நாடகத்தின் எந்த சட்ட உரிமையை, அவர்களின் முன்னேற்றத்திற்கான எந்த முன்னுரிமையைத் தமிழ்நாடு எதிர்க்கிறது? வெளிப்படையாக சமஸ், “தமிழர்களே, 192 ஆ.மி.க. தண்ணீர் கேட்காதீர்கள்; காவிரியை நிரந்தரமாக மறந்து விடுங்கள்” என்று கூற விரும்புகிறாரா?

“சமூகநீதி” பற்றி தமிழ்நாட்டிடம் பேசும் சமஸ், இந்தியத்தேசிய நீதி – சர்வதேசிய நீதி - இந்துத்துவா நீதி பற்றியெல்லாம் கர்நாடகத்திற்கு எடுத்துக் கூறுவாரா?

சிந்து, சீரம், செனாப் ஆகிய மூன்று ஆறுகளைப் பாக்கித்தானுக்கு ஒதுக்கி, 1960-இல் இந்தியத் தலைமை அமைச்சர் நேருவும் பாக்கித்தான் அரசுத் தலைவர் அயூப்கானும் போட்ட ஒப்பந்தத்தை நீக்க வேண்டுமென்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறவில்லை. இந்த ஒப்பந்தத்தில் கண்ட அளவுக்கும் அதிகமான தண்ணீர் பாக்கித்தான் போகிறது; அந்த மிகை நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் கூறி வருகிறார்.

1966-இல் ஹெல்சிங்கியில் (Helsinki) உருவான பன்னாட்டு ஆற்று நீர்ப் பங்கீட்டு வழிகாட்டு நெறிகள்தான் இன்று உலகில் பின்பற்றப்படுகின்றன. காலம்காலமாக இயற்கையாக ஓடி பாய்ந்த பகுதிகளுக்கு – ஆற்றின் தலைப்பகுதியில் இருந்தாலும் கடைப்பகுதியில் இருந்தாலும் அந்த ஆற்றில் சம உரிமை உண்டு – இது தண்ணீர் மரபுரிமை (Riparian Right) என்கிறது ஹெல்சிங்கி விதி! அப்படித்தான் சூடானிலிருந்து எக்கிப்துக்கு ஓடுகிறது நைல்! ஏழு நாடுகளுக்கிடையே ஓடுகிறது டான்யூப்! இந்தியாவிலிருந்து வங்க தேசத்துக்கு ஓடுகிறது கங்கை!

இந்திய நாடாளுமன்றம் 1956-இல் இயற்றி, 2001வரை பல திருத்தங்கள் செய்யப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ச் சிக்கல் சட்டம் – 1956, இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையில் ஓடும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் விதிகளை உருவாக்கி வைத்துள்ளது. அதன்படிப் பல தீர்ப்பாயங்கள் இந்தியாவில் ஏற்கெனவே அமைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, இராசஸ்தான் இடையே ஓடும் ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்ள பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுத் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் இடையே ஓடும் நர்மதைக்குத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றுக்கிடையே ஓடும் கிருஷ்ணா ஆற்றுக்குத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதன் தீர்ப்புப்படி, மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பு தண்ணீர் பிரித்து விடுகிறது.

அங்கெல்லாம் கடைபிடிக்கப்படும் ஆற்று நீர் மரபுரிமைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் பொருந்தாதா? இதுதான் இந்தியத்தேசியப் பார்வையா? இது காந்தியப் பார்வையா?

“நீரியல் வல்லுநர்” ஜனகராஜனைத் துணைக்கழைத்துக் கொள்கிறார் சமஸ். சென்னை வளர்ச்சி ஆய்வு நடுவத்தின் (MIDS) “அறிவுசீவி”யாகச் செயல்படும் ஜனகராஜனின் இருபதாண்டு கால நடவடிக்கைகளைக் கவனித்தவர்களுக்கு அவரது “மனோ தர்மம்“ பற்றி நன்கு தெரியும். தமிழர் விரோதச் செயல்களுக்குத்தான் அவரது மனோதர்மம் அவரைத் தூண்டும்.

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் தமிழ்நாட்டில் எழுச்சி பெறும் போதெல்லாம், அதைச் சீர்குலைக்கத் திட்டங்கள் தீட்டுபவர் அவர்.

தமிழ்நாட்டு – கர்நாடக அரசியல்வாதிகள் போட்டி போட்டு அரசியல் பண்ணுகிறார்கள்; இரு மாநில விவசாயிகளும் இணைந்து “காவிரிக்குடும்பம்” அமைத்து, அதில் பேசி இணக்கமான முடிவு காணலாம் என்று ஜனகராஜனும் இந்து என். இராமும் திட்டம் வழங்கினார்கள். தமிழ்நாட்டிலிருந்து மன்னார்குடி ரெங்கநாதனும் மற்றவர்களும் அதில் சேர்ந்தார்கள். கர்நாடகத்திலிருந்து விவசாயிகள் சங்கத் தலைவர் புட்டண்ணையாவும் மற்றவர்களும் அதில் சேர்ந்தார்கள். காவிரிக் குடும்பம் பல கூட்டம் நடத்தி, பெங்களூருக்கு 30 ஆ.மி.க. தண்ணீர் ஒதுக்கத் தீர்மானம் போட்டது. அத்தோடு சரி!

தமிழ்நாட்டுக்குரிய தண்ணீர் அளவு பற்றி முடிவு செய்யவே இல்லை. தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு 2007-இல் வந்தவுடன் அதன் நகலை முதலில் எரித்தவர் புட்டண்ணையாவும் அவரது சங்க விவசாயிகளும்தான்!

அதன்பிறகு, காவிரிக் குடும்பத்தைவிட்டு புட்டண்ணையா வெளியேறினார். காவிரி உரிமை மீட்டிட, தமிழ்நாட்டில் இனத்தற்காப்புணர்ச்சியுடன் தமிழர் ஒற்றுமை உருவாகாமல் தடுத்திடும் ஜனகராஜனின் தொலைநோக்குத் திட்டம் அத்துடன் தொலைந்தது!

தமிழ்நாட்டின் நீராதாரங்களைச் சீரமைப்பது, தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்வது, தண்ணீர் சிக்கனம் போன்றவை தமிழ்நாட்டிற்கு மிகமிகத் தேவை. ஆனால், இவை ஒரு போதும் காவிரி ஆற்று நீருக்கு மாற்றாக அமையா!

சட்டப்படியான காவிரி நீர் உரிமையைப் பலி கொடுத்துதான் மேற்படி சீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இருக்கிறதா?

ஜனகராஜனும் சமசும் கூற வருவது, நீராதாரச் சீரமைப்பு – நீர்ச்சிக்கனம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி – காவிரி நீர் உரிமையை நிரந்தரமாகக் கைவிட வேண்டும் என்பதுதான்!

குடியிருப்புகளில் குழாயில் தண்ணீர் வராவிட்டால் மக்கள் போராடுகிறார்கள். நீங்கள் சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தவில்லை, இனிமேல் உங்களுக்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று உள்ளாட்சி நிர்வாகம் கூற முடியுமா? அம்மக்கள் குடிநீர் கேட்டு முஷ்டி முறுக்கிப் போராடினால், அது குற்றமா?

காவிரி, கொள்ளிடம், பாலாறு போன்றவற்றில் புதர் மண்டத் தொடங்கியது எப்போது? கர்நாடகமும் ஆந்திரப்பிரதேசமும் தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைத் தடுத்து, அந்த ஆறுகள் ஆண்டில் பெரும்பாலான காலத்தில் தண்ணீரின்று கிடக்கத் தொடங்கிய பிறகுதான் புதர்கள் மண்டின.

“எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு கருத்து உண்டு” என்றுகூறி, மேலே சுட்டிக் காட்டப்பட்ட தமிழ்நாட்டு உரிமை மறுப்புக் கருத்துகளை சமஸ் கூறியுள்ளார். இது சமசின் தனிப்பட்ட கருத்து மட்டுமன்று; ஏற்கெனவே பல ஆண்டுகளாக கர்நாடகம் இதே கருத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அரசும் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறது. இப்பொழுது, சுப்பிரமணிய சாமியும் இதே கருத்தை பரப்பி வருகிறார். எனவே, சமஸ் தனிமைப்பட்டு இல்லை!

சமஸின் மேற்படிக் கட்டுரை முழுக்க முழுக்க நடுநிலை தவறிய பார்வை கொண்டது. தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பை உண்டாக்கக் கூடியது.

Labels: ,

"காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை !" -- தோழர் பெ.மணியரசன் அறிக்கை

Wednesday, October 19, 2016
===================================================
காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட
இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை !
===================================================
தஞ்சையில் - காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் !
===================================================

“காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவது” என தஞ்சையில், இன்று (19.10.2016) நடைபெற்ற காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், மாவட்டச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், மீ.தி.எ.கூட. திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்தது போல், பலநாள் பட்டினி கிடந்தவன் ஒரு கவளம் உணவை வாயில் வைக்கும்போது கையைத் தட்டி உணவுத் தட்டையும் பறித்துக் கொண்டது போல், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட காலவரம்புடன் ஆணையிட்ட போது, அதைத் தடுத்து விட்டது இந்திய அரசு!

நேற்று (18.10.2016) உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கை விசாரித்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று மிகக் கடுமையாக நரேந்திரமோடி அரசின் தலைமை வழக்கறிஞர் ரோத்தகி வாதிட்டார். அத்துடன் காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பு பற்றி விசாரிக்கவும், ஆணையிடவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை, காவிரி வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு, ஒதுங்கிக் கொள்ள, நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முடிவு செய்யுமோ என்ற அச்சம் உள்ளது.

தமிழ்நாட்டைப் பகை நோக்கோடு எதிர்த்துச் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கர்நாடக அரசைவிடவும் தீவிரமாக, தமிழ்நாட்டுக் காவிரி உரிமைக்கு எதிராக இந்திய அரசு செயல்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்போம் என்கிறது மோடி அரசு. இது நடக்கின்ற செயலா? இனி எந்தக் காலத்திற்கும் காவிரி உரிமை தமிழ்நாட்டிற்கில்லை என்று மறைமுகமாக இந்திய அரசு சொல்வது போல் உள்ளது.

காவிரியை இழந்துவிட்டால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாகும்? தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் பாசன நிலம் காவிரியை நம்பி உள்ளது. காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கி வருகிறது காவிரி!

காவிரி டெல்டா மாவட்டங்களில் 16 இலட்சம் ஏக்கர் சாகுபடி என்னாவது? கடந்த ஐந்தாண்டுகளாகக் குறுவை சாகுபடி இல்லை. இவ்வாண்டு காலம் தாழ்ந்து மேட்டூர் அணை திறக்கப்பட்டு சம்பா சாகுபடி வேலைகளைத் தொடங்கியுள்ளனர். சம்பாப் பயிரைப் பாதுகாக்கத் தண்ணீர் ஏது?

கையறு நிலையில் கதியற்றுத் தவிக்கின்றனர் தமிழர்கள். கடந்த கால வரலாற்றை எண்ணிப் பார்க்கின்றனர்.

காலனிய வேட்டைக்காக இந்தியாவை உருவாக்கிய ஆங்கிலேயர் ஆட்சி பாதுகாத்த காவிரி உரிமையை விடுதலை பெற்ற இந்தியாவில் பாதுகாக்க முடியவில்லையே!

பத்தாண்டுகளுக்கு மேல் மைசூர் அரசுடன் கடும் உழைப்பெடுத்து பேச்சு நடத்தி 1924 ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை உருவாக்கித் தமிழ்நாட்டைப் பாதுகாத்தது வெள்ளையர் ஆட்சி! 94 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டித் தந்தது வெள்ளையர் அரசு! 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசன் உலகின் முதல் அணையாகக் கட்டிய அதே கல்லணையில் புத்தம் புதிய அணையை பெரிய அளவில் கட்டித் தந்தது வெள்ளையர் அரசு; புது ஆற்றை வெட்டித் தந்தது வெள்ளையர் அரசு!

இவை அனைத்தையும் பாழ்படுத்திவிட்டதே விடுதலை பெற்ற இந்திய அரசு! இதற்காகத்தான் கப்பலோட்டிண தமிழர் வ.உ.சி. சிறையில் செக்கிழுத்தாரா? திருப்பூர் குமரன் விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தாரா? எண்ணற்ற தமிழர்கள் குடும்பங்களை இழந்து, தன்னலம் மறந்து விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு இந்தியச் சிறைகளிலும் அந்தமான் சிறையிலும் இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்களா?

காவிரி மட்டுமல்ல, வெள்ளையராட்சி பாதுகாத்துத் தந்த பல உரிமைகளையும் விடுதலை பெற்ற இந்திய ஆட்சி தமிழ்நாட்டிலிருந்து பறித்து விட்டது. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்து கடல் உரிமையைத் தமிழர்களிடமிருந்து பறித்தது. இலங்கைப் படையாட்கள் 600 தமிழக மீனவர்களைக் கொன்றனர். இன்றும் தென்கடலில் மீன்பிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள். அன்றாடம் இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் அடைக்கப்படுகிறார்கள். படகுகளைக் கடத்திக் கொண்டு போகிறது சிங்கள அரசு.

வெள்ளையராட்சியில் பாதுகாக்கப்பட்ட பாலாற்று உரிமை இந்திய ஆட்சியில் தமிழ்நாட்டிற்கில்லை.

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அதன் உரிமை தமிழ்நாட்டிற்கு இருக்கும் வகையில் திருவிதாங்கூர் அரசுடன் ஒப்பந்தம் போட்டுத் தமிழர்களுக்கு அளித்தது வெள்ளையராட்சி. அதைத் தட்டிப் பறிக்க அந்த அணையை உடைக்கக் கேரளம் நேரம் பார்த்துக் காத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியான சிற்றணையை வலுப்படுத்திட செங்கல், சிமெண்ட் கொண்டு செல்ல – அனுமதிக்காமல் தடுக்கிறது கேரளம்! தட்டிக்கேட்டு – அந்த சட்டவிரோதச் செயலைத் தடுத்திட இந்திய அரசு மறுக்கிறது.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் கொஞ்ச நஞ்சமுள்ள தண்ணீரையும் தாரை வார்ப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்படுகிறது இந்திய அரசு! தாமிரபரணித் தண்ணீர் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தருகிறது.

காவிரி டெல்டாவைப் பாழ்படுத்திட – மீத்தேன் எடுக்க – பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கிறது இந்திய அரசு! பிடிவாதமாக – கொங்கு மண்டலத்தில் வேளாண் விளை நிலங்கள் வழியாக எரிவளி குழாய் பதித்து, நாசமாகக்கிடத் தீவிரம் காட்டுகிறது இந்திய அரசு!

பாலாற்றில் தண்ணீர் உறிஞ்சி, இந்தியா முழுமைக்கும் “ரயில் நீர்” கொடுக்க அதிகாரம் உள்ள இந்திய அரசுக்கு, ஆந்திர அரசு சட்டவிரோதமாகப் பாலாற்றில் கட்டும் புதிய நீர்த்தேக்கங்களைத் தடுக்க மட்டும் அதிகாரம் இல்லையா?

இதுபோல் ஒவ்வொரு உரிமையாக இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலால் தமிழ்நாடு இழந்து வருகிறது. கடைசியில் தமிழர் தாயகமாய் உள்ள தமிழ்நாட்டு உரிமையையும் இழக்க வேண்டி வரலாம்.

எனவே காந்தியடிகள் 1920-இல் வெள்ளை ஏகாதிபத்திய அரசுக்கெதிராகத் தொடங்கிய “ஒத்துழையாமை இயக்கம்” போல், தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் கடைபிடிக்குமாறு தமிழ்நாட்டு மக்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்கள்
=================================================

1. நடுவண் அமைச்சரவையிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்.

2. தமிழ்நாட்டிற்கு வரும் நடுவண் அமைச்சர்களுக்குத் தமிழ் மக்கள் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

3. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்.

4. இந்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுகளைத் தமிழ்நாட்டுக் கலைஞர்கள், வீரர்கள், சான்றோர்கள் ஏற்கக் கூடாது. நடுவண் அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுகளைத் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் ஏற்கக் கூடாது. ஏற்கெனவே இவ்விருதுகளைப் பெற்றோர் அவ்விருதுகளை இந்திய அரசிடம் திருப்பித் தர வேண்டும்.

5. நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு மக்கள் அங்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டும்.

6. காவிரி உரிமையைப் பாதுகாத்துத் தராத – பாதுகாத்துத் தர மறுக்கும் இந்திய அரசு காவிரிப் படுகையைப் பாழ்படுத்தும் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட எதையும் எடுக்கக் கூடாது.

7. தமிழ்நாடு அரசு கர்நாடகத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

8. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் அரிசி, மஞ்சள், புதையிலை உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் தமிழ்நாட்டுச் சந்தையில் அனுமதிக்கக் கூடாது. அவற்றைத் தமிழ் மக்கள் வாங்கக் கூடாது.

9. நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரிகளும் ஊழியர்களும், தமிழ் மக்களும் கர்நாடகம் செல்லாமல் தடுக்க வேண்டும்.

10. கர்நாடகத் திரைப்படத் துறையினருடன் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கன்னடத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடாமல் தடை செய்ய வேண்டும்.

Labels: ,

"காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, October 18, 2016
=================================================
காவிரி வழக்கு:
உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால் தமிழ்நாட்டுப் போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும்!
==========================
=======================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்

தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==========================
=======================

உச்ச நீதிமன்றத்தில் இன்று (18.10.2016), காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடக் கூடாது என்றும், நாடாளுமன்றம்தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது என்றும் இந்திய அரசு வாதிட்டுள்ளது. இந்த வாதங்கள், தமிழ்நாட்டுக்குக் காவிரி வழக்கில் நீதி கிடைக்கக்கூடாது என்று கர்நாடக அரசைவிட இந்திய அரசு தீவிரமாக இருப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

2007இல் காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் ஒதுக்கீடு செய்த தண்ணீர் அளவு போதாது என்று மறு ஆய்வு செய்ய ஆணையிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வேறு; இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கிடைத்திட காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பின்னர் தொடுத்த வழக்கு வேறு. இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாகக் கலந்து ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிப்பதென்பது சட்டப்படி முறையானதல்ல!

இரண்டு வழக்குகளின் தன்மைகளும் வெவ்வேறானவை. ஒன்றோடு ஒன்றைப் போட்டுக் குழப்புவது கர்நாடகத்தின் தந்திரம். அந்தத் தந்திரத்தை நடுவண் அரசு தானும் கையாள்கிறது. அதே தந்திரத்தின்படி உச்ச நீதமன்றம் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது நீதி முறையியல் ஆகாது!

காவிரித் தீர்ப்பாய வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்க உரிமை உடையதுதானா என்று இப்பொழுது உச்ச நீதிமன்றம் பரிசீலிக்கிறது. அப்படியென்றால், 2007இல் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை ஏன் ஏற்றுக் கொண்டது? ஏற்றுக் கொண்டதுடன் இறுதி முடிவு வரும் வரை, தற்போதுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு இந்திய அரசு செயல்படுத்த வேண்டுமென்று கட்டளையிட்டது சட்டவிரோதச் செயலா? மூன்று நீதிபதிகள் அமர்வு உச்ச நீதிமன்றத்தின் மாண்புக்கு மாசுகள் ஏற்படும் வகையில் விசாரணை நடத்தக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகளையே மூன்று நீதிபதிகள் அமர்வு கேள்வி கேட்பது என்ன ஞாயம்?

உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால்தான், 2007-லிருந்து கடந்த 04.10.2016 வரை காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் காவிரி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதை ஏற்றுக் கொண்டு பதில் மனுக்கள் அளித்தன. வழக்குரைஞர் மூலம் வாதாடின.

இப்பொழுது முரட்டுத்தனமாக, உச்ச நீதிமன்றத்திற்கு காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனச் சொல்வது, இந்திய அரசு நடுநிலை தவறி தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையே உணர்த்துகிறது.

இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 262இன் முதல் பகுதி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறைத் தீர்த்து வைக்க நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டுமெனக் கூறுகிறது. இந்த உறுப்பின் இரண்டாவது பகுதி, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை எனக் கூறுகிறது.

இந்த இரண்டாவது பகுதியின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் “காவிரித் தீர்ப்பாயம்”. அது கூறியிருக்கும் பொறியமைவுதான் “காவிரி மேலாண்மை வாரியம்”. நாடாளுமன்றத்தின் வழியாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டம்தான் “காவிரி மேலாண்மை வாரியம்”. மறுபடியும் இதற்கு நாடாளுமன்றம் செல்ல தேவையில்லை.

மற்ற சிக்கல்களில், நாடாளுமன்றச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுபடியும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென இந்திய அரசு கூறுமா?

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956இல், நடைமுறை அனுபவங்களையொட்டி பல்வேறு திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முகாமையானவை, 6A மற்றும் 6 (2) ஆகும். 6 (2) என்ற திருத்தம், 2002இல் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தத் திருத்தம்தான், தண்ணீர் தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குச் சமமான ஆற்றல் கொண்டது எனக் கூறுகிறது.

இந்த 6 (2) உருவாவதற்கு முன், 6A பிரிவில் உள்ள உட்பிரிவு 7, தீர்ப்பாயத் தீர்ப்பை செயல்படுத்த நாடாளுமன்றம் கூடி விவாதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறது. அதற்குப் பின், 2002இல் சேர்க்கப்பட்ட 6 (2) பிரிவு – தீர்ப்பாயத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று கூறியதுடன், 2002க்கு முன் இச்சட்டத்தில் உள்ள 6A, 7 ஆகியவை 2002க்குப் பிறகு பொருந்தாது எனக் கூறியுள்ளது.

இவற்றையெல்லாம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தெளிவாக விவாதித்துதான் “காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் (Shall constitute)” என்று கூறியுள்ளது. இவ்வளவு தெளிவாக இந்திய அரசமைப்புச் சட்டததிலும், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 சட்டத்திலும் கூறப்பட்ட பின்னும், நாடாளுமன்றத்தில் இதை விவாதிக்க வேண்டுமென்று இந்திய அரசு வாதிடுவது, கர்நாடகத்தையும் விஞ்சிய அளவில் சட்டவிரோதமாக நரேந்திரமோடி அரசு நடந்து கொள்வதையே காட்டுகிறது.
இவ்வளவு தெளிவாக சட்டங்கள் வரையறுத்த பின்னும், உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் மீண்டும் விவாதித்துக் கொண்டிருப்பது, உச்ச நீதிமன்ற விசாரணை செல்லும் திசை பற்றி பல்வேறு ஐயங்களையும், அச்சங்களையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டாக்கியிருக்கிறது.

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பின்படி, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவை, தற்போது செயலில் உள்ள காவிரித் தீர்ப்பாயம் மாற்றி முடிவு செய்தால், அந்த முடிவின்படி தண்ணீரைத் திறந்துவிடும் வேலைதான் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இருக்கிறது. மற்றபடி, காவிரி மேலாண்மை வாரியம் தானாக தண்ணீரின் அளவை முடிவு செய்து திறந்துவிட முடியாது. இப்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இப்பொழுதுள்ள இறுதித் தீர்ப்பின்படி அது தண்ணீர் திறந்துவிடும்.

அடுத்து, இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு அனுப்ப வேண்டுமென கர்நாடக அரசு கூறுகிறது. இதை ஏற்றுக் கொள்வது போல் இந்திய அரசின் வாதங்கள் பொருள் தருகின்றன. இவ்வாறு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், காவிரித் தண்ணீர் நிரந்தரமாகத் தமிழ்நாட்டுக்கு இல்லை என்றாகிவிடும்!

எனவே, மேற்கண்ட இந்திய அரசமைப்புச் சட்டம், மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956 ஆகியவற்றின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைத்திட, குறுகிய காலவரம்பிட்டு கட்டளை இடுவதொன்றே உச்ச நீதிமன்றத்தின் சட்டக் கடமையாகும் என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு மாறாக, வேறு வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தால் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு இந்திய அரசு மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் துணை போகின்றது என்று தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டு சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், இதுபோல் உச்ச நீதிமன்றம் இழுத்தடிப்பது நீதி வழங்குவதாகாது! பட்டினியால் அழும் குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல் “2,000 கன அடி திறந்து விடு“ என உச்ச நீதிமன்றம் சொல்வது இருக்கிறது. அதைகூட கர்நாடகம் மறுத்த நிலையிலும், கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க உச்ச நீதிமன்றம் மறுப்பது ஏன்?

காவிரிச் சிக்கலில் இப்பொழுது, ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து, எழுச்சி பெற்று போராடி வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்லை என்றால், அந்தப் போராட்டங்கள் புதிய போக்கில் வடிவவெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels: ,

“இளம் தலைமையே எழுந்து வா!” -- அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பு வெள்ளி விழா மாநாட்டில் - தோழர் பெ. மணியரசன் பேச்சு!

Tuesday, October 11, 2016
========================================= “இளம் தலைமையே எழுந்து வா!”
=========================================
அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பு
வெள்ளி விழா மாநாட்டில் -
தோழர்  பெ. மணியரசன் பேச்சு!
=========================================
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உலகத் தமிழர்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும், வட அமெரிக்காவில் பாடுபட்டு வரும் “உலகத் தமிழ் அமைப்பின்” (World Thamil Organization, Inc), வெள்ளி விழா மாநாடு 08.10.2016 அன்று நடைபெற்றது.
வட அமெரிக்கத் தலைநகரமான வாசிங்டன் அருகிலுள்ள, வர்ஜினியா மாநிலத்தின் - ஆல்டியில் உள்ள மெர்செர் இடைநிலைப் பள்ளி கூட்ட அரங்கில் காலை முதல் மாலை வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. பூஜா செல்வம் – சான்றோர் ஜெயக்குமார் இருவரும் புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தமிழர் உரிமைகளுக்கு இன்னுயிர் ஈந்த ஈகியர் – மாவீரர் மற்றும் அண்மையில் அமெரிக்காவில் காலமான வின்ஸ்டன் தர்மராஜான் வில்லியம்ஸ் (புஷ்பராணி வில்லியம்ஸ் கணவர்) ஆகியோர்க்கு அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது. 

உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் முனைவர் வை.க. தேவ் வரவேற்புரையாற்றி, மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவருமான திரு. இரவி சுப்பிரமணியம் மாநாட்டின் நோக்கம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, உலகத் தமிழ் அமைப்பின் வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதன் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் தணிகுமார் சேரன் பேசினார். பல்வேறு தலைப்புகளில் விவாத அரங்குகள், சிறப்புரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.
“பறிபோன – பறிபோகும் தமிழர் உரிமைகள் – மீட்டெடுப்பு” என்ற தலைப்பில் நடந்த விவாத அரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்று கருத்துகளை முன்வைத்தார்.
மாநாட்டின் நிறைவரங்கில், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. உருத்திரகுமாரன், மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு : 

“தண்ணீருக்குள் கிடந்தாலும் பாஸ்பரஸ் நெருப்பாகவே கனன்று கொண்டிருப்பது போல், தமிழ்நாட்டிலிருந்து பத்தாயிரம் – பன்னிரெண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால், அயல் இனங்களின் மண்ணில் அயல் மொழியினரின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தாலும், “தமிழர்கள்” – என்ற எண்ணத்தை நெருப்பாக நெஞ்சில் ஏந்தி, அமெரிக்க மண்ணில் வாழ்ந்து வரும் உங்கள் எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தாய் மொழி தமிழை நெஞ்சில் நெருப்புச்சுடராக ஏந்தி செயல்பட்டு வருவது பாராட்டிற்குரியது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இதே உணர்வோடு, இந்த “உலகத் தமிழ் அமைப்பை” வெற்றிகரமாக நடத்தி வரும் பெருமக்களுக்கு எனது பாராட்டுகள்! இவ்வமைப்பின் வெள்ளி விழா மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழீழம் பற்றியும் மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் சிந்திப்பவர்கள் இங்கே இருக்கிறீர்கள்! உங்களின் செயல்பாடுகள், தமிழ்நாட்டிலிருக்கும் எங்களைப் போன்ற களப்பணியாளர்களுக்கு ஊக்கமளிக்கக் கூடியவையாக உள்ளன. அவற்றையெல்லாம் நாங்கள் தமிழ்நாட்டில் பேசுவோம். நாங்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – மாதமிருமுறை இதழ் மூலமும் எடுத்துச் சொல்வோம். சமூக வலைத்தளங்களில் பகிர்வோம்.
நாம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நம் கருத்துகளை இங்கே வராத நம் மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிர கவனம் செலுத்தி உழைத்தால் போதும். ஒரு குடம் தண்ணீரை, ஒரு சொம்பு கொதிநீர் வெந்நீராக மாற்றிவிடும். அந்த ஒரு சொம்பு கொதி நீராக, இங்கே கூடியிருக்கும் நீங்கள் இருக்கிறீர்கள். இங்கு வர இயலாத தமிழர்களைச் சந்தித்து, இந்த மாநாட்டுத் தீர்மானங்களை – இந்த மாநாடு வெளிப்படுத்திய உணர்வுகளை அவர்களிடம் கொண்டு சேர்த்தால், அதுவே இம்மாநாட்டின் வெற்றி! 

அசல் வெள்ளி விண் மீனும் போலி வெள்ளி விண் மீனும்
-----------------------------------------------------------------------------------------
“வெள்ளி” என்பதொரு உலோகம். தமிழ்நாட்டின் கிராமங்களில், “வெள்ளி” யை உலோகமாக மட்டுமல்லாமல், ஒரு விண்மீனாகவும் மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். விடிவதற்கு முன்பு மிகுந்த ஒளியோடு தோன்றும் ஒரு நட்சத்திரமாக “வெள்ளி”யைக் கூறுவார்கள். அதுபோல், தமிழர்களுக்கு வரப்போகும் விடியலை அறிவிக்கும் வெள்ளி மீனாக ஒளிகாட்டுவது போல் இந்த “வெள்ளி விழா” மாநாடு அமைய வேண்டுமென்பது எங்கள் விருப்பம்! அந்த வெற்றிக்கு – விடியலுக்கு நாம் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும்.
அந்தக் காலத்தில் கிராமங்களில் சூரியன், நிலவு, நிழல், விண்மீன் போன்றவற்றை வைத்து நேரத்தைக் கணக்கிடுவார்கள். விடியலை முன்னறிவிக்கும் வெள்ளி மீன் வானத்தில் தோன்றினால், வேளாண் வேலைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் மக்கள் புறப்படுவார்கள். அதை வைத்து ஒரு கதைகூட உண்டு.
ஒருமுறை, பக்கத்து ஊர் சந்தைக்கு ஒரு வணிகர் பொருட்கள் வாங்க புறப்படுவதற்கு வெள்ளி முளைத்து விட்டதா என்று பார்த்தார். வெள்ளி போல் தோன்றிய ஒரு மீன் வானத்தில் பளிச்சிட்டது. விடியப்போகிறது என்று கருதி வணிகர் புறப்பட்டுவிட்டார். ஆனால், போகப்போக வெள்ளி போல் தோன்றிய மீன் மறைந்தது. கிழக்கு வெளுக்கவில்லை. இருள் கவ்வியது. காத்திருந்த கள்வர்கள் அந்த வணிகரை அடித்துப் போட்டு பணப் பையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் விடியற்காலையில் வெள்ளி முளைத்ததை வைத்து விவசாய வேலைக்குப் புறப்படும்போது சிலர், வெள்ளி தானா செட்டியார் குடியைக் கெடுத்த மீனா என்று பார் என்பார்கள்.
தமிழ்ச் சமூகத்தில் சில போலி “வெள்ளி“ விண்மீன்கள் தோன்றி நம்மை ஏமாற்றிவிட்டன. இப்போது, உண்மையான “வெள்ளி” விண்மீனுக்கு – உண்மையான விடியலுக்கு நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்! இந்த வெள்ளி விழா மாநாடு விடியலுக்கு முன் தோன்றும் உண்மையான வெள்ளியாக அமையட்டும்! 

நாம் இனவெறியரா?
---------------------------------

இன்றைக்கு நம்மவர்களே - சிலர் நம்மை இனவெறியர்கள் என்றும், மொழிவெறியர்கள் என்றும் பேசுகின்ற நிலை உள்ளது. தமிழினம், தமிழ்மொழி என்று பேசினாலே, இனவெறி – மொழிவெறி என அடையாளப்படுத்துகிறார்கள்.
நமக்கென்ன இனவெறி இருக்கிறது? நாம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறோமா? இல்லை! நம்மீதுதான் பிற இன ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட இனத்தின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் நம்மை “இனவாதிகள்” என்கிறார்கள்.
நாம் எந்த இனத்தைத் தாக்கினோம்? தொடர்ந்து பிற இனத்தால் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழீழத்தில் சிங்களர்கள் நம்மத் தாக்கினார்கள். இனப்படுகொலை செய்தார்கள். இந்தியாவில் மலையாளிகள் அடித்தார்கள். கன்னடர்கள் அடிக்கிறார்கள். ஆரியர்கள் எல்லா வகையிலும் அடிக்கிறார்கள். ஆனால், அடிக்காதே என்று சொல்லும் நம்மைப் பார்த்து, “இனவெறியர்கள்” என்கிறார்கள். “அடிபடுபவன்” அடிக்காதே என்பதை அதட்டித்தான் சொல்வான்.
நாம் நம் தமிழ் மொழியைப் பிற இனத்தவர் மீது திணிக்கிறோமா? பிற மொழி மீது ஆதிக்கம் செலுத்தச் சொல்கிறோமா? இல்லை. எங்கள் மீது இந்தியைத் திணிக்காதே! சமற்கிருதத்தைத் திணிக்காதே, ஆங்கில ஆதிக்கம் ஒழிக என்கிறோம். இது மொழிவெறியா? எங்கள் தாய்மொழியைத் தற்காக்கும் முயற்சி இது!
பல நாடுகளை பிடித்தப் போதும்கூட, அந்த நாடுகளையெல்லாம் அடிமைப்படுத்தி ஆள வேண்டுமென மாமன்னன் இராசராசன் நினைத்ததில்லை. தமிழ்ப்பேரரசன் இராசேந்திர சோழன் அப்படி ஆளவில்லை. அப்படிப்பட்ட இனத்திற்குச் சொந்தக்காரர்களாக நாம் இருக்கிறோம்!
இந்தியையும் சமற்கிருதத்தையும் திணித்து, நம் மொழியை அழிக்க இந்தியா துடிக்கிறது. ஆனால், அதற்கு எதிராகப் போராடும் நம்மை “மொழிவெறியர்” என்று இந்தியாவும் சொல்கிறது. நம்மவர் சிலரும் சொல்கிறார்கள்.
எனவே, பாதிக்கப்பட்டவனைப் பார்த்து “இனவெறியர்” – “மொழிவெறியர்” என்றெல்லாம் சொன்னால் என்ன பொருள்?

தமிழர் அறம்
----------------------

தமிழீழத்தில் போர் நடைபெற்ற போது, தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தி சிங்களவன் வல்லுறவு கொண்டு அழித்த போதும்கூட, ஒரு சிங்களப் பெண்மீது கூட தாக்குதல் நடத்தக்கூடாது என ஆணையிட்ட தலைவன் பிரபாகரன் பிறந்த இனம் - இந்த இனம்!
விடுதலைப்புலிகளிடம் விமானப்படை இருந்தது. சிங்களர்கள் வான்குண்டு வீசித் தமிழர்களைக் கொன்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் நினைத்திருந்தால், கொழும்பில் குண்டு வீசி, சிங்களப் பொது மக்களைக் கொன்றிருக்க முடியாதா? ஆனால் செய்யவில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழ் மக்களை சிங்களப் படையாட்கள் கொன்று குவித்தபோதுகூட, சிங்களக் குடிமக்களைத் தாக்கக் கூடாது என ஆணையிட்ட தலைவன் பிரபாகரன்! இதுதான் தமிழர் அறம்! சங்க காலம் முதல் பிரபாகரன் காலம் வரை கடைபிடிக்கப்படும் தமிழர் அறம் இதுதான்!
அயலார்தான் நம்மை “இனவெறியர்” – “மொழிவெறியர்” என்றெல்லாம்கூறி, நம்மை வீழ்த்த நினைக்கிறார்கள். ஆனால், நம்மவர்கள் அதற்குப் பலியாகி “இனவெறி” – “மொழிவெறி” என்றெல்லாம் நம்மையே வீழ்த்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கக்கூடாது. 

சொல் ஆயுதம்
-------------------------

ஆரியர்கள் தமிழ்நாட்டை அடிமைப்படுத்த வந்த போது, வில்லேந்தி மட்டும் வரவில்லை – சொல்லேந்தியும் வந்தார்கள் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
“தீயாடியப்பர்” என்றிருந்த இறைவன் பெயரை, “அக்னீசுவரர்” என்று மாற்றினார்கள். “அறம் வளர்த்த நாயகி” என்ற இறைவி பெயரை, “தர்ம சம்வர்த்தினி” என்று மாற்றினார்கள். “மயிலாடுதுறை” என்ற ஊர்ப்பெயரை, “மயூரம்” என்று மாற்றினார்கள். “முருகனை” சுப்பிரமணி என்றார்கள். அதாவது பிராமணர்களுக்கு நன்மை செய்வோன் என்றனர். அவருக்கு வள்ளியுடன் ஏற்கெனவே திருமணமான நிலையில், புதிதாக “தெய்வயானை” என்ற வடநாட்டுப் பெண்ணை கட்டி வைத்தார்கள்.
ஏன் இவ்வாறு செய்தார்கள்? தமிழர்களின் ஊர்களை – பெயர்களை ஆரியமயமாக்க வேண்டும்! அதற்காக செய்தார்கள்! நம் பண்பாடு - அடையாளம் எல்லாவற்றையும் ஆரியர்கள் மாற்றினார்கள். அது இன்றும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
அதனால்தான், தமிழன் – தமிழர் என்றாலே இனவாதம் என்று நாமே நினைக்கும்படி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் மனநிலையை உருவாக்குகிறார்கள். தமிழன் என்றால் இனவாதம் என்றால், கன்னடர், மலையாளி, தெலுங்கர், ஆரியர், இந்தியன் என்றெல்லாம் பேசுவது என்ன வாதம்?
இந்தியத் துணைக் கண்டத்திலேயே அதிகளவில் பாதிக்கப்பட்ட இனம் – தமிழினம்தான்! நமக்கொரு உத்தரவாதமான வாழ்க்கை இன்றைக்கும் கிடையாது! இருக்கின்ற உரிமைகளும் பறிபோகின்றன. 

செயற்கையான சிறுபான்மையினர்
--------------------------------------------------------

ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் நாம் “சிறுபான்மையினர்” என்கிறார்கள். அதைவிட குறைவான மக்கள் தொகைக் கொண்டது பிரித்தானியா! அதுபோல், தமிழ்நாட்டைவிடக் குறைவான மக்கள் தொகை கொண்டது பிரான்ஸ்! இத்தாலி, இசுரேல், நார்வே என பல நாடுகள் தமிழ்நாட்டைவிட மிகக் குறைவான மக்கள் தொகை கொண்டவை! ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை இந்தியாவில் “சிறுபான்மை” என்கிறார்கள். எப்படி நாம் சிறுபான்மையினர் ஆனோம்? நாம் இந்தியாவில் இணைக்கப்பட்டதால் செயற்கையாக சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளோம்!
இந்தியா தொடர்ந்து, பல சிக்கல்களில் தமிழர்களுக்கு நடுநிலை தவறி அநீதி இழைக்கிறது. நீதி வழங்க மறுக்கிறது. காவிரிச் சிக்கலில் இது அப்பட்டமாகத் தெரிந்தது.
எனவேதான், தமிழீழத் தமிழர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவை நம்பாதீர்கள். எப்படியாவது இந்தியாவுக்கு “தமிழீழம்” பற்றி புரிய வைத்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்! காளை மாடு கன்று போட்டாலும் போடும், இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக - தமிழர் ஞாயத்திற்கு ஆதரவாக வராது! இதுவே நமக்கான படிப்பினை! 

என்ன செய்ய வேண்டும்?
-----------------------------------------

இவ்வளவு பெரும் இழப்புகளுக்குப் பிறகும் இந்தியாவை நாம் நம்பக் கூடாது. எனவே, தமிழீழத்தமிழர்கள் சிந்தித்து மாற்றுப் பாதைக்கு வாருங்கள்.
இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் பணிய வைக்கத்தான் முடியும். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, நெருக்குதல் கொடுத்து, நீதிக்குத் தலைவணங்கச் செய்ய வேண்டும். அந்த ஆற்றல், தமிழ்நாட்டிலுள்ள ஏழரைக் கோடி தமிழ் மக்களுக்குத்தான் இருக்கிறது.
தமிழர்களுக்கு ஒரு நாடல்ல, இரண்டு நாடுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று தமிழீழம். தமிழீழம் விடுதலையடையும் தருவாயில் இருக்கிறது, தமிழ்நாடு அப்படியில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை!
எது முந்தும் எது பிந்தும் என வரலாற்றில் சொல்ல முடியாது. சோவியத் ஒன்றியம், 15 நாடுகளாகப் பிரிந்த போது, ஆயுதப் போராட்டங்கள் நடக்கவில்லை. மேசையில் பேச்சு நடத்தி செக்கோஸ்லோவேகியா இரண்டாகப் பிரிந்தது. எனவே, அரசியல் காய் நகர்த்தல்களால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
எனவே, இது முந்தி – இது பிந்தி என சோதிடம் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனச் செயல்படுங்கள்!
2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர தமிழ்நாட்டுத் தமிழர்களால் முடியவில்லை. போர் நிறுத்தப் போராட்டம், தமிழ்நாட்டில் வெகு மக்கள் எழுச்சியாக வளரவில்லை. உரிய ஆற்றலுடன் பெருந்திரளாக வெகு மக்கள் வீதிக்கு வந்து குரல் கொடுக்கவில்லை.
நாங்கள், தோழர் கொளத்தூர் மணி, தோழர் கோவை இராமகிருட்டிணன், தோழர் தியாகு ஆகியோர் தலைமையிலான அமைப்புகள் “தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, தஞ்சையிலே இந்திய அரசின் விமானப்படைத்தளத்தை முற்றுகையிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுக்கு வரி செலுத்தும் வருமானவரி அலுவலகங்களை, சுங்கவரி அலுவலகங்களை முற்றுகையிட்டோம். விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டத்தில், அன்றைக்கு எங்களுக்கிருந்த ஆற்றலுக்கேற்ப, 350 தோழர்கள் கைது செய்யப்பட்டோம். 500 பேர் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால், ஒரு வார காலம், இந்திய அரசு அலுவலகங்களைப் பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் திரண்டு முற்றுகையிட்டு, அவை செயல்படாத வகையில் முடக்கியிருந்தால், இந்தியாவுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும். தமிழீழம் விடுதலையாவதற்கு முன், தமிழ்நாடு விடுதலையாகிவிடும் போலிருக்கிறது என அச்சப்பட்டுக் கொண்டாவது, போர் நிறுத்தத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்கும்.
எனவே, நாம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் ஆற்றலாக வளர வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழ்த்தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டும்!

 இளம் தலைமையே எழுந்து வா!
----------------------------------------------------
இவர் தலைமை – அவர் தலைமை என்றில்லாமல், புதிய தலைமைகள் பிறக்க வேண்டும். புதிய தமிழ் இளைஞர்கள் வர வேண்டும். இளைஞர்கள் பின்பற்ற மட்டுமல்ல, வழிகாட்டவும் உரிமையுள்ளவர்கள் என்பதை மறக்கக்கூடாது!
இளைஞர்களே, இவர் சொன்னார் - அவர் சென்னார் என்று கேட்பது மட்டும் உங்கள் வேலையல்ல. நீங்கள் முடிவெடுங்கள்; நீங்கள் வழிகாட்டுங்கள்! துணிந்து வாருங்கள்! நுகர்வு வாதத்தை விட்டு வெளியே வாருங்கள்! மனக்குகையிலிருந்து வெளியே வாருங்கள்! உங்கள் நெஞ்சில் பற்றியெரியும் உரிமைத் தீதான் வெளியேயும் பற்றும் என உணர்ந்து, வெளியே வாருங்கள்!
ஒரு தனி மனிதரிடமிருந்துதான் புரட்சி பிறக்கிறது. ஒரு அகல் விளக்கிலிருந்து ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றிக் கொள்ள முடியும்!
களப்போராட்டங்களில் கலந்து கொள்வோர் வருக! கருத்துக்களைப் பரப்ப உதவுவோர் வருக! நிதி வழங்க முடிந்தோர், நிதி தாருங்கள்! யார் யார் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்! செயல்பட்டுக் கொண்டே இருங்கள்! நாம் வெற்றி பெறுவோம்!
மனித மனம், எப்பொழுதும் அற்ப ஆசைகளையும், இலேசான விடயங்களையும்தான் நாடும். அது இயற்கையானது. உயர்ந்த எண்ணங்களுக்கு நாம் அதைத் திருப்பி விட வேண்டும்.
ஒரு குழந்தைக்கு நெய்யும் பருப்பும் கலந்து சோறு கொடுக்கத் தாய் போராடுவாள்! ஆனால், ஐஸ்கிரீம்மைப் பார்த்தால், அந்தக் குழந்தை அதை நோக்கித் தாவி ஓடும்! அதுதான் மனித மனம்! எனவே, இலட்சியத்தை நோக்கி மனத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவோர் தான் சிந்தனையாளர்களாக – போராளிகளாக வரலாற்று நாயகர்களாக உருவாகிறார்கள்.
புரட்சியில் எப்பொழுதும் 100 விழுக்காட்டு மக்கள் பங்கு கொள்வதில்லை. 50 விழுக்காட்டு மக்கள் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்று தங்கள் வேலையைப் பார்ப்பார்கள். வெறும் 25 விழுக்காட்டு மக்கள் உறுதியான ஆதரவோடு பங்கேற்றால் போதும், நாம் வெற்றி பெறலாம்! அதற்குரிய வழிகளில் அவர்களைத் திரட்ட வேண்டும்.
தமிழீழம் போல், தமிழ்நாட்டில் ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இங்கு அது பலன் தராது. அச்சப்பட்டுக் கொண்டல்ல, தமிழ்நாட்டுச் சூழல் வேறு! தமிழீழச் சூழல் வேறு! தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சி – தேர்தல் ஆசையற்ற அறவழிப் போராட்ட எழுச்சி உருவாக வேண்டும். பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளைஞர்களைத் திரட்ட வேண்டும்!
வாழ்ந்த தமிழினம், வீழ்ந்து கிடக்கிறது! உலகின் முதற்செம்மொழி சொந்த மக்களாலேயே புறக்கணிக்கப்படும் அவலம் நடக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு நாம் கொதித்தெழ வேண்டும்! ஆக்க வழிப்பட்ட மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இளம் தலைமையே எழுந்து வா!

தமிழேத் தமிழர் வாழ்வு
---------------------------------------

நாம் யாருக்கு எந்த இனத்திற்கு என்ன தீங்கு செய்தோம்? நமக்கு ஏன் இப்படி இழப்புக்கு மேல் இழப்புகள் வருகின்றன? இந்தியா, இன்று வாழ்கிற நம்மை பார்த்து அச்சப்படவில்லை. நம் வரலாறும் மொழியும் அவர்களுக்கு அச்சத்தைத் தருகிறது. இடைக்காலத்தில் எத்தனை சந்தர்ப்பவாதிகள் வந்தாலும், இந்த இனம் பிரபாகரன்களை உருவாக்கிவிடும் ஆற்றல் மிக்கது என எதிரிகள் அறிந்துள்ளார்கள். எனவே, அவர்கள் அச்சப்படுகிறார்கள்! எனவேதான் நாம் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறோம்!
எத்தனை அயல்மொழி ஆதிக்கம் செய்ய வந்தாலும் தமிழை அழிக்க முடியாது. வரலாற்றில் அது மீண்டும் மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது!
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் – மங்காத தமிழென்று சங்கே முழங்கு! இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!” என புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பாடினார். இவ்வரிகள் வெறும் மொழி வாழ்த்தல்ல! பாராட்டு வரிகள் அல்ல! ஆழந்த பொருள் கொண்டவை. தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் வாழும், தமிழர் தாயகம் நிலைத்திருக்கும். தமிழ் அழிந்தால் தமிழினம் சிதறும்; தமிழர் தாயகம் பறிபோகும்; அயலாரிடம் அண்டிப்பிழைக்கும் உதிரிகளாகச் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் மாறி விடுவார்கள் என்ற பொருளில்தான் பாவேந்தர் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்” என்றார்! 

அவரே தான், “இனத்தைச் செய்தது மொழிதான்! இனத்தின் மனத்தை செய்தது மொழிதான்!” என்றும் பாடினார். ஒரு தேசிய இனத்தின் உளவியல் உருவாக்கம் – அதாவது நாமெல்லாம் ஓரினம் என்ற உறவு உருவாக்கம் (We Feeling) மொழி வழியாக நடப்பதை பல ஆய்வாளர்கள் கூறினார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இதைத் தன் வழியில் சிந்தித்துப் பாடினார்.
எனவே, நம் மொழி நம்மை இணைக்கிறது. அமெரிக்க மண்ணிலே புலம் பெயர்ந்த வாழும் தமிழர்கள் இந்தக் கருத்துகளை நீங்கள் பேசுங்கள்.
அமெரிக்க நாடு கருணையினால் கதவு திறந்து உங்களை அழைத்துக் கொள்ளவில்லை. உங்களின் அறிவாற்றல், செயல்திறன், உழைப்பு அனைத்தும் தேவை என்று கருதி, உங்கள் தகுதியறிந்து, ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு உங்களை அழைத்திருக்கிறது. உங்கள் அலுவலகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்; அதேவேளை நீங்கள் பிறந்த இனத்தின் உரிமை மீட்பிற்கான விழிப்புணர்வுப் பணிகளையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

Labels: , , ,

"கர்நாடகச் சிறையில் காவிரித்தாய் விடுதலை செய்ய வீதிக்கு வா!" -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Monday, October 10, 2016
=======================================
கர்நாடகச் சிறையில் காவிரித்தாய்
விடுதலை செய்ய வீதிக்கு வா!
=======================================
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
=======================================
பெண் - பிறந்த இடத்தில் தாயாவதில்லை; மணந்த இடத்தில்தான் தாயாவாள்! அப்படித் தமிழர்களுக்குக் தாயானவள்தான் காவிரி!
தமிழர்களைப் பொறுத்தவரை காவிரி வெறும் தண்ணீர் இல்லை; நம் குருதி ஓட்டம்! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் நாகரித்தின் தாய்; நம் இனத்தின் அடையாளம்; சோழ நாட்டைக் காவிரி நாடென்றே காவியப் புலவர்கள் அழைத்தனர்.
வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி
என்றார் இளங்கோவடிகள். காவிரி, தமிழர்களின் ஊழித்தாய்! யுகம் யுகமாய் சோழ நாட்டைத் தனது பிள்ளையாக வளர்த்து வருபவள் என்றார்.
நெல்லாய், கரும்பாய், வாழையாய், தென்னையாய், உளுந்து பயிராய், பற்பல பழங்களாய், தமிழர்களுக்கு அமுதூட்டியவள் காவிரித்தாய்! பருத்தியாய் ஆடை தந்தவள் காவிரி! மரங்களாய் வீடு தந்தவள் காவிரி!
வாழும்போது மட்டுமல்ல, இறந்த பின்னும் காவிரி நீரில் குளிப்பாட்டுதல், காவிரிக் கரையில் இறுதிச் சடங்கு செய்தல் என சாவிற்குப் பின்னும் அரவணைப் பவள் காவிரித்தாய்! விழா நீராடலும் காவிரியில்தான்!
மக்களுக்கு மட்டுமல்ல, மயில், மாடு, குரங்கு போன்ற எத்தனையோ உயிரினங்களுக்கும் தாயாகக் காவிரி விளங்குகிறாள் என்பதை உணர்த்திட, மயிலாடுதுறை, ஆடுதுறை, குரங்காடுதுறை என்று காவிரிக்கரை களுக்குப் பெயர் சூட்டினர் தமிழர்.
காவிரியைக் குறுவை, தாளடி, சம்பா என்று குறுக்கி விடக்கூடாது. அவை அடிப்படையானவைதாம்! ஆனால், அவற்றுக்கும் மேலான ஆன்ம உறவுடன், தமிழர் உயிரில் காவிரி கலந்துள்ளாள்!
இன்று நுகர்வு உயிரியாய் மட்டும் மாறிப்போன தமிழர்கள் பலர்க்குக் காவிரியுடன் அவர்களின் முன்னோர்க்கு இருந்த உறவு புரியாது.
காவிரிக்கும் தமிழர்களுக்குமான உறவு மட்டுமல்ல, உலகெங்கும், காலம் உருவாக்கிய ஆறுகளுக்கும் அவற்றின் கரைகளில் வாழும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் அனைத்தும் மனித உயிரில் கலந்தவைதான்!
“வையை என்னும் பொய்யாக் குலக்கொடிஎன்றார் இளங்கோவடிகள். வையை பாண்டிய நாட்டின் குலமகள்!
எகிப்திய நாகரிகத்தின் அடையாளமாய் நைல் விளங்குகிறது; இங்கிலாந்தின் அடையாளமாய் தேம்சு ஓடுகிறது. செர்மனியின் முகவரியாய் ரைன், அமெரிக்கக் கண்டத்தின் பெருமிதமாய் அமேசான், இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான அடையாளமாய் சிந்துச் சமவெளி நாகரிகம், வட இந்திய அடையாளமாய்க் கங்கை ஆறு!
இன்று வணிக அரசியலும் வாக்கு அரசியலும் தமிழர்களை வெறும் நுகர்வோராய் - பயனாளிகளாய் மாற்றிவிட்டன. வெவ்வேறு சமூகவியல் கோட்பாடு களும் நுகர்வோர் - பயனாளி உளவியலைத் தமிழர்களிடம் வளர்த்துள்ளன. “இந்தியத்தேசியம்என்று திணிக்கப்பட்ட உளவியல் பல்வேறு திரிபுகளைத் தமிழர் சிந்தனையில் உருவாக்கிவிட்டது.
மனித நீதிக்குப் புறம்பாகவும் இந்தியச்சட்டங்களுக்குப் புறம்பாகவும் பன்னாட்டு ஆற்று நீர்ச் சட்டங்களுக்குப் புறம்பாகவும் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து, அந்நீரை சட்டவிரோதமாகக் கடத்திப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழ்நாட்டில் காவிரி ஆறு காய்ந்து கிடக்கிறது.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் நிலங்களுக்குக் காவிரிப் பாசன நீராக உள்ளது. 20 மாவட்டங்களுக்குக் குடிநீர் காவிரி நீர்!
ஒருசொட்டுத் தண்ணீர்கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமுடியாதுஎன்பதுதான் கர்நாடகத்தில் உள்ள காங்கிரசு, பா..., சனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின்கொள்கைமுழக்கம்! தப்பித் தவறி உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டால், உடனே கர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிராகக் கலகங்கள் செய்கிறார்கள்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கன்னடர்களின் பிணைக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளார்கள். காவல் நிலையத்தில் அடித்து வாங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் போல், “கர்நாடகம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறக்கக் கூடாது” என  தமிழர்களை அறிக்கைவிடச் செய்கிறார்கள்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த வேண்டும் என்று 1991-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இந்திய அரசு தனது அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பை வெளியிட்டது. உடனே 1991 டிசம்பரில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி, தமிழர்களுக்கெதிரான கலவரத்தைத் தூண்டிவிட்டது.
பல்லாயிரக்கணக்கான தமிழர் வணிக நிறுவனங்களும் வீடுகளும் எரிக்கப்பட்டன. பன்னிரெண்டு தமிழர்கள் கன்னட இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள்.
இப்பொழுது கடந்த 05.09.2016 அன்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டிற்குரிய நீரில் ஒரு சிறுபங்கைத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட்டது. உடனடியாகக் கர்நாடகத்தில் கன்னட அரசியல்வாதிகள், உழவர்கள் மற்றும் பொறுக்கிகள் எனப் பல தரப்பினரும் தமிழ்நாட்டிற்கு எதிராகக் கலவரங்களைத் தொடங்கினர்.
கர்நாடகக் காங்கிரசு ஆட்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்ததுடன் அத்தீர்ப்பைக் கண்டித்து நடந்த கர்நாடக முழு அடைப்பை ஆதரித்தது. கல்விக் கூடங்கள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விட்டார் சித்தராமையா! கர்நாடகத்தைச் சேர்ந்த பாசக நடுவண் அமைச்சர்கள் அந்த முழு அடைப்பை ஆதரித்தனர். கர்நாடகத் திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் முழு அடைப்பிலும் ஆர்ப்பாட்டங்களிலும் பங்கு கொண்டனர்.
கர்நாடகத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஊர்திகள் தாக்கப்பட்டன; தமிழர் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
கர்நாடகத்தில் பொறியியல் படிக்கும் தமிழ் மாணவரைக் கன்னட இளைஞர்கள் அடித்துத் துன்புறுத்தி மண்டியிடச் செய்து, மன்னிப்புக் கேட்க வைத்து, “காவிரி கர்நாடகத்திற்குரியது” என்று கூறச் செய்து, இழிவு செய்தனர். இதே போன்ற இழிவுகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரக்குந்து ஓட்டுநர்களுக்கும் செய்தனர்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட உலாப் பேருந்துகள், சரக்குந்துகள், மகிழுந்துகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் எரித்து எலும்புக் கூடாக்கினர். பல மணி நேரம் பெங்களூரில் இவை எரிக்கப்படட தீ கொழுந்துவிட்டு எரிந்தும் தீயணைப்புத்துறை வரவில்லை; காவல்துறை வரவில்லை.
தமிழர்களின் உயிருக்கோ, உடைமைகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகத் தலையிடாதவாறு காவல்துறையையும் தீயணைப்புத் துறையையும் கட்டுப்படுத்தி வைத்து விட்டார் காங்கிரசு முதல்வர் சித்தராமையா!
05.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் நொடிக்கு 15 ஆயிரம் கன அடி 10 நாட்களுக்குக் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற மறுத்ததுடன் அதனைக் கண்டித்துக் கர்நாடகம் 09.09.2016 அன்று முழு அடைப்பு நடத்தியது. 12.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் நீதிமன்ற அவமதிப்பிற்குப் பரிசு தரும் வகையில் 15 ஆயிரம் கன அடியை 12 ஆயிரம் கன அடியாகக் குறைத்தது. அதையும் செயல்படுத்த மறுத்தது கர்நாடகம். அதற்கும் பரிசு தரும் வகையில் 20.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் 6 ஆயிரம் கன அடியாகக் குறைத்துத் தண்ணீர் திறக்குமாறு கர்நாடகத்திற்குத் தீர்ப்புரைத்தது. அத்துடன் நடுவண் அரசு இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி இணக்கம் காணச் செய்யுமாறு அறிவுரை வழங்கியது.
29.09.2016 அன்று நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் இரு மாநில முதல்வரையும் தில்லிக்கு அழைத்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகப் பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு சொட்டுத் தண்ணீர்க்கூடத் திறக்க முடியாது என்றார் சித்தராமையா. இருவரும் போய் வரலாம் என்று அனுப்பிவிட்டார் உமாபாரதி!
2013 - பிப்ரவரி 20-க்குள் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் கட்டளை இட்டும், இறுதித் தீர்ப்பை பிப்ரவரி 19 அன்று அரசிதழில் வெளியிட்டுவிடடு ஒதுங்கிக் கொண்டது காங்கிரசு நடுவண் அரசு. 2014 முதல் பாசக நடுவண் அரசும் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்துவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து, கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்கும் கன்னடர்களின் தமிழர் பகை அட்டூழியங்களுக்கும் இந்திய அரசு துணைபோகிறது.
சட்டப்படி நடக்க வேண்டிய செயல்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் காவிரிச்சிக்கலில் தமிழர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
காரணங்கள்
1. இந்திய அரசு மறைமுகமாகத் தமிழினப்பகைப் போக்கில் தமிழர்களைப் பாகுபாட்டுடன் நடத்தும் வழமை.
2. உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணை போவது; தமிழர்களை மாற்றார் நிலையில் வைத்துப் பார்ப்பது.
3. கர்நாடகத்தின் தமிழினப் பகைப்போக்கு.
4. இனத் தற்காப்பற்ற தமிழ்நாட்டு அரசியல்!
நடுவண் அரசு
1. கச்சத்தீவு, கடலில் தமிழர் மீன்பிடிக்கும் உரிமை ஆகியவற்றை இலங்கைக்குக் கொடுத்துத் தமிழினத்தை வஞ்சித்தது இந்திய அரசு. இலங்கைப் படையாட்கள் அவ்வபோது தமிழ்நாட்டு மீனவர் 600 பேரைச் சுட்டும் அடித்தும் கொன்ற போது ஏனென்று கேட்கவில்லை இந்தியஅரசு; தடுக்கவில்லை! கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் காங்கிரசு நடுவண் ஆட்சியும் மனுத்தாக்கல் செய்தது. இப்போ துள்ள பா... ஆட்சியும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
2. முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி ஆகிய ஆறுகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுத்த மற்ற இனங்களுக்கே நடுவண் அரசு துணை நின்றது. கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் முறையே கன்னட, மலையாள இனவெறியர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, இந்திய அரசு தடுத்து நிறுத்த முன்வரவில்லை; அந்த இனவெறி வன்முறைகளைக் கண்டிக்கவுமில்லை.
அதே தமிழினப்பகை அரசியலைத்தான் காவிரிச் சிக்கலிலும் நடுவண் அரசு கடைபிடிக்கிறது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் காவிரிச் சிக்கலில் கொடுத்த தீர்ப்புகளை இந்திய அரசு செயல்படுத்தவில்லை. கர்நாடக அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒரு தடவைகூட இந்திய அரசு கண்டித்ததில்லை.
அடுத்து, கர்நாடகம் ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறினால்கூட உடனடியாகக் கன்னடர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். வன்முறை வெறியாட்டம் நடத்து கிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் காவிரி உரிமை மீட்புக்காகவும், தீர்ப்புகளைச் செயல்படுத்த வலியுறுத்தியும்  பரவலாக மக்கள் போராடுவதில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் நமக்கு ஏன் வம்பு என்று காவிரிச் சிக்கலில் ஒதுங்கிக்கொள்கிறது.
கன்னடரின் தமிழர் பகை
பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தபின் தமிழர்களைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக நடத்திடவே கன்னடர்கள் முயன் றார்கள்.
தமிழ்மொழியின் தொன்மை, வளமை, ஐயாயிரம் ஆண்டுகாலத் தமிழர் வரலாற்றின் பெருமிதங்கள் அனைத்தையும் அறிந்த கன்னடர்கள் தங்கள் நெஞ்சில் தமிழர்களுக்கெதிரான பொறாமை உணர்ச்சியையும் போட்டி மனப்பான்மையையும் தீயாய் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வடவரா - தமிழரா என்றால் வடவர் மேல் அன்பு செலுத்துவார்கள் கன்னடர்கள்; தமிழர்களைப் பகைவராகப் பார்ப்பார்கள்.
தமிழா, சமற்கிருதமா என்றால், சமற்கிருதத்தை ஆதரிப்பார்கள் கன்னடர்கள்; தமிழை எதிர்ப்பார்கள். அதேபோல் இந்தியையும் ஆதரிப்பார்கள்!
தமிழர் எதிர்ப்பு அரசியல்தான் கர்நாடகத்தின் பொதுவான அரசியல். காங்கிரசு, பா..., சனதா தளம் போன்ற அனைத்திந்தியக் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தமிழர்களைத் தலைவர்களாக வளரவிடமாட்டார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்
இனத்தற்காப்பற்ற அரசியல் தமிழ்நாட்டில் உள்ளது.
கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் அனைத்திந்தியக் கட்சிகளான காங்கிரசு, பா..., சனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே முதன்மையானவை.
அவை, கன்னட, மலையாள, இன அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்து, அதற்கு உள்ளடங்கிய வகையில் இந்தியத்தேசியத்தை வைக்கின்றன.
அதேபோல் மராட்டியம், வங்காளம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்திந்தியக் கட்சிகள் அந்தந்த மாநிலத் தேசிய இனங்களை முதன்மைப் படுத்துகின்றன. இந்தி மாநிலங்களில் இந்தித் தேசிய இனம் மேலாதிக்கத்தில் வைக்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில், காங்கிரசு, பா..., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியத் தேசியத்தை மேலாதிக்கத்தில் வைத்து தமிழின உணர்ச்சியை பிராந்திய வெறி - இனவெறி என்று இழிவுபடுத்துகின்றன.
பெரியாரின் திராவிடர் கழகம், தமிழினத்தை மறுத்து தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய நால்வருக்கும் பொதுவான இனம் திராவிட இனம் என்று திரிபு வேலை செய்து, தமிழின உணர்ச்சியை - பார்ப்பன உணர்ச்சி என்பதாகக் கொச்சைப்படுத்தி விட்டது.
தி.மு..வோ திராவிடன், தமிழன், இந்தியன் என்ற மூன்று இனங்களை ஏற்றுக் கொண்ட கட்சி. அதன் தலைவர் கலைஞர் கருணாநிதி இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், நாட்டால் இந்தியன் என்று அடிக்கடி பேசி வருகிறார். கடைசியில் இந்தியத் தேசியத்திற்குக் கீழ்ப்படிந்து தமிழினத்தைக் கைவிடும் கழகம் அது!
...தி.மு..வோ திராவிடப் பெயரில் உள்ள இந்தியத் தேசியக் கட்சி. அதன் பெயரில் அனைத் திந்தியம் இருக்கிறது. ஒப்புக்கு உதட்டளவில் தமிழர் என்று பேசக்கூடிய தலைமையைக் கொண்டது ...தி.மு..!
தாங்கள் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்; தமிழினம் தொன்மையானது. தமிழினத்திற்குப் பெருமிதமிக்க பேரரசுகள் இருந்தன. உலகின் மிக தொன்மையான மொழி தமிழ் மொழி! அறிவுக் களஞ்சியங்களைக் கொண்டது தமிழ்; தமிழர் தாயகமாக இன்று எஞ்சியிருப்பது தமிழ்நாடுஎன்று இயற்கையாகத் தமிழர்களிடம் இருக்க வேண்டிய தமிழின உளவியலை மேற்கண்ட கட்சிகள் சிதைத்துவிட்டன. இந்தியன், திராவிடன் என்ற செயற்கை உளவியலை இவை வளர்த்துவிட்டன. மேற்கண்ட கட்சிகள்தான் தமிழ் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன.
எனவே, அண்டை அயல் இனங்களால் - இன அடிப்படையில், தமிழக உரிமை பறிக்கப்படும் போது, தமிழர்கள் தாக்கப்படும் போது இயல்பாக எழ வேண்டிய தற்காப்புணர்ச்சி உரியவாறு எழுவதில்லை. கர்நாடகத்தில் தமிழர் உரிமைகளைப் பறிக்க எழும் கன்னடர் கொந்தளிப்பை எதிர்கொள்ளும் வகையில் தமிழர் தற்காப்புக் கொந்தளிப்பு எழுவதில்லை.
மற்ற கோட்பாட்டுவாதிகள்
தமிழர் உரிமை, தமிழ்நாட்டு உரிமை என்று பேசினாலே அது இனவாதம்; இனவெறி என்று விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் தனிநபர்கள் இருக்கின்றனர். அவ்வாறு பேசம் சிறுசிறு அமைப்பு களும் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன.
அவர்கள் அந்த மனநிலையிலிருந்து, கற்பனை வாதங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கர்நாடகத்தில் சில குற்றக் கும்பல்கள்தான் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக்கூடாது என்கின்றன. அவற்றிற்குப் பணிந்து போகின்றன பெரிய கட்சிகள் என்கின்றனர்.
வேறு சிலர் கர்நாடக மக்களிடம் கன்னட இனவெறி கிடையாது; தமிழினப்பகை உணர்ச்சி கிடையாது; அரசியலுக்காக கட்சிகள் தமிழர் எதிர்ப்பைக் கையாள்கின்றன என்கின்றனர்.
கன்னட மக்கள் தமிழர்களையோ. தமிழ்நாட்டு உரிமைகளையோ எதிர்க்கவில்லை என்கின்றனர்.
 கன்னட மக்களில் கணிசமானவர்களிடம் காலம் காலமாகத் தமிழின எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது. அதைத்தான் அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைத் திறந்து விடுவதற்குக் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று நிரந்தரமாகக் கன்னடர்கள் சொல்லும் பொய் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவள்ளுவர், கன்னடர்களுக்கு எதிராகத் திருக்குறளில் என்ன எழுதி வைத்தார்? எதற்காக அவர் சிலையைத் திறக்கவிடாமல் பெங்களூரில் 11 ஆண்டுகள் முக்காடு போட்டு மூடி வைத்தனர். பண்டமாற்றுபோல் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையைச் சென்னையில் திறக்க அன்றைய முதல்வர் கருணாநிதி ஒப்புக் கொண்ட பின்தான், பா... முதல்வர் எடியூரப்பா திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்க ஒப்புதல் தந்தார்.
1991 டிசம்பரில் தமிழர்கள் கர்நாடகத்தில் படுகொலை செய்யப்பட்டதேன்? தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டதேன்? தமிழர்கள் கன்னடர்களுக்குச் செய்த ஆத்திரமூட்டும் செயல் என்ன? எதுவுமில்லை!
திருவள்ளுவர் செய்தகுற்றம்தமிழினத்தில் பிறந்தது. கர்நாடகத் தமிழர்கள் செய்தகுற்றமும்தமிழினத்தில் பிறந்ததே. இதைக் கன்னடரின் இனப்பகை என்று சொல்லாமல், ஒரு சிறு குற்றக்கும்பலின் கைவரிசை என்று சொல்ல முடியுமா? முடியாது.
தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிரான தமிழின வெறியை எந்த இயக்கமும் பரப்புரை செய்யவில்லை; தூண்டவில்லை. கன்னடர்களைத் தாக்கும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததே இல்லை. அண்மையில் கர்நாடகத்தில் நடந்ததற்கு எதிர்வினையாக கன்னடர் ஒருவரை மிரட்டும் நிகழ்வும், கன்னட நிறுவனமொன்றில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீச்சும் நடந்தன. கர்நாடகத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட தமிழர் பேருந்துகளும் சரக்குந்து களும் மகிழுந்துகளும் எரிக்கப்பட்டன.
கடந்த 05.09.2016 முதல் இப்பொழுதுவரை கர்நாடக - தமிழ்நாட்டுப் போக்குவரத்தைக் கன்னடர்கள் முடக்கிவிட்டார்கள். பாக்கித்தான் - இந்தியா எல்லையில் உள்ள வாகா சோதனைச்சாவடி போல் - ஓசூர் சூசூவாடி, கர்நாடக அத்திப்பள்ளி எல்லை வளைவு உள்ளது. அங்கு தமிழர்கள் யாரும் போக்குவரத்தைத் தடுக்கிறார்களா? இல்லை. கன்னடர்களே தடுக்கிறார்கள். கர்நாடக அரசு இரு மாநிலப் போக்குவரத்தை இயல்புப் படுத்த விரும்பவில்லை.
இன்னும் சிலர், தமிழ்நாட்டில் கிடைக்கும் மழை நீரைச் சேமித்தாலே போதும், ஆறுகளில் தூர்வாரி, தடுப்பணைகள் கட்டினாலே போதும், கர்நாடகத்திடம் காவிரி நீர் கேட்க வேண்டியதில்லை என்று கூறு கின்றனர்.
கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய காவிரி நீரை ஈடுகட்டும் அளவிற்குக் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைநீர் கடலில் கலப்பதே இல்லை. நடைமுறைப் புள்ளிவிவரம் இன்றி, குறுக்குச்சால் ஓட்டும் மாற்றுத் திட்டம் இது!
அப்பன் சொத்தில் ஏமாளி அண்ணனுக்குப் பங்கு தராமல் அதிரடித் தம்பி தில்லுமுல்லு செய்தால், அண்ணன்காரனைப் பார்த்து உன் உடம்பில் தெம்பிருக்கிறது, நீ உழைத்துச் சம்பாதித்துக் கொள் என்று யாராவது தீர்ப்புச் சொல்வார்களா? அப்படிச் சொன்னால் அவரின் அறிவு பற்றி என்ன சொல்வது?
இன்னும் சில மேதாவிகள் கங்கை - காவிரி இணைப்பை உருவாக்கிவிட்டால், காவிரிக்காக கர்நாடகாவைக் கெஞ்ச வேண்டியதில்லை என்கிறார்கள். கங்கையைத் தென்னாட்டு ஆறுகளுடன் இணைக்கும் திட்டத்தை வடநாட்டுத் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
கங்கை - காவிரி இணைப்புக்காகக் கால்வாய் வெட்டினால் அதில் தண்ணீர் ஓடாது, இரத்தம்தான் ஓடும் என்று பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே லல்லுபிரசாத் எச்சரித்தார்.
கூரை ஏறிக் கோழிபிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டுகிறேன் என்று சொல்வதைப் போல் சிலர் கங்கை - காவிரி இணைப்பைப் பேசுகி றார்கள்.
கங்கை _- காவிரி இணைப்பைச் சாதிக்க தொழில் நுட்பம் இருக்கிறது; அதை வடநாட்டார் அனுமதிக்க மாட்டார்கள் என்ற மதிநுட்பம்தான் நம்மவர்சிலரிடம்”  இல்லை!
தமிழ்நாட்டிற்குள்ளேயே அடுத்த மாவட்டத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள்; அடுத்த ஊருக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள்; அடுத்த ஏரிக்கு, அடுத்த வயலுக்குத் தண்ணீர்விட மறுக்கிறார்கள்; கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் மறுப்பது அதிசயமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.
அடுத்தவருக்கும் உரிய நீரை ஒருவர் தடுத்தால் அது குற்றச்செயல்தானே, அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதல்லவா? கடைமடைக்காரனுக்கு முதல் மடைக்காரன் தண்ணீர் விடவில்லையென்றால் வெட்டிக் கொள்கிறார்கள்; கொலையே நடக்கிறது. ஓர் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என்று சும்மா இருக்கிறார்களா? சட்ட விரோதமாகத் தண்ணீரைத் தடுப்பவர் களை அப்படியே அனுமதிக்கிறார்களா? இல்லையே!
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவதைக் கன்னட மக்கள் எதிர்க்கவில்லை, பதவிக்காக அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள், கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை, சில பொறுக்கிகளே தாக்கினார்கள் என்பவர்கள் . . .
கங்கைகாவிரி இணைப்பு வந்தால் காவிரிச் சிக்கல் தீர்ந்துவிடும் என்பவர்கள் . . .
தமிழ்நாட்டில் அடுத்த ஊர்க்காரர்களுக்கே தண்ணீர் தருவதில்லை, அடுத்த வயலுக்கே தண்ணீர் தருவதில்லை, கர்நாடகம் தண்ணீர் தருமா என்பவர்கள் . . .
ஆகியோரில் இரு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் விவரம் தெரியாத வெள்ளந்திகள்! அவர்களுக்குப் பல நாடுகளிடையே ஓடும் ஆறுகள் பற்றியோ, அதற்கான சட்ட உரிமைகள் பற்றியோ தெரியாது.
கர்நாடகத்தில் பெய்யும் மழைக்கான மேகங்கள், கர்நாடகக் கடலில் இருந்து எழுந்து கர்நாடக வானில் மட்டும் உருவானவை அல்ல. வங்கக்கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் என உலகின் பல பகுதிகளில் உருவான மேகங்கள்அவை! நிலக்கோளத்தின் மேல் எங்கெங்கோ வீசும் காற்றழுத்தத்தால் கர்நாடகம், கேரளம், மராட்டியம், குசராத் மாநிலங்களின் வானத்திற்கு இழுத்து வரப்பட்ட மேகங்கள், கர்நாடக- கேரள எல்லைகளில் இயற்கை உருவாக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையால் அம்மேகங்கள் தடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வராமல் கர்நாடகப் பகுதியில் மழையைக் கொட்டுகின்றன. தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில் இயற்கை நில அமைப்பை தகவமைத்துள்ளது. கர்நாடகம் மேடு; தமிழ்நாடு பள்ளம்! அங்கு பெய்யும் மழைநீர் உருட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஒடிவந்து காவிரியாய் வளர்ந்தது! யாரும் கால்வாய் வெட்டி காவிரியை உருவாக்கவில்லை. இயற்கை உருவாக்கியது காவிரி ஓட்டம்! உலகில் நாடு கடந்து ஓடும் ஆறுகள் இவ்வாறே உருவாயின. இதனால்தான் பன்னாட்டு ஆறுகள் சட்டம் உலகில் இருக்கிறது. இதை ஒட்டித்தான் பன்மாநில ஆறுகள் சட்டம் இந்தியாவில் இருக்கிறது.
விவரம் தெரியாதவர்களுக்கு இந்த விவரங்களைச் சொல்லலாம். விவரம் தெரிந்த சிலர் மேற்கண்ட காவிரி மறுப்பு வாதங்களை வேண்டுமென்றே வைக்கின்றனர். அவர்களின் நெஞ்சைப் பிளந்து பார்த்தால், அதற்குள்இந்தியத் தேசியம்” என்ற நரிக்குட்டி பதுங்கி இருக்கும்! அவர்கள் தமிழினத் துரோகிகள்! அவர்களைத் தமிழ் மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும்.
தமிழர் முழக்கம்
இந்திய அரசே, தமிழ்நாட்டிற்கு - தமிழ் இனத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு கிடையாதா?
காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத் தக் கூடாதென்று ஒரு மனதாக தீர்மானித்த கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பாசக. நடுவண் அமைச்சர்களான ஆனந்தகுமாரும், சதானந்த கௌடாவும் கலந்து கொண்டனர். தலைமை அமைச்சர் நரேந்திரமோடி அரசமைப்புச் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழர்களுக்கு எதிராக சட்ட விரோதச் செயல் களில் ஈடுபடுவோர்க் குப் பாதுகாப்பளிக்க சிறப்புச் சட்டம் எதுவும் இந்தியாவில் இருக்கிறதா?
தமிழர்களுக்குரிய சட்டப்படியான காவிரி உரிமையை மீட்டுத்தா! உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு! இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு இந்திய அரசே வெளியேறு!
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட கன்னட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் (1141 - 1173), காவிரியில் அணை கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தபோது, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் மகன் இரண்டாம் இராசராசன் படை கொண்டு சென்று, அணையை உடைத்துக் காவிரித் தாயை மீட்டான். தக்கயாகப்பரணியில் ஒட்டக்கூத்தர் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வரலாறு திரும்பும் என்பதை இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்!
அலைகொன்று வருகங்கை வாராமல்
அடைக்கின்ற குன்றூடு அறுக்கின்ற பூதம்
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்
வரராச ராசன் கைவாள் என்ன வந்தே!
- ஒட்டக்கூத்தர்.
தற்காத்துக் கொள்ளப் போராடும் ஆற்றல் பெறாத உயிரினம் அழியும் என்றார் டார்வின். (Struggle for Existence; Survival of  the Fittest)
கைவிலங்கொடிக்கக்காவிரித்தாய்அழைக்கிறாள்! களம்காணவாருங்கள்தமிழர்களே!

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்