<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர் சட்ட விரோதக் கெடுபிடிகள்! முதலமைச்சர் தலையிடக் கோரிக்கை!" ------ தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, November 22, 2022


 


ஓசூர் டாட்டா தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கோரும் போராட்டத்தைத் தடுக்கக் காவல்துறையினர்
சட்ட விரோதக் கெடுபிடிகள்!
முதலமைச்சர் தலையிடக் கோரிக்கை!
=========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
=========================================

கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் வன்னியபுரம் பகுதியில் உள்ள டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் (TATA Electronics) தமிழர்களுக்கு வேலை தர மறுத்து இந்திக்காரர்களை ஆயிரக்கணக்கில் அழைத்து வந்து வேலையில் சேர்த்து வருகிறார்கள். இப்போது அங்கு சற்றொப்ப மூவாயிரம் பேர் இந்திக்காரர்களும் மற்ற வெளி மாநிலத்தவரும் வேலையில் உள்ளார்கள். கடந்த 29.10.2022 அன்று தனி சிறப்புத் தொடர்வண்டியில் ஜார்கண்டிலிருந்து 860 பெண்களை அழைத்து வந்து மேற்படி டாட்டா நிறுவனம் வேலையில் சேர்த்தது. இது எல்லா ஊடகங்களிலும் செய்தியானது.

இவ்வாறு இந்திக்காரர்களைப் பல்லாயிரக் கணக்கில் வேலையில் சேர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டில் தகுதியுள்ள பெண்களையும் ஆண்களையும் வேலையில் சேர்க்க டாட்டா நிறுவனம் மறுப்பது தமிழ் இன ஒதுக்கல் கொள்கையாகும்; சட்ட விரோதச் செயலாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு அரசு தலையிட்டு நீதிவழங்கக் கோரியது. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்துவும் மற்ற தோழர்களும் மேற்படி ஆலை நிர்வாகிகளைச் சந்தித்து வெளிமாநிலத்தவர் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்களை வேலையில் சேர்க்கக்கோரி கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்தனர். மற்றும் பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் அதே கோரிக்கையை ஆலை நிர்வாகத்திடமும், தமிழ்நாடு அரசிடமும் வலியுறுத்தின. ஆனால் ஆலை நிர்வாகம் இந்திக்காரர்களை மேலும்மேலும் பல்லாயிரக் கணக்கில் வேலையில் சேர்ப்பதில் தீவிரமாக உள்ளது. அண்மையில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஊடகத்தினர்க்குக் கொடுத்த அறிக்கையில், ஓசூர் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையில் வேலையில் சேர்ப்பதற்காக ஜார்கண்டில் ராஞ்சியிலும், ஹசாரிபாக்கிலும் ஆறாயிரம் (6000) பெண்களுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். இச்செய்தி 17.11.2022 அன்று நாளேடுகளில் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பழங்குடி வகுப்பு, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தகுதியான பெண்கள் பல இலட்சம் பேர் வேலை இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர். தமிழ் மண்ணில் தமிழர்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து, வேளாண்மை வளத்தையும் காட்டு வளத்தையும் அழித்து 1000 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டிருக்கும் வடநாட்டு டாட்டா நிறுவனம், தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் அநீதியைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு தலையிடக் கோரியும் 9.12.2022 அன்று காலை 10 மணிக்கு, மேற்படி வன்னியபுரம் டாட்டா ஆலை முன் அறவழியில் வெகுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த அறிவித்துள்ளோம்.

கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறை இந்த அறப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் இப்பொழுதே அச்சுறுத்தல், மிரட்டல் வேலைகளில் இறங்கியுள்ளது. வெளி ஊர்களில் இருந்து வரும் தோழர்கள் காலையில் குளிப்பதற்காக இராயக்கோட்டையில் ஒரு விடுதியைத் தோழர் கோ. மாரிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். அவ்விடுதி நிர்வாகிகளைக் காவல் துறையினர் மிரட்டி எங்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்று தடுத்துள்ளார்கள். அந்த அறப்போராட்டத்திற்குத் தலைமை தாங்க உள்ள தோழர் மாரிமுத்துவுக்கு அடிக்கடி தொலைபேசியில் காவல்துறையினர் 9.12.2022 போராட்டம் நடத்தக் கூடாது என்று அச்சுறுத்தி வருகின்றனர்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில் மண்ணின் மக்களுக்கு வேலை கேட்பது குற்றமா? தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு காவல்துறையின் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்குமதாறும், அறவழியில் நடைபெற உள்ள மக்கள் போராட்டத்திற்கு வாய்ப்பளிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

Labels: , ,

“இந்து தமிழ் திசை” ஏட்டின் 16.11.2022 நாள் ஆசிரியவுரைக்கு எதிர்வினை!" ---- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Wednesday, November 16, 2022


 “இந்து தமிழ் திசை” ஏட்டின்

16.11.2022 நாள் ஆசிரியவுரைக்கு எதிர்வினை!
=====================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=====================================


இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 இரண்டும் முறையே இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிருப்போரின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ அல்லது விடுதலை செய்யவோ அதிகாரம் வழங்குகிறது. மன்னராட்சி நடைபெறும் நாடுகள் உள்ளிட்ட எல்லா நாட்டு அரசுகளுக்கும் இந்த மனிதநேய அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு விடுதலை செய்வது அவர்கள் குற்றம் செய்யவில்லை என்ற பொருளில் அல்ல, சிறையில் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில்தான்!

உலகெங்கும் அரசுகள் பின்பற்றும் இந்த மனித நேயச் செயலை, இந்திய அரசும் தமிழ்நாடு ஆளுநரும் மறுத்ததால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் இராசீவகாந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேறறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை இரண்டு தவணைகளில் விடுதலை செய்தது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத எரிச்சலுடன் இந்து தமிழ் திசை ஆசிரியவுரை “முன்னாள் பிரதமரைக் கொன்ற வழக்கில் எழுவ ர்மட்டுமே தண்டிக்கப்பட்டு அவர்களும் விடுவிக்கப்படுவது, இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றியவர்களுக்கும், அவர்கள் சித்தாந்தத்திற்கும் உரிய பதிலடி அல்ல” என்று கூறுகிறது.

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் மராட்டிய காங்கிரசு ஆட்சி இதே 161 ஐப் பயன்படுத்தி விடுதலை செய்தது. குசராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது முசுலிம்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேரை – மூன்று வயதுப் பெண் குழந்தை உட்பட – ஆண்கள், பெண்களைப் படுகொலை செய்தார்கள். அத்துடன் ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானோவை கூட்டு வல்லுறவு கொண்டு சிதைத்தார்கள். அவர் பிழைத்துக் கொண்டார். அவர்களை வன்முறைக்கு இயக்கிய தத்துவம் “இந்துத்வா!”

இதற்காக வாழ்நாள் தண்டனையில் சிறையில் இருந்த 11 பேரையும் குசராத் பாசக அரசு விடுதலை நாளையொட்டி விடுதலை செய்தது. அவர்களையும் பாசகவினர்- ஆர்எஸ்எஸ்காரர்கள் வரவேற்று மாலை அணிவித்துக் கொண்டாடினா். உங்கள் ஆசிரியவுரை, இராசீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆனவர்களை அரசியல் கட்சிக்காரர்கள் வரவேற்றதைத் தவறு என்று கூறுகிறது.

இந்த ஏழு பேர்க்கும் தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்றம் இக்கொலை தடாச் சட்டத்திற்குரிய பயங்கரவாதச் செயல் திட்டம் அல்ல இந்தியத் தண்டனைச் சட்டம் 302 இன் கீழ் வரும் வழக்கமான குற்றச் செயல்தான் என்று தீர்ப்புரையில் எழுதியது. உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், பணிநிறைவுக்குப்பின், “சாட்சியங்கிளில் இடைவெளி இருக்கிறது. சதித்திட்டம் நிரூபிக்கப்படவில்லை. அரசமைப்பு சட்டம் வழங்கும் மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 14 ஆண்டுகளைக கடந்துவிட்ட அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யலாம்” என்றார்.

சிபிஐ காவல் கண்காளிப்பாளர் தியாகராசன் தம் பணி நிறைவுக்குப்பின், “இராசீவ் காந்தியைக் கொல்வதற்கென்று தெரிந்தே பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்று பேரறிவாளன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக நான் பொய்யாக எழுதிவிட்டேன்; என் மனச் சான்று உறுத்துகிறது; அவரை விடுதலை செய்யலாம்” என்று அறிக்கை கொடுத்தார். அதையே உச்ச நீதிமன்றத்தில் வாக்கு மூலமாகத் தாக்கல் செய்தார். இராசீவ் கொலைவழக்கில் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த சாந்தனைப் பிடித்தபோது திருச்சியில் அவர் நச்சுக் குப்பி கடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதே பெயரைக் கொண்டிருந்த வேறொருஅப்பாவி சாந்தனை இழுத்துக் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள்.

தடா நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நவநீதம், இவ்வழக்கில் தம்முன்னால் குற்றஞ்சாட்டப்பட்டுக் காவல்துறையால் நிறுத்தப்பட்ட 26 பேர்க்கும் தூக்குத் தண்டனை விதித்தார். உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்தது. தமிழ் இந்து திசை ஆசிரிய உரை மேற்படி நீதிபதி நவநீதனைத்தான் நினைவுபடுத்துகிறது.

(இந்து தமிழ் திசை ஏட்டுக்கு அனுப்பப்பட்ட நமது எதிர்வினை, ஏட்டில் வெளியிடப்படாத நிலையில் இங்கு பொதுவெளியில் வெளியிடப்படுகிறது).

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: ,

" தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி - ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன் மறைவு பெருந்துயரம்!" ---தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, November 4, 2022


 


தமிழர்களுக்கு அறிவுக்கொடைகள் வழங்கி -
ஈகமும் செய்த பேரா. க. நெடுஞ்செழியன்
மறைவு பெருந்துயரம்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
====================================


பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் இன்று (04.11.2022) விடியற்காலை சென்னை அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பெருந் துயரம் அளிக்கிறது. நேற்றைக்கு முதல் நாள் (02.11.2022) அன்று மாலை நானும் தோழர்கள் அ. ஆனந்தன், க. அருணபாரதி ஆகியோரும் ஐயா அவர்களை மருத்துவமனையில் பார்த்தோம்; அப்பொழுதே உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தன் நினைவிழந்த நிலையில் இருந்தார். செயற்கை மூச்சுக் குழல் வழியாக சுவாசித்தார். அவருடைய மூத்த மகள் நகைமுத்து - அவர் இணையர் பாண்டியன், இளைய மகள் குறிஞ்சி ஆகியோர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.

பேராசிரியர் முனைவர் சக்குபாய் நெடுஞ்செழியன் அம்மா அவர்கள் சென்னையில் வீட்டில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மாலை தோழர்கள் கி. வெங்கட்ராமன், அ. ஆனந்தன், நாடக வினோத் ஆகியோரும் நானும் நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்தோம்.

ஐயா நெடுஞ்செழியன் அவர்கள் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புகளை, அறிவாற்றலை மெய்யியல் சான்றுகளுடன் நிறுவி பல நூல்கள் எழுதியுள்ளார். ஆசிவகம் பற்றிய அவரது ஆய்வு தமிழர் வரலாற்றில் தனித் தடம் போட்ட பங்களிப்பாகும்.

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் முதன்மைத் தெய்வங்கள் மாறினாலும் ஐயனார் சிலை மட்டும் கட்டாயம் இருக்கும். தமிழர்களுக்கு ஐயனார் பொது தெய்வம் - ஆனால் அங்கங்கே முதன்மையான வழிபாட்டுத் தெய்வம் வெவ்வேறாக இருக்கும். அதேபோல் "கருப்பு" என்ற முதன்மைச் சொல்லோடு பெயர் தொடங்கும் தெய்வங்கள் தமிழ்நாடெங்கும் இருக்கிற உண்மைகளைத் தொகுத்து வழங்கியவர் ஐயா க. நெடுஞ்செழியன் ஆவார்.

மாணவப் பருவத்திலேயே பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அவற்றின்வழி செயல் பட்டவர்கள் ஐயா நெடுஞ்செழியனும் அம்மா சக்குபாயும்! தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே கடவுள் கொள்கைக்கு அப்பாற்பட்டு மெய்யியல் கருத்துகளை வழங்கியவர்கள் என்ற வரலாற்றுச் செய்தியை இலக்கியச் சான்றுகளுடன் தொகுத்தவர் ஐயா நெடுஞ்செழியன்.

"தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்" என்ற அவரது நூல் - அவரது முனைவர் பட்ட ஆய்வேடாகும். "தமிழர் தருக்கவியல்", "தமிழரின் அடையாளங்கள்", "ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்", "தமிழர் இயங்கியல்" (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்), "உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்", "ஆசிவகமும் ஐயனார் வரலாறும்" உட்பட பல அரிய ஆய்வு நூல்களை வழங்கினார் ஐயா நெடுஞ்செழியன்.
கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்கச் சுற்றிக் கோயில்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். ஐயா அவர்களுடன் நானும் சித்தன்னவாசலுக்கும் - வரகூர் - நடுக்காவேரி கோயில்களுக்கும் சென்று அவர் மூலம் புதிய செய்திகளை அறிந்து கொண்டேன். அவர் நூலொன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கினார்.

ஐயா அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியபோது அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சித் தோழர்கள் நெடுஞ்செழியன் ஐயாவை அழைத்து இலக்கியக் கூட்டங்கள் பல நடத்தினர்.

ஆன்மிகத்தில் ஆரிய பிராமண ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும் - நீக்கவும் தமிழர் மெய்யியல் தரவுகளை ஆயுதங்களாக வழங்கியவர் ஐயா நெடுஞ்செழியன். மனிதச் சமநிலை, ஆண் - பெண் சமநிலை ஆகிய கொள்கைகளைப் பரப்பியவர்; தம் வாழ்க்கையில் கடைபிடித்தவர். தமிழீழ விடுதலையை உறுதியாக ஆதரித்தவர். அவர் மகன் தமிழீழத்திற்குச் சென்று ஈகி ஆனார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இரா. நாகசாமி சங்க இலக்கியங்களும் திருக்குறளும் சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று பொய்யுரைத்து நூல் வெளியிட்டார். அதை எதிர்த்துப் பொங்கி எழுந்து ‘நாகசாமி "நூலின்" நாசவேலை' என்ற தலைப்பில் மறுப்பு நூல் எழுதினார். அந்நூலை எமது பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது.

கர்நாடகத்தில் இப்போதுள்ள தமிழர் தாயகப் பகுதிகளைத் தமிழ்நாட்டோடு இணைத்து அகண்ட தமிழ்நாடு அமைக்க ஆயுதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டதாகவும் வீரப்பன் அவர்களுடன் சேர்ந்து கன்னடத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் ஐயா பெங்களூர் குணா அவர்களையும் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களையும் மற்றும் கர்நாடகத் தமிழர்களையும் ஒரு பொய் வழக்கில் தளைப்படுத்தி பெங்களூர் பரப்பன அக்ரகாரச் சிறையில் அடைத்தார்கள். முப்பத்திரண்டு (32) மாதங்கள் சிறையில் இருந்தார்கள். வழக்கை நடத்தி விடுதலை பெற்றார்கள்.

தமிழ் இனத்திற்கு அறிவுக்கொடை வழங்கியதுடன் சிறை ஈகமும் செய்தவர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்கள். அவர்களது மறைவிற்குப் பெருந்துயரத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்