<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"மு.க. ஸ்டாலின் கோரிக்கைகளும் மோடியின் புறக்கணிப்பும்"--- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Saturday, May 28, 2022


மு.க. ஸ்டாலின் கோரிக்கைகளும்

மோடியின் புறக்கணிப்பும்
================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
================================


இந்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா - தொடக்க விழா ஆகியவை 26.5.2022 வியாழக்கிழமை மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தலைமையமைச்சர் மோடி பங்கேற்றார்.

இவ்விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் மொழி சார்ந்தும், தமிழ்நாடு சார்ந்தும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினார். அப்போது துக்க வீட்டில் உட்கார்ந்திருப்பவரைப் போல தலைமை அமைச்சர் மோடி சோகமாக உட்கார்ந்திருந்தார்.

இந்திய ஏகாதிபத்தியத்தின் பேரரசன் போல் நாம் அமர்ந்திருக்கும் மேடையில் நமக்குக் கீழே, முதலமைச்சர் என்ற பெயரில் செயல்படும் நம் “நாட்டாமைக்கு” இவ்வளவு துணிச்சலா என்று அவர் மனம் குறுகுறுத்திருக்கும்! மோடியின் தமிழ்நாட்டுக் கைத்தடி அண்ணாமலை அன்று இரவே செய்தியாளர்களிடம் ஒப்பாரி வைத்துவிட்டார்.

“இன்று ஒரு கருப்பு நாள்; திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு கோரிக்கைகளை மு.க. ஸ்டாலின் பட்டியலிட்டது, அவரை அவமானப்படுத்தும் செயல்” என்றார்.

பா.ச.க. பார்வையில் “அபச்சாரமாக”த் தெரிந்த கோரிக்கைகள் யாவை?

1. தமிழ்நாட்டின் கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்து விட்டதால் - தமிழ்நாட்டுக் கடலோர மீனவ சமுதாயம் பேரிழப்பிற்கு ஆளாகிறது. இலங்கையிடமிருந்து கச்சத்தீவை இந்தியா மீட்க இதுவே தக்க தருணம்; மீட்டுத் தர வேண்டும்.

2. உலகின் முதல் செம்மொழியான தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழி ஆக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மொழியாக்க வேண்டும்.

3. நீட் தேர்வு தமிழ்நாட்டில் செயல்படாமல் விலக்களிக்கும் சட்ட முன்வடிவைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றி ஆளுநர் வழியாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அதற்கு இந்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.

4. சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி.) இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் 15.5.2022 வரை 14,006 கோடி ரூபாய் நிலுவையாக உள்ளது. இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2022 உடன் நிறுத்தி விடாமல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நீட்டித்துத் தர வேண்டும்.

மு.க. ஸ்டாலின் இத்தோடு நின்றிருந்தாலாவது மோடிக்கு ஆத்திரம் மட்டுப்பட்டிருக்கும். இதற்கும் மேலே போய், இந்தியாவுக்கும் இந்திய அரசுக்கும் தமிழ்நாடு தரும் பொருளாதார பங்களிப்பு மற்ற (இந்தி) மாநிலங்களைவிட எவ்வளவு அதிகம் என்பதையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டிவிட்டார்.

1. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. 2. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு! 3. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு! 4. துணித்துறை ஏற்றுமதியில் 19.47%. 5. தோல் பொருள் ஏற்றுமதியில் 33%.

ஆனால், ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் தமிழ்நாட்டிற்குப் பிரித்துக் கொடுப்பது 1.21 விழுக்காடு மட்டுமே!

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் வழங்கும் பொருளாதாரப் பங்களிப்பிற்கேற்ப - இம்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு பகிர்ந்தளிக்கும் நிதியும், திட்டங்களுக்கான தொகையும் உயர்த்தித் தரப்பட வேண்டும்!

முதலமைச்சர் முன்வைத்த இக்கோரிக்கைகளில் ஒன்றைக் கூடக் குறிப்பிட்டு, “பரிசீலிக்கிறேன்” என்று கூறவில்லை மோடி. “மாடு மேய்க்கும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?” என்று நந்தனாரைப் பார்த்து நக்கல் செய்த அந்தக் கால அக்ரகாரத்து ஆண்டையைப் போல் எகத்தாளமாக எண்ணியிருப்பார் போலும்!

அருமையான கோரிக்கைகளை மக்கள் திரள் மேடையில் இந்திய ஏகாதிபத்தியத் தலைவரிடம் முன்வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டுவோம்! ஆனால் திராவிட மாடலின் வரலாற்றை நினைத்தால் வயிற்றில் புளியைக் கரைக்கிறது!

கடந்த காலங்களில், முற்போக்கான - புரட்சிகரமான கோரிக்கைகளையும் இலட்சியங்களையும் முன்வைத்த தி.மு.க., பின்னர் அவற்றைக் கைவிட்டு, இந்திய ஏகாதிபத்தியவாதக் காங்கிரசுடனும், பா.ச.க.வுடனும் அமைச்சரவைப் பங்காளியாகி இரண்டகம் செய்தது. அந்நடைமுறையைக் கைவிட்டு, மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து, தி.மு.க. தொடர்ந்து இயங்கினால் சிறப்பாக இருக்கும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2022 சூன் மாத இதழின் ஆசிரியவுரையாக எழுதப்பட்டது).

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels:

"பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கும் காங்கிரசார் காந்தியர் அல்லர் கோட்சேயர்! "-------பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Sunday, May 22, 2022


பேரறிவாளன் விடுதலையை எதிர்க்கும்

காங்கிரசார் காந்தியர் அல்லர் கோட்சேயர்!
====================================
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
====================================


உச்ச நீதிமன்றம் 18.05.2022 அன்று பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்ததைத் தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கொண்டாடுகின்றனர். ஆனால் காங்கிரசு துக்கம் கடைபிடிக்கிறது; விடுதலைத் தீர்ப்பை எதிர்த்துக் கண்டனப் போராட்டங்கள் நடத்துகிறது.

பேரறிவாளன் விடுதலையை மக்கள் கொண்டாடக் காரணம் முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தியைத் தற்கொலைப் போராளிப் பெண் ஒருவர் வெடி வைத்துக் கொன்ற செயல் ஞாயம் என்ற மனநிலையில் இல்லை.

சிறையில் பத்தொன்பது அகவையில் அடைக்கப்பட்ட இளைஞர் 31 ஆண்டுகள் அந்த அடைப்புக்குள்ளேயே இருந்துள்ளார். தண்டிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்கும் விடுதலையை அவருக்கு வழங்க வேண்டும் என்பதே வெகு மக்களின் கோரிக்கை. இந்த 161 மற்றும் 72 உறுப்புகள் நிரபராதிகளை விடுவிக்கும் சட்டப்பிரிவுகள் அல்ல. தண்டிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யும் உறுப்புகள். இது மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து மக்களாட்சி காலம் வரைத் தொடரும் “நீதி முறை” ஆகும்!

“மன்னிப்பு (Pardon), தண்டனைக் குறைப்பு (Reprive), தண்டனைத் தள்ளுபடி (Remission of Punishment), இடைக்காலத்திற்குத் தள்ளி வைத்தல் (Suspend), மன்னித்தல் (Remit), அல்லது இத்தண்டனைக்கு மாறாக இன்னொன்று கொடுப்பது (Commute), என்ற வடிவங்களில் ஏதாவது ஒரு வடிவத்தில் நிவாரணம் கொடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று உறுப்பு 161 கூறுகிறது.

மேற்படி வழக்கில் உச்சநீதிமன்றம் 1999 மே 11இல் அளித்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வர்க்கும் சாவுத் தண்டணையை உறுதி செய்தது. அதன் பிறகு தமிழ்நாடு ஆளுநருக்கு மனுப்போட்டு நால்வரும் பொது மன்னிப்புக் கேட்கிறார்கள். ஆளுநர் மறுத்துவிடுகிறார். சாவுத் தண்டனையை இரத்து செய்ய சட்டப்போராட்டத்தைத் தொடர்கின்றனர். நளினிக்கு மட்டும் வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. எஞ்சிய மூவரையும் 09.09.2011 அன்று தூக்கிலிட நாள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தயாரிப்புகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை மக்கள் “மூன்று தமிழரைத் தூக்கிலிடாதே” என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 21 அகவை இளம் பெண் செங்கொடி கடிதம் எழுதி வைத்து விட்டு, “தூக்கிலிடாதே” கோரிக்கையை முழங்கிக் கொண்டு 28.08.2011 அன்று காலை தீக்குளித்து உயிர் நீத்தார். தமிழ்நாட்டின் கொந்தளிப்பு மேலும் வேகம் பிடித்துத் தீவிரம் அடைந்தது.

09.09.2011 அன்று மூவரையும் தூக்கிலிடுவதை நிறுத்தி வைத்து, இரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. அதன் விசாரணை 30.08.2011 அன்று காலை தொடங்கியது. வராலாறு காணாத பெருங்கூட்டம் உயர் நீதிமன்ற வளாகத்திலும், மாடியிலும்! பலர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அத்துயர நெரிசலில் நானும் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களும் மற்றும் நம் தோழர்களும் இருந்தோம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ ஏற்பாட்டில் புகழ்பெற்ற வழக்கறிஞர் இராம்சேத்மலானி அவர்கள் தில்லியிலிருந்து வரவழைக்கப்பட்டார். அவரும் உச்ச நீதிமன்றத்தில் புகழ்பெற்ற மற்றொரு வழக்கறிஞர் காலின் கான்செல்வஸ் அவர்களும் வாதிட்டனர். 09.09.2011 அன்று தூக்கிடுவதை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை கொடுத்தது.

தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்தால் அது மக்கள் போராட்டத்துக்கு உட்பட்டுவிடும் என்று அச்சம் தெரிவித்து, காங்கிரசார் எதிர்த்த நிலையில் இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் தன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அதே நாளில் அப்போதைய முதல்வர் செயலலிதா அவர்கள் (30.08.2011 அன்று) சட்டப்பேரவையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் சாவுத் தண்டணையை நீக்கித் தண்டனைக் குறைப்பு வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.

தண்டனைக் குறைப்புகாக மூவரும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுக்கள் மீது முடிவெடுக்காமல் பல்லாண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்தார் குடியரசுத் தலைவர். காரணமற்ற – இந்தக் காலதாமதத்தைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் 18.02.2014 அன்று மூவரின் சாவுத் தண்டணையை வாழ்நாள் தண்டணையாக மாற்றியது.

அதே வேளை 19.02.2014 அன்று முதல்வர் செயலலிதா தமது அமைச்சரவையைக் கூட்டி இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயாஸ், செயக்குமார் அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435இன் கீழ் விடுதலை செய்திடும் முடிவை நிறைவேற்றினார். தமிழ்நாடு அரசின் அம்முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியது இந்தியக் காங்கிரசு ஆட்சி!

உச்ச நீதிமன்றம் சாவுத் தண்டணையை வாழ்நாள் தண்டணையாக மாற்றியதையும் எதிர்த்து அன்றிருந்த ஒன்றியக் காங்கிரசு ஆட்சி மறு ஆய்வு மனுப்போட்டது. அம்மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தண்டனைக் குறைப்பில் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமுள்ள அதிகார வரம்புகள் குறித்து ஆய்வு செய்ய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வை உருவாக்கியது.

ஏழு பேர் விடுதலையை நோக்கிய ஒவ்வொரு சட்ட நகர்வையும் உச்ச நீதிமன்ற விசாரணையையும் தடுத்து வந்தன ஒன்றிய காங்கிரசு ஆட்சியும் பின்னர் வந்த பா.ச.க. ஆட்சியும்.

உச்ச நீதிமன்ற அரசமைப்பு சட்ட அமர்வு ஏழு பேர் விடுதலைக்கு எதிராக கடுஞ்சீற்றத்துடன் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதே தீர்ப்பில், மாநில அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 இன் கீ்ழ் தண்டனைச் சிறையாளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை வழங்கும் அதிகாரம் தங்கு தடையற்றது என்று கூறியது.

இதற்கிடையே தம்பி பேரறிவாளன் தணியாத சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவருக்குத் துணை நின்ற மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், வழக்கறிஞர் பிரபு சுப்ரமணியம், வழக்கறிஞர் பாரி ஆகியோர் போற்றத்தலுக்குரியவர்கள். இவர்கள் கட்டணமின்றிச் செயல்பட்ட சட்டப் போராளிகள். மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தம்பி பேரறிவாளன் சார்பில் நம் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் 17.08.2017 அன்று புது மனு ஒன்று தாக்கல் செய்தார்கள். இராசீவ்காந்திக் கொலை வழக்கில் சதிக் குற்றம் (120B) சாட்டப்பட்டது. அச்சதியின் பின்னணி அதில் பங்கு கொண்டோர் முழு விவரம் – அச்சதி ஆலோசனை நடந்த இடம், காலம் முதலியவை பற்றிக் குறிப்பாக இந்திய அரசுத் தரப்பு விளக்க வேண்டும். விசாரணைக் குழு கண்டறிந்தவற்றை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். குண்டு பொருத்திய இடுப்பு வார் (பெல்ட்) தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றைப் பற்றிய விவரங்களை உச்ச நீதிமன்றம் கோரிப் பெற வேண்டும் என்பவை அவ்வழக்கின் சாரம்.

தனது மனச்சான்று தன்னையே கொன்று கொண்டிருக்க மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருந்த இராசீவ் கொலை வழக்கு புலனாய்வுக் காவல் கண்காணிப்பாளர் (சி.பி.ஐ) தியாகராசன் தாமாகவே முன் வந்து உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் உறுதிமொழியை 14.11.2017 அன்று தாக்கல் செய்தார். அதில், பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை நான்தான் வாங்கினேன். அதில் 9 வோல்ட் பேட்டரி இரண்டு என்ன பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. அதுபற்றிய விவரம் எனக்குத் தெரியாது என்றார். “இடுப்பு வார் வெடி குண்டை (பெல்ட் பாமை)” இயக்கிய பேட்டரியை அந்த நோக்கம் தெரிந்தே வாங்கிக் கொடுத்தேன் என்று பேரறிவாளன் கூறியதாக நான் தவறாக – அவரது ஒப்புதல் வாக்கு மூலத்தைத் திருத்தியது என் மனதைத் துன்புறுத்துகிறது என்று அந்த உறுதிமொழி ஆவணத்தில் தியாகராசன் பதிவு செய்திருந்தார். ஏனெனில் அந்த வாக்குமூலம் ஒன்றுதான் பேரறிவாளனை சதிக் குற்றவாளியாக நிறுத்தியது.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி நால்வருக்கு மட்டும் தூக்குத் தண்டணையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய மூத்த நீதிபதி கே.டி. தாமஸ் தமது ஓய்வுக்குப் பின் இதே காலத்தில் தனது மனச்சான்று உறுத்த அவரும் இராசீவ் கொலை வழக்கில் பல குழறுபடிகள் இருக்கின்றன. சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டு மெய்பிக்கப்படவில்லை, சாட்சியங்களுக்கிடையே இணைப்பு இல்லை, எனவே அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று ஏடுகளில் கூறினார். கட்டுரை எழுதினார்.

இந்தச் சிக்கல் இந்த அளவு மக்கள் மயமானதற்கு முதன்மைக் காரணம் பேரறிவாளன் தொடர்ந்த சட்டப் போராட்டமும், அற்புதம்மாளின் ஒருங்கிணைப்பும், விடாமுயற்சியும், உழைப்பும்தான்! விடுதலை கோரி விண்ணப்பம் அனுப்பினார் அறிவு.

உச்ச நீதிமன்றம் 06.09.2018 அன்று பேரறிவாளன் தண்டணைக் குறைப்பு மனு மீது ஆளுநர் முடிவெடுக்க முழு அதிகாரம் இருக்கிறது என்று கூறியது. அதன் பின்னர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 09.09.2018 அன்று அமைச்சரவையைக் கூட்டி இவ்வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது என்று முடிவு செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பினார்.

ஆளுநர்கள் தில்லி அரசின் மண்டல வைஸ்ராய்களாகச் செயல்படும் நியமனப் பிரமுகர்கள்! பன்வாரிலால் புரோகித், அமைச்சரவையின் முடிவை முடக்கி மூலையில் வீசினார். ஆளுநரின் இச்சட்ட விரோத செயலைத் தடுத்திட அறிவு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினர். பேரறிவாளன் விடுதலைக்கான தமிழ்நாடு அமைச்சரவை முடிவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் செய்திருக்கும் தாமதம் வழக்கத்திற்கு மாறானது என்று 20.01.2021 அன்று உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்தது. அதன்பிறகு தமிழ்நாடு அமைச்சரவையின் விடுதலை முடிவை, குடியரசுத் தலைவர் “ஆய்வுக்கு” அனுப்பி வைத்து, அதற்கு இன்னொரு பூட்டுப் போட்டார் ஆளுநர்.

உச்ச நீதிமன்றத்தில் 11.05.2022 அன்று பேரறிவாளன் வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்கிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், கவாய், பொப்பண்ணா ஆகியோர் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினர். மாநில அமைச்சரவை ஆளுநரின் கையெழுத்துக்காக அனுப்பிய எழுவர் விடுதலை முடிவை அவர் எந்தச் சட்டப்படி குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பினார் என்று கேட்டனர்.

ஆளுநரின் இச்செயல்பாடு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர் ஒரு முடிவு செய்யாமல் காலவரம்பற்று அதனைக் கிடப்பில் போடுவது சட்ட விரோதம். 161ஐ பொறுத்தவரை அமைச்சரவையின் முடிவுக்குக் கையொப்பமிடும் வேலையை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது என்று நீதிபதிகள் சாடிவிட்டுத் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். 18.05.2022 அன்று தம்பி பேரறிவாளனை எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஏ.எஸ். பொப்பண்ணா அமர்வு விடுதலை செய்தது.

தமிழ் கூறும் நல்லுலகம் கண்ணில் நீர் மல்க இத்தீர்ப்பைத் தொலைக் காட்சிகளில் கண்டு மகிழ்ந்தது. அவரவரும் அங்கங்கே இனிப்பு வழங்கினர், வெடி வெடித்தனர்.

இவையெல்லாம் இராசீவ்காந்தி கொல்லப்பட்டது சரி என்பதற்கான கொண்டாட்டமல்ல; அப்பாவிகள் தண்டிக்கப்பட்டு விட்டார்களே, இராசீவ் காந்தி கொலை என்பதற்காக சட்டம் வழங்கும் பொது மன்னிப்பு நீதியைக் கூட ஏழு தமிழர்களுக்கு இத்துணை ஆண்டுகளாக மறுத்து விட்டார்களே இந்திய ஆட்சியாளர்கள் என்ற ஆதங்கத்தில் – ஏக்கத்தில் எழுந்த கண்ணீர்க் கொண்டாட்டம்! எழுவரில் ஒருவர் விடுதலை என்ற உடன் நல்ல தொடக்கம் என்ற மகிழ்ச்சி! அவ்வளவே!

இராசீவ் காந்தி கொலையை நம்மில் பலர் ஆதரிக்கவில்லை. இராசீவ் உத்தமர் என்பதற்காக அல்ல; கொலை தீர்வாகாது, முறையல்ல என்பதற்காகத்தான்!

உறுப்பு 161இன் கீழ் விடுதலை செய்வது அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதற்காக அல்ல. அவர்கள் செய்த குற்றத்திற்கு இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என்பதற்குத்தான்!

காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் மற்றும் முதன்மைப் பேச்சாளர் (Chief Spokes Person) ரண் தீப் சுர்ஜேவாலா, “பேரறிவாளன் விடுதலைச் செய்தி கேட்டு நாடே துக்கத்தில் மூழ்கிவிட்டது” என்றார். எவ்வளவு பெரிய நடிப்பு ஆற்றல் சுர்ஜேவாலாவுக்கு!

“பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பாவலாக் காட்டும் மோடியால்தான் இப்படிப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு காங்கிரசுக்காரரை மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியரையும் பேரறிவாளன் விடுதலையில் பெருந்துயரம் கவ்வியுள்ளது” என்றெல்லாம் கூறித் “துயர நாடகம்” போட்டுள்ளார் சுர்ஜேவாலா!

தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் தாங்களே முன்னின்று அங்கங்கே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். சிதம்பரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் காங்கிரசுக் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி.

பேரறிவாளனுக்குத் தாயும், குடும்பமும் உள்ளது போல் திருப்பெரும்பூதூரில் கொல்லப்பட்ட ஒன்பது காவல்துறையினர் உட்பட 18 பேருக்கும் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் உண்டு. அவர்கள் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்தக் கொலைக்காரர்களைத் தண்டிப்பது குற்றமா என்று கேட்டுள்ளார் கே. எஸ். அழகிரி!

ஒவ்வொன்றுக்கும் எதிர் விடை சொன்னால் நன்றாய் இருக்காது. இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோர் 31 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். வாழ்நாள் தண்டணை பெற்றவர்களை 14 ஆண்டுகள் முடிவில் சிறை வாழ்க்கையில் அவர்களின் நன்னடத்தை, உடல்நிலை போன்றவற்றைக் கணக்கில் கொண்டு விடுதலை செய்யலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது. அதை 20 ஆண்டுகள் என்று பின்னர் மாற்றியது உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று! அந்தச் சட்ட அனுமதியின் படிதான் ஏழு தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று கோருகிறோம்.

ஏழு தமிழர்களை மட்டுமல்ல, 14 ஆண்டுகள் தண்டனை முடிந்து சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என்கிறோம். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தோர் இக்கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

இராசீவ் காந்தி கொலையில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தார் துயரம் மிகவும் கொடியது தான்! இராசீவ் காந்தி கொலையை நாம் ஆதரிக்கவில்லை.

அன்றைய தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி 1987இல் இந்தியாவின் முப்படைகளையும் சிங்கள அரசுக்கு ஆதரவாக ஈழத்திற்கு அனுப்பி விடுதலைப்புலிப் போராளிகளையும், ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்தாரே அவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபட்டிருக்கும்? அந்தத் துயரத்தைக் காங்கிரசுத் தலைவர்கள் அப்போது கொண்டாடினார்களா, இல்லையா?

இந்திரா காந்தி படுகொலையையொட்டி தில்லியில் அப்பாவி சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, அதை அங்கீகரித்துப் பேசியவர் இராசீவ் காந்தி! அந்த அப்பாவி சீக்கியர்களின் குடும்பங்கள் என்ன பாடுபட்டிருக்கும்?

காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்தில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே 14 ஆண்டு சிறைக்குப் பின் மராட்டிய மாநிலக் காங்கிரசு ஆட்சியால் 1960களின் தொடக்கத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் சித்பவன பிராமணர்! மனுநீதிப்படி பிராமணர்கள் கொலைக் குற்றம் புரிந்தாலும் சாவுத் தண்டனையோ, கடுந்தண்டனையோ வழங்கக்கூடாது. அதே காங்கிரசுக் கட்சி இராசீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக் கூடாது என்கிறது. இவர்கள் ஏழு பேரும் தமிழர்கள் என்பதாலா அல்லது இவர்கள் சூத்திரர்கள் என்பதாலா இந்த எதிர்ப்பு?

தமிழ்நாட்டில் கட்சி கடந்த தமிழின உணர்ச்சி பதவி அரசியலரிடம் இலாபம் இல்லை. தலைமை அமைச்சர் இந்திரா காந்தியைச் சுட்டுக்கொன்ற சீக்கிய சிப்பாய்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரின் பெயர்களை அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதித்து, வீரத்தியாகியர் என்று சீக்கியர் போற்றுகின்றனர். அங்கு அரசியல் கட்சி கடந்து இன உணர்வு இருக்கிறது.

தமிழர்களுக்குக் கட்சி கடந்த இன உணர்வும் வேண்டும், மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சியும் வேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வருக்கும் 1999இல் இறுதியாகத் தூக்குத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ் – 19.05.2022 அன்று திருவனந்தபுரத்தில் பி.டி.ஐ.க்கு அளித்த செவ்வியில், “தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டன. பேரறிவாளனை முன் கூட்டியே விடுவித்திருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். அத்துடன், பேரறிவாளன் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

ஆனால் பேரறிவாளனின் இளமையை 31 ஆண்டு கால சிறைவாசம் தின்றபின், உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டப்படி விடுதலை செய்திருப்பதைத் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியினர் எதிர்த்துப் போராடுகின்றனர். இக்காங்கிரசார் காந்தியடிகளைத் தங்கள் ஆசானாக கூறிக் கொண்டிருக்கின்றனர். மன்னிப்பு வழங்கல், மனித வதையை எதிர்த்தல் ஆகியவை காந்தியடிகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் உள்ளன. இக்காங்கிரசார் காந்தியர்கள் அல்லர். காந்தியைக் கொன்ற கோட்சேவாதிகள்! பா.ச.க.வின் அண்ணாமலையோ காங்கிரசைவிடக் கூடுதலாக இவ்விடுதலையை எதிர்க்கிறார். சட்டம் வழங்கும் நீதியைத் தமிழர்களுக்கு மறுப்பதில் காங்கிரசும், பா.ச.க.வும் ஒன்றுதான்!

பேரறிவாளன் விடுதலைக்கு தி.மு.க. ஆட்சிதான் காரணம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அ.தி.மு.க. தான் இவ்விடுதலைக்குக் காரணம் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்ச்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை வெளியிட்டனர்.

அ.தி.மு.க. அமைச்சரவை 09.09.2018 அன்று நிறைவேற்றிய தீர்மானம் - இப்போதுள்ள தி.மு.க. அரசு திறமைமிக்க ராகேஷ் திரிவேதி போன்ற வழக்கறிஞர்களை அமர்த்தி உச்ச நீதிமன்றத்தில் உறுதியுடன் ஊசலாட்ட மின்றி வாதாடச் செய்தது - பேரறிவாளன் வழக்கறிஞர்கள் கோபால் சங்கர நாராயணனின் திறன்மிக்க கூர்மையான வாதம் மற்றும் வழக்கறிஞர்கள் பிரபு சுப்ரமணியம், பாரி போன்றோரின் இடைவிடாத உழைப்பு - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேசுவரராவ், பி.ஆர் தவாய், ஓ.எஸ். பொப்பண்ணா ஆகியோரின் தற்சார்பான, தனித்த கூர்மையான துணிச்சலான சட்டத் தருக்க முடிவுகள் போன்றவை இந்த விடுதலைத் தீர்ப்பில் அதனதன் அளவிற்குப் பங்காற்றியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஏழு தமிழர் உயிர் காக்கவும் அவர்களின் விடுதலைக்கும் தமிழ்நாடு தழுவி நடந்த மக்களின் எழுச்சியும் இளங்குருத்து செங்கொடியின் தழல் ஈகமும், சிறு சிறு கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பங்களிப்பும் முக்கியக் காரணங்கள்.

குற்றவியல் நீதிமுறை (Criminal Justice System), மனித உரிமை, மனித நேயம் அனைத்தையும் பலியிட்டு காங்கிரசுக் கட்சி தமிழ்நாடு தழுவிய கண்டனப் போராட்டம் நடத்தியது. பதவி வணிக அரசியலுக்காகத் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க தலைமையும் பேரறிவாளன் விடுதலை முயற்சியில் ஒன்றின் பங்கை இன்னொன்று மறைத்து அறிக்கை விட்டன. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பையும் மறைத்தன. இவ்விரு கழகங்களும் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டன. இந்தப் பண்பாட்டுச் சீர்கேடுகளை இளையோர் அருவருக்க வேண்டும்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற வாதங்களை வெளியிட்டு வந்தது ஆங்கில இந்து நாளேடு. விடுதலைத் தீர்ப்பையும் முழு வரலாற்று குறிப்புகளுடன் 19.05.2022 இதழில் வெளியிட்டது. ஆனால் அதே அன்றைய இதழ் (19.05.2022) ஆசிரியர் உரையில், “ஆயினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது குற்றம் சாட்டப்பட்டோர் தங்களை அப்பாவிகள் என்று சொல்லிக் கொண்டதற்கான ஒப்புதல் என்று கருதக் கூடாது. அவர்கள் செய்தது மிகக் கொடிய சதித்திட்டச் செயல்! ஆட்சியாளர்கள் வெகுமக்களின் விருப்பங்களுக்கு செவி சாய்த்து, தண்டணை குறைப்பு வழங்கலாமா என்பது விடையளிக்க வேண்டிய வினா” என்று எழுதியுள்ளது. காங்கிரசு, பா.ச.கவினரைப் போலவே “இந்து” ஏடும் எரிச்சலையும் சினத்தையும் எழுப்பியுள்ளது.

இவற்றையெல்லாம் இளையோர் புரிந்து கொண்டு எதிர்கொள்ள வேண்டும். எஞ்சிய ஆறு பேர் விடுதலைக்காக அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் இயக்கங்களும் தமிழ்நாட்டு மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

"பேரறிவாளன் விடுதலைக்குப் பாராட்டுகள்! எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்!"---- தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

Wednesday, May 18, 2022


 

பேரறிவாளன் விடுதலைக்குப் பாராட்டுகள்!
எஞ்சிய ஆறு பேரையும்
விடுதலை செய்ய வேண்டும்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
==================================


பேரறிவாளனின் 31 ஆண்டு கால இளமையைத் தின்றுவிட்டு, இப்போது விடுதலைத் தீர்ப்பு வந்துள்ளது.

பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்து 18.05.2022 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேசுவர ராவ் மற்றும் ஜி.ஆர். கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயன்படும் வகையில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-க்குத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். ஆளுநர்கள் விருப்பு வெறுப்பு அடிப்படையில் எதேச்சாதிகாரிகளாகச் செயல்படுவதற்கு வரம்பு கட்டியிருக்கிறார்கள். அவ்விரு நீதிபதிகளுக்கும் பாராட்டுகள்!

நீதிபதிகளின் நீதி சார்ந்த தனி அக்கறைகளும் சார்பற்ற அணுகுமுறையும் பல முற்போக்குத் தீர்ப்புகளுக்கு அடித்தளமாக இருந்துள்ளன.

அளவுக்கு அதிகமாகப் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துவிட்டார், சிறையில் நன்னடத்தைப் பண்புகளைக் கொண்டிருந்தார் என்ற சிறப்புக் கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், மாநில அரசுக்கும், ஆளுநர்க்கும் இருக்க வேண்டிய செயல் உறவு பற்றிய அரசமைப்புச் சட்ட விளக்கத்தையும் இத்தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ் தமிழ்நாடு அமைச்சரவை பேரறிவாளன் உட்பட இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து, ஆளுநர்க்கு 2018 செப்டம்பரில் அனுப்பிய பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதை ஏற்காமல் கிடப்பில் போட்டதும், பின்னர் குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பியதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டவிரோதச் செயல் (Constitutionally illegal) என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

இது மிக முக்கியமான முடிவு. ஆனால் ஒவ்வொரு நீதிபதிக்கும், அரசமைப்புச் சட்ட விளக்கங்கள் மாறுபடுவதையும் பார்க்கிறோம்.

அடுத்து, நரேந்திர மோடி அரசு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கூடாது என்று மூர்க்கமாக, முரட்டுத்தனமாகக் கடைசிவரை வாதிட்டது. எழுத்து வடிவில் கடைசியாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் 11.52022 அன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க கொடுத்த பதிலுரையிலும் நரேந்திர மோடி அரசு, பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்றே கூறியிருந்தது.
பா.ச.க. வலியுறுத்தும் இந்துத்துவ “தர்மம்” எப்படிப்பட்ட பாகுபாட்டுத் தர்மம் என்பதையே மோடி அரசின் இந்த முரட்டு அணுகுமுறை வெளிப்படுத்துகிறது. ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதிலும், அரசமைப்பு உறுப்பு 161-ஐத் தவறாகப் பயன்படுத்துவதிலும் காங்கிரசு ஆட்சிக்கும் பா.ச.க. ஆட்சிக்கும் ஒற்றுமையே நிலவுகிறது.

பேரறிவாளன் சார்பில் விடாமல் தொடர்ச்சியாக சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் பிரபு சுப்பிரமணியன், பாரி ஆகியோர் தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டுக்குரியவர்கள்! பேரறிவாளனின் அம்மையார் அற்புதம் அம்மாளின் அக்கறையும், அயரா உழைப்பும் உலக அற்புதம்!

தமிழ்நாடு அரசு ஊசலாட்டமின்றி உறுதியுடன் பேரறிவாளன் விடுதலைக்கு உண்மையாக வாதிட்டது. அதற்குப் பாராட்டுகள்!

இவ்வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு தனி சட்ட முயற்சி எடுத்து, சிறை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

"மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும்!"--தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரிக்கை!

Wednesday, May 4, 2022

 


மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும்
பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும்!
=====================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கோரிக்கை!
=====================================


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் தலைவர்களை - பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் “பட்டினப் பிரவேசம்” என்பது வழக்கமாக நடந்து வந்துள்ளது. வரும் 22.05.2022 அன்று இவ்வாண்டுக்கான பட்டினப் பிரவேசம் பீடாதிபதியை பல்லக்கில் வைத்து மனிதர்கள் சுமந்து செல்லும் நிகழ்வுடன் நடத்த ஆதீனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், திராவிடர் கழகமும் மற்ற அமைப்புகளும் மனிதரை மனிதர் சுமக்கும் இந்த மனிதநேயமற்ற செயலுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று ஆட்சியாளர்களிடம் கோரி யுள்ளார்கள். அந்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு வரும் 22.05.2022 அன்று, இப்பொழுதுள்ள ஆதினகர்த்தர் மயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அவர்களை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தடை விதித்துள்ளது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்நாடு அரசின் இத்தடையை வரவேற்கிறேன்.

இவ்வாறு ஆதினகர்த்தரை மனிதர்கள் சுமக்கும் சம்பிரதாயத்திற்குத் தடை போடக் கூடாது என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஆதினகர்த்தரை இவ்வாறு பல்லக்கில் தூக்கிச் சுமப்பது பல்லாண்டுகாலமாக நடந்து வரும் பழக்கம் என்றாலும், மனித நேயத்திற்கும் மனித சமத்துவத்திற்கும் எதிரான இந்த வழக்கத்தை கைவிடுவதே இப்போதைய தேவை.

ஆதினகர்த்தரை பல்லக்கில் தூக்கிச் சுமப்பதை தவிர்க்க முடியாத ஒரு செயலாக நம்முடைய தமிழ்ச் சிவநெறி ஆன்மிக நூல்கள் எதுவும் கூறவில்லை. நம்முடைய தேவாரம், திருமந்திரம், திருவாசகம் போன்ற சிவநெறி நூல்கள் எதுவும் இவ்வாறான சடங்கை வலியுறுத்தவில்லை.

ஒருவேளை, பழைய பழக்கவழக்கமாக இருந்தாலும் இக்காலத்திற்குப் பொருந்தாத நடைமுறை களைக் கைவிட்டுவிடுவதே தமிழ்ச் சிவநெறி ஆன்றோர்கள் கற்பித்திருக்கும் பாடமாகும்.

தருமபுரம் ஆதினகர்த்தர் தமிழ்ச் சிவநெறிகளை பின்னுக்குத் தள்ளி, சமற்கிருத பிராமணிய சம்பிரதாயங்களையும், சமற்கிருதத்தையும் போற்றி, அவற்றைக் கடைபிடிப்பவர். அருள்கூர்ந்து, அவர் இதிலாவது அரசின் கருத்திற்கு, மக்களின் கருத்திற்கு செவிகொடுத்து, தாமாக முன் வந்து மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வரும் பழக்கத்தைக் கைவிடுகிறேன் என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, எந்த நிர்பந்தத்திற்கும் உட்படாமல் ஏற்கெனவே எடுத்த முடிவின்படி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் ஆதீனகர்த்தர் பவனி வருவதற்கான தடையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்