<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்! பெ. மணியரசன்

Monday, August 26, 2019

தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள்
என்று இழிவுபடுத்தியவர்கள்
சாதி வேண்டும் என்கிறார்கள்!


தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



கேரளத்தின் கொச்சியில் 2019 சூலை 19 - 21 வரை நடந்த “உலகத் தமிழ் பிராமணர்கள்” மாநாட்டில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள்; அவர்கள் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
இதுதான் வர்ணாசிரம தர்ம நீதி!
பிராமணர்களில் மிகப்பெரும்பாலோர் சமூக சமத்துவத்தை ஏற்க மாட்டார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எது எதை எங்கெங்கு, எவ்வெப்போது செய்ய வேண்டுமோ - அவ்வாறு செய்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள். அதற்காக கடவுள், கட்சி, இந்து மதம், இந்தியத்தேசியம் எல்லா வற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
நீதித்துறையை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என நீதிமன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ். குரலை வெளிப்படுத்தினார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த பின் அக்கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இந்தியத் தலைமையில் வர்ணாசிரமவாத பா.ச.க.வின் அதிரடி ஆட்சி! தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள்! பம்மிக் கொண்டு, மறைமுகச் செயல்பாடுகள் மூலம் பிராமணிய வர்ணாசிரம வேலைகளை செய்து வந்த பலர் இப்போது துணிச்சல் பெற்று வெளிப்படையாக தங்களின் “சாதி ஆதிக்க உரிமையைப்” பேசுகிறார்கள்.
பதுங்கியவர்கள் பாய்கிறார்கள்
------------------------------------------------ 
அதே கொச்சி பிராமணர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டு வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் எல்லா உயிரினத்திலும் சாதி உண்டு, உயர்வு தாழ்வு உண்டு, மனிதர்களிலும் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு, பிராமணர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும் தகுதி உண்டென்றார். மனிதர்கள் பிறப்பு அடிப் படையில் உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்றார்.

வெங்கடகிருட்டிணன் பேச்சை அப்படியே ஆதரித்து ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி, “நக்கீரன்” இணையத் தொலைக்காட்சியில் பேசினார்.
முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொண்ட மாலன், பத்ரி போன்றோர் இப்போது தங்கள் உண்மை முகம் காட்டத் துணிந்து விட்டார்கள். காசுமீர் உரிமைப் பறிப்பை மாலன் ஆதரித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார். ஆரிய பிராமணிய தத்துவ சாரத்தை உள்ளடக்கிய கத்தூரிரங்கனின் புதிய கல்விக் கொள்கை வரைவை ஆதரித்து பத்ரி முழங்குகிறார்!
புதிய புதிய எச். இராசாக்கள் இப்போது தலைநீட்டுகிறார்கள்!
பிராமணரல்லாதார் 
தலைமையின் கீழ் பிராமணர்கள் 
---------------------------------------------------- 
மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதே தமிழர் அறம்! தமிழர் மரபு சமத்துவ மரபு!

பிராமணர்களால் மிலேச்சர்கள் என்று வசை பாடப்பட்ட ஐரோப்பியர்கள் இந்தியப் பிராமணர்களின் அறிவாற்றலை விட அதிக அறிவாற்றல் பெற்றிருப்பதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள்; சனநாயகக் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்கள். அவர்களிடம் போய் இந்தியப் பிராமணர்கள் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் இனத்தில் பிறந்த திருவள்ளுவப் பேராசான் யாத்துத்தந்த திருக்குறளுக்கு நிகரான நூல் ஆரிய சமற்கிருதத்தில் இல்லை!
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், என். கோபாலசாமி ஐயங்காரும் உறுப்பு வகித்த இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர்தாம் தலைமை தாங்கினார்.
மனிதர்கள் – விலங்குகள் வேறுபாடு
--------------------------------------------------------- 
மனிதர்கள் உழைத்து உற்பத்தி செய்து உண்டு, உடுத்தி, உறைந்து வாழ்பவர்கள். மற்ற உயிரினங்கள் இருப்பவற்றை உண்டு வாழ்பவை! மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, சிந்திக்காத - சிந்தனை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத மற்ற உயிரினங்களைப் போல் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியில் இருப்பதில்லை.

மனிதர்களை அஃறிணையோடு ஒப்பிடும்போதே வெங்கடகிருட்டிணன் “அறிவாற்றலின் ஆழம்” வெட்ட வெளிச்சமாகி விட்டது! ஆரியத்துவாவின் “அறம்” புரிந்து விட்டது!
விலங்குகளின் பாலுறவுக்கு தாய், மகள், அக்காள், தங்கை - தந்தை, அண்ணன், தம்பி என்ற வேறுபாடுகள் கிடையாது. மனிதர்களும் இன்று அவ்வாறு இருக்க வேண்டுமென்று வெங்கடகிருட்டிணன் அறிவுரை வழங்குவாரா?
மற்ற மதங்களில் சாதி இருக்கிறதா?
---------------------------------------------------------
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் பிறப்பு அடிப்படையில் சாதி இருக்கிறதா? இல்லை! ஆரிய பிராமண சூழ்ச்சிக்காரர்கள்தாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதர்களிடையே வர்ணாசிரம சாதிப் பிளவை பிறப்பு அடிப்படையில் உருவாக்கி, நிலைநாட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 
பிறப்பைக் காரணம் சொல்லி, சம்பூகனைக் கொன்றவர்கள் - ஏகலைவன் கட்டை விரலை வெட்டியவர்கள் - நந்தனை எரித்தவர்கள் ஆரிய - பிராமண வர்ணாசிரமவாதிகளே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உருவாக்கிய வர்ணசாதி அநீதியை - இவர்களின் ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆட்சி பாதை போட்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களையும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள்தாம் பிராமணர்கள் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்!



தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : 
www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : 
www.kannottam.com
இணையம் : 
www.tamizhdesiyam.com
சுட்டுரை : 
www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : 
youtube.com/Tamizhdesiyam


Labels:

Thursday, August 15, 2019


"ஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே!"

ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 
அறிக்கைக்கு எதிர்வினை!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி. வீரமணி ( @asiriyarkv ) அவர்கள் “திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று சிலரைக் கிளப்பிவிட்டுள்ளனர்" என்றும், “பெரியார் ஊட்டிய தமிழ்த்தேசிய உணர்வை திசைத்திருப்பும் எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது" என்றும், “இது தான் பெரும் ஆபத்து” என்றும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை என்பதால், இதுகுறித்து, சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

“சமத்துவம், சுயமரியாதை என்பது திராவிடம்” என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஆசிரியர். திராவிடம் என்பது ஆரியர் உருவாக்கிப் பயன்படுத்திய சொல்; இப்போதும் அவர்களில் ஒரு சாரார் திராவிட பிராமண சங்கம் வைத்துள்ளார்கள்.

திராவிடம் என்ற பெயரில் மொழியோ, நாடோ, இனமோ இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. 

பெரியார் பரப்புரை செய்த சுயமரியாதை, ஆரிய – பிராமண ஆதிக்க எதிர்ப்பு, சமத்துவம் ஆகியவற்றைக் குறிக்க “பெரியார் சிந்தனைகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். (பெரியார் சிந்தனைகள் மீது எமக்குள்ள விமர்சனங்கள் வேறு). திராவிடம் என்ற சொல்லை அருள்கூர்ந்து பயன்படுத்தாதீர்கள். அந்தத் திராவிடம் என்ற சொல் தமிழினத்தை மறைக்கிறது; ஒரு வகையில் மறுக்கிறது. தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் அவரவர் தேசிய இனப்பெயரை நேரடியாகச் சொல்கிறார்கள். தமிழர்கள் மட்டும், அவர்களை எல்லாம் உள்ளடக்கும் பொதுப்பெயர் என்று நீங்கள் கருதும் “திராவிடர்” என்ற பெயரில் அழைக்குமாறு வலியுறுத்துகிறீர்கள். இது ஓரவஞ்சனை இல்லையா?

தமிழறிஞர்களாலும் அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும் “தமிழர் திருநாள்” என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, நீங்கள் தான் வலிந்து “திராவிடர் திருநாள்” என்று அண்மைக் காலமாக அழைத்து வருகிறீர்கள். 

பெரியார் தமிழ்த்தேசிய உணர்வு ஊட்டினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழ்த்தேசியம் என்பதையே ஏற்க மறுத்து வந்த தாங்கள் – அதை ஏற்று அறிக்கை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்!

பெரியார் தமக்கு இந்தியத் தேசியத்தின் மீது மட்டுமல்ல எந்தத் தேசியத்தின் மீதும் நம்பிக்கை இல்லை, தேசியம் என்பது மோசடி; தேசியத்திலிருந்துதான் பாசிசம், நாஜிசம் எல்லாம் தோன்றின் என்றார். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அரண் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளவற்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். “ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக பெரியார் நம் மண்ணில் நிற்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

பா.ச.க. தலைமையில் தி.மு.க., நடுவண் அமைச்சரவையில் கூட்டணி சேர்ந்த போதும் பெரியார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்கப்படாமல்தான் இருந்தாரா? 

அப்படிப்பட்ட தி.மு.க.வை தி.க. ஆதரித்து வரும் போதும் பெரியார் ஆரியத்தால் விழுங்கபடாமல் இருக்கிறாரா? செயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரித்ததுடன், அவருக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' பட்டம் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்தபோதும் ஆரியத்துடன் திராவிட இயக்கம் உறவு கொள்ளாமல் தான் இருந்ததா?

ஆரியம், இந்துத்துவம், இந்துத்தேசியம் ஆகியவற்றின் இரட்டைப்பிள்ளைகள் தாம் காங்கிரசும் பா.ச.க.வும். அத்திசையில் பா.ச.க. தீவிரமாகச் செயல்படும். காங்கிரசு நிதானமாக செயல்படும். இராகுல் காந்திகூட தன் பூணூலை இழுத்து காட்டி, தத்தாத்திரேய கோத்திரத்தில் பிறந்தவன் என்று தன்னை கூறிக்கொண்டார். காங்கிரசுடன், அணிசேர்ந்து கொண்டு, பா.ச.க.வின் ஆரியத்தை - இந்துத்துவாவை திராவிடர் கழகம் எதிர்ப்பதாகச் சொல்வது சரியா?

உங்களின் இந்த அரசியல் நிலைபாடு பெரியாரின் அணுகுமுறைக்கு ஒத்ததுதான். 1949க்குப் பின் தி.மு.க ஒழிப்பில் தீவிரமாக இருந்த பெரியார் 1954 முதல் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக மாறினார். காமராசர் ஆதரவு என்று அதற்கு பேர் பண்ணிக் கொண்டார். நீதிக்கட்சியிலும். திராவிட இயக்கத்திலும் மிகவும் பிரபலமாக விளங்கிய 'சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம் அவர்கள் 1957 மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்சென்னையில் போட்டியிட்டார். அவரைத் தோற்கடித்து காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரியை வெற்றிப் பெற செய்வதற்காக அத்தொகுதியில் தீவிரப்பரப்புரையில் ஈடுபட்டார் பெரியார். அதே பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவைத் தோற்கடிப்பதற்காக காங்கிரசு வேட்பாளர் சீனிவாசய்யரை ஆதரித்துக் காஞ்சிக்கு சென்று தீவிரப்பரப்புரை செய்தார் பெரியார்.

தமிழ்நாட்டு மக்களால் 1967 இல் வீழ்த்தப்பட்ட காங்கிரசின் வெற்றிக்காக அத்தேர்தலில் (1967) அரும்பாடுபட்டவர் பெரியார். 

1947 இல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்து. அதிகாரம் காங்கிரசு கைக்கு வந்தபோது பெரியார் “இது பார்ப்பன – பனியா ஆட்சி; நமக்கு பகை ஆட்சி என்றார்”. ஆனால் அந்தக் காங்கிரசின் ஆரியச் சார்பை, வடநாட்டுப் பெருமுதலாளிய (பனியா)ச் சார்பை, காங்கிரசுத் தலைமையின் வர்ணசாதி – வர்க்கச்சார்பு உள்ளடக்கத்தை காமராசர் மாற்றிவிட்டாரா? அப்படி பெரியார் கருதினால் அது சமூக அறிவியல் சார்ந்ததா அல்லது சந்தர்ப்பவாதம் சார்ந்ததா? காமராசர் அனைத்திந்திய காங்கிரசுத் தலைவராக கோலோச்சிய காலத்தில் தான் இந்தி திணிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் 300 பேரை இராணுவத்தையும், காவல்துறையையும் ஏவி சுட்டுக்கொன்றது. அப்போதும் பெரியார் காங்கிரசைத் தான் ஆதரித்தார்.

ஆசிரியர் அவர்களே, இவற்றையெல்லாம் குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக நான் குறிப்பிடவில்லை. நடந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். நடப்பவை சரியானவையாக மாறட்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன்.

ஆய்வாளர் அரண் கட்டுரையில், தமிழ்நாட்டில் ஆரியப் பிராமணியம் அன்றாடம் நடத்தும் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அடுக்கியவற்றை எடுத்துக் காட்டியுள்ளீர்கள். அவற்றையெல்லாம் பெரியார் கைத்தடியால் மட்டுமே தடுக்க முடியும் என்று அரண் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. ஆரியப்படையை விரட்டியடித்ததை சிறப்பு பட்டமாகப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குத் தமிழ்ச்சான்றோர்கள் வழங்கியுள்ளார்கள். தமிழையும் தமிழ் மன்னர்களையும், இழிவாகப் பேசிய ஆரிய மன்னர்கள் கனகன், விசயன் இருவரையும் வென்று அவர்கள் தலையில் இமயமலைக் கல்லை ஏற்றிவந்து சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. திருவள்ளுவப் பேராசன் ஆரிய வர்ணாசிரமக் கொள்கையை எதிர்த்துப் பிறப்பால் அனைவரும் சமம் என்றார். எவ்வளவு பெரியவர் சொன்னாலும் அது சரியா என்று உன் அறிவைக் கொண்டு உரசிப்பார் என்றார்.

பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட மன்னருக்குப் பொல்லாத நோய்வரும், மக்களுக்குப் பஞ்சமும் பிணியும் ஏற்படும் என்று எச்சரித்தார் திருமூலர். சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் எனப் பிராமண ஆதிக்க எதிர்ப்பு – வேத எதிர்ப்புச் சான்றோர்கள் தமிழ்ச் சமூகத்தில் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

பெரியார் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியதையும், பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து பரப்புரை செய்ததையும் இன்றும் தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். அவருடைய அரசியல் நிலைபாடுகள், தமிழின மறுப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு போன்றவற்றைத்தான் எதிர்க்கிறோம்.

ஆரியப் பிராமணிய ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் இக்காலதத்தில் அவற்றைத் தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளீர்கள். மிகச்சரி! அருள் கூர்ந்து நீங்கள் “திராவிடம்” என்பதைக் கைவிட்டு பெரியார் சிந்தனைகள் பற்றிப் பேசுங்கள். தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டும் மக்கள் அனைவருக்கும் உரியது; தாய்ப்பால் போன்றது. தமிழ்த்தேசியத்துடன் இணக்கமாக இருங்கள்.

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள அரண் கட்டுரையில், ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், கபடி, சில ஆன்மிக விழாக்கள் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். ஆக்கிரமித்து இந்துத்துவ மயமாக்குகிறது என்று கூறியுள்ளார். தமிழ்த்தேசியம் வளர்ந்தால் இவ்வாறான ஆரிய சூதாட்டங்கள் அரங்கேற முடியாது. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பது ஆரியத்திற்கு நேர் எதிரானது. தமிழர் ஆன்மிகமும் ஆரியத்திற்கு எதிரானது. அதனால்தான் மறைமலையடிகளார், ஞானியார் அடிகள், குன்றக்குடி அடிகளார் போன்ற தமிழர் ஆன்மிகச் செம்மல்கள் தமிழர் உரிமைச் சிக்கல்களில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டனர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம், பெரியாரை அயல் இனத்தார் என்று கருதுவதில்லை. அந்தக்கோணத்தில் – அவரை விமர்சிப்பதில்லை. தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் – மற்ற மொழி பேசும் மக்கள் உட்பட அனைவரும் – சம உரிமை உள்ளவர்கள் என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!

பெரியாரையும், மற்றமொழி பேசுவோரையும் விமர்சித்து வரும் இளைஞர்கள் சிலர்க்கு நாங்கள் மேற்படி அறிவுரையை வழங்கி வருகிறோம். ஆரிய – பிராமணிய இந்திய ஏகாதிபத்தியம் தான் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து வருகிறது; அதன் அமைப்புகள் தாம் பா.ச.க., காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ். போன்றவை என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு! 

ஆசிரியர் அவர்களே அன்புகூர்ந்து எங்கள் கருத்துகளையும் எண்ணிப் பாருங்கள்!

Labels:

சம்மு காசுமீர் சிதைப்பும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் பெ. மணியரசன் கட்டுரை..!

Saturday, August 10, 2019


சம்மு காசுமீர் சிதைப்பும் 
தமிழ்நாட்டுக் கட்சிகளும்

தமிழ்த்தேசிப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை..!


ஒரு வீதியின் வடகோடி வீட்டில் தீப்பற்றி எரிந்தால் அவ்வீதியின் தென்கோடி வீட்டில் உள்ளோர் பதறுவதைப் போல், பா.ச.க. ஆட்சி காசுமீர் மீது பற்ற வைத்த நெருப்பு தமிழர்களைப் பதறச் செய்கிறது.

1947 ஆகத்துக்கு முன் தனி நாடாக மன்னராட்சியின் கீழ் இருந்த சம்மு – காசுமீர், இந்தியா – பாக்கித்தான் பிரிவினைக்குப்பின், சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் இணைந்தது. காசுமீர் மன்னர் அரிசிங் 26.10.1947 அன்றும், இந்தியத் தலைமை ஆளுநர் மவுண்ட் பாட்டன் 27.10.1947 அன்றும் கையொப்பமிட்ட இரு இணைப்பு ஒப்பந்தங்களும் அந்த நிபந்தனைகளைக் கூறுகின்றன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நேரடிக் காலனியாக இல்லாமல் அதன் மேற்பார்வையில் தனிநாடாக இருந்ததாலும், இந்து – முசுலிம் என்ற மதவேறுபாட்டு அடிப்படையில் – இந்தியா – பாக்கித்தான் என்று இரு நாடுகள் உருவாக்கப்பட்டதாலும் காசுமீர் இந்தியாவுடன் இணைவது தனி முக்கியம் பெற்றது. காசுமீர் பள்ளத்தாக்கில் 90 விழுக்காட்டினர்க்கு மேலும் சம்முவில் பெரும்பான்மையாகவும் முசுலிம்கள் இருந்ததால் – அப்பகுதிகள் பாக்கித்தானுடன் சேர்ந்து விடாமல் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு, சிறப்பாகத் தனி உரிமைகள் வழங்கிட இந்தியா முன் வந்தது.

படைத்துறை, வெளியுறவு, நாணயம், தகவல் தொடர்பு தவிர்த்த அனைத்து அதிகாரங்களும் சம்மு காசுமீர் மாநிலத்திற்கு இருக்கும் என்று அன்றையத் தலைமை அமைச்சர் பண்டித நேருவும், உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலும் உறுதி அளித்தனர். பின்னர் அந்த உறுதிமொழிகளில் பலவற்றைக் “கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி” என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலைப் போல் பண்டித நேருவே பறித்துக் கொண்டார்.

எஞ்சிய சில உரிமைகளை உறுதிப்படுத்த இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 உட்பிரிவுகள், உறுப்பு 35A ஆகியவற்றை சம்மு காசுமீருக்காக உருவாக்கினார்கள்.

உறுப்பு 370இன் சில உட்பிரிவுகள் மற்றும் உறுப்பு 35A இரண்டையும் நீக்கி 05.08.2019 அன்று மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்கள் சனநாயகப் படுகொலை மட்டுமல்ல, இன அடையாள அழிப்புப் பாசிசமும் ஆகும்.

இவற்றைக் கொண்டுவந்தது ஆளுங்கட்சியான பா.ச.க.! இத்திருத்தங்களை ஆதரித்து வாக்களித்த கட்சிகள் - சிவசேனை, அகாலி தளம், ஆம் ஆத்மி, பகுசன் சமாஜ் கட்சி, பிஜூ சனதா தளம், அ.தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம், தெலங்கானா இராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு முதலியவை. இத்திருத்தங்களை எதிர்த்து வாக்களித்த கட்சிகள் - காங்கிரசு, தி.மு.க., இராஷ்ட்ரிய ஜனதா தளம், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் முதலியவை. 

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் எதிர்த்து வெளிநடப்பு செய்து, ஒருவகை “நடுநிலை” வகித்த கட்சிகள் திரிணாமூல் காங்கிரசு, ஐக்கிய ஜனதாதளம் போன்றவை. 

எதிர்த்த கட்சிகள் முழுமையாக எதிர்த்தனவா அல்லது அரைகுறையாக எதிர்த்தனவா என்பதை இப்போது பார்ப்போம்.

காங்கிரசுக் கட்சி
---------------------------
காங்கிரசுக் கட்சியின் தலைமை இப்படியும் அப்படியும் இருந்தாலும், அக்கட்சி சார்பில் மாநிலங்களவையில் மேற்படித் திருத்தங்களை எதிர்த்து 05.08.2019 அன்று பேசிய ப.சிதம்பரமும், குலாம் நபி ஆசாத்தும் கொதித்துப் பேசினர். திருத்தத்தின் உள்நோக்கத்தையும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்தையும் ப. சிதம்பரம் பேசினார்.

“இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில் இன்றைய நாள்தான் மிக மோசமான நாள். இந்தியா – மாநில அரசுகளின் ஒன்றியம் என்ற கோட்பாடு பேராபத்தில் சிக்கியுள்ளது. இந்த ஆட்சி நீடித்தால் – இந்தியா சிதறிக் கலைந்து போவதற்கான தொடக்கமாக 370ஐத் திருத்தும் முயற்சி அமைந்து விடும்.

“அவர்கள் செய்திருப்பது அரசமைப்புச் சட்ட அட்டூழியம் (Constitutional Monstrosity). இந்தியாவின் எல்லா மாநில மக்களையும், ஒவ்வொரு குடிமகனையும் / குடிமகளையும் எச்சரிக்கிறேன். இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பது பேராபத்தில் உள்ளது; விழித்தெழுங்கள்!

“சம்மு காசுமீரைத் துண்டாடியிருக்கும் இந்த அவலம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பரவும். இதற்கு அவர்கள் (பா.ச.க. ஆட்சியினர்) செய்ய வேண்டிய தெல்லாம் தேர்தெடுக்கப்பட்ட மாநில ஆட்சிகளைக் கலைப்பது, அங்கெல்லாம் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவது – மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தை நாடாளுமன்றம் எடுத்துக் கொள்வது, நாடாளுமன்றத்தில் அந்த மாநிலத்தை துண்டாடுவது பற்றிய தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவது என்பவையே!”

ஆனால் காங்கிரசுக் கட்சியின் உச்சத் தலைவர்களான சோனியா காந்தி 05.08.2019 அன்றும் வாய்த்திறக்கவில்லை. 06.08.2019 அன்று மக்களவையில் இந்த அழிவுத் திருத்தம் விவாதிக்கப்பட்ட போதும் வாய்த்திறக்கவில்லை. 06.08.2019 அன்று இராகுல் காந்தி – காசுமீர் சிதைப்புத் திருத்தம் இந்திய ஒற்றுமையைக் காக்காது என்ற அளவில் சுட்டுரையில் (ட்விட்டர்) விமர்சித்திருந்தார். தனி அறிக்கை விடவில்லை.

காங்கிரசின் மேல்மட்டத் தலைவர்களில் கணிசமானோர் காசுமீருக்கிருந்த சிறப்பு அதிகாரப் பிரிவுகளான 370 உட்பிரிவுகள், 35A ஆகியவற்றை பா.ச.க., ஆட்சி நீக்கியதை ஆதரிக்கிறார்கள். வெளிப்படையாக மத்தியப்பிரதேச மாநிலக் காங்கிரசுத் தலைவர் சோதிர் ஆதித்தியா மற்றும் அரியானா காங்கிரசுத் தலைவர் தீபேந்திர சிங் ஹூடா ஆகியோர் இந்தத் திருத்தங்களை ஆதரித்துப் பேசினர்.

இந்தப் பின்னணியில் காங்கிரசின் தலைமைச் செயற்குழு(காரியக் கமிட்டி)க் கூட்டம் 06.08.2019 மாலை கூடி 4 மணி நேரம் காரசாரமாக எதிரும் புதிருமான கருத்துகளை விவாதித்தது. அதில் காசுமீர் சிறப்பு நிலை நீக்கத்தை ஆதரிப்போர் எதிர்ப்போர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் சமரசத் தீர்மானம் நிறைவேற்றினர். சம்மு காசுமீரில் சட்டப் பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும்போது ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கூறி நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றியது சட்டப்படி தவறு என்றும், காசுமீர் மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாக (யூனியன் பிரதேசமாகப்) பிரித்தது தவறு என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

அதாவது 370 உட்பிரிவுகள் - 35A ஆகிய அரசமைப்புச் சட்ட உறுப்புகளை நீக்கியது தவறல்ல, நீக்குவதற்கு கடைபிடித்த வழிமுறைதான் தவறு. இரண்டு யூனியன் பிரதேசங்களாக சம்மு காசுமீரைப் பிரித்தது தவறு என்று அத்தீர்மானம் கூறுகிறது. 

காங்கிரசும் பா.ச.க.வும் அடிப்படையில் ஒரே இந்தியத் தேசிய – இந்துத்தேசிய – இந்திய மற்றும் பன்னாட்டு பெருங்குழும நிறுவனங்களின் ஆதரவுக் கட்சிகள்தாம் என்பதைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப கூறி வருகிறது. சம்மு காசுமீர் உரிமைப் பறிப்பு, இன அடையாள அழிப்பு ஆகிய வேலைகளில் இரண்டு கட்சிகளும் அடிப்படையில் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன.

தி.மு.க. எதிர்ப்பு
------------------------- 
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்த கண்டன அறிக்கையில் தாமும் தம் தந்தையாரும் தி.மு.க.வும் என்றென்றும் இந்தியத் தேசபக்தியில் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை என்று நீண்ட பாயிரம் பாடி, பா.ச.கவிற்கு தன்னை அடையாளம் காட்டினார்.

“சீன யுத்தம், பாக்கித்தான் யுத்தம், கார்கில் போர் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பிற்கு சவால்கள் வந்தபோதெல்லாம் தி.மு.க. மத்தியில் ஆட்சியில் காங்கிரசு கட்சியா, பாரதிய சனதா கட்சியா என்றெல்லாம் பாராமல் தேசப்பற்றின் பக்கம் தீர்மானமாக நின்று அனைத்து நடவடிக்கைகளிலும் முழு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது (தி.மு.க).

“… இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள் காசுமீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இரத்து செய்திருப்பது அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் முயற்சியாகவே இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

“…. சம்மு காசுமீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” (தினத்தந்தி, 06.08.2019).

மாநில சுயாட்சி கேட்பதாகக் கூறிக் கொண்ட தி.மு.க.வின் தலைவர், சம்மு காசுமீருக்கு அளித்த சிறப்புரிமைகளை நீக்கியதை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அங்கு வந்தவுடன் அதன் கருத்தறிந்து செயல்படலாம் என்று கூறுகிறார். மற்ற மாநிலங்களையும் இதுபோல் மாற்றுவார்கள் என்ற கண்டனமோ – கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டோ ஸ்டாலின் அறிக்கையில் இல்லை! 

இதன் பொருள் என்ன? “மோடி அவர்களே, காசுமீருக்கிருந்த சிறப்பு அதிகாரங்களைப் பறித்து, அம்மாநிலத்தைப் பிளந்து, புதுதில்லி போல், அந்தமான் போல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றிய தங்களின் செயலைக் கண்டிக்க வேண்டிய தர்மசங்கடத்தில் நான் இருக்கிறேன். மற்றபடி என்னைப்பற்றி தப்பான அபிப்பிராயம் நீங்கள் கொள்ள வேண்டியதில்லை. கண்டிப்பது போல் பேசி, உங்களுக்கு வலிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளேன்” என்று மறைமுகமாக ஸ்டாலின் கூறியதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த இரட்டை நிலையை ஸ்டாலின் ஏன் எடுத்தார்? ஒன்று, பா.ச.க.வின் அதிகாரத்தைக் கண்டு அச்சம் அல்லது பா.ச.க.வுடன் கூட்டணி சேரத் தயார் என்று சைகை காட்டுவது!

வைகோ
-------------- 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், 05.08.2019 முற்பகல் காசுமீர் காவுத் தீர்மானத்தை அமீத்சா முன்மொழிய முனைந்தபோது சனநாயகப் படுகொலை, வெட்கம், வெட்கம் என்று முழங்கி தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அதேநாளில் பிற்பகலில் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற வைகோ, “காசுமீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை அவ்வப்போது பறித்த காங்கிரசுதான் பெரிய குற்றவாளி” என்று அதிக நேரம் காங்கிரசைத் தாக்கிப் பேசினார். 

காங்கிரசு நடத்திய உரிமைப் பறிப்பை கண்டனம் செய்வது தேவை. ஆனால், காசுமீரின் எல்லா உரிமைகளையும் பறிக்கும் பா.ச.க.வின் முன்மொழிவு வாக்கெடுப்புக்கு வரும் நேரத்தில் பா.ச.க.வை குறைவாக விமர்சித்து, காங்கிரசை மிகையாக விமர்சிப்பதுதான் சிக்கல்!

“இந்திய சனநாயக வரலாற்றில் இந்த நாள் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த நாள். சனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள்; காசுமீர் மக்களின் முதுகில் குத்திய நாள் பா.ச.க. இன்று கொண்டு வந்துள்ள சட்ட முன்வரைவு, காசுமீர் மக்கள் நெஞ்சில் நெருப்கைக் கொட்டிவிட்டது.…… இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறேன்” என்றார் வைகோ.

ஆனால் இப்பேச்சுக்கிடையே மோடி ஆட்சிக்கு அன்பான அறிவுரைகளை வழங்கினார். “இந்தியாவைச் சுற்றிப் பகை சக்திகள் நேரம் பார்த்துக் காத்திருக்கின்றன. காசுமீரின் ஒரு பக்கம் பாக்கித்தான் - அங்கு அல்கொய்தா! அடுத்த பக்கம் ஆப்கானித்தான் – அங்கு தாலிபான்கள்; இன்னொரு பக்கம் நம் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் செஞ்சீனா – தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இனிமேல் காசுமீர் சிக்கல் இந்தியாவின் உள்நாட்டுச் சிக்கலாக இருக்காது. 

“அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் திறமையான குள்ள நரி. கிழக்குத் திமோரைப் பிரித்து தனி நாடாக்கியது போல், கொசோவாவைப் பிரித்துத் தனி நாடாக்கியது போல், தெற்கு சூடானைப் பிரித்துத் தனி நாடாக்கியது போல், காசுமீரையும் பயன்படுத்துவார்கள். காசுமீர் சிக்கலை பன்னாட்டுச் சிக்கல் ஆக்குவார்கள். ஐ.நா. மன்றமும், ஐ.நா.வின் மனித உரிமை மன்றமும் இதில் தலையிடும்” என்றார் வைகோ!

இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர் பிரிந்ததை ஆதரித்துப் பல கூட்டங்களில் பேசியவர் வைகோ அவர்கள். கிழக்குத் திமோர் விடுதலைக்குப் பன்னாட்டு மேற்பார்வையில் 1999இல் கருத்து வாக்கெடுப்பு நடந்தது. அதேபோல் தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசினார். கொடிய இன ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போர் நடத்தி விடுதலை அடைந்த நாடுகள் கொசோவாவும் தெற்கு சூடானும். அவற்றின் விடுதலை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி என்று கூறினால், தமிழீழ விடுதலைக்கு அமெரிக்காவின் தலையீட்டைக் கோரினாரே அண்ணன் வைகோ அது எப்படி சரியாகும்?

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆவேசமின்றி பாரதமாதா பக்தியை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். அதே பணியை ஆவேசச் சொற்பொழிவு மூலம் அண்ணன் வைகோ வெளிப்படுத்தியுள்ளார். பா.ச.க. ஆட்சி இதர மாநிலங்களையும், துண்டு துண்டாக்கி யூனியன் பிரதேசங்களாக மாற்றும் அபாயம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி எச்சரிக்கவில்லை வைகோ அவர்கள்!

செயலலிதா
-------------------- 
செயலலிதா அம்மையார் 1984ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசும்போது சம்மு காசுமீருக்கு சிறப்புரிமைகள் வழங்கும் உறுப்புகள் 370 உட்பிரிவுகள் - 35A ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அப்பேச்சை இப்போது எடுத்துப்போட்டு, நாங்களும் அம்மா வழியில்தான் 370, 35A நீக்கத்தை ஆதரிக்கிறோம். என்று கூறுகிறது எடப்பாடி – ஓ.பி.எஸ். அ.தி.மு.க.!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்மையாரின் அரசியல் குறித்து அவர் ஆட்சியில் இருந்த காலங்களில் திறனாய்வு செய்துள்ளது. அவருக்கு தமிழ் மொழியின் மீது, தமிழ் இனத்தின் மீது, காழ்ப்புணர்ச்சி உண்டு; அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். செயலில் காட்டுவார். தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்ப தமிழ் ஆதரவுக் கருத்துகளைப் பேசி வந்தார். பா.ச.க.வினர் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தபோது, அந்த “கரசேவை”யில் பங்கேற்பதற்காக தன் “தொண்டர்களை” அனுப்பி வைத்தார். அவர் ஆரியத்துவா ஆதரவாளர்; தீவிரமான இந்தியத் தேசியவாதி; அவர் மாநில சுயாட்சி கோர மாட்டார் என்று நாம் கூறிவந்தோம். நம் கூற்று சரியான திறனாய்வு என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அவர் ஆட்சியில் இல்லாத காலத்தில் - 1984இல் 370, 35A உறுப்புகளை நீக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசியது.

மருத்துவர் இராமதாசு
------------------------------------
அன்றாடம் அனைத்திந்தியச் சிக்கலில் இருந்து அரியலூர் சிக்கல் வரை அறிக்கை வெளியிடும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள், சம்மு காசுமீர் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதையும் அதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள் பறிக்கப்பட்டதையும் பற்றி ஒரு கருத்தும் வெளியிடவில்லையே, ஏன்?

பா.ச.க.வுடன் உள்ள கூட்டணிக்காக – பதுங்கிக் கொண்டார் மருத்துவர் என்று சொல்ல முடியாது. கூட்டணியில் இருந்தாலும் விமர்சனம் செய்யக் கூடியவர்தாம்! தமிழ்நாட்டை மூன்றாகப் பிளக்க வேண்டும் என்ற பா.ம.க.வின் கோரிக்கைக்கு முன்னோட்டமாக சம்மு - காசுமீர் பிரிப்பு இருக்கிறது என்று தெம்பு பெற்றிருப்பார் மருத்துவர் இராமதாசு.

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்து, அதில் ஒரு யூனியன் பிரதேசத்துக்கு அன்புமணி இராமதாசு முதல்வர் பதவியைப் பிடித்தால் தமது இலட்சியம் நிறைவேறிவிடும் என்று இராமதாசு கருதுகிறார்.

தமிழ்நாடு பிளக்கப்படுவதைத் தடுக்க
தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, கொங்கு நாடு என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தன்னலவாத சாதி அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. ஒரு வேட்டியை மூன்றாகக் கிழித்தால் மூன்று வேட்டிகள் கிடைக்காது. மூன்று துண்டுத் துணிகள் தான் மிஞ்சும்!

ஒன்றுபட்ட தமிழ்நாடாக இருக்கும்போதே இங்கு இந்திய அரசு வேலைகளில் 95 விழுக்காடு இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வந்து வெளிமாநிலத்தவர்கள் பட்டணம் தொடங்கி பட்டிக்காடு வரை குடியேறி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்குரிய வரிவசூல், கல்வி, மருத்துவம், நீதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் அடுத்தடுத்து பறித்து வருகிறது. இந்திய அரசு. மூன்று யூனியன் பிரதேசங்களாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டால், புதுச்சேரியின் கிரேன்பேடி போல் இந்திக்காரர்கள் தாம் தமிழ்நாட்டை ஆள்வார்கள்.

“எவ்வளவு குறைத்துக் கொண்டாலும் எனக்கொரு கங்காணி அதிகாரம் கொடு” என்று கையேந்தும் இந்தத் தேர்தல் கட்சிகள், இந்திய ஏகாதிபத்திய ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படும் என்பது கடந்தகால - நிகழ்கால உண்மைகள்!

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பேராபத்தைத் தடுக்க வேண்டுமெனில் கங்காணிப் பதவிகளுக்காக இனத்தைக் காட்டிக் கொடுக்காத இலட்சியத் தமிழ்த்தேசியம் இங்கு வளர்ந்தாக வேண்டும்; வெகுமக்கள் அதை நோக்கி வர வேண்டும். அதற்குண்டான வேலைகளை இளந்தலைமுறையினர் செய்ய வேண்டும்.

காங்கிரசு மற்றும் பா.ச.க.வுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்த, சம்மு காசுமீரின் தேசிய மாநாட்டுக் கட்சி - மக்கள் சனநாயகக் கட்சி ஆகியவை, இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் திருவிளையாடல்களுக்குக் காசுமீரின் கதவைத் திறந்து விட்டவை; அதற்குக் காரணம் கங்காணிப் பதவி அரசியல்! அவ்விருக் கட்சிகளைப் போன்றவைதாம் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். குட்டி தி.மு.க., குட்டி அ.தி.மு.க. போன்று மற்றும் சில கட்சிகள் இங்கிருக்கின்றன. 

சம்மு காசுமீரை இந்தக் கதிக்குக் கொண்டு வந்துவிட்டவர்கள் யார் என்று அம்மக்களே கூறுவதைக் கேளுங்கள்! சம்முவில் ஒரு பள்ளி ஆசிரியர் கூறினார். “இந்தக் கதிக்கு சம்மு காசுமீர் ஆளானதற்குக் காரணம் முக்கியமான மாநில கட்சிகள்தான்”! (THE HINDU – 06.08.2019, முதல் பக்கம் எட்டாவது காலம்). விழித்தெழுவீர் தமிழர்களே! 

Labels:

மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு! பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, August 7, 2019



மேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர்

குழு மறுப்பு - காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்பு!


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 

திரு. பெ. மணியரசன் அறிக்கை!


கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டி, 66 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அவ்வறிக்கையை நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்தது. 

அந்த வல்லுநர் குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேக்கேத்தாட்டு அணை கட்டினால் 4,996 ஹெக்டேருக்கு (12,345 ஏக்கர்) மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மற்றும் சில முக்கியக் காரணங்களைக் கூறியும், கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை, மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி தர தேவையில்லை என அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. 

மேக்கேத்தாட்டு அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த வல்லுநர் குழு கணக்கிலெடுத்து ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்ட மறுப்புத் தெரிவித்து நடுவண் சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சக வல்லுநர் குழு அளித்துள்ள இந்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் பாராட்டுகிறேன். 

அதேவேளை அப்பரிந்துரையில், மேக்கேத்தாட்டு அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகமும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

காவிரியின் குறுக்கு மேக்கேத்தாட்டில் அணை கட்டினால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது என்ற உண்மையை வெளிப்படுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் மேக்கேத்தாட்டில் மறியல் செய்வதற்காக கடந்த 07.03.2015 அன்று கர்நாடக எல்லையான தேன்கனிக்கோட்டை யிலிருந்து ஐயாயிரம் உழவர்களும், உணர்வாளர்களும் பேரணியாகப் புறப்பட்டோம். அப்போது, காவல்துறை எங்களை தமிழ்நாடு எல்லையில் மறித்துக் கைது செய்து பள்ளிக்கூடங்களிலும், மண்டபங்களிலும் வைத்திருந்தார்கள். மேக்கேத்தாட்டு அணை கட்டக் கூடாதென்று தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன. 

இந்த நிலையில், மேற்படி வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நடுவண் அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாதென நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

தமிழ்நாடு அரசு, இத்துடன் ஓய்ந்து விடாமல் தொடர்ந்து விழிப்பாக இருந்து காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தரத் தடையாணை விதிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

காசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்! பெ. மணியரசன் எச்சரிக்கை!

Monday, August 5, 2019

காசுமீருக்கு வந்த ஆபத்து
தமிழ்நாட்டிற்கும் வரும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் எச்சரிக்கை!


இன்று (05.08.2019) சம்மு காசுமீர் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பை, முற்பகல் உள்துறை அமைச்சர் அமீத்சா மாநிலங்களவையில் வெளியிட்டார். அதில் சம்மு – காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமைகள் கொண்ட உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமல்ல, சம்மு – காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் ஒன்றிய அரசின் நேரடி ஆளுகைக்குட்பட்ட யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. அதிலும், லடாக் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது!
சம்மு காசுமீர் மக்களின் தேசிய இன உரிமைகளைப் பறித்து பா.ச.க. ஆட்சி நிகழ்த்தியுள்ள சனநாயகப் படுகொலையைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆங்கிலேய ஆட்சியின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது, சம்மு காசுமீர் மன்னராட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது. இந்திய விடுதலையின் போது, சம்மு காசுமீரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள பாக்கித்தான் கேட்டது; இந்தியா தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கேட்டது. பாக்கித்தானிலிருந்து படையெடுத்து வந்த ஒரு பிரிவினர் – காசுமீரின் ஒரு பகுதியைப் பிடித்து வைத்துக் கொண்டனர். அந்தப் பகுதிதான் இப்போது பாக்கித்தானில் உள்ள “ஆசாத் காசுமீர்”. காசுமீரைக் கைப்பற்ற இந்தியப் படைகளும், பாக்கித்தான் படைகளும் மோதிக் கொண்டன.
அந்த நேரத்தில், காசுமீர் மன்னர் அரிசிங்கிற்கும் இந்திய அரசுக்கும் இடையே இணைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. மன்னர் அரிசிங் அந்த ஒப்நத்ததில் 26.10.1947 இல் கையெழுத்திட்டார். இந்தியா சார்பில் அன்றைய வைசிராய் மவுண்ட் பேட்டன் 27.10.1947இல் கையெழுத்துப் போட்டார். அதில் தனி நாடாக இருந்த சம்மு காசுமீரின் தன்னுரிமைக்கு – தன்னாட்சிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று கூறப்பட்டது.
அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் சவகர்லால் நேரு, “சம்மு காசுமீரிலிருந்து இந்தியப் படையை விடுவித்துக் கொள்வோம். காசுமீர் யாருடன் இருப்பது என்பதை காசுமீர் மக்களே முடிவு செய்யட்டும்” என்று உறுதி கூறினார். இந்த உறுதிமொழியை அன்றைய பாக்கித்தான் தலைமையமைச்சர் லியாகத் அலிகானுக்கு நேரு 31.10.1947 அன்று தந்தியாகக் கொடுத்தார். பின்னர், 1953ஆம் ஆண்டு ஆகத்து 20 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேருவும், பாக்கித்தான் தலைமையமைச்சர் முகமது அலி போக்ராவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் காசுமீர் மக்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாக்கித்தானோடு இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா என்பது பற்றி சம்மு காசுமீரிலும், ஆசாத் காசுமீரிலும் “கருத்து வாக்கெடுப்பு” (Plebiscite) நடத்தப்படும் என்று உறுதியளித்தார்கள்.
இந்தப் பின்னணியிலிருந்து சம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 35A மற்றும் 370 உட்பிரிவுகள் கொடுத்த தனிச்சிறப்புரிமைகள் பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
சம்மு காசுமீர் சட்டப்பேரவை – அம்மாநிலத்தின் அரசமைப்பு அவையும் (அரசியல் நிர்ணய சபையும்) ஆகும். சம்மு காசுமீருக்கு இந்திய அரசுக் கொடியும் உண்டு, மாநில அரசின் தனிக்கொடியும் உண்டு. சம்மு காசுமீரில் வெளி மாநிலத்தவர் நிலம் போன்ற சொத்துகளை வாங்கத் தடை, வெளி மாநிலத்தவர் குடியுரிமை பெறத் தடை உள்ளிட்ட சிறப்புரிமைகள் இருக்கின்றன.
இவற்றைவிடக் கூடுதல் உரிமைகள் சம்மு காசுமீருக்கு ஏற்கெனவே இருந்தன. 1952இல் சம்மு காசுமீர் முதலமைச்சர் தலைமையமைச்சர் (பிரதமர்) என்று அழைக்கப்பட்டார். அங்கு ஆளுநர் பதவி இல்லை!
இவற்றையும் இன்னபிற காசுமீர் அதிகாரங்களையும் காங்கிரசு ஆட்சி பறித்துவிட்டது. இப்போது, இதர இந்திய மாநில அரசுக்குள்ள மிகக்குறைந்த அதிகாரங்களையும் பா.ச.க அரசு பறித்துவிட்டது.
சம்மு காசுமீரை இரண்டு மாநிலங்களாக்கி - யூனியன் பிரதேசமாக மாற்றியதை இப்போது நாம் கண்டிக்கிறோம். இனி, தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களையும் இதேபோல் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றும் முயற்சியின் முன்னோட்டம் தான் சம்மு காசுமீர் பிரிவினையும் உரிமைப்பறிப்பும்!
சம்மு காசுமீரில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் சனநாயகக் கட்சி போன்றவை தங்களின் பதவி வெறிக்காக காங்கிரசு, பா.ச.க. கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி சேர்ந்து இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. இன்னொருபக்கம், மக்களுக்கு வெளியே வெடிகுண்டு விடுதலைப் போராளிகள் நடத்தும் தீவிரவாதச் செயல்கள், மக்களின் மீதான அரசின் அடக்குமுறையை தீவிரப்படுத்தத்தான் பயன்படுகின்றன.
காசுமீரின் அவ்விரு கட்சிகளைப் போன்றவைதான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். காசுமீருக்கு ஏற்பட்டது போன்ற ஆபத்துகள் தமிழ்நாட்டிற்கு வந்தால் இவ்விரு கழகங்களாலோ, இவைபோல் முதலமைச்சர் – அமைச்சர் அதிகாரத்துக்காக மூச்சை வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளாலோ தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்க முடியாது!
பதவி ஆசையற்ற இலட்சியத் தமிழ்த்தேசியத்தின்பால் இலட்சோப இலட்சம் வெகுமக்கள் திரண்டு அறப்போராட்டம் - சனநாயகப் போராட்டம் நடத்தும் ஆற்றல் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டு உரிமைகளை காக்க முடியும் என்ற படிப்பிணையைத் தமிழர்கள் பெற வேண்டும்.

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்