<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்" -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Monday, January 30, 2017

======================================
தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
======================================

தைப்புரட்சி என்று போற்றப்படும் தமிழர் புரட்சி வழங்கியுள்ள பாடங்கள்:

1. இக்கால இளைஞர்களும் - மாணவர்களும் - ஆண்களும் பெண்களும் - சமூகச் சிந்தனை இன்றி நுகர்வு வாழ்வில் தோய்ந்து உதிரிகளாக இருக்கிறார்கள் என்ற வசையைத் தைப்புரட்சி புரட்டிப் போட்டு விட்டது. 

சமூகப் பொறுப்பு, தமிழினப் பொறுப்பு ஆகிய வற்றில் பெரியவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு இளைஞர்கள் இலட்சோப இலட்சமாய்த் தமிழ் நாடெங்கும் களத்தில் இறங்கி விட்டார்கள்! அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர்! எல்லாம் தெரிந்தவர்களே!

2. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள் ளோம்; ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தன்னலப் பூதங்களே தவிர, தமிழர்களுக்கான தற்காப்புத் தலைமைகள் அல்ல என்பதைத் தைப்புரட்சி உணர்த்தி விட்டது. 

அவற்றின் தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சுமந்து கொண்டிருக்கும் புகழ்ச்சிப் பட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை விடவும் பொருத்தமற்றவை என்பதைக் காட்டி விட்டது! 

3. இந்தியன், திராவிடன் என்ற போலி இனப் பெயர்களைத் தைப்புரட்சிப் புயல், வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசி விட்டது. 

“தமிழன்டா!” என்ற முத்திரை முழக்கத்தைத் தைப்புரட்சி நமது பதாகைகளுக்கு வழங்கியுள்ளது. 

“தமிழன்டா” முழக்கத்தில், ஆண்களும் பெண்களும் அடக்கம்; அனைத்து மதங்களும் சாதிகளும் அடக்கம்!

4. இந்தியத் தேசியவாதக் கட்சிகள் - தமிழ் நாட்டில் வெகுமக்கள் கட்சிகளாக - இனி ஒரு பொழுதும் எழ மாட்டா! இந்தியத்தேசியவாதிகள் பெயருக்குக் கட்சி நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற வரலாற்றுப் பாதையை வரையறுத்து விட்டது. 

5. பெரும் பெரும் நாளிதழ்கள் வார ஏடுகள், பெரும் பெரும் தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களைவிட வலிமை மிக்க ஊடகம் ஒவ்வொரு தமிழன் - தமிழச்சி கையிலும் பையிலும் இருக்கின்றது, அது சமூக வலைத்தளம் என்று காட்டிவிட்டது! 

அவற்றின் வழியாக நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள், அழைப்புகள் ஆகியவற்றால்தான் தைப்புரட்சி ஏற்பட்டது.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று 
உடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்தநாளோ?

என்று ஏங்கிக் கேட்டார் பாவேந்தர். அந்நாள் இந்நாள் என்று மெய்ப்பித்தார் அவர் பேரப்பிளைகள்! 

எச்சரிக்கைகள்
==============
1. இசவாதிகள் 
------------------------
தமிழர் எழுச்சியைத் திசை திருப்பிட “இசவாதிகள்” (Isamists) கடுமையாக முயல்வார்கள். “இசவாதிகள்” என்பவர் யார்? வெளிநாட்டில், வடநாட்டில், தமிழ்நாட்டில் முந்தியத் தலைமுறையினர் அவரவர் வாழ்ந்த காலத்தில், அவரவர் எடுத்துக் கொண்ட சிக்கலுக்கேற்ப தயாரித்த சிந்தனைத் தொகுப்புகளை அப்படியே இப்போதும் ஏந்திக் கொண்டு, அந்த சிந்தனைகளுக்கேற்ப தமிழ்ச் சமூகத்தை மாற்றிட முயன்று தோற்போர் ஆவர்!

நோயாளியை ஆய்வு செய்து அவருக்கு வந்திருக்கும் தனித்துவமான நோயை அறிந்து அதற்கான மருத்துவ முறையைக் கையாண்டு, மருத்துவம் பார்ப்பவர் சிறந்த மருத்துவர்! என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி! தமிழ்நாட்டில் மந்திரவாத இசங்களுக்குப் பஞ்சமில்லை! 

ஒட்டுமொத்தத் தமிழர்களின் எழுச்சியைக் கூறுபோட்டுப் பங்கிட்டுக் கொள்ள இசவாதிகள் ஓடி வருவார்கள்! 

2. ஆரிய இந்துத்துவா வாதிகள்
--------------------------------------------------
ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள் - தமிழர் அடையாளங்களை இந்துத்துவா அடையாளங்களாகத் திரித்துக் காட்டித் திருதராட்டிர ஆலிங்கனம் செய்து தமிழர் எழுச்சியைச் சீர்குலைக்க வருவார்கள். எதிரி மீது பாசம் காட்டுவது போல் பாவனை செய்து கட்டித் தழுவி இறுக்கிக் கொன்று விடுவதுதான் திருதராட்டிர ஆலிங்கனம்!

ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள், புராணக் கதைகளற்ற தமிழர் பொங்கல் விழாவை, கருங்கிராந்தி நோய் என்பது போல் சங்கராந்தி என்பார்கள்! தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள்! ஆனால் ஆரியவர்த்த மாநிலங்களான உ.பி., ம.பி., பீகார் போன்றவற்றில் தமிழரின் பொங்கல் விழாவைப் போல் போகி தொடங்கி ஏறுதழுவல் வரை நான்கு நாள் நிகழ்வுகள் இல்லை.

3. இந்திய ஏகாதிபத்திய அரசு
-----------------------------------------------
இந்திய ஏகாதிபத்தியத்தின் நடுவண் அரசு தமிழர்களின் தைப்புரட்சி எழுச்சியைப் பழிவாங்கும் வெறியுடன் குறுகுறு என்று பார்த்துக் கொண்டுள்ளது. என்னென்ன வகைகளில் தமிழர்களை ஒடுக்கி, அடக்கி வைக்கலாம் என்று கருவிக் கொண்டுள்ளது. 

காலம் காலமாக நடந்துவந்த காளை விளை யாட்டான சல்லிக்கட்டை நடத்திட அனுமதி கோரி, தமிழ்நாடெங்கும் இந்தியாவில் எங்குமே காணாத அளவிற்கு, கோடிக்கணக்கான மக்கள் அங்கங்கே குவிந்து, ஆறு நாட்கள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தினார். மோடி அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டி யலிலிருந்து காளையை நீக்கியிருக்க வேண்டும். தானே முன்வந்து விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் - 1960-ஐ திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 

மாணவர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக செயல்பாட்டில் இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். தில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தபோதுகூட, தம்மால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் மோடி! 

தமிழினத்தின் மீதுள்ள நிரந்தரக் காழ்ப்புணர்ச்சி யால், பா.ச.க. நடுவண் ஆட்சி குறிப்பாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, “தமிழர்களின் ஞாயத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்குப் பணிந்து போவதுபோல் ஆகும்” என்று கருதி, தமிழ்நாடு அரசே சட்டத்திருத்தத்துடன் அவசரச்சட்டம் இயற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது. 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதைத் தட்டிப் பறித்தது மோடி அரசு! தொடர்ந்து இனப்பாகுபாடு பார்த்துதான் தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது. நம் பண்பாட்டு விழாவான ஏறுதழுவலை தடை செய்வதிலும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியா கொண்டுள்ளது. 

“தமிழ்நாட்டின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம். நடுவணரசின் உளவுத்துறை விவரங்களைத் திரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி கேட்டால், உடனடியாக துணை இராணுவப் படைகளை அனுப்பி வைப்போம்” என்று தில்லி உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இந்து ஆங்கில நாளோடு (24.01.2017) செய்தி வெளி யிட்டுள்ளது. 

4. இனப் பெயரில் போலிகள்
---------------------------------------------
தமிழினம், தமிழ்த்தேசியம் என்ற பெயரிலேயே பதவி வேட்டையாடும் போலிகள் புகுவார்கள்; புதிதாகவும் உருவாவார்கள்! 

5. தைப்புரட்சியைப் புகழ்ந்து அல்லது திறனாய்வு செய்து கட்டுரை எழுதுவோரில் பலர், கடைசியில் திராவிடவாதத்துக்கு ஆதரவாகவோ அல்லது இந்தியத் தேசியத்திற்கு ஆதரவாகவோ எழுதி முடிப்பர். இவ்வாறு தமிழின எழுச்சியை மடைமாற்றுவர். 

தைப்புரட்சியில் பங்கு கொண்ட - தைப்புரட்சியை ஆதரித்த தமிழர்கள் அனைவரும் இந்த எச்சரிக்கை களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அ.இ.அ.தி.மு.க. அரசு
====================
சென்னைக் கடற்கரை, மதுரை, கோவை, திருச்சி, அலங்காநல்லூர் மற்றும் தமிழ்நாடெங்கும் ஆறு நாட்கள் வரை மக்கள் திரள்7 அறப்போராட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதித்ததும், வன்முறை ஏவாமல் இருந்ததும் ஓர் அரசியல் உத்திதான்! 

ஆனால் அதற்கு முன், அவனியாபுரத்தில் 14.01.2017 அன்று அறவழியில் சாலை ஓரமாக இயக்குநர் வ. கவுதமன் தலைமையில் அமர்ந்து, சல்லிக்கட்டு தடை நீக்கிட முழக்கமிட்ட இளைஞர்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்திக் காயப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து, அவர்களைத் தளைப்படுத்தினார்கள். அதனால் அ.தி.மு.க. அரசுக்குப் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டது. 

இப்பின்னணியில் 17.1.2017 அன்று சென்னை மெரினா கடற்கரையில், வெள்ளம் போல் திரளத் தொடங்கிய தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசு கைவைக்கத் தயங்கியது. மாணவர்களும் இளைஞர் களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந் தெல்லாம் வந்து குவிந்தார்கள். 

தமிழ்நாட்டின் பிற பெரு நகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் அங்கங்கே கூடிப் பெருகியது. இரவு பகலாகக் கூட்டம் தொடர்ந்தது. 

சல்லிக்கட்டு உரிமையுடன், காவிரி உரிமை, உழவர் உரிமை, கச்சத்தீவு, பாலாறு, முல்லைப்பெரியாறு எனப் பல உரிமைகள் பேசினர். மீத்தேன் எதிர்ப்பு, கெயல் குழாய் எதிர்ப்பு, வியோ பால் புட்டி - பெப்சி - கோகோ கோலா பாட்டில்கள் உடைப்பு, பன்னாட்டு வேட்டை நிறுவனங்கள் எதிர்ப்பு, பீட்டா வெளியேற்றல் எனத் தமிழ்நாட்டின் முகாமையான வாழ்வியல் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இயற்கை வேளாண்மை, தமிழர் மரபு உணவு பற்றியெல்லாம் உரையாடினர்.

கட்டுக்கோப்பாகவும், தன்னொழுங்குடனும், கண்ணியத்துடனும், ஆண்களும் பெண்களும், மாண வர்களும் இலட்சக்கணக்கில் ஒரே இடத்தில் இரவு பகலாக இருந்து முழக்கமிட்டனர். சுற்றுப்புற தூய்மை பேணினர். 

தாராள மனம் படைத்த தமிழ்ப் பெருமக்கள் உணவு, தின்பண்டம், கழிவறை வசதி எனப் பல உதவிகள் செய்தனர். பொங்குமாங்கடலென மக்கள் குவிந்தனர். 

எனவே வன்முறையை ஏவினால், 1965 மொழிப் போரில் காங்கிரசு காவல்துறையையும் இராணுவத் தையும் ஏவி இரத்தக்குளியல் நடத்தியதுபோல் ஆகிவிடும்; தமிழ்நாட்டில் காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வர அதுவே தொடக்கமாக இருந்தது என்ற வரலாற்றை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, தமிழர் உரிமைக்கான அறப்போராட்டம் நடத்திய மக்களுக்கு உதவியாக இருந்தது.

சல்லிக்கட்டு உரிமை வழங்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு! அந்தச் சட்ட நகலை வெளியிடாமல் மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு, மக்கள் வெள்ளத்தைக் கலைந்து போகச் சொல்லி 23.01.2017 அன்று விடியற்காலையிலிருந்து நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர். 

சென்னைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் கொண்டு வந்து இறக்கினர்; சரக்குந்துகளில் தடிகளையும் கொண்டு வந்தனர். 

பிடித்து இழுத்தும், தள்ளியும், தூக்கி எறிந்தும், அடித்தும், விரட்டியும் மக்களைக் கலைத்தனர். பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள், மாணவிகள் என எல்லாரும் அடிக்கப்பட்டனர். காவல்துறையினரே, தானி வண்டிக்குத் தீ வைத்தனர்; காவல் நிலையத் திற்கும் தீ வைக்கப்பட்டது. 

சல்லிக்கட்டு உரிமையை மீட்டிடும் சட்டம் கொண்டு வந்த பின் தடியடி நடத்தியது ஏன்? அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன்? இதுதான் அரசின் வன்மம்! காவல்துறையின் பொது உளவியல் இதுதான்! 

காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க வில்லை. தமிழ்நாடு அரசு போட்ட சட்டத்தை எதிர்த்து, எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் - தடைப் பட்டியலில் காளை தொடர்வது ஒரு வினாக் குறியே! 

இந்த ஒன்றைத் தவிர, மற்றபடி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்கதே! 

இவ்வாறு இருக்கும்போது, பொறுமையாக இந்த உண்மைகளை விளக்கி, கூட்டத்தைப் பதற்றமின்றி விடை பெறச் செய்திருக்கலாம். 

வரலாறு காணாத அளவிற்கு உலகமே வியக்கும் வகையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சியை அமைதியாகக் கலைய விட்டால், மீண்டும் போராட அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதி, உடலில் மட்டுமின்றி நெஞ்சத்திலும் காயத்தோடு அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கருதியிருக்கலாம். 

அடுத்து வரும் காலங்களில், சனநாயகப் போராட் டங்களை வழமைபோல் அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யலாம். அதேவேளை தமிழர்களை அண்டிப் பிழைக்கும் நுகர்வோராக மாற்றுவதற்கு மேலும் சில இலவசங்களையும் வழங்கலாம். இவ்வாறான இரு வழிகளில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் எழுச்சிக்குப் பிந்திய செயல்முறையை வகுத்துக் கொள்ளும். 

இவ்வாறான அரசின் போக்கை எதிர் கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை. 

தி.மு.க.
========
தைப்புரட்சியாக விளங்கிய தமிழர் எழுச்சியையும், அதில் பங்கேற்றோர் தாக்கப்பட்டதையும் பயன்படுத்தி, மக்கள் செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் உத்திதான் தி.மு.க.வுக்கு இருக்கும். உண்மையான தமிழின உரிமை மீட்பு நடவடிக்கைகளில், தி.மு.க. இறங்குவதற்கு வாய்ப்பில்லை. திருந்துவதற்கும் வாய்ப்பில்லை. அக்கழகத்தின் ஆட்சியில்தான் பல்வேறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. 

சிங்கள அரசு இந்தியாவின் துணையோடு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் நடத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த காலத்தில், அதைக் கண்டித்து 2008 - 2009 ஆண்டுகளில் மேடையில் பேசியவர்கள் மீது “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” (N.S.A.), அரசுக் கவிழ்ப்புப் பரப்புரை (Sedition – 124A) போன்ற சட்டங்களின் கீழ் வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி. 

போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றி வளைத்து, அடித்து நொறுக்கி எலும்புகளை உடைத்துப் படுகாயப்படுத்தியது காவல்துறை (17.02.2009). ஒரு நீதிபதி எலும்பும் முறிக்கப்பட்டது. 

அரசு அமைத்த விசாரணை ஆணையம், குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அறிக்கை கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 

இது அண்மைக்கால தி.மு.க. அரசியலுக்கான ஒரு சான்று! அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம்! ஏராளம்!

காங்கிரசு கூட்டணி அரசில் தி.மு.க. அமைச்சர் பதவி வகித்தபோதுதான், “காளை” தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது (2011). 

எனவே, அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இனத்துரோக அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்!

மாணவர்களின் வரலாற்று
முன்னெடுப்பும் மக்களின் பங்களிப்பும்
===================================

ஆதிக்க இந்தியை விரட்டிட 1965-இல் மாணவர்கள் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போருக்குப் பின், ஈழத்தமிழர் விடுதலைப்போர் உள்ளிட்ட தமிழர் உரிமைகளுக்கு பலப் போராட் டங்கள் தமிழ் மாணவர்கள் நடத்தியிருந்தாலும், “தைப்புரட்சி” என்ற தமிழர் புரட்சியை முன்னெடுத்த மாபெரும் வரலாற்றுப் பாத்திரம் இன்றையத் தமிழ் மாணவர்களுக்கே இருக்கிறது. 

அடையாளப் போராட்டம் நடத்தாமல், விளம்பரப் போராட்டம் நடத்தாமல், பிரமுகத்தனம் காட்டாமல், இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய மாணவர்களின் நேர்மையும் ஒழுக்கமும் தமிழ் மக்களை ஈர்த்தது. மாணவர் போராட்டமாக முகிழ்த்தது, பெற்றோரும் பங்கேற்ற மாபெரும் தமிழர் வெள்ளமாக மலர்ந்தது. 

மக்களின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்களுக்கும், ஆதரவுச் செயல்பாட்டு வடிவங்களுக்கும் அளவில்லை என்பதை இப்போராட்டத்தில் மாணவர்களும் மக்களும் காட்டினார்கள். 

தலைமை இல்லாப் போராட்டமா?
===============================
இம்மாபெரும் தைப்புரட்சியைத் தலைமை இல்லாப் போராட்டம் என்று ஊடகத்தார் குறிப்பிட்டனர். வெளித்தோற்றத்திற்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால் தான் பெற்ற பிள்ளைகளின் போராட்டத் திற்குத் தமிழன்னைதான் தலைமை தாங்கினாள்; அதாவது தமிழ்மொழி வழி பெற்ற தமிழின உணர்வுதான் தலைமை தாங்கியது. 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் ஆசான்கள், சான்றோர்கள், வீரர்கள், மாமன்னர்கள் நடத்திய வாழ்வும் வழங்கிய சிந்தனைகளும் வாழையடி வாழையாய் தமிழர்களுக்கு இன உணர்ச்சியையும், அறச்சிந்தனைகளையும், போர்க் குணத்தையும் வழங்கி வருகின்றன. வற்றாத அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே இன்றைய தைப்புரட்சிக்குத் தலைமை தாங்கியது! 

தைப்புரட்சியில் எழுந்த தமிழர் எழுச்சி காட்டாற்று வெள்ளமாய்க் காணாமல் போய்விடும் என்று சிலர் கணிக்கிறார்கள். அப்படிக் காணாமல் போய்விட வேண்டும் என்று தமிழினப் பகைவர்களும் வஞ்சகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

ஒரு சமூக நெருக்கடியில் எழுந்த மக்கள் கொந்தளிப்பு அலை சாதாரண காலத்திலும் அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்ப்பது கற்பனைவாதம்! அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம்! அல்லது எதிரிகளின் எதிர்பார்ப்பு! 

தைப்புரட்சி இளைஞர்களே, மாணவர்களே! உங்களைச் சுற்றி வளைக்கப் பலர் வட்டமிடுவார்கள்! நீங்கள் உங்கள் சொந்த அறிவாற்றல் கொண்டு தேர்வு செய்யுங்கள்! 

நீங்கள் யாரையோ பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டவும் பொறுப்புடைய வர்கள்; உரிமை உடையவர்கள்! 

இசவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! எந்த இசத்திலும் உள்ள முற்போக்கான கருத்துகளை, சமகாலத்திற்குத் தேவையான கருத்துகளை தமிழர் உளவியல் ஏற்கும்; ஆனால் அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளாது. 

தத்துவம் வழிகாட்டவும் செய்யும், வழி மறிக்கவும் செய்யும்!

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, சிறு சிறு தேசிய இனங்களின் அடையாளங்களை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது. பெருந்தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட சிறு தேசிய இனங்கள் விடுதலை பெற உந்துவிசை அளித்து வருகிறது தகவல் தொழில்நுட்பப் புரட்சி!

இரசியப் பேராதிக்கக்திடமிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்தன. பிரித்தானியாவில் ஆங்கிலேயப் பேராதிக்கத்திலிருந்து பிரிந்திட அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர், எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தன. கனடாவிலிருந்து கியூபெக், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா, பாஸ்க், சீனாவிலிருந்து திபெத், உய்கூர் ஆகிய தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன. 

நாம் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி பேர் இருக்கிறோம் இந்தியாவின் இதர மாநிலங்களில் இரண்டு கோடிப் பேர் இருக்கலாம். உலகில் மொத்தம் 12 கோடித் தமிழர்கள் மக்கள் தொகை வாழ்கிறோம். பிரித்தானியா, பிரான்சு தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்!

உலகத்தின் இன்றையப் போக்கு தேசிய இன இறையாண்மையை உறுதிப்படுத்துவதுதான். உலகமயம் என்ற பெயரில் வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எல்லை கட்டி வெளியே தள்ள தேசிய இனத் தாயக உரிமையும், தாயக வரலாற்று - பண்பாட்டு உளவியல் உணர்ச்சியும் மிகமிக இன்றியமையாதவை!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பன்னாட்டு வேட்டை நிறுவனங்களை வெளியேற்றும்; தடுக்கும்! தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும்! வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மக்களாகிய தமிழர்களை தமிழ்நாட்டிலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்றி வருகிறார்கள். வெளியாரை வெளியேற்றாவிட்டால் தமிழர் வாழ்வுரிமை பாதிக்கப்படும். 

தமிழ்த்தேசிய இறையாண்மையே, ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கும்! 

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள், ஏறுதழுவுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டுரிமைகளைக் காக்கும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, கச்சத்தீவு, கடல் உரிமை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி உரிமைகளை மீட்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பெப்சி - கோக்கோ கோலா, வியோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களை விரட்டும்; உள்நாட்டு மரபு உற்பத்திகளை வளர்க்கும்! மண்ணுக்கேற்ற புதுமைகளைப் படைக்கும்!

தமிழர் அறம் மனித சமத்துவத்தை நிலைநாட்டும்!

தைப்புரட்சியில் தமிழர்களாக ஒருங்கிணைந்த இந்து, முசுலிம், கிறித்துவ மக்கள் ஒற்றுமையைத் தமிழ்த்தேசியமே வளர்க்கும்; சாதியைப் பின்னுக்குத் தள்ளி தமிழராய் ஒருங்கிணைந்த இன உணர்ச்சியைப் பெருக்கும்!

ஆணும் பெண்ணும் சமமாய்க் களம் கண்ட தைப்புரட்சியில் சமத்துவத்தைத் தமிழ்த்தேசியமே தொடரும்; தலைவன் - தலைவி என்ற சங்ககால சமத்துவத்தை மேலும் மேன்மைப்படுத்தும்!

இந்தியன், திராவிடன் என்ற அயல் இன ஆதிக்கப் புனைவுகளைப் புறந்தள்ளுங்கள்! தமிழராய்த் தலை நிமிருங்கள்!

“தமிழன்டா!”

Labels: ,

“மீன் சந்தையைக் கொளுத்திய காவல்துறையினர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” நடுக்குப்பம் மீனவர் சந்தையைப் பார்வையிட்ட தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

Friday, January 27, 2017
==============================================
“மீன் சந்தையைக் கொளுத்திய காவல்துறையினர்
கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்”
==============================================
நடுக்குப்பம் மீனவர் சந்தையைப் பார்வையிட்ட
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
==============================================

கடந்த 23.01.2017 அன்று, சென்னை கடற்கரையில் நடைபெற்று வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தைக் கலைக்க, வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஈடுபட்ட தமிழ்நாடு காவல்துறையினர், நடுக்குப்பம் மீனவர் சந்தையை எபாஸ்பரஸ் தூவிக் கொளுததிச் சாம்பலாக்கியும், தானி – மகிழுந்து உள்ளிட்ட ஊர்திகளை எரித்தும், அப்பகுதி மீனவர்களைக் கொடுமையாகத் தாக்கியும் வெறியாட்டம் போட்டுள்ளனர்.
இன்று (27.01.2017) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், காவல்துறையினரால் எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவச்சந்தையை நேரில் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். காவல்துறையினரின் வெறியாட்டத்தை மக்கள் எடுத்துக் கூறினர்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழர்களின் ஏறுதழுவல் உரிமைக்காக, சென்னை கடற்கரையில் அறவழியில் போராடி வந்த மாணவர்களையும் இளைஞர்களையும் கடந்த 23.01.2017 அன்று, தமிழ்நாடு காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர்.
தடியடியில் பதறி ஓடிவந்த மாணவர்களும் மாணவியரும், தங்கள் வீடுகளில் இளைப்பாற இடம் கொடுத்த ஒரே காரணத்திற்காக, நடுக்குப்பம் பகுதி மீனவர்களையும், இப்பகுதி மக்களையும் காவல்துறையினர் மிகக்கொடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள நடுக்குப்பம் மீனவர் சந்தையை, காவல்துறையினரே பாஸ்பரஸ் பொடி தூவி தீக்கிரையாக்கியுள்ளனர். தானிக்களை காவல்துறையினரே கொளுத்தியது குறித்து காணொளிக் காட்சிகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. கார்களையும் கொளுத்தியுள்ளனர். எரிந்து கிடக்கின்றன அவ்வண்டிகள்!
இவையெல்லாம் வெளிவந்தும்கூட, காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையினரின் இந்த வன்முறைச் செயல்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள் உடனடியாகக் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் சந்தையை எரித்ததால், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 50,000 நட்ட ஈடு வழங்க வேண்டும்.
அறவழிப் போராட்டம் நடத்த கடற்கரையையும் மீனவர் குப்பங்களையும் வன்முறைக் களங்களாக மாற்றிய காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
அத்துடன் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ள இந்த மீன் சந்தையை, மீண்டும் கட்டியெழுப்பிட நாங்கள் துணை நிற்போம் என அம்மக்களுக்கு நம்பிக்கை அளித்தோம்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தென்சென்னை பேரியக்கச் செயலாளர் தோழர் மு. கவியரசன், தோழர்கள் வி. கோவேந்தன், பிரகாசுபாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

Labels:

"சல்லிக்கட்டு அறப்போராட்டத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்" -- தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

Tuesday, January 24, 2017

=====================================
சல்லிக்கட்டு அறப்போராட்டத்தினர் மீது
தாக்குதல் நடத்திய காவல்துறையினரை
இடைநீக்கம் செய்ய வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
=====================================
சல்லிக்கட்டு எனப்படும் தமிழர் ஏறுதழுவலுக்கு நீதித்துறையும் இந்திய அரசும் விதித்த தடையை நீக்கும் போராட்டத்தில் ஒரு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இப்போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சோபலட்சம் தமிழின மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் இன உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

“விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) அவசரச்சட்டம் – 2017” என்ற புதிய சட்டம், நடுவண் அரசின் “விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டம் – 1960”-இல் ஏழு திருத்தங்கள் செய்துள்ளது. 

இவற்றுள் சல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கான மிக முகாமையான திருத்தங்கள் பின் வருமாறு உள்ளன. 

விலங்குகள் எந்தெந்த வகையில் துன்புறுத்தப்படுகின்றன என்றும், எந்தெந்த செயல்கள் துன்புறுத்தல்கள் இல்லை என்றும் பட்டியலிடும் பிரிவு 11 ஆகும். இதில் சில செயல்கள் “துன்புறுத்தல் இல்லை” என்று கூறும் உட்பிரிவு 3இல் ( a )-வில், கால்நடைகளின் கொம்புகளை அழித்தல், கால்நடைகளை மலடாக்குதல், அவற்றின் மீது சூட்டுக் கோலால் முத்திரை போடுதல், மற்றும் அவற்றுக்கு மூக்கணாங்கயிறு போடுதல் ஆகியவை அடங்கும் என்று கூறுகிறது. 

இதில், இப்போது பிரிவு 11 – (3) இல் புதிதாக ( f ) என்ற பிரிவைச் சேர்த்துள்ளார்கள். “மரபு வழிப்பட்ட பண்பாடு மற்றும் உள்நாட்டுக் காளை இனம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் சல்லிக்கட்டு நடத்துவது துன்புறுத்தல் ஆகாது” என்று அப்பிரிவு கூறுகிறது.

ஏற்கெனவே உள்ள பிரிவு 22 (ii), “காட்சிப்படுத்திடத் தடை செய்துள்ள விலங்குகள் பட்டியலை நடுவணரசு அரசிதழில் வெளியிட வேண்டும். அவ்வாறான பட்டியலில் உள்ள விலங்கைக் காட்சிப்படுத்தினால் குற்றம்” என்று கூறுகிறது. அந்த விதி அப்படியே இருக்கிறது. 

அதன் கீழே, காப்பு விதியாக (Proviso) பின்வரும் பத்தியைச் சேர்த்துள்ளார்கள். “பிரிவு 22இல், மேலே யாது கூறப்பட்டிருந்தாலும், சல்லிக்கட்டு நடத்துவதற்கு அது பொருந்தாது”.

இதன் பொருள் சல்லிக்கட்டு நடத்தலாம் என்பது. ஆனால், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை அப்படியே இருப்பதால், அதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் ஒருவேளை தமிழ்நாடு சட்டத்திற்கு தடை விதித்தாலும் விதிக்கலாம். 

ஏனெனில், நீதிபதிகள் அவர்களுடைய விருப்பு – வெறுப்பு, அப்போது நிலவும் சமூக மற்றும் அரசியல் சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள். 

எடுத்துக்காட்டாக, ரேக்ளா போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்ட முனியசாமித் தேவர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், அப்போது நீதிபதியாக இருந்த பானுமதி அவர்கள், ரேக்ளாவுக்குத் தடை விதித்ததுடன், வழக்கில் சேர்க்கப்படாத சல்லிக்கட்டு விழாவுக்கும் தடை விதித்து தீர்ப்பு வழங்கினார். 2006இல் அவர் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தொடக்கி வைத்த சல்லிக்கட்டுத் தடைதான், இன்று வரை தமிழர்களை ஆட்டி அலைக்கழிக்கிறது, துன்புறுத்துகிறது. 

மேற்கொண்டு இத்திருத்தத்தில் பிரிவு 27இல், ஏற்கெனவே இராணுவப் பயன்பாட்டுக்கும் உயிரியல் பூங்காவுக்கும் கால்நடைகளைப் பயன்படுத்துவது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது. அதில் இப்பொழுது, “சல்லிக்கட்டுக்குக் காளைகளைப் பயன்படுத்துவது குற்றமாகாது” என்ற ( c ) பிரிவைச் சேர்த்துள்ளார்கள். 

ஏற்கெனவே உள்ள பிரிவு 28இல், மதச்சார்புள்ள நிகழ்வுகளுக்காக கால்நடைகளைக் கொல்வது குற்றமாகாது என்று கூறியுள்ளார்கள். இப்பொழுது, “சல்லிக்கட்டு நடத்துவது குற்றமாகாது” என்று புதிதாக ( A ) பிரிவை இணைத்துள்ளார்கள். 

இவையெல்லாம் இருந்தும், காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிட இப்போதும் பா.ச.க. அரசு மறுத்து விட்டதால், அத்தடையானது – தமிழர் பண்பாட்டின் தலை மீது தொங்கும் கத்தியாகவே உள்ளது. 

உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாடெங்கும் கோடிக்கணக்கான மக்கள் அறவழிப் போராட்டம் ஏழு நாள் தொடர்ந்து நடத்தியும் இந்திய அரசு, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மறுத்து விட்டது. அதே வேளை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு வழியாக சட்டத்திருத்தம் செய்யும் பாதையைக் காட்டியுள்ளது. 

தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்குவது வடநாட்டு ஆரிய ஆதிக்க அரசியலுக்கு இழிவு என்று கருதி, தான் செய்ய வேண்டியதை தமிழ்நாடு அரசைச் செய்யுமாறு நரேந்திர மோடி அரசு கூறியுள்ளது. 

தமிழ்நாடு அரசுக்கானக் கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசு, இத்துடன் சல்லிக்கட்டு உரிமைச் சிக்கலைக் கை கழுவி விடாமல் இந்திய அரசை வலியுறுத்தி தடைப்பட்டியலிலிருந்து காளையை நீக்கச் செய்ய வேண்டும். 

இப்பொழுது இயற்றியுள்ள சல்லிக்கட்டு உரிமைச் சட்டத்தை நீதிமன்றம் நீக்கி விடாமலிருக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இதைச் சேர்க்க தமிழ்நாடு அரசு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். 

அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது, நேற்று (24.01.2017) சென்னை கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம், கோவை, ஈரோடு முதலிய இடங்களில் காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி, படுகாயப்படுத்திய தமிழ்நாடு அரசின் தமிழர் விரோதச் செயலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும், இத்தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். 

காவல்துறையினரே தீ வைப்பில் ஈடுபட்ட நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. அக்காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

முழு உண்மை அறிந்து தவறு செய்தோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். 

இதுவரை சல்லிக்கட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும். 

பா.ச.க. ஆட்சிக்கு வந்த பிறகு தனது இந்துத்துவாவுக்கு முரணான தன்னார்வ அமைப்புகள் (என்.ஜி.ஓ.க்கள்) என்று கருதிய ஏராளமான அமைப்புகளைத் தடை செய்துள்ளது. எட்டுக் கோடி தமிழர்களின் வரலாற்றுக்கும், பண்பாட்டுக்கும் வாழ்வியலுக்கும் எதிராகச் செயல்படும் பன்னாட்டுக் குற்றக் கும்பலான பீட்டாவைத் தடை செய்ய மோடி அரசு முன் வராதது ஏன் என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்புகிறார்கள். 

பன்னாட்டுக் குற்றக் கும்பலான பீட்டாவை இந்தியாவிலிருந்து வெளியேற்றிட இந்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பீட்டா அலுவலகம் தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக மூட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

" அவசரச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அமைச்சர் மேனகா காந்தி வழக்கு: நரேந்திர மோடி அரசின் நயவஞ்சகம் புரிகிறதா? " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Monday, January 23, 2017

=============================================
அவசரச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்
நடுவண் அமைச்சர் மேனகா காந்தி வழக்கு:
=============================================
நரேந்திர மோடி அரசின் நயவஞ்சகம் புரிகிறதா?
=============================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
=============================================

தமிழர் பண்பாட்டுரிமையான ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு, இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி, அறவழியில் போராடி வரும் மாணவர்களையும் இளைஞர்களையும் இன்று (23.01.2017) காலை, காவல்துறையை ஏவி அ.இ.அ.தி.மு.க. அரசு கலைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைக்கிற அரசு, அடுத்து அந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமோ என்ற அச்சம், தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே பரவி மனதை வாட்டுகிறது. 

இன்று காலை வரை அவரசச் சட்டத்தின் முழு நகலை வெளியிடாமல், அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று காவல்துறை மூலம் கட்டாயப்படுத்துவது என்ன நீதி? என்ன சனநாயகம்? அவர்கள் அவசரச்சட்டம் குறித்து கருத்துப் பறிமாறிக் கொண்டு, முடிவு சொல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார்கள். அதைக்கூட அரசு தரவில்லை. 

நேற்றிலிருந்து, காளைத் திறந்துவிடும்போது, கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் - பரப்புரை செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, சல்லிக்கட்டை தடை செய்த “விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் – 1960”இல் உள்ள பிரிவு 11 இல் 3, பிரிவு 22, பிரிவு 27 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்கள் என்ன என்பதை வெளியிட்டிருக்க வேண்டும். 

இப்பொழுதுதான் (காலை 11 மணி) அவசரச்சட்டத்தின் நகல் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கிறது. இப்பொழுது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், காளையைக் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து, இந்திய அரசும் நீக்கவில்லை. தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டமும் நீக்கவில்லை. தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போனால், அதில் அவசரச்சட்டம் நிற்குமா என்ற கேள்விக்குறி இதனால் எழுகிறது. 

நடுவண் அரசில் அமைச்சராக உள்ள பா.ச.க.வைச் சேர்ந்த மேனகா காந்தி, தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, இப்பொழுதே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நரேந்திர மோடியின் ஒப்புதல் இல்லாமல், அவரது அமைச்சரவையில் உள்ள ஒருவர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்ததாகச் சொல்லும் ஒரு அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்குப் போட முடியுமா? பா.ச.க. தலைமையின் நயவஞ்சகத்தின் மற்றுமொரு வெளிப்பாடு இது!

எனவே, தமிழ்நாடு அரசு, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிட இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதை செயல்படுத்திக் காட்டினால்தான், இந்த அவசரச் சட்டத்திற்குப் பாதுகாப்பு. 

அதேபோல், சல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகக் கடுமையான ஒழுங்கு விதிகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த விதிகளை நூற்றுக்கு நூறு கடைபிடித்தால், சல்லிக்கட்டே நடத்த முடியாது. இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு அரசின் இந்த அவசரச் சட்டத்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டாவை வெளியேற்ற இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். 

நேற்றை (22.01.2017), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில், அவசரச்சட்டத்தின் முழு நகலை வெளியிடுங்கள் என்று நான் கோரியிருந்தேன். அத்துடன், காவல்துறையை வைத்து கூட்டத்தைக் கலைக்காதீர்கள் என்றும் தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இன்று விடியற்காலையிலிருந்து, சென்னை கடற்கரை மட்டுமின்றி, தமிழ்நாடெங்கும் அறவழியில் முழக்கம் எழுப்பிப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை, காவல்துறையை ஏவிக் கலைப்பதையும் தமிழ் இளைஞர்களைத் தாக்குவதையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. தமிழினப் பகையோடு செயல்படும், இந்திய ஏகாதிபத்திய அரசுக்கு கங்காணி வேலை பார்த்து, தமிழர்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கக்கூடாது – தமிழர்களைத் தாக்கக்கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். 

அடக்குமுறையை இத்துடன் நிறுத்தி, அவசரச்சட்டத்தின் முழு நகலை போராடும் மக்களிடம் கொடுத்து, அதனை அவர்கள் விவாதிக்க அவகாசம் அளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

" சல்லிக்கட்டு அவசரச் சட்டத்தை முழுமையாக வெளியிடாதது ஏன் ? காவல்துறையின் மூலம் போராடும் தமிழர்களைக் கலைக்க முயலாதீர் " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை .

Sunday, January 22, 2017
=================================
சல்லிக்கட்டு அவசரச் சட்டத்தை 
முழுமையாக வெளியிடாதது ஏன் ?
காவல்துறையின் மூலம் போராடும் 
தமிழர்களைக் கலைக்க முயலாதீர்
=================================
தமிழ்த் தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை .
=================================

தடைநீக்கி, சல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்துவிட்டார், அவசரச் சட்டம் இதோ வந்துவிட்டது என்று நேற்று (21.01.2017) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்ச் செல்வம் அவர்கள் அறிவித்தார். ஆனால் அந்த அவசரச் சட்டத்தின் நகலை எங்கேயும் வெளியிடவில்லை. அதன் எழுத்துவடிவம் ( Text) திங்கள் கிழமைதான் வெளியிடப்படும் என்று தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. திங்கள் கிழமை எழுத்து வடிவில் வருவதாகச் சொல்லப்படும் அவசரச்சட்டத்தைச் சொல்லி வெள்ளிக் கிழமையே “ வெற்றி வெற்றி” என்று முழங்குவது சரியா?
எழுதப்பட்ட வடிவத்தைக்கூட காட்டாமல், அவசரச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி, இலட்சோபலட்சம் களப் போராளிகளை வலியுறுத்துவது ஞாயமா? அறமா? இப்போக்கு முதலமைச்சர் மீதான நம்பகத் தன்மையை சீர்குலைக்காதா?
கடும் வெயில், கடும் பனி, கொட்டும் மழை, எல்லாவற்றையும் தாங்கி 6 நாட்களாகப் போராடும் இலட்சோப இலட்சம் தமிழ்மக்கள், குறிப்பாக இளம் பெண்கள், ஆண்கள், மாணவர்கள் முதலமைச்சரின் முழுமையற்ற அறிவிப்பை ஏற்காமல் தமிழர் உரிமைப் போராட்டத்தைத் தொடர்வது, தமிழினத்தின் வரலாற்று வீரத்தை, பெருமிதத்தை மீண்டும் நிலைநாட்டியதாக அமைந்துவிட்டது. அந்த மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், இனஉணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலட்சோபஇலட்சம் இளைஞர்கள் ஆண்களும் பெண்களுமாக ஓர் இடத்தில் கூடி இரவு பகலாகப் பல நாட்கள் நடத்தும் அறப்போராட்டத்தில் எந்த ஒழுங்கீனமும் இல்லை. சட்டம் ஒழுங்குச் சிக்கலும் இல்லை. சுற்றுச்சூழல் கேடும் இல்லை என்று நடுநிலையாளர்கள் பாராட்டுகிறார்கள். அதே வேளை தலைமை இல்லாத போராட்டம் என்றும் வியக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்திற்குத் தலைமை இல்லை என்ற கருத்து வெளித்தோற்றம் மட்டுமே! தமிழன்னை தன் பிள்ளைகளின் போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். அவர்களை நெறிப்படுத்துகிறார். பழந்தமிழ் ஆசான்கள், சான்றோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வகுத்துத் தந்த அறநெறி, ஒழுக்கம், மனஅடக்கம் ஆகியவையே இலட்சோபஇலட்சம் இளந்தமிழர்களை நடத்துகிறது. தமிழ் உளவியல் அவர்களை நெறிப்படுத்துகிறது. தமிழர் வீரம் அவர்களின் போர்க்குணத்தை வளர்க்கிறது.
இந்தியவிலங்குகள் நலச் சட்டம் 1960 என்பது நடுவண் அரசு சட்டம். இதில் உள்ள 11-இன் உட்பிரிவுகள் 1 மற்றும் 2, விலங்குகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளின் வகைகளை விரித்துரைக்கிறது. 
 11இன் உட்பிரிவு 3 - எந்தெந்தச் செயல்கள் விலங்குகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளாகக் கருதப்பட மாட்டாது என்று விரித்துரைக்கிறது. இதில் இப்போது நமக்குத் தேவையான பகுதி -3 (a) பிரிவாகும். அது கூறுகிறது.

“3 (a) கால்நடையின் கொம்புகளை நீக்குவது, மலடாக்குதல், சூட்டுக்கோலால் குறியீடு போடுவது, மூக்கணாங்கயிறு போடுவது போன்றவை விலங்குகளைத் துன்புறுத்திய குற்றமாகாது”
இதில் ஏறுதழுவல் - சல்லிக்கட்டு என்பது சேர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வரும் அவசரச் சட்டத்தில் “ஏறுதழுவல்”சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்து மேற்படிச் சட்டம் பிரிவு 22 ( ii) காட்சிப்படுத்தவோ அல்லது பயிற்றுவிக்கவோ தடை செய்யப்பட்டுள்ள விலங்கை காட்சிப்படுத்துவதும் பயிற்றுவிப்பதும் தண்டைனைக்குரிய குற்றம்.” என்று கூறுகிறது. 
நடுவணரசு காட்சிப்படுத்திடத் தடை செய்துள்ள விலங்குப்பட்டியலில் சிங்கம், புலி, கரடி, குரங்கு, காளை முதலியவை உள்ளன. 
இந்தச் சட்டத்தின் 37ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகிறது.

“37 அதிகாரத்தை மாற்றிக் கொடுத்தல் :
இந்தச் சட்டத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு நடுவண் அரசு உத்திரவிடலாம். அதற்கான சூழ்நிலை இருக்கிறது என்று நடுவண் அரசு கருதினால் அவ்வாறு செய்யலாம். நடுவண் அரசு தனது இந்த அதிகார ஒப்படைப்பு முடிவை அரசிதழில் வெளியிட வேண்டும்.”
இவ்வாறு நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் பொது அதிகாரமாகவுள்ள பொதுப்பட்டியலிலிருந்து ஓர் அதிகாரத்தை மாநில அரசுக்கு நடுவண் அரசு வழங்கலாம் என்று இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 213 கூறுகிறது.
இப்பொழுது நமக்கு எழும் வினாக்கள்
1. இந்திய அரசு சல்லிக்கட்டு தொடர்பான அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளதை நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டிருக்கிறதா?

2. தமிழ் நாடு அரசு 23.01.2017 அன்று வெளியிடுவதாகக் கூறியுள்ள அவசரச் சட்டத்தில் மேற்படி விலங்கு துன்புறுத்தல் தடைச் சட்டத்திலுள்ள விதி 11 உட்பிரிவு 3ல் உள்ள விதிவிலக்குகளில் சல்லிக்கட்டு நடத்துவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?
3. விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டம் 22 கூறுவது போல் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இப்போது காளை இருப்பதை தமிழ் நாடு அரசு சட்டம் நீக்கிவிட்டதா?
இந்த வினாக்களுக்கான விடையை, போராடும் தமிழர்களுக்கும் இந்திய அரசுக்கும் தெரியும் வகையில் தெளிவாக தமிழ்நாடு அரசு சார்பில் நேற்றிலிருந்து விளக்காதது ஏன்?
அவசரச் சட்டம் என்பதையே ஒரு தற்காலிக ஏற்பாடு என்று போராடும் மக்கள் ஐயுறும்போது, “இது நிரந்தரமானது” என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். சொல்வது மட்டும் போதுமா? ஏன் இதுவரை முறையான விளக்கத்தை மாநில அரசு வெளிப்படையாகக் கூறவில்லை. எதையும் மறைக்க விரும்புகிறதா தமிழ்நாடு அரசு.
அடுத்து 2014ல் சல்லிகட்டைத் தடை செய்து உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள எதிர்வகைக் காரணங்களையும் சந்தித்து நிலைக்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் இருக்க வேண்டும். இல்லையேல் நடுவண் அரசின் விலங்குகள் பாதுகாப்பு நல வாரியமும், வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவும் உடனடியாக உச்சநீதி மன்றத்தில் அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்காடி மீண்டும் முறியடிக்கும் அவலம் ஏற்படும் .
இப்போது அங்கங்கே இலட்சோபஇலட்சமாகத் திரண்டு இனஉணர்வோடு குழுமியுள்ள கூட்டத்தைக் கலைப்பதற்கான ஓர் உத்தியாக மட்டும் இந்த அவசரச் சட்டத்தை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு அவர் கருதவும் கூடாது.
காவல் துறையைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்துவிடலாம் என்ற எண்ண ஓட்டம் ஓ.பி.எஸ். அரசுக்கு இருக்கிறது என்பதை இன்று காலை போராட்டக் களங்களில் ஆங்காங்கே அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கூடுதலாகக் குவிந்ததையும் அவர்கள் நடந்து கொண்ட முறையினையும் வைத்துப் போராடும் இளைஞர்கள் புரிந்து கொண்டார்கள்.
அருள்கூர்ந்து அவ்வாறான எண்ணமிருந்தால் அதைக் கைவிடுங்கள். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் டியானின்மின் ஸ்கொயரில் சனநாயக உரிமை கோரி இலட்சக்கணக்கில் திரண்டிருந்த மாணவர்களைக் கலைக்க சீன இராணுவம் நடத்திய குருதிக் குளியல்கள் தமிழ்நாட்டில் பல இடங்களில் அரங்கேறும் ஆபத்து இருக்கிறது. இதையெல்லாம் உணர்ந்து சனநாயக வழியில் வெளிப்படையான திட்டங்கள் மூலமும் ஏறுதழுவுதலுக்கான நிலையான உரிமையைப் பெறுவதன் வழியாகவும் தமிழர் போராட்டத்தை இயல்பான நிறைவுக்குக் கொண்டுவருமாறு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,

" அவனியாபுரத்தில் காவல்துறை காட்டுமிராண்டித்தனம் : பொங்கல் நாளை துக்க நாளாக மாற்றியது ஓ.பி.எஸ். அரசு " -- தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

Saturday, January 14, 2017
==================================
அவனியாபுரத்தில்
காவல்துறை காட்டுமிராண்டித்தனம் :
பொங்கல் நாளை துக்க நாளாக 
மாற்றியது ஓ.பி.எஸ். அரசு!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
==================================

ஓ. பன்னீர்செல்வம் அரசும், தமிழினத்துரோக அரசுதான் என்பதை இன்று (14.01.2017) மதுரையில் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனம் நிரூபித்துள்ளது.
இயக்குநர் வ. கவுதமன் அவர்களும் மற்ற இளைஞர்களும் மதுரை அவனியாபுரத்தில், வழக்கம்போல் சல்லிக்கட்டு நடத்துவோம் என்று கூடினார்கள். ஆனால், அங்கு நேற்றிலிருந்து குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர், அங்கு வந்த காளைகளுக்குக் காவல் போட்டு கைவசப்படுத்திவிட்டார்கள். அதேபோல், அங்கு வந்த ஏறுதழுவும் வீரர்களையும் சுற்றி வளைத்து தங்கள் காவலில் வைத்துக் கொண்டார்கள்.
இந்நிலையில், இயக்குநர் கவுதமன் தலைமையில் உணர்வாளர்கள் சாலையோரத்தில் அமர்ந்து, முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியால் அடித்துக் கலைத்துள்ளார்கள். பலரைக் கைது செய்துள்ளார்கள்.
இயக்குநர் கவுதமன் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளார். இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. கவுதமன் அவர்களையும் மற்ற இளைஞர்களையும் காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியால் அடித்து, வன்முறை செய்வது தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிவு மறைவின்றி தெரிகிறது.
தமிழர்களின் மரபு வழிப்பட்ட பெருமைக்குரிய, மகிழ்ச்சிக்குரிய “பொங்கல்” நாளை, ஓ.பி.எஸ். அரசு இன்று துக்க நாளாக மாற்றியிருக்கிறது. சனநாயக வழிப்பட்ட ஆர்ப்பாட்டங்களைக்கூட அனுமதிக்காமல், இந்திய அரசுக்கு ஏவல் செய்து – தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்கு தமிழர்களைத் தாக்கி, விழா நாளைக்கூட துயர நாளாக மாற்றக்கூடிய இனத்துரோக அரசாக ஓ.பி.எஸ். அரசு இருக்கிறது.
இப்படிப்பட்ட இனத்துரோகம், தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் நடக்கிறது? காவிரிச் சிக்கலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கி – இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொளுத்தியக் கயவர்கள் மீது கூட அம்மாநில அரசு தடியடி நடத்தவில்லை. கடும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படிப்பட்ட இனவெறி வன்முறைகளுக்கு ஓ.பி.எஸ். அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. ஆந்திராவில் சல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு காவல்துறைத் தாக்குதல் தொடுக்கவில்லை. கைதும் செய்யவில்லை.
தமிழர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் – தமிழர் பண்பாட்டை அழிக்கும் வகையில், சல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசை எதிர்த்து, சல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, சனநாயக முறையில் போராடுவோர் மீது ஓ.பி.எஸ். காவல்துறை காட்டுமிராண்டித்தனத்தை ஏவியிருப்பது, ஓ.பி.எஸ். தமிழ்நாட்டு முதலமைச்சரா, கயவன் சுப்பிரமணிய சாமியின் ஏவலரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இன்று மதுரையில் காவல்துறை நடத்திய இனத்துரோகச் செயலுக்கு, கழுவாய் தேட வேண்டுமெனில் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்கள், அதற்குப் பொறுப்பான காவல் அதிகாரிகள் – அந்தக் காட்டுமிராண்டித் தனத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவரையும் உடனடியாக இடைநீக்கம் செய்து, சீருடையைக் கழற்றி வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே வழியாகும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கைது செய்து வைக்கப்பட்டுள்ள கவுதமன் உள்ளிட்ட தமிழர் மானங்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,

" நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த பொங்கல் வாழ்த்துகள் " -- தோழர் பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி!


=======================================

நிலக்கோளமெங்கும் வாழும்
தமிழர்கள் அனைவருக்கும்
நெஞ்சு நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி!
=======================================
பழைமையான மரத்தில் புதிய பூக்கள் பூப்பதைப் போன்றதுதான் பொங்கல் விழாக்கள்!

பொங்கல் நாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நாள், திருவள்ளுவர் நாள், இவை அனைத்தும் பொங்கல் விழாவோடு பொருந்தியுள்ளன.

சுற்றுச் சூழல் தூய்மைக்குப் போகி நாள், மனிதர்களுக்குப் பொங்கல் நாள், வீட்டுக் கால் நடைகளுக்கு மாட்டுப் பொங்கல், மனிதர்களும் காளைகளும் விளையாடிடக் காணும் பொங்கல்!

இது பழைய மரபு; இன்றோ இவற்றுடன் பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், இலக்கிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பாவரங்குகள்!

இப்படிப்பட்ட விழா தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. பண்டைக்காலம் தொட்டே தமிழ்ச்சமூகம் கலை - அறிவியல் சமூகம்!

வரலாற்றுப் பெருமிதங்கள் எத்தனையோ இருக்கின்றன தமிழர்களுக்கு! ஆனால் இப்போது வரிசையாக உரிமைகளை இழந்து வருகிறோம்.

தமிழ், தமிழினம், தமிழர் தாயகம் மூன்றும் பிரிக்க முடியாதவை. இம்மூன்றிலும் உரிமைகள் அன்றாடம் பறிக்கப்படுகின்றன. இம்மூன்றின் உரிமைக் காப்பிற்கும் உரிமை மீட்பிற்குமான தத்துவம் தமிழ்த்தேசியம்!

எந்த இலட்சியமும் வெல்வதற்கான வழி - சரியான தத்துவமும் அதைச் செயல்படுத்திடத் தகுதியுள்ள தலைமை கொண்ட அமைப்பும் ஆகும். 

நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மரபு வழித் தாயகங்களாக தமிழ்நாடும் தமிழீழமும் விளங்குகின்றன. தமிழ்த்தேசியமும் தமிழீழத்தேசியமும் இரு கண்கள் போன்றவை. இவ்விரு தேசங்களின் இறைமை, இவ்விரு தேச மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரண் ஆகும்!

நிலக்கோளமெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சு நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

Labels:

" இந்திய ஏகாதிபத்தியமே, நீயே எங்கள் மாணவர்களைப் போராளி ஆக்கினாய் " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை

Friday, January 13, 2017

===================================

இந்திய ஏகாதிபத்தியமே, நீயே எங்கள்
மாணவர்களைப் போராளி ஆக்கினாய்!
===================================
தோழர் பெ. மணியரசன் 
===================================
விழித்துக் கொண்ட தமிழர்கள் வீரத்தமிழர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆண்களும் பெண்களும் – மாணவர்களும் மாணவிகளும் தமிழ்நாடெங்கும் போர் முழக்கமிடுகிறார்கள்.

“தடையை மீறுவோம்! சல்லிக்கட்டு நடத்துவோம்” 

இந்திய ஏகாதிபத்தியமே, நீதான் எங்கள் இளைஞர்களைப் போராளிகளாய் மாற்றுகிறாய்!

தமிழ் மொழியை அழிக்க இந்தியை ஏவினாய்! தழலுக்கு உடல் தந்து இந்தியை எதிர்த்தார்கள் எம் இளைஞர்கள் 1965-இல்! இந்திப் பேயை விரட்டிட வீதிக்கு வந்த தமிழர்கள் மீது இந்திய ஏகாதிபத்தியமே, உன் இராணுவத்தை ஏவினாய்! முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டு வீழ்த்தினாய்! 

அப்போதும் எம் தமிழர்கள் பின் வாங்கவில்லை. ஆதிக்க இந்தியின் இடுப்பொடிக்க அன்றிலிருந்து இன்று வரை போராடுகிறார்கள்! 

கச்சத்தீவைப் பிடுங்கி சிங்களர்க்குக் கொடுத்தாய், காவிரியைக் கன்னடர் பறிக்கத் துணை நிற்கிறாய்! முல்லைப் பெரியாறு உரிமையை முடக்க மலையாளிகளுக்கு முட்டுக் கொடுக்கிறாய்! பாலாற்றைத் தெலுங்கர்கள் பறித்திடப் பார்த்து மகிழ்ந்தாய், எம் தமிழை வீழ்த்திட இந்தியால் மட்டும் முடியாது என்று கணித்து, இப்போது சமற்கிருதத்தை ஏவி விட்டுள்ளாய்! 

எங்கள் இனத்தை அழிக்க அடுக்கடுக்காய் அணு உலைகளை அமைக்கிறாய்! எங்கள் வேளாண் நிலங்களில் கெய்ல் குழாய் பதிக்கிறாய்! வளம் கொழிக்கும் எங்கள் வயல்களை அமிலச் சேறாக்க மீத்தேன் குழாய்களை இறக்குகிறாய்!

இவை எல்லாவற்றையும் விஞ்சும் கொடுமையாக, எங்கள் மக்கள் ஒன்றரை இலட்சம் பேரை ஈழ மண்ணில் இன அழிப்பு செய்ய கூட்டுத் தொழிலாகக் கொலைத் தொழில் புரிந்தாய்!

இப்போது எங்கள் மண்ணில் எங்கள் காளைகளுடன் நாங்கள் விளையாட, எங்கோ இருந்து கொண்டு நீ தடை போடுகிறாய்! 

சிந்து வெளியில் மட்டுமல்ல, அதற்கு முந்திய வெளியிலும் காளை, தமிழர்களின் தோழன்! தமிழர்களின் உடன்பிறப்பு!

இன்றும் சாதி, மதம் கடந்த தமிழர்களின், தேசியப் பண்பாடாக வீர விளையாட்டாக காளை விளையாட்டுத் தொடர்கிறது. இப்போது அதற்குத் தடை போடுகிறாய்! 

இப்படியாக, இப்படியாக, இந்திய ஏகாதிபத்தியமே, நீ எங்கள் பகைவன் என்பதை நீயாகவே அடையாளம் காட்டிக் கொண்டாய்; நீயே எங்கள் இளைஞர்களை போராளிகளாகவும் ஆக்கி விட்டாய்! 

நீயே, எங்கள் மாணவர்களை வீதிக்குக் கொண்டு வந்தாய்! 

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்