<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும்! "--- தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் கோரிக்கை!

Thursday, March 24, 2022

 

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை

சிறையில் அடைக்கக் கூடாது
வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும்!
================================
தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் கோரிக்கை!
=================================

தமிழர்களுக்கு எதிரான இனவெறியை ஊட்டினால் போதும் நமக்குச் சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதிய சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அந்நாட்டின் உற்பத்திப் பெருக்கம், ஏற்றுமதிப் பெருக்கம், மக்களுக்குரிய அடிப்படை நல்வாழ்வு போன்றவற்றில் அக்கறையின்றி ஊதாரித்தனமாக ஆட்சி நடத்தி, அரசியல் நடத்தி அந்நாட்டை ஓட்டாண்டி ஆக்கி விட்டன.

சிங்கள மக்களும், தமிழ் மக்களும் உணவின்றித் தவிப்பதையும், எரிபொருளும், எரிவளியும் (சமையல் வாயும்) கிடைக்காமல் அல்லாடுவதையும் நீண்ட வரிசைகளில் நெடுநேரம் காத்துக் கிடப்பதையும் ஊடகங்களில் பார்க்கும் போது உள்ளம் பதைக்கிறது.

சீனாவிடம் தான் எப்போதும் சிங்கள இலங்கை நெருக்கமாக இருக்கும். சீனா 1960களின் தொடக்கத்தில் இந்தியாவின் மீது படையெடுத்துப் போர் நடத்திய போதும், வங்காளதேச விடுதலைப் போரின் போதும் (1971) இலங்கை இந்தியாவின் பகை நாடுகளோடு தான் நெருக்கம் காட்டியது. வங்காள தேசப் போரின் போது மேற்குப் பாக்கித்தான் வானூர்திகள் நமது வான் வெளியில் பறக்கத் தடை போட்டது இந்தியா. அப்போது மேற்குப் பாக்கித்தான் போர் வானூர்திகள் கொழும்பில் இறங்கி எரிபொருள் போட்டுக் கொண்டு – வங்காள தேசம் (கிழக்குப் பாக்கித்தான்) சென்று இந்தியப் படைகள் மீது போர் நடத்த இலங்கை அரசு உதவியது.

அண்மைக் காலமாக சீனாவுடன் மிக நெருக்கம் கொண்டு, துறைமுகங்களையும், தொழில் மண்டலங்களையும் சீன நிறுவனங்களுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இப்போதுள்ள கோத்தபய இராசபட்சே அரசு சீனாவுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறது.

திவாலாகிவிட்ட இலங்கை அரசு இந்தியாவிடம் தொடர்ந்து கடன் உதவி பெற்று வருகிறது. பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா அண்மையில் இரு தவணைகளில் கடன் கொடுத்துள்ளது இலங்கைக்கு! இந்தக் கடன்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதைக் தெரிந்து கொண்டே கொடுக்கிறது மோடி அரசு.

இந்தியாவைக் காங்கிரசு ஆண்டாலும் பா.ச.க. ஆண்டாலும் சிங்களர்களைப் பங்காளிகளாகக் கருதிப் பாசம் காட்டும் பிணைப்பு எப்போதும் உண்டு! ஈழத்தமிழர்களை அயலாராகக் கருதும் போக்குத் தொடர்கிறது.

இலங்கைக்கு இந்தியா அள்ளிக் கொடுக்கும் நிதியில், உ.பி., மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பெற்ற வரிப்பணம் கொஞ்சமும் இருக்காது. அம்மாநிலங்கள் இந்திய அரசுக்குக் கொடுக்கும் வரிப்பணத்தைப் போல் 1 ½ மடங்கு நிதியை இந்திய அரசிடமிருந்து திரும்பப் பெற்று விடுகின்றன. ஆனால் அதிக வரிப்பணம் கொடுக்கும் தமிழ்நாடு கர்நாடகம் மராட்டியம் போன்றவை ஒரு ரூபாய் இந்திய அரசுக்குக் கொடுத்தால் 40 காசுதான் திரும்பப் பெறுகிறது என்று கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த போது காங்கிரசுக்காரரான சித்தராமையா கூறினார்.

இப்பொழுதாவது இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர்களின் குரலுக்குப் செவி கொடுத்து, ஞாயம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனப்பிடியிலிருந்து அதை விடுவிக்க வாய்ப்புண்டு; தமிழர்களை அரவணைத்து வாழ்வளிக்க வாய்ப்புண்டு!

கோரிக்கைகள்:
1. வாழ வழியில்லாமல், பட்டினி கிடந்து, பசியோடு குழந்தைகளுடன், குடும்பப் பெண்களுடன் தஞ்சம் தேடித் தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகள் தகுதியில் அரவணைத்து வாழ்வளிக்க வேண்டும். அவர்களைச் சிறையில் தள்ளக் கூடாது. ஏற்கெனவே, சிங்கள அரசு நடத்திய போரில் உயிர் பிழைக்கத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்த தமிழர்களைச் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்ற தலைப்பில் தான் இந்தியா வைத்துள்ளது. அவர்களுக்கு அகதி உரிமை இல்லை. இந்தியக் குடியுரிமை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இப்பொழுது வரும் ஈழத்தமிழர்களுக்கு ஏதிலியர் (அகதிகள்) என்ற தகுதியில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

2. தமிழ்நாட்டு மீனவர்களை அன்றாடம் தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் சிங்கள அரசுக்குத் தொடர் வாடிக்கை ஆகிவிட்டது. ஏனெனில் இந்திய அரசு தட்டிக் கேட்பதில்லை.
இந்நிலையில் இந்திரா காந்தி இலங்கைக்குக் கொடுத்த கச்சத் தீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற வெண்டும். தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கக் கூடாது என்று அந்த அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டும்.

3. இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987-இன்படி, இணைக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு தமிழர் மாகாணங்கள், பின்னர் பிரிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அவற்றை ஒருங்கிணைக்கும் சட்ட ஏற்பாட்டைச் செய்யுமாறு இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசிடம் இக்கோரிக்கைளை எழுப்ப வேண்டும்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: ,

"மேக்கேதாட்டைத் தடுக்க சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை! மக்களே வீதிக்கு வாருங்கள்!"-----காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Wednesday, March 23, 2022

 

மேக்கேதாட்டைத் தடுக்க
சட்டமன்றத் தீர்மானம் பயனில்லை!
மக்களே வீதிக்கு வாருங்கள்!
===========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பளார் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
============================================

கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 21.03.2022 அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிவதற்கு முன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆற்றிய உரை 1967-லிருந்து இன்று வரை தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் உரிமையைத் தி.மு.க. ஆட்சியாலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாலும் மீட்க முடிய வில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக உள்ளது.

“அண்ணா ஆட்சியிலிருந்து மு.க.ஸ்டாலின் ஆட்சி வரை - இதுவரை காவிரி உரிமையை மீட்க முடியவில்லை; என்று தணியும் காவிரித் தாகம்; நமது கொள்ளுப் பேரன் காலம் வரை காவிரிச் சிக்கல் தீராதோ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் துரைமுருகன் பேசியுள்ளார்.

ஆனால் கடந்த காலங்களில் காவிரி உரிமையை மீட்டதாக தி.மு.க.வினரும் அ.இ.அ.தி.மு.க.வினரும் மாறி மாறி “வெற்றி முழக்கங்கள்“ எழுப்பியுள்ளார்கள். வெற்றி விழாக்கள் கொண்டாடி உள்ளார்கள்.

வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, 1998 ஆகத்து மாதம் 7,8 இரு நாட்கள் அவர் தலைமையில் கர்நாடகமும் தமிழ்நாடும் காவிரி ஒப்பந்தம் போட்டன. அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்: அந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளைப் பறி கொடுக்கிறது என்று அப்போதே எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி) எச்சரித்தது; கண்டனம் செய்தது.

அந்த ஒப்பந்தப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் தலைவர், இந்தியத் தலைமை அமைச்சர்; தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பதுச்சேரி மாநிலங்களின் முதலமைச்சர்கள் உறுப்பினர்கள். அந்த ஆணையக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு (Consensus) ஏற்பட்டால்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது நிபந்தனை. தண்ணீர்ப் பகிர்வை அறிவித்துச் செயல்படுத்தும் தற்சார்பு அதிகாரம் அந்த ஆணையத்திற்குக் கிடையாது. “எலி பிடிக்காதது பூனையா, அதிகாரம் இல்லாதது ஆணையமா?” என்று கேட்டு அதை எதிர்த்து மாநாடும் கூட்டங்களும் நடத்தினோம். தஞ்சை பெசன்ட் அரங்கத்தின் வெளித் திடலில் மேடை போட்டு நடந்த மாநாட்டில் தமிழக விவசாய சங்கத் தலைவர் டாக்டர் எம்.ஆர் சிவசாமி அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள், காவிரி உரிமை போராளி மூத்த வழக்கறிஞர் ஐயா பூ.அர.குப்புசாமி அவர்கள், விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயா கோபால தேசிகன் அவர்களும் மற்றும் ஒத்த கருத்துள்ள இயக்கத்தின் தலைவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நானும் கண்டன உரையாற்றினோம்.

ஆனால் இந்த ஒப்பந்தத்திற்காக தஞ்சாவூர் திலகர் திடலில் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டுக் கூட்டம் ஏற்பாடு செய்து, “காவிரி கொண்டான்” என்று பட்டம் கொடுக்கச் செய்தார்கள்.

அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வந்தது. அது தமிழ் நாட்டிற்குக் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை மேலும் குறைத்து 192 டி.எம்.சி. ஆக்கியது. கர்நாடகத்தின் பாசனப் பரப்பை 11.05 இலட்சம் ஏக்கரிலிருந்து 22 இலட்சம் ஏக்கர் வரை உயர்த்தியது. அதையும் வரவேற்ற அப்போதைய முதல்வர் கருணாநிதி. “ஞாயத் தீர்ப்பு; ஆறுதல் அளிக்கிறது” என்று செய்தியாளர்களிடம் கூறினார். “மகிழ்ச்சி, மகிழ்ச்சி” என்று கொண்டாட்ட முழக்கம் எழுப்பினார் அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன். இருவரும் அப்போது புதுதில்லியில் இருந்தார்கள். இடைக்காலத் தீர்ப்பு 205 டி.எம்.சி; இறுதித் தீர்ப்போ 192 டி.எம்.சி. அதையும் ஞாயத் தீர்ப்பு என்றார்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் இறுதித் தீர்ப்பு நகலை எரித்துக் கைதானோம். பல்வேறு உழவர் அமைப்புகளும் அத்தீர்ப்பை எதிர்த்துப் போராடின. அதன் பிறகு அத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மனு போட்டது தி.மு.க. ஆட்சி.

ஆனால் அந்தத் தீரப்பையும் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்த மறுத்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசு ஆட்சியில் கூட்டணி அமைச்சர்களாக இருந்தனர் தி.முக.வினர்.

பின்னர் 2011-இல் முதல்வரான செயலலிதா வற்புறுத்தலின் பேரில், மன்மோகன் சிங் ஆட்சி 2013-இல் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டது. ஆனால் செயல்படுத்தும் ஆணையம் அமைக்க மறுத்துவிட்டது.
உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்தத் தீர்ப்புப்படி 18.05.2018-இல் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், 177.25 டி.எம்.சி.யாகக் குறைக்கப்பட்ட காவிரி நீரை தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தரவில்லை. ஆனால் ஒவ்வொரு ஆணையக் கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கான அனுமதியை நிகழ்ச்சி நிரலில் ஒரு பொருளாக முன்வைக்கிறது. ஒரு தலைச்சார்பான அந்த ஆணையத் தலைவர் ஹல்தரை நீக்கவோ, அந்த ஆணையத்தைக் கலைத்து, புதிய ஆணையம் அமைக்கவோ அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை. இப்போதைய சட்டமன்றத் தீர்மானமும் அவ்வாறு கோரவில்லை.

“நீங்கள் யோக்கியனா, நான் யோக்கியனா என்று பேசுவதை விட்டுவிட வேண்டும் “ என்று இப்போது பேசுகிறார் துரைமுருகன். “நமது காலத்தில் இந்த காவிரி பிரச்சனையைத் தீர்த்து வைக்காவிட்டால், பின்னர் வரும் சமுதாயம் நம்மைக் காரி துப்பும்” என்கிறார்.

இவ்வளவு தீவிரமாகப் பேசி, மேக்கேதாட்டு தீர்மானத்தை முன்வைத்தனர். அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அத்தீர்மானம் மறுபடியும் இந்திய அசுக்கு வேண்டுகோள் வைத்து, மேக்கேதாட்டை அனுமதிக்காதீர் என்ற கோரிக்கையுடன் முடிந்துவிட்டது.

தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி; ஆர்ப்பாட்டம் போன்ற எந்த செயல் திட்டத்தையும் அத்தீர்மானம் முன்வைக்கவில்லை.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாகக் காவிரிச் சிக்கலில் எதையும் சாதிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வராமல் காவிரி நீரை தடுக்க கர்நாடக அரசு புதிது புதிதாக கட்டிய அணைகளை தமிழ்நாட்டு ஆட்சியாளர்களாலும், கட்சிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்திய அரசின் சூழ்ச்சிகளைத் தடுக்க முடியாத தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளையோ, அக்கட்சிகளையோ மீண்டும் எதிர்பார்த்து, செயலற்றுத் தமிழ்நாட்டு மக்கள் இருந்தால், மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டி முடித்து விடும். அப்படித்தான் 1970 களில் ஏமாவதி, ஏரங்கி, கபினி, இலட்சுமண தீர்த்தா முதலிய சட்ட விரோத அணைகளைக் கட்டி தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் வராமல் தடுத்துள்ளது. இந்த அணைகள் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு அரசும் தஞ்சை மாவட்ட உழவர்கள் அமைப்பும் உச்சநீதி மன்றத்தில் 1971-இல் போட்ட வழக்கை, அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, வழக்குகளை 1972-இல் திரும்பப் பெற்றார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கேதாட்டு கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டு நீர் மேட்டூர் வராது.
தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் காவிரி நீர் உரிமை நீர் ஆகும். அது குடிநீராக, பாசன நீராக நம் உயிரோடு கலந்துள்ளது. தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் திரள் எழுச்சியை உருவாக்க வேண்டும். “இனப் பாகுபாடு காட்டும் இந்திய அரசே மேக்கேதாட்டை தடுத்து நிறுத்து” என்று முழங்கி தமிழ்நாடு தழுவிய அளவில் மக்கள் ஆயிமாயிரமாய் அணிவகுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

"நீட் விலக்கு போல் ஆளுநர் விலக்கும் சட்டமாக வேண்டும்" --- ஐயா பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Thursday, March 17, 2022

 

நீட் விலக்கு போல் ஆளுநர் விலக்கும்

சட்டமாக வேண்டும்.
=================================
ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================

இளநிலை மருத்துவப் படிப்பிற்கான அனைத்திந்திய நுழைவுத் தேர்வாக நீட் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது என்று விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவை (மசோதாவை)த் தமிழ்நாடு சட்டப்பேரவை 13.09.2021 அன்று ஒருமனமாக ஆதரித்து நிறைவேற்றியது. ஆனால் கல்வி என்பது இந்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ள பொதுப் பட்டியலில் இந்திராகாந்தியின் காங்கிரசு ஆட்சியில் மாற்றி அமைக்கப்பட்டதால், இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அதாவது குடியரசுத் தலைவைரின் ஒப்பம் இல்லாமல் மாநில சட்டமுன்வரைவு சட்டமாகாது. இந்தப் பொதுப்பட்டியல் என்பது இந்திய அரசின் ஒற்றையாட்சி அதிகாரத்திற்கான மாறுவேடப்பட்டியல். அதாவது பம்மாத்துப் பட்டியல்!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய இச்சட்ட முன்வரைவை ஆளுநர் தமது கருத்துடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது அனுப்பாமல் தன் அலுவலகத்தில் கிடப்பில் போட்டுவிடலாம். எவ்வளவு நாளுக்குள் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் அல்லது எவ்வளவு நாள் கிடப்பிலேயே வைக்கலாம் என்று காலவரையறை எதுவும் சட்டத்தில் கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய இந்திய ஒற்றையாட்சியின் நேயர்கள் - இந்திய ஏகாதிபத்தியவாதத்தின் தாசர்கள் – மாநிலங்களில் உள்ள பல்வேறுபட்ட தேசிய இனங்களை புதுதில்லியின் நிரந்தரக் கட்டுப்பாட்டுக்குள் – நிரந்தரக் கண்காணிப்புக்குள் வைத்திருக்க இச்சைப்பட்டனர். அதற்காக “பொதுப்பட்டியல்” என்ற மாறுவேட ஒன்றியப் பட்டியலை உருவாக்கினார்கள். கூட்டாட்சி உள்ள வடஅமெரிக்கா, செர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற எந்த நாட்டிலும் பொதுப்பட்டியல் என்று ஓர் அதிகாரப் பட்டியல் கிடையாது. மாநிலப் பட்டியல் கூட்டாட்சிப் பட்டியல் மட்டுமே உண்டு.

நீட்விலக்கு சட்ட முன்வரைவை 13.09.2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அன்றே ஆளுநருக்கு அனுப்பி – அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு தமிழ்நாடு அரசு கோரியது. ஆளுநர் ஆர்.என்.இரவி பாசகவின் நீட் தேர்வு ஆதரவாளர். எனவே குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அச்சட்டமுன்வரைவைக் கிடப்பில் போட்டுவிட்டார். தமிழ்நாட்டில் ஆளுநர் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன்பிறகு 142 நாள்கள் கழித்து அந்த முன்வரைவு சரியானதல்ல என்று கூறி தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

அதன்பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 08.02.2022 அன்று நடத்தப்பட்டு, பாசகவைத் தவிர மற்ற அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அதே நீட்விலக்கு சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநர் இரவிக்கு அனுப்பப்பட்டது. அதையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.03.2022 அன்று ஆளுநரைச் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். அதன்பிறகு ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவதாகக் கூறினார் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு கோரும் தமிழ்நாட்டின் சட்டமுன்வரைவு குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டு சட்டமாகுமா? ஏற்கெனவே 2017 பிப்ரவரி மாதம் இதே நீட் விலக்கு சட்ட முன்வரைவை அஇஅதிமுக ஆட்சி சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அப்போதைய ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந் அதற்கு ஒப்புதல் தர மறுத்து, நிறுத்தி வைத்துவிட்டார்.

இப்போது அதே சட்டமுன்வரைவு அதே குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்துக்கு அதே நரேந்திர மோடி ஆட்சியில் போவதால் சட்டம் ஆகிவிடுமா என்பது பெரும் வினாக்குறி.

நீட்தேர்வு தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று விலக்குக் கோருவது போல் ஆளுநர் பதவியும் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று விலக்கிடும் அரசமைப்புச் சட்டத்திருத்தம் கோரி தமிழ்நாட்டு ஆளும் கட்சியும் மற்ற கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக மக்கள் திரள் எழுச்சிப் பேரணிகளும் இயக்கங்களும் நடத்தினால் எதிர்காலத்தில் பல உரிமைகள் கிடைக்கும்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: , ,

"மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது! தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது...?" --காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!

Saturday, March 5, 2022

மேக்கேதாட்டில் அணை கட்ட

கர்நாடக அரசு நிதி ஒதுக்கிவிட்டது!

தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?
=======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை!
=======================================

கர்நாடக அரசு 2022-2023 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மேக்கே தாட்டில் அணைகட்ட ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிதி நிலை அறிக்கையை முன்வைத்து சட்டப் பேரவையில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் இந்திய அரசு ஒப்புதல் பெற்று அணைகட்டியே தீருவோம் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.

சட்டவிரோத மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு மோடி அரசு ஒவ்வொரு கட்டத்திலும் துணை நிற்பதை பார்த்து வந்துள்ளோம். ஆனால் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்திலும் இப்போது தி.மு.க ஆட்சிகாலத்திலும் சட்ட விரோத மேக்கே தாட்டு அணை கட்டப்படாமல் தடுத்து நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அணை கட்ட விடமாட்டோம் என்று பொத்தாம் பொதுவில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிடுவது தொடர் சடங்காகிவிட்டது.

கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையைக் கூட தமிழ்நாடு அரசு முன்வைக்கவில்லை. மேக்கேதாட்டு அணைக்கு தடை வித்திக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவு படுத்துவதற்கு சட்ட முயற்சிகள் எதையும் தமிழ்நாடு அரசு செய்யவில்லை.

சட்டத்திற்குப் புறம்பாகக் கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணைக்கட்ட மோடி அரசு துணை போகிறது. இந்த அநீதியைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து உழவர் அமைப்புகள் சார்பில் வெகு மக்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட சனநாயக போராட்டங்களை நடத்த தமிழ்நாட்டு ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ முன்முயற்சி எடுக்கவில்லை. தி.மு.க.வும் அ.தி.மு.கவும் காவிரி சிக்கலில் ஒருவரை எதிர்த்து ஒருவர் இலாவணி கச்சேரி நடத்திக் கொண்டுள்ளன.

1970-களில் அன்றைய ஒன்றிய காங்கிரசு ஆட்சியின் மறைமுகத் துணையோடு கர்நாடகம் சட்டவிரோதமாக ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைக் கட்டியதை நாம் அறிவோம். அதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துக் கொண்டு நமக்குப் பேரிழப்புகள் உண்டாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் ஆதாரமாய் உள்ள காவிரி உரிமையைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

"அமெரிக்காவே நேட்டோவைக் கலை! இரசியாவே உக்ரைனைவிட்டு வெளியேறு! ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு! "---தோழர் பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Wednesday, March 2, 2022


அமெரிக்காவே நேட்டோவைக் கலை!
இரசியாவே உக்ரைனைவிட்டு வெளியேறு!
ஆதிக்க இனங்களே அடக்கப்பட்ட
இனங்களுக்கு விடுதலை கொடு!
==================================
தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==================================
உக்ரைன் நாட்டின் மீது இரசியா படையெடுத்து, அந்நாட்டு மக்களை - கட்டுமானங்களைத் தாக்கி உயிரிழப்புகளையும், பொருள் நாசங்கள் செய்வதைப் பார்க்கப் பார்க்க நெஞ்சில் மேலும் மேலும் பதற்றமும் வேதனைகளும் ஏற்படுகின்றன. அதே வேளை நெஞ்சுரத்தோடு உக்ரைன் அரசும், அந்நாட்டுப் படையும் இரசியப் படையினரை எதிர்கொள்வது வியக்க வைக்கிறது.
இரசியா, உக்ரைன் மீது ஏன் படையெடுக்கிறது? வடஅமெரிக்க நாட்டின் (யு.எஸ்.ஏ.) தலைமையிலான “வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு (நேட்டோ - NATO)” எனப்படும் பல நாடுகளின் படைக் கூட்டணியில் உக்ரைன் சேரப் போகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒன்றியத்திலும் சேர்கிறது. இதனால் உக்ரைனின் அண்டை நாடான இரசியாவின் பாதுகாப்பிற்கும், தற்சார்புக்கும் ஆபத்து என்று அந்நாடு அஞ்சுகிறது.
சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டுக்கு எதிராக உலக ஏகாதிபத்திய நாடுகளால் 1949இல் உருவாக்கப்பட்டதே நேட்டோ. அதன் தலைவன் வட அமெரிக்கா! அப்போது அதன் முதல் பகை நாடு இரசியா!
வட அமெரிக்கா நேட்டோவை உருவாக்கி சோவியத் ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்த பின் அதை எதிர்கொள்வதற்கு வார்சா உடன்படிக்கைக் கூட்டமைப்பை சோவியத் ஒன்றியம் உருவாக்கியது. சோவியத் ஒன்றியம் 1991இல் 15 நாடுகளாகப் பிரிந்த பின் வார்சா கூட்டமைப்பு கலைந்தது.
இரசியாவை வீழ்த்திட, இதுவே வாய்ப்பு என்று கருதிய வட அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த சில நாடுகளைத் தனது நேட்டோவில் சேர்த்துக் கொண்டது.
உக்ரைன் நேட்டோவில் சேர மறுத்தது. விக்டர் யூனோவிச் என்பவர் 2014இல் உக்ரைன் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நேட்டோவில் சேர மறுத்தார். இரசியாவுடன் நெருக்கம் காட்டினார்.
வட அமெரிக்கா ஆதரவு அரசியல் தலைவர்கள் நேட்டோவில் சேர வேண்டும் என்று உக்ரைனில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் போராட்டத்திற்கு, “தன் மதிப்புப் புரட்சி” (Revolution of Dignity) என்றார்கள். இப்போராட்டத்தினால் விக்டர் யூனோவிச் பதவி விலகினார். இடைக்கால ஆட்சித் தலைவர் வந்தார். இந்த உள்நாட்டு நெருக்கடியைப் பயன்படுத்தி, படைகளை அனுப்பி உக்ரைன் நாட்டில் இருந்த கிரிமியா என்ற தேசிய இனத்தின் விருப்பத்தை நிறைவேற்றித் தனி நாடாக்கத் துணை நின்றது இரசியா!
அதன்பிறகு, 2019இல் நடந்த தேர்தலில் உக்ரைன் குடியரசுத் தலைவராக செலன்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார். இவர் வட அமெரிக்காவிற்கு நெருக்கமானவர். நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் (ஈரோ) சேர்த்திட வேண்டுகோள் வைத்தார்.
இப்போழுதும் உக்ரைன் நாட்டின் இரசிய எல்லையோரப் பகுதிகளில் இரசிய மொழி பேசும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்களின் உரிமைகளுக்காக இரசியா “குரல் கொடுக்கிறது”.
ஸ்டாலின், குருச்சேவ், பிரெஷ்னேவ் ஆட்சிக் காலங்களில் நிகரமை (சோசலிச) சோவியத் ஒன்றியம் இதர சிறுபான்மைத் தேசிய இனங்கின் மீது - அவற்றின் குடியரசுகள் மீது இரசிய தேசிய இன - இரசிய மொழி ஆதிக்கங்களைத் திணித்தது. கோர்பச்சேவ் குடியரசுத் தலைவர் ஆனபின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நீக்கி சனநாயகக் கருத்துரிமை வழங்கினார். ஒடுக்கப்பட்டு, உள்ளே பொருமிக் கொண்டிருந்த தேசிய இனங்கள் ஒவ்வொரு கட்டத்தில் தனிநாடு கோரின. பதினைந்து நாடுகளாக 1991இல் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அவ்வாறு சோவியத் இரசியாவிலிருந்து பிரிந்ததுதான் உக்ரைன்!
ஒரு மொழி பேசக்கூடிய ஒரு தேசம் அயல்மொழி பேசும் தேசங்களை ஆக்கிரமித்துக் காலனி ஆக்கிக் கொள்ளும் போக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிரமடைந்தது. நவீனத் தொழில் உற்பத்தி முதலாளிகளும், வணிகர்களும் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களின் முதுகெலும்பாவர்!
ஆனால், சனநாயகக் காலத்தில் - ஒரு நாட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிறுபான்மைத் தேசிய இனங்களை ஆதிக்கம் செய்வது அவர்களின் மொழி - இன அடையாளங்களை மறைப்பது அல்லது மறுப்பது முதலாளிய நாடுகளிலும் நடந்தது. சோவியத் ஒன்றியம் என்ற நிகரமை நாட்டிலும் நடந்தது. இப்போது கம்யூனிஸ்ட்டுச் சீனாவிலும் நடக்கிறது. திபெத்தியர்கள், உய்கூர் மக்கள் ஆகிய சிறுபான்மைத் தேசிய இனங்கள் சீனாவின் ஹன் பெருந்தேசிய இன ஆதிக்கத்தின்கீழ் சிக்கித் துன்புறுவதும் சிறையில் அடைக்கப்படுவதும் இன்று நடந்து கொண்டுள்ளது.
சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சம உரிமை கொடுத்ததில் சோவியத் தலைவர் லெனின் பாராட்டிற்குரியவர். அவர்க்கு முன்பாக, சுவிட்சர்லாந்தில் முதலாளிய கூட்டாட்சி உருவாக்கப்பட்டு, பெரிய - சிறிய தேசிய இனங்களுக்குச் சமநிலை வழங்கப்பட்டது.
அண்மையில் இரசிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் சிக்கல் குறித்துப் பேசிய இரசியக் குடியரசுத் தலைவர் புத்தின், “லெனின் செய்த தவறுகளால் நாம் இப்போது பாதிக்கப்படுகிறோம். 1917இல் இரசியப் புரட்சி வென்றவுடன், எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை வழங்கினார் லெனின்; கூட்டாட்சியாக சோவியத் ஒன்றியம் அமைத்தார். அப்படிச் செய்யாமல் ஒற்றையாட்சியாக அமைத்திருக்க வேண்டும்” என்றார்.
இதைப் படித்தபோது, இந்தியாவில் பண்டித நேருவும், வல்லபாய் பட்டேலும் ஒற்றை ஆட்சி அமைத்துத் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைக் கட்டிப் போட்டது நினைவிற்கு வந்தது. அவர்களுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் அந்தக் கட்டை மேலும் மேலும் இறுக்கினார்கள்; இறுக்குகிறார்கள்!
இவற்றிலிருந்து நாம் கவனிக்க வேண்டியது, ஏகாதிபத்தியங்கள் பல வடிவங்களில் இருக்கின்றன. பிரிட்டன், பிரான்சு, வடஅமெரிக்கா போன்றவை அயல் நாடுகளைப் பிடிக்கும் கொடிய வடிங்களிலும், அகப்பட்டுக் கொண்ட தேசிய இனங்களை ஒடுக்கும் இரசிய, இந்திய, பாக்கித்தான் வடிவங்களிலும் ஏகாதிபத்தியங்கள் இருக்கின்றன. “ஏகாதிபத்தியம் என்றால் போர்” என்றார் லெனின்.
உலகத்தில் இன்று நடக்கும் பெரும் போராட்டங்கள் - போர்கள் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவையே! எனவே, புதிய புதிய தேசங்கள் பிறந்து கொண்டே உள்ளன.
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் உரிமைக்குப் போராடும்போது, ஆதிக்க இனங்கள் படைகொண்டு தாக்குகின்றன. அத்தாக்குதலை எதிர்க்கப் போர்கள் வெடிக்கின்றன. அவ்வாறு மாட்டிக் கொண்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்களுக்கு ஆதரவு தர முன்வரும் ஏகாதிபத்தியங்களையும் ஆதரிக்கின்றன. இப்போக்கை குறைகூற முடியாது. எதிரியிடம் அடிபடுபவன் தன்னை எவன் மீட்டால் என்ன என்று நினைப்பான். எலிக்கு நேரடிப் பகை பூனையே தவிர, புலியல்ல!
இப்படிப்பினைகளிலிருந்து வடஅமெரிக்கா - இரசியா - உக்ரைன் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்ல வேண்டும்.
உக்ரைன் மீது இரசியா போர் தொடுத்தால் இரசியாவை எதிர்த்து, நேட்டோ போரிடும் என்பதுபோல் பாச்சா காட்டிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ ஷிபைடன், போரில் இறங்காமல் இரசியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துவிட்டு, உக்ரைனைப் பலியிடுகிறார். ஏன்?
வியட்நாம், ஈராக், ஆப்கானித்தான் நாடுகளில் படையெடுத்து, மாட்டிக் கொண்டு, ஏராளமான அமெரிக்கர்களை பலியிட்டு, தோல்வியுடன் திரும்பிய சூடு கண்ட கரடி - அமெரிக்கா!
இதே அமெரிக்கா, கியூபா, ஈரான் நாடுகளுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடைகளால் அந்நாடுகள் அழிந்து விடவில்லை. அமெரிக்காவிடம் சரணடையவும் இல்லை!
இந்தியா வட அமெரிக்காவைவிட இரசியாவுக்குக் கூடுதலாகக் கடமைப்பட்டுள்ளது. காசுமீர், காலிஸ்தான் விடுதலைப் போராட்டங்களில் - உரிமைச் சிக்கல்களில் ஐ.நா.வின் பொது அவையிலும், பாதுகாப்பு மன்றத்திலும் இரசியா இந்தியாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்துள்ளது. வங்காள தேச விடுதலைப் போரில் இந்தியப் படையெடுப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டது. இப்போது, சீனாவுடன் உள்ள முரண்பாட்டில் இரசியாவின் உதவி இந்தியாவுக்குத் தேவை. எனவே, இந்தியா அமெரிக்கா பக்கம் சேராமல் நடுநிலை வகிக்கிறது.
சனநாயகக் கடமையை உணர்ந்தோர், மனிதநேய உரிமையாளர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைக்க வேண்டும்.
1. அமெரிக்காவே, நேட்டோவைக் கலை!
2. இரசியாவே, உக்ரைனைவிட்டு வெளியேறு!
3. ஆதிக்க இனங்களே, அடக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை கொடு!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2022 மார்ச்சு இதழின் ஆசிரியவுரை இது).
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்