<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு! "--- தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு!

Friday, February 18, 2022


 சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம்

ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு!
========================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிவிப்பு!
========================================

சிதம்பரம் நடராசர் திருக்கோயில் எந்த சாதியாருக்கும் எந்தப் பிரிவார்க்கும் தனி உடைமை அல்ல. பொதுவாகப் பக்தர்கள் அனைவர்க்கும் – குறிப்பாக – சிவநெறியாளர்கள் அனைவருக்குமான புனித நிலையமாகும். அத்திருக்கோயில் சோழப் பேரரசர்களாலும், சிவநெறிச் செல்வர்களாலும் எழுப்பப்பட்டது. சிதம்பரத்தில் வசித்து வரும் தீட்சிதர் எனப்படும் ஒரு சாதிப் பிரிவினர் தங்களுக்கு மட்டும் உரிய கோயில் அது என்று சொத்துரிமை கோர முடியாது.

அன்றாடம் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் வந்து வழிபட்டுக் காணிக்கை செலுத்தும் சிதம்பரம் நடராசர் கோயில், இந்திய அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் (உறுப்பு 25 (b)) வராத ஒரு நிறுவனமல்ல. அதேபோல், சமூகச் சமநிலை, மனித உரிமை, பொது ஒழுங்கு முதலிய வற்றிற்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டதும் அல்ல!

நடராசர் திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலம் (கனகசபை) கருவறை அல்ல. அது பூசை (அர்ச்சனை) செய்யப்படும் இடம் அல்ல. பக்தர்கள் சிற்றம்பல மேடையிலிருந்து நடராசரைத் தரிசிப்பதற்கும், தேவாரம் - திருவாசக மந்திரங்களை ஓதுவதற்கும், பாடுவதற்கும் உரிய இடம் அது. அம்மேடையில் சாதி அடிப்படையில் தங்களைத் தவிர மற்ற பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று விதிமுறைகள் வகுப்பதற்குத் தீட்சிதர்களின் நிர்வாகக் குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை.

அண்மையில் (13.02.2022), சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த செயசீலா என்பவர், சிற்றம்பல மேடை ஏறி வழிபடச் சென்றபோது, தீட்சிதர்கள் அவரைத் தடுத்து, கொச்சையாக ஏசி, வலுவந்தமாக வெளியேற்றியுள்ளார்கள். இக்கொடுமை குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், காவல்துறையினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

கோயில்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா முடக்கம் தளர்த்தப்பட்டு, அன்றாடம் கருவறை முன் திரளான பக்தர்கள் கூடி நடராசரை வழிபட்டுவரும் இக்காலத்தில், கொரோனா முடக்கத்தைக் காரணம் காட்டி, சிற்றம்பல மேடையில் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது முற்றிலும் சட்டவிரோதச் செயல்!

தீட்சிதர்கள் தில்லை அம்பலவாணர் கோயிலில் கடைபிடிக்கும் வர்ணாசிரமக் கொடுமை – மனித உரிமைப் பறிப்பு நந்தனார் காலத்திலிருந்து நாளது வரை தொடர்வது பேரவலம் ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிராமணரல்லாத சிவநெறியாளர் ஆறுமுகசாமி அவர்கள் தில்லைச் சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம்பாடி நடராசரை வழிபட்டபோது, தீட்சிதர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி வெளியேற்றினர்.

”சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர்?” என்று திருநாவுக்கரசர் ஏழாம் நூற்றாண்டிலேயே செவியில் அறைவதுபோல் கேள்வி கேட்டார். எனவே, தொடரும் தீட்சிதர்களின் சாதி ஆதிக்க வெறிக்குத் தீர்வு கண்டாக வேண்டும். பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர் அறவழி ஆன்மிக இயக்கம் நடத்தவுள்ளது.

“சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாடச் செல்வோம்” என்ற வேண்டுகோளுடன் 28.02.2022 திங்கட்கிழமை முதல் 05.03.2022 சனிக்கிழமை வரை முதல்கட்ட வழிபாட்டு இயக்கம் அறவழியில் நடைபெறும். சிற்றம்பல மேடையில் ஏறி, மெய்யான வழிபாட்டுணர்வுடன் தேவாரம், திருவாசகம் ஓதி நடராசரை வணங்கிட அன்பர்கள் அணி அணியாக ஒவ்வொரு நாளும் பங்கேற்குமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை அழைக்கிறது!

கோரிக்கைகள்
---------------------
1. தமிழ்நாடு அரசே, சிதம்பரம் நடராசர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் ஓதி இறைவனை வழிபட ஏற்பாடு செய்க! பாதுகாப்பு வழங்குக!

இந்திய அரசமைப்புச் சட்டம் 25(b)-க்கு எதிராகச் செயல்படும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடு!

2. தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திடுக!

3. சிற்றம்பல மேடையேறி நடராசரை வழிபடச் சென்ற பெண்ணைத் தாக்கியவர்களை உடனடியாகச் சிறையில் அடை!

தமிழ்ச் சிவநெறி மந்திரங்கள் காக்க - தமிழர் ஆன்மிக உரிமை காக்க அறவழி ஆன்மிக அணிவகுப்பில் பங்கேற்க வாருங்கள்! வாருங்கள்!

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================ 

Labels: ,

"மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை! அதன் தலைவரை நீக்க வேண்டும்!"--காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Saturday, February 12, 2022

மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை!

அதன் தலைவரை நீக்க வேண்டும்!

=========================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=========================================================

மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நேற்று (11.02.2022) அன்று காணொலி வாயிலாக நடந்துள்ளது. இந்தக் கூட்டம் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பதற்கான தனிச் சிறப்புக் கூட்டம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர் செளமித்திர குமார் ஹல்தர் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விவாதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். அதனால் மேக்கேதாட்டு அணை விவரம் பேசாமலேயே, இரண்டு மணி நேரம் அக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள்.

தமிழ்நாட்டை இணங்க வைப்பதற்காக இந்திய அரசு அதிகாரிகள் அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கபட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படித் தண்ணீர்ப் பகிர்வைக் கண்காணித்து செயல்படுத்தும் அதிகாரம் மட்டுமே கொண்டுள்ளது. கர்நாடகம் புதிய அணை கட்டுவது பற்றி விவாதிக்கவோ முடிவு எடுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.

ஒன்றிய பா.ச.க. ஆட்சியினரின் தூண்டுதலால், அதிகார அத்துமீறலில் இறங்கி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி தருவது பற்றிய பொருளை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறது.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து விவாதிப்பதற்கும் முடிவு எடுப்பதற்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்ற உண்மையைத் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக இதுவரை கூறாதது ஏன்?

மேக்கேதாட்டு அணைக்குத் தடை கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அணை பற்றி ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது என்று மட்டும் தமிழ்நாடு அரசு காரணம் கூறிவருவது போதுமானது அல்ல.

காவிரித் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு அளித்த இறுதித் தீரப்பைச் செயல்படுத்துவது குறித்த வழக்கில் உச்ச நீதி மன்றம் 16.02.2018 அன்று தீர்பளித்தது. அதில், தண்ணீர்ப் பகிர்வு அளவில் மட்டுமே மாற்றம் செய்திருக்கிறோம், மற்றவற்றில் காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (மேலாண்மை வாரியத்திற்கு) தண்ணீர் பகிர்வு தன்னாட்சி அதிகாரம் மட்டுமே வழங்கியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான செயல் என்று கூறி, அந்த ஆணையத்தின் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

இப்பொழுது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள செளமித்திர குமார் ஹல்தர், இதற்கு முன் ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். காவிரி ஆணைய நிரந்தரத் தலைவர் பதவியை ஐந்தாண்டுகளுக்கு மோடி அரசு அவருக்குப் பரிசாக வழங்கியிருக்கிறது. அதற்கு நன்றிக் கடனாக, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்திக் கொள்ள மேக்கேதாட்டிற்கு அனுமதி கொடுக்கத் துடிக்கிறார் ஹல்தர்.

இதே எஸ்.கே.ஹல்தர் நீராற்றல் துறைத் தலைவராக இருந்த போதுதான் மேக்கேதாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கர்நாடக அரசிடம் கேட்டு வாங்கி, அதைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தார்.
எனவே, ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், தண்ணீர்ப் பகிர்வை மட்டும் செயல்படுதும் தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து சட்டமுறையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================
 

Labels: ,

"மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு : மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!"-- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, February 8, 2022

 


மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு
அனுமதி அளிக்க முடிவு :
மக்களவையில் அமைச்சர் ஒப்புதல்!
========================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
========================================

நாடாளுமன்ற மக்களவையில் 07.02.2022 அன்று கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி உறுப்பினர் பிரஜ்வால் ரேவன்ணா மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பது பற்றிக் கேட்ட வினாவுக்கு, சுற்றுச்சூழல் – வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, இந்திய அரசு அனுமதி கொடுப்பதற்கான முயற்சியில் இருக்கிறது என்று விடை அளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் நீராற்றல் துறையும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசின் வரைவு செயலாக்க அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின், மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிப்பது குறித்து ஒன்றிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை முடிவு செய்யும் என்று அஸ்வினி சௌபே கூறியுள்ளார்.

நடைமுறை உண்மை என்னவெனில், ஒன்றிய நீராற்றல் துறை ஏற்கெனவே மேக்கேதாட்டு அணைக்கான வரைவு செயலாக்க அறிக்கையைத் தன்னளவில் ஏற்றுக் கொண்டதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்கச் செய்வதற்காக, அதற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு ஒப்புதல் தெரிவிப்பதை தனது பொருள் நிரலில் வலிந்து சேர்த்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் – அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது.

இப்போது, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலைத் துறை அமைச்சகம் அனுமதி தருவதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் மட்டுமே பாக்கியாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மேக்கேதாட்டு அணை ஒப்புதல் பற்றி விவாதிக்க முடியாது, அதற்கு ஒப்புதல் தரக்கூடாது என தமிழ்நாடு தடுத்தால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தையே நடத்த மாட்டோம் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் சௌமித்ர குமார் ஹல்தர் கூறாமல் கூறுவதுபோல், கடந்த திசம்பரிலிருந்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தேதி குறித்துவிட்டு, காலவரம்பின்றி ஒத்தி வைத்து விட்டார்.

இப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள சௌமித்ர குமார் ஹல்தர் இதற்கு முன் ஒன்றிய நீராற்றல் துறையின் தலைவராக இருந்தவர் என்பதும், இவர்தாம் மேக்கேதாட்டு ஒப்புதலுக்கு, அதன் வரைவு செயலாக்க அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைத்தவர் என்பதும் நாடறிந்த உண்மை!

மேக்கேதாட்டு அணை கட்டினால் கர்நாடகத்தின் காட்டு உயிரினங்கள் வாழும் 2,925.50 எக்டேர் நிலமும், 1869.50 எக்டேர் காப்புக் காடுகளும், ஐந்து கிராமங்களும் நீரில் மூழ்கும் என்று கர்நாடக அரசு அளித்த வரைவு செயலாக்க அறிக்கை கூறுவதையும் அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எடுத்துக் கூறுகிறார். ஆனாலும், அனுமதி அளிப்போம் என்று விடையிறுத்துள்ளார்.

மிகை நீர் மற்றும் குடிநீர் அணை என்று மேக்கேதாட்டு அணைக்குப் புனை பெயர் வைத்துள்ளார்கள். இந்த அணையின் கொள்ளளவு 67.15 ஆ.மி.க. (டி.எம்.சி.) காவிரியில் கர்நாடக, மற்றும் மேட்டூர் அணைகள் நிரம்பி 67.15 ஆ.மி.க. அளவுக்கு மிகை நீர் கடலில் கலந்த வரலாற்றைக் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஒரு தடவை கூட கண்டதில்லை. நடப்புக் காவிரித் தண்ணீர் ஆண்டில் வரலாறு காணாத பெருமழை பெய்து, காவிரியின் மிகை நீர் கடலில் கலந்தது. அதன் அளவு 42 ஆ.மி.க. மட்டுமே! இவ்வளவு பெருமழை பெய்த இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்கு மாதாமாதம் திறந்துவிட வேண்டிய காவிரி நீரைக் கர்நாடக அரசு அந்தந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

எனவே, மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டுவிட்டால் ஒரு சொட்டுக் காவிரி நீர் கூடக் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வராது. தமிழ்நாட்டுக் குடிநீரையும் பாசன நீரையும் காவு கொள்ள இந்திய – கர்நாடக பா.ச.க. ஆட்சிகளின் சதித் திட்டத்தை முறியடிக்கத் தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப் போகிறது? த.நா. முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.

காவிரி உரிமைச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர்களுக்கு மட்டும் உரியதல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக் குடிநீர் மற்றும் உணவு உற்பத்திக்கான சிக்கல் என்பதையும், தமிழினத்தின் உரிமைச் சிக்கல் என்பதையும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

"நீட் விலக்கு : ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் முடிவில்! அனைத்துக் கட்சியினர் பாசாங்குத் தீர்மானத்தில்!"-- ஐயா பெ. மணியரசன், தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

Sunday, February 6, 2022


 நீட் விலக்கு :
ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் முடிவில்!
அனைத்துக் கட்சியினர் பாசாங்குத் தீர்மானத்தில்!
========================================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
========================================


தமிழ்நாடு சட்டப்பேரவை 13.9.2021 அன்று நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி 140 நாள் வரை கிடப்பில் போட்டு வைத்து, 1.2.2022 அன்று “இது சரி இல்லை; மறு ஆய்வு செய்க” என்று கூறி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்குத் திருப்பி அனுப்பி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரிய செயல். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பைத் தடுக்கும் தன்மையில் உள்ளது ஆளுநரின் இச்செயல்!

மாறாக, ஆளுநர் ஆர்.என். இரவி திருப்பி அனுப்பியதற்கான காரணத்தைத் தலைகீழாகச் சொல்கிறார். நீட் தேர்வு இல்லை என்றால் கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வில் பெற்ற அதிக மதிப்பெண் வரிசைப்படி ஏற்கெனவே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றபோது கிராமப்புற, ஏழை மாணவர்கள் தங்கள் திறமையின் அடிப்படையில் நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் இந்திய அரசு நீட் என்ற நுழைவுத் தேர்வை திணித்தபின் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது குறைந்து விட்டது.

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்த நீட் நுழைவுத் தேர்வு இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி வினாக்களைக் கொண்டது தமிழ்நாட்டு மாணவர்கள் மிகப்பெரும்பாலோர் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத் திட்டத்தின்படி தேர்வெழுதி வென்றவர்கள்.

இரண்டு, வசதி படைத்த மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயின்று, தேர்வெழுதி வெல்கிறார்கள்.

மூன்று, இந்தி மாநிலங்களில் நீட் உள்ளிட்ட எல்லா நுழைவுத் தேர்வுகளிலும் பணம் கொடுத்துத் தவறான வழிகளில் செயற்கையாக அதிக மதிப்பெண் "வாங்குகிறார்கள்".

நீட் தேர்வை நீக்கிவிட்டால் பொருளியல் அடிப்படையில் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆர்.என். இரவி கூறுவதில் மறைமுகமாக வேறு ஒரு பொருள் இருக்கிறது. இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் ஆதிக்க சாதிகளில் உள்ளோர் அனுபவித்து வந்த ஏகபோகம் பாதிக்கிறது என்று மனம் பாதித்த மோகன் பகவத் - மோடி ஆட்சி, முன்னேறிய சாதிகளில் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயும் அதற்கு கீழும் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி செயல்படுத்தி வருகிறது நீட் தேர்வு இருந்தால் அந்த “ஏழைகளுக்கு” மருத்துவக் கல்லூரிகளில் அவர்களின் ஏகபோகம் சிதையாமல் பாதுகாக்கப்படும் என்ற நோக்கில் நீட் தேர்வு தேவை என்று ஆளுநர் ஆர்.என். இரவி முடிவு செய்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க.வின் இந்திய அரசு, ஆரியத்துவ இந்தியக் கொள்கையும் மாநில அரசுகளை மாநகராட்சியாக்கும் ஒற்றையாட்சி கொள்கையும் கொண்டுள்ளது. மாநில அரசு நிதியில் நடக்கும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய அளவில் இந்திய அரசு தேர்வு செய்யும் விதிமுறையை கொண்டுவர உள்ளது. அதற்கான முன்னோட்டம் தான் நீட்! தமிழ்நாடு அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேர்க்கையும் இந்திய அரசே நடத்தும் திட்டமும் மோடியின் மேசை மீது உள்ளது.

இவை அனைத்தும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் நீட் தேர்வு நீக்கத்தை வலியுறுத்துவதற்காக 5.2.2022 சென்னை கோட்டையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு ஏமாற்றமளிக்கிறது.

வரும் 8.2.2022 அன்று சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தி, மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என். இரவிக்கு அனுப்புவது என்ற முன்மொழிவை முதலமைச்சர் சார்பில் நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் முன்வைக்க, அனைத்துக் கட்சிகளும் ஒருமனமாய் அதைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளார்கள்.

இவ்வாறு இரண்டாம் முறையாக அனுப்பினால், அதை ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை. மீண்டும் காலவரம்பின்றி அதை ஆளுநர் கிடப்பில் போடலாம். அல்லது ஆதரவுப் பரிந்துரையின்றி, “ஆய்வு செய்க” என்று குடியரசுத் தலைவர்க்கு அனுப்பிவிடலாம். குடியரசுத் தலைவர் மோடி அரசின் கொள்கைகளைக் கொண்டவர். ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைத்தால்தான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கையொப்பம் போட முடியும் என்பது சட்ட முறைமை!

மோடி அரசின் கொள்கையைச் செயல்படுத்தும் முறையில்தான் ஆளுநர் ஆர்.என். இரவி நீட் விலக்கு சட்ட முன்வடிவை செல்லாததாக்கித் திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநர் தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டிற்கு எதிரானவர் போலும், மோடி அரசின் பார்வைக்குப் போய்விட்டால் நீட் விலக்கு சட்ட முன்வடிவு சட்டமாகிவிடும் என்பது போலவும் தி.மு.க. திட்டமிட்டுப் பாசாங்கு செய்கிறது.

மேற்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் அண்ணாவின் மேற்கோளை எடுத்துக்காட்டினார். “ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்பது அந்தப் “பொன் மொழி”! தாடியினால் ஆட்டுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. ஆளுநரால் மாநில இறையாண்மைக்கு – உரிமைகளுக்கு ஆபத்து. “ஆண்டை – அடிமை” பகுப்பைப் பராமரிப்பதற்காகவே பிரித்தானிய ஏகாதிபத்தியம் உருவாக்கியது மாநில ஆளுநர் பதவி! இவ்வளவு ஆபத்துகளும் உரிமைப் பறிப்புகளும் நிரம்பிய பதவியை ஆட்டுத் தாடியுடன் ஒப்பிட்டுப் பேசும்போதே, தி.மு.க. ஆட்சியாளர்களின் தில்லி விசுவாசம் பளிச்சிடுகிறது.

தி.மு.க.வின் நீட் எதிர்ப்பு வெறும் நடிப்பு என்பதை இன்று (6.2.2022) “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது. தந்தி தொலைக்காட்சியில் 6.2.2022 இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ். பாரதியின் நேர்காணல் அது! அதன் தலைப்பு : “நீட் விலக்கு : 2022 லட்சியம்.. 2024 நிச்சயம் – அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். பாரதி”. – “தந்தி டி.வி. கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சி!

அடுத்த ஆண்டில் கூட நீட் தேர்சை நீக்க முடியாது என்று ஆர்.எஸ். பாரதி கூறுவதாகத் தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரசு – தி.மு.க. கூட்டணி வென்று, இராகுல் காந்தி தலைமை அமைச்சர் ஆகிவிடுவார். அப்போது நீட்டுக்கு விலக்குக் கிடைக்கும் என்கிறார் ஆர்.எஸ். பாரதி! 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தி.மு.க. இப்போதே தொடங்கி விட்டது.

காங்கிரசுக் கட்சிதான் 2010இல் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. அப்போது, காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி! ஒன்றிய அமைச்சர்களாக தி.மு.க.வினர் வீற்றிருந்தனர். அப்போது நீட்டை எதிர்த்துக் குரல் கொடுத்ததா தி.மு.க.? நுழைவுத் தேர்வே கூடாதென 2006இலேயே சட்டம் கொண்டு வந்ததாக, இப்போதும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க., 2010இல் நீட் தேர்வுக்கான சட்டத்தைக் காங்கிரசு கொண்டு வந்தபோது என்ன செய்தது? நீட்டைக் கைவிட காங்கிரசு மறுத்தால் தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகிப் போராடி இருக்கலாமே! எதுவும் இல்லை!

தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிகளும், தி.மு.க.வைப் போலவே பாசாங்காக நீட் எதிர்ப்புப் பேசி பசப்புகின்றனர், மக்களை மயக்குவதற்காக! அதேவேளை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து மோடி விசுவாசத்தை மீண்டும் நிலைநாட்டிய அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டகம் படுமோசமானது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் 5.2.2022 அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நீட் விலக்கை வலியுறுத்திப் போராட்டம் எதையும் முடிவு செய்யவில்லை. தி.மு.க. முன் கூட்டியே எழுதிக் கொண்டு வந்திருந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுக்கும் வேலையைத்தான் மற்ற கட்சிகள் செய்திருக்கின்றன. தமிழ் மக்களைக் கவர போராட்டமெல்லாம் தேவை இல்லை, கவர்ச்சி வசனங்கள் போதும் என்பது தி.மு.க. – அ.தி.மு.க.வின் நிரந்தர நிலைபாடு! குட்டிக் கழகங்களாக மற்ற கட்சிகளும் மாறிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் கல்வி உரிமையை மீட்க, தமிழ்நாட்டு மாணவர்கள் தாராளமாக மருத்துவர்கள் ஆவதற்கு, நீட் விலக்குப் போராட்டத்தைத் தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சியாகச் செயல்படுத்த வேண்டும். ஐட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுத்திட, உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடிட, ஏறு தழுவுதல் என்ற சல்லிக்கட்டுத் தடையை நீக்கிட, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இளையோரும் பெரியவர்களும் போராடி வென்றதுபோல், நீட்டைத் தடுத்திடத் தமிழ்நாடு தழுவிய மக்கள் போராட்டம் தேவை!

====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==================================== 

Labels: , , ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்