<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

காவிரியில் உரிய நீரே கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம் சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும்! பெ. மணியரசன் அறிக்கை!

Wednesday, July 24, 2019


காவிரியில் உரிய நீரே 
கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம்
சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


கடந்த 21.07.2019 அன்று சேலம் மாவட்டம் - எடப்பாடியில் நடந்த அரசு நலத்திட்ட வழங்கு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மேட்டூர் – ஓமலூர் - எடப்பாடி - சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் புதிதாக மிகப்பெரிய அளவில் 100 ஏரிகள் அமைத்து, காவிரி உபரி நீரை அவற்றில் தேக்கி, வேளாண்மைக்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் தருவதற்காக 565 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியிருப்பதாக அறிவித்தார். 

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தொடர்ந்து காவிரிச் சடுகுடு விளையாடி வருகிறார். காவிரித் தண்ணீர் சட்டப்படி கிடைத்துவிட்டதைப் போல் பாவனை காட்டி “வெற்றி” விழாக்களை நடத்தினார். அதன்பிறகு, கோதாவரியிலிருந்து 200 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கொண்டு வந்து காவிரியில் இணைக்கப் போவதாகக் கூறினார். இப்பொழுது சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகள் உருவாக்கிக் காவிரி நீரைக் கொண்டு வரப்போவதாக அம்மாவட்ட மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார். 

இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்குக் காவிரியில் உபரி நீர் இல்லை! ஏற்கெனவே, காவிரி உபரி நீரைப் பயன்படுத்துவதற்காக 1950களில் புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் மற்றும் புள்ளம்பாடிக் கால்வாய் ஆகியவை காமராசர் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. அவற்றிற்கு ஆண்டுதோறும் விடுவதற்கு உபரி நீர் கிடைக்கவில்லை! 

அடுத்து, 1952இல் புதுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த – காலஞ்சென்ற முத்துசாமி வல்லத்தரசு அவர்கள், காவிரி உபரி நீரை மாயனூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் பேசினார். அதற்காக கடந்த 2006 – 2011 காலத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசால் திட்டம் தீட்டப்பட்டது. 

காவிரியில் தண்ணீரைத் தேக்கிக் குண்டாறு இணைப்புக் கால்வாய்க்குக் கொண்டு போவதற்காக மாயனூரில் காவிரியின் குறுக்கே ஆறடி உயரத்திற்குக் கதவணை கட்டப்பட்டுள்ளது. அத்தோடு சரி! அதன்பிறகு, இணைப்புக் கால்வாய் வெட்டுவதில் எந்த வேலையும் நடைபெறவில்லை! அதற்கு, நடப்பு நிதிநிலை அறிக்கையில்கூட நிதி ஒதுக்கவில்லை. திருச்சி, புதுக்கோட்டை, தென்வெள்ளாறு, காரைக்குடி, மானாமதுரை, வைகையாறு, விருதுநகர், இராமநாதபுரம், குண்டாறு இணைப்புக் கால்வாய்க்கான எந்த வேலையும் நடைபெறவில்லை! 

இத்திட்டம் தேங்கி நிற்பதற்கு நிதிச்சுமை மட்டும் காரணமில்லை! செய்கின்ற செலவுக்கு ஏற்பப் பயன்பெறும் வகையில் காவிரியில் உபரி நீர் கிடைக்காது என்பதுதான் பொறியியல் மற்றும் வேளாண் வல்லுநர்களின் கருத்து. எனவே, அது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

1934லிருந்து 1984 வரை ஐம்பதாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 362.8 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்தது. காவிரித் தீர்ப்பாயம் தனது இடைக்காலத் தீர்ப்பில் (1991 சூன் 25) கர்நாடகம் 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டால் போதும் என்று தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் (2007 பிப்ரவரி 5) 192 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட்டால் போதும் என்று கூறியது. இறுதியாக, அதை உச்ச நீதிமன்றம் 16.2.2018 இல் கர்நாடகம் 177.25 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்தால் போதும் என்று தீர்ப்பளித்தது. எந்தத் தீர்ப்பின்படியும் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது! இந்நிலையில், காவிரியில் உபரி நீர் கிடைக்க என்ன வழி இருக்கிறது? 

வெள்ளம் வரும்பொழுது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடலுக்குப் போகிறது என்ற கருத்து கூறப்படுகிறது. அண்மைக்கால அனுபவத்தில் 2005இல் வெள்ளம் ஏற்பட்டது; அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2013இல் வெள்ளம் ஏற்பட்டது; அதன்பிறகு ஐந்தாண்டு கழித்து 2018இல் வெள்ளம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் வெள்ளம் வருவதுமில்லை; மேட்டூரிலிருந்து உபரி நீர் கடலுக்குப் போவதுமில்லை! ஆண்டுதோறும் காவிரி நீர் கடலுக்குப் போகாத காரணத்தால், காவிரி பாயும் கடலோர மாவட்டங்களில் கடல் நீர் நிலத்தடியில் மேலும் மேலும் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்பு நீராக்கிவிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, ஏதோ ஆண்டுதோறும் காவிரியில் உபரி நீர் கிடைப்பது போலவும், அதைப் பயன்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் தேவைப்படுவது போலவும் ஒரு முதலமைச்சர் பேசுவது பொறுப்பான செயல் அல்ல! 

சேலம் மாவட்ட மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி அரசியல் செய்யும் உத்தியாகவே இது இருக்கும்! இப்பொழுது, சென்னைக் குடிநீருக்கு கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய 12 ஆ.மி.க. தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வாங்க முடியவில்லை! அவர் கொடுத்த அறிக்கையில் நடப்பாண்டில் 2 ஆ.மி.க. தண்ணீர் மட்டும்தான் கிருஷ்ணா ஆற்றிலிருந்து வந்திருக்கிறது என்று கூறுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் காவிரி ஆணையத்தின் ஆணைகளின்படியும் கர்நாடகத்திடமிருந்து சட்டப்படி பெற வேண்டிய தண்ணீரை பெற முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மக்களுக்கு புதிதாக 100 ஏரிகளில் பாசனத்திற்குத் தண்ணீர் கொடுக்கப் போவதாக கானல் நீர் நம்பிக்கை ஊட்டுகிறார். 

மேட்டூர் அணைத் தண்ணீர் தீருமளவிற்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து முதலில் 8,000 கன அடியும், பிறகு 6,000 கன அடியும் அன்றாடம் விதிமுறைகளுக்கு மாறாக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்பிறகு, நாள்தோறும் 1,000 கன அடி சென்னைக் குடிநீருக்கென திறந்துவிட ஆணையிட்டிருக்கிறார். இந்த நீர் வீராணம் ஏரி வழியாக சென்னைக்கு செல்கிறது. இத்தோடு நில்லாமல், மேட்டூர் கூட்டுக் குடிநீரிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வரும் காவிரி நீரில் சோலையார்பேட்டையிலிருந்து தொடர்வண்டி மூலமாக அன்றாடம் 1 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். 

காவிரி குண்டாறு திட்டம், இருவழியில் சென்னைக்குக் குடிநீர் திட்டம், புதிதாக அறிவித்துள்ள சேலம் மாவட்ட 100 ஏரித் திட்டம் ஆகியவை செயல்பட்டால் திருச்சி – தஞ்சை – திருவாரூர் – நாகை – புதுக்கோட்டை – கடலூர் மாவட்டங்களின் மரபுவழிப் பாசனத்திற்கு தண்ணீர் மிச்சம் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கும் வழியில்லை! 
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், சேலம் மாநகரத்தில் ஒரு வாரத்திற்கு ஒருநாள்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. சேலம் மாநகர மக்களுக்கும், சேலம் மாவட்ட மக்களுக்கும் அன்றாடம் குடிநீர் வழங்கும் திட்டத்தைக்கூட செயல்படுத்த முடியாத அ.இஅ.தி.மு.க. அரசு, புதிதாக நான்கு தொகுதிகளில் 100 ஏரிகளில் தண்ணீர் தேக்குவோம் என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது? 

எட்டுவழிச் சாலைக்கும், ஓமலூர் வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கும் பல்லாயிரக்கணக்கான வேளாண் விளை நிலங்களை எடுப்பதை எதிர்த்து சேலம் மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே நூறு ஏரி புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 

சேலத்தில் காவிரி ஆற்றின் நீர் மட்டத்தைவிட நிலத்தின் மட்டம் மிக உயரமானது. எனவே, தண்ணீரை மேட்டார் மூலம் மேலே ஏற்றித்தான் கொண்டு போக முடியும். 

எனவே, எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத நூறு ஏரித் திட்டத்தை முதலமைச்சர் கைவிட்டு சேலம் மாநகரம் – மாவட்ட மக்களுக்கு அன்றாடம் குடிநீர் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை செய்யும் புதுச்சேரி சட்டமன்றத் தீர்மானத்தை இந்திய அரசு ஏற்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, July 23, 2019


ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை செய்யும்
புதுச்சேரி சட்டமன்றத் தீர்மானத்தை 
இந்திய அரசு ஏற்க வேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் 
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


புதுச்சேரி மாநிலத்தில் ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதித்து புதுச்சேரி சட்டப்பேரவையில், தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பாராட்டுக்குரிய செயல்! புதுச்சேரி முதலமைச்சர் திரு. வே. நாராயணசாமி அவர்கள், ஓ.என்.ஜி.சி.யோ, வேறு தனியார் நிறுவனமோ எதுவாக இருந்தாலும் ஐட்ரோகார்பன் எடுக்க விடமாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

“ஐட்ரோகார்பனைத் திணிக்காதே” என வலியுறுத்தி கடந்த சூலை 13 – 14 நாட்களில் பரப்புரை இயக்கமும், சூலை 16 அன்று மனிதச் சங்கிலியும் நடத்தினார். இவற்றையும் மீறி புதுச்சேரியின் காரைக்கால் – பாகூர் பகுதிகளில் ஐட்ரோகார்பன் எடுக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நமது காவிரி உரிமை மீட்புக் குழு – புதுச்சேரி பிரிவு, கடந்த 02.07.2019 அன்று புதுச்சேரியில் ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதிக்கக் கோரி புதுவை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. அதில் 55 பேர் கைதானார்கள். அடுத்து, 13.07.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நானும், புதுவை தோழர்களும் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து புதுச்சேரியில் ஐட்ரோ கார்பனைத் தடை செய்து தனி அரசாணை வெளியிடுமாறு கோரிக்கை விண்ணப்பம் அளித்தோம். நாங்கள் கொடுத்த ஆவணங்களை முழுமையாகப் படித்துவிட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். பல்வேறு விவசாய சங்கங்களும் அவ்வாறு மனுக்கள் அளித்தன.

இன்று (23.07.2019) புதுச்சேரி சட்டப்பேரவையில், புதுச்சேரி மாநிலத்தில் ஐட்ரோகார்பன் எடுக்கத் தடை விதித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.மாநில உரிமையை காப்பதிலும், மக்கள் நலனுக்குக் குரல் கொடுப்பதிலும் புதுச்சேரி அரசின் செயல் பாராட்டத்தக்கது! 

புதுச்சேரி சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு மதிப்பளித்து, இந்திய அரசு புதுவை – காரைக்கால் பகுதிகளில் ஐட்ரோகார்பன் எடுக்கக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறுவதுடன், இனி புதிதாகக் கொடுக்கக் கூடாது என்று இந்திய அரசை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, புதுச்சேரியைப் பின்பற்றியாவது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தி – 2015இல் செயலலிதா அம்மையார் முதல்வராக இருக்கும்போது நீரியல் விரிசல் முறையில் கனிமங்கள் எடுக்கத் தடை செய்து போட்ட ஆணை இன்றும் செயல்பாட்டில் இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி.யோ தனியார் நிறுவனங்களோ ஐட்ரோகார்பன் ஆய்வு செய்ய கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், ஐட்ரோகார்பன் எடுக்க முழுமையாகத் தடை விதித்துத் தீர்மானம் நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன். 

Labels:

Friday, July 12, 2019


ஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு
காவிரி வழக்கை விட முடியாது!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
திரு. பெ. மணியரசன் அறிக்கை!

ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே குடும்ப அட்டை – புதுதில்லியில் மட்டும் ஒரே அதிகார மையம் என்ற ஒருமைவாதக் கொள்கையுடைய பா.ச.க. ஆட்சி, இப்பொழுது இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமுள்ள மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுகளை விசாரிக்க ஒற்றைத் தீர்ப்பாயம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள “மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் – 1956”-ஐ இரத்து செய்கிறது. அச்சட்டப்படி தண்ணீர் பகிர்வில் சிக்கலுக்குரிய மாநிலங்களுக்கு மட்டும் தனியே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் மூலம்தான் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, இரவிபியாஸ் போன்ற பல சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

கடந்த 2017 மார்ச் மாதம், இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதாவாக முன்மொழிய நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருந்தார்கள். காவிரித் தீர்ப்பாயம் 2007லேயே இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையில், காவிரி வழக்கையும் அந்த ஒற்றைத் தீர்ப்பாயத்தின் புது விசாரணைக்கு அனுப்புவது என்று முன்மொழிந்திருந்தார்கள்.

இதையறிந்த காவிரி உரிமை மீட்புக் குழு, அதற்குக் கண்டனம் தெரிவித்து ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற சட்டம் கொண்டு வரக்கூடாது என்று என் தலைமையில் 2017 மார்ச் 28லிருந்து 19 நாட்கள் - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இரவு பகலாக உழவர்களும், உணர்வாளர்களும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். வெளி மாவட்டங்களிலிருந்து தமிழ் நாட்டின் உரிமைகள் மீது அக்கறையுள்ள இளைஞர்கள் – ஆண்களும் பெண்களும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு வேளாண் அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அனைத்துக்கட்சித் தலைவர்களும், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் காத்திருப்புப் போராட்டப் பந்தலுக்கு நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்து ஆதரவு நல்கினர்.

ஒற்றைத் தீர்ப்பாயம் கூடாது என்ற இந்தக் காத்திருப்புப் போராட்டம் நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இவ்வாறு நடுவண் மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை அப்போராட்டம் ஈர்த்தது. மக்களவையின் நிகழ்ச்சி நிரலில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவு அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

இப்பொழுது, அந்த ஒற்றைத் தீர்ப்பாய சட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழியப் போவதாக அறிவித்துள்ளது.

ஒற்றைத் தீர்ப்பாயம் என்பது, ஆறுகளில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளைப் பறிப்பது ஆகும்; அத்துடன் மாநிலக் கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளை நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு போகும் நோக்கமுடையதாகும்! ஆற்று நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு, வேளாண் பாசனத்திற்கும், குடிநீருக்கும் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது.

எனவே, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் என்ற முன்மொழிவை காவிரி உரிமை மீட்புக் குழுக் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் எதிர்க்க வேண்டும்.

காவிரி வழக்கு
------------------------
காவிரி வழக்கில் தீர்ப்பாயம் 2007இல் இறுதித் தீர்ப்பு வழங்கி, அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் 16.02.2018இல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதித் தீர்ப்பு 15 ஆண்டு வரை செயல் பாட்டில் இருக்கும், இதை யாரும் மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட மேலதிகாரம் கொண்டதாக ஒற்றைத் தீர்ப்பாயம் இருக்க முடியாது!

எனவே, காவிரிச் சிக்கலை புதிதாக அமையவுள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்தில் வழக்காக மாற்றுவதற்கு சட்டப்படியான வாய்ப்பு எதுவுமில்லை!

அதேவேளை, இந்த ஒற்றைத் தீர்ப்பாயம் ஆறுகளின் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமையைப் பறிப்பது, ஆறுகளை தனியாரின் வணிகப் பொருளாக மாற்றுவது போன்ற சனநாயக விரோத - மக்கள் விரோதத் திட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒற்றைத் தீர்ப்பாய முன்மொழிவை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும்! பெ. மணியரசன் அறிக்கை!

Friday, July 5, 2019

இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை
மிச்சமிருக்கும் மாநில
உரிமைகளையும் பறித்துவிடும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று (05.07.2019) மக்களவையில் தாக்கல் செய்துள்ள 2019 - 2020 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, “மாநில அரசுகளே இனி தேவையில்லை; எல்லாவற்றையும் நடுவண் அரசே பார்த்துக் கொள்ளும்” என்ற கருத்தைத்தான் மறைமுகமாக வலியுறுத்துகிறது.
வீடுகளுக்குக் குடிநீர் வழங்குவது, வீடு கட்டித் தருவது உட்பட அனைத்துத் திட்டங்களையும் இந்திய அரசே நேரடியாகச் செய்யும் என்ற திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். அனைத்திந்திய அளவில் தண்ணீர் அதிகார மையம் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார். அதைப்போல், அனைத்திந்திய அளவில் மின்சார அதிகார மையம் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார்.
ஏற்கெனவே, இந்தியா முழுமைக்கும் ஒரே குடும்ப அட்டை (ரேசன் கார்டு) திட்டத்தை அறிவித்துள்ளார்கள். மாவட்ட அளவிலான நீதிபதிகள் நியமனம், தொடக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை அனைத்திந்திய அளவில் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இனி மாநில ஆட்சி என்பது, இந்திய அரசின் ஏவல்களைச் செய்யும் முகவாண்மையாக நடைமுறையில் மாறிவிடும்!
கவர்ச்சியான சொற்களால் கட்டமைக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை காகிதப் பூ மாலை போல்தான் உள்ளது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம், ஒரு இலட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார்.
குடும்பத்திற்கு வருமானமில்லாமல் திவாலாகிப் போன நிலையில்தான், நகைகள் உள்ளிட்ட வீட்டின் சொத்துக்களை விற்று குடும்பச் செலவுகள் பார்ப்பார்கள். அதைப்போல் தான் மக்களின் சொத்தாகிய பொதுத்துறை நிறுவனப் பங்குகளை அயலாருக்கு விற்று இந்திய அரசு நிர்வாகம் நடத்துகிறது.
அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்களையும் விற்று பணம் ஈட்டப் போகும் செய்தியை நேற்று (04.07.2019) தாக்கல் செய்த நிதிநிலை ஆய்வறிக்கையில், இந்திய அரசின் முதன்மைப் பொருளாதார மதியுரைஞர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி உள்ளார்கள். ஏற்கெனவே பெட்ரோல் டீசல் விலை அன்றாடம் உயர்ந்து வருவதால், பெருமளவு விலையேற்றங்கள் ஏற்படுகின்றன. மக்கள் பெரும் பொருளாதார சுமைகளைத் தாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தங்களின் வருவாயில் கணிசமானத் தொகையை பெட்ரோல், டீசல் அபகரித்துக் கொள்வதால் மக்கள் அல்லாடுகிறார்கள்.
கிராமங்களிலிருந்து அதிக மக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்வதால், நகர வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்று கூறி, நகரங்களுக்கு அதிக மக்கள் வராத வகையில் கிராமங்களிலேயே அதிக வசதிகள் செய்துத் தருவோம் என்று நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார்.
சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை போன்ற பல நகரங்களில் இந்திக்காரர்கள் அதிகமாகக் குடியேறுவதால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இந்திக்காரர்களும் வெளி மாநிலத்தவரும் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்நாட்டில் மண்ணின் மக்களின் தாயக உரிமையையும் வாழ்வுரிமையையும் பறித்துக் கொள்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு இந்திய ஆட்சியாளர்கள் நிதிநிலை அறிக்கையில் தீர்வு சொல்வில்லை!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதில் இந்திய ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லையா அல்லது இந்த நெருக்கடி நீடிக்கட்டும் – வளரட்டும் என்று இனப்பாகுபாட்டு நோக்கத்தோடு அவர்கள் கருதுகிறார்களா?
ஒட்டுமொத்த இந்தியாவிலும் உழவர்கள் துயரம் பெரிது; தாங்க முடியாத கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அவர்கள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களுக்கும் மற்ற வேளாண் விளை பொருட்களுக்கும் இலாபவிலை கிடைக்காமல் இந்திய அரசு முடக்கி வைத்திருப்பதுதான்!
இந்திய அளவில் நெல் - கோதுமை உற்பத்தி உபரியாக இருக்கிறது. எனவே, வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்து இலாப விலையில் விற்க இந்திய அரசு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். அதுபற்றி எந்தப் பேச்சும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை! “உழவர்களை வாழ வைப்போம்” என்று கூறும் நிர்மலா சீத்தாராமனின் ஒய்யாரப் பேச்சு, அவர்களை எப்படி வாழ வைக்கும்?
வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை என்று கூறுவதே உழவர்களின் வயிற்றில் அடிக்கும் கொள்கையாகும்! சந்தையில் மற்றப் பொருட்களின் விலை மதிப்புக்கு ஏற்ற அளவில் (Parity in price), வேளாண் விளை பொருட்களின் விலையும் உயர வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல இலாப விலை கிடைக்க ஆட்சியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பொழுது நெல்லின் விலை ஒரு கிலோவுக்கு 65 காசு உயர்த்தி இருக்கிறார்கள். இது எந்த வகையில் உழவர்களின் உழைப்புக்கு நீதி வழங்கும்?
நிதிநிலை அறிக்கை எந்த வகையிலும் நாட்டு மக்களின் துயரம் தீர்ப்பதாகவோ, பொருளாதார வளர்ச்சிக்குரியதாகவோ இல்லை என்பதுடன், மிச்சம் மீதி இருக்கும் மாநில உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கிறது!

Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்