<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது!"-- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Saturday, April 22, 2017

========================================
பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது!
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
========================================

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்.

என்றார் தமிழினப் பேராசான் திருவள்ளுவர். ஒருவர் வாழுங்காலத்தில் தகுதிகள் மிகுந்தவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது அவர் மறைவிற்குப் பின் எஞ்சி வாழும் அவரின் செயல்களால், கருத்து களால் அளக்கப்படும் என்றார். இக்குறளுக்கு ஒருவரின் பிள்ளைகளால் அவரின் தகுதி அறியப்படும் என்று பொருள் கூறுவாரும் உளர்.

அண்மையில் காலமான செயலலிதாவின் “தகுதியும் புகழும்” எத்தன்மையானவை என்பது அ.இ.அ.தி.மு.க. வினரின் இன்றையச் செயல்களால் அளக்கப்பட வேண்டும்.

செயலலிதாவுக்கே ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் தண்டத் தொகையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர் இறந்து விட்டதால் அவர் தண்டனை படிக்கப்பட வில்லை. காரணம் அத்தண்டனையை அனுபவிக்க ஆள் இல்லை என்பதால்!

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சசிகலா தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு மூன்று கோடி ரூபாயும் மூன்று கிலோ தங்கமும் கையூட்டாக வழங்கப்பட்டது என்கிறார்கள். சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் தனக்குப் பெண் பிள்ளை கள் இல்லாததால் மூன்று கிலோ தங்கம் வேண்டாம் அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து விடுங்கள் என்றாராம்!

நடிகர் சரத்குமாரை இழுக்க அவருக்கு ஏழு கோடி ரூபாய் தரப்பட்டதாம். அவர் வீட்டில் நடுவண் வருமானவரித்துறை சோதனை! நலத்துறை அமைச்சர் விசயபாஸ்கர் வீடுகளிலும் அவரின் உறவினர்கள் மற்றும் கையாட்களின் வீடுகளிலும் சோதனைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள் ளிட்ட அனைவரின் பணப் பதுக்கல் - ஊழல் அந்த ரங்கம் பலவற்றை வருவானவரி அதிகாரிகளிடம் விசய பாஸ்கர் உளறிக் கொட்டிவிட்டார் என்கிறார்கள்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தில்லித் தரகர் ஒருவர்க்கு தினகரன் கையூட்டுக் கொடுத்ததை அத்தரகரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தளைப் படுத்தப்பட்டார். அடுத்த கைது தினகரன் என் கிறார்கள். 

புரட்சித்தலைவியின் வாரிசாக விளம்பரப்படுத்தப் பட்ட “சின்னம்மா” என்கிற சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர்ச் சிறையில் உள்ளார்.

ஏற்கனவே, செயலலிதாவின் ஆட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த இராம மோகனராவ் வீடும் கோட்டை அலுவலகமும் சோதனை இடப்பட்டன.

இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்கள், வெளிவரப்போகின்றன. புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் பம்மிப் பதுங்கிக் கிடக் கிறார்கள்.

தக்க தலைமையின்றி, கூட்டுத் தலைமையுமின்றி சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க.!

ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட செயலலிதா - தந்திரங்களையும் சர்வாதிகாரத்தையும் மட்டுமே நம்பினார். இரண்டாம் நிலைத் தலைவர்கள், மூன்றாம், நான்காம் நிலைத் தலைவர்கள்கூட உருவாகாமல் தடுத்தார். செயலலிதா வீற்றிருக்கும் காரின் சக்கரத்தைப் பார்த்துக் கும்பிடும் கொத்தடிமைகளாக அவரின் அமைச்சர்கள் நடத்தப் பட்டார்கள். கொள்ளை விகிதம் போதும் என்று அமைச்சர்களும் அடங்கிக் கிடந்தார்கள். 

தமது ஆட்சியின் வழியாக அன்றாட நிர்வாக ஏற்பாடாகக் கிடைத்த ஊழல் பணத்தை மற்ற அமைச்சர்களுடன் அவரவர் தகுதிக்கேற்ப பகிர்ந்து கொண்டார். ஆனால் ஆட்சி மற்றும் கட்சியின் அதிகாரத்தைத் தகுதியான மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒற்றைச் சர்வாதிகாரியாக விளங்கி னார். 

அதனால், செயலலிதா மறைவுக்குப்பின் அந்தக் கட்சி, தலைமை இன்றி சின்னாபின்னமாய்க் கிடக் கிறது. அரசியலில் ஆனா, ஆவன்னா தொடர்பு கூட இல்லாத “தீபா” என்ற ஒரு பெண் - _ செயலலிதா வின் இரத்தத் தொடர்பு என்று கூறிக் கொண்டு தலைவி வேடம் போட்டுத் திரிகிறார். தீபாவின் கணவர் என்ற ஒரு நபர் தான்தான் தலைவர் என்று திரிகிறார். இந்த இருவரைச் சுற்றித் திரிய அ.தி.மு.க. முகவர்கள், தொண்டர்கள் பலர்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”.

சசிகலாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட அ.தி.மு.க. பொறுப்பில் - ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது, சசிகலா துதிபாடிகளாக இருந்தவர்களே இப்போது புது முடிவுக்கு வந்துள்ளார்கள். சீரழிவு மற்றும் குழப்பங்களுக்கிடையே இவ்வாறான மாற்றங்களும் நடக்கின்றன. 

இந்தக் குழப்பங்களில் ஆதாயம் பெற - ஆக்கிமிப்பில் இறங்க பா.ச.க. பதுங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குழப்பங்களை பா.ச.க.வே உருவாக்கும். 

நடுவண் வருமானவரித்துறையால் சோதனை இடப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளின் பட்டியலை நடுவண் அரசு கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வினரை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இதைச் சொல்பவர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி! 

அடுத்து, மோடி அரசின் அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் சேர வேண்டுமென்ற கருத்து அ.தி.மு.க. வின் அணிகளில் ஒன்றிலிருந்து வருகிறது. இதுவும் பா.ச.க. திரைமறைவு வேலையை அம்பலப்படுத்தும் செய்திதான்! 

தமிழினத்தைக் கருவறுக்கக் காத்துக் கிடக்கும் ஆரிய பா.ச.க., அண்ணா திமுக மந்தையை அப்படியே வளைத்துக் கொள்ள வலைவீசவில்லை! தடியைத் தூக்கி உள்ளது. அரசியல் ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம் இரண்டுமே இல்லாத ஆரிய மேலாதிக்கவாத பா.ச.க. வின் அதிகாரத்தின் முன் குலை நடுங்கிக் கிடக்கின் றனர் அம்மாவின் அடிமைகள்!

தமிழினத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தமிழர்களை எவர் மதிப்பார்?

பா.ச.க. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக அ.தி.மு.க. அணி ஒன்றை ஆதரிப்பதோ, தி.மு.க.வை ஆதரிப்பதோ தன்மானமற்ற, தற்சாற்பற்ற செயலாகும். காட்டிக் கொடுக்கும் கங்காணி அரசியலைக் காப்பதாகவே அமையும்.

ஒருவேளை அ.தி.மு.க. மந்தையை வளைத்துப் போட்டு, பா.ச.க. தமிழ்நாட்டு அரசியலில் தலை யெடுத்தால், அது தற்காலிக வீக்கமாகவே பா.ச.க.வுக்கு அமையும். எனவே இளைஞர்கள், தன்மானமுள்ள தமிழர்கள் பதற்றப்பட வேண்டாம்! தமிழ் மண் ஆரிய பா.ச.க.வை ஏற்காது!

கங்காணி அரசியல் நடத்தும் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளின் சிதைவில் தான் தன்மானமுள்ள தற்சார்புள்ள தமிழர் உரிமை அரசியல் கிளர்ந்தெழும்! அதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.

இந்துத்துவா அபாயத்தைத் தடுக்க தி.மு.க.வை ஆதரிப்போம் என்று இடதுசாரிகளும் இன்னபிற சின்ன தி.மு.க.க்களும் தோள்தட்டி நிற்கக்கூடும். அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றிற்குத் தமிழர்களுக்குத் தேவைப்படும் தனித்த இலட்சியமோ, வேலைத்திட்டமோ கிடையாது. அவ்வப்போது அடையாள எதிர்வினை ஆற்றி, தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகின்றன. அவற்றால் மாற்று அரசியலை உருவாக்க முடியாது.

பா.ச.க. என்ற பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது.

எதிர்ப்பு அரசியல் இலட்சிய அரசியல் ஆகிவிடாது. தி.மு.க., அ.தி.மு.க.-வின் சீரழிவு அரசியலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. பாணி வெற்றுவேட்டு அரசியலை அருவருக்கும் பண்பு வளர வேண்டும். 

தமிழ்த்தேசிய இலட்சியம், தமிழர் அறம் ஆகிய வற்றை அடித்தளமாக்கி, சரியான புதிய அரசியலை முன்னெடுத்தால் ஆரியவாத பா.ச.க. அரசியலைத் தமிழ்நாட்டில் ஓரங்கட்ட முடியும்.

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், ஏப்பிரல் 16-30 இதழில் வெளியானது. கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர்)

Labels:

இந்தித் திணிப்பு : ஆக்கத் திட்டத்தை முன்வைத்து ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்! -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Friday, April 21, 2017

======================================
இந்தித் திணிப்பு :
ஆக்கத் திட்டத்தை முன்வைத்து
ஆகாத திட்டத்தை எதிர்ப்போம்!
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
======================================

சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை; இந்தி பேசுவோர் இந்தியாவில் ஆளும் இனம்; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதோர் இந்தியாவில் ஆளப்படும் இனம் - என்பதை இந்திய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப நிலைநாட்டி வருகிறார்கள். 

இந்தி மொழி இந்தியாவில் நடுவண் அரசில் மட்டுமின்றி, மாநிலங்களிலும் ஆட்சி மொழி; மற்ற மொழிகள் இந்தி மேலாதிக்கத்தின் கீழ் இடைக்கால பேச்சு மொழியாய் இருக்கலாம். 

இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியின் கையொப்பத்துடன் மேற்கண்ட கூற்றுகள் சட்டமாகவும் நடுவண் அரசின் நடைமுறைகளாகவும் இப்போது வருகின்றன. 

இந்தி மேலாதிக்கத்தைப் பரப்புவதற்கான பரிந்துரைகள், நடுவண் அரசுக்கு வழங்க நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழு உள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு - தி.மு.க. ஆட்சி நடந்தபோது, தமிழ் இனத்தில் பிறந்தவிட்ட “எட்டப்பர்” ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு” (Committee of Parliament on Official Language) தனது 9ஆவது அறிக்கையை 2011இல் இந்திய அரசுக்கு அளித்தது. ப. சிதம்பரம் குழுவின் அந்த அறிக்கையில் கூறப்பட்டவற்றைத்தான் சட்டமாக்கியுள்ளது பா.ச.க. ஆட்சி!

“குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், நடுவண் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கு இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்தால், இனி அவர்கள் நாடாளுமன்றத்திலும், வெளியில் பொது நிகழ்வுகளிலும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும். நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை, இந்தியில் மட்டுமே அளிக்க வேண்டும்”.

“இந்தியா முழுவதும் அனைத்துவகைப் பள்ளிக் கல்வியிலும் (மாநில அரசுப் பாடத்திட்டக் கல்வி உட்பட), 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி ஒரு கட்டாயப் பாட மொழியாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும் கேந்திரியா வித்தியாலயாப் பள்ளிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். அடுத்து மாநில அரசுப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது பற்றி நடுவண் அரசு எல்லா மாநில அரசுகளுடனும் விவாதிக்க வேண்டும்”.

ப. சிதம்பரம் குழுவின் இவ்விரு பரிந்துரைகளையும் ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது. ப. சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே காங்கிரசு அமைச்சரவையில் அமைச்சராக அன்றிருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி இவ்விரு பரிந்துரைகளும் சட்டமாகும் வகையில் கையொப்பமிட்டுள்ளார். 

பிரணாப் முகர்சி கையெழுத்திட்ட அதே நாளில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடுவண் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “கூட்டு இந்தி அறிவுரைக் குழு (Joint Hindi Advisory Committee)” கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில் பா.ச.க.வைச் சோந்த அசாம் முதலமைச்சர் சர்வானந்த சோனோவால் பங்கேற்றுள்ளார். அக்கூட்டத்தில் பேசிய வெங்கய்யா நாயுடு, இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தங்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

“தாய் மொழி வாயிலாக நமது உணர்வுகளைப் பிறருடன் எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். இதை இந்தியிலும் நிறைவேற்ற முடியும்” என்று கூறியுள்ளார். 

மேலே உள்ளவற்றைத் தொகுத்துப் பாருங்கள். 

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப்பாடம்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களும் இந்தி தெரிந்தால் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவியில் உள்ளோர், நாடாளுமன்றத்திலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளிலும் இந்தியில்தான் பேச வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் தங்கள் தாய் மொழியைப் போல இந்தியையும் அன்றாட உரையாடலில் பயன்படுத்த வேண்டும். 

இதன் பொருள் என்ன? நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தமிழில் பேசக் கூடாது; ஆங்கிலத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியைக் கற்றுக் கொண்டு இந்தியில்தான் பேச வேண்டும் என்பதாகும்.

ஏனெனில், தமிழ்நாட்டு உறுப்பினர்கள் இப்போது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் அல்லது வாதம் செய்தால், அதற்கான விடை நடுவண் அமைச்சர்களால், பெரும்பாலும் இந்தியில்தான் கூறப்படும். காரணம், இந்தி தெரிந்த அமைச்சர் நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச வேண்டும். மக்களவை, மாநிலங்களவைத் தலைவர்களும் பெரிதும் இந்தி தெரிந்தவர்கள்தாம்! எனவே, அவர்களும் இந்தியில்தான் அவையில் பேசுவார்கள்.

இந்நிலையில் இந்தி தெரியாமல் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவே முடியாது. இருந்தால், “பேசா மடந்தை” என்பது போல் இருக்கலாம்! 

நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுக்கு இந்தி பேசத் தெரிந்தால், தமிழ்நாட்டுப் பொது நிகழ்ச்சிகளில் அவரும் இந்தியில்தான் பேச வேண்டும். எச். இராசாக்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்!

“நீச பாஷையான” தமிழில், “சூத்திரர்களின்” தாய் மொழியான தமிழில் பேசித் தொலைக்க வேண்டிய துன்பம் அவர்களுக்கு இருக்காது! 

அத்துடன் தங்களுக்குள் உரையாடிக் கொள்ளும் போதும் - அதாவது தாய் - தந்தையருடன் பிள்ளைகள் பேசும்போதும், வீட்டில், வீதியில் தங்கள் இன மக்களுடன் உரையாடும் போதும் தமிழர்கள் தமிழைத் தவிர்த்து இந்தியில் பேசிப் பழக வேண்டும். அசாம், கவுகாத்தியில் இந்திக் கூட்டு அறிவுரைக் குழுக் கூட்டத்தில், தாய்மொழியைத் தவிர்த்து இந்தியிலேயே உரையாடுங்கள் என்று அறிவுரை கூறிய வெங்கய்யா நாயுடுவின் தாய் மொழி தெலுங்கு; அந்தக் கூட்டம் நடந்த இடம் தனிநாடு கோரும் இனமக்கள் வாழும் அசாம்! அதில் கலந்து கொண்டவர் அசாமி பேசும் முதலமைச்சர்.

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேச வேண்டும் என்ற சட்டத்தில் கையொப்பமிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சியின் தாய் மொழி வங்காளி. இதற்கான பரிந்துரை வழங்கிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ப. சிதம்பரத்தின் தாய் மொழி தமிழ்! 

இந்தி பேசாத இனங்களில் பிறந்த தலைவர்கள், “இந்தியின் அருமை பெருமை அறிந்து”, “இந்தி பேசாத மக்களின் முன்னேற்றம் கருதி” இந்தியை ஏற்குமாறு கூறினார்கள் என்று நம்ப வைப்பது உளவியல் உத்தி! இதுதான் ஆரிய மூளை! 

பதவி, பணம் ஆகியவற்றிற்கு விலை போகும் இன இரண்டகர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள். தமிழ் இனத்தில் - ப. சிதம்பரம்! 

தேசிய நெடுஞ்சாலை என்று சொல்லப்படும் தமிழ்நாட்டுச் சாலைகளில் ஆங்கிலத்தை நீக்கி இந்தியில் மட்டுமே அண்மையில் வழிக் குறிப்புகள் எழுதினார்கள். 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 343 - இந்தியாவின் ஒற்றை அலுவல் மொழியாக இந்தியைக் கட்டாயமாக்குகிறது. (The official language of the Union shall be Hindi in Devanagari script). இடைக்கால ஏற்பாடாக, தற்காலிகமாக ஆங்கிலம் துணை அலுவல் மொழியாகத் தொடரலாம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. 

எனவே அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மோடி அரசால் இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது சரியன்று!

இந்தியாவின் பன்மொழி மற்றும் பல தேசிய இனங்களின் இருப்பை மறுப்பதற்கு - அவற்றின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை இந்தி அடையாளத்தை - நிலைநாட்டுவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அகலமாகக் கதவு திறந்து வைத்துள்ளது. இந்தியா என்ற பெயரைக்கூட ஆரியப் புராணங்களின் அடிப்படையில், “பாரதம்” என்று அழைக்கிறது அரசமைப்புச் சட்டம்!

உலகமயம் பற்றி ஓயாமல் பீற்றிவரும் மோடி அரசு, ஆரிய மயத்தை இந்தியாவில் தீவிரமாகப் பரப்புகிற உண்மையைத் தமிழர்கள் இனம் காண வேண்டும். 

தமிழ்த்தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, அடையாளம், தாயக உரிமை அனைத்தையும் அழித்து, பாரதமயம் என்ற பெயரில் ஆரியமயத்தை - பார்ப்பனிய மயத்தை நிலைநாட்டுவதுதான் காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் அடிப்படைக் கொள்கை! இந்தியத் தேசியத்தின் ஓடும் பிள்ளைகளாகச் செயல்படும் இடதுசாரிகள் இந்தித் திணிப்பை - ஆரியமய ஆக்கிரமிப்பை லெனின் மொழிக் கொள்கைப்படி இதுவரை எதிர்க்கவில்லை. இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

உலகமயம் - என்ற பன்னாட்டுச் சந்தை வேட்டை கோலோச்சும் இக்காலத்தில்தான் ஐரோப்பா கண்டம் உள்ளிட்ட உலகப் பரப்பில் தேசிய இன - மொழி உரிமைப் போராட்டங்கள் புதிய வடிவில் தீவிரப்பட்டுள்ளன. குர்திஸ் மக்கள் தங்கள் தாய் மொழியில் பேசத் தடை விதித்த ஈராக்கில் இப்போது தன்னாட்சி பெற்ற குர்து அரசு உருவாகியுள்ளது. 

திராவிடம் பேசிக் கொண்டு, பாரதமாதா பசனை பாடிக் கொண்டு, இந்தித் திணிப்பை எதிர்ப்பது இரண்டுங்கெட்டான் செயல்! தமிழ்த்தேசிய இலட்சியத்தை முன்னிறுத்தி இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! ஆரிய ஆக்கிரமிப்பை விரட்டி அடிப்போம்! நமது ஆக்கத் திட்டத்தை முன்வைத்து, ஆகாத திட்டத்தை எதிர்ப்பதே பயன்தரும் போராட்டம்! 

Labels: ,

நடிகர் சத்தியராஜ் அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன உணர்ச்சிக்கும் பாராட்டுகள்! -- தோழர் பெ.மணியரசன்


==================================
நடிகர் சத்தியராஜ் அவர்களின்
பொறுப்புணர்ச்சிக்கும் - தமிழ் இன
உணர்ச்சிக்கும் பாராட்டுகள்!
==================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை!
==================================

நடிகர் சத்தியராஜ் அவர்கள் பொறுப்புள்ள தமிழ்ச்சான்றோர் என்பதை நிலைநாட்டியுள்ளார். 

ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட “பாகுபலி–2” திரைப்படத்தின், தயாரிப்பாளர், இயக்குநர், கலைஞர்கள், தொழில்நுட்பப் பிரிவினர் என அனைவரின் உழைப்பு, நிதிச்சுமை உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்து திரு. சத்தியராஜ் அவர்கள் கன்னட மக்களிடம் தன் “வருத்தத்தை”த் தெரிவித்துள்ளார். 

அத்துடன் “தொடர்ந்து தமிழர் உரிமையின் பக்கம் நிற்பேன்” என்றும், திரு. சத்தியராஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

நம் அன்பு உடன்பிறப்பு சத்தியராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

கன்னட இனவெறி காவிரி நீரை மட்டும் தடுக்கவில்லை, தமிழர்களின் பல்வேறு வாழ்வுரிமைகளையும் தடுக்கிறது என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்டு செயல்படுவோம்!

Labels: ,

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு வார காலத் தொடர்வண்டி மறியல்!” -- காவிரி உரிமை மீட்புக் குழுவின் புதிய போராட்ட வடிவம்!

Sunday, April 16, 2017
===================================
“காவிரி டெல்டா மாவட்டங்களில் 
ஒரு வார காலத் தொடர்வண்டி மறியல்!”
===================================
காவிரி உரிமை மீட்புக் குழுவின்
புதிய போராட்ட வடிவம்!
===================================

காவிரி உரிமை மீட்கவும் உழவர்கள் வறட்சி நிவாரணத்திற்கும் கோரிக்கைகள் முன் வைத்து, வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 28.3.2017லிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக – இரவு பகலாக சாலையோரத்திலேயே தங்கிக் கொண்டு - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நடத்தி வரும் தொடர் முழக்க அறப்போராட்டத்தின் பத்தொன்பதாவது நாளான இன்று (15.04.2017), போராட்டத்தை வேறு வடிவத்திற்கு மாற்றுவது குறித்து போராட்டப் பந்தலில் விரிவான அளவில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதன் முடிவில், வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உழவர்களையும் பொதுமக்களையும் பெருந்திரளாகத் திரட்டி தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்துவதென்றும், இப்போராட்டத்திற்குப் பெருந்திரளான மக்களைத் திரட்ட விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்ள ஏதுவாக - மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை அறப்போராட்டத்தை இன்றோடு நிறைவு செய்து கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், “நமது காவிரித்தாய் காப்புப் போராட்டம் ஒரு முதல் கட்ட வெற்றியை ஈட்டியுள்ளது. காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையும், காவிரித் தீா்ப்பாயத்தையும் காலி செய்யும் வகையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான புதிய சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் விவாதப்பட்டியலில் இருந்தும், நம் போராட்டம் காரணமாக அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கூட்டத்தொடரும் முடிந்து விட்டது. இது முதல் கட்ட வெற்றி!
ஒற்றைத் தீர்ப்பாயம் குறித்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் முதன் முதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை ஒரு போராட்டக் கோரிக்கையாக முன்வைத்துதான் தஞ்சைத் தொடர் போராட்டத்தை நாம் தொடங்கினோம்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு, த.மா.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் நமக்குப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்நாட்டின் முகாமையான சிக்கலான காவிரிச் சிக்கலில் – நாம் போராடிப் பெற்ற காவிரித் தீர்ப்பிற்கே ஒரு பேராபத்து வந்துள்ள சூழலில், நாம் அனைவரும் ஒற்றைக் கோரிக்கையின் கீழ் ஒன்றுபட்டு நிற்கிறோம் – ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக நிற்கிறோம் என்று இந்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உணர்த்தும் வகையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த அரசியல் கட்சியினரை நாம் வரவேற்றோம்.
நாம் ஒன்றுபட்டு நின்றதன் விளைவாக, அனைத்துக் கட்சிகளும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தன. அதன் விளைவாகவே, நாடாளுமன்றத்தில் அச்சட்டதிருத்தம் விவாதப் பட்டியலில் இருந்தும்கூட, கூட்டத்தொடர் முடியும் வரை விவாத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. இல்லையெனில், பத்தோடு பதினொன்றாக இந்தச் சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும். தற்போது அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த வகையில் இது முதல் கட்ட வெற்றி!
எனினும், இது முழுமையான வெற்றி அல்ல! நம் கோரிக்கைகள் எவையும் நிறைவடையவும் இல்லை. நம் போராட்டமும் ஓயப்போவதில்லை! பத்தொன்பது நாட்களாக வெயிலிலும் குளிரிலும் நாம் நடத்தி வரும் அறவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய அளவில் செவி கொடுத்துக் கேட்கவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண் அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் வந்து பேசிவிட்டதோடு சரி, முதலமைச்சர் அறிக்கை வெளியிடுவார் என்றனர். அதையும் அவர்கள் இந்நேரம் வரை வெளியிடவில்லை.
எனவே, நம் போராட்டத்தை வேறு வடிவத்திற்கு – கோரிக்கைகளை இன்னும் வீரியமாக் கொண்டு செல்லும் வகையில் மாற்ற வேண்டுமென இங்கு நாங்கள் கலந்துரையாடினோம். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், உழவர் இயக்கங்கள், குழுவில் உறுப்பு வகிக்காத பிற உழவர் அமைப்புகள் எனப் பலரிடமும் கருத்துகள் கேட்டோம்.
அதன் முடிவில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி - போராட்டத்தின் வடிவத்தை மாற்றிக் கொண்டு, வரும் மே 15 முதல் ஒரு வார காலத்திற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். வழக்கமான தொடர்வண்டி மறியல் போராட்டங்களைப் போல் அல்லாமல், தொடர்வண்டிப் பாதை செல்லும் ஊர்களில் உள்ள கிராம மக்களை, உழவர்களை, இளைஞர்களைத் திரட்டி அவரவர் பகுதிகளிலேயே தொடர்வண்டியை எடுக்க முடியாத அளவிற்கு பெருந்திரளாக மறியல் செய்யும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.
அதற்காக இன்றிலிருந்து மே 15 வரை விரிவான அளவில் பரப்புரைகள் மேற்கொள்ள ஏதுவாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கடந்த மார்ச்சு 28 முதல் பத்தொன்பது நாளாக நடைபெற்று வரும் தொடர் அறப்போராட்டத்தை இன்றோடு நிறைவு செய்து கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.
இதுநாள் வரை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வந்த தொடர் அறப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டத்தில் பங்கேற்றோர்க்கு நாள்தோறும் உணவளித்த உழவர் பெருமக்கள், வணிகர்கள், தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
பெண்ணாடம் - தென்றல் தப்பாட்டக் குழுவின் எழுச்சிப் பறையிசை போராட்ட அரங்கை அதிரச் செய்தது. மன்னார்குடி வட்டம் – கனியாக்குறிச்சி கிராமத்திலிருந்து திரு. வீரய்யா தலைமையில் திரளான உழவர்கள் ஊர்திகளில் வந்து பங்கு கொண்டனர்.
முன்னதாக, இன்று காலை – காவிரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு.க. முன்னாள் நடுவண் அமைச்சர் திரு. டி.ஆர். பாலு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எல். கணேசன், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட திரளான தி.மு.க.வினரும், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன் உள்ளிட்ட பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும் போராட்டப் பந்தலுக்கு நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத்தலைவர் திரு. குடந்தை அரசன், மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Labels:

“தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கைக்குப் பிறகே போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” -- விரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவிப்பு

Wednesday, April 12, 2017
===========================================
“தமிழ்நாடு முதலமைச்சரின் அறிக்கைக்குப்
பிறகே போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்”
===========================================
தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்குப் பின்
காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவிப்பு! 
===========================================

காவிரி உரிமை மீட்கவும் உழவர்கள் வறட்சி நிவாரணத்திற்கும் கோரிக்கைகள் வைத்து, கடந்த 28.3.2017லிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக – இரவு பகலாக சாலையோரத்திலேயே தங்கிக் கொண்டு - காவிரி உரிமை மீட்புக் குழுவினர் நடத்தி வரும் தொடர் முழக்க அறப்போராட்டம், இன்று (12.04.2017) பதினாறாவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று (12.04.2017) தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் ஒருங்கிணைப்பில், மன்னார்குடி வட்டம் – காரக்கோட்டையிலிருந்து உழவர் திரு. முருகானந்தம் தலைமையில் உழவர்கள் திரளாக வந்துப் பங்கேற்றனர். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தோழர் முகிலன் தலைமையில் பேரணியாக வந்து பங்கேற்றனர்.
இதனையடுத்து, பகல் 12 மணியளவில், தமிழ்நாடு அரசு சார்பில், வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு. வைத்திலிங்கம், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ரெங்கசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் போராட்டப் பந்தலுக்கு வருகை தந்து, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்:
“காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தொடர்ந்து இரவு பகலாக - தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் காவிரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டம், இன்று பதினாறாவது நாளாகத் தொடர்கிறது.
இன்று காலை தமிழ்நாடு அரசு சார்பில், மாண்புமிகு வேளாண் அமைச்சர் திரு. துரைக்கண்ணு, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. வைத்திலிங்கம், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ரெங்கசாமி, மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை உள்ளிட்டோர் போராட்டப் பந்தலுக்கு வருகை தந்தனர். அவர்களிடம் எமது கோரிக்கைகளை விளக்கினோம்.
இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கொண்டு வந்துள்ள ஒற்றைத் தீா்ப்பாய சட்டத் திருத்தத்தின் நகலை அவர்களிடம் வழங்கினோம்.
தமிழ்நாடு அரசு, இதுவரை இந்த சட்டத்திருத்தம் குறித்த தனது கருத்தை வெளியிடாதது குறித்தும், கடந்த மார்ச் மாதம் 21ஆம் நாள் – மூன்றாம் முறையாக உச்ச நீதிமன்ற அமர்வு காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்திற்கு ஆணையிட்டும் – அவர்கள் அதை செயல்படுத்த மறுக்கும்போது, தமிழ்நாடு அரசு அச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசியல் நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது என்ற எங்கள் கவலையையும் வெளியிட்டோம்.
எங்கள் கோரிக்கைகளைக் கேட்டுக் கொண்ட வேளாண் அமைச்சரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்குவதாகவும், விரைவில் தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் என்றும் தெரிவித்தனர். போராட்டத்தைக் கைவிடக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.
மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை கொடுத்த பின், நாங்கள் எங்கள் போராட்டம் குறித்து விவாதித்து முடிவுக்கு வருகிறோம். போராட்டம் தொடர்கிறது”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தெரிவித்தார்.
இன்றைய போராட்டத்தின்போது, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார், இந்திய யூனியன் முசுலீம் லீக் பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. கே.எம். முகமது அபுபக்கர், மக்கள் கலை இலக்கியக் கழக இணைச் செயலாளர் தோழர் காளியப்பன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.ஆர்.எஸ். மணி, பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் நேரில் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் திரு. அருண் மாசிலாமணி, மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. அகமது கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் பதினாறாவது நாள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டச் செய்திகள், காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான FB.COM/KaveriUrimai என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.#SaveMotherCauvery என்ற குறிச்சொல்லை (Hashtag) இளைஞர்கள் உருவாக்கி, இப்போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Labels: ,

தீர்ப்பு தீர்வாகாதாம் : காவிரித் தீர்ப்பை காலி செய்ய புதிய சட்ட மசோதா -- தோழர் பெ. மணியரசன்

Saturday, April 1, 2017

===============================================
தீர்ப்பு தீர்வாகாதாம் :
காவிரித் தீர்ப்பை காலி செய்ய புதிய சட்ட மசோதா 
===============================================
தோழர்  பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
===============================================

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்து, அதன் இறுதித் தீர்ப்பை இரத்து செய்யும் நோக்கம் கொண்ட, இந்திய அரசின் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுத் திருத்தச் சட்டம் – 1956, நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, 15.3.2017 அன்று இதை மக்களவையில் அறிமுகம் செய்தார். 

இதன்படி, “மாநிலங்களுக்கிடையலான தண்ணீர்ப் பூசல் தீர்ப்பாயம்” என்ற பெயரில் இந்தியா முழுமைக்குமான புதிய ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும். 

“இந்தத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட நாளில் மற்றும் அந்நாளுக்குப் பின் செயல்பாட்டில் உள்ள தீர்ப்பாயங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும். கலைக்கப்படும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும்”.

“ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு முன் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்த (Adjudicated and settled) – முந்தையத் தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பூசல் சட்டத்திருத்தம் – 2017இல், மறுபடியும் விசாரிக்கப்பட மாட்டாது. 

இதில் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்த (Adjudicated and settled) என்பதன் பொருள் என்ன? விசாரிக்கப்பட்டு, இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்ட (Adjudicated and finaly awarded) என்ற சொற்களுக்கு மாறாக – “முடிவுக்கு வந்த” என்ற சொற்களை ஏன் போட்டது மோடி அரசு?

சட்ட அகர முதலி அளிக்கும் விளக்கத்தின் படி ஒரு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு (Adjudication) என்பது தொடர்புடைய தரப்பார் அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆணை ஆகும்.

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டாலே அது அந்தக் கட்டத்தில் தீர்வு காணப்பட்டது (Settled) என்று பொருள். காவிரிச் சிக்கல் பொருத்தளவில் தீர்ப்பு தீர்வாகாது என்கிறதா மோடி அரசு? 

தீர்ப்பாயம் என்பது நீதிமன்றம். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஓர் அமர்வு! அது வழங்கிய தீர்ப்பை – முடிவுக்கு வந்த தீர்ப்பு, முடிவுக்கு வராதத் தீர்ப்பு என்று பிரிப்பதேன்?

ஒரு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பைச் செயல்படுத்துவது அரசின் பொறுப்பும் அதிகாரமும் ஆகும். முடிவுக்கு வந்த தீர்ப்பு என்பதற்கு என்ன பொருள் என்று இச்சட்டத்திருத்தத்திற்கான நோக்கங்களும் காரணங்களும் என்ற அறிக்கையில் (Statement of Objects and Reasons) நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி விளக்கம் கூறியுள்ளார். 

“மொத்தம் எட்டு தீர்ப்பாயங்கள் தீர்ப்புகள் வழங்கின. இவற்றில் மூன்று தீர்ப்புகளை மட்டுமே தொடர்புடைய மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன. காவிரித் தீர்ப்பாம் 26 ஆண்டுகளாகவும் இரவி பியாஸ் தீர்ப்பாயம் 30 ஆண்டுகளாகவும் செயல்பாட்டில் உள்ள போதிலும், அவற்றால் இன்று வரை வெற்றிகரமான தீர்ப்புகளை உருவாக்க முடியவில்லை. மேலும் இவற்றின் செயல்பாட்டிற்குக் காலவரம்பு கிடையாது”.

காவிரித் தீர்ப்பாயத்தால் வெற்றிகரமான தீர்ப்பை உருவாக்க முடியவில்லை என்று உமாபாரதி சொல்வதன் பொருள் என்ன? தொடர்புடைய மாநிலங்கள் இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்று பொருள்! இதில் உள்ள உண்மை என்ன? 

காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-இல் இறுதித் தீர்ப்பு வழங்கியபோது, தமிழ்நாட்டுக்கு மிகவும் குறைந்த அளவு நீரே (192 ஆ.மி.க.) ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுப்போட்டது. கர்நாடகமோ, தமிழ்நாட்டிற்கு அதிகமான தண்ணீர் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று மறுசீராய்வு மனுப் போட்டது. கேரளம், புதுவை மாநிலங்களில் சிக்கல் இல்லை. 

பின்னர் தமிழ்நாடு அரசு 192 ஆ.மி.க. தீர்ப்பை நிறைவேற்றினால் போதும் என்ற நிலைக்கு வந்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. ஆனால் கர்நாடகம், தீர்ப்பாய விசாரணையின் போது, 30 ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று வாதாடியது. அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறது. 

மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத தீர்ப்பு என்று காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை உமாபாரதி கூறுவது முழு உண்மையல்ல. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாத தீர்ப்பு என்று நேரடியாகக் கூறிட, உமாபாரதிக்கு கூச்சம் இன்னும் மிச்சமிருக்கும் போலும்!

கர்நாடகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத தீர்ப்பு என்பதால் – அத்தீர்ப்பை வழங்கிய காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்திட மோடி அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகம் வெளியே காட்டிக் கொள்ளாமல் கொண்டாடிக் களிக்கிறது. 

தமிழ்நாட்டில் மோடி அரசின் இந்த மோசடியை காவிரி உரிமை மீட்புக் குழுதான் முதன் முதலில் பொது அரங்கத்தில் அம்பலப்படுத்தி, செய்தியாளர் சந்திப்பில் கூறியது. ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது முதன்மை எதிர்க் கட்சியோ, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாகக் காவு கொடுக்கும் மோடி அரசு நாடாளுமன்ற மக்களவையில் 15.3.2017 அன்று முன்வைத்துள்ள மேற்கண்ட திருத்த முன்வடிவு பற்றி வாய் திறக்கவில்லை.

தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் காவிரி உரிமையைக் காப்பதில் உண்மையான அக்கறை அற்று, அவ்வப்போது அடையாள முயற்சிகளை – கணக்குக் காட்டும் போராட்டங்களை எடுப்பதுதான், கர்நாடகத்திற்கும் இந்திய அரசுக்கும் துணிச்சல் கொடுத்து தமிழ்நாட்டிற்கு எதிரான வன்முறைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் முறையே எடுக்கின்றன. 

ஓர் உரிமை இயல் வழக்கில், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு வழக்கில் உள்ள அனைத்துத் தரப்பையும் கட்டுப்படுத்தும். மாறாக – வழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தீர்ப்பைக் கட்டுப்படுத்துவார்களா?

தீர்ப்புதான் அனைவரையும் கட்டுப்படுத்தும். தீர்ப்பைச் செயல்படுத்த மறுககும் தரப்பின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும். 

காவிரித் தீா்பாயத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, அரசிதழில் அதை வெளியிட ஆணையிட்டு, நடுவண் அரசும் 19.2.2013 அன்று அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அதன்பிறகு அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குரிய சட்ட ஏற்பும், அங்கீகாரமும் பெற்றுள்ளது. 

மாநிலங்கள் ஏற்கவில்லை, எனவே புதிதாக உருவாக்கப்படும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு காவிரி வழக்கை அனுப்புகிறோம் என்று காரணம் கூறி, சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்துள்ளது. 

கடந்த 2016 செப்டம்பர் 20ஆம் நாள் ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. கடைசி நேரத்தில் “அதை நாடாளுமன்றம்தான் அமைக்க வேண்டும்” என்று கூறி நரேந்திர மோடி அரசு தடுத்தது. இப்போது நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிரந்தரமாகத் தடுக்கும் சட்ட முன் வடிவை முன் வைத்துள்ளது. 

இந்தப் புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தின் சிறப்பு என்று மோடி அரசு கூறுவது என்னவெனில், இத்தீர்ப்பாயத்திற்கு வந்த வழக்கை – சமரசப் பேச்சு நடத்தி இணக்கம் காண ஒன்றரை ஆண்டு காலவரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் சமரசம் வரவில்லை எனில் மேற்படி ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் அமர்வு (Bench) மூன்றாண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற காலவரம்பாகும். அடுத்து 70 அகவைக்கு மேல் உள்ள நீதிபதி பதவி விலக வேண்டும்.

இவை தவிர, இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் புதிய வழிமுறை எதுவும் கூறப்படவில்லை. இத்தீர்ப்பையும் நடுவண் அரசுதான் நிறைவேற்ற வேண்டும். இதே நடுவண் அரசுதான்! அது எப்படி இருக்கும்?

(தஞ்சையில் 28.03.2017 தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றும் வரும் காவரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டக் களத்திலிருந்து, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் எழுதி அளித்த கட்டுரை).

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்