<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா? முதலைமைச்சர் விளக்க வேண்டும்! " --- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Thursday, June 23, 2022


 


காவிரி ஆணையக் கூட்டத்தில்
தமிழ்நாடு அரசு கலந்து கொள்ளுமா?
முதலைமைச்சர் விளக்க வேண்டும்!
====================================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அறிக்கை!
=====================================================

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் – அனைத்துக் கட்சி தலைவர்களை அழைத்துக் கொண்டு 22.06.2022 அன்று புதுதில்லி சென்று ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் அவர்களைச் சந்தித்து மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை அனுமதி பற்றி விவாதிக்கக் கூடாது என்றும் அதற்கான அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு துரைமுருகன் குழுவினரிடம் ஒன்றிய அமைச்சர் செகாவாத் மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று இந்திய அரசின் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளதாகப் பதில் அளித்தார். செகாவாத்தின் இப்பதில் பற்றி துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறி அது வெளியாகி உள்ளது. அந்த அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்று தமிழ்நாடு சட்ட வல்லுநர்கள்- கூறியுள்ளதாகத் துரைமுருகன் பதில் மறுப்புக் கூறியதற்கு, வரும் ஆணையக் கூட்டத்தில் அந்த சட்ட விவரங்கள் பற்றி விவாதியுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். இச்செய்தியையும் துரைமுருகன் கொடுத்துள்ளார்.

அப்படி என்றால் 05.07.2022 அன்று புதுதில்லயில் நடைபெறும் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்குமா என்ற வினா எழுகிறது.

காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை பொருள் நிரலில் (அஜண்டாவில்) சேர்க்கப்பட்டால் அக்கூட்டத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே எடுத்த நிலைபாட்டைக் கைவிட்டு விட்டாரா? அவ்வாறு கைவிட்டால் அதற்கான புதிய காரணங்கள் என்ன?

ஒரு காரணத்தைச் சொல்கிறார் துரைமுருகன். காவிரி ஆணையத்தில் மேக்கேதாட்டு அணை அனுமதித் தீர்மானத்தை தமிழ்நாடு தோற்கடித்துவிடும்; அந்த அளவு தமிழ்நாட்டுக்கு ஆணையத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமை உள்ள பொறுப்பாளர்கள் ஒன்பது பேர் மட்டுமே. இந்த ஒன்பது பேரில் இந்திய அரசு அதிகாரிகள் நான்கு பேர், ஆணையத்தின் தலைவரையும் சேர்த்தால் ஆக இந்திய அரசு சார்பானவர்கள் ஐந்து பேர்! கர்நாடகம், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு தலா ஒரு வாக்கு!

இந்திய அரசுதான் மேக்கே தாட்டு அனுமதிப் பொருளை ஆணையக் கூட்டத்தில் முன்வைக்கிறது. இந்திய நீராற்றல் துறை அமைச்சரும் துரைமுருகனிடம் ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு கலந்து கொண்டு விவாதிக்க வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள் 5 + கர்நாடக வாக்கு 1 ஆக மொத்தம் 6 வாக்குகள் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாகக் கிடைத்து விடும்.

கேரளத்தின் 1 வாக்கு மேக்கேதாட்டுக்கு எதிராகப் போட்டாலும் அத்துடன் + தமிழ்நாடு + புதுவை சேர்த்தால் மூன்று வாக்குகள் மட்டுமே நமக்கு கிடைக்கும். தமிழ்நாட்டிற்கு ஆணையத்தில் பெரும்பான்மை உள்ளது என்று எந்தக் கணக்கை வைத்துத் துரைமுருகன் சொன்னார்?
வாக்கெடுப்பு நடத்துவதற்கான அடிப்படைக் கோரம் 6 பேர்! எனவே தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அதிகாரிகள் வெளி நடப்புச் செய்து விட்டாலோ அல்லது கூட்டத்தைப் புறக்கணித்தாலோ – ஆணையக் கூட்டத்தை நடத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான அடிப்படைக் “கோரம்” (குறைந்தபட்ச கூட்ட உறுப்பினர்) தேவையை இந்திய அரசும் கர்நாடகமும் நிறைவு செய்ய முடியும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் மேக்கேதாட்டு அணையை கட்ட முடியாது என்று செகாவாத் சொன்னதாக துரைமுருகன் கூறுகிறார். உண்மையான மனநிலையில் அவர் கூறினால், தமிழ்நாடு அரசு வராவிட்டாலும் ஆணையக் கூட்டத்தை நடத்தி அணைப் பற்றி பேசுவோம் என்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் எந்த துணிச்சலில் சொல்கிறார்?

இந்திய நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவாத் கைவிரித்து விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது. மேக்கேதாட்டை எப்படித் தடுக்கப்போகிறது என்பதை முதலமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

"சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட புதிய ஆணை பிறப்பித்ததற்குப் பாராட்டு!"---தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, June 21, 2022

 

சிதம்பரம் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடி வழிபட
புதிய ஆணை பிறப்பித்ததற்குப் பாராட்டு!
=====================================
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
=====================================


இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.06.2022) வெளியிட்ட ஆணையில், சிதம்பரம் நடராசர் திருக்கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபடும்போது தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பாடி வழிபட அனுமதி உண்டு என்று உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்கள் ஏறி தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட்டு வந்த மரபை அண்மையில் சிதம்பரம் தீட்சிதர்கள் மறுத்துத் தடை விதித்தார்கள். கொரோனா முடக்கத்தின்போது, சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடுவதையும் சன்னிதியில் நின்று பக்தர்கள் பூசை செய்வதையும் தடுத்து, அரசு வெளியிட்டிருந்த பொது முடக்கத்தை தமிழ்நாடு அரசு நீக்கிக் கொண்ட பிறகும், சிற்றம்பல மேடையில் ஏறி பாடி வழிபடுவதற்குத் தீட்சிதர்கள் அடாவடியாக தடை விதித்தார்கள்.

தெய்வத் தமிழ்ப் பேரவை உட்பட பல்வேறு அமைப்புகளும் பக்தர்களும் சிற்றம்பல மேடையில் ஏறி பாடி வழிபட வேண்டுமென பலவகைப் போராட்டங்களை நடத்தினார்கள்.

சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்த்திட தனிச்சட்டம் இயற்றும்படியும் நாம் கோரி வந்தோம். இவை குறித்தெல்லாம் விசாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைத்து, அதன் மூலம் 2022 சூன் 20 - 21 ஆகிய நாட்களில் மக்களிடமிருந்து கருத்துகள் பெற ஏற்பாடு செய்தது.

தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பக்தர்களும் கடலூரில் விசாரணைக் குழுத் தலைவரிடம் நேற்று (20.06.2022) கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பம் கொடுத்தோம். அவற்றுள் ஒரு கோரிக்கை - சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தமிழ்நாடு அரசு புதிய ஆணை பிறப்பித்திருந்தும், பக்தர்கள் வழிபடலாமே தவிர, தேவாரம் பாடக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்து வந்தார்கள். நம்முடைய மனுவில் இதைக் குறிப்பிட்டு, “வழிபடவும்” என்பதுடன் சேர்த்து, “தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட” தடை செய்யக் கூடாது, அனுமதி உண்டு என்று புதிய ஆணை வெளியிடுமாறு கேட்டிருந்தோம். மற்ற அமைப்புகளும் பக்தர்களும் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளன.

இந்நிலையில், மறுநாளே (21.06.2022) சிற்றம்பல மேடையில் தேவாரம் மற்றும் திருமுறைகள் பாடி வழிபட அனுமதி உண்டு என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணை பிறப்பித்திருக்கிறது. மற்ற நியாயமான கோரிக்கைகளையும் இதேபோல் ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். புதிய ஆணை வெளியிட்டுமைக்கு தமிழ்நாடு அரசுக்கும், ஆணையருக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், விசாரணைக் குழுவில் முதல் நாள் முற்பகலிலேயே கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைக்க வந்த தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்களுக்கும் ஆன்மிகப் பெரியவர்களுக்கும் பக்தர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095
================================ 

Labels: ,

" காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ! , காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!"---- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, June 17, 2022


 காவிரித் தாய் மார்பறுக்க வரும்
ஹல்தரே திரும்பிப் போ!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு
கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று (16.06.2022) பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். இன்று (17.06.2022) – முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

"நீதித்துறைக்கு வெளியே சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்க!"----- தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை!

Wednesday, June 15, 2022



நீதித்துறைக்கு வெளியே சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்க!
=====================================
தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை!
=====================================


திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் இன்று (15.06.2022) 27-ஆம் நாளாக உண்ணாப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். உண்ணாப்போராட்டத்தில் இருந்தோரில் சிலர் மிகவும் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு பொது மருத்துவ மனையில் சேர்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சிறைச் சிறப்பு முகாமில் மொத்தம் 115 பேர் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து அவ்வழக்குகள் நீதி மன்றங்களில் விசாரிக்கப்படவில்லை. வெறுமனே தடுப்புக் காவலில் வைத்திருக்கிறார்கள்.

வழக்குகளோ – விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பதால், இவர்களைச் சிறப்பு முகாமில் (Special Camp) வைத்திருப்பதாக இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தந்திரமாகப் பெயர் சூட்டி ஏமாற்றுகின்றன.

இவ்வாறு எட்டாண்டுகள் உட்பட பல ஆண்டுகள் தொடர்ந்து திருச்சி நடுவண் சிறை முகாமில் பலர் இருக்கிறார்கள்.

இவர்களின் உண்ணாப் போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கைகள் இரண்டு. ஒன்று குற்றவழக்கு உள்ளவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள். நீதி மன்றம் தண்ணடனை வழங்கட்டும் அல்லது விடுதலை செய்யட்டும். குற்ற வழக்கு இல்லாதவர்களைத் தமிழ்நாடு அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.

மிக நீதியான இந்த இரு கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுச் செயல்படுத்துவதில் என்ன தடை? இந்திய அரசு தடை போடுகிறதா?

இந்தச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மேற்கண்ட இரு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறான உண்ணாப் போராட்டங்கள் நடத்தினர். அப்போதெல்லாம் உயர் அதிகாரிகள், நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது அல்லது விடுதலை செய்வது என்ற இரண்டில், யார் யாருக்கு எது பொருந்துமோ அந்த நீதியைச் செய்கிறோம் என்று உறுதி கொடுத்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளைத் தமிழ் நாடு அரசு செயல்படுத்தவில்லை.

நீதிமன்ற நடைமுறையே இல்லாமல் ஈழத்தமிழர்களோ அல்லது வேறு எந்த நாட்டினரோ அவர்களைச் “சிறப்பு முகாம்” என்று அட்டை எழுதித் தொங்கவிடப்பட்டுள்ள சிறைக்குள் காலவரம்பின்றி அடைத்து வைப்பது இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 21 (Article 21)-க்கு எதிரானது.

“21. நாட்டில் நிலவும் சட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, ஒருவரின் உயிரையோ (Life) அல்லது அவரது இயங்கும் உரிமையையோ (Personal Liberty) அரசு பறிக்க முடியாது”.

இந்த உரிமை இந்தியாவின் குடிமக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டினர்க்கும் முழுமையாகப் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கிறன்றன.

எட்டு ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகளாகவோ, நீதி மன்றத்தில் வழக்கு நடத்தாமல் ஈழத் தமிழர்களை திருச்சி சிறை முகாமில் அடைத்து வைத்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

ஓர் அரசே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுமானால் அந்த நாட்டில் மண்ணின் மக்களுக்கான மனித உரிமைகளும் இதே போல்தான் பறிக்கப்படும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இச்செயலைச் செய்யுமாறு ஒருவேளை இந்திய அரசு கூறினால் அதைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

எட்டாண்டுகள் வரை திருச்சி சிறையில் உள்ளவர்களுக்கும் மனைவி மக்கள் – குடும்பத்தார் இருக்கிறார்கள். புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களின் துயரத்தையும் எண்ணிப்பார்த்து, அத்துயரத்தைத் துடைக்க வேண்டிய கடமையும் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.

இவர்களது கோரிக்கைகளை ஆதரித்து எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 6.6.2022 அன்று திருச்சி தொடர்வண்டிச் சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு, திருச்சி நடுவண் சிறைச் சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவித்து, வெளியே அனுப்ப வேண்டியவர்களை அனுப்புங்கள், வழக்கு நடத்த வேண்டிய ஈழத்தமிழர்களை ஏதிலியர்கள் முகாம்களில் தங்க வைத்து வழக்கு நடத்துங்கள் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

 

Labels: , ,

"மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் எச்.எம்.டி.இரகமதுல்லா மறைவு பேரதிர்ச்சி தருகிறது!"------தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்!

Sunday, June 12, 2022


மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர்

எச்.எம்.டி.இரகமதுல்லா மறைவு பேரதிர்ச்சி தருகிறது!
=================================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல்!
=================================================

மனித நேய மக்கள் கட்சி உழவர் அணியின் மாநிலச் செயலாளர் அன்பிற்குறிய தோழர் கூத்தாநல்லூர் எச்.எம்.டி.இரகமதுல்லா அவர்கள் நேற்று (11.06.2022) திடீரெனக் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இளம் வயதினர்.

சங்கப் பரிவாரங்கள் நபிகள் நாயகம் அவர்களை இழவுபடுத்தியதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டங்களில் பங்கேற்றுக்கொண்டு வந்த நிலையில் அவரது திடீர் மரணச் செய்தி பெருந்துயரம் அளிக்கிறது.

மனித நேய மக்கள் கட்சியும் தமிழ்த் தேசியப் பேரியக்கமும் பங்கு கொண்ட பல போராட்டங்களில் கூட்டங்களில் தோழர் எச்.எம்.டி.இரகமதுல்லா அவர்களோடு கலந்து கொண்ட நினைவுகள் பசுமையாக இருக்கும் நிலையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தோழர் எச்.எம்.டி. இரகமதுல்லா அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அவரது இல்லத்தார்க்கும் இயக்கத் தோழர்களுக்கும் ஆறுதலையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================

Labels: ,


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்