<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

நக்கீரன் கோபால் கைது : தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

Thursday, October 11, 2018


நக்கீரன் கோபால் கைது :
தண்டனைச் சட்டத்திலிருந்து 
124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

“நக்கீரன்” இதழாசிரியர் திரு. கோபால் அவர்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் காவல்துறையில் குற்ற மனு கொடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 124இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை சென்னை மாநகர்க் காவல்துறை தளைப்படுத்திய அடாத செயல் போல் இதற்கு முன் எந்த ஆளுநரும் இந்தியாவில் செய்ததில்லை என்று பலரும் கருத்துக் கூறியுள்ளனர். 

தமிழ்நாடு ஆளுநரின் அடாத செயலையும், அதைத் தலைமேல் கொண்டு களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

இதழியல் துறையின் உரிமைப் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையைத் தடுத்திட உடனடியாகக் களத்தில் இறங்கி எழும்பூர் நீதிமன்றத்தில் வாதாடிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் திரு. என். இராம் அவர்களின் சனநாயகக் காப்பு நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். 

இந்து, ஆனந்த விகடன், தினமலர், தினகரன், டெக்கான் க்ரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடுகள் மற்றும் புதிய தலைமுறை, நியூஸ்18 தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கண்டனக் கூட்டறிக்கை வெளியிட்டதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாணவிகளைத் தவறான திசைக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாக “நக்கீரன்” இதழ், கடந்த ஏப்ரல் மாதம் படங்களுடன் கட்டுரை வெளியிட்டது என்பதுதான் அரசுத் தரப்பில் கூறியுள்ள குற்றச்சாட்டு! இதற்குத்தான் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 124-இன் கீழ் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்திருக்கிறார்கள். 

பிரித்தானியக் காலனி ஆட்சிக் காலத்தில், 1870ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1898இல் திருத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 மற்றும் 124A பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 124 என்பது பிரித்தானியப் பேரரசி (Queen) மற்றும் பிரித்தானியாவின் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகியோரின் அதிகாரம் செயல்பட முடியாமல் தடுப்பவர்கள் மற்றும் அவர்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட தண்டனைப் பிரிவு. விடுதலை பெற்ற இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு இப்பிரிவில் உள்ள “பேரரசி” என்பதைக் குடியரசுத் தலைவர் என்றும், கவர்னர் ஜெனரல் என்பதை மாநில ஆளுநர் என்றும் திருத்திக் கொண்டார்கள்.

திருத்தப்பட்டாலும் இந்த 124இன்கீழ் யார் மீதும் இந்தியாவில் வழக்குப் போட்டதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை “பெரிய ஆராய்ச்சி” செய்து இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் போட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு மாநில அரசின் அன்றாட நிர்வாக வேலைகளில் தலையிட்டு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவது நாடறிந்த செய்தி. இப்போது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றிலும் குறுக்கே புகுந்து பொருந்தாத பிரிவுகளின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முனைத்திருப்பது, மக்களின் சனநாயக உரிமையைப் பறிப்பதில் அவர் இறங்குவதன் முன்னோட்டமாகும்.

பொதுவாக ஊடகங்களின் மீது வழக்குப் பதிவு செய்யும்போது அதன் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் அல்லது செய்தியாளர்கள் மீது வழக்குப்பதியப்படும். ஆனால், நக்கீரன் மீதான வழக்கில் அவ்வேடு முழுமையாக வெளிவரக் கூடாது என்ற கெடு நோக்கத்தில், அவ்வேட்டின் ஆசிரியர் தொடங்கி, துணை ஆசிரியர், செய்தியாளர்கள், உற்பத்தி மேலாளர்கள், விநியோகிஸ்தர்கள் வரை சற்றொப்ப 35 பேரின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது! தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை முழுமையாகக் கைவிட வேண்டும்.

காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் போட்ட தண்டனைச் சட்டப்பிரிவுகள் 124, 124A போன்றவற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக நீதித்துறையினரும் சட்ட வல்லுநர்களும் எழுப்பி வந்திருக்கிறார்கள். (அரசை விமர்சித்தாலே 124A - இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்).

எனவே, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து பிரிவுகள் 124, 124A இரண்டையும் நீக்குமாறு சனநாயக ஆற்றல்கள் இப்போது வலியுறுத்த வேண்டும். 

நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் இந்து என் இராம் ஆகியோரின் தர்க்கங்களைச் செவிமடுத்து, இவ்வழக்கில் 124 பிரிவு பொருந்தாது என்று கூறியதுடன் கோபால் அவர்களைச் சொந்தப் பிணையில் விடுதலை செய்த, எழும்பூர் 13ஆம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்களின் நீதிசார் நடவடிக்கை பாராட்டிற்குரியது! 

Labels:

இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய வரிப்பகிர்வு நிலுவை 19 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசோ சாராயம் விற்று நிதி சேர்க்கிறது! பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை



இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 
வரிப்பகிர்வு நிலுவை 19 ஆயிரம் கோடி ரூபாய் 

தமிழ்நாடு அரசோ சாராயம் விற்று நிதி சேர்க்கிறது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன் சிறப்புக் கட்டுரை!

"தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 08.10.2018 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துக் கொடுத்த மனுவில் 20 கோரிக்கைகள் இருந்தன. அவற்றில் பல, சட்டப்படி தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாகத் தர வேண்டும் என்பவை ஆகும்.

1. கடந்த 14ஆவது நிதி ஆணையம் ஒதுக்கியபடி தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு (Performance Grant) மானியத் தொகை ரூபாய் 560.15 கோடி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018 – 2019 ஆண்டிற்குத் தர வேண்டிய அடிப்படைத் தொகை ரூ 1,608.03 கோடி. ஆகமொத்தம் உள்ளாட்சித் துறைக்கு நடுவண் அரசு தர வேண்டிய பாக்கித் தொகை ரூ 2,160.18 கோடி.

2. ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் ஒன்றிய அரசும் மாநில அரசும் தலா 50 விழுக்காடு பகிர்வு கொள்ள வேண்டும். அதன்படி 2017 – 2018 நிதியாண்டில் (2018 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டு) தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 5,426 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை ஒன்றிய அரசு. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2018 – 2019 முதல்பாதி நிதியாண்டிற்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்குத் தொகையையும் இந்திய அரசு இன்னும் தரவில்லை.

3. கடந்த 13 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு 21 திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகையில் 8,699 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. 13ஆவது நிதி ஆணையக் காலம் முடிந்து, 14ஆவது நிதி ஆணையக் காலமும் முடிவெய்தி 15ஆவது நிதி ஆணையம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் 13ஆவது நிதி ஆணையம் ஒதுக்கிய நிதியில் இன்னும் நிலுவை உள்ளது.

4. 14 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு உரியவாறு நிதி ஒதுக்கி ஞாயம் வழங்கவில்லை என்பதற்காக அதை ஈடுகட்ட ரூ 2,000 கோடி தனி ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. அத்தொகையை இன்னும் தரவில்லை.

5. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வி தொடர்வதற்கு – நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் உதவி தொகையில் ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதி தரவேண்டும். மாநில அரசு 40 விழுக்காடு நிதி தரவேண்டும். ஒன்றிய அரசு 2017 – 2018 நிதி ஆண்டில் இம்மாணவர்களுக்கு தர வேண்டிய ரூபாய் 985.78 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை

மேற்கண்ட ஐந்து வகை இனங்களில் மட்டும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் - 19,278.96 கோடி ரூபாய்! (இதில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிப் பங்குத் தொகை சேர்க்கப்படவில்லை. அது எவ்வளவு ரூபாய் என்ற கணக்கை அரசு வெளியிடவில்லை).

இந்தியாவிலேயே இந்திய அரசுக்கு அதிக வரி வசூல் தரும் மாநிலம் தமிழ்நாடு! சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31 விழுக்காடு என்று கூறி இருந்தார். (Times of India, 05.09.2018). அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை 3 விழுக்காடு என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏட்டுக் கணக்குப்படி தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கூறப்பட்ட 3 விழுக்காட்டுத் தொகையில் 19,278.96 கோடி ரூபாய் வரவில்லை!

1947 ஆகத்து 15க்கு முன் இவ்வாறு தமிழ்நாட்டு நிதியை இலண்டனில் இருந்து கொண்டு வேட்டையாடினால் அது ஏகாதிபத்தியச் சுரண்டல்! இப்போது புதுதில்லியிலிருந்து கொண்டு வேட்டையாடினால் இது இந்தியத் தேசிய வளர்ச்சியா? அதுவும் இதுவும் காலனியச் சுரண்டல் தான்!

இந்திய ஆளுங்கட்சியுடன் நல்லுறவு கொண்டு தமிழ்நாட்டிற்கு நலன்கள் சேர்க்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் சாதித்தது இது தான்! தலைமை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டுத் தவமிருந்து ஆறு மாதங்களுக்குப் பின் சந்திக்க “அனுக்கிரகம்” பெற்று பணிந்து சமர்ப்பித்த வேண்டுகோள் விண்ணப்பத்தில் தான் மேற்கண்ட நிலுவைத் தொகைகளைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார்!

ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் தாக்கி வசைமாரி பொழிவதையே தமிழ்நாட்டு அரசியலாக்கிய திராவிடக் கட்சிகள் – அந்தத் தொற்று நோயை மற்ற கட்சிகளுக்கும் பரப்பிவிட்டன.

இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையும், தமிழ்நாட்டு வளங்களைச் சூறையாடுவதையும், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையும் உரியவாறு எதிர்க்காமல் தங்களுக்குள் மட்டும் பதவிச் சண்டை இட்டுக் கொண்டு தில்லிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவகம் செய்கின்றன தமிழ்நாட்டுக் கட்சிகள்!

தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களுக்காக சாராயம் விற்கிறோம் என்று கூறுகின்றன அ.தி.மு.க.வும் தி.மு.க.வும்!

வாக்குறுதி தந்தபடி சிறப்பு நிதி ஆந்திரப் பிரதேசத்துக்கு மோடி அரசு தரவில்லை என்றவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, மோடி அரசை வீழ்த்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சி!

தமிழ்நாட்டு அரசியல் சீரழிவைக் கலையாமல் தமிழர்களுக்க எதிர்காலம் இல்லை. நாமும் தமிழ்நாட்டுக் கழகங்களையும் கட்சிகளையும் குற்றம் சொல்வதை முதன்மையாக்கிக் கொள்ளாமல் தமிழின உணர்வும், உரிமை கோரும் விழிப்புணர்வும் பெற்று கோடிக்கணக்கான தமிழர்களை இலட்சியப் பிடிப்புள்ள தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பிட முன் வர வேண்டும்! தமிழர் உரிமைக் களத்தை வலுப்படுத்த வேண்டும்!" 

Labels:

சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Thursday, October 4, 2018


சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி?
புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐ.நா. மன்றம் ஆண்டுதோறும் வழங்கும் “நிலவுலக வாகையர்” விருது (Champions of the Earth Award) இவ்வாண்டு இந்தியத் தலைமை அமைச்சா நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் நேற்று (03.10.2018) புதுதில்லியில் இவ்விருதினை நரேந்திர மோடிக்கு அளித்தார். அதே விழாவில், பிரான்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரான் அவர்களுக்கும் “நிலவுலக வாகையர்” விருதை ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் வழங்கினார். 

விருதினைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி, அவ்விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு பற்றி பேசியவை அனைத்தும் மிடாக் குடிகாரர் ஒருவர் மதுவிலக்கு பற்றி பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது! 

இயற்கையை அன்னை என்றார்; நிலம், காடு, ஆறு – அத்தனையும் தெய்வம்; அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார். அவற்றை சேதாரமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் அந்தத் தலைப்பில் வெளுத்து வாங்கும் மைக் மதன காமராசன்தான் மோடி!

“இயற்கை தாங்கக்கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும். இல்லையேல் இயற்கை நம்மைத் தண்டித்து விடும்” என்று காந்தியடிகள் கூறிய அறிவுரையை மேற்கோள் காட்டி மோடி பேசினார். 

ஓ.என்.ஜி.சி. ஓநாய்களைக் கொண்டும், “வேதாந்தா” போன்ற பெருங்குழும வேட்டையாடிகளைக் கொண்டும் காவிரிப்படுகை விளை நிலங்களை – கடற்பகுதிகளை, வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, “வளர்ச்சி” வாதம் பேசும் மோடி, இயற்கை தாங்கக் கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும் என்று யாருக்கு உபதேசம் செய்கிறார்? மோடிதான் திருந்த வேண்டும்!

மரங்களைத் தெய்வமாக வணங்கும் மரபு நம் மரபு என்று பேசினார். தேவைப்படாத சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, இயற்கையான காட்டை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் மோடியின் பேச்சு எவ்வளவு “புனிதச் சொற்களை”ப் போர்த்திக் கொண்டுள்ளது! அந்த மரங்களையும் காட்டையும் காப்பாற்ற முன்வரும் எளிய மக்கள் மீது போர் தொடுக்குமாறு எடப்பாடி அரசை ஏவிவிட்டுள்ள மோடி போடும் புனித வேடம் “புல்லரிக்க”ச் செய்கிறது. 

ஆறுகளும் தெய்வங்களாம்! மோடி அள்ளி வீசுகிறார் சொற்களை! கங்கையைத் தூய்மைப்படுத்துகிறதாம் மோடி அரசு! ஆனால், காவிரித்தாய் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்கிறது மோடி அரசு! உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தும் கூட அதிகாரமற்ற - ஓய்வு நேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது இதே மோடி அரசு! 

வேளாண் நிலங்களுக்கு மண் நல அட்டைகள் (Soil Health Cards) 13 கோடி அளவிற்குக் கொடுத்திருப்பதாக “சாதனை”ப் பட்டியலை நீட்டுகிறார் மோடி! 

தமிழ்நாட்டு விளை நிலங்களில் ஐட்ரோகார்பன் – நிலக்கரி எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து, கெய்ல் குழாய்களைப் புதைக்க வேண்டும்; பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் ஆலைகள் அமைக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது மோடி அரசு! வேளாண்மையை அழித்தும், ஆற்று நீரையும் ஊற்று நீரையும் உறிஞ்சி வறண்ட மண்ணாக்கியும், வளமான மண்ணை வாழ்நாள் நோயாளியாக்கியும் உள்ள மோடி அரசு, நில நல அட்டைகள் யாருக்கு வழங்கப் போகிறது? 

இறுதியாக மோடி எக்காளமிடுகிறார் : “சுற்றுச்சூழல் தத்துவம் என்பது உலகத்தின் கட்டளை முழக்கமாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் தத்துவம், சுற்றுச்சூழல் மன உணர்ச்சியில் கால்பதித்திருக்க வேண்டுமே அன்றி அரசாங்க ஆணைகளைச் சார்ந்திருக்கக் கூடாது!”. 

அடேயப்பா எத்தனை வீராவேசம்! எல்லாம் வேடம்! ஸ்டெர்லைட் ஆலையால் – சுற்றுச்சூழல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு – நஞ்சாகி மனிதர்களுக்கு நோய்களும் இறப்புகளும் வந்தபின், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடியில் மக்கள் ஆண்டுக்கணக்கில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது 22.05.2018 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 உயிர்களைக் காவு கொண்டது மோடி – எடப்பாடி கூட்டணி! கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லக் கூட அசூசைப்பட்டவர் மோடி! அவர் திருந்தி விட்டாரா என்ன?

அம்பானிகளின் – அதானிகளின் சுற்றுச்சூழல் அழிப்புகளை மூடி மறைக்கவே போதி மரப் புத்தர் போல் பேசுகிறார் மோடி! 

Labels:

கலைஞர் கருணாநிதி – இலட்சியத் தலைவரா? தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Wednesday, October 3, 2018


கலைஞர் கருணாநிதி – இலட்சியத் தலைவரா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!



“மன்னர் இறந்துவிட்டார் - மன்னர் நீடூழி வாழ்க!” என்பது ஆங்கில மரபுத் தொடர். மன்னர் இறந்த பிறகு அரசர் இல்லாமல் நாடு இருக்க முடியாது என்பதற்காக அரசரின் பிணம் ஒரு பக்கம் இருக்க அவரின் வாரிசுக்குப் பட்டம் சூட்டு வார்கள். மன்னரின் இறப்புக்கு சோக ஒலி ஒரு பக்கம் - புதிய மன்னரின் முடி சூட்டலுக்கு வாழ்த்தொலி மறுபக்கம்!

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி தமிழ்நாட்டில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தொடர் சிறப்புக் கட்டுரைகள் - காட்சி சித்தரிப்புகள் ஒருபக்கம்! மறுபக்கம் - ஸ்டாலின் தலைவர் ஆனதைப் பாராட்டி வர்ணித்து தி.மு.க. நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் - ஸ்டாலின் குறித்த வர்ணனைகள். இந்நிகழ்வுகள் ஆங்கில மரபுத்தொடரைத்தான் நினைவூட்டுகின்றன. 

தமிழ்நாட்டில் தி.மு.க. என்பது ஒரு பெரிய கட்சி. பலமுறை தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய கட்சி. இதில் கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமைப் பாத்திரம் முகா மையானது. தொடக்க காலத்தில் திராவிட நாடு பேசினாலும், தமிழின வரலாற்றுப் பெருமை களை - தமிழ்மொழிச் சிறப்புகளை பொதுக் கூட்டங்களில் பேசிய கட்சி. 

திராவிடத் தனி நாடு என்று சொல் லிக் கொண்டாலும், தமிழ்நாடாவது கிடைக் கும் என்று நம்பி தமிழர்கள் அக்கழகத்தில் சேர்ந்தார்கள். காங்கிரசு ஆட்சியின் இந்தியத் தேசிய வெறி, இந்திவெறி, தமிழின அடையாளப் புறக்கணிப்பு, தமிழ்நாடு புறக் கணிப்பு போன்றவற்றின் எதிர்வினையாகவும் மக்கள் தி.மு.க.வை ஆதரித்தார்கள். 

ஐந்துமுறை கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனபின், நடுவண் ஆட்சியில் 1996 முதல் தொடர்ந்து கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வினர் அமைச்சர்களாக அமர்ந்த பின், எதிர்பார்ப்புகள் எல்லாம் “பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போயினவே” என்ற பட்டினத்தார் பாடலைத்தான் நினைவூட்டின.

ஆனால் கலைஞர் மறைந்தவுடன் அவருக்கு ஏடுகளும், தொலைக்காட்சிகளும் சூட்டிய பட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மறைந்த தலைவரைப் பாராட்டுவதும் அவருக்கு இரங்கல் தெரிவிப்பதும் சனநாயக மரபு! தமிழர் மரபும்கூட! ஆனால் கலைஞரின் சாதனைகளாக அவை வர்ணித்தவை செயற்கையானவை; பிழையானவை! 

மாநிலத் தன்னாட்சி

கலைஞருக்கு ஊடகங்கள் வழங்கிய பட்டங்களில் ஒன்று - “மாநில சுயாட்சி வீரர்” என்பதாகும். மாநிலத் தன்னாட்சி இலட்சியத்தில் புதிதாக எதை மீட்டார் கருணாநிதி?

இந்திய விடுதலை நாளான ஆகத்து 15இல் அரசுக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றுவதை மாற்றி முதலமைச்சர் ஏற்றும் “உரிமையைப்” பெற்றார் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன. இச் “சாதனை”யைத் தி.மு.க.வின் இரண்டாம் நிலைத் தலைவர்களும் போற்றிப் புகழ்கி றார்கள். 

தனிநாடு கேட்ட கட்சியின் தலைவர், இறையாண்மையுள்ள இனக்கொடி ஏற்றும் இலட்சியம் கொண்ட தி.மு.க.வின் தலைவர் “இந்தியத்தேசியக் கொடியை” ஏற்றுவதில் பெருமையும் பூரிப்பும் கொண்டது புதுதில்லி! 

இந்திய ஏகாதிபத்தியத்தின் கையடக்கத் தலைவராக கலைஞர் மாறிவிட்ட “சாதனையைக்” கண்டு இந்திரா காந்தி பூரித்துப் போனார். நாங்கள் ஏற்றும் கொடியை நீங்களும் ஏற்றுங்கள் என்று கூறினார்.

1970களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிற்குத் தனியே மாநிலக் கொடி வேண்டும் என்று கோரினார் கலைஞர். இந்தியத்தேசியவாதிகளிடமிருந்து கண்டனங்கள் வந்தவுடன் அக்கோரிக்கையைக் கைவிட்டார். மறுபடியும் அவர் அக்கோரிக்கையை எழுப்பவே இல்லை! 

ஆனால், கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா 2018இல் கர்நாடகத்திற்குத் தனியே மாநிலக் கொடியை உருவாக்கினார். அரசாங்கத்தில் பணிபுரியும் செயலர் தகுதியில் உள்ள இ.ஆ.ப. அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து அதன் பரிந்துரையுடன் கொடி உருவாக்கினார். அதைத் தில்லியிடம் வலியுறுத்திப் பெறுவதற்கு முன் தேர்தலில் ஆட்சியை இழந்துவிட்டார் சித்தராமையா! 

இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசுக்காரர்க்கு இருந்த கன்னட இனப்பற்று - திராவிடத் தலைவர் கருணாநிதிக்கு இல்லாமல் போனது ஏன்?

கலைஞர் கருணாநிதி மாநிலத் தன்னாட்சி மாநாடு நடத்தியது 1970களின் தொடக்கத்தில்! அப்போது அவர் முதலமைச்சராக இருந்தார். 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராசமன்னார் தலைமையில் மாநிலங்களுக்கான கூடுதல் அதிகாரம் கோருவது பற்றிய ஆய்வுக்குழு அமைத்தார். அக்குழு தந்த அறிக்கையை சட்டப்பேரவையிலும் மேலவையிலும் வைத்து நிறைவேற்றித் தில்லிக்கு அனுப்பி வைத்தார். தில்லி அதைக் கண்டு கொள்ளவில்லை! தி.மு.க.வும் அதைத் திரும்பிப் பார்க்கவில்லை! 

அன்றையத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அனுப்பிய படை உதவியுடன் கிழக்குப் பாக்கித்தான் மேற்குப் பாக்கித்தானிலிருந்து பிரிந்து 1971இல் வங்காள தேசம் உருவானது. வங்காள தேசத்தின் விடுதலைத் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான்! 

உடனே தி.மு.க.வினர் கலைஞர் கருணாநிதிக்கு “தமிழ்நாட்டு முஜிபுர் ரகுமான்” என்று பட்டம் கொடுத்தனர். இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து, 1971 - சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்க் குப் பட்டம் “முஜிபுர் ரகுமான்”!

கச்சத்தீவை 1974இல் கலைஞர் முதல்வராக இருக்கும் போதுதான் இந்திரா காந்தி இலங்கைக்குக் கொடுத்தார். அதைக்கூடத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கலைஞருக்கு இல்லை! ஆனால் அவருக்குப் பட்டம் மட்டும் - “முஜிபுர் ரகுமான்”!

போலிப் பட்டங்கள் போட்டுக் கொள்வதில் தி.மு.க.வை விஞ்சும்படி உலகில் வேறு கட்சி இருக்குமா என்பது ஐயமே! உறுதியாக இந்தியாவில் தி.மு.க.வைப் போன்று போலிப்பட்டம் கொடுக்கும் கட்சி இல்லை! 

தமிழ்நாட்டின் “முஜிபுர் ரகுமான்” கூடுதல் அதிகாரங்கள் கேட்டு வந்தார். அதன்பிறகு - அக்கோரிக் கையைக் கூவத்தில் வீசிவிட்டார். 

1996இல் கர்நாடகத்தின் தேவகவுடாவை (சனதா தளம்) நாட்டின் தலைமை அமைச்சராக்கிட கூட்டணி சேர்ந்து தி.மு.க. நடுவண் அமைச்சரவையில் பங்கு வகித்தது. அப்போது, மாநிலத்திற்குக் கூடுதல் அதிகாரம் கோரிப் பெற்றாரா கலைஞர்? இல்லை! தி.மு.க.வும் மூப்பனாரின் தமிழ் மாநிலக் காங்கிரசும் தமிழ்நாடு மற்றும் புதுவையின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். 

தேவகவுடா என்பவர் யார்? தமிழின எதிர்ப்பாளர்; கன்னட வெறியர்! காவிரிச் சிக்கலுக்கு 1990-இல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்தவர். அத்தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி தலைமையிலான மூன்று நீதிபதிகளும் கள நிலைமை களை அறியத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு வந்தனர். அப்போது நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி தமிழ்நாடு அரசிடம் கையூட்டு வாங்கிவிட்டார், அவரைத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டவர் தேவகவுடா! 

அந்தத் தேவகவுடா நாட்டின் தலைமை அமைச்சர் ஆனவுடன் காவிரித் தீர்ப்பாயத் தலைமைப் பதவியி லிருந்து விலகிவிட்டார் சித்ததோஷ் முகர்ஜி! 

முகர்ஜி வங்காளி; மானத்தர்! தமிழ்நாட்டுத் தலைவர் கருணாநிதியோ அந்தத் தேவகவுடாவைத் தலைமை அமைச்சர் ஆக்கினார்! 

சற்றொப்ப ஓர் ஆண்டு பதவியில் இருந்தார் தேவகவுடா! முரசொலி மாறன் முகாமையான துறையில் நடுவண் அமைச்சர்! அப்போது தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகப் பெற்ற அதிகாரம் எது? எதுவுமில்லை! அதன் பிறகு பாரதிய சனதாக் கட்சியின் தலைவர் வாச்பாயி தலைமையில் கூட்டணி அமைச்சரவை. அதிலும் முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் அமைச்சர்கள். 

ஆரியத்திற்கு ஆதரவு

ஆரியத்துவா - இந்துத்துவா - பிராமணத்துவா என்பவை எல்லாம் ஒன்றுதான்! இவை அனைத்தின் உருத்திரட்சி ஆர்.எஸ்.எஸ்.! அதன் அரசியல் பிரிவு பா.ச.க.! அந்த பா.ச.க. தலைமையில் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க.! ஆரியத்துக்கு எதிர் திராவிடம் என்றவர் கலைஞர்! அந்தத் திராவிடத்திலாவது பற்றுறுதியோடு இருந்தாரா? இல்லை! ஆரியத்தின் அரியணை தாங்கினார். 

பா.ச.க.வுடன் கூட்டணி அமைச்சரவையில் சேர்ந்து அரசியல் குட்டிக் கரணம் போட்டதற்குக் கலைஞர் கொடுத்த விளக்கமென்ன? நச்சு மரத்தில் நல்ல கனி வாச்பாயி; அவர் தலைமை அமைச்சர் ஆவதற்காக ஆதரவு தந்தோம் என்றார்! 

நச்சு மரத்தில் நல்ல கனி எப்படி உருவாகும்? கருணாநிதி போல் இயற்கையின் விதிகள் சந்தர்ப்பவாதம் சார்ந்தவை அல்ல! நச்சு மரத்தில் நல்ல கனி உருவாகாது! கலைஞர் கருத்தை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அந்த நச்சு மரத்தின் ஆயிரம் நச்சுக் கனிகளில் ஒரு “நல்ல” கனி மட்டும் என்ன சாதிக்க முடியும்? ஆர்.எஸ்.எஸ். கிழித்த கோட்டை பா.ச.க. தாண்ட முடியாது; அன்றும் இன்றும் அதுதான் நிலைமை! 

வாச்பாயி தலைமையமைச்சராக இருந்தபோதுதான் (2002) குசராத்தில் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆதரவுடன் ஆரியத்துவா அமைப்புகள் மூவாயிரம் முசுலிம்களை “இனப்படுகொலை” செய்தனர். எந்த நடவடிக்கையும் வாச்பாயி எடுக்கவில்லை. அப்போது, குசராத் அமைச்சராக இருந்த அமித்சா மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலி மோதல் கொலை வழக்கும் தாக்கல் செய்தார்கள். 

பதவி வேட்டைக்காகப் பசப்புச் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் தலைவர் என்பது தி.மு.க.வின் அணிகளுக்குத் தெரியும்! பதவி வேட்டையில் கலைஞர் குடும்பத்திற்கு முதற்பெரும் பங்கு; அடுத்த பங்குகள் மற்றும் உதிர்ந்து விழுபவை அனைத்தும் நமக்கு என்ற எதிர் பார்ப்பில் உள்ளவை தி.மு.க. அணிகள்! தி.மு.க. இலட்சிய வீரர்களின் பாசறை இல்லையே! 

பா.ச.க.வின் ஆட்சியைத் தாங்கிய தி.மு.க. - அதனால் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தந்த புதிய உரிமைகள் என்ன? பலன்கள் என்ன? 

காவிரியைக் கைவிட்டார்

1998-இல் காவிரி ஆணையம் அமைத்தார் வாச்பாயி! அன்றைய முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசித் தான் அமைத்தார். அதிகாரமில்லாத ஆணையம்! தலைமை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை மாநிலங்களின் முதலமைச் சர்கள் உறுப்பினர்கள்! கருத்தொற்றுமையில்தான் (Consensus) முடிவெடுக்கமுடியும் என்பது அந்த ஆணையத் தின் அடிப்படை விதி! இதன் பொருள் என்ன? கர்நாடக முதல்வரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு முடிவும் எடுக்க முடியாது! இதன் உட் பொருள் என்ன? கர்நாடக முதலமைச்சருக்கு இரத்து அதிகாரம் (வீட்டோ) கொடுப்பது! 

அந்த ஆணையத்தை “வெற்றி வெற்றி” என்று முழக்க மிட்டு இனிப்பு வழங்கியது தி.மு.க. அந்த ஆணையத்தின் சிறப்புகளை வர்ணித்தார் கலைஞர்! ஆனால் அந்த ஆணையம் செயல்படாமல், தானே செத்துப் போனது! அதன்பிறகு 2006 முதல் 2011 வரை கலைஞர் மீண்டும் முதல்வரானார். அக்காலத்திலும் காவிரி உரிமையை அவரால் மீட்க முடியவில்லை. 

இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்டும் இன்றுவரை காவிரி உரிமை மீட்கப்படவில்லை! 

முல்லைப் பெரியாறு அணை - பாலாறு 

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கும் உரிமை பெற்றிருந்தோம். அணை உடையப் போகிறது என்று கேரளம் பீதி கிளப்பி எம்.ஜி.ஆர். ஆட்சியில் 152 அடியை 136 அடி ஆக்கினார்கள். தமிழ் நாடு அரசு அணையை வலுப்படுத்திய பின்னும் பழைய 152 அடி தேக்க அனுமதிக்கவில்லை கேரளம்! 

சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்து விட்டு 152 அடி தேக்கிக் கொள்ளலாம் என்பது உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்தின் தீர்ப்பு. அச்சிறு செப்பனிடும் பணிகளையும் செய்யவிடாமல் தடுக்கிறது கேரள அரசு! 

ஆங்கிலேய ஆட்சி உருவாக்கித் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையை விடுதலை பெற்ற இந்தியாவில் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. எம்.ஜி.ஆர். இறந்த பிறகு 1989 - 91, 1996 - 2001, 2006 - 2011 ஆகிய ஆண்டுகளில் கலைஞர் ஆட்சி நடந்தது. முல்லைப்பெரியாறு அணை உரிமையை இன்னும் முழுமையாக மீட்க முடியவில்லை! (இக்கட்டுரை கலைஞர் கருணாநிதியின் அரசியல் பற்றிய மதிப்பீடு என்பதால் அ.இ.அ.தி.மு.க.வின் அவலங்களைக் கூறவில்லை).

பாலாற்றில் தொடர்ந்து தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் ஆந்திர அரசு தடுத்துவிட்டது. ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து வரும் தி.மு.க. அதைத் தடுக்கவில்லை. பாலாற்றைப் பாதுகாக்கவில்லை! 

கல்வி உரிமை

மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த “கல்வி” - நடுவண் அரசின் மேலதிகாரம் கொண்ட பொதுப் பட்டியலுக்கு நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா காந்தியால் மாற்றப்பட்டது. நெருக்கடிநிலைக்குப் பின் ஆட்சிக்குவந்த ஜனதாக் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. நெருக்கடிநிலை காலத்தில் இந்திரா காந்தி செய்த அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் பலவற்றை நீக்கி, புதிய திருத்தம் கொண்டு வந்தது ஜனதாக் கட்சி ஆட்சி! 

ஆனால், கல்வியை மட்டும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவில்லை. கூட்டணிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கலைஞர் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர உருப்படியான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. 

நெருக்கடி நிலையை செயல்படுத்தி இந்திரா காங்கிரசு அரசு செய்த அட்டூழியங்களால் - எதேச்சாதிகாரத்தால், வடநாட்டு மக்கள் அக்கட்சியை 1971 தேர்தலில் தோற்கடித்தார்கள். 1975இல் நெருக்கடி நிலையை எதிர்த்ததால் பல பாதிப்புகளுக்கு உள்ளானது தி.மு.க.!

எதேச்சாதிகார இந்திராவுக்குப் பாராட்டு

ஆனால் அதே எதேச்சாதிகாரி இந்திராகாந்திக்கு 1980இல் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று கூறி, அந்தக்கால அரண்மனைக் கவிராயர் போல் கருணாநிதி சென்னைக் கடற்கரையில் வரவேற் பளித்தார். இந்திரா காங்கிரசுடன் 1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தார். இந்திரா காந்தி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். அப்போ தாவது இந்திராகாந்தியுடன் பேசி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தாரா? இல்லை! 

தேவகவுடா, வாச்பாயி, மன்மோகன் சிங் ஆட்சிகள் தி.மு.க.வின் ஆதரவில் இயங்கிய ஆட்சிகள். அப்போ தாவது செல்வாக்கு செலுத்திக் கல்வியை மாநிலப் பட்டி யலுக்கு மீட்டாரா கருணாநிதி? இல்லை! போராடித்தான் தோற்றாரா? அதுவும் இல்லை! 

அனைத்திந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி, அரசியல் திருப்புமுனைகளை உண்டாக்கியவர் கலைஞர் என்று ஊடகங்கள் ஊதிப்பெருக்கி சித்தரிக்கின்றனவே, கொள்கை அளவில் மாநில உரிமை மீட்பில் என்ன சாதனைகள் செய்தார்? அரசியல் பேரம் பேசி சந்தர்ப்ப வாதக் கூட்டணிகளுக்கு முட்டுக் கொடுப்பதில் கலைஞர் கருணாநிதி கை தேர்ந்தவர்!

வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்களிடம் வளர்ந்த தி.மு.க., வடநாட்டு அரசியல் ஆதிக்கத்திற்கு முட்டுக் கொடுத்துத் தன்னலப் பலன்களைப் பெற்றது. சொந்தத் தமிழினத்திற்கு அது என்ன பயன் தந்தது?

இந்தி - ஆங்கில ஆதிக்கம்

இந்தித் திணிப்பை எதிர்த்து 1938லிருந்து போராடி ஈகம் செய்துவரும் ஒரே இனம் தமிழினம்! 1965 - மொழிப்போரில் தாய் மொழி காக்க 300 பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி - எட்டு பேர் வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்து, தாய் மொழிக்காக்க இவ்வளவு பெரிய உயிரீகம் செய்த இனம் உலகத்திலேயே தமிழினம் மட்டும்தான்! 

இந்தப் பின்னணியில் 1967இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., 1968இல் இந்திப் பாடத்தை நீக்கும் சட்டம் கொண்டு வந்தது. முதலமைச்சர் அண்ணா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்தி, ஆங்கிலம், தமிழ் என்றிருந்த மும்மொழித் திட்டத்தை மாற்றி இந்தி மொழியை நீக்கி இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அதில் தமிழ் - மொழிப் பாடம் கட்டாயம் இல்லை! தமிழ் அல்லது ஏதாவதொரு இந்திய மொழி என்று கொண்டு வரப்பட்டது. அதே வேளை ஆங்கிலம் கட்டாயப் பாடம்! 

இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கூட படிக்காமல், ஆங்கிலம் - இந்தி - தெலுங்கு - மலையாளம் - சமற்கிருதம் என மற்ற மொழி களை மொழிப்பாடமாகக் கொண்டு படிக்கும் மாண வர்கள் எண்ணிக்கை பெருகி விட்டது. அரசு பள்ளிகளில் தமிழ் ஒரு மொழிப் பாடமாக உள்ளது. ஆனால் பெருகிவிட்ட நடுவண் வாரியப் பாடத்திட்டத் (சி.பி.எஸ்.இ.) தனியார் பள்ளிகள் பலவற்றில் தமிழே இல்லை! அங்கெல்லாம் இந்தி, சமற்கிருதம் இருக்கின்றன. 

மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தால் - இந்த அயல்மொழி ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியும்! கல்வியில் அயல்மொழிகள் ஆதிக்கம் செலுத்தி, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைத் தடுக்கக் கலைஞர் கருணாநிதி எடுத்த முயற்சிகள் யாவை? நடத்திய போராட்டங்கள் எத்தனை? விரல் விடுவார்களா? 

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழி யாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்கி 2012இல் அன்றைய முதல்வர் செயலலிதா ஆணையிட்டார். அதைத் தடுக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து “தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்” என்ற அமைப்பை உருவாக்கித் தொடர்ந்து பலமுறை பல வடிவங்களில் போராடினோம். கல்வி அமைச்சர் வீடு முற்றுகை, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தலைமைச் செயலகம் முற்றுகை, பெரும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் என எத்தனையோ நடத்தி னோம். தி.மு.க. ஆடவில்லை; அசையவில்லை! 

செயலலிதா ஆங்கிலவழிப் பிரிவுகளை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக் கொண்டு வந்ததைக் கலைஞர் கருணாநிதி கண்டித்து அறிக்கைகூட வெளியிடவில்லை!

“இருப்பது ஒரு உயிர்; அது போவது ஒரு முறை; அது தமிழுக்காகப் போகட்டும்” என வசனம் பேசியவர் கருணாநிதி! செயலலிதாவின் ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகள் அரசு பள்ளி அனைத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. பல அரசு தமிழ்வழிப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டுவிட்டன! 

வாச்பாயி ஆட்சியில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வின் டி.ஆர். பாலு. தமிழ்நாட்டில் போகும் நால்வழிச் சாலைகளின் வழிக்குறிப்புகளை புதிதாக இந்தியிலும் எழுதினார்கள். தி.மு.க. தலைவர் அதைத் தடுக்கவில்லை. அதைக் கண்டனம் செய்து தி.மு.க. ஓர் ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை! மாறாக, குறைவான இடங்களில்தான் இந்தியில் எழுதப்பட்டுள்ளது என்று சாக்குப்போக்குக் கூறினார் கலைஞர்!

நாங்கள் தமிழ்த்தேசிய முன்னணி சார்பில், அப்போது முதல் முதலாகப் போடப்பட்ட சென்னை - திண்டிவனம் நான்கு வழிச் சாலை வழிப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழித்தோம். அப்போது தார் பூசி அழித்தது சென்னை - திண்டிவனம் வரை உள்ள சாலையில் சில இடங்களில் இப்போதும் தெரிகிறது. காஞ்சிபுரம் பகுதியில் பெங்களூர் சாலையில் இந்தி எழுத்துகளை அழித்தோம். 

தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சிகளில் தான் தமிழ் மொழி அழிவு அதிகரித்தது. அம்மா ‘மம்மி’ ஆனார்; அப்பா ‘டாடி’ ஆனார். மாமா ‘அங்கிள்’ ஆனார். தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றில் சமற்கிருதப் பெயர்களே ஆங்கிலத்தில் பல் இளிக்கின்றன. 

மழலைக் கல்வியிலிருந்து பல்கலைக் கல்வி வரை தமிழே படிக்காமல் கல்வி கற்கும் கேடு இரு கழகங்களின் ஆட்சியில்தான் ஏற்பட்டது. 

கருணாநிதியும் செயலலிதாவும் இந்திய அரசுக்கு அச்சப்பட்டு நடக்க வேண்டிய அளவுக்கு ஊழல் புள்ளிகள் ஆகிவிட்டார்கள். கருணாநிதியின் “திராவிடக்” கொள்கை அனைத்திந்தியத்தின் குற்றேவல் கொள்கை என்பது மெய்ப்பிக்கப்பட்டுப் போனது. செயலலிதாவின் இதயத்தில் இருந்ததோ ஆரியக் கொள்கை! 

இந்த இரண்டு கழகங்களிடம்தான் பெருவாரியான தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கணித்துக் கொண்ட இந்திய அரசு, இந்தித் திணிப்பில் வேகம் காட்டியது. 

இப்போது தொடர்வண்டிப் பயணச் சீட்டில், முன் பதிவுப் படிவத்தில், அரசுடைமை வங்கிப் படிவங்களில், ஏ.டி.எம். எந்திரங்களில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம் பெறுகின்றன. தமிழ் இல்லை! 

செயலலிதாவோ திட்டமிட்ட ஆங்கிலத் திணிப்பாளர்; தமிழ் புறக்கணிப்பாளர்; அரசு பேருந்துகளில் - சிற்றுந்துகளில் ஆங்கிலம் மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொண்டார். புதிதாகக் கட்டப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்ற மற்ற அரசு கட்ட டங்களில் - உள் அலுவலகப் பிரிவுகள் ஆங்கில மொழியில் மட்டுமே செயலலிதா ஆட்சியில் எழுதப்பட்டன. அதையெல்லாம் தி.மு.க. தலைமை கண்டித்ததில்லை; தான் ஆட்சிக்கு வந்த போதும் அதை நீக்கியதில்லை!

தமிழ் வளர்ச்சி

தி.மு.க.வைப் பொறுத்தவரை தன் வளர்ச்சிக்குத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டது அதிகம்! தமிழ் வளர்ச்சிக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. சொல்லப் போனால் இடையூறாகவும் இருந்தது. 

தஞ்சையில் சரியான திட்டங்களுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கினார் அன்றைய முதல்வர் எம்ஜியார். தி.மு.க. ஆட்சி அதைக் கண்டு கொள்வதே இல்லை. செயலலிதா ஆட்சியும் அதைக் கண்டு கொண்டதில்லை! சீரழிந்து சிதைந்து ஊழலின் உறைவிடமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளது. பழைய திட்டங்கள் பலவும் செயல்படவில்லை. 

தனிநாயகம் அடிகளார் முயற்சியில் நிறுவப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருப்படியாக செயல்பட்டு வந்தது. கடைசியாக அதன் தலைவராக இருந்தவர் ஜப்பான் நாட்டின் தமிழறிஞர் நொபுரு கராசிமா. ஆராய்ச்சி அறிஞர்கள் திட்டமிட்டு நடத்தி வந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை - அதன் ஆட்சிக் குழுவுடன் கலந்தாய்வு செய்யாமல் 2010-இல் அவசர அவசரமாக கோவையில் நடத்த நாள் குறித்தார் அன்றைய முதல்வர் கலைஞர். ஆய்வுக் கட்டுரைகள் வாங்கக் கால அவகாசம் தர வேண்டும். இவ்வளவு அவசரமாக நடத்தினால் தரமான ஆய்வுக் கட்டுரைகள் கிடைக்காது என்றார் நொபுரு கராசிமா.

கலைஞரோ 2011இல் தேர்தலைச் சந்திக்க வேண்டி யிருக்கிறது என்றார். அந்த அவசர மாநாட்டை நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மறுத்து விட்டார். முதல்வர் கலைஞர் “உலக செம்மொழித் தமிழ் மாநாடு” என்ற புதிய பெயரில் மாநாட்டை கோவையில் நடத்தினார். கராசிமா தலைவர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செயலற்றுப் போய் விட்டது. தேர்தலுக்கு முன் விளம்பரத்திற்காக செம்மொழி மாநாடு நடத்தி இந்தச் சீர்குலைவைச் செய்திருக்க வேண்டிய தில்லை!

தமிழைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவிக்கக் கலைஞர் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். பாராட்டுகள்! ஆனால், செம்மொழி ஆராய்ச்சி நடுவத்தின் ஆட்சிக் குழுவின் தலைவராகத் தன்னை அமர்த்த வேண்டும் என்பதற்காக - தமிழ்நாடு முதல்வர் அதன் தலைவராக இருப்பார் என்று விதி ஏற்படுத்தினார். 

அவர் பதவியில் இருந்தவரை அக்கூட்டத்தை நடத்த அக்கறை காட்டவில்லை. அடுத்துவந்த செயலலிதா செம்மொழி ஆய்வு நிறுவனப் பொறுப்பு அதிகாரிகளைச் சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். அக்குழுக் கூட்டம் நடை பெறவே இல்லை! ஏதோ மானாங்காணியாகச் செம் மொழி ஆய்வு நிறுவனம் செயல்பட்டுக் கொண்டுள்ளது. 

செம்மொழி ஆய்வு நிறுவனத்தைக் கொண்டு வந்த கலைஞரே, அதில் தன்னை (முதல்வர் பதவி மூலம்) தலைமை ஆக்கிக் கொண்டதன் மூலம் - அதன் செயல் பாட்டை ஊனப்படுத்தினார். 

நிலம் 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் “நிலம்” - மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளது. அது இப்போது வெறும் பெயருக்கான அதிகாரமாக இருக்கிறது. உண்மையான அதிகாரம் இந்திய அரசுக்கு வருவதற்குரிய புதுப்புதுச் சட்டங்களை இந்திய அரசு இயற்றி விட்டது. 

இதனால் மரக்காணத்திலிருந்து இராமநாதபுரம் வரை உள்ள காவிரிப் படுகை உள்ளிட்ட வேளாண் நிலங்களில் ஐட்ரோகார்பன், பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட வற்றை எடுத்து விற்பதற்கு பெருங்குழுமங்களுக்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் ஏலம் விட்டுள்ளது இந்திய அரசு! தமிழர் தாயகத்தைத் தில்லி ஏகாதிபத்தியம் ஏலம் விடுகிறது. 

“வேளாண் நிலங்களில் எண்ணெய் எரிவளி எடுக்காதே - நிலத்தையும் நீரையும் நஞ்சாக்காதே!” என்ற போராட்டத்தை நம்மாழ்வார் தொடங்கி வைத்தார். அந்தப் போராட்டக் களத்தில் தி.மு.க. இல்லையே ஏன்? நெடு வாசல், கதிராமங்கலம் போராட்டங்களில் கூட வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சியாகத் தான் தி.மு.க. உள்ளது. 

இங்கே கருணாநிதியை “மண்ணுரிமை காத்த மாநில சுயாட்சி வீரர்” என்று ஊடகங்களும் தி.மு.க.வினரும் கதை புனைகிறார்கள். 

அதானி - அம்பானி உள்ளிட்ட வடநாட்டுப் பெரு முதலாளிகள் திருவண்ணாமலை - சேலம் மலைகளில் கிடைக்கும் கனிமங்களைக் கொள்ளையிட்டு அள்ளிச் செல்ல வசதியாக நரேந்திர மோடி அரசு, திடீரென்று 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை போட தமிழர் நிலங்களைப் பறிக்கிறது. அதற்கு அடியாள் வேலை பார்க்கிறது தமிழ் நாடு அரசு! 

அதுபற்றி தனது நிலைபாட்டைத் தெளிவாகச் சொல்லாமல், “மக்கள் கருத்தறிந்து எட்டுவழிச் சாலை பற்றி முடிவு செய்ய வேண்டும்” என்று மழுப்பலாக அறிக்கை விடுகிறார் மு.க. ஸ்டாலின். மக்களோ தங்கள் தாய் மண்ணையும் சாகுபடி நிலங்களையும் மலை களையும் காக்க எட்டுவழிச் சாலையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

வரி விதிக்கும் அதிகாரம் 

விற்பனை வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசிட மிருந்தது. அதைப் பறித்து இந்திய அரசே வசூலிக்கும் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரிமுறை யைக் கொண்டு வந்துவிட்டார்கள். 

இந்தியாவிலேயே அதிகமான வரிக் கொள்ளைக்குப் பலியாகி உள்ள மாநிலம் தமிழ்நாடு! டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு 05.09.2018 அன்று ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதை எழுதியவர் சென்னை பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேரா. கே. சோதி சிவஞானம்! அவர் கூறுகிறார் : இந்தியா முழுவதுமிருந்து இந்திய அரசுக்கு ஓர் ஆண்டில் கிடைக்கும் மொத்த வரி வருமானத்தில் 31% தமிழ் நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. இந்திய அரசிட மிருந்து தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் - மானியங்கள் வகையில் திரும்பி வரும் மொத்தத் தொகை 3.1% மட்டுமே! 

மக்கள் தொகையிலும் நிலப்பரப்பிலும் தமிழ்நாட்டை விடப் பல மடங்கு பெரிய உ.பி. இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்கள் பத்து இருக்கின்றன. மொத்தமுள்ள 29 மாநிலங்களில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 31% வரிவசூல் இந்திய அரசுக்குப் போகிறது. 

மாநில சுயாட்சிக் கட்சி - மாநில வரி உரிமையைக் காத்ததா? அதற்காக உருப்படியான போராட்டங்கள் நடத்தியதா? இல்லை! பிறகென்ன மாநில சுயாட்சி வீரர்! 

ஈழத்தமிழர்

இந்திய ஆட்சியில் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க. பங்கு வகிக்கின்ற போதுதான், 2008 - 2009இல் சிங்கள அரசு இந்திய அரசின் படை வகை உள்ளிட்ட பல்வேறு பங்களிப்புடன் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது. அப்போது சோனியா - மன்மோகன் சிங் ஆட்சி! அங்கே குருதி வெள்ளத்தில் இலட்சக்கணக்கான தமிழர் பிணங்கள் மிதந்தன! இங்கே சோனியா காந்தியுடன் கூட்டணி ஆட்சியில் தி.மு.க.! அந்த நேரத்தில் சோனியாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் களத்தில் கருணாநிதி! 

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரிப் போராடிய தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கடுமையாக ஒடுக்கினார் அன்றைய முதல்வர் கருணாநிதி! குண்டர் சட்டம், தேச விரோதச் சட்டம் (124A), தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA) என இன்னும் பல்வேறு “குற்றச்சட்டங்களில்” ஆயிரக்கணக்கான தமிழர்களை சிறையில் அடைத்தார். போர் நிறுத்தம் கோரி பதினெட்டுத் தமிழர்கள் தீக்குளித்து இறந்தனர். அதன் பின்னராவது நடுவண் ஆட்சியில் இருந்து தி.மு.க. வெளியேறியிருக்க வேண்டும். காங்கிரசு ஆட்சியின் மறைமுகத்துணையுடன் இலங்கை நடத்தும் போரை நிறுத்தவேண்டுமென்று போராடி யிருக்க வேண்டும்.

சாதித் தீவிரம் - சமூகநீதியா?

கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் தான் சாதித் தீவிரவாதம் மிகக் கொடுமையாக வளர்ந்துள்ளது. அண்ணா முதல்வராக இருக்கும்போது 1968இல் கீழவெண்மணியில் ஒரு குடிசைக்குள் 44 ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள் - ஆண்கள் - குழந்தை களை சாதி ஆதிக்கக்காரர்களும் நிலக்கிழார்களும் எரித்துக் கொன்றார்கள். 

அதன்பிறகு, கலைஞர் ஆட்சி, எம்ஜியார் ஆட்சி, செயலலிதா ஆட்சி காலங்களில் எத்தனை எத்தனை வீதிகள் சாதியின் பெயரால் எரிக்கப்பட்டன! ஒடுக்கப் பட்ட மக்களின் தெருக்கள் எரிக்கப்பட்டன; வீடுகள் சூறையாடப்பட்டன! 

எண்ணி முடிக்க முடியாத ஊர்களில் இந்த அநீதி நடந்துள்ளது. சாதி சங்கங்கள் பெருகி, அவை சாதிக் கட்சிகளாக மாறிய காலம் இவர்களின் ஆட்சிக்காலம் அல்லது இவர்களின் அரசியல் தலைமைக் காலம்! அத்தனை சாதி அமைப்புகளுடனும் தேர்தல் கூட்டணி கண்டது தி.மு.க.!

கழக நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் சாதி பார்த்து தேர்வு செய்து, சாதி வாக்கு வங்கிகளைக் கைவசப்படுத்த மாவட்ட - ஒன்றியத் தலைவர்கள் மூலம் சாதி உணர்ச்சியைத் தூண்டிவிட்ட கட்சிகள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்! 

படிக்கும் மாணவர்கள் கையில் சாதிக் கயிறு கட்டிக் கொள்ளும் அவலம் திராவிடக் கட்சிகளின் “சாதனை”! 

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆணுக்கும், “மேல் சாதி” பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டால் அவர்கள் திருமணம் செய்து கொண்டால் வெட்டிக் கொல்லும் மேல் சாதி வன்முறை தீவிர வடிவமெடுத்தது தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான்! 

தமிழர்கள் அனைவரும் ஓர் இனம்; ஒரு மரத்தின் கிளைகள் என்ற உளவியல் உறவை வளர்க்காமல், சாதி முகாம்களை வலுப்படுத்தி, அவற்றை வாக்கு வங்கிகளாக மாற்றியவை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்! ஆனால் வெளிப்பகட்டுக்கு “சமத்துவபுரங்கள்”! 

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருடன் “மேல்சாதி”யினர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கும் திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தது. இவையெல்லாம் வெறும் விளம்பர உத்தி களாகத்தான் போயின!

கையூட்டு - ஊழல் கழகங்கள்

அரசியல் அதிகாரத்தை வைத்து உலகம் அதிரும் வகையில் ஊழல் கொள்ளையில் சொத்துச் சேர்த்தவர்கள் தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்கள்! அவர்கள் மீது ஏராளமான வழக்குகள். இந்த ஊழல் வழக்குகளைப் பயன்படுத்தி, தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது இந்திய அரசு! 

தங்களின் கையூட்டு மற்றும் ஊழலைக் கண்டு மக்கள் வெறுப்படையாமல் இருக்க வேண்டுமானால், மக்களிடம் ஊழல் உளவியலை வளர்க்க வேண்டும் என்று தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்கள் உத்தி வகுத்தார்கள். இந்தியாவிலேயே ஒரு வாக்குக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கையூட்டு கொடுக்கும் பழக்கத்தை தமிழ்நாட்டில் இக் கழகங்கள் உண்டக்கின. அது மட்டுமின்றி, மக்கள் கேட்காத இலவசங்களைத் தாங்களே முந்திக் கொடுத்து, அரசிடம் கையேந்தும் உளவியலை மக்களிடம் வளர்த்து விட்டார்கள். 

தன்மானம், தற்சார்பு, குடிமக்கள் என்ற பெருமிதம், தாயகப்பற்று, இனப்பற்று ஆகிய அனைத்தையும் தமிழ் மக்களில் கணிசமானவர்களிடம் காணாமல் போகச் செய்தவர்கள் தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்கள். 

சாராயக் கடை

காங்கிரசு ஆட்சியில் தமிழ்நாட்டில் முழுமையாக மதுவும், கள்ளும் தடை செய்யப்பட்டிருந்தது. 1970களின் தொடக்கத்தில் முதன் முதலாகக் கள்ளுக்கடையும், சாராயக்கடையும் திறந்து மக்களிடம் குடிப்பழக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டவர் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி! இன்று, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. - தி.மு.க. எது ஆட்சியில் இருந்தாலும் மதுக்கடை வருமானத்தைப் பெருக்க மாவட்ட ஆட்சியர்களைப் பயன்படுத்து கிறார்கள். 

இதற்குக் காரணம், தமிழ்நாட்டின் நிர்வாகத்திற்கு நிதி தேவைப்படுகிறது என்கிறார்கள். “மாநில சுயாட்சி வீரர்கள்” இந்திய அரசு அள்ளிச்செல்லும் தமிழ்நாட்டுப் பணத்தை மீட்கப் போராடுவதில்லை! 

வெளியார் ஆக்கிரமிப்பு 

வெளிமாநிலத்தவர்களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாட்டை தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சிகள் திறந்து விட்டுள்ளன. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வந்து குவிகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள நடுவணரசு நிறு வனங்கள், அலுவலகங்களில் 100க்கு 90 பேர் வெளி மாநிலத்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கர்நாடகம், மகாராட்டிரம், குசராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட காங்கிரசு - பா.ச.க. - கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் மாநிலங் களில் மண்ணின் மக்களின் வேலை உரிமைக்குத் தனிச் சட்டங்களும், ஆணைகளும் இருக்கின்றன. அவற்றைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் அப்படியொரு சட்டம் இயற்ற கலைஞர் கருணாநிதி என்றைக்காவது முனைந்ததுண்டா? பெருகிவரும் வெளியார் வெள்ளம் தடுக்கப்படாமல் தொடர்ந்தால், இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்நாடு தமிழர் தாயகமாக இருக்காது! கலப்பின மாநிலமாக மாறிவிடும். வெளிமாநிலத்தவர்கள் மிகையாகத் தமிழ் நாட்டில் குவிவதைத் தடுக்கவும், ஏற்கெனவே குவிந்த வர்களை வெளியேற்றவும் குரல் கொடுக்கவில்லை கலைஞர் கருணாநிதி!

கழகங்களின் ஆட்சியில்தான் தமிழ்நாடு முன்னேறியதா?

இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குவதற்கும், மருத்துவம் - சாலைப் போக்குவரத்து துறைகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னேறி உள்ளதற்கும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிதான் காரணம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. 

இந்தியத் துணைக் கண்டத்தில் வரலாறெங்கும் மற்ற இனங்களைவிட தமிழினம் எப்போதும் முன்னேறி இருந்தது. ஐயாயிரம் ஆண்டுகளாக இதுதான் நிலைமை! அறிவியல் சார்ந்த வேளாண் உற்பத்தி, தொழில் சார்ந்த நகர உற்பத்தி, பன்னாட்டுத் துறைமுகங்கள் அமைத்து வெளிநாடுகளுக்கு வணிகக் கப்பல்கள் விட்டது எல்லாம் 2,500 - ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சாதித்தவை. எந்தக் காலத்தில் உ.பி.யைவிட, ம.பி.யைவிட தமிழ்நாடு பின்தங்கியிருந்தது? வெள்ளையர் ஆட்சியிலும் இல்லை! காங்கிரசு ஆட்சியிலும் அவ்வாறு இல்லை! இன்று நாம் நடத்திக் கொண்டிருக்கும் அடிமை வாழ்விலும் - தொழில்நுட்பத்தில், அறிவியலில் தமிழர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் முகாமையான இடங்களில் இருக்கிறார்கள். தமிழ்நாடும் கேரளமும் தனிநாடுகளாக இருந்திருந்தால், இன்று இருப்பதைவிட எவ்வளவோ முன்னேறி இருக்கும் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் அண்மையில் கூறினார். சேரத் தமிழர்களின் வேரைக் கொண்டது கேரளம்!

ஊழல் கொள்ளை, எதிரியிடம் சரணடைந்து பதவியும் பணமும் பெறும் சந்தர்ப்பவாதம், சாதிப் பிளவுகளை வளர்த்து அதில் ஆதாயம் பெறும் தன்னலம் முதலிய பண்புக் கேடுகளைக் கொண்ட தி.மு.க. - அ.தி.மு.க. ஆட்சியில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது என்றால் - அதுவும் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சிதான். தமிழினத்தின் மரபணுவில் உள்ள சிறப்புக் கூறுகளே அதற்குக் காரணம்! 

மன்னராட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும், காலனி ஆட்சியாக இருந்தாலும், கங்காணி ஆட்சியாக இருந்தாலும் மக்களுக்குத் தேவையான சில நன்மைகளைச் செய்தால்தான், தேவையான திட்டங் களை செயல்படுத்தினால்தான் அந்த ஆட்சி நீடிக்க முடியும். வெள்ளையராட்சியில் தமிழ்நாட்டில் எழுப்பப் பட்ட நீர்த்தேக்கங்கள், வேளாண் விரிவுத் திட்டங்கள், தொழில் பெருக்கம், தொடர்வண்டிகள், சாலைப் போக்குவரத்து, கல்வி நிலையங்கள் போன்றவை குறிப் பிடத்தக்கவை. இந்திய விடுதலைக்குப் பின் காங்கிரசு ஆட்சியிலும் பல துறைகளில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தார்கள். அந்த ஆட்சிகளையெல்லாம் வேண்டாமென ஏன் மக்கள் நீக்கினார்கள்? தன் இன ஆட்சி, தாய்மொழி வளர்ச்சி, உலக முன்னேற்றத்தோடு போட்டியிடும் அளவுக்கு தொழில், வேளாண்மை, மருத்துவம், கல்வி போன்றவற்றில் சமகால முன்னேற் றம், சமூகநீதி போன்றவற்றில் முழு முன்னேற்றங்கள் தேவை என்ற அளவில்தான் அந்த ஆட்சிகளை மக்கள் நீக்கினார்கள். 

இடஒதுக்கீட்டில் 69%, மனிதனை மனிதன் இழுக்கும் கைவண்டியை ஒழித்தது, கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வு கொண்டு வந்தது போன்ற வற்றைக் காட்டி இதற்கு முன் சொன்ன உரிமைகளையும் வளங்களையும் முன்னேற்றங்களையும் பலி கொடுக்க விழிப்புணர்வு பெற்ற மக்கள் அணியமாக மாட்டார்கள். 

குடும்ப ஆட்சி

தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கலைஞர் கருணாநிதி செய்த பெரும் தீங்குகளில் முதன்மையானது ஒற்றை அதிகார மைய - குடும்ப வாரிசு அரசியல் தலைமையை உருவாக்கியதாகும். சனநாயகத் தின் கையைக் கொண்டு, சனநாயகத்தின் கண்ணைக் குத்தியவர் கருணாநிதி! தி.மு.க.வில் அறிவு - உழைப்பு - நேர்மை - ஈகம் - ஆளுமை போன்ற பண்புகளைக் கொண்ட எந்தவொரு “உடன்பிறப்பு”ம் கலைஞர் வாரிசுகளுக்குச் சமமாக கட்சித் தலைமைக்கு வந்துவிட முடியாது. கலைஞர் வாரிசுகளை அண்டிப் பிழைப் போர்க்கு அடக்கு ஒடுக்குமான பதவிகள் உண்டு

எடுத்துக்காட்டான தலைவர்களா?

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, தமிழர்களின் உரிமைகளைக் காக்க, தமிழீழத் தமிழர்களுக்கு இன உறவுடன் உறுதியான துணையாகச் செயல்பட, தமிழ்ச் சமூகத்தில் சமத்துவம் நிலவிட இன்றைய இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் கலைஞர் கருணாநிதியை முன் எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியுமா? அல்லது ஸ்டாலினை முன்னெடுத்துக் காட்டாகக் கொள்ள முடியுமா? அல்லது அ.தி.மு.க.வின் அணித் தலைவர்களை முன்னெடுத்துக் காட்டாகக் கொள்ள முடியுமா? முடியாது! 

தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகள் மக்களுக்கு இரண்டகம் இழைத்ததால்தான் காவிரிப் படுகையைக் காத்திடவும், கடலில் மீன்பிடி உரிமையைப் பாதுகாத்திடவும், தூத்துக்குடி, நெடுவாசல், கதிராமங்கலம், எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டங்களிலும் மக்கள் கட்சிக் கொடி இல்லாமல் தாங்கள் ஒற்றுமையாய் போராடு கிறார்கள். 

தி.மு.க. - அ.தி.மு.க. கழகங்களும், அவற்றின் சிறிய கூட்டாளிகளான மற்ற கட்சிகளும் கொடிகளுடன் கலந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் போராடித் தான் தமிழர் மரபுரிமையான ஏறு தழுவுதல் (சல்லிக் கட்டு) உரிமையை சட்டப்படி மீட்டனர் இளைய தலைமுறையினர்! கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களும், தி.மு.க. - அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் இன்றைய இளையோருக்கு வழிகாட்டும் எடுத்துக் காட்டுகள் அல்ல!

இவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும். இவர்களைப் போல் போலியாக இன உரிமை, மொழி உரிமை, சமத்துவம், சமூகநீதி என்று பேசிக் கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் தலைவர்களாகிவிட வழிவகுக்கக் கூடாது. தமிழ்நாட்டு இளையோர் ஒற்றை அதிகாரத் தலைமை பற்றி சிந்திக்கக் கூடாது. கூட்டுத் தலைமை - எல்லோரும் ஒவ்வோர் அளவில் முன்கை எடுப்போரே! - வழிகாட்டிகளே! அமைப்பாளர்களே! என்று துணிவுடன் சிந்தியுங்கள். நாம் பின்பற்ற மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டத் தகுதியும் உரிமையும் உடையவர்கள்! ஆட்டுமந்தை மாட்டு மந்தை போல் நாம் ஓட்டு மந்தையல்ல, உலகுக்கே வழிகாட்டும் உயிர்த் துடிப்புள்ள தமிழர்கள் என்று சிந்தியுங்கள்!


Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்