<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d6955529389241309188\x26blogName\x3d%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86.%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thozharmaniyarasan.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com/\x26vt\x3d-8408640130511538487', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழ்நாடு நாள்” தமிழர் தாயக விழா நாள் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Thursday, October 31, 2019

“தமிழ்நாடு நாள்”
தமிழர் தாயக விழா நாள்


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!



அறுபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச் சராகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இம்முடிவெடுத்தமைக்கு ஆட்சியாளர்களைப் பாராட்டுவோம்!

தமிழ்நாட்டில் இளந்தலைமுறையினரிடம் எழுச்சி பெற்று வரும் தமிழின உணர்வுத் தாக்கமும் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கும். அண்டை மாநிலங்கள் எல்லாம் தங்களது தேசிய இனத் தாயகம் அமைந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாடு மட்டும், “இந்தியன்” - “திராவிடன்” என்று அயலார் தூக்கி மாட்டிய இனப் பெயர்களை சிலுவையாய்ச் சுமந்து, சொந்தத் தமிழினப் பெருமிதங் களைத் தொலைவில் தள்ளி வைத்தது.

“காரிருளால், சூரியன்தான் மறைவதுண்டோ
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ” என்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டார்!

மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு (அன்று சென்னை மாநிலம்) 1956 நவம்பர் 1 அன்று அமைக்கப்பட்டது. அதற்கு முன் சென்னை மாநிலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆந்திரப் பிரதேசம் 1953இல் பிரிந்து தனி மாநிலமானது.

பிரித்தானிய வணிக நிறுவனமான கிழக்கிந்தியக் கம்பெனியின் பீரங்கிகளின் வல்லுறவால் பிறந்த நாடு இந்தியா. இதன் பெற்றோராகிய பிரித்தானியரே ‘இந்தியா’ என்று பெயர் சூட்டினர். இருநூறு ஆண்டு களுக்கு முன் இந்தியா என்ற பெயரிலோ பாரதம் என்ற பெயரிலோ ஒரு நாடு இருந்ததில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம்; தமிழ்நாடு என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

வணிக வேட்டைக் கொள்ளையரான வெள்ளையர் ஆட்சி - மொழிவழித் தாயகம், தேசிய இனத் தாயகம் என்பவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களின் சுரண்டல் நிர்வாக வசதிக்கேற்ப இந்தியாவில் பல மாகாணங்களை உருவாக்கி, அவற்றின் அன்றாட நிர்வாகப் பொறுப்பை வெள்ளைக்கார ஆளுநர்களிடம் ஒப்படைத்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் குழுக்களை மொழி அடிப்படையில் தனித்தனியே அமைக்க வழிகாட்டினார்.

1920ஆம் ஆண்டு நடந்த அனைத்திந்திய காங்கிரசு மாநாட்டில் மொழிவாரி மாநிலக் குழுக்களை உருவாக் கிடத் தீர்மானம் நிறைவேற்றினர். விடுதலை பெற்ற இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேற்படித் தீர்மானத்தின் அடிப்படையில் அன்றைய சென்னை மாகாணத்தில் 1923ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி அமைக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்துக்குத் தனி மாநிலக் கமிட்டி அமைக்கப்பட்டது. 1920களிலேயே “தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி” அமைத்த அக்கட்சி, 1947 ஆகத்து 15இல் விடுதலை பெற்ற பின் மொழிவழித் தமிழ்நாடும், ஆந்திரமும் பிரிக்க மறுத்தது.

ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி சிறீராமுலு அவர்கள் விசாலாந்திரம் தனியே அமைக்க வலியுறுத்தி 56 நாட்கள் உண்ணாப்போராட்டம் நடத்தி சென்னையில் 15.12.1952 அன்று உயிர் நீத்தார். ஆந்திராவில் பெரும் கலவரம் வெடித்தது. அதன்பிறகு, 1953 அக்டோபர் 1-இல் ஆந்திரப் பிரதேசம் சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து அமைக்கப்பட்டது. சித்தூர், திருப்பதி உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளை ஆந்திரத்துடன் இணைத்தது இந்திய அரசு!

மங்கலங்கிழார், ம.பொ.சி., கே. விநாயகம், கோல்டன் சுப்பிரமணியம், ரகீம் போன்ற பெருமக்கள் வழி காட்டலில் போராடிய தமிழர்களால்தான் ஆந்திரத் துக்குப் போன திருத்தணி பகுதியை மீட்க முடிந்தது. வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் காவல்துறை யினரின் தாக்குதலால் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்று இரு தமிழர்கள் உயிர்ப்பலி ஆனார்கள்.

கேரளம் விழுங்கிய இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை மீட்கும் போராட்டத்தை நடத்தியவர்கள் மார்சல் நேசமணி, தியாகி பி.எஸ். மணி, குஞ்சன் நாடார், ஜீவா, காந்திராமன், நத்தானியேல், தாணுலிங்க நாடார் போன்றோர்! கேரள முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை தமிழர் இரத்தம் குடிக்கும் ஓநாயாய் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதினோரு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனாலும், நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு போன்ற தமிழர் தாயகப் பகுதிகளை மீட்க முடியவில்லை.

வடக்கெல்லை மீட்பு, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களை வழி நடத்தியவர்கள் அந்தந்தப் பகுதியின் காங்கிரசாரே! அந்தக் காங்கிரசாரை தமிழ்நாடு காங்கிரசோ, காமராசரோ ஆதரிக்கவில்லை!

திராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய இரு கழகங்களும் தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகியோர்க்கான “திராவிடம்” பேசி வந்ததால் தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டில் சேர்க்கக் களப் போராட்டங்கள் நடத்தவில்லை.

1947 - 1948 வாக்கில் மொழிவழி மாநிலக் கோரிக்கை இந்தியாவெங்கும் வலுவடைந்து வந்தபோது, ம.பொ.சி. புதிய தமிழகக் கோரிக்கையை எழுப்பினார். சோவியத் ஒன்றியத்தில் மாநிலங்களுக்குத் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை - Self determination) இருப்பதுபோல் “புதிய தமிழகத்திற்கும்” வேண்டும் என்றார். சுயநிர்ணய உரிமையுள்ள புதிய தமிழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவில் காமராசர், பாரதிதாசன், ஜீவா, தெ.பொ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 12 பெரு மக்களிடம் கையொப்பம் வாங்கி இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் பெரியார் புதிய தமிழகம் தனியே அமைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.

“மொழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும், விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக் காட்டி யுள்ளோம். மீண்டும் கூறுகிறோம். மொழிவாரி மாகாணக் கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டாம்” - பெரியார், விடுதலை, 21.04.1947.

தேவிகுளம், பீர்மேட்டைத் தமிழ்நாட்டுடன் இணைக்கத் தமிழ்நாட்டில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தை பெரியார் ஆதரிக்கவில்லை. தேவிகுளம், பீர்மேட்டைக் கேரளாவுடன் சேர்த்தது சரியே என்று “தினந்தந்தி” ஏட்டுக்கு பேட்டி அளித்தார். (காண்க : தினத்தந்தி, 11.10.1955).

பெரியார் 1938இல் முத்திரை முழக்கமாகப் போட்டு வந்த “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தைக் கைவிட்டு, “திராவிடநாடு திராவிடர்க்கே” என்று முழங்கி வந்தார். இறுதியாக, இன்றைய நிலையில் உள்ள தமிழ் நாடு 1956 நவம்பர் 1 அன்று இந்திய அரசால் அறிவிக்க முன்வந்தது. இந்நிலையில், மீண்டும் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தை “விடுதலை” இதழில் போடத் தொடங்கினார்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள “தமிழ்நாடு நாள்” கொண்டாடும் அறிக்கையில் பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோர் மொழிவழித் தமிழ்நாடு அடையப் போராட்டங்கள் நடத்தியதாகத் தவறாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையில் போராடிய ம.பொ.சி., மார்சல் நேசமணி ஆகியோர் பெயரைக் கடைசியில் போட்டுள்ளார்கள். மங்கலங்கிழார், பி.எஸ். மணி போன்றோர் பெயர்கள் குறிப்பிடப்படவே இல்லை! தமிழ்நாடு அரசு இத்தவறைத் திருத்த வேண்டும்.

வடக்கெல்லை, தெற்கெல்லை மீட்புப் போராட்டங்களைப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அப்போராட்டத்தில் உயிர் நீத்த - சிறை சென்ற ஈகியர் குடும்பத்தினர்க்குக் கூடுதலான உதவித் தொகை வழங்க வேண்டும்!

இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!

Labels:

இந்தியதேச வரலாறு இல்லை! இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது! பெ. மணியரசன் கண்டனம்!

Saturday, October 19, 2019

இந்தியதேச வரலாறு இல்லை!
இந்திய தேசங்களின் வரலாறே இருக்கிறது!

அரசமைப்புக்கு எதிரான அமித்சாவின்
‘புதிய வரலாறு’ பேச்சுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கண்டனம்!


வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் 17.10.2019 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா, “இந்திய வரலாற்றை ஆங்கிலேயர்கள் பார்வையில் எழுதியிருக்கிறார்கள். அதை இந்தியப் பார்வையில் திருத்தி எழுத வேண்டும்” என்றும், “அவ்வாறு நாம் திருத்தி எழுதுவதற்கு யாரும் தடை போட முடியாது” என்றும் பேசியுள்ளார்.
எத்தனையோ சட்டங்களை நீக்கியும் மாற்றியும் எதேச்சதிகாரம் செய்து கொண்டிருக்கும் பா.ச.க. ஆட்சியாளர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தையே முழுமையாக மாற்றி எழுதத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக இந்திய வரலாற்றை திருத்தி எழுத முன்மொழிந்துள்ளார் அமித்சா.
திருத்தி எழுதப்படும் இந்திய வரலாற்றின் “ஞானகுரு”வாக விநாயக தாமோதர சாவர்க்கரை அடையாளம் காட்டியுள்ளார் அமித்சா. சாவர்க்கர்தான் 1923இல் முதன் முதலாக “இந்துத்துவா” என்ற சொல்லைக் கட்டமைத்து, இன்றைய ஆரிய பிராமணிய வகுப்புவாத அரசியலுக்கு வழிகாட்டியவர்.

மேலும் அமித்சா, இந்திய வரலாற்றில் வாழ்ந்த சிறப்புமிக்க மன்னர்களின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது சாணக்கியரை வழிகாட்டி ஆசானாகக் கொண்டு அமைக்கப்பட்ட மௌரியப் பேரரசு, புரோகிதர்களின் பொற்காலமாக விளங்கிய குப்தர்கள் ஆட்சி, தமிழ்நாட்டின் மீது படையெடுத்துப் பிடித்து ஆட்சி செய்த தெலுங்கு கன்னட விஜயநகரத் தளபதிகளின் ஆட்சி, பிராமண குருவின் உபதேசப்படி செயல்பட்ட மராட்டிய சிவாஜி ஆட்சி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சி பற்றி குறிப்பிடவில்லை. ஏன்? இமயத்தில் கொடியேற்றி வாழ்ந்தவர்கள் என்பதற்காக அவர்களை சேர்க்கவில்லையா? ஆரியத்துவாவின் அடிமைகளாக இல்லாமல் தமிழர்களின் அறிவு, வீரம், அறம் ஆகியவற்றோடு ஆட்சி செய்தார்கள் என்பதற்காக சேர்த்துக் கொள்ளவில்லையா?
கடந்த 2014இல் தமிழ்ப் பேரரசன் இராசேந்திரசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை மோடி அரசு கொண்டாடி உலகத்திலேயே மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தவன் இராசேந்திர சோழன் என்று பாராட்டியது. அதெல்லாம் அவ்வப்போது அவர்களின் திட்டத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தற்காலிகச் சொற்களா?

இந்தியா முழுவதையும் ஒரே தேசம் – ஒரே மதம் – ஒரே பண்பாடு - ஆனால் இரண்டு மொழி (இந்தி – சமற்கிருதம்) என்று மாற்றியமைத்திட செயல்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. பரிவாரங்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தாயக ஆட்சியையும், வளர்ச்சி பெற்ற பல தாய்மொழிகளையும், பண்பாடுகளையும் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய சமத்துவத்தையும் கொண்டுள்ள பல்வேறு தேசிய இனங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக்கி - ஒற்றை ஆரிய தேசத்தை உருவாக்க எல்லா முனையிலும் செயல்படுகின்றன.
இந்த வெறிச்செயலில் பல்வேறு தேசிய இனங்களின் எஞ்சியிருக்கும் உயிரையும் பறிக்கும் வேலைதான் சாவர்க்கர் காட்டிய வழியின்படி ஒற்றை முகம் கொண்ட இந்திய வரலாற்றை வடிவமைக்கும் திட்டம்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் இந்த “புதிய வரலாறு” எழுதும் திட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், கண்டனம் செய்தால் மட்டும் போதாது! சமூக அறிவியல்படியான இந்தியாவின் உண்மை வரலாற்றை ஒவ்வொரு தேசிய இனத்தவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். இந்தியா என்ற சொல்லும், நிர்வாகக் கட்டமைப்பும் பிரித்தானிய பீரங்கிகளால் உருவாக்கப்பட்டவை. இன்றைய வடிவில் இந்தியா என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடு இருந்ததே இல்லை! இந்தியத்தேச வரலாறு என்று எதுவுமில்லை. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தேசங்களின் வரலாறுதான் இருக்கிறது என்பதை ஓங்கிச் சொல்வதுடன், அந்தந்த தேசிய இனமும் தனது சரியான புதிய இன வரலாற்றை எழுத வேண்டும்!

இந்தியாவின் பன்மையைக் குறிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை “அரசுகளின் ஒன்றியம்” எனக் குறிப்பிடுகிறது; இந்தியாவை தேசம் (Nation) என்று கூறவில்லை. அரசமைப்புச் சட்டத்தையே முற்றிலும் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள பா.ச.க ஆட்சியாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைளைத் தடுக்க - இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களும், சனநாயக ஆற்றல்களும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels:

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது போட்ட வழக்கைக் கைவிடுக! பெ. மணியரசன் வேண்டுகோள்!

Wednesday, October 16, 2019

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
மீது போட்ட வழக்கைக் கைவிடுக!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் 12.10.2019 அன்று சொற்பொழிவாற்றும் போது, முன்னாள் தலைமை அமைச்சர் இராசீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை ஆதரித்துப் பேசியது சரியல்ல; அவ்வாறான பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

சீமானின் இந்தப் பேச்சைக் கண்டனம் செய்வதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அந்தப் பேச்சை வைத்துக் கொண்டு, அவர் மீது தேசத் துரோக வழக்குப் போட வேண்டும்; அவரைச் சிறையில் அடைக்க வேண்டும்; அவர் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ச.க. – காங்கிரசு கட்சியினரும், திராவிடவாதத்தை ஆதரிக்கும் தனிநபர் சிலரும் கோருவது அவர்களின் மன வன்மத்தையே காட்டுகிறது.

இராசீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, அவர் ஈழத்திற்கு அனுப்பிய இந்தியப் படை, தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிராகத்தான் போர் நடத்தியது. ஆயிரக்கணக்கானத் தமிழர்களைக் கொன்றது; தமிழ்ப்பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டது. ஆயிரக்கணக்கான தமிழர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது.

சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை 2008 – 2009இல் அன்றாடம் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்தபோது, இந்திய அரசு அப்போருக்கு எல்லா வகையிலும் துணை செய்தது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் 18 பேர் தீக்குளித்து மாண்டார்கள். போர் நிறுத்தம் கோரியவர்களை பல்லாயிரக்கணக்கில் சிறையில் அடைத்தனர். பலர் பொடாச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டனர்.

ஈழத்தமிழ்ப் பொது மக்கள் – ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் போராட்டம், குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு மறுத்ததால், அதன் மீது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மக்கள் அனைவருக்கும் சினம் கொண்டனர்.

அந்தச் சினம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் தொடரத்தான் செய்கிறது. அதற்காக 1991 மே 21-இல் நடந்த இராசீவ்காந்தி கொலையை - அந்தக் கொலையை யார் செய்திருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆயுதப் போராட்டங்களோ – தலைவர்களையும் தனி நபர்களையும் கொலை செய்யும் தீவிரவாதச் செயல்களோ சரியான பாதை அல்ல என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் நிலைபாடு!

மேற்படி பேச்சுக்காக காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை ஏற்று, தமிழ்நாடு காவல்துறை சீமான் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ மற்றும் 504 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது சரியல்ல. எந்த சமூகப் பிரிவுக்கும் எதிராக வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டும் பேச்சை சீமான் பேசவில்லை. எனவே, இ.த.ச. 153ஏ பொருந்தாது. இப்பேச்சால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இ.த.ச. 504 பிரிவும் பொருந்தாது.

கடந்த சில நாட்களாக – இச்சிக்கலை பூதமாகப் பெரிதுபடுத்தி தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க பா.ச.க.வினரும், காங்கிரசாரும் முனைகின்றனர். தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட வேண்டும்.

காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றது சரி என்று கூறி, கோட்சேயை தலைவர் என்றும், ஈகி என்றும் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. வடமாநில அரசுகளும் எடுக்கவில்லை. இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களின் ஒளிப்படங்கள் “தியாகிகளாக” அமிர்தசரஸ் பொற்கோயிலில் பொறிக்கப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பா.ச.க.வினரும், காங்கிரசாரும் ஒரு தேர்தல் கூட்டத்தில் ஆவேசத்தில் பேசிய பேச்சுக்காக சீமானை சிறையில் தள்ள வேண்டுமென்றும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டுமென்றும் கூக்குரலிடுவது திட்டமிட்ட தமிழினத் துரோகச் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரசுக்காரர்கள் கொடுத்த புகாரை வைத்து தமிழ்நாடு தேர்தல் ஆணையத் தலைமை அலுவலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் கோரி கடிதம் அனுப்பியது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பலியாவது போல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலையிட்டு, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்த வழக்கைக் கைவிடுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் 

Labels:

அசுரன்” இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பெ. மணியரசன் நேரில் சென்று பாராட்டு!

Tuesday, October 15, 2019

அசுரன்” இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு
ஐயா பெ. மணியரசன் நேரில் சென்று பாராட்டு!


தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள சாதிய கொடுமைகளை வெளிப்படுத்தியதோடு, தமிழராய் ஒருங்கிணைந்து இதை எதிர்கொள்ள வேண்டியதையும் உணர்த்தி, மிகச்சிறப்பாக வெளிவந்துள்ள “அசுரன்” திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறன் அவர்களையும், அவர்தம் குழுவினரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இன்று (15.10.2019) பிற்பகல் - நேரில் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தார்.
சந்திப்பின்போது, ஐயா மணியரசன் அவர்கள் தான் எழுதிய “சாதியும் தமிழ்த்தேசியமும்”, “வெண்மணி தீ வெளிச்சத்தில்”, தோழர் இலட்சுமி அம்மாள் எழுதிய “இலட்சுமி எனும் பயணி” உள்ளிட்ட நூல்களை இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு வழங்கினார்.
“அசுரன்” படத்தில் நடித்துள்ள நடிகர்களையும், உடன் பணியாற்றிய திரைக் கலைஞர்களையும் பாராட்டிய ஐயா மணியரசன் அவர்கள், தொடர்ந்து இதுபோன்ற கலைப்படைப்புகளை வழங்க வேண்டுமென இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அன்போடு கேட்டுக் கொண்டார்.
இயக்குநர் தங்கவேலவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் வெற்றித்தமிழன், வி. கோவேந்தன், தோழர்கள் தமிழ்ச்செல்வன், கவியரசன், ஊடகவியலாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Labels:

எரியும் வினாக்கள் எதிர்கொள்ளும் விடைகள் பா.ச.க. செய்தித்தொடர்பாளராக அமைச்சர் பாண்டியராசன்! பெ. மணியரசன்

Monday, October 14, 2019

எரியும் வினாக்கள்
எதிர்கொள்ளும் விடைகள் :
பா.ச.க. செய்தித்தொடர்பாளராக
அமைச்சர் பாண்டியராசன்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வினா : நரேந்திரமோடியும் சீனக்குடியரசுத் தலைவர் சி சின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசிய நிகழ்வு, தமிழ்நாட்டில் கூறப்பட்ட மோடி எதிர்ப்புக் கதைகளைத் துடைத்தெறிந்துவிட்டது என்று தமிழ்த்துறை அமைச்சர் கே. பாண்டியராசன் கூறுகிறார். அது உண்மையா?

“இந்து” ஆங்கில நாளேட்டில் இன்று (14.10.2019) வந்துள்ள அமைச்சர் கே. பாண்டியராசன் செவ்வி அவ்வாறுதான் கூறுகிறது. இவ்வளவு ஆவேசமாக அ.தி.மு.க. அரசின் தமிழ்த்துறை அமைச்சர் தமிழர்களின் மோடி எதிர்ப்புணர்வைச் சாடுவது ஏன்? தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களுடன் போட்டி போட்டு மோடி – அமித்சா கவனத்தை ஈர்க்கிறாரோ?

அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் “பகவத் கீதை”யைப் பாடமாக வைத்தது சரியா என்று “இந்து” செய்தியாளர் டென்னிஸ் எஸ். சேசுதாசன் கேட்டதற்கு, “அரிஸ்டாட்டில், தாவோ, கன்பூசியஸ் ஆகியோரின் தத்துவங்கள் போன்றதுதான் பகவத் கீதை! இதைப் பாடமாக வைத்ததை ஏன் எதிர்க்க வேண்டும்? பகவத் கீதையை எதிர்ப்பது முழுக்க முழுக்க அரசியல்! திருக்குறளையும் பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு உயர்கல்வித் துறை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்” என்றார்.

முந்திக் கொண்டு பகவத் கீதையைப் பொறியியல் பல்கலையில் பாடமாக்கத் துணை நின்ற தமிழ்த்துறை அமைச்சர் பாண்டியராசன் – தமிழுக்கும் பிச்சை போடுகிறேன் என்பதுபோல் திருக்குறளை வைக்கவும் பரிந்துரைத்திருக்கிறேன் என்கிறார்.

மதுரையில் தமிழன்னை சிலையை சமற்கிருத மாதா வடிவில் செய்ய திட்டம் அறிவித்தது, +2 ஆங்கில மொழிப் பாட நூலில் தமிழ்மொழி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலும், சமற்கிருதம் கி.மு. 2000-லும் தோன்றியவை என்றும் சங்க காலத்திலேயே தமிழ்ப் பண்பாட்டில் வேத பிராமண இந்துப் பண்பாடு கலந்துவிட்டது என்றும் கூறும் பாடத்தைச் சேர்த்தது போன்றவற்றின் பின்னணியில் பாண்டியராசன் இருக்கிறாரோ என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

மேற்படி செய்தியாளர் “மோடியே திரும்பிப் போங்கள்” என்ற முழக்கம் (#GoBackModi) சமூக வலைத்தளங்களில் முன்னோடியாய் வந்திருப்பது எப்படி எனக் கேட்டதற்கு, “இதெல்லாம் பாகிஸ்தான் சதி வேலை” என்று பா.ச.க. பாணியில் விடையளித்துள்ளார்.

பாண்டியராசனின் அரசியல் தொடக்கம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. என்கின்றனர் அவரை அறிந்தோர். அ.தி.மு.க. தலைமைதான் இதுபற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்.

Labels:

முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Friday, October 11, 2019

முக்கால் கிணறு தாண்டுகிறது முரசொலி!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


தி.மு.க.வின் “முரசொலி” நாளேட்டில் “கீழடி அகழாய்வு: அறிக்கைகள் வெளியிடப்படுமா? ஆய்வு தொடருமா?” என்று நேற்று (10.10.2019) ஆசிரியவுரை வந்துள்ளது. அதில் இறுதிப்பகுதியின் இரண்டு மூன்று பத்திகளை மட்டும் தவிர்த்திருந்தால், தமிழர்கள் அனைவருக்குமான சிறந்த ஆசிரிய உரையாக அமைந்திருக்கும்.
முரசொலி ஆசிரியவுரையின் சாரம்
---------------------------------------------------------
கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதால் இனப்பாகுபாட்டு அணுகுமுறையுடன் இந்திய அரசு அதைத் தொடராமல் ஏற்கெனவே மூடிவிட்டது. கீழடி ஆய்வில் உண்மையான ஆர்வத்துடன் பணியாற்றிய இந்திய அரசின் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை அசாமுக்கு இடமாற்றம் செய்து விட்டது.

சிந்து சமவெளிப் பானைக் கீறல்களும் கீழடிப் பானைக் கீறல்களும் (எழுத்துகள்) ஒன்றாக இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வந்த ஐந்தாம் கட்ட கீழடி ஆய்வும் 7.10.2019 அன்றுடன் நிறுத்தப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்திய அரசின் தலையீடுதான் இதற்குக் காரணம் என்பதையும் “முரசொலி” கூறுகிறது. அத்துடன் நில்லாமல் இந்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் செய்திகளையும் பட்டியல் இட்டுள்ளது.
1. நூறாண்டு போராடி தமிழுக்கு செம்மொழி – நிலையைப் பெற்றோம். ஆனால், அந்த செம்மொழி நிறுவனம் நிர்வாகக் கோளாறால் சிதறுண்டு கிடக்கிறது.
2. இந்தித் திணிப்பை எதிர்த்து 82 ஆண்டுகளாக இன்னும் போராட்டம் நடத்தி வருகிறோம்.
3. தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரி வருகிறோம். நடுவண் அரசு அதை ஏற்கவில்லை.
4. தமிழ்நாட்டிற்குரிய நிதியைப் பெறுவதற்கு புதுதில்லியிடம் தொடர்ந்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறோம்.
5. நமது ஆற்றுநீர் உரிமைகளை இந்திய அரசு நிலைநாட்டித் தரவில்லை.

இப்படி இன்னும் பெரிய பட்டியல் எழுதலாம்.
இப்பொழுது கீழடி ஆய்வையும் தடுத்து நிறுத்தியுள்ளது இந்திய அரசு. தமிழர்களின் தொன்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்கிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயல்பாடுகள் பற்றி “முரசொலி” மேலே பட்டியலிட்டுள்ள அனைத்தும் உண்மைதான்! ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடத்திய காலங்கள் “பொற்காலங்கள்” என்று தி.மு.க. தலைமையும், முரசொலியும் வர்ணித்து வந்த புகழ்ச்சிகள்தாம் பொய்யானவை!
காவிரி உரிமை மீட்பில் வெற்றி பெற்று விட்டதாகத் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் நடத்திய வெற்றி விழாக்கள்தாம் போலியானவை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலங்கள்தாம் “முரசொலி”யின் இந்த ஆசிரியவுரை!
கூட்டணிக் கும்மாளம்
------------------------------------
தமிழ்நாட்டின் உரிமைகளை இந்திய ஆட்சியாளர்கள் பறித்த வந்தக் காலங்களில் காங்கிரசு ஆட்சியுடன் அல்லது பா.ச.க. ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கும்மாளம் போட்ட கழகம் தி.மு.க.! இப்போதும், காங்கிரசுடன் கூட்டணி!

அ.இ.அ.தி.மு.க.வும் காங்கிரசு, பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்த - சேரும் கட்சிதான்!
“எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், இராகுல்காந்திதான் தலைமை அமைச்சர் என்று இந்தியாவிலேயே முதல் முதலில் அறிவித்தது நான் தான்” என்று பெருமை பேசிக் கொள்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். “முரசொலி” பட்டியலிடும் உரிமைப் பறிப்புகளை காங்கிரசு ஆட்சி செய்யவில்லையா?
என்ன நெருக்கடி?
----------------------------
ஏதோ ஒரு நெருக்கடியில் இந்த உண்மைகளைக் கூறிவிட்டது “முரசொலி”! அது என்ன நெருக்கடி? “முரசொலி”யே கூறுகிறது :

“கீழடி அகழாய்வின் அறிக்கையே இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் இது தமிழர் நாகரிகமா – திராவிட நாகரிகமா என்று ஒருவர் வினா எழுப்புகிறார். தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்.
இன்னொருவர் கால்டுவெல்லைச் சாடுகிறார்; குழப்பம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர். கீழடி எழுத்துகளைத் தமிழ் பிராமி, தமிழி என்றெல்லாம் சொல்லக்கூடாது; மூலத்தமிழ் (Proto Tamil) என்றுதான் கூற வேண்டும் என்கிறார்.
வேறொருவர் பாரதப் பண்பாடு என்கிறார். தமிழராகப் பிறந்தது நாம் சிரித்துக் கொண்டே அழுவதற்குத்தானா?”
முரசொலி ஆசிரிய உரையின் முடிவில் உள்ள மேற்கண்ட “நெருக்கடி” – தமிழரா – திராவிடரா என்பதில் அடங்கி இருக்கிறது.
கீழடி சென்று பார்வையிட்டுவிட்டு அறிக்கை கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், “அதனை (கீழடியை) திராவிடப் பண்பாடு என அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும்போது செவிகளில் இன்பத்தேன் பாய்கிறது” என்று கூறியிருந்தார்.
அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் பாண்டியராசன் கீழடி – பாரதப் பண்பாடு என்று கூறியிருந்தார்.
இவ்விரு கூற்றையும் மறுத்து நான் சமூக வலைத்தளங்களில் “கீழடி நாகரிகத்தை ஆரியமும் திராவிடமும் திருட அனுமதிக்காதீர்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தேன். இணையத் தொலைக்காட்சி “ழகரம்”, “தமிழன்” தொலைக்காட்சி ஆகியவற்றில் செவ்வியும் கொடுத்தேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மாத இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - 2019 அக்டோபர் இதழில், “கீழடி நாகரிகம் திராவிட நாகரிகமா?” என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியிருந்தேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கீழடி நாகரிகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று தி.மு.க. தலைவர் கூறுவதைச் சாடி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார். கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றார்.
“முரசொலி” ஆசிரியவுரையின் முடிவில் “ஒருவர்” என்பதில் சீமானையும், “இன்னொருவர்” என்பதில் என்னையும் சுட்டித்தான் சாடி உள்ளார்கள்.
எனக்கு “முரசொலி” கொடுத்துள்ள பட்டம் “குழப்பவாதி”! அகழாய்வில் கிடைக்கும் தொன்மையான தமிழ் எழுத்துகளை அசோகரின் கல்வெட்டு எழுத்தாகச் சொல்லப்படும் “பிராமி” என்ற பெயரின் வால் போல் “தமிழ் பிராமி” என்று சொல்லாதீர்கள்; அல்லது அதே பாணியில் “தமிழி” என்று ‘இ’கரம் போட்டு சொல்லாதீர்கள்; தமிழ் எழுத்து என்றே சொல்லுங்கள்; அல்லது மூலத்தமிழ் (Proto Tamil) என்று சொல்லுங்கள் என்று எனது நேர்காணல் மற்றும் தமிழர் கண்ணோட்டம் இதழில் கூறியிருந்தேன். அவற்றில், இராபர்ட் கால்டுவெல் “திராவிடக்” கயிறு திரித்துக் கதையளந்ததையும் சாடி இருந்தேன்.
“திராவிடம்” என்ற பெயரில் ஒரு மொழியோ, ஓர் இனமோ, ஒரு நாடோ வரலாற்றில் இருந்ததில்லை; இருக்கிறது என்றால் சான்றுகளுடன் பேசுங்கள் அல்லது எழுதுங்கள்; உங்களை எதிர்கொள்கிறேன் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எந்தத் திராவிடவாதியும் இந்த அறைகூவலை இதுவரை ஏற்கவில்லை!
மாறாக, திராவிடர்தான் தமிழர்; தமிழர்தான் திராவிடர் என்று சறுக்கு விளையாட்டு விளையாடுகிறார்கள். நான் குழப்பவாதி அல்லன்; திராவிடக் குழப்பத்தைத் தீர்ப்பவன்!
தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறிப்பதற்கு உருவான சொல்தான் “திராவிடர்”! குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் நிலம் ஆகியவற்றில் குடியேறிய ஆரிய பிராமணர்களைக் குறிக்க பஞ்ச திராவிடர் என்ற சொல்லை சமற்கிருத நூல்களும், பிராமணர்களும் பயன்படுத்தியுள்ளதையும் கூறி வருகிறேன்.
ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கீழடி போன்ற அகழாய்வு கிடைத்தால் அதை அவர்கள் திராவிடர் நாகரிகம் என்று சொல்வார்களா? மாட்டார்கள்! தெலுங்கர் நாகரிகம், கன்னடர் நாகரிகம் என்றுதான் சொல்லுவார்கள். தமிழ் இனத்தில் பிறந்துவிட்டு, தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழர் இனத்திற்கு ஏன் இரண்டகம் செய்கிறீர்கள் என்பதுதான் எனது வினா! இனிமேலாவது, தமிழினத் துரோகத்தைக் கைவிடுங்கள்!
கீழடியைத் தமிழர் நாகரிகம் என்றே நீங்களும் நெஞ்சை நிமிர்த்திப் பெருமையாகப் பேசுங்கள்!
இந்திய அரசு என்பது சாரத்தில் ஆரிய அரசுதான்! ஆரியத்தின் இரட்டைப் பிள்ளைகள்தாம் காங்கிரசும், பா.ச.க.வும்! பாண்டியராசன் போன்றவர்கள் பாரதமாதாவின் நிரந்தரப் பாதந்தாங்கிகள்!
தமிழ்த்தேசியம் – எந்த மாற்று இனத்தாரையும் சிறுபான்மை மொழி பேசுவோரையும் எதிரியாகக் கருதவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்த வடிவம்தான் தமிழ்நாடு! அதேவேளை, தமிழ் இன அடையாளத்தை மறைக்க அல்லது மறுக்க, தமிழ் இனத்தை – தமிழ் மொழியை ஆதிக்கம் செய்ய எந்த இனம் வந்தாலும் எந்த மொழி வந்தாலும், எந்தப் பெயர் வந்தாலும், யார் வந்தாலும் எதிர்ப்போம்; முறியடிப்போம்! அந்த வகையில்தான் ஆரியத்தையும் அது பெற்றெடுத்த திராவிடத்தையும் எதிர்க்கிறோம்!



Labels:

Thursday, October 3, 2019


வர்ணாசிரம ஆன்மிகத்தை
வழிமறிக்கும் ஆசீவக ஆன்மிகம்!

ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கடந்த 28.09.2019 அன்று சென்னையில் நடைபெற்ற “ஆசீவகம்” (சமய சமூக இயக்கம்) அமைப்பின் ஐந்தாமாண்டு தொடக்க விழாவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி :

“ஆசீவகம்” (சமய சமூக இயக்கம்) அமைப்பின் ஐந்தாமாண்டு தொடக்க விழா – 2050 புரட்டாசி – 11 (28.09.2019) அன்று சென்னை வடபழனியில் நடைபெறுவது குறித்த அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி! நன்றி!

தமிழர்களின் மிகத் தொன்மையான மெய்யியல் ஆசீவகம்! இயற்கை குறித்தும், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் மனிதர்களுக்கிடையே உள்ள உறவு குறித்தும் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அச்சிந்தனைதான் மெய்யியலாக வளர்ந்தது.

அவ்வாறு வளர்ந்த தமிழர் மெய்யியல் பிரிவுகளில் ஆசீவகம் மிகவும் பழைமையானது என்பர் அறிஞர் பெருமக்கள்! பக்குடுக்கை நன்கணியார், மற்கலி, பூரணர் ஆகிய மூவரும் ஆசீவகத்தின் மூல ஆசான்கள். அறிஞர் குணா, பேராசிரியர் க. நெடுஞ்செழியன் ஆகியோர் ஆசீவகம் பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார்கள்.

இப்பேரண்டம் அணுக்களால் ஆனது. இந்த அணுக்கள் எப்போதும் இருக்கின்றன. இவை புதிதாகத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை! இந்த அணுக்களின் திரட்சியும், பிரிவும் பற்பல பொருட்கள் ஆகின்றன. அடிப்படையான நிலம், நீர், தீ, காற்று, உயிர் ஆகியவை தனித்தனி அணுக்கள் வகையினால் ஆனவை என்கிறது ஆசீவகம்!

கிரேக்கத்தில் டெமாகிரீடஸ் என்ற மெய்யியலாளர் அணுக் கொள்கையாளர். அணுக்களின் சேர்க்கை மற்றும் பிரிவுகளே பேரண்டப் பொருட்கள் – உயிரினங்கள் என்றார். அவருக்குத் தன் முடிவுகளில் முழு நிறைவு இல்லை. அறிவைத் தேடி வெளிநாடுகளுக்குப் போனார். இந்தியாவுக்கும் வந்தார் என்கிறார்கள்.

“தான் திரட்டியிருக்கின்ற அறிவைப் பற்றி அவருக்கு எப்பொழுதும் அதிருப்தியே. அவர் வடிவ கணிதத்தைக் கற்பதற்காக எகிப்துக்கும் பாரசீகத்தில் உள்ள ஹால்டியர்களுக்கும் சென்றார். அவர் இந்தியாவுக்குச் சென்று யோகிகளிடமிருந்து அறிவைச் சேகரித்தார் என்றும் சிலர் சொல்கிறார்கள்” (நூல் : மார்க்ஸ் பிறந்தார், ஹென்ரி வோல்கவ், தமிழில் – நா. தர்மராஜன், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, பக்கம் 166).

“இந்தியா” என்று அப்போது நாடில்லை. இப்போதுள்ள இந்திய நிலப்பரப்பில் உள்ள ஏதோவொரு நாட்டிற்கு டெமாக்ரீட்டஸ் வந்திருக்கலாம். அவரது காலம் கி.மு. 460 – 370. இக்காலத்தில் தமிழ்நாட்டில்தான் அணுக்கோட்பாடு – ஆசீவகர்களால் செல்வாக்குப் பெற்றிருந்தது.

பேரண்டத்தின் இயக்கம் – செயல்பாடுகள் பற்றி ஆசீவக அணுக் கோட்பாட்டாளர்கள் அறிவியல் ஆய்வுடன் சிந்தித்துள்ளார்கள்.

கீழடி அகழ்வாய்வில் கடவுள் சிலைகளோ, வழிபாட்டுப் பொருட்களோ கிடைக்கவில்லை என்கிறார்கள். அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஆசீவக மெய்யியல் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம். அதனால் சிலை வடிவக் கடவுள் வழிபாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.

தமிழர்களின் தொன்மையான – அறிவியல் வழிப்பட்ட ஆன்மிகச் சிந்தனையான ஆசீவகத்தின் பெயரில் அமைப்பு நடத்தும் பெருமக்கள், இளந்தலைமுறைத் தமிழர்களிடம் தமிழினத்தின் மரபுப் பெருமிதங்களைக் கொண்டு சேருங்கள்! தமிழினம் பழங்காலத்திலிருந்தே அறிவுச் சமூகமாக இருந்தது என்பதற்கான மெய்யியல் சான்றே ஆசீவகம். அதேபோல், வீரச் சமூகமாக – அறநெறி போற்றும் சமூகமாக இருந்தது என்பதற்கும் ஐயனார் போன்ற வீரர்களும், பக்குடுக்கை நன்கணியார் பாடலும் மற்கலி, பூரணர் கருத்துகளும் சான்றுகளாகும்.

ஆன்மிக முகமூடியுடன் வரும் ஆரிய – பிராமண – சமற்கிருத – இந்தி ஆதிக்க அரசியலை எதிர்கொள்ளும் களத்தில் தமிழர்களின் மெய்யியல் வாளாக ஆசீவகத்தைக் களமிறக்கிடுங்கள்! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!”



Labels:

தோழர் தி.மா. சரவணன் மறைவு சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

Wednesday, October 2, 2019

தோழர் தி.மா. சரவணன் மறைவு
சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட மூத்த தோழர்களில் ஒருவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து வெளி வந்த தமிழ் இதழ்களின் தொகுப்பாளருமான நம்முடைய அன்பிற்குரிய தோழர் தி.மா. சரவணன் அவர்கள், நேற்று (01.10.2019) திருச்சி அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது.

சிறுநீரகக் கோளாறால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தி.மா.ச. காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு மட்டுமின்றி, சமகாலத் தமிழர் வரலாறு கற்கக்கூடியவர்களுக்கும் எழுதுவோருக்கும் பேரிழப்பாகும்!

தமிழர் கண்ணோட்டம் இதழ், உருட்டச்சாக வந்ததிலிருந்து அண்மைக்காலம் வரை அதில் வந்த போராட்டச் செய்திகள், கட்டுரைகள், மாற்றுக் கருத்துடையோருடன் நடந்த தர்க்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் எழுதி வந்தார். அந்தப் பணி, அவர் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து நின்று விட்டது. இப்பொழுது அவர் மறைவால் நிரந்தரமாக அந்தப் பணி நின்று போன பேரிழப்பும் நமக்கிருக்கிறது.

2014இல் சென்னையில் நடைபெற்ற புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 18 - 27) நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தோழர் தி.மா.சரவணன் அவர்களுக்கு “புத்தகர்” விருது வழங்கி பாராட்டினார்.

மிக நல்ல பண்பாளராக, தோழமை உணர்வுமிக்கவராக அனைவரோடும் இணக்கமாகப் பழகும் பக்குவம் பெற்றவராக விளங்கிய தோழர் தி.மா.ச. அவர்களின் மறைவு தமிழுணர்வாளர்கள் அனைவருக்குமான இழப்பாகும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தோழர் தி.மா. சரவணன் அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.




Labels:


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்