"பேராசிரியர் து.மூர்த்தி மக்களுக்கான வாழ்க்கை வாழ்ந்தவர்" -- தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
Tuesday, October 25, 2016
==================================
பேராசிரியர் து. மூர்த்தி மறைவுக்கு
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
==================================
தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
==================================
பேராசிரியர் முனைவர் து. மூர்த்தி அவர்கள், நேற்று (24.10.2016)
புதுதில்லி மருத்துவமனையில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தி அறிந்து
மிகவும் வேதனையுற்றேன்.
அலிகர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்
பேராசிரியராகத் தமிழ் பரப்பும் பணியை மொழிபெயர் தேயத்தில் சிறப்பாகச்
செய்து வந்தார் தோழர் து. மூர்த்தி. அண்மையில்தான், அப்பல்கலைக்கழகத்தின்
இந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
தஞ்சைத்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக, அவர் பணியாற்றியபோது அவருடன்
நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் உருவாயின. அவர் ஆய்வுப் பணியில் துடிப்புடன்
செயல்பட்டது போலவே, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரின்
உரிமைகள் மற்றும் பணிப் பாதுகாப்பு ஆகியவற்றிலும் துடிப்புடன்
செயல்பட்டார். இதற்காக அவர் பழிவாங்கப்பட்டு, தமிழ்ப்
பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின், போலந்தின்
வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பேராசிரியராக பணியாற்றினார்.
அதன்பிறகு, அவர் அலிகர் பல்கலைக்கழகம் சென்றார்.
அவர்
தமிழ்நாட்டில் இருந்தபோது, “சிந்தனையாளன்” இதழில் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பாக “1989 - அரசியல் சமுதாய நிகழ்வுகள்” என்ற நூல் வெளிவந்தது. அது
குறித்த அறிமுகக் கூட்டத்தை, தஞ்சையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை
சார்பில் நடத்தினோம். அதில், பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள் கலந்து
கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார்.
மார்க்சிய – பெரியாரிய
கருத்தியலாளரான பேராசிரியர் து. மூர்த்தி அவர்கள், துணிந்த நெஞ்சும் தூய
நோக்கும் கொண்டவர். மக்கள் மீது மிகுந்த அக்கறையும் தமிழ்ச் சமூக மாற்றம்
குறித்த பேரார்வமும் கொண்டவர். அவர் பணி ஓய்வு பெற்று, தமிழ்நாடு திரும்பி,
தமிழ்ச் சமூகவியல் சிந்தனைக் களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுவார்
என்று எதிர்பார்த்த நிலையில், அவருடைய திடீர் மறைவு பெருத்த
ஏமாற்றமளிக்கிறது.
பேராசிரியர் து.மூர்த்தி வாழ்ந்தபோது
மக்களுக்கான வாழ்க்கை வாழ வேண்டுமென்று கருதியவர். அதற்கேற்ப அவர் உடல்
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நாளை ஒப்படைக்கப்படுவதாக நண்பர்கள்
கூறினார்கள். இறப்பிலும் ஒரு சாதனையோடுதான் தோழர் மூர்த்தி
விடைபெற்றுள்ளார்.
பேராசிரியர் து. மூர்த்தி அவர்களின் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்