"சிங்கள - புத்த இனவெறியர் தாக்குதல் " தமிழர்களும் முஸ்லிம்களும் கைகோக்க வேண்டும் -- தோழர் பெ.மணியரசன்
Wednesday, March 21, 2018
===================================
"சிங்கள - புத்த இனவெறியர் தாக்குதல் "
தமிழர்களும் முஸ்லிம்களும்
கைகோக்க வேண்டும்
===================================
தோழர் பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
இனவெறியாட்டம் இல்லாமல் சிங்கள - புத்த அரசியலுக்கு உயிர்ப்பில்லை. தமிழின அழிப்புப்போர் முடிந்தபின் சிங்கள - புத்த இனவெறியர்கள் பரபரப்பற்ற வெறுமையை உணர்ந்தார்கள் போலும்!
ஒரு சாலை விபத்து, கிழக்கு மாநிலமான அம்பாறையில் 22.02.2018 அன்று நடந்தது. அந்த விபத்தை உண்டாக்கியவர், ஊர்தியை ஓட்டி வந்த சிங்கள இளைஞர்! விபத்து நடந்த நேர ஆத்திரத்தில், அந்த சிங்கள இளைஞரைக் கடுமையாகத் தாக்கிவிட்டனர். தாக்கியவர்கள் முஸ்லிம்கள்! அந்த இளைஞர் கண்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 01.03.2018 அன்று இறந்து விட்டார்.
சிங்கள இனவெறியர்கள் - புத்த பிக்குகள் உள்ளிட்டோர் வன்முறை வெறியாட்டத்தைத் தொடங்கினர்.
தாக்கப்பட்ட சிங்கள இளைஞர் இறந்து போன செய்தியுடன், இன்னொரு கட்டுக் கதையையும் உடனடியாகப் பரப்பினர். அம்பாறை நகரில் ஒரு முசுலிம் உணவகத்தில் சிங்களருக்கும் தமிழர்களுக்கும் வழங்கும் உணவில் ஆண்மை இழக்கச் செய்யும் மருந்தைக் கலந்து தருகின்றனர் என்ற “செய்தி” காற்றின் வேகத்திற்கேற்பப் பரவும் தீ போல் பரவியது!
அந்தக் குறிப்பிட்ட உணவக ஊழியர் ஒருவரை சிங்கள வெறியர்கள் அடித்து நொறுக்கி, “மருந்து கலந்த உணவை சிங்களர்களுக்குத் தந்தோம்” என்று பேச வைத்தனர். அக்காணொலியை ஊடகங்களில் பரப்பினர். (கர்நாடகத்தில் 2016-இல் தமிழ் மாணவர், சரக்குந்து ஓட்டி வந்த தமிழர் உள்ளிட்ட தமிழர்களைப் பிடித்து அடித்து, அரை அம்மணமாக்கி மண்டியிடச் செய்து, காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று சொல்ல வைத்தார்கள் அல்லவா! அதுபோல்தான்!).
மேற்கண்ட காணொலி பரவியபின் சிங்களர் வெறியாட்டம் அதிகமானது. முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவனல்ல, காலி, களுத்துறை பகுதிகளில் சிங்கள இனவெறியர்களின் தீ வைப்பும் சூறையாடலும் மிக அதிகம்! அம்பாறையில் தொடங்கிய கலவரம் கண்டி வரை நீண்டது. பள்ளி வாசல்கள் எரிக்கப்பட்டன. முசுலிம் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன; எரிக்கப்பட்டன. தீ வைப்பில் கண்டியைச் சேர்ந்த அப்துல் பாசித் கருகி மாண்டார்.
தாக்கப்பட்ட பள்ளி வாசல்கள் 24 என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள முசுலிம் மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன. காவல்துறையினரால் கலவரத்தை அடக்க முடியவில்லை. இராணுவம் களத்தில் இறக்கப்பட்டது. அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டது.
தமிழீழத்தின் கிழக்கு மாநிலத்தில் இந்த சிங்கள - புத்த இனவெறியாட்டம் நடந்தது.
கிழக்கு மாநிலத்தில் உள்ள முசுலிம்கள் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொள்வதில்லை. தமிழ் பேசும் முசுலிம்கள் என்று கூறுவர். தமிழ்தான் அவர்களுக்குத் தாய் மொழி! ஆனால் அவர்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்றும், வரலாற்றுப் போக்கில் தமிழ் தங்கள் தாய்மொழி ஆகிவிட்டது; ஆனால் தாங்கள் தமிழர்கள் அல்லர் என்றும் கூறிக் கொள்கின்றனர்.
தமிழீழ விடுதலைப்போரில் தமிழ் பேசும் முசுலிம்கள், தமிழர்களோடு இணையவில்லை. தனித்து நின்றனர் அல்லது சிங்களர் பக்கம் நின்றனர். தமிழ் பேசும் முசுலிம்களின் அரசியல் தலைவர்கள் உறுதியாக சிங்கள அரசு பக்கம் நின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-இல் தமிழீழப் பிரகடனத்தை முன்நிறுத்தி தேர்தலைச் சந்தித்தபோது, அதன் பரப்புரைக்குப் பொறுப்பு வகித்தவர் எம்.எச்.எம். அஸ்ரப். ஆனால் பின்னாளில் அவர் முசுலிம்களுக்கெனத் தனிக்கட்சி தொடங்கினார்.
முசுலிம் இளைஞர்கள் பலர் சிங்களப் படையாட்களுக்குத் துணை நின்று, தமிழ் இளைஞர்கள் அழிவுக்குக் காரணமாயினர். தமிழர்களின் ஊர்களைச் சிங்களப் படையாட்கள் எரிக்கத் துணை நின்றனர் அவர்கள். இதனால் விடுதலைப்புலிகள் ஒரு சமயம் முசுலிம்களைத் தாக்கினர். வடக்கு மாநிலத்திலிருந்து முசுலிம்களை வெளியேற்றினர்.
இந்தத் தவறுகளைக்களையும் வகையில், ஒரு சார் முசுலிம் தலைவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டு கூட்டறிக்கை வெளியிட்டனர்.
ஆனாலும், இன்னும் தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முசுலிம்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படவில்லை. தமிழ் பேசும் முசுலிம்களைப் பிரித்து, தனித்தரப்பாக்கி வைத்துக் கொண்டு, தமிழர் அழிப்புப் போரை நடத்தியது சிங்கள புத்த இனவெறி அரசு! இப்போது தமிழர்களைத் தனிப்பிரித்து பார்வையாளர் ஆக்கிவிட்டு, தமிழ் பேசும் முசுலிம்களைத் தாக்குகிறது, சிங்கள புத்த இனவெறிக் கும்பல்!
தமிழர்களும் தமிழ் பேசும் முசுலிம்களும் ஒன்றுபட்டால்தான், இருதரப்புக்கும் பாதுகாப்பு! இந்த உண்மையை உணர்ந்து, இக்காலத் தலைமுறையினர் இணக்கம் காண்பதே, இருதரப்பின் தற்காப்புக்கும் இன்றியமையாத் தேவையாகும்!
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
மார்ச் 16 - 31, 2018
=====================================
கண்ணோட்டம் இணைய இதழ்
=====================================
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam
=====================================
பேச: 7667077075, 98408 48594
=====================================
Labels: கட்டுரைகள், தமிழீழ விடுதலை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்