கருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்! பெ. மணியரசன்
Monday, September 24, 2018
கருணாஸ் கைது :
அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்!
தோழர் பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கடந்த செப்டம்பர் 16 (2018) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் “முக்குலத்தோர் புலிப்படை” தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ், வரம்பு மீறி பேசியதற்காக 20.09.2018 அன்று 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 23.09.2018 அன்று அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளார்கள்.
இவ்வழக்கில், இ.த.ச.வின் 307 - கொலை முயற்சி பிரிவை சேர்ப்பதற்கு எவ்வளவு குரூர மனம் படைத்திருக்க வேண்டும்! நல்லவேளை, எழும்பூர் நடுவர் மன்ற நீதிபதி அப்பிரிவை நீக்கிவிட்டார்.
ஆனால், பெண்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்த நிலையில் - மாதக் கணக்கில் பா.ச.க.வின் எஸ்.வி. சேகரை தமிழ்நாடு காவல்துறை தளைப்படுத்தாமல், ஒதுங்கிக் கொண்டதுடன் அவருக்கு பாதுகாப்பும் கொடுத்தது.
அடுத்து, பா.ச.க.வின் எச். இராசா அதே செப்டம்பர் 16 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிள்ளையார் ஊர்வலத்தையொட்டி உயர் நீதிமன்றத்தை மிகக்கேவலமாக இழிவுபடுத்தியும், காவல் துறையினர் அனைவரும் பாதிரியார்களிடமும் முசுலீம்களிடமும் இலஞ்சம் வாங்குபவர்கள் என்று கேவலப்படுத்தியும் பேசியதுடன், உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட வீதி வழியே பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தி முடித்தார். அதன் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தும், இதுவரை இராசாவை தளைப்படுத்தவில்லை!
இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப் பேசியதற்காக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால், எந்த வழக்கின் மீதும் இராசாவைக் கைது செய்யவில்லை. அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை கடுமையான பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
பிராமணர்கள் குற்றம் செய்தாலும், அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்ற மனநிலையில் பா.ச.க. நடுவண் ஆட்சியும், அதற்கு கங்காணி வேலை பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் இருக்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
“பூணூல் புனிதர்கள்” பூரித்துப் போகும் அளவுக்கு, சட்டத்தை வர்ணாசிரம தர்ம அடிப்படையில் செயல்படுத்துகிறது அ.தி.மு.க. ஆட்சி! எடப்பாடி அரசின், வர்ணாசிரம (அ)தர்மச் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருணாஸ் அத்துமீறி பேசியவற்றை நாம் ஆதரிக்கவில்லை. அதேவேளை, குற்றவியல் சட்டம் எச். இராசாவுக்குப் பொருந்தாது, “சூத்திர” வகுப்பைச் சேர்ந்த கருணாசுக்கும் அவர் உதவியாளருக்கும்தான் பொருந்தும் என்பதுபோல் தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளது. தமிழர்கள் தங்களது தன்மானத்தையும், உரிமைகளையும் காக்க மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலமிது!
Labels: கண்டன அறிக்கை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்