காவிரியில் உரிய நீரே கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம் சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும்! பெ. மணியரசன் அறிக்கை!
Wednesday, July 24, 2019
காவிரியில் உரிய நீரே
கிடைக்காதபோது உபரி நீர்த் திட்டம்
சேலம் மக்களை ஏமாற்றவே பயன்படும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
கடந்த 21.07.2019 அன்று சேலம் மாவட்டம் - எடப்பாடியில் நடந்த அரசு நலத்திட்ட வழங்கு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மேட்டூர் – ஓமலூர் - எடப்பாடி - சங்ககிரி ஆகிய நான்கு தொகுதிகளில் புதிதாக மிகப்பெரிய அளவில் 100 ஏரிகள் அமைத்து, காவிரி உபரி நீரை அவற்றில் தேக்கி, வேளாண்மைக்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் தருவதற்காக 565 கோடி ரூபாயில் திட்டம் தீட்டியிருப்பதாக அறிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தொடர்ந்து காவிரிச் சடுகுடு விளையாடி வருகிறார். காவிரித் தண்ணீர் சட்டப்படி கிடைத்துவிட்டதைப் போல் பாவனை காட்டி “வெற்றி” விழாக்களை நடத்தினார். அதன்பிறகு, கோதாவரியிலிருந்து 200 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கொண்டு வந்து காவிரியில் இணைக்கப் போவதாகக் கூறினார். இப்பொழுது சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகள் உருவாக்கிக் காவிரி நீரைக் கொண்டு வரப்போவதாக அம்மாவட்ட மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்குக் காவிரியில் உபரி நீர் இல்லை! ஏற்கெனவே, காவிரி உபரி நீரைப் பயன்படுத்துவதற்காக 1950களில் புதிய கட்டளை உயர்மட்டக் கால்வாய் மற்றும் புள்ளம்பாடிக் கால்வாய் ஆகியவை காமராசர் ஆட்சியில் உருவாக்கப்பட்டன. அவற்றிற்கு ஆண்டுதோறும் விடுவதற்கு உபரி நீர் கிடைக்கவில்லை!
அடுத்து, 1952இல் புதுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த – காலஞ்சென்ற முத்துசாமி வல்லத்தரசு அவர்கள், காவிரி உபரி நீரை மாயனூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் பேசினார். அதற்காக கடந்த 2006 – 2011 காலத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசால் திட்டம் தீட்டப்பட்டது.
காவிரியில் தண்ணீரைத் தேக்கிக் குண்டாறு இணைப்புக் கால்வாய்க்குக் கொண்டு போவதற்காக மாயனூரில் காவிரியின் குறுக்கே ஆறடி உயரத்திற்குக் கதவணை கட்டப்பட்டுள்ளது. அத்தோடு சரி! அதன்பிறகு, இணைப்புக் கால்வாய் வெட்டுவதில் எந்த வேலையும் நடைபெறவில்லை! அதற்கு, நடப்பு நிதிநிலை அறிக்கையில்கூட நிதி ஒதுக்கவில்லை. திருச்சி, புதுக்கோட்டை, தென்வெள்ளாறு, காரைக்குடி, மானாமதுரை, வைகையாறு, விருதுநகர், இராமநாதபுரம், குண்டாறு இணைப்புக் கால்வாய்க்கான எந்த வேலையும் நடைபெறவில்லை!
இத்திட்டம் தேங்கி நிற்பதற்கு நிதிச்சுமை மட்டும் காரணமில்லை! செய்கின்ற செலவுக்கு ஏற்பப் பயன்பெறும் வகையில் காவிரியில் உபரி நீர் கிடைக்காது என்பதுதான் பொறியியல் மற்றும் வேளாண் வல்லுநர்களின் கருத்து. எனவே, அது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
1934லிருந்து 1984 வரை ஐம்பதாண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 362.8 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்தது. காவிரித் தீர்ப்பாயம் தனது இடைக்காலத் தீர்ப்பில் (1991 சூன் 25) கர்நாடகம் 205 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டால் போதும் என்று தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் (2007 பிப்ரவரி 5) 192 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட்டால் போதும் என்று கூறியது. இறுதியாக, அதை உச்ச நீதிமன்றம் 16.2.2018 இல் கர்நாடகம் 177.25 ஆ.மி.க. தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்தால் போதும் என்று தீர்ப்பளித்தது. எந்தத் தீர்ப்பின்படியும் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது! இந்நிலையில், காவிரியில் உபரி நீர் கிடைக்க என்ன வழி இருக்கிறது?
வெள்ளம் வரும்பொழுது, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடலுக்குப் போகிறது என்ற கருத்து கூறப்படுகிறது. அண்மைக்கால அனுபவத்தில் 2005இல் வெள்ளம் ஏற்பட்டது; அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து 2013இல் வெள்ளம் ஏற்பட்டது; அதன்பிறகு ஐந்தாண்டு கழித்து 2018இல் வெள்ளம் ஏற்பட்டது. ஆண்டுதோறும் வெள்ளம் வருவதுமில்லை; மேட்டூரிலிருந்து உபரி நீர் கடலுக்குப் போவதுமில்லை! ஆண்டுதோறும் காவிரி நீர் கடலுக்குப் போகாத காரணத்தால், காவிரி பாயும் கடலோர மாவட்டங்களில் கடல் நீர் நிலத்தடியில் மேலும் மேலும் உட்புகுந்து நிலத்தடி நீரை உப்பு நீராக்கிவிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உண்மை நிலவரம் இவ்வாறிருக்க, ஏதோ ஆண்டுதோறும் காவிரியில் உபரி நீர் கிடைப்பது போலவும், அதைப் பயன்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் தேவைப்படுவது போலவும் ஒரு முதலமைச்சர் பேசுவது பொறுப்பான செயல் அல்ல!
சேலம் மாவட்ட மக்களுக்கு ஆசை வார்த்தை கூறி அரசியல் செய்யும் உத்தியாகவே இது இருக்கும்! இப்பொழுது, சென்னைக் குடிநீருக்கு கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஒப்பந்தப்படி கிடைக்க வேண்டிய 12 ஆ.மி.க. தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வாங்க முடியவில்லை! அவர் கொடுத்த அறிக்கையில் நடப்பாண்டில் 2 ஆ.மி.க. தண்ணீர் மட்டும்தான் கிருஷ்ணா ஆற்றிலிருந்து வந்திருக்கிறது என்று கூறுகிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் காவிரி ஆணையத்தின் ஆணைகளின்படியும் கர்நாடகத்திடமிருந்து சட்டப்படி பெற வேண்டிய தண்ணீரை பெற முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் மக்களுக்கு புதிதாக 100 ஏரிகளில் பாசனத்திற்குத் தண்ணீர் கொடுக்கப் போவதாக கானல் நீர் நம்பிக்கை ஊட்டுகிறார்.
மேட்டூர் அணைத் தண்ணீர் தீருமளவிற்கு கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து முதலில் 8,000 கன அடியும், பிறகு 6,000 கன அடியும் அன்றாடம் விதிமுறைகளுக்கு மாறாக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்பிறகு, நாள்தோறும் 1,000 கன அடி சென்னைக் குடிநீருக்கென திறந்துவிட ஆணையிட்டிருக்கிறார். இந்த நீர் வீராணம் ஏரி வழியாக சென்னைக்கு செல்கிறது. இத்தோடு நில்லாமல், மேட்டூர் கூட்டுக் குடிநீரிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வரும் காவிரி நீரில் சோலையார்பேட்டையிலிருந்து தொடர்வண்டி மூலமாக அன்றாடம் 1 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்குக் கொண்டு செல்லும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
காவிரி குண்டாறு திட்டம், இருவழியில் சென்னைக்குக் குடிநீர் திட்டம், புதிதாக அறிவித்துள்ள சேலம் மாவட்ட 100 ஏரித் திட்டம் ஆகியவை செயல்பட்டால் திருச்சி – தஞ்சை – திருவாரூர் – நாகை – புதுக்கோட்டை – கடலூர் மாவட்டங்களின் மரபுவழிப் பாசனத்திற்கு தண்ணீர் மிச்சம் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, சேலம் மாவட்டத்தில் புதிதாக 100 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கும் வழியில்லை!
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்தான் இருக்கிறது. ஆனால், சேலம் மாநகரத்தில் ஒரு வாரத்திற்கு ஒருநாள்தான் குடிநீர் வழங்கப்படுகிறது. சேலம் மாநகர மக்களுக்கும், சேலம் மாவட்ட மக்களுக்கும் அன்றாடம் குடிநீர் வழங்கும் திட்டத்தைக்கூட செயல்படுத்த முடியாத அ.இஅ.தி.மு.க. அரசு, புதிதாக நான்கு தொகுதிகளில் 100 ஏரிகளில் தண்ணீர் தேக்குவோம் என்று கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது?
எட்டுவழிச் சாலைக்கும், ஓமலூர் வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்கும் பல்லாயிரக்கணக்கான வேளாண் விளை நிலங்களை எடுப்பதை எதிர்த்து சேலம் மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே நூறு ஏரி புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
சேலத்தில் காவிரி ஆற்றின் நீர் மட்டத்தைவிட நிலத்தின் மட்டம் மிக உயரமானது. எனவே, தண்ணீரை மேட்டார் மூலம் மேலே ஏற்றித்தான் கொண்டு போக முடியும்.
எனவே, எந்த வகையிலும் செயல்படுத்த முடியாத நூறு ஏரித் திட்டத்தை முதலமைச்சர் கைவிட்டு சேலம் மாநகரம் – மாவட்ட மக்களுக்கு அன்றாடம் குடிநீர் கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்துமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Labels: காவிரி உரிமை அறிக்கை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்