தனியார் தொலைக்காட்சிகளில் ஆரியத்துவா அதிகாரம்! - ஐயா பெ. மணியரசன், கட்டுரை!
Tuesday, August 18, 2020
தனியார் தொலைக்காட்சிகளில்
ஆரியத்துவா அதிகாரம்!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
ஆரியத்துவா அதிகாரம்!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
அரசனாய் இல்லாமல் ஆட்சியை இயக்குவது ஆரியத்திற்குக் கைவந்த கலை! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதைச் செய்து வருகிறது.
சிறுபான்மையாய் இருந்து கொண்டு, பெரும்பான்மையை ஆட்டிப் படைப்பது, துணைக் கண்டத்தில் சொந்த தேசமில்லாது, இயற்கையான தேசியங்களுக்கு எசமான வேலை பார்ப்பது, சொந்தத் தாய்மொழி இல்லாமல் மற்றவர்களின் தாய் மொழிகளை சமற்கிருதமயமாக்குவது, சொந்தக் கோயில் இல்லாமல் பிறர் தெய்வங்களுக்குச் சூத்திரதாரி ஆவது போன்றவையெல்லாம் ஆரியத்தின் அடிப்படைச் சூழ்ச்சிகள்!
அதுபோல்தான் தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாமலேயே இப்போது ஆட்சி செய்கிறது ஆரியம்! அவர்களுக்கு இப்போதுள்ள கூடுதல் வலிமை, தில்லி ஏகாதிபத்தியத்தின் ஆட்சி அவர்கள் கையில் இருப்பதாகும்! இதுவரை பதுங்கிக் கிடந்த பிராமண அறிவுசீவிகள், நடுநிலை நாடகமாடியோர், இப்போது படமெடுத்து ஆடுகின்றனர்.
நியூஸ்-18 தமிழ் தொலைக்காட்சியில் - அதன் தலைமை ஆசிரியராக – நிர்வாகியாக இருந்த குணசேகரன், விவாத அரங்கப் பொறுப்பிலிருந்த செந்தில் மற்றும் ஆசிப், இளையபாரதி போன்றோர் வெளியேறிவிட்டார்கள்; இவர்கள் பல்வேறு வடிவங்களில் “வெளியேற்றப்பட்டார்கள்”!
நியூஸ்-18 தனியார் துறைத் தொலைக்காட்சி! முதலாளி வடநாட்டைச் சேர்ந்த ரிலையன்சு குழுமம்! தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலாளிகள் நடத்தும் மற்ற தொலைக்காட்சிகளிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. ஆரியவாதிகளின் தலையீடு அதிகரித்து வருகிறது.
யாரையெல்லாம் கருத்துக் கூறக் கூப்பிடக் கூடாது என்று இந்த ஆரியத்துவாவாதிகள் தனியார் துறைத் தொலைக்காட்சிகளுக்குப் பட்டியல் தருகிறார்கள். அப்பட்டியலாரை அழைக்காமல் செயல்படுகின்றன தொலைக்காட்சிகள்!
அடுத்து, ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. தரப்பிலிருந்து ஒவ்வொரு விவாத அரங்கிலும் இரண்டு பேரைக் கூப்பிட வேண்டும் எனறு அறிவுறுத்தியது ஆரியத்துவா முகாம். அதையும் கடைபிடித்தன தொலைக்காட்சிகள். பா.ச.க. சார்பில் ஒருவர் கலந்து கொள்வார்; இன்னொருவர் பத்திரிக்கையாளர் அல்லது வலதுசாரிச் சிந்தனையாளர் அல்லது சமூக ஆர்வலர் என்ற பட்டத்துடன் கலந்து கொள்வார்.
அண்மைக்காலம் வரை தொலைக்காட்சிக் கருத்தாடல்களில் - கலந்துரையாடல்களில் திராவிடவாதிகளை சகித்துக் கொண்டார்கள்; கம்யூனிஸ்ட்டுகளை சகித்துக் கொண்டார்கள்; ஆனால், தமிழ்த்தேசியவாதிகளை மட்டும் சகித்துக் கொள்ளவே முடியாது என்றார்கள் ஆரியத்துவாவாதிகள்! ஆனால், இப்போது இந்த மூன்று தரப்பாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்கிறார்கள்! தொலைக்காட்சி செய்திப் பிரிவில், விவாதப் பிரிவில் மேற்கண்ட மூன்று பிரிவாரும் பணியாற்றக் கூடாது என்கிறார்கள்.
நியூஸ் – 18 தமிழ்த் தொலைக்காட்சியிலிருந்து மேற்கண்ட அழுத்தங்களால்தான் சிலர் வெளியேறினர்; வேறு சிலர் வெளியேற்றப்பட்டனர். புதிய தறைமுறை உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளிலும் இந்த அழுத்தங்கள் இப்போது கூடுதலாகி உள்ளன.
விவாதங்களில் பங்கேற்கும் ஆரியத்துவாவாதிகளிடம் அவர்களை மடக்குவதுபோல் நெறியாளர்கள் வினாக்கள் கேட்கக்கூடாதாம்! ஆரியத்தார் பேசினால் – ஆண்டவன் பேசுவதாகப் பொருள் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மண்ணின் மக்களைப் பழக்கி வைத்துள்ளார்கள் அல்லவா! இருபத்தோராம் நூற்றாண்டில் – மோடியின் நவீன டிஜிட்டல் இந்தியாவில் – தமிழ்நாட்டில் அவ்வாறான எசமான ஏற்பிசைவை மக்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
இன்னொருபுறத்தில், ஒடுக்கப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள், ஊடகத்துறையில் செல்வாக்கு செலுத்துவதையும் ஆரியத்துவாவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மோடி அரசு போடும் சட்டங்கள் – அறிவிக்கும் திட்டங்கள் எதையும் யாரும் எதிர்த்துப் பேசக் கூடாது; மாற்றுக் கருத்துக் கூறக்கூடாது என்று தமிழ்நாட்டுப் பா.ச.க.வினர் “முடிவு” செய்துள்ளார்கள். அனைத்திந்தியப் பா.ச.க.வின் பாசிச முடக்கம்தான் இது! ஆனால், மாநில ஆட்சியில் இல்லாத பா.ச.க.வினர்க்கு இப்படிப்பட்ட துணிச்சல் எங்கிருந்து வருகிறது?
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத கட்சியினர்க்கு – சட்டப்பேரவைத் தேர்தலில் காப்பீட்டுத் தொகையைக் காப்பதற்குரிய வாக்குகள் கூட வாங்க முடியாத கட்சியினர்க்கு இவ்வளவு பெரிய துணிச்சல் எங்கிருந்து வருகிறது?
இரண்டு இடங்களில் இருந்து இத்துணிச்சல் வருகிறது. ஒன்று, தில்லி ஏகாதிபத்திய அதிகார மையம் தரும் பாசிச அதிகாரம்! இன்னொன்று, ஆரிய இனவாதத்திற்கு நேர் எதிரான தமிழின அரசியலையும் அதற்கான பாசிச எதிர்ப்பு செயல்திட்டங்களையும் துணிச்சலுடன் கொண்டிராதத் தமிழ்நாட்டுத் திராவிட அரசியல்; குனிந்து நட என்று தில்லி மையம் கூறினால், மண்டியிட்டுச் செல்கிறது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி!
அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் தலைமையில்தான் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சேர வேண்டும் என்று பா.ச.க.வின் பல்லக்குத் தூக்கிகள் சொல்லும் அளவிற்கு அ.இ.அ.தி.மு.க.வின் நிலை மோசமாக உள்ளது.
பா.ச..க கூட்டணியிலிருந்து அ.இ.அ.தி.மு.க. விலகிக் கொண்டால், தி.மு.க. என்ன நிலை எடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏற்கெனவே கலைஞர் கருணாநிதி பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்து, முரசொலி மாறன் உள்ளிட்ட தம் கழகத்தினரை தில்லிக் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கச் செய்தார் (1999 – 2004).
இந்தத் துணிச்சலில்தான், வெளியிலிருந்து அழுத்தம் கொடுத்து, சன் தொலைக்காட்சியிலிருந்து ஊடகவியலாளர் வீரபாண்டியன் அவர்களை வெளியேற்றினார்கள். அப்போக்கு இப்போது, மிகத்தீவிரம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமை, மின்சார உரிமை, வேளாண்மை உரிமை, உழவர் உரிமை, ஞாயவிலைக் கடை உரிமை, கல்வி உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை முதலியவற்றைக் கடந்த ஐந்து மாதங்களில் கொரோனா முடக்கத்தில் பா.ச.க. ஆட்சி பறித்துவிட்டது. பா.ச.க.வின் போலி ஆன்மிகத்திற்கு மாற்றாக யாராவது பேசிவிட்டால், அவர்கள் மீது உடனே வழக்கு – கைது – பின்னர் குண்டர் சட்டம் என்று ஏவுகிறது எடப்பாடி அரசு!
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராமலே, தில்லி அதிகாரத்தை வைத்து பா.ச.க.வினர் நமது கருத்துரிமையை பறித்து வருகிறார்கள்.
ஆரியம் தனது மரபணுவிலேயே சர்வாதிகாரத்தைக் கொண்டுள்ளது.
நம்மைப் பொறுத்தவரை, தமிழ்த்தேசியமும் சனநாயகமும் பிரிக்க முடியாதவை; பிரிக்கக் கூடாதவை!
சனநாயகக் காப்புக் கருத்துப் பரப்பல் – களப்போராட்டம் ஆகியவற்றை அனைத்து முனையிலும் கொண்டு செல்ல வேண்டும்! எதிர்த்துப் போராடுவதே சிறந்த தற்காப்பு உத்தி!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: கட்டுரைகள். பெ. மணியரசன்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்