வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்! நீதிக்கு முரண்பாடு - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
Wednesday, January 13, 2021
வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே
உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்!
நீதிக்கு முரண்பாடு
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ள மூன்று சட்டங்களும் உழவர் ஒழிப்புச் சட்டங்கள் என்பதை உணர்ந்து கொண்ட உழவர்கள், இந்தியா முழுவதும் அவற்றை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
வடமாநிலங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 50 நாட்களுக்கு மேலாக புதுதில்லியை முற்றுகையிட்டு உழவர் பெருமக்கள் வெற்றிகரமாகப் போராடி வருகிறார்கள். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சில வாக்குறுதிகள் கொடுத்து, போராட்டத்தை முடக்கி விடலாம் என்று முனைந்த மோடி அரசின் முயற்சியை உழவர் போராட்டம் முறியடித்துவிட்டது.
உழவர் போராட்டத்தை முறியடிக்கும் அடுத்த உத்தியாக, உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு பயன்படுத்த முயல்வது வேதனைக்குரியது.
உச்ச நீதிமன்றம் மூன்று சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் மூன்று சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு பேர் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமர்த்தி இருக்கிறது. இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவர்கள் என்பதை சமூக வலைத்தளங்களும், செய்தி ஏடுகளும் அம்பலப்படுத்தி விட்டன.
இந்த நால்வரில் ஒருவரான பிரமோத் குமார் ஜோஷி என்பவர், “மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது முரணான கோரிக்கை” என்று நேற்றே (12.01.2021) ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அடுத்த உறுப்பினர் அசோக் குலாத்தி, மூன்று சட்டங்களையும் வரவேற்று, “மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள்; சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் பயன்படும்” என்று ஏற்கெனவே கூறியுள்ளார். மூன்றாவது உறுப்பினரான புபீந்தர்சிங் மான், “இந்தச் சட்டங்கள் வரவேற்கத் தக்கவை. இந்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றி விட்டால் முழுமையான பயன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இந்த மூன்று சட்டங்களையும் ஏற்கெனவே ஆதரித்து வரும் நபர்களைக் கொண்ட இந்த நால்வர் குழு நடுநிலையான குழு அல்ல என்பது வெளிப்படையான உண்மை. நடுநிலையற்ற ஒரு குழுவை இந்தியாவின் தலைமை நீதிமன்றம் அமைத்திருப்பது மிகமிக வேதனை அளிக்கிறது; அதிர்ச்சயளிக்கிறது!
இந்தக் குழுவை முற்றிலுமாகப் புறக்கணிப்போம் என்று உழவர்களின் அனைத்திந்தியப் போராட்டக் குழுத் தலைவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது! மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்கிட போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது!
தமிழ்நாட்டில் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும், இந்த மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி சனநாயகப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதே இன்றைய தேவையாகும். உச்ச நீதிமன்றம் தனது முடிவை மறு ஆய்வு செய்து, நீதியைப் பாதுகாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திவரும் போராட்டங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
Labels: அறிக்கைகள், பெ. மணியரசன், வேளாண் சட்டங்கள்!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்