மனிதநேயத்திற்கும் இனம்தான் காரணமாக அமைகிறதா? - ஐயா பெ. மணியரசன்,
Wednesday, March 31, 2021
மனிதநேயத்திற்கும் இனம்தான்
காரணமாக அமைகிறதா?
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
படைத்துறையைச் சேர்ந்த வல்லாதிக்கக் கலகக் கும்பல் மியான்மரில் வரம்புக்கு உட்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து, ஆட்சியாளர்கள் பலரையும் ஆங் சான் சூகி அம்மையாரையும் சிறைப்படுத்தி வைத்துள்ளது.
இந்த இராணுவ சர்வாதிகார - சனநாயகப் படுகொலையை எதிர்த்து, மியான்மர் மக்கள் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அம்மக்களை சுட்டுக் கொல்கிறது மியான்மர் இராணுவ ஆட்சி! கடந்த காரிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 107 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மியான்மரிலிருந்து அந்நாட்டு மக்களில் ஒரு சாரார் உயிர் பிழைக்க அண்டையில் உள்ள மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு ஓடி வருகிறார்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, ஆதரவு தரக்கூடாது, திருப்பி விரட்டிவிட வேண்டும் என்று சொல்கிறது இந்திய அரசு!
இந்திய அரசின் உள்துறை செயலாளர் இவ்வாறு ஒரு கடிதத்தை வடகிழக்கு எல்லையோர மாநிலங்களுக்கு அனுப்பியிருக்கிறார். இந்திய அரசின் இந்த நிலைபாட்டை எதிர்த்தும், இதை மாற்றி மியான்மரிலிருந்து வரும் ஏதிலிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும், மிசோரமில் தங்க வைக்க வேண்டும், அவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கு மிசோரம் முதலமைச்சர் சொரம்தங்கா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மிசோரமுக்கு தனிநாடு விடுதலை வேண்டுமென்று கோரிய – காலஞ்சென்ற லால் டெங்கா நிறுவிய கட்சியான மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் சொரம்தங்கா. இவர் கட்சி இப்பொழுது பாரதிய சனதாக் கட்சியின் தேசிய சனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறது. ஆனால், மிசோரம் சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை இருக்கிறது. பா.ச.க. கூட்டணியில் இருந்தாலும், இன உணர்வோடு பேசியிருக்கிறார் சொரம்தங்கா.
அவர் தலைமையமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மிசோரமின் எல்லையோரங்களில் மியான்மரில் வசித்து வரும் சின் (Chin) சமுதாய மக்கள் உயிர் பிழைக்க எங்கள் மாநிலத்தை நாடி ஓடி வருகிறார்கள். அவர்கள் இன வழியில் மிசோரம் மக்களின் உடன் பிறப்புகள். நீண்ட நெடுங்காலமாக அவர்களோடு நெருக்கமான உறவு வைத்திருக்கிறோம். எங்களிடையே உள்ள இந்த உறவு இந்திய விடுதலைக்கும் முந்தையது. எனவே, அவர்கள் துன்ப துயரங்களைக் கண்டும் காணாமல் நாங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது. இந்திய அரசு இந்த மனிதநேய நெருக்கடிக்கு உதவி செய்யாமல் கண்ணை மூடிக் கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார். இக்கடிதம் கடந்த 18.03.2021 அன்று மோடிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், அதன்பிறகு இந்திய அரசு படைத்துறையினரை அனுப்பி மிசோரம் எல்லையை பாதுகாக்கச் செய்திருக்கிறது. உயிர் பிழைக்க வருகின்ற மியான்மர் மக்களை விரட்டியடிக்க ஆணையிட்டிருக்கிறது.
இதே மியான்மர் ஏதிலியர் சிக்கல் பக்கத்திலுள்ள இன்னொரு மாநிலமான மணிப்பூருக்கு வந்திருக்கிறது. மணிப்பூர் பா.ச.க. முதலமைச்சர் நாங்தொம்பம் பீரன் சிங், மியான்மரிலிருந்து மக்கள் உயிர் பிழைக்க மணிப்பூர் எல்லைக்குள் நுழைந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுங்கள், யாருக்காவது கொடும் காயம் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து திருப்பி அனுப்பி விடுங்கள், அவர்களை நம் மாநில எல்லையில் தங்க வைக்காதீர்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.
பீரன் சிங் மியான்மரிலிருந்து ஓடி வரும் ஏதிலியர் இனத்தைச் சேர்ந்தவர் இல்லையா, அல்லது பா.ச.க.வில் சேர்ந்து விட்டால் ஆரியரல்லாத மற்ற இனங்களை மனிதநேயத்துடன் அணுகக்கூடாது என்ற இலக்கணத்தை அப்படியே கடைபிடிக்கிறாரா என்று தெரியவில்லை!
இவ்வாறு அவர் 26.03.2021 அன்று தனது மாநில அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார். ஆனால், மணிப்பூர் மக்களிடையே மியான்மர் ஏதிலியரைத் திருப்பி அனுப்பும் நிலைபாட்டிற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதுபோல் தெரிகிறது. அதனால், மணிப்பூருக்கு உயிர் பிழைக்க ஓடிவரும் மியான்மர் மக்களை திருப்பி அனுப்ப மாட்டோம், பாதுகாப்பாக தங்க வைப்போம் என்று 29.03.2021 அன்று அம்மாநில உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, மிசோரம் வரும் மியான்மர் ஏதிலியருக்கு100 நாள் திட்டத்தில் வேலையும் ஊதியமும் வழங்குவோம் என்று அம்மாநில முதல்வர் அண்மையில் அறிவித்துள்ளார்.
உயிர்பிழைக்க தமிழ்நாட்டிற்கு ஓடிவந்த ஈழத்தமிழர்கள் குறித்து சொரம்தங்கா உணர்வுடன் தமிழ்நாட்டில் எல்லோரும் நடந்து கொண்டார்களா என்பதை ஒருகணம் எண்ணிப் பார்க்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: கட்டுரைகள், தமிழ்த்தேசியம்!, பெ. மணியரசன்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்