இராஜேஸ்தாசைச் சிறையில் அடைக்க வேண்டும் எடப்பாடியார் மீது விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
Friday, March 5, 2021
இராஜேஸ்தாசைச் சிறையில் அடைக்க வேண்டும்
எடப்பாடியார் மீது விசாரணை
ஆணையம் அமைக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல்துறை சிறப்புத் தலைமை இயக்குநர் இராஜேஸ்தாஸ் என்பவர், ஒரு மாவட்டத்தின் பெண் காவல் கண்காணிப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பாதிக்கப்பட்ட பெண் கண்காணிப்பாளர் எழுத்து வடிவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குநர் திரிபாதி அவர்களிடம் புகார் கொடுத்து நடவடிக்கை கோரியுள்ளார். ஆனால், தலைமை இயக்குநர் திரிபாதி, இராஜேஸ்தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எல்லோரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நேற்று (04.03.2021) தமிழ்நாட்டில் பணியாற்றும் இந்தியக் காவல் பணியைச் (ஐ.பி.எஸ்.) சேர்ந்த பத்து பெண் அதிகாரிகள் இயக்குநர் திரிபாதியைச் சந்தித்து, இராஜேஸ்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக் கொடுத்துள்ளனர். இயக்குநர் திரிபாதி, தனக்குச் சமமான அதிகாரம் படைத்த இராஜேஸ்தாஸ் மீது தன் முடிவாக நடவடிக்கை எடுக்க முடியாது.
இப்படிப்பட்ட ஒரு சட்டச் சிக்கலை உருவாக்கி வைத்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான்! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் சட்டம் ஒழுங்குத் தலைமை இயக்குநர் ஒருவர் மட்டுமே உண்டு. தலைமை இயக்குநர் தகுதியில் பலர் இருப்பர். ஆனால், அவர்கள் வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பர். சட்டம் ஒழுங்குத் தலைமை இயக்குநர் பொறுப்பில் இருக்க மாட்டார்கள்.
திரிபாதியைவிடத் தமக்குக் கையடக்கமான, சட்டம் பற்றிக் கவலைப்படாமல் தாம் ஏவியதைச் செய்பவராக சட்டம் ஒழுங்குத் தலைமை இயக்குநர் இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் - சிறப்பு சட்டம் ஒழுங்குத் தலைமை இயக்குநர் இராஜேஸ்தாசை பணியமர்த்தம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி! அதுவும், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் காலத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் ஆளுங்கட்சியின் சட்டமீறல்களுக்குத் துணை நிற்கவும் பொருத்தமான ஒரு அதிகாரியாக இராஜேஸ்தாசைத் தேர்வு செய்து, சிறப்புத் தலைமை இயக்குநராக அமர்த்தி, அசல் தலைமை இயக்குநர் திரிபாதியை டம்மி ஆக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி!
திரிபாதியின் அலுவலகத்திற்கு நேர் எதிரிலேயே இராஜேஸ்தாஸ் தமது அலுவலகத்தை அமைத்துக் கொண்டுள்ளார் என்றும் ஏடுகள் கூறுகின்றன. அசல் அதிகாரம் இராஜேஸ்தாசிடம் இருந்திருக்கிறது.
இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி உயர் அதிகாரிகள், தங்களின் தன்னல நோக்கங்களுக்காக ஆளுங்கட்சியின் கைத்தடிகளாக மாறி தி.மு.க. ஆட்சி - அ.தி.மு.க. ஆட்சி இரண்டிலும் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு கைத்தடியாக மாற மறுக்கும் நேர்மையான அதிகாரிகளை சகாயம் அவர்களைப் பழிவாங்கியதைப் போல் பழிவாங்குவார்கள். இப்போது திரிபாதி அவர்களையும் அப்படித்தான் பழிவாங்கியுள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த இராஜேஸ்தாஸ் ஏற்கெனவே பெண் காவல் அதிகாரிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்தார் என்று புகார்கள் இருப்பதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அப்படிப்பட்ட நபருக்கு, இப்போதுள்ள தலைமை இயக்குநர்க்கு மேல் சிறப்புத் தலைமை இயக்குநர் பதவியை உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தந்ததேன்? பொது நலம் கருதியா, தன்னலம் கருதியா?
இராஜேஸ்தாசின் துணைவியார் பீலா இராஜேசுக்கு தமிழ்நாடு அரசின் பொதுநலத்துறையில் தலைமைப் பதவி கொடுத்ததுடன், கொரோனா காலத்தில் அவர் மட்டுமே செய்தியாளர்களைச் சந்தித்து அன்றாடக் கொரோனா அறிக்கை தர வேண்டும் என்றும், நலத்துறை அமைச்சரும் நலத்துறைச் செயலாளரும் அறிக்கை கொடுக்க வேண்டாம் என்றும் ஏற்பாடு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த அம்மையாரின் ஊழல்களை ஏடுகளும், காட்சி ஊடகங்களும் அம்பலப்படுத்திய பின்தான் அவருக்குத் தந்த சிறப்பு முதன்மைக் கைவிடப்பட்டது.
பாலியல் தொல்லை தொடர்பாகத் தன் மீது தலைமை இயக்குநர் திரிபாதியிடம் புகார் கொடுக்க மேற்படி பெண் காவல் கண்காணிப்பாளர் சென்னை நோக்கி வருவதை அறிந்து கொண்ட இராஜேஸ்தாஸ் செங்கல்பட்டிலேயே அவரை மறித்து, திருப்பி அனுப்பிட செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்குக் கட்டளை இட்டுள்ளார். அச்சட்ட விரோதக் “கட்டளையை”க் கண்ணன் செயல்படுத்தி அப்பெண்ணைத் தடுத்துள்ளார். பெண் காவல் கண்காணிப்பாளர் தில்லி ஆட்சியாளர்களுக்குப் புகார் தெரிவித்து, அவர்கள் தலையீட்டில் விடுவிக்கப்பட்டு, சென்னை வந்து புகார் கொடுத்துள்ளார்.
உரிய தண்டனைப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இராஜேஸ்தாசைச் சிறையில் அடைக்க வேண்டும்; கண்காணிப்பாளர் கண்ணனைப் பணி இடைநீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
மேற்கண்ட குற்றவாளி இராஜேஸ்தாசுக்கு சட்டமரபுக்கு விரோதமாகவும், ஒழுங்குவிதிகளுக்கு எதிராகவும் போட்டித் தலைமை இயக்குநர் பதவி வழங்கித் தனன்னலத்திற்காகக் காவல்துறைக் கட்டுக்கோப்பை சீரழித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க - நேர்மைக்குப் பெயர் பெற்ற ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: காணொலிகள். பாலியல் வண்கொடுமை!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்