மராத்தா” ஒதுக்கீடு நீக்கம் வர்ணாசிரம (அ)நீதி! - பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
Saturday, May 8, 2021
மராத்தா” ஒதுக்கீடு நீக்கம் வர்ணாசிரம (அ)நீதி!
தமிழ்த்தேசியப் பேரியக்கதலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் மக்களுக்கு இதுவரை மாநில அரசுகள் வழங்கி வரும் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று 05.05.2021 அன்று வெளி வந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் “மராத்தா” எனப்படும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அம்மாநில அரசு அளித்து வந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று, அறிவித்த தீர்ப்பில்தான் இந்த உரிமைப் பறிப்பு நடந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் 30 விழுக்காடு அளவிற்கு “மராத்தா” என்ற மண்ணின் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மரபுவழியில் உழவர்கள். சொந்த நிலமுள்ள உழவர்களும், நிலமற்ற உழவுத் தொழிலாளிகளும் மராத்தா மக்களில் அதிக விகிதம் உள்ளனர். அவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
பா.ச.க. முதலமைச்சர் பட்னவிஸ், 2018இல் மராத்தா மக்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பட்டியலில் சேர்த்து, சட்டம் இயற்றினார். அம்மாநிலத்தின் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியோர் இட ஒதுக்கீடு சட்டத்தில் (Socially and Educationally Backward Classes (SEBC) Reservation Act) மராத்தா வகுப்பினரைச் சேர்த்ததே அச்சட்டம்! அச்சட்ட முன்வடிவு மராட்டிய சட்டப்பேரவை மற்றும் மேலவையில் நிறைவேற்றப்பட்டு சட்டம் ஆனது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து மராட்டிய உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். இந்தச் சட்டம் செல்லும் என்று அந்த உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்தார்கள். மேல் முறையீட்டு வழக்கின் தலைப்பு : “டாக்டர் ஜெயஸ்ரீ லட்சுமண்ராவ் பாட்டீல் – எதிர் – முதலமைச்சர் (CA 3123 of 2020)”.
உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூசன் தலைமையில், நீதிபதிகள் எல். நாகேசுவரராவ், எஸ். அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, எஸ். இரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட ஐந்து நீதிபதிகள் ஆயம் இவ்வழக்கை விசாரித்தது. மராட்டிய அரசு நிறைவேற்றிய மேற்படி புதிய சட்டம் செல்லாது என்று 05.05.2021 அன்று மேற்படி ஆயம் தீர்ப்பளித்தது.
மராட்டிய மராத்தா மக்கள் தலை மீது உச்ச நீதிமன்றம் போட்ட இந்த குண்டு, மற்ற மாநிலங்களின் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவர்க்கும் தலைவலியை உண்டாக்கி விட்டது!
மராத்தா இடஒதுக்கீடு
மராத்தா மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது பெருங்குறையாக மராட்டியத்தில் பேசப்பட்டு வந்தது. 2016 – 2017ஆம் ஆண்டுகளில் மராட்டியத்தில் மராத்தா வகுப்பு மக்கள் இதற்காகப் பெரும் போராட்டங்கள் நடத்தினர். இதன் காரணமாக - பா.ச.க. ஆட்சியில் 2017 சூன் மாதம் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.ஜி. கெய்க்வாட் குழு 16 விழுக்காடு மராத்தா மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. என்.ஜி. கெய்க்வாட் பரிந்துரையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த அறிக்கையை இரத்து செய்தது.
அதன்பிறகு இயற்றப்பட்ட மாநில சட்டத்தை எதிர்த்து நடந்த வழக்கில் மராட்டிய உயர் நீதிமன்றம் 2019 சூன் மாதம் அளித்த தீர்ப்பில் அவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடும், வேலை வாய்ப்பில் 13 விழுக்காடும் ஒதுக்கீடு செய்ய ஆணையிட்டது. அதன்படி பா.ச.க. மாநில அரசு தனது சட்டத்தைத் திருத்தியது.
மராட்டியத்தின் இந்த சட்டத்தை எதிர்த்து நடந்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம், மராத்தாக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக செல்லாது என்று நீக்கிவிட்டது.
இரண்டு காரணங்கள்
இந்திய அரசுப் பணிகளில் – அதன் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலை தொடர்ந்தது. சமூகநீதிக்கான இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்தினால் 01.01.1979 அன்று அன்றைய தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான இரண்டாவது ஆணையத்தை பி.பி. மண்டல் தலைமையில் அமைத்தார். அந்த ஆணையம் 1980 திசம்பரில் தனது அறிக்கையை நடுவண் அரசிடம் அளித்தது. அப்போதிருந்த தலைமை அமைச்சர் இந்திராகாந்தியும், அவர்க்குப் பின்வந்த தலைமை அமைச்சர் இராசீவ்காந்தியும் மண்டல் அறிக்கையை செயல்படுத்த முன்வரவில்லை.
மண்டல் அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்று அவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் நடுவண் அரசில் 27 விழுக்காடு வழங்க வேண்டும் என்பது.
தேசிய முன்னணி சார்பில் கூட்டணி ஆட்சியின் தலைமை அமைச்சராக இருந்த வி.பி. சிங், மண்டல் குழு பரிந்துரைகளில் உள்ள நடுவண் அரசு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு 13.08.1990 அன்று ஆணையிட்டார். இதனால் வி.பி. சிங்கிற்குக் கொடுத்து வந்த ஆதரவைப் பா.ச.க. விலக்கிக் கொண்டது. காங்கிரசும், பா.ச.க.வும் இணைந்து வி.பி. சிங் ஆட்சியை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினர்.
வி.பி. சிங் செயல்படுத்திய 27 விழுக்காடு வேலை ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குப் போட்டனர். வி.பி. சிங் செயல்படுத்திய ஆணைக்கு உடனடியாகத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.
1991இல் காங்கிரசுக் கட்சியின் பி.வி. நரசிம்மராவ் தலைமை அமைச்சர் ஆனார். அவர் வி.பி. சிங் பிறப்பித்துத் தடைப்பட்டுள்ள மண்டல் பரிந்துரை ஆணையில் சில திருத்தங்கள் செய்து, பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 விழுக்காடு வேலை வாய்ப்புடன், இதுவரை இட ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்க்கு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கிப் புதிதாக 25.09.1991 அன்று ஆணையிட்டார்.
நரசிம்மராவ் வெளியிட்ட இந்த ஆணையை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆய விசாரணைக்கு மாற்றியது.
தலைமை நீதிபதி ஏ.எம். வெங்டாச்சலையா தலைமையில் ஏ.எம். அகமதி, எம். கனியா, எஸ். இரத்தினவேல் பாண்டியன், கே. சிங், பி. சாவந்த், ஆர். சகாய், பி.ஜே. ரெட்டி மற்றும் ஒருவர் ஆகிய 9 நீதிபதிகள் ஆயம் 26.11.1992 அன்று தீர்ப்பு வழங்கியது. அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது செல்லும் என்று தீர்ப்பளித்தது. அதேவேளை இரண்டு தடைகளை நிபந்தனையாக்கியது.
ஒன்று, பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு – வருமானம் அதிகம் உள்ள மேல் திரட்சிப் படலத்தினர்க்கு (Creamy Layer) இட ஒதுக்கீடு கிடையாது. இரண்டு, இந்திய அரசிலோ மாநில அரசிலோ மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது. இயல்பற்ற சிறப்புச் சூழ்நிலை (Extraordinary circumstances) ஏற்பட்டால் அப்போது மட்டும் 50 விழுக்காட்டினர்க்கு மேல் ஒதுக்கீடு வழங்கலாம்.
இதே ஒன்பது நீதிபதிகள் ஆயம் முன்னேறிய வகுப்பாரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு நரசிம்மராவ் அரசு 10 விழுக்காடு அளித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. சமூகம் மற்றும் கல்வி இரண்டிலும் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் ஒதுக்கீடு வழங்க உரிமை அளித்துள்ளது, பொருளியலில் பின் தங்கியவர்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது.
இப்பொழுது மராத்தா ஒதுக்கீட்டை நீக்கிட அசோக் பூசன் தலைமையிலான 5 நீதிபதிகள் ஆயம் ஒருமித்துக் கூறியுள்ள காரணம், மராட்டியத்தில் ஏற்கெனவே 52 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள நிலையில், அதற்கும் மேலே முறையே 12%, 13% இட ஒதுக்கீடு கூடுதலாக்குவது மண்டல் வழக்கு (இந்திரா சகானி வழக்கு) தீர்ப்பிற்கு எதிரானது என்பதாகும்.
இரண்டாவது காரணம்
மோகன் பகவத் – மோடி அரசு 2018இல் இயற்றிய 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்!
இந்தத் திருத்தம் அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 338B, 342A, 366 (26c) ஆகிய புதிய பிரிவுகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தது. ஏற்கெனவே 338இல் பட்டியல் வகுப்பார்க்கான ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
102ஆவது திருத்தம், 338B என்ற புது உறுப்பை அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்து, அதில் 9 உட்பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இதன்படி “பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் 9ஆவது பிரிவு இந்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் சமூகம் மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய வகுப்பார்களுக்குரிய எல்லா முக்கியச் செய்திகள் குறித்தும் மேற்படி பின்தங்கிய வகுப்பு ஆணையத்துடன் கலந்து பேசி (அதன் ஒப்புதலுடன்) முடிவு செய்ய வேண்டும்.
அடுத்து அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக 342A என்ற உறுப்பை 102ஆவது திருத்தம் சேர்த்தது. இதில் இரு உட்பிரிவுகள் இருக்கின்றன.
உட்பிரிவு (1), மாநில அரசுடன் கலந்து பேசி, குடியரசுத் தலைவர் அம்மாநிலத்திற்குரிய பின் தங்கிய வகுப்பு (சாதிகள்) பட்டியலை வெளியிடுவார் என்று கூறுகிறது. அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் வழங்கும் உதவிகள் – உரிமைகள் கிடைக்கும்.
இதன் அடுத்த உட்பிரிவு (2) – நாடாளுமன்றம், தனது சட்டத்தின் மூலம் சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியோர் குறித்த நடுவண் பட்டியலில் இருந்து ஒரு பிரிவை (சாதியை) சேர்க்கலாம் அல்லது நீக்கலாம்.
மூன்றாவதாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 366இல் 26c என்ற பிரிவை சேர்த்தது. இதில் இந்த சட்டத்தின் பெயர் மற்றும் கூறப்படுகிறது.
மராத்தா இட ஒதுக்கீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐவரில் எஸ். இரவீந்திர பட், “குடியரசுத் தலைவர் (அதாவது நடுவண் அரசு) மட்டுமே பின்தங்கிய வகுப்புப் பட்டியலில் எந்தெந்த சாதியினரைச் சேர்க்கலாம் என்று முடிவு செய்ய முடியும் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 342A (1) கூறுகிறது. இப்பட்டியலே எல்லா மாநில அரசுக்கும் உரியது; ஒன்றியப் பிரதேசங்களுக்கும் உரியது. இந்தப் பட்டியலில் உள்ளோர்க்கு மட்டுமே அரசமைப்புச் சட்டம் வழங்கும் பின்தங்கியோர்க்கான சிறப்புரிமைகள் பொருந்தும். எனவே மராட்டியத்தில் மராத்தா வகுப்பினர் பின்தங்கிய பிரிவினர் என்று நடுவண் அரசுப் பட்டியலில் இல்லாததால் – மராத்தாக்களை – பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில அரசு அறிவித்தது செல்லாது” என்று தமது தீர்ப்புரையில் கூறினார்.
நீதிபதி எஸ். இரவீந்திர பட் கூறிய மேற்படித் தீர்ப்புரையை நீதிபதி எல். நாகேசுவரராவ், நீதிபதி ஹேமந்த் குப்தா இருவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் நீதிபதி இரவீந்திரபட் கூற்றை, நீதிபதி அசோக் பூசனும் நீதிபதி எஸ். அப்துல் நசீரும் ஏற்காமல், மாநில அரசு தனது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை வெளியிட, செயல்படுத்த உரிமை உண்டு என்று தீர்ப்பில் எழுதினர். ஆனால் ஐந்து நீதிபதிகளில் இந்த இருவர் கூற்று – தீர்ப்பாகாமல் மேற்படி மூவர் கூற்று தீர்ப்பானது.
இவ்வழக்கில் வாதிட்ட இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே. வேணுகோபால் – மாநில அரசு தனது சொந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்ய அதிகாரம் உண்டு என்று கூறினார். ஆனால், அதனை நீதிபதி இரவீந்திரபட்டும் மற்ற இருவரும் ஏற்கவில்லை.
தீர்வு என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான காலத்திலிருந்தே, பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தாளர்கள் அரசமைப்புச் சட்ட அவையிலும் அதன் பிறகு நாடாளுமன்றத்திலும் முனைப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட பெருந்தொகை வெகுமக்களைத் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே கட்டுப்படுத்தியும், பிரித்தும் வைத்திருந்தால் தான் ஆரியப் பிராமணர்களும் ஆரிய வைசியர்களும் தங்களுடைய மேலாதிக்கத்தை சனநாயகக் காலத்திலும் நீட்டித்துக் கொள்ளலாம் என்பது அவர்களின் போர் உத்தி! நீதித்துறை எப்பொழுதுமே அவர்கள் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்கிறது.
அதிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு இல்லாத உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அவர்கள் – அதிலும் குறிப்பாகப் பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் தொடர்கின்றன. ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நீதிபதியாக இல்லை என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34. இதில் இப்பொழுது 27 பேர்தாம் பணியாற்றுகிறார்கள். ஏழு இடங்கள் காலியாக உள்ளன. 27 பேரில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை!
ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அங்கு நீதிபதியாக உள்ளார். அதுவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவர் கூட நீதிபதியாக இல்லாத பின்னணியில் இப்பொழுது ஒருவர் உள்ளார்.
உயர் நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும், வகுப்பவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். தகுதியான சட்ட வல்லுநர்கள் பிற்படுத்தப்பட்ட – பட்டியல் வகுப்பு – பழங்குடி மக்களிடையே இருக்கிறார்கள்.
மராத்தா இட ஒதுக்கீடு வழக்கையே எடுத்துக் கொள்வோம். மராட்டிய உயர் நீதிமன்றம் மராத்தா மக்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளும் இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மற்ற சட்டங்களையும் நன்கு கற்றவர்கள்தானே!
மராத்தியச் சமூகச் சூழல் – அரசியல் சூழல் போன்றவை அம்மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் செல்வாக்குச் செலுத்துகிறது. எங்கோ தில்லியில் இருப்பவர்களுக்குத் தாங்கள் பிறந்த குடும்பம் – பின்னணி முதலியவற்றின் உளவியலே கோலோச்சுகிறது.
பட்டியல் வகுப்பில் எந்தெந்த சாதிகளைச் சேர்க்கலாம் என்பதை இந்திய அரசு மட்டுமே முடிவு செய்யும் என்று ஏற்கெனவே உள்ள அரசமைப்பு உறுப்பு 342ஐ நீக்க வேண்டும்; மாநில அரசுக்கு இதில் அதிகாரம் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்க்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்ட 342Aயையும் நீக்க வேண்டும்; மாநில அரசுகளுக்கு இப்பட்டியல்கள் தயாரிப்பில் முழு உரிமை வேண்டும்; ஏனெனில் மக்கள் இருப்பது மாநிலங்களில் மட்டுமே; இந்திய அரசுக்கென்று தனியே மக்களோ, மக்களினமோ கிடையாது. இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லியிருந்தால் சனநாயக வளர்ச்சிக்கும், சமூகநீதிக்கும் உரிய நீதியாக அமைந்திருக்கும்.
மாநில மண்ணோடு ஒட்டாமல், ஏகஇந்திய மையமே தங்களின் ஒரே தாயகம் என்று கருதிக் கொள்வோரால், இந்தியாவின் – பல தாயக உணர்வுகளை – பல தாயக உரிமைகளைப் புரிந்து கொள்ள முடியாது.
பல கட்டுரைகளில் நாம் குறிப்பிட்டு வந்துள்ளோம் – இந்தியாவின் இனப்பன்மை – சமூகப்பன்மை பா.ச.க.வுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்துகிறது. மராட்டிய பா.ச.க. ஆட்சிதான் மண்ணின் மக்களான – வேளாண்மை வீழ்ச்சியால் வாழ்விழந்து தவிக்கும் மராத்தாக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கியது. அதே பா.ச.க. இந்திய ஆட்சியில் இருந்து கொண்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை அடையாளம் கண்டு பட்டியலிடும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று அதே 2018-இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இப்பொழுதும் மராட்டியத்தில் – பா.ச.க.வினர்க்கிடையே முரண்பாடு எழும்.
அரசமைப்புச் சட்டப்படி பின்தங்கிய வகுப்பார்க்கு ஒதுக்கீடு வழங்குவது பற்றி அறிக்கை தருவதற்காக மண்டல் ஆணையம் நிறுவப்பட்டது. அதன் பரிந்துரையை ஏற்று 27 விழுக்காடு இந்திய அரசு வழங்கியது. அதை எதிர்த்த வழக்கில், மொத்த இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டு வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாச்சலையா ஆயம் 1992இல் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புரைக்க வேண்டிய தேவை என்ன? அந்த 50 விழுக்காடு வரம்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் தனக்கு உடன்பாடில்லை என்று அத்தீர்ப்புரையில் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார்.
அவ்வழக்கு நடுவண் அரசு ஒதுக்கீடு சார்ந்தது. மாநில அரசுகள் 50 விழுக்காட்டிற்கு மேல் இ்ட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் சினந்து சீற வேண்டிய தேவை என்ன? பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது – அவர்கள் தங்களுக்குச் சமமாக வளர்ந்துவிடக் கூடாது என்ற மேட்டிமை உளவியல்தானே!
மராத்தா வழக்கில் பெரும்பான்மைத் தீர்ப்பெழுதிய இரவீந்திரநாத் பட், “பின்தங்கியோர் பட்டியல் எடுப்பதில் மாநில அரசின் கருத்துகளை நடுவண் அரசு கேட்கலாம்; கேட்க வேண்டும்; ஆனால் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் 338B-இன்படி நடுவண் அரசுக்கே உண்டு” என்று கூறுகிறார். மாநில அரசைக் கலந்து பேசுவது, ஒரு கண்துடைப்பே என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் நீதிபதி!
முன்னேறிய வகுப்பார்க்கு – பொருளியலில் பின்தங்கியோர் என்று பெயர்ச் சூட்டிக் கொடுக்கப்படும் 10 விழுக்காட்டை எதிர்த்து ஒரு சொல்கூட அசோக் பூசனும், இரவீந்திரநாத் பட்டும் பேசவில்லை.! இந்தப் புதிய பத்து - ஐம்பது விழுக்காட்டைத் தாண்டுவது பற்றி ஏன் பேசவில்லை? காரணம் தெரிந்ததே!
அடுத்து மாநிலக் கலைப்பா?
மாநிலங்களுக்கு காங்கிரசாட்சி விட்டு வைத்திருந்த சில உரிமைகளையும் அதிகாரங்களையும், அடுக்கடுக்காகப் பறித்து வருகிறது மோகன் பகவத் – மோடி ஆட்சி! வர்ணாசிரம ஆதிக்கத்திற்கு சிறுசிறு தடைக் கற்களைப் போடும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதே பா.ச.க.வின் இலட்சியத் திட்டம்!
அந்த நடவடிக்கையின் முதற்கட்ட வேலைதான், பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கும் மாநில உரிமையைப் பறிக்கும் 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம்! இத்திருத்தம் 2018இல் பெரும் எதிர்ப்பின்றி நிறைவேறிவிட்டது. சமூகநீதி, சனநாயகம், வகுப்புரிமை ஆகியவற்றில் அக்கறையுள்ளோரின் விழிப்புணர்ச்சிக் குறைவின் வெளிப்பாடே இந்த அவலம்! நம்மை நாமே தன் திறனாய்வு செய்து கொள்ள வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டைச் சிதைத்து, சின்னாப்பின்னப்படுத்திய பிறகு, பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்கள் ஆகியோரின் இடஒதுக்கீட்டையும் வெட்டிக் குறுக்கி, வெறும் பெயருக்கு ஏதோ ஒன்றை வைத்துக் கொள்வார்கள்!
இப்போதுள்ள தேசிய இன – மொழித் தாயக அடிப்படையிலான மாநிலங்களைப் பிளந்து சிறுசிறு நிர்வாக மண்டலங்களாக மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க.வின் அடுத்த திட்டம்!
தமிழ்நாட்டின் 69 விழுக்காடு என்னாகும்?
எங்கோ மராட்டியத்திற்கு வந்த தலைவலி என்று நினைக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு வரப்போகும் 69 விழுக்காடு ஒதுக்கீடு அழிப்புக்கான முன்னோடி மராத்தா உரிமை மறுப்பு என்று தமிழர்கள் உணர வேண்டும்!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், இந்திய அரசின் சமூகநீதிப் பறிப்பையும் மாநில உரிமைப் பறிப்பையும் தடுத்து, உரிமைகளை மீட்டிட மாற்றுத் திட்டங்களை முன்வைத்து இந்திய அரசிடம் வைத்து உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் அனைத்து இயக்கங்களும், மக்களும் தற்காப்பு நோக்கில் பொது முழக்கம் எழுப்பி – வகுப்புரிமை காக்க வீதிக்கு வர வேண்டும்!
1. இந்திய அரசே! 102ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முறைப்படி இரத்துச் செய்!
2. மராத்தா இடஒதுக்கீட்டை மறுத்த ஐந்து நீதிபதி ஆயத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய - அதைவிட பெரிய பதினோரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் அமைத்திடு!
3. இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கூறியதே தமது அரசின் கருத்து, மராத்தா இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கிட மாற்று ஏற்பாடு செய்வோம் என்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: ஆரியத்துவா எதிர்ப்பு!, சிறப்புக் கட்டுரை, பெ. மணியரசன்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்