<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்! - ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

Tuesday, August 10, 2021



அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்!

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் 
ஐயா பெ.மணியரசன் அறிக்கை!

கடந்த 6.7.2021 அன்று இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பல்வேறு கோயில்களின் நிர்வாக அதிகாரிகள் அந்தந்த கோயிலுக்குத் தேவையான அர்ச்சகர், ஓதுவார், இசைக் கலைஞர்கள், தட்டச்சர்கள், சமயல்கார ர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு தனித்தனியே விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான கடைசி நாள் 7.8.2021 ஆகும். விளம்பரங்களை எதிர்த்தும் தடைசெய்யக்கோரியும் அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் அவர்களிடம் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு மனுவில், முத்துக்குமார் தவறான தகவல்களைத் தந்துள்ளார். 

அர்ச்சகர் பணிக்குக் குறைந்தது 10ஆம் வகுப்புத் தேர்ச்சி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் கையொப்பமிட்டு தனித்தனியே கொடுத்துள்ள விளம்பரங்களில் அர்ச்சகர் பணிக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்றும் வேத ஆகம பயிற்சிப் பள்ளிகளில் படித்துச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும், வேத மந்திரங்கள் நன்கு உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், 18 வயதில் இருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 

மேற்படி விளம்பரங்களில் 10 ஆம் வகுப்புத் தகுதி தட்டச்சர் போன்ற பணிகளுக்கு மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. வேத ஆகமப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மேற்படி விளம்பரங்களில் கூறவில்லை  என்றும் மனுதாரர் தவறாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை; குறிப்பிட்ட சாதியினரைத் தவிர இந்து மதத்தில் பயிற்சியும் தகுதியும் உள்ள பிற சாதியினர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று தடை கோருவது, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 14 வழங்கும் சமத்துவத்துக்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் 1972 ஆம் ஆண்டு சேஷம்மாள் வழக்கில் அளித்த தீர்ப்பிலும் 16.12.2015 அன்று மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் ஆணை குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பிலும் அந்தந்த கோயிலுக்கு உரிய இந்து சமயப்பிரிவில் பிறந்தவர்கள் உரிய பயிற்சி பெற்றிருந்தால், சாதி நிபந்தனையின்றி அனைவரும் அர்ச்சகர்ராகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வதையும், அனைத்து சாதியினரை அர்ச்சகராக்குவதையும் தடை செய்யக்கோரி ஸ்ரீதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் மனுதாக்கல் செய்து அந்த மனுவை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் விசாரனைக்கு தேதி குறித்துள்ளது. 

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க சார்பில் போட்டுள்ள இந்த புதிய மனு தவறானத் தகவல்களை கொண்டிருப்பதால் இதை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் வழங்கறிஞர் வாதாடியிருக்க வேண்டும். மேலும் இதே கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கு இதே உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் விசாரணையில் உள்ள நிலையில் இதே காரணங்களுக்காக இன்னொரு வழக்கை தனி நீதிபதி ஏற்க கூடாது என்றும் தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வாதாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுள்ளார். தனி நீதிபதியும் 25.8.2021 தேதிக்கு இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போர்க்கால அவசரத்துடன் இவ்வழக்குகளை கவனித்து தனது வழக்கறிஞர்களை சரியாக வழி நடத்த வேண்டும். அதன் முதல் கட்டமாக சிவாச்சாரியார் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துகுமார் போட்ட வழக்கைத் தனி நீதிபதி உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்கெனவே உள்ள வழக்கில் அவர் சேர்ந்துகொள்ளலாம் என்றும் கோரிக்கை வைத்து உயர்நீதிமன்றத்தை விரைவாகத் தமிழ்நாடு அரசு அணுக வேண்டும்.

1972 மற்றும் 2015 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ள படி தகுதியுள்ள அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கலாம் என்பதை நிலைநாட்டிச் செயல்படுத்த வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப்பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

தெய்வத் தமிழ்ப் பேரவை

முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 9841949462, 9443918095


 

Labels: , ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்