இளையோரே எழுக! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு! பெ. மணியரசன் கட்டுரை!
Monday, September 13, 2021
இளையோரே எழுக!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!
விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்து நாளிதழ் (The Hindu 13.9.2021) வெளியிட்டிருந்தது.
“இப்போது, அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதேச்சாதிகாரம், மதவெறி போன்ற சீரழிவுகளை எதிர்த்து இளைஞர்கள் எழுக” என்று உணர்ச்சிமிகு உரையைத் தலைமை நீதிபதி ஆற்றி இருந்தார்.
தமிழ்நாட்டிலும் மீள் எழுச்சியை உருவாக்கத் தமிழ் இளையோர்க்கும் பொருந்துவதாக இவ்வுரை இருப்பதால், இதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.
===================================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================
சனநாயக உரிமைகள் என்று நம்மால் ஏற்கப்படுள்ளவை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும், இருண்ட நெருக்கடி நிலைக் காலத்திலும் ஆயிரமாயிரம் இளையோர், ஆதிக்கப் பெரும் புள்ளிகளை எதிர்த்து வீதிகளில் போராடியதன் விளைவால் பெற்றவை! தேசத்திற்காக, சமூகத்தின் மகத்தான நன்மைகளுக்காக, அவர்களில் பலர் தங்கள் உயிரை ஈகம் (தியாகம்) செய்தார்கள். பெரும் வருவாய் தரும் பணிகளை இழந்தார்கள்.
நாட்டின் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பயணத்தில் ஏற்படும் தடங்கல்களைக் களைய இளைஞர்களை நம்புங்கள். தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இழைக்கப்படும் அநீதிகளை இளையோர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவர்கள் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தன்னல மற்றவர்கள்; வீர தீரமானவர்கள்! தாங்கள் உண்மை என்று நம்பும் இலட்சியங்களுக்காக ஈகங்கள் செய்வார்கள். இப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற மனங்கள் – தூய நெஞ்சங்கள் தாம் நமது நாட்டின் முதுகெலும்புகள்!
இளையோரே, சமூகத்தின் நடப்புகளை சவால்களை நீங்கள் அறிந்து கொள்வது கட்டாயத் தேவை! நினைவில் நிறுத்துங்கள்; நாட்டில் ஏற்படும் எந்தப் பாதை மாற்றமும், எப்போதும் அதன் இளையோரிடம் வேர்கொள்கிறது. அவர்களின் பங்கேற்பால் நிகழ்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் முழுநிறைவான தேசத்தையும் சமூகத்தையும் கட்டி எழுப்புவது உங்களுக்கான பணி!
சமத்துவக் கொள்கையுள்ள நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ள மதச் சார்பின்மைக் கொள்கை, இந்திய விடுதலைப் போராட்ட நெருப்பில் புடம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கான மருந்துச்சீட்டு போல் மதச்சார்பின்மையைப் பேசியவர் விவேகானந்தர். மதத்தின் மெய்யான சாரம் அனைவர்க்குமான பொது நன்மை, சகிப்புத்தன்மை ஆகியவையே என்று உறுதியாக நம்பினார். மூடநம்பிக்கைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்டதாக மதம் இருக்க வேண்டும்.
இந்தியா மீள் எழுச்சி கொள்ள, இளையோரிடையே விவேகானந்தர் கோட்பாடுகள் குறித்த உணர்வுகளை ஊட்ட வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: கட்டுரைகள், பெ. மணியரசன்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்