<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"பிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பதவி அரசியல் மறுப்பும், ஈகமும் தான்" -- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

Friday, March 1, 2013

"பிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பதவி அரசியல் மறுப்பும், ஈகமும் தான்" 

-- தோழர் பெ.மணியரசன் பேச்சு.

கோவை காந்திபுரத்தில், 17.02.2013 ஞாயிறு அன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க அரங்கக் கூட்டம் நடை பெற்றது. நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் ஸ்டீபன் பாபு தலைமையேற்றார். தோழர் இராசேசுக்குமார் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க.அமைப்பாளர் தோழர் விளவை.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். தழல் ஈகி முத்துகுமார் உருவபடத்தை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ,ஆனந்தன் திறந்து வைத்தார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராம கிருட்டிணன்,விடுதலை சிறுத்தைகள் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் சுசி. கலையரசன், திரு. திருக்குறள் இரவி, மொழிப்போர் ஈகி திரு. ப.பெரியசாமி, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்.
நிறைவாகப் உரையாற்றும் போது,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேசியதாவது:
 “மாவீரன் முத்துக்குமார் தன்னை எரித்து கொண்ட போது தமிழர்களுக்காக ஒரு அரிய ஆவணத்தை எழுதி விட்டுச் சென்றுள்ளார். அதில், தமிழீழத்தை அழிக்கும் போரை இந்திய ஏகாதிபத்தியம்தான் நடத்துகிறது எனக் குறிப்பிட்டார்.அந்தப் போரை ஞாயம் என்று இந்தியா கருதினால் அதை பகிரங்காமாகச் செய்ய வேண்டியது தானே.ஏன் கள்ள மவுனம் காக்கிறது என்றார் முத்துகுமார்.
இந்தியாதான் ஈழத்தமிழரை அழிக்கும் போரை பின் நின்று கொண்டு இயக்கியது என்பதை நாம் அறிவோம்.ஆனால் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசு என்ற வரையறுப்பை இளைஞர் முத்துகுமார் சொன்னது வியப்பாகயிருக்கிறது.நம் தமிழ் உணர்வாளர்கள் பலருக்கு அந்த வரையறுப்பு புரியாது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்றவைதான் ஏகாதிபத்தியம் என்று கருதுகிறோம். இந்தியஅரசும் ஒரு ஏகாதிபத்தியம் தான்.தமிழகம் மட்டுமல்லாமல்,பல்வேறு தேசிய இனங்களையும் அது ஒடுக்குகிறது.பல்வேறு தேசிய மொழிகளை அது நசுக்குகிறது. பக்கத்து நாடுகளில் ஆதிக்க அரசியலை புரிய முனைகிறது.அந்த வகையில் இந்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசுதான்.
இந்திய அரசு தமிழினப் பகை அரசு.தமிழீழ மக்களை 2009ல் மட்டும் ஒன்றரை லட்சம் பேரை அழித்ததோடு மட்டுமல்ல,தமிழகத் தமிழர்களையும் இந்திய அரசு ஒடுக்கி வருகிறது. அவர்களது உரிமைகள் பறிக்கத் துணை நிற்கிறது இந்திய அரசு.
சுண்டைக்காய் சிங்கள நாடு இந்திய அரசு துணையோடு தான் 600தமிழக மீனவர் களை சுட்டு கொன்றது,காவிரி உரிமை பறிக்க கர்நாடகத்திற்கும்,முல்லை பெரியார் உரிமை பறிக்க மலையாளிகளுக்கும் இந்திய அரசு துணை நிற்கிறது.எனவே இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழர்களுக்கும் பகை அரசாகவே செயல் படுகிறது.
இந்திய ஏகாதிபத்தியத்திற்கு கீழ் ஒடுக்கப்பட்டு கிடக்கும் தமிழகத்தில்,மாநில ஆட்சியை பெறுவதன் மூலம் நமது உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இழந்த உரிமைகளை மீட்க முடியாது. இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து முழு வெற்றி பெற முடியாது.
மொழி விடுதலை என்பது,அந்த இனத்தின் தாயக விடுதலையோடு இணைந்தது தான். இனம் விடுதலையடைந்தால் தான், மொழி விடுதலையடையும்.
வங்காள தேசம் பாகிஸ்தானோடு இணைந்து இருந்த காலத்தில்,மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மீது உருது மொழியைத் திணித்தது. அந்த மொழித் திணிப்பை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் போராடினார்கள். கிட்டத்தட்ட 11 பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள். வங்கதேச மக்கள் மொழி போராட்டத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.தாயக விடுதலையையும் நடத்தி வெற்றி பெற்றார்கள். வங்காள தேசம் உருவாகி ஐ.நா.மன்றத்தில் உறுப்பு வகித்த பின்னர் தங்களுடைய மொழிக்காக,11பேர் உயிர் ஈகம் செய்த நாளான பிப்ரவரி 21-ஐ உலகத் தாய் மொழி நாளாக அறிவிக்கும் படி ஐ.நா.மன்றத்தில் கேட்டு, அதில் வெற்றியும் பெற்றார்கள்.இன்று உலகத் தாய் மொழி நாளாக வங்கதேச மொழிப்போர் நாள்தான் உலகெங்கும் நினைவு கூறப்படுகின்றது.
1965 மொழிப்போரில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய தமிழர்கள், இந்திய அரசின் இராணுவத்தால் காக்கைக் குருவிகளைப் போல,300க்கும் மேற்பட்டோர் சுட்டு கொள்ளப் பட்டார்கள். பத்து பேர் வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தார்கள்.
நம்முடைய மொழிப் போர் நாளான சனவரி 25,ஏன் உலகத் தாய் மொழி நாளாக ஏற்கப்படவில்லை?ஏன் என்றால் நாம் தேச விடுதலைப் போராட்டத்தை நடத்த வில்லை. நமக்கான தேசத்தை உருவாக்கி ஐ,நா.மன்றத்தில் உறுப்புவிகிக்கவில்லை.தாய்மொழிக் காக்க உலகத்தில் எந்த இனமும் தமிழர்களை போல் 300பேருக்கும் மேல் உயிரீகம் கொடுத்ததில்லை. ஆனால் நமக்கு சொந்த நாடு இல்லாத தால் நமது தியாகம் உலகத்திற்கு தெரியாமல் போய்விட்டது.
மொழி உரிமைப் போராட்டம் தேசிய விடுதலைப் போரோடு இணைக்கப்பட்டதால் தான், வங்க மொழி ஆட்சி அதிகாரத்தை பெற்றது.
ஈழவிடுதலைப் போரும் முதலில் தமிழ் உரிமைப் போராகவே வெடித்தது.ஊர்தியில் சிங்கள எழுத்தில் சிறி மட்டுமே எழுதகூடிய அளவுக்கு இலங்கையில் சிங்கள அரசு உத்தரவு பிறப்பித்தது தமிழ் மொழியை ஒடுக்கியது.அன்று தமிழ் மொழி உரிமை காக்க ஈழத்தமிழ் இயக்கம்,ஈழ விடுதலை இயக்கமாக பரிணாமம் பெற்றது.அந்தஈழ விடுதலையில் தேர்தல் கட்சியான அமிர்தலிங்கம் கட்சி உறுதியாக நில்லாமல் சந்தர்ப்ப வாதம் செய்த போது,இளைஞர்கள் ஈழவிடுதலைக்காக ஆயுதம் புரட்சிக்கு முன்வந்தார்கள்.அப்படி உறுதியான ஆயுதப் போராட்ட அமைப்புகளில் தமிழீழ விடு தலைப் புலிகள் அமைப்பு தகுதியானதாக வலிமை மிக்கதாக நிலைத்து மலர்ந்தது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள்,சரியான மொழிக் கொள்கை, சரியான தேசிய இனக் கொள்கை முன்வைக்கப்படவில்லை. தேசிய விடு தலைப் போராட்டத்தோடு, மொழிப் போராட்டத்தை இணைக்கவும் இல்லை.
தில்லிக்காரர்கள் இந்தியை திணித்த போது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திய திராவிட இயக்கத் தலைவர்கள் இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும் என்றார்கள். இந்தியும் அயல் மொழி ஆங்கிலமும் அயல் மொழி, சொந்த மொழியான தமிழ் மொழிக் குரிய கொள்கையை அவர்கள் வகுக்கவில்லை.அதே போல் தமிழர் தாயகம் –தமிழ்த் தேசம் என்ற வரையறுப்புகளைக்கூட அவர்கள் வகுக்கவில்லை.
தமிழர்களை திராவிடர்கள் என்றார்கள். தமிழருக்குரியத் தாயகத்தை திராவிட நாடு என்றார்கள்.இவ்வாறான குளறுபடிகள் நிறைந்தாகவும் தொலைநேக்கு அற்றதாகவும், மொழிப் போர் நடத்தப்பட்டதால் தான், உலகத்தில் யாரும் செய்யாத தியாகத்தை தமிழர்கள் செய்தும் கூட உரியப்பலனை நாம் இன்னும் அடையவில்லை.
எனவே தான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தெளிவான தமிழ்த்தேசியத்தை முன்வைக்கிறது. எமது தேசம் தமிழ்த் தேசம், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசிய இனம் தமிழர், எமது இலக்கு இறையாண்மையுள்ளத் தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பது என்றும் இதுவே தமிழ்த் தேசியம் என்றும் தமிழ்த்தேசியம் உறுதிபடத் தெரிவிக்கிறது.
மக்கள் திரள் பங்கேற்கும் மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சி, தமிழ்த் தேச விடு தலையை உருவாக்கித் தரும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். இதற்கு இடையில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது இலட்சியம் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூறுவது தமிழ்த் தேசியம் ஆகாது. தனித் தமிழ்நாட்டு விடுதலையை முன்வைக்காத எந்தக் கருத்தியலும் தமிழ்த் தேசியம் ஆகாது.
ஒரு இனம் ஒரு ஏகாதிபத்தித்தின் கீழ் காலனியாக இருக்கும் போது முதலமைச்சர் பதவியை காலனி மக்களுக்கு ஏகாதிபத்தியம் வழங்குவது ஏன்? தங்களை அயலார் ஆள்கிறார்கள் என்று அடிமைப்படுத்தபட்ட மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இறுதி அதிகாரம் அற்ற கங்காணிப் பதவியாக முதலமைச்சர் பதவியை ஏகாதி பத்தியம் உருவாக்கித் தருகிறது. அதில் கிடைக்கக்கூடிய, அதிகாரங்களையும் பதவி சுகங்களையும் துய்ப்பதற்காக தமிழர்களில் பலர் போட்டியிடுகிறார்கள். இப்போது தமிழ்த் தேசியம் பேசி போட்டி இடுகிறவர்களுக்கு, புதுக்கவர்ச்சி யாக ஒரு முழக்கம் வேண்டும் என்பதை தாண்டி அவர்களுக்கு தமிழ்த் தேசிய இலட்சியம் கிடையாது.
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனை தேடி இரண்டு முறை முதலமைச்சர் பதவி வந்தது. ஒரு முறை சார்க் மாநாடு பெங்களூரில் நடந்த போது, சிங்கள அதிபர் செயவர்த்தனா அங்கு வந்திருந்தார். பிரபாகரன் அவர்களை வரவழைத்தனர். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிரபாகரன் அவர்களிடம் பேசச் சொல்லி முதலமைச்சர் பதவியை ஏற்க வற்புத்துமாறு கேட்டார்கள். எம்.ஜி.ஆர். சென்று பிரபாகரன் அவர்களிடம் பேசினார்.
ஆனால் பிரபாகரன் அவர்கள், “அண்ணா முதலமைச்சர் பதவி ஆசைக்காட்டி தமிழீழ விடுதலை கோரிக்கையை மழுங்கடித்து விடுவார்கள். எனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக நான் ஈழவிடுதலையைக் கைவிட்டு மாகாண முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டால். அது என்னை நம்பிய இனத்தை விற்றது போல் ஆகிவிடும்” என்று கூறி பிரபாகரன் முதலமைச்சர் பதவி ஏற்க மறுத்து விட்டார்.
அடுத்ததாக 1987இல் பிராபாகரன், ஆண்டன் பாலசிங்கம் உள்ளிட்டோரை தில்லிக்கு தனி விமானத்தில் வரவழைத்து ராசீவ்காந்தி பிரபாகரன் அவர்களிடம் நேரடியாக பேசினார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு நீங்கள் முதலமைச்சர் ஆகுங்கள் என்று ராசீவ்காந்தி வலியுறுத்தினார். அப்போது பிரபாகரன் நாங்கள் கேட்பது தமிழீழ விடுதலை, இந்த ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு முதலமைச்சர் ஆனால் பதவிக்காக என் இனத்தை விற்று விட்டது ஆகும் என்று பிராபாகரன் மறுத்து விட்டார்.
தமிழ்நாட்டில் பிரபாகரன் அவர்களை தங்கள் தலைவர்களாகவும், வழிக்காட்டியாகவும் கூறிக்கொள்ளும் நண்பர்கள் அடிமைப் பெற்ற தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். அவர்கள் பிரபாகரனிடம் எதைக் கற்று கொண்டார்கள்? புரட்சி யாளர் பிரபாகரனை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்கான வணிக சின்னமாக பயன்படுத்தக் கூடாது.
புரட்சியாளர் பிரபாகரனிடமிருந்து தேசிய விடுதலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த இலட்சியப் பயணத்தில், கங்காணிப் பதவியாக முதலமைச்சர் பதவியை துட்சமாக கருதும் துணிச்சல் வேண்டும். கொள்கை பிடிப்பு வேண்டும். எத்தனை ஆண்டுகளில் தமிழ்த் தேசிய விடுதலை கிடைக்கும் என்று கணக்கு பார்க்க கூடாது. அடிமைப்பட்ட தேசத்தின் விடுதலைக்கு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போராட ஆயத்தமாக இருக்க வேண்டும்.
மாவீரன் முத்துகுமார் நினைவேந்தல் நிகழ்வில் மாற்று அரசியலான, தமிழ்த் தேசிய அரசியலை விரிவுபடுத்த வீச்சுபெறும்படி செய்ய உழைப்போம் போராடுவோம் என்று உறுதி ஏற்போம்”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். நிறைவில், தோழர் சுகந்தி பாபு கலந்து கொண்டோருக்கு, நன்றி தெரிவித்துப் பேசினார்.

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்