அரசியல் அதிகாரக் கொள்ளையர் இராம மோகனராவை கைது செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
Thursday, December 22, 2016
=====================================
அரசியல் அதிகாரக் கொள்ளையர் இராம
மோகனராவை கைது செய்ய வேண்டும்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
=====================================
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இராம மோகனராவ் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோத வழிகளில் பொருள் குவித்துள்ளார் என்ற செய்தியறிந்து, நடுவண் அரசின் வருமானவரித்துறை அவரது வீடு, அவர் மகன் வீடு, அவர் உறவினர்கள் வீடு ஆகியவற்றை நேற்று (21.12.2016) சோதனையிட்டு 5 கோடி ரூபாய் பெறுமான தங்கம், ரூ. 30 இலட்சம் புதிய 2,000 ரூபாய்த்தாள்கள் மற்றும் 43 ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றையெல்லாம்விட, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலக அறையையும் வருமானவரித்துறையினர் சோதனையிட்டுள்ளனர். இதுவரை தலைமைச் செயலாளர் அலுவலக அறையை வருமானவரித் துறையினர் சோதனையிட்ட நிகழ்வு நடந்ததில்லை! இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் மானம் கப்பலேறிய நிகழ்ச்சி இது!
தமிழ்நாட்டில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச் சொத்தைச் சூறையாடும் அரசியல் கொள்ளையர்களும் அதிகாரக் கொள்ளையர்களும் மிக அதிகம். அவர்கள் தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற ஆணவத்துடன் ஊழல் புரிவோர் ஆவர்.
வருமானவரிச் சோதனை நடத்தும் பா.ச.க. ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் அல்லர். ஊழல் பெரும்புள்ளிகள் அங்கேயும் ஏராளமாய் உள்ளனர். அனைத்திந்திய அளவில் ஊழல் கொள்ளையர்களின் வளர்ப்பு அதிகார மையமாகவும், பாதுகாப்பு அரணாகவும் பா.ச.க. ஆட்சி இருக்கிறது என்பது ஊரறிந்த செய்தி!
அனைத்திந்திய ஊழல் ஆட்சியாளர்கள் – தமிழ்நாட்டு ஊழல் ஆட்சியாளர்களிடையே முரண்பாடு வந்து ஒரு தரப்பினராவது மாட்டுவது ஆறுதல் அளிக்கிறது.
மணற்கொள்ளைதான் அ.தி.மு.க. – தி.மு.க. ஆட்சியாளர்களின் தங்கச்சுரங்கம்! அதற்கான ஆட்சியதிகார முகவர்கள்தாம் இராமமோகனராவ் போன்ற ஊழல் பெருச்சாளிகள்!
தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்திற்குள் படைத்துறையினர் துணையுடன் நடுவண் அதிகாரிகள் புகுந்து சோதனையிட்டது, தமிழ்நாட்டு அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்தான். ஆனால் தமிழ்நாட்டு உரிமை – கூட்டாட்சிக் கோட்பாடு என்ற உயர்ந்த உரிமைச் சொற்கள் ஊழல் கொள்ளையர்களின் பாதுகாப்புக் கவசம் ஆகிவிடக் கூடாது என்பதே நமது கவலை.
அ.தி.மு.க. போன்ற கட்சிகள் இந்திய அரசு ஆதிக்கத்திற்குக் கங்காணி வேலை பார்ப்பவைதான். அவை தமிழ்நாட்டு அரசியல் உரிமைக்காக – கூட்டாட்சிக் கோட்பாட்டிற்காகப் போராடுபவை அல்ல.
தமிழ்நாட்டின் இறையாண்மை – அரசுரிமை ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான் நடக்கின்றன! அவை அப்போராட்டங்களை நடத்துவதில்லை.
இப்போதும், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள புதிய சூழலைப் பயன்படுத்தி பா.ச.க. பரிவாரங்கள் தமிழ்நாட்டு அரசியல் வெளியை ஆக்கிரமிக்க நடத்தும் போராட்டங்களை, அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளுக்கு வெளியேதான் நடத்தக் கூடிய சூழல் உள்ளது.
எனவே, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் தலைமைச் செயலாளர் இராமமோகனராவ் ஊழல் மீது வருமானவரித்துறை எடுத்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. அத்துடன் நில்லாமல் மேற்படி இராமமோகனராவ் மீது வழக்குப்பதிந்து, அவரைச் சிறையில் அடைக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Labels: அறிக்கைகள்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்