"காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப் போராட்டம் - தேதி மாற்றம்! " -- தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
Sunday, March 12, 2017
========================== =====
காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப்
போராட்டம் - தேதி மாற்றம்!
========================== =====
தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!
========================== =====
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், முழுமையான வறட்சி நிவாரணப் பணிகளைச் செய்தல், காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் ஆகிய மிக மிக இன்றியமையாக் கடமைகளில் தமிழ்நாடு அரசு செயலற்ற நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 14.03.2017 அன்று தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நெடுவாசல் போராட்டத்தையொட்டி, இப்போராட்டம் 28.03.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் என்றும், தொடர் போராட்டமாக அம்முற்றுகை நடைபெறும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழவர் பெருமக்களும், உணர்வாளர்களும் 28.03.2017 முற்றுகைப் போராட்டத்திற்குத் திரளாக வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போராட்டக் கோரிக்கைகள்
-------------------------- -----------------
1. தமிழ்நாடு அரசே, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கர்நாடகம் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து!
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடு!
3. இந்திய அரசிடம், வறட்சி நிவாரண சிறப்பு நிதி பெற்று சாகுபடி இழந்த உழவர்களுக்கு 1 ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கு. உழவுத் தொழிலாளர்களுக்கு 1 குடும்பத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கு. மக்களுக்குக் குடிநீர் கிடைக்க உறுதி செய்!
அனைத்துக் கால்நடைகளுக்கும் தீவனமும் குடிநீரும் கிடைக்க ஏற்பாடு செய்!
4. சாகுபடி அழிந்ததைக் கண்டு உயிரிழந்த உழவர்கள் அனைவரின் குடும்பத்திற்கும் தலா 15 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கு!
5. இந்திய அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள் பெற்ற கடன் அனைத்தையும் எந்த வரம்புமின்றித் தள்ளுபடி செய்!
6. தனியார் கடன் வசூலை ஓராண்டிற்குத் தள்ளி வை!
7. காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! காவிரிச் சமவெளியில் மீத்தேன், எரிவளி, பெட்ரோலியம், நிலக்கரி உள்ளிட்ட எந்தக் கனிம வளமும் எடுப்பதற்குத் தடை போடு! முற்றிலுமாக மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்து!
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
Labels: காவிரி உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்