"அரிமாக்கள் முழங்காத காட்டில் நரிகள் ஊளையிடும்!" -- தோழர் பெ. மணியரசன்
Tuesday, December 26, 2017
========================== ========
"அரிமாக்கள் முழங்காத காட்டில்
நரிகள் ஊளையிடும்!"
========================== ========
தோழர் பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
========================== ========
செயலலிதா இறந்துவிட்டதால், கருணாநிதி முடங்கி விட்டதால் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று கணிப்பது மேனாமினுக்கித்தனம். சிந்தனையாளர்கள் போல் காட்டிக் கொண்டு நுனிப்புல் மேய்வது.
செயலலிதாவும் கருணாநிதியும் துடிப்போடு செயற்களத்தில் உலா வந்தபோதே வரலாற்றளவில் செத்துப் போனவர்கள்! அவர்கள் தலைமை தாங்கி வழி நடத்திய போதே அவர்களின் கழகங்கள் பல முறை தோற்றன என்பதற்காக மட்டும் இதைக் கூறவில்லை.
தங்களது கையூட்டு - ஊழல் செயல்பாடுகளால், தன்னல அதிகார வெறியால், வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுத்து வாக்கு வாங்கும் ஒழுக்கக் கேட்டால், சொந்தக் குடும்ப அரசியலால், சொந்த மில்லாத குடும்ப ஆதிக்கத்தால் - அக்குடும்பங்களின் அரசியல் கொள்ளைகளால், மக்களின் பலவீனத்தை மேலும் வளர்த்து இலவசங்களை அள்ளி வீசி வாக்கு வாங்கும் ஊழல் உத்திகளால், மக்களின் முன் உருப்படியான இலட்சியங் களையோ கொள்கைகளையோ முன்வைக்காமல் தங்களின் சொந்தப் பகை அரசியலை மட்டுமே முன்வைத்த கேவலத்தால் துடிப்போடு செயல்படும்போதே அரசியல் சாவடைந்தவர்கள் கருணாநிதியும் செயலலிதாவும்!
கருணாநிதியும் செயலலிதாவும் தமிழர்களின் என்னனென்ன உரிமைகளைக் காத்தார்கள் அல்லது மீட்டார்கள்? காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, முல்லைப் பெரியாறு அணையின் முழு உரிமை, பாலாற்று உரிமை, தென்பெண்ணை உரிமை, கல்வி உரிமை, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான வேலை உரிமை, தமிழ்நாட்டின் தன்னுரிமை, தமிழை முழு ஆட்சி மொழி, கல்விமொழி, நீதிமொழி ஆக்குதல், சாதி ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு சமத்துவ நிலையில் தமிழ்ச் சமூகத்தை மறுவார்ப்பு செய்யும் சமூகநீதி, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக வேளாண்மை மாற்றப்படாமல் தடுத்தல், கூடங்குளம் அணு உலை தடுத்தல், இந்தியாவின் எண்ணெய் எரிவெளிக் கழகம் (ONGC) மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கனிமவள வேட்டைக்காடாக தமிழர் விளை நிலங்களை மாற்றும் இந்திய ஏகாதிபத்தியத்தின் நச்சுத்திட்டங்களைத் தடுத்தல், மணல் கொள்ளை தடுத்தல், மதுவிலிருந்து மக்களைக் காத்தல் போன்ற இன்றியமையாப்பணிகளில், கடமைகளில் கருணாநிதியும், செயலலிதாவும் எதைச் சாதித்தார்கள்?
இவர்கள் களத்தில் இல்லாததால் மேற்கண்ட உரிமைகளை மீட்பதிலும், தீமைகளைத் தடுப்பதிலும் புதிதாக வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதா? இவர்கள் இருவரும் தமிழினத் தலைவர், புரட்சித் தலைவி என்று பொருந்தாத மகுடங்களை மாட்டிக்கொண்டு “அரச உலா” வந்த காலத்தில்தான் இவ்வுரிமைகள் பறிக்கப் பட்டன; இத்தீமைகள் தமிழ்நாட்டில் குடி புகுந்தன!
கருணாநிதியும் செயலலிதாவும் முழு உடல் நலத்தோடும் மக்கள் செல்வாக்கோடும் அரசியல் களத்தில் உலா வந்த காலத்தில் தான் நம் ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்ய இந்திய அரசு, சிங்கள அரசுக்கு துணை நின்றது.
மணற்கொள்ளையிலும், மதுக் கொள்ளையிலும் பங்கு வெட்டிக் கொண்டவர்கள் செயலலிதாவும் கருணாநிதியும்! உரிமைகள் இழந்த தமிழ்நாட்டில் ஊழல் பேரரசு நடத்தியவர்கள் கருணாநிதியும், செயலலிதாவும். அதிகாரிகளுக்கும் பங்குவெட்டி அவர்களை ஊழல் பங்காளிகள் ஆக்கிக் கொண்டார்கள். இவர்களால் தமிழ்நாட்டு அரசியல் மட்டு மின்றி ஆட்சிக் கட்டமைப்பும் ஊழல் பெருச்சாளி களின் கூடாரமாகி விட்டது.
தமிழ்நாட்டு அரசியலில் உண்மையான வெற்றிடம் - கருணாநிதியும் செயலலிதாவும் தெம்பாக உலா வந்தபோதே ஏற்பட்டுவிட்டது அதனால்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இரசினிகாந்த் கட்சி தொடங்கத் திட்டமிட்டார். அப்போதும் தயங்கினார். இப்போதும் தயங்குகிறார்.
நடிகர் விஜயகாந்து துணிந்து கட்சி தொடங்கி, தி.மு.க.வுக்கும், அதி.மு.க.வுக்கும் மாற்று என்ற அளவில் முன்னணியில் நின்றார். எட்டு முதல் பத்து விழுக்காடு வாக்கு வாங்கினார். சட்டப்பேரவையில் அதிகாரம் பெற்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். இதெல்லாம் எப்போது நடந்தன? செயலலிதாவும் கருணாநிதியும் சிறு வெற்றிடம் கூட இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் பூதங்களாக அடைத்துக் கொண்டு நின்றார்கள் என்று சிந்தனைச் சோம் பேறிகள் இப்போது “கணிப்பு” சொல்லும் காலத்தில்! அப்போதுதான் நடிகர்கள் பாக்கியராசு, டி. இராசேந்தர், இராமராசன், கார்த்திக்., சரத்குமார் போன்றவர்கள் கட்சி தொடங்க துணிச்சல் பெற்றார்கள். எப்படி? கருணாநிதி மற்றும் செயலலிதா மீது வெகு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு இந்நடிகர்கள் கட்சி தொடங்கும் துணிச்சல் பெற்றார்கள்.
இவ்விருவரும் செல்வாக்கோடு வலம் வந்த காலத்தில் தான் சாதி, மதம் ஆகியவற்றை அடித் தளமாகக் கொண்டு புதிய புதிய கட்சிகள் பல தோன்றின. அவற்றுடன் தி.மு.க.வும், அதி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொண்டன
இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி உட்புதைந்துள்ளது. தி.மு.க. மற்றும் அதி.மு.க. அரசியலில் ஏமாற்றமடைந்த மக்களிடையே புதியதாக சாதிக் கட்சிகள், மதக் கட்சிகள். நடிகர் கட்சிகள் தோன்றின. எல்லா மக்களுக்கும் பொதுவான இலட்சியம், நடைமுறைக் கொள்கை ஆகியவற்றைக் கொண்ட கட்சிகள் ஏன் தோன்றவில்லை? அல்லது தோன்றினாலும் ஏன் வேர்ப் பிடிக்கவில்லை?
தி.மு.க. மிக உயர்ந்த இலட்சியங்களைப் பேசிய கட்சி. தமிழ்நாடு உள்ளிட்ட திராவிட நாட்டு விடுதலை கோரிய கட்சி. பிராமணிய எதிர்ப்பு, சாதியற்ற சமூகம் நிகரமை (சோசலிசம்), பெண்ணுரிமை, தமிழின் வரலாற்றுப் பெருமிதங்கள், தமிழ்மொழி உரிமை, இந்தி எதிர்ப்பு, காங்கிரசு எதிர்ப்பு, ஒன்றே குலம் - ஒருவனே தேவன் எனப் பல முற்போக்கு இலட்சியங்களையும் கருத்துகளையும் பேசிய கட்சி தி.மு.க.
இவற்றையெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஒவ்வொன்றாகக் கைவிடத் தொடங்கியது. ஆட்சிக்கு 1967இல் வந்த பின் எல்லா முற்போக்கு கொள்கை களையும் கைவிட்டது. மட்டுமின்றி சாதி, சிறுபான்மை மதம் ஆகியவற்றை வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொள்வது காங்கிரசு, பாசக உள்ளிட்ட இந்திய ஏகாதிபத்திய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் அரசில் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வது என்ற நிலைக்கு தாழ்ந்து சீரழிந்தது தி.மு.க. சீரழிந்த தி.மு.க.வில் பிளவுபட்ட ஒரு படிகமாக உருவானது அ.தி.மு.க.
இப்பின்னணியில் சாதி - மதக் கட்சிகள் பல தோன்றின. நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு தூண்டுகோல் எது? அதுவும் தி.மு.க. தான்.
1950களில் நாட்டு விடுதலை இயக்கமாக மேடைகளில் முழங்கி - கட்டுரைகளில் எழுதி வந்த காலத்திலேயே அதன் தலைவர் அண்ணா திரைப்படக் கதை வசனம் எழுதி வந்தார். நடிகர்கள் எம்ஜிஆர், எஸ்.எஸ். இராசேந்திரன் ஆகியோரைப் புரட்சி நடிகர் என்றும் இலட்சிய நடிகர் என்றும் அழைத்தார். தணிக்கை இல்லாமல் மூன்று திரைப்படங்களை அனுமதித்தால் நாங்கள் அவற்றின் மூலம் தனித் திராவிட நாட்டை அடைந்துவிடுவோம் என்றார்.
“சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே அக்கா வந்து வாங்கித் தர” என்று கேட்டார் பாவேந்தர். அண்ணா மூன்று திரைப்படங்கள் மூலம் நாட்டு விடுதலை பெறுவேன் என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 1962ல் எஸ்.எஸ். இராசேந்திரனை தி.மு.க. வேட்பாளராக தி.மு.க. நிறுத்தியது அவரும் வென்றார். 1967 பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் தேர்தல் நிதி தரவேண்டாம். அவர் ஊர் ஊராகப் பரப்புரைக்குப் போனால் போதும். எம்ஜிஆர் முகத்தைக் கண்டால் முப்பதாயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும், அவர் பேச்சைக் கேட்டால் பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என்றார் அண்ணா.
மக்கள் முன் இலட்சியங்களை வைப்பதைவிட கவர்ச்சியை வைப்பதில் ஆர்வம் காட்டினார் அண்ணா.
கலைஞர் கருணாநிதி, திரைப்படம் பாதி அரசியல் பாதி என்று வளர்ந்தவர். எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்கள் - தி.மு.க.வின் இணை அமைப்பாகவே வளர்க்கப்பட்டன. கருணாநிதி முதல்வர் ஆனபின் - எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட, தம் மகன் மு.க. முத்துவை நடிகராக்கி, அவருக்கான இரசிகர் மன்றங்களைத் திமு.க.வினரைக் கொண்டு திறக்கச் செய்தார். இருவருக்குமான முரண்பாடு முற்றி மோதலாகி, தனிக்கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர். அவர் ஆட்சியைப் பிடித்தார்.
எம்ஜியாரோடு கதாநாயகியாக நடித்த ஒரே தகுதியை முதன்மைப்படுத்தி செயலலிதாவும் “புரட்சித் தலைவி” ஆனார்; முதலமைச்சர் ஆனார். “தன் காலில் மண்டியிட்டுக் கும்பிடும் “தன்மான அரிமாக்களாக” திராவிடத் தளபதிகளை உருவாக்கினார். செயலலிதா பிறப்பால் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தப் பின்னணியில்தான் தெலுங்கு நாட்டைச் சேர்ந்த திருட்டுப் பையன் நடிகர் விசாலுக்கும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்க ஆசை அலை பாய்கிறது! அவர் ஆந்திராவில் கட்சி தொடங்க முடியாது.
அங்கே ஏற்கெனவே என்.டி. இராமாராவ் என்ற மாபெரும் செல்வாக்கு பெற்ற நடிகரைத் தெலுங்கு மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்து கட்சி தொடங்கிய நடிகர் சிரஞ்சீவியைக் கட்சியைக் கலைக்கும்படி செய்து விட்டார்கள்.
நடிகர் இரசினிகாந்து அவருடைய கன்னட நாட்டில் கட்சி தொடங்க முடியாது. இரசினிகாந்தை விடக் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இராசுகுமார் அங்கு கட்சி தொடங்கவில்லை. எல்லாக் கட்சிக்கும் பொதுவான கன்னட முகமாக மட்டும் விளங்கினார். ஏமாளிகள், இளிச்சவாயர்கள் தமிழர்கள் என்ற துணிச்சலில் இங்கு கட்சி தொடங்க முயல்கிறார் இரசினிகாந்து!
கேரளத்தில் மலையாள உச்ச வீண் மீனாக (சூப்பர் ஸ்டார்) இருந்த காலத்தில் பிரேம் நசீர் கட்சி தொடங்கினார். அந்நாட்டுக் கட்சித் தலைவர்களும் அறிவுத் துறையினரும் சான்றோரும் அறிவுரை கூறி அவர் கட்சியைக் கலைக்கும்படிச் செய்தனர். ஆனால் கேரள நடிகர் தல அசீத், தமிழ்நாட்டில் கட்சி தொடங்க வேண்டும் என்று அவர் இரசிகர்கள் அழைக்கிறார்கள்.
இந்தித் திரை உலகின் மிகப்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் அரசியலில் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஆனால் தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாக அரசியலை விட்டு விலகி விட்டார்.
தமிழ்நாட்டில் கமலகாசன் பெயர் அறிவிக்காமல் கட்சி தொடங்கிவிட்டார். அடுத்து விசால் கட்சி தொடங்க முதல் வேட்புமனு போட்டுவிட்டார். இதெல்லாம் யாரை நம்பி? ஏமாளித் தமிழர்களை நம்பி!
இலட்சியம், கொள்கை எதுவுமில்லாமல் கானல் நீர் வசனங்கள் பேசியும், திரைப்படக் கவர்ச்சி காட்டியும் தமிழ்நாட்டில் கட்சி நடத்தலாம், ஆட்சி நடத்தலாம் என்பதை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரங்கேற்றியுள்ளன. இந்தச் சீரழிவின் எச்சங்கள்தான் இப்போது தலை தூக்கும் அரசியல் நடிகர்கள்!
இந்தச் சீரழிவிற்கெல்லாம் மூலகாரணம் தி.மு.க., அ.தி.மு.க. என்றாலும் அவை மட்டுமே மொத்தக் காரணங்கள் ஆகிவிடுமா? சாதி, மத சாய்மானங்களும் ஊழலை ஏற்றுக் கொள்ளும் உளவியலும், வாய்வீச்சு வசனங்களில் வசமிழக்கும் பலவீனமும் நம் தமிழ் மக்களில் கணிசமானோர்க்கு இருப்பதும் முகாமையான காரணமில்லையா? காளையின் முதுகில் புண் இருந்தால் காக்கை வந்து கொத்தும். பூனை கோழை ஆகிவிட்டால் பொண்ணு கேட்கும் எலி!
வினாவைக் குழப்பில்லாமல் கேள்; விடையைக் குழப்பமில்லாமல் துல்லியமாகச் சொல் என்று மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தம் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த தொல்காப்பியன் மரபில் வந்த தமிழினம் இன்று இளிச்சவாய் இனமாய் மாறலாமா? எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிக் கொடுத்த பேராசான் திருவள்ளுவர் மரபில் வந்த தமிழர்கள் ஏமாறலாமா?
ஒரே நேரத்தில் முப்பெரும் வேந்தர்களைக் கொண்டிருந்த இனம் தமிழினம்! மன்னர்கள் பலரின் கீழ் தமிழ் மண் இருந்தாலும், இரண்டயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எங்கள் தாய்நாடு தமிழ்நாடு - தமிழகம் என்று சங்க இலக்கியங்களில் அறிவித்த இனம் தமிழ் இனம்!
அந்தத் தமிழினம் இன்று மேனாமினுக்கி வசனங்களிலும், அரிதார அரசியலிலும் மயங்கி மண்டியிட்டுக் கிடப்பதேன்?
இன்று நம் தமிழர்களில், ஆழமாகச் சிந்திக்கும் அறிவாளிகள் இல்லையா? அனைத்துத் தொழில் நுட்பங்களையும் கற்ற விற்பன்னர்கள் இல்லையா? எது வந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் மிகு இளைஞர்கள் இல்லையா? இலட்சிய ஏந்தல்கள் இல்லையா? இருக்கிறார்கள்; இலட்சோப லட்சம் பேர் இருக்கிறார்கள்! பிறகேன் தமிழ்நாட்டில் இந்த அரசியல் அவலங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன?
அயல் இனங்களைச் சேர்ந்த நடிகர்கள் தமிழ்நாட்டைத் தங்களின் அரசியல் வேட்டைக்காடாக ஏன் தேர்வு செய்கிறார்கள்? தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் திரைக் கவர்ச்சியை மூலதனமாக்கி அரசியல் வணிகம் செய்யத் துடிக்கிறார்களே? ஏன்? ஏன்?
நீங்கள் வெறும் பார்வையாளர்களாக - விமர்சகர் களாக ஒதுங்கி விடுவதால் இந்தப் பதவி வேட்டையாடிகள் - பண வேட்டையாடிகள் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டில் அரசியல் களத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். புதிது புதிதாக யார் யாரோ தமிழர்களுக்குத் தலைமை தாங்க முண்டாசு கட்டுகிறார்கள்! அரிமாக்கள் குரலெழுப்பாத காட்டில் நரிகள் ஊளை இடும்!
“எல்லாம் சிறப்பாக நடைபெற வேண்டும்; அதை யாரோ ஒரு கதாநாயகன் வந்து நிறைவேற்றித் தர வேண்டும்” என்ற உளவியல் வெறும் கவர்ச்சி சார்ந்தது மட்டுமல்ல; தான் பாதுகாப்பாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற உள் மனத்தின் அச்சம்!
தமிழ்த்தேசியம் பேசியதற்காக நெல்சன் மண்டேலா போல் இங்கு யாரும் 27 ஆண்டுகளாகச் சிறையில் கிடக்கிறார்களா? நெஞ்சில் குண்டேந்தி, நஞ்சில் குப்பி கட்டி விடுதலைப்புலிகள் போல் போர் புரிய அழைக்கிறோமா?
இலட்சியத் தெளிவு பெற்று இலக்கிற்கு இட்டுச் செல்லும் தலைமையை அடையாளம் கண்டு அதனோடு அணி சேர வேண்டும் என்கிறோம். இக் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்கிறோம். இயன்றோர் அறப்போராட்டங்களுக்கு வாருங்கள் என்கிறோம்.
ஒருவர் உண்மையிலேயே இலட்சியம் பேசுகிறாரா என்பதை அவரது நடைமுறையோடு உரசிப் பார்த்துதான் தெளிவு பெற வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொள்வது பாதுகாப்பானது என்று குறுக்கு எண்ணம் கொள்ளாமல் கொள்கை யாளர்களோடு அணிவகுக்க வேண்டும். வாள் வீச்சில் வெற்றி பெற்ற இனத்தில் வந்தவர்கள் வாய்வீச்சில் ஏமாறக் கூடாது!
மெய்யைவிட பொய் கவர்ச்சியானது. உண்மையான வெள்ளியைவிட எவர்சில்லர் பளபளப்பானது!
இளைஞர்கள் சிந்தனைச் சோம்பலை முறிக்க வேண்டும். முதல் துணிச்சல் சரியானதைச் சிந்திக்கும் துணிச்சல். அடுத்த துணிச்சல் அதை வெளிப்படுத்தும் துணிச்சல். அதற்கு அடுத்த துணிச்சல் அதற்காக நேரடியாகப் போராட்டங்களில் ஈடுபடுவது அல்லது கருத்துப் பரப்பலில் ஈடுபடுவது அல்லது முகம் காட்டாமல் - அதற்காகப் பணிகள் செய்வது!
ஒற்றைக் கதாநாயகத் தலைமை கொண்ட அரசியலால் தமிழ்நாடு சீரழிந்தது போதாதா? இனியும் சீரழிய வேண்டுமா?
வரப்போகும் திரை நடிகர்களை மட்டுமல்ல, இப்போதுள்ள அரசியல் நடிகர்களையும் அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்க வேண்டும்.
அரிமாக்கள் முழக்கமிடாத காட்டில் நரிகள் ஊளையிடும்! களத்திற்கு வாருங்கள்! நமது இலட்சியக் களம் அறப்போர்க் களம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2017 திசம்பர் 16-31 இதழில் வெளியான கட்டுரை இது).
Labels: கட்டுரைகள், தமிழ்த் தேசியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்