“தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா?” -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
Saturday, October 14, 2017
========================== ============
“தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா?”
========================== ============
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
========================== ============
தமிழ்த்தேசியம் வளர வளர அதில் திரிபுகளும் வந்து குறுக்கிடுகின்றன. எந்தக் கோட்பாட்டிலும் கொள்கை யிலும் திரிபுகள் வரத்தான் செய்யும். அவற்றை எதிர் கொண்டு சரியான திசையில் அதைச் செலுத்துவது அக் கோட்பாட்டை சரியாக முன்னெடுப் போரின் பணியா கும்!
காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே மார்க்சியத்தில் திரிபுகள் குறுக்கிட்டன. காரல் மார்க்ஸ் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த ஒரு சோசலிஸ்ட்டுக் குழுவின ருடன் கடிதப் போக்குவரத்து வைத்திருந்தார். அக்கழுவினர் தங்களை மார்க்சியவாதிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட வரையறுப்பில் காரல் மார்க்ஸ் நிலைபாட்டை மறுத்து ஜெர்மன் சோசலிஸ்ட்டுகள் மார்க்சுக்கு எழுதினர். அவர்களின் தருக்கத்தை மறுத்த காரல் மார்க்ஸ், நீங்கள்தான் மார்க்சியவாதிகள் என்றால் நான் மார்க்சியவாதி இல்லை என்று விடை எழுதினார்!
எது தமிழ்த்தேசியம்?
-------------------------- -------
இப்போது தமிழ்த்தேசியத்திற்கு, சிலர் வெவ்வேறு விளக்கங்கள் கூறு கின்றனர்.
“தமிழ்த்தேசியம்’’ என்பதற்கான வரைவிலக்கணம் ஒன்றாகத்தான் இருக்க முடியும். தமிழ்த்தேசியத் திற்கானப் போராட்டத்தின் ஊடாகச் செயல்படுத்த வேண்டிய சமூகத் திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பிற்கும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் தமிழ்த்தேசியம் என்பதன் அடிப்படை வரைய றுப்பு ஒன்றுதான்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
எமது தேசிய மொழி தமிழ்,
எமது தேசிய இனம் தமிழர்,
எமது தேசம் தமிழ்த்தேசம்,
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு!
இந்த வரையறுப்பில் மாறுபடும் ஒருவர் தமிழ்த் தேசியராக இருக்க முடியாது!
தங்களின் தேசிய இனம் இந்தியர், திராவிடர் என்று சொல்லிக் கொள்வோர் தமிழராக இருக்கலாம்; தமிழ்த்தேசியராக இருக்க முடியாது!
தமிழர் என்பது பிறப்பு அடிப்படையில் உள்ள அடையாளம்! தமிழ்த்தேசியர் என்பது தமிழ்த்தேசம் சார்ந்தது. தமிழ்த்தேசத்திற்கு அதாவது தமிழ்நாட்டிற்கு உரிய மக்கள் எல்லாம் தமிழ்த்தேசியராக இருக்கத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள். ஆனால் அவர்கள் தமிழ்த்தேசியராக இருக்கிறார்களா இல்லையா என்பது அவரவர் நிலைபாட்டைப் பொறுத்தது.
ஒருவர் தமிழ்த்தேசியத்தை மறுத்து இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, இந்தியத்தேசியராகச் செயல்பட்டால் அவர் தமிழ்த்தேசியர் அல்லர். ஆனால் பிறப்பு அடிப்படையில் அவர் தமிழராக இருக்கலாம்; பிறப்பு அடிப்படையில் பிரபாகரன் தமிழர்; காட்டிக் கொடுத்த கருணாவும் தமிழர்தான். அதை நாம் மாற்ற முடியாது. பிரபாகரன் தமிழீழத்தேசியர், கருணா சிங்களத் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்!
மரபினம் - தேசிய இனம்
-------------------------- -------------
திராவிடர் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இரண்டுங்கெட்டானாக இருக்கிறார்கள். இந்தியன் என்பதற்காவது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு நாடும் - திணிக்கப்பட்ட ஒரு மொழியும் கூறப்படுகிறது. திராவிடர் என்பதற்கு வரலாற்றில் எக்காலத்திலும் ஒரு நாடு கிடையாது; அதற்கான ஒரு பொது மொழி யும் கிடையாது. திராவிடர் என்ற பெயரில் மரபினமும் (Race) கிடையாது; தேசிய இனமும் (Nationality) கிடையாது. ஆதலால்தான் திராவிடர் என்பதை இரண்டுங்கெட்டான் என்கிறோம். திராவிடத்தையும் திராவிட இனத்தையும் இன்றும் வலியுறுத்துவோர் ஒன்று குழப்பவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது வேறு ஏதோ உள்நோக்கம் கொண்டோராக இருக்க வேண்டும்.
தெலுங்கு, கன்னடம், உருது, சௌராட்டிரம், மராத்தி பேசும் மக்கள் முந்நூறு நானூறு ஆண்டு களாகத் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் தமிழ்த்தேச மக்கள், தமிழ் மக்கள்! அவர்களுக்கு வேறு தாயகம் கிடையாது. அவர்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் வேறு தாயகங்களில் வாழலாம். ஆனால் இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள். அவர்கள் தங்களைத் தமிழராகக் கருதிக் கொள்ள முழு உரிமை உண்டு!
“மரபினம்” என்பதற்கும் தேசிய இனம் என்பதற்கும் சிறு வேறுபாடு உண்டு! இனக்குழு என்ற பழங்குடி நிலையிலிருந்து வளர்ச்சி பெற்று மொழியும் மக்கள் பெருக்கமும் கொண்டவர்கள் மரபினம். வெவ்வேறு மரபு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடிகள் வரலாற்று வழியில் ஒருங்கிணைந்து ஒரு தேசிய இனம் ஆகின்றனர். இவ்வாறு உருவான தேசிய இனத்திற்கு “தமிழர்” என்ற பெயர் மட்டும் எப்படி வருகிறது?
தன்னியல்புப்படுத்தல் (Assimilation)
-------------------------- -------------------------- --
மரபு வழிப்பட்ட தமிழ் மொழித் தாயகமாகவும், மரபு வழிப்பட்ட தமிழர்களை மிகப் பெரும்பான்மை மக்களாகவும் கொண்டிருப்பதால் இது தமிழ்த்தேசம் ஆகிறது. வரலாற்று வழியில் இங்கு வந்து வாழ்ந்து இணைந்துவிட்ட பிறமொழி பேசும் மக்களும் தமிழ்த்தேசிய இன மக்கள் ஆகின்றனர்.
பிறமொழி பேசுவோர் எவ்வாறு தமிழ் மக்களாக - தமிழர்களாக உருவளர்ச்சி பெறுகின்றனர்? தங்களின் நிரந்தரத் தாயகமாகத் தமிழ்நாட்டை அவர்கள் ஏற்று வாழ்கின்றனர்; தங்களின் பொது மொழியாக, பேச்சு மொழியாக, கல்வி மொழியாக, ஆட்சி மொழியாகத் தமிழை ஏற்றுச் செயல்படுகின்றனர். வரலாற்று வழிப் பட்ட இந்த இயல்வளர்ச்சி (Process), பிறமொழி யைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்களைத் தமிழ் மக்களாக தன்னியல்புப்படுத்தி (Assimilation) விடுகிறது.
உலக நாடுகளில் தேசிய இன உருவாக்கம் இப்படித் தான் அமைந்துள்ளது; தேசங்கள் இவ்வாறான கட்டுமானத்தைத்தான் பெற்றுள்ளன. அந்த வரலாற்று விதிக்குத் தமிழ்நாடு விதிவிலக்கன்று!
தமிழர் - தமிழ்த்தேசிய இன மக்கள் - தமிழ் மண்ணின் மக்கள் என்பதற்கு நாம் ஒரு வரையறை வைக்க வேண்டியுள்ளது. மொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய பிற மொழியாளர் அனைவரும் வெளியார் என்று வரையறுக்கிறோம். அதற்கு முன் தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட பிறமொழி பேசும் மக்கள் தமிழ் மக்களே!
தமிழ் மொழியிலிருந்து பிரிந்தவைதாம் தெலுங்கு, கன்னட மொழிகள். அந்த வகையில் “தமிழர்” என்ற மரபிலிருந்து பிரிந்தவர்கள்தாம் தெலுங்கர், கன்னடர் என்ற ஓர் உறவும் கூடுதலாக இருக்கிறது. அந்த மரபினத்தின் பெயர் “தமிழர்” என்பதுதான்; “திராவிடம்” என்பது அன்று! “திராவிடர்” என்று ஒரு மரபினம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்று எதுவுமில்லை. மனுதர்மம் மற்றும் வட மொழி ஆரியப் புராணங்கள் மட்டுமே “திராவிட” என்று உச்சரித்துள்ளன.
தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி
-------------------------- -----------------------
தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின் தெலுங்கர் எதிர்ப்பை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கு அவ்வாறான எதிர்ப்புணர்ச்சி ஏற்படக் காரணங்கள் யாவை என்று ஆராய வேண்டும். காரணங்களே இல்லாமல், இந்த எதிர்ப்புணர்ச்சி உருவாகவில்லை!
சற்றொப்ப நானூறு ஆண்டுகளாக தெலுங்கு மன்னர்கள் தமிழ்நாட்டைப் பிடித்து அதன் பெரும் பகுதியை ஆட்சி செய்தார்கள். அதனால் பெரும் பெரும் நிலக்கிழார்களாகவும், சமீன்தார்களாகவும் பாளையப் பட்டு ஆட்சியாளர்களாகவும் தெலுங்கர்கள் உருவா னார்கள்.
விசய நகரத் தளபதிகள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு தெலுங்கும் சமற்கிருதமும் கோலோச் சின. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தமிழிசைப் புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கிசை தமிழ்நாட்டுக் “கச்சேரிகளை” ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
திருவையாற்றில் நடக்கும் தியாகராசர் இசை விழாவில் தண்டபாணி தேசிகர் தெலுங்கில் பாடாமல் தமிழில் பாடினார் என்பதற்காக - அவர் பாடி முடித்த பின் அம்மேடையைக் கழுவித் “தூய்மை”ப்படுத்தி னார்கள் பிராமணர்கள்! பெங்களூருவில் இசை நிகழ்ச்சியில் எம்.எஸ். சுப்புலட்சுமி தமிழிலும் பாடினார் என்பதற்காகக் கன்னடர்கள் கல்லெறிந்தார்கள்.
தெலுங்கு பேசுவோரில் உள்ள மேல் சாதியாரும் பிராமணர்களும் தமிழ்நாட்டின் ஆளும் வர்க்கமாக _- ஆளும் “இனமாக” விளங்கினார்கள்.
பிரித்தானியக் காலனி ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டபோது, அது உருவாக்கிய மாகாணப் பிரிவினையில், இன்றுள்ள முழு ஆந்திரப்பிரதேசமும் சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டது. தமிழர் எண்ணிக்கைக்குச் சமமாகத் தெலுங்கர் எண்ணிக் கையும் இருந்தது.
இந்தப் பின்னணியில் தெலுங்கரான பி.ட்டி. தியாகராயர் தலைமையில் நீதிக்கட்சி சென்னையில் தொடங்கப்பட்டது. ஆந்திரத்தின் சமீன்தார்கள், நிலக்கிழார்கள்தான் நீதிக்கட்சியில் மேலாதிக்கம் செலுத்தினர். பிரித்தானிய அரசு நடத்திய சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
சுப்பராயலு ரெட்டியார் என்ற தெலுங்கர் சென்னை மாகாணத்தில் 1920இல் நீதிக்கட்சி ஆட்சியின் முதல் முதலமைச்சர் ஆனார். அடுத்து, பனகல் அரசர், முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர் என்று நீதிக்கட்சி முதலமைச்சர்கள் தெலுங்கர்கள்!
ஆந்திரம் பிரியாத நிலையில் 1946 - 1947இல் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக்காரர் தங்குத்தி பிரகாசம் முதலமைச்சர்! விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாகாணத்தின் காங்கிரசு முதல் அமைச்சர்களாக - தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்கு பேசும் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா!
தி.க.வினரும் தி.மு.க.வினரும் தமிழர் இன அடையாளத்தை மறைக்கும் வகையில், “திராவிடர்” என்ற ஆரியச்சார்பான ஓர் இன அடையாளத்தைத் தமிழர்கள் மேல் சுமத்தினார்கள். இன்றுவரை முழுமையாகத் தமிழர் இன அடையாளத்தை மீட்க முடியாமல், திராவிடச் சேற்றில் சிக்கிக் கொண்டுள் ளோம்.
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களும் சேர்ந்தது திராவிட நாடு என்று தி.க., தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள்; எழுதினார்கள்! ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் “திராவிடர்” என்ற பேச்சே கிடையாது! அந்தக் கூச்சல் தமிழ் மண்ணில் மட்டுமே ஒலிக்கிறது. ஆந்திர நடிகர் “தெலுங்கு தேசம்” என்றுதான் கட்சி தொடங்கினார்.
புதிதாகத் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய நடிகர் விசயகாந்தோ, திராவிடப் பெயரைத் தம் கட்சிக்கு வைத்தார். விசயகாந்த் தாய்மொழி தெலுங்கு என்பதால் நாம் அவரை அயலாராகப் பார்க்கவில்லை. ஆனால் அவர் உளவியல் எப்படிச் செயல்படுகிறது, தெலுங்கு தேசம் தொடங்கிய நடிகர் என்.டி. இராமாராவ் உளவியல் எப்படிச் செயல்பட்டது என்று தமிழ் இளைஞர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தெலுங்கு தேசம் என்ற பெயர் ஆந்திரத் தெலுங்கான மாநிலங்களுக்கு மிகப் பொருத்தமான பெயர் என்பதில் நமக்கு மாறுபாடில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்குப் பொருத்தமற்ற - தமிழை மறைக்கக் கூடிய திராவிடப் பெயரை மீண்டும் மீண்டும் சூட்டுகிறார்களே என்ற வருத்தமான மனநிலை நமக்கு உருவாகிறது.
தெலுங்கர், மலையாளி, கன்னடர் என்று அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலமைச்சர்களாக வருகிறார்கள். இப்பொழுது கூட கன்னட நாட்டு ரஜினிகாந்த் முதலமைச்சராக முன் வருகிறார். ஆனால் ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களில் மாநில அளவிலான அரசியல் தலைவராக, முதலமைச்சராக ஏன் ஒரு தொழிற்சங்கத் தலைவராகக் கூட தமிழர்கள் வரமுடியவில்லையே எனத் தமிழ் இளைஞர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள்.
இன்றும் தமிழ்நாட்டில் திராவிடத்தை அதிகமாக வலியுறுத்துவோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தாம் என்ற கருத்து நிலவுகிறது.
கடந்த ஆண்டு தெலுங்கு மாநிலங்கள் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் தமிழ்நாடும் தெலுங்கு மாநிலம் என்றும், தமிழ்நாட்டில் தெலுங்கை இரண்டாவது ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். வெங்கையா நாயுடுவின் சிறப்புரையுடன், தமிழிசையின் துரோக உரையுடன் இம்மாநாடு நடைபெற்றது. அதில், தெலுங்கு மொழியை வளர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விட்டார் வெங்கையா நாயுடு! அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருந்தது. இம்மாநாட்டிற்கு முந்தைய ஆண்டில் தெலுங்கு மாநாட்டைச் சென்னையில் நடத்தினார்கள். அதிலும் வெங்கையா கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வாழும் தெலுங்கு மக்கள் முந்நூறு நானூறு ஆண்டுகளாக இம் மண்ணில் வாழ்ந்து, இம்மண்ணின் மக்களாகி, தமிழைத் தங்களின் இன்னொரு தாய்மொழியாகவே நேசிக்கும் உளவியல் கொண்டுள்ளார்கள். ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வணிகம் செய்ய வந்து குடியேறியவர்கள், அதிகாரியாக வந்து குடியேறியவர்கள், வேலை நிமித்தம் வந்து குடியேறியவர்கள், தமிழ்நாட்டையும் ஆந்திரத்தையும் இரட்டைத் தாயகமாகக் கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்னும் அதே உளவியலில் இருக்கிறார்கள்.
மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, சென்னையை ஆந்திராவுடன் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்த “சென்னைவாசிகள்” இவர்கள்தாம்!
இப்போது இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - தமிழ்நாட்டில் தமிழ் இன விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் வளர்ந்து விடாமல் தடுப்பதற்காகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களைப் பிரித்துவிடும் சூழ்ச்சியில் - தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் பெரு முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அதற்கான பொறுப்பாளர்களாக வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை அமர்த்தியுள்ளார்கள். அவ்வப்போது ஆந்திராவைச் சேர்ந்தவர் களை ஆளுநராகவும் அனுப்புகிறார்கள். பிறந்த இனத்திற்கு இரண்டகம் செய்து பதவி பெறும் துரோகிகளாகப் பொன். இராதாகிருட்டிணன், தமிழிசை சௌந்திரராசன் போன்றோர் செயல்படுகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்த்தேசியத்தை ஏற்றுள்ள இளைஞர்களில் ஒருசாரார் தெலுங்கர் - எதிர்ப்பை முதன்மைப்படுத்துகிறார்கள் என்ற நடப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் வலுச்சேர்க்க நல்கிட்ட அறிவுத்துறைப் பங்களிப்பையும், இயக்க வழிப்பட்ட பங்களிப்பையும் பார்க்க வேண்டும். தமிழ் அறிஞர்களாக, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர்களாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில் மெய்யுணர்வோடு பங்கேற்றவர்களாக, அதற்காகத் தன்னையே எரித்துக் கொண்டவர்களாக, இன்று தமிழ்வழிக் கல்விப் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்களாக, தமிழ்த்தேசியத்தின் செயல்வீரர்களாக, தெலுங்கை மரபுவழித் தாய்மொழி யாகக் கொண்டவர்கள் நம் முன்னே நிற்கிறார்கள். அவர்கள் எல்லாம் “தந்திரமாகச்” செயல்படுகிறார்கள், போலியாகச் செயல்படுகிறார்கள் என்று கூறினால் அது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலும் செயலாக அமையும்! அவர்கள் உண்மை யாகவே செயல்படுகிறார்கள்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள், தெலுங்கைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக்கவோ, கல்வி மொழியாக்கவோ கோரவில்லை. அவ்வாறு கோரும்படி இந்திய ஏகாதிபத்தியவாதிகளும் சென்னைப் பகுதியில் குடியேறி வாழும் தெலுங்கு வணிகர்களும், அதிகாரப் பிரிவினரும் அம்மக்களைத் தூண்டுகிறார்கள்.
நம்முடைய அணுகுமுறை அந்தத் தூண்டுதலுக்குத் தூபம் போட்டதாக அமையக் கூடாது!
தெலுங்கை மரபுவழித் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தங்களுக்கிடையே தாய்மொழியில் பேசிக் கொள்வதை நாம் எதிர்க்கக் கூடாது. அதை அவர்களின் தகுதிக் குறைவாகக் கருதக் கூடாது. தாய் மொழியில் பேசாதே என்று சொல்வது மிகக் கொடிய மனித உரிமைப் பறிப்பாகும்!
நடைமுறை உண்மை என்னவெனில், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களில் பலர்க்குத் தெலுங்கே தெரியாது என்பதுதான்! நயினா, அவ்வா என்ற சொற்களைத் தவிர வேறு தெலுங்குச் சொற்கள் அவர்களுக்குத் தெரியாது. குடும்பங்களில் அவர்கள் தமிழில்தான் பேசிக் கொள்கிறார்கள். இந்த வளர்ச்சிதான் தன்னியல்புப்படுத்தும் (Assimilation) வளர்ச்சி!
நம் இளைஞர்களில் சிலர் குறுக்கிட்டு அவர்களைத் தமிழர்கள் அல்லர் என்று கூறினால், அவர்கள் தெலுங்கைத் தேடும் நிலை உருவாகும்! தமிழிலிருந்து பிரிந்தது தெலுங்கு; அவர்கள் தங்களின் மூலத் தாய்மொழிக்குத் திரும்புவது சரியானதுதான்! அதேவேளை தெலுங்கில் பேசக் கூடாது, தெலுங்கைப் படிக்கக் கூடாது என்று யாரும் அவர்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது!
தமிழ்த்தேசியர் இனவெறியரா?
-------------------------- -----------------------
தமிழ்த்தேசியத்தைத் தலையெடுக்காமல் நசுக்கத் திட்டமிடும் இந்திய ஏகாதிபத்தியவாதிகள் தங்களின் துணைப் படையாகத் தமிழ் மண்ணில் ஆள்பிடிக்க அலைகிறார்கள்; இருபத்து நான்கு மணி நேரமும் அதுபற்றியே சிந்திக்கிறார்கள். தமிழ்த்தேசிய எழுச்சி கண்டு கிலி பிடித்து கிடக்கிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய இளைஞர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பிறமொழி பேசுவோர் மீது வைக்கும் சில விமர்சனங் களை முதன்மைப்படுத்தி அதுதான் தமிழ்த்தேசியம் என்பதுபோல் சித்தரிக்கிறார்கள்.
“தமிழ்த்தேசியம்’’ என்பது பிறமொழி பேசுவோரைப் பகைவராகப் பார்க்கும் தமிழ் இன வெறியர்களின் சொற்கோவை என்று அடையாளப்படுத்த, இந்திய ஏகாதிபத்தியவாதிகள் அவசரம் காட்டுகிறார்கள். ஏடுகளில் ஊடகங்களில் அவர்களின் செவ்வி அவ்வாறாக இருக்கிறது.
சட்டப்படி அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்து, உச்ச நீதிமன்றக் கட்டளையையும் எதிர்த்து, அனைத்துக் கட்சிகளும் ஒரே முடிவில் தீர்மானம் போட்டு - தமிழ்நாட்டுக்குரிய காவிரித் தண்ணீரைத் தடுத்துக் கொண்டுள்ள கர்நாடகக் காங்கிரசு, பா.ச.க., ஜனதா தளத் தலைவர் களும் கன்னட மக்களும் பரந்த மனம் கொண்ட இந்தியத்தேசியவாதிகள்! தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்கள்! என்னே முரண்பாடு!
பெங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த தமிழர்களின் 250 சொகுசுப் பேருந்துகள், சரக்குந்துகள் ஆகியவற்றை எரித்து சாம்பலாக்கியவர்கள் பரந்த இந்தியத்தேசிய வாதிகள் - தமிழர்கள் இனவெறியர்கள்!
1991 டிசம்பர் - 1992 சனவரியில் காவிரிக் கலவரம் நடத்தி கர்நாடகத்தில் ஏராளமான தமிழர்களை இனப் படுகொலை செய்து, ஆயிரக்கணக்கான தமிழர் வணிக நிறுவனங்களையும், வீடுகளையும் சூறையாடி எரித்துச் சாம்பலாக்கியவர்கள் பரந்த மனம் படைத்த இந்தியத் தேசியவாதிகள்! அவர்களெல்லாம் இனவெறியர்கள் அல்லர்!
முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துக் கலகம் நடத்தி, தமிழர்களைத் தாக்கிய மலையாளிகள் இனவெறியர் அல்லர்! அவர்கள் எல்லாம் மார்க்சிய சர்வதேசியவாதிகள் - இந்தியத்தேசியவாதிகள்!
பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களைக் கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்து, கட்டி வைத்துச் சுட்டுக் கொன்ற ஆந்திரத் தெலுங்கு தேச ஆட்சியாளர்களும் தெலுங்கர்களும் இனவெறியர் அல்லர்!
கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஓரங்கட்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட உண்மைகளால், உணர்ச்சிவசப்பட்டு, பக்குவக் குறைவாக பிறமொழி பேசுவோர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக் கூடாது என்று பேசிய இளைஞர்கள் மட்டும் தமிழின வெறியர்கள்; வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்கிறார்கள். அந்த இளைஞர்களுக்கும் அறிவுரை சொல்லி, தமிழர் அறத்தின்பால் அவர்களை நிறுத்தி, பிறமொழி பேசும் மக்களும் நம் தமிழ் மக்கள்தாம் அவர்களுக்கும் சம உரிமை உண்டு என்று நாங்கள் பேசி வருகிறோம். ஆனால் அந்த இளைஞர்களைத் தாக்குவதாக சொல்லிக் கொண்டு ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசியத்தையே இனவெறிக் கூச்சல் என்று சித்தரிக்கும் நயவஞ்சகர்களை -- உட்புகுந்து குழப்பும் இந்தியத்தேசிய முகவர்களை சரியாகத் தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்!
இந்திய ஏகாதிபத்தியவாதிகள் - ஆரியப் பிராமணிய மேலாதிக்கவாதிகள் முதலியவர்களே தமிழ்த் தேசியத்தின் பகை ஆற்றல்கள் என்பதை அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும் அடையாளம் காண வேண்டும்.
வரலாற்று வழியில் தமிழ்நாடு வந்து, தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் பேசும் மக்களும் தமிழ் மக்களே, தமிழ்த்தேசிய மக்களே! இந்தப் புரிதல் இளந்தமிழர்களுக்கு வேண்டும். இந்த உணர்வை இம்மொழிகள் பேசும் தமிழ் உணர்வாளர்கள் இம்மக்களிடையே வளர்க்க வேண்டும்!
Labels: தமிழ்த் தேசியம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்