<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன! ஏன்? தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

Friday, June 29, 2018

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்
அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன! ஏன்?

முதலமைச்சர் கூற்றுக்கு எதிர்வினை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

சட்டப்பேரவையில் 27.06.2018 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன என்று நடுவண் அரசின் உள்துறை கூறுகிறது” என்றார். ஒட்டுமொத்த இந்தியாவில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல வகை அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் 15 விழுக்காடு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 31,269 போராட்டங்கள் நடந்துள்ளன என்று நடுவண் உள்துறை கூறியுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு போராட்டங்கள்?
மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழ்நாட்டில்தான் இந்திய அரசு திணித்தது. மற்ற மாநிலங்கள் மறுத்த கூடங்குளம் அணு உலைகள் தமிழ்நாட்டில்தான் கட்டப்பட்டன. மற்ற மாநிலங்கள் மறுத்த நியூட்ரினோ அணுப்பிளப்பு ஆய்வகம் தமிழ் நாட்டில் பொட்டிபுரத்தில் திணிக்கப்படுகிறது.
இந்தியாவின் கிழக்கு, தெற்கு, மேற்குப் பக்கங்களில் கடல் இருக்கிறது. இக்கடலோரங்களில் பல மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அடுத்தாற்போல், பல நாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, “பகை நாடு” என்று சொல்லப்படும் பாக்கித்தான், மராட்டிய, குசராத் மாநிலங்களுக்கு அருகில் இருக்கிறது. அங்கெல்லாம் எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கப் போகிறார்கள்; எப்போதாவது கைது செய்யப்படகிறார்கள். பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் அடுத்த நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை! தமிழ்நாட்டு மீனவரை எல்லை தாண்டி வந்து தமிழ்நாட்டுக் கடலில் சுண்டைக்காய் சிங்கள நாடு சுட்டுக் கொல்கிறதே, யார் கொடுத்த துணிச்சல்? இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டதே இலங்கை கடற்படை, யாருடைய ஒத்துழைப்புடன்? இந்தியாவின் ஒத்துழைப்புடன்!
இவற்றையெல்லாம் எதிர்த்து நாங்கள் போராடு கிறோம்! வாழ்வுரிமையைத் தக்கவைக்கப் போராட வேண்டியுள்ளது தமிழர்களுக்கு!
கொச்சித் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டு வழி யாகப் பெங்களூர் செல்லும் கெய்ல் எரிவளிக் குழாய் கேரளத்தில் சாலை ஓரங்களில் - தண்டவாளங்களின் ஓரங்களில் புதைக்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து புதைக்கப்படு கின்றன! எனவே கேரளத்தில் இதை எதிர்த்துப் போராட்டம் தேவைப்படவில்லை. தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது!
காவிரி விளை நிலங்களை ஓ.என்.ஜி.சி. ஓநாய்கள் கடித்து குதறி மண்ணை வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கிவிட்டன. விளை நிலங்களைப் பாது காக்கவும், குடிநீரை மீட்கவும் தமிழர்கள் போராட வேண்டியிருக்கிறது.
கடலூரிலிருந்து இராமநாதபுரம் வரை விளை நிலங்கள், வீடுகள் நிறைந்த ஊர்கள், ஏரிகள், குளங்கள் உள்ள பகுதிகள் அனைத்தையும் அழித்து பெட்ரோலியம், எரிவளி உள்ளிட்ட ஐட்ரோகார்பன், நிலக்கரி முதலிய வற்றை எடுத்துக் கொள்ளை வணிகம் நடத்த பன்னாட்டு மற்றும் வடநாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி யுள்ளது இந்திய அரசு!
எத்தனை இலட்சம் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும்? அவர்கள் எங்கே போவார்கள்? காலம் காலமாகக் குடும்பத்தோடு குடும்பமாகக் கூடி வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்களைப் பிரிப்பது எவ்வளவு பெரிய கொலைபாதகச் செயல்? அந்த மக்கள் கொதித்து எழமாட்டார்களா? இப்படிப்பட்ட கொலைபாதகச் செயல் வேறு எந்த மாநிலத்தில் நடக்கிறது? ஒரிசா, சத்தீசுக்கர் பழங்குடி மக்களின் தாயகங்களை அழித்து வேதாந்தாவும் ஜிண்டாலும் வேட்டையாட இந்தியா அனுமதித்தது. அந்த மக்கள் தாய் மண் காக்க ஆயுதமேந்திப் போராடுகிறார்கள்! நாங்கள் அறப் போராட்டம் நடத்துகிறோம்!
இந்தியாவிலிருந்து பக்கத்து நாடுகளான பாக்கித்தான், வங்காளதேசம் ஆகியவற்றிற்கு ஆறுகள் ஓடுகின்றன. அவற்றிற்கான ஓப்பந்தங்கள் செயல்படுகின்றன. இந்தியாவுக்குள் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்கிடையே ஓடு கின்றன. அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படுகின்றன. ஆனால் எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் காவிரி மட்டும் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வராது என்றால் நாங்கள் போராடாமல் என்ன செய்வது?
போராடாமல் அகதிகளாக எங்கள் மண்ணை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்று இந்தியாவின் உள்துறை எதிர்ப்பார்க்கிறதா? அந்த உள்துறையின் ஒலிப் பெருக்கியாகப் பேசும் எடப்பாடி நாங்கள் காவிரிப் படுகையைவிட்டு அமைதியாக வெளியேற வேண்டும் என்கிறாரா?
பாலாற்றில், பவானியில் மேலும் அணைகள் கட்டி ஆந்திரமும் கேரளமும் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தடுக்கின்றனவே! அந்தத் திருட்டைக் தடுக்கும் ஆற்றல் தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிகளுக்கு இருந்ததா?
தமிழ்நாட்டின் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது இந்தியா! அதைத் தடுக்கக் கூடிய ஆற்றலோ, அக்கறையோ, கொடுத்ததை மீட்கக் கூடிய ஆற்றலோ அக்கறையோ தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சிகளுக்கு இருந்ததா? இல்லை! எனவே தமிழ் மக்கள் தான் போராட வேண்டியிருக்கிறது!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எம் தமிழ் மக்கள் போராடித்தானே திருவண்ணாமலை வேடியப்பன் மலை - கவுத்தி மலைகளை ஜிண்டால் விழுங்காமல் காத்தார்கள்! சேலம் சேர்வராயன் மலையைக் காத்தார்கள்!
பணைய கைதிகளாகத் தமிழர்கள்..
----------------------------------------------------------
இந்திய அரசின் உத்தி வகுப்பாளர்கள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். இந்திய ஏகாதிபத்திய அதிகாரம் எவ்வளவு இருந்தாலும் தமிழ்நாட்டில் பா.ச.க.வோ அல்லது காங்கிரசோ வெகுமக்கள் கட்சியாக வளர முடியாது. இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டுக் காப்பு அரண்களாக விளங்கி வரும் தி.மு.க. - அ.தி.மு.க. கழங்களுக்கு வெளியே மூன்றாவது ஆற்றலாக தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையை காக்கக் கட்சிச் சார்பின்றி போராடுகிறார்கள். இது புதிய போக்காக வளர்ந்து விட்டது. ஆட்சியாளர்கள் ஏவும் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சி மக்கள் பின் வாங்குவதாக இல்லை!

இளைஞர்கள், ஆண்களும், பெண்களும், தற்சார் போடு, தமிழின உணர்வோடு தங்கள் வாழ்வுரிமைக் காகவும், தங்கள் தாயகம் மற்றும் பண்பாடு காக்கவும் கருத்துப் போர் நடத்துவதுடன் களப்போராட்டகளிலும் கை கோக்கிறார்கள்!
எனவே தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டுக் கங்காணி அரசின் காவல்துறையை ஏவி விட வேண்டும்; அதுவும் போதாது என்றால் இராணுவத்தை அனுப்பி, தாக்குதல் தொடுக்க வேண்டும்; மக்களைப் பணையக் கைதிகள் போல் வைத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டம்!
இந்நடவடிக்கை மூலம் கணிசமான தமிழர்கள் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறி விடுவார்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் குவித்துத் தமிழர் தாயகத்தைக் கலப்பின மாநிலமாக மாற்றுவது என்பதுதான் இந்திய அரசின் திட்டம்!
புதிய அடக்குமுறை உத்தி
---------------------------------------------
ஒரு சிக்கலில் மக்கள் தற்காப்புக் குரல் எழுப்பினால், அவர்களை கூட விடாமல் தொடக்கத்திலேயே தடுப்பது, தாக்குவது, தளைப்படுத்துவது என்ற புதிய உத்தியை வகுத்து, தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. வெளியி லிருந்து ஆதரவு தெரிவிக்க வருவோரைத் தடுப்பது, தளைப்படுத்துவது என்ற புதிய உத்திகளை தமிழ்நாடு அரசு எட்டுவழிச் சாலைப் போராட்டத்தில் கடை பிடிக்கிறது.

சக தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிக்க வெளியூரிலிருந்து வருவோரை “வெளியார்” என்று முத்திரை குத்தி, அயலாராகக் காட்டுகிறது தமிழ்நாடு அரசு! எட்டு வழிச் சாலை நிலப்பறிப்புக்கு உள்ளானவருக்கு ஆதரவாக நிலம் பறிக்கப்படாத உள்ளூர்க்காரர் வந்தால்கூட, அவரையும் “அயலார்” என்று கைது செய்கிறது எடப்பாடி அரசு!
ஆனால், ஜிண்டால் - வேதாந்தா அகர்வால் - அதானி - அம்பானி போன்ற அயல் இன வேட்டையாடிகளை மண்ணின் மக்கள் போல் பாவித்து, பாதுகாப்பு கொடுக் கிறது; உண்மையான மண்ணின் மக்களைத் தாக்குகிறது.
எதிர்கொள்வது எப்படி? 
--------------------------------------
நம்முடைய பேராயுதம் மக்கள் தான்! மக்கள் ஆற்றலுக்கு முன் - மக்களின் அறச்சீற்றத்துக்கு முன் மற்றெல்லா ஆயுதங்களும் முனை முறிந்து போகும்! ஆயுதப் போராட்டம் வேண்டாம். மக்கள் அறப் போராட்டம் வெல்லும்!

தமிழர் வரலாறு காணாத அளவிற்கு 50 ஆயிரம் மக்கள் தூத்துக்குடியில் அணியணியாக வந்தார்கள். பதின்மூன்று உறவுகளை பலி கொடுத்த பின்னும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் உறுதி காட்டி வென் றார்கள்.
“தமிழர் வாழ்வுரிமை காப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!” என்ற இலட்சிய முழக்கங்களை எழுப்பு வோம்! சாதி, மதம், கட்சிகள் எங்களைப் பிளவுபடுத்த அனுமதியோம்!
மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற தமிழர் அறத்தை முன்னிறுத்துவோம்! தமிழர்கள் ஒருங்கிணைவோம்!
தமிழர் அறப்போர் வெல்லும்!

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்