<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள். பெ. மணியரசன்

Sunday, May 20, 2018



காவிரி ஆணையத்தின் 
இருபெரும் ஊனங்கள்

 காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர், பெ. மணியரசன்

உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.
ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?
ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.

கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.
உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!
இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.
இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா?

உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.
இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது.
தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது.
வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.
இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.
எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.
மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்