நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்றுப் போனது இந்தியத்தேசியம்! பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
Saturday, July 21, 2018
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில்
தோற்றுப் போனது இந்தியத்தேசியம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நேற்று (20.07.2018), நரேந்திர மோடி அமைச்சரவைக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றாலும், “இந்தியத்தேசியம்” தோல்வி அடைந்துவிட்டது!
இந்த வாக்கெடுப்பில், பா.ச.க.வின் கூட்டணியிலுள்ள சிவசேனை கட்சி கலந்து கொள்ளவில்லை. மராட்டியத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக சிவசேனை தொடர்ந்து பா.ச.க. ஆட்சியை விமர்சித்து வருகிறது. இத்தனைக்கும் சிவசேனை தேசிய சனநாயகக் கூட்டணியில் உறுப்பு வகிப்பதுடன், நடுவண் அமைச்சரவையிலும் உறுப்பு வகிக்கிறது. அத்துடன் இந்துத்துவா – இந்தியத்தேசியம் என்பதில் தீவிர கருத்து கொண்ட கட்சி அது!
பாபர் மசூதி இடிப்பில் தங்கள் கட்சியினர் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்தது அதன் தலைமை! ஆனால், மராட்டிய மக்கள்தான் தன்னுடைய இறுதி இருப்புக்கான அடித்தளம் என்ற நிலையில், மராட்டியத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் கூட்டணி ஆட்சியைக் கைவிட்டது. அத்துடன், இந்தியத்தேசியம் – இந்துத்துவா ஆகியவற்றை கைவிடாவிட்டாலும் மராட்டிய மக்கள் உணர்வுக்குப் பின்தான் அவை என்ற நிலைக்கு வந்துள்ளது சிவசேனை!
ஒரிசாவில் ஆளுங்கட்சியாக உள்ள பிஜூ சனதா தளம், இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பைப் புறக்கணித்துள்ளது. “கடந்த பத்தாண்டுகளாக காங்கிரசுக் கூட்டணி அரசும் பா.ச.க. கூட்டணி அரசும் ஒரிசாவிற்கு எந்தப் பயனும் தரவில்லை. பின்னர் எதற்காக நாங்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும்” என்று பிஜூ சனதா தளம் கட்சியின் மக்களவைத் தலைவர் பத்ருஹரி மேத்தா எதிர்க்கேள்வி கேட்டுள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டது. அதற்கு அக்கட்சியின் தலைவர்கள் சொன்ன காரணம் – “தெலங்கானா மாநிலத்துக்கும், நடுவண் அரசுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவும்போது, தெலுங்கு தேசம் கொண்டு வந்த இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்” என்பதாகும்!
பஞ்சாபின் மாநிலக் கட்சியான பாதல் அகாலி தளம், அம்மாநிலத்தில் தனக்கு நேர் எதிராக உள்ள காங்கிரசை வீழ்த்துவதற்காக பா.ச.க.வை ஆதரித்து வருகிறது. எனவே, பா.ச.க. அரசை ஆதரித்து வாக்களித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 19.07.2018 அன்று மேட்டூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தெலுங்கு தேசம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என்றார். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 22 நாட்கள் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையை முடக்கி போராட்டம் செய்தார்கள். எந்தவொரு மாநிலமும் நமக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை! எனவே, தமிழகப் பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் கொடுப்போம்! ஆந்திரா மாநிலப் பிரச்சினைக்காக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கத் தேவையில்லை” என்றார்.
பா.ச.க.வின் தயவு தேவை என்ற நோக்கத்தில் அ.இ.அ.தி.மு.க. இந்த முடிவை எடுத்திருக்கவும் வாய்ப்புண்டு! ஆனால், அக்கட்சி சொன்ன காரணம் – தமிழ்நாட்டு மக்களை சார்ந்துதான் நாங்கள் செயல்படுவோம் என்பதாகும். இவ்வாறு சொன்னால், தமிழர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து கொண்டு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் முதன்மைச் செய்தி – ஆந்திரப்பிரதேசத்திற்கு மோடி அரசு இரண்டகம் செய்துவிட்டது; மாநிலப் பிரிவினையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ஒப்புக் கொண்டபடி மோடி அரசு சிறப்பு நிதி தரவில்லை; புதிதாகக் கட்டப்படும் தலைநகர் அமராவதிக்குத் தேவையான நிதி தரவில்லை என்பதாகும்.
மேற்கண்ட அனைத்துச் செய்திகளையும் இணைத்துப் பார்த்தால், இந்தியத்தேசியம் என்பது தோற்றுப் போயிருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தவர்களும் சரி, வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தவர்களும் சரி இந்தியத்தேசிய அரசியல் - இந்தியத்தேசியப் பொருளியல் கொள்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படவில்லை என்பது தெரிய வருகிறது.
இந்தியா முழுவதும் அந்தந்த மாநில இனச் சார்போடுதான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மாநிலத் தேசிய இன உணர்வுடன் நிற்பதுதான் ஓர் உத்தி என்ற அளவில்கூட ஆதாயம் தரும் அரசியலாகும்.
தமிழ்நாட்டில் தமிழின உணர்வு கொள்வதோ, தமிழ்த்தேசியக் கொள்கை பேசுவதோ விதிவிலக்கான தனித்த செயல் அல்ல! எல்லா மாநிலங்களும் அப்படித்தான் இருக்கின்றன. அரசியல் ஆதாயத்திற்கான உத்தியாக இல்லாமல், உண்மையான தமிழின உணர்வை – தமிழ்நாட்டில் வளர்ப்பதுதான் நம் உரிமைகளையும், உயிர்களையும் பாதுகாப்பற்குரிய உறுதிப்பாடாகும்!
இந்த நம்பிக்கையில்லா விவாதத்தில் உச்ச காட்சி - மோடியைக் காரசாரமாக விமர்சித்த இராகுல் காந்தி கடைசியில் அவரைக் கட்டித் தழுவியதாகும்! இந்தியத்தேசியம் – ஒட்டுண்ணி முதலாளியம் – இந்தி, சமற்கிருதத் திணிப்பு – ஆரிய அடிநாதம் ஆகிய அனைத்திலும் இரட்டையர்களாக உள்ள காங்கிரசும், பா.ச.க.வும் தழுவிக் கொண்டது இயல்பே!
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்