முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா? ஐயா பெ.மணியரசன்
Thursday, September 16, 2021
முதன் முதல் வகுப்புரிமையைச் செயல்படுத்திய
சுப்பராயனை மறந்தீர்களா? மறைத்தீர்களா?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்
வகுப்புரிமை இட ஒதுக்கீட்டுக்கான முதல் அரசாணை வெளியிடப்பட்டதன் நூற்றாண்டை தி.மு.க. ஆட்சி கொண்டாடுகிறது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்று அதிகார வழிப் பெயர் கொண்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 ஆம் ஆண்டு முதல் முதலாக நடத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது. 1921-ஆம் ஆண்டு அக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் என்று அழைக்கப்பட்ட ஆந்திர மண்டலத்தைச் சேர்ந்த ராமராயநிங்கார் முதலமைசராக இருந்த போது, அப்போது வேலை வாய்ப்பில் கோலோச்சிய பிராமண ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி பிராமணர் அல்லாதார்க்கும் உரிய வாய்ப்பளிக்க வகுப்புரிமை ஆணை (Communal G.O.) 16.9.1921 அன்று பிறப்பித்தார். அந்த அரசாணை எண் 613. (MRO Public ordinary Service GO 613).
அதன் நூற்றாண்டைத்தான் 16.9.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி சமூக நீதி உரிமைக்காக எடுத்த அந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. (முரசொலி -17.9.2021)
உண்மையில் வகுப்புரிமைக்குப் புதிய அரசாணை பிறபித்து, அதை முதல் முதல் செயல்படுத்தத் தொடங்கியது தமிழரான முதலமைச்சர் சுப்பராயன் ஆட்சியில்தான். தமிழரான அமைச்சர் முத்தையா முதலியார் தமது துறையில் அதை முதலில் செயல்படுத்தினார். இந்த உண்மையைச் சொல்லி இவர்களுக்குத் தனிச் சிறப்பான பாராட்டை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும்.
1926-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமராயநிங்காரின் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் தோற்றுவிட்டது. 21 உறுப்பினர்கள் மட்டுமே நீதிக்கட்சியில் வென்றனர் ஆனால் தனிப்பெரும் கட்சியாய் வென்றிருந்த (காங்கிரசு) சுயராஜ்ஜியக் கட்சியினர் 41 இடங்களில் வென்றிருந்தனர். ஆனால் ஆட்சி அமைக்க மறுத்து விட்டனர். அப்போது சென்னை மாகாண ஆளுநர், கட்சி சார்பற்ற சுயேச்சையான சுப்பராயன் (மோகன் குமாரமங்கலம்-பார்வதி தந்தையார்) அவர்களை ஆட்சி அமைக்க அழைத்தார். சுப்பராயன் அமைச்சரவையில் அவருடன் மற்றும் 4 பேர் அமைச்சர்கள். அவர்கள் முத்தையா முதலியார், ஏ.ரெங்கநாத முதலியார், ஆர்.என்.ஆரோக்கியசாமி முதலியார், எம்.ஆர்.சேதுரத்தினம் அய்யர். சுப்பராயன் அமைச்சரவைக்கு வலுச்சேர்க்க ஆளுநர் தனக்கு இருந்த அதிகாரப் படி 34 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்தார். இவர்கள் சுப்பராயன் அமைச்சரவையை ஆதரித்தனர்.
நீதிகட்சி சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அது தோற்றுப்போனது.
முத்தையா முதலியார் காங்கிரசுக்காரர். ஆனால் அவர் பிராமண ஆதிக்க எதிர்ப்பாளர். 1916-இல் நீதிக்கட்சி அமைப்பதற்காக நடந்த பிராமணரல்லாதார் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர். எனவே காங்கிரசு சுயராஜ்ஜிய கட்சியின் முடிவை மீறி, சுப்பராயன் அமைச்சரவையில் முத்தையா முதலியார் சேர்ந்தார்.
சுப்பராயன் அமைச்சரவை 4.11.1927-இல் செனை மாகாண சட்டமன்றத்தில் புதிய வகுப்புரிமை அரசாணை பிறப்பித்தது. G.O.M.S.No.1021. இந்தப் புதிய ஆணையை 1928-இல் முத்தையா முதலியார் தமது துறையில் முதல் முதலாகச் செயல்படுத்தினார். (ராமராய நிங்கார் கொண்டுவந்த வகுப்பரிமை ஆணை செயல்பாட்டிற்கு வராமலே காலாவதி ஆகிவிட்டது.)
உண்மையில் வகுப்புரிமை வெற்றி விழாவைக் கொண்டாட வேண்டுமானால் சுப்பராயன்- முத்தையா முதலியார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட அரசாணை எண் 1021 செயலுக்கு வந்ததைத்தான் கொண்டாட வேண்டும்.
அந்த சுப்பராயன் அமைச்சரவையை நீதிக்கட்சி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்பராயன் அமைச்சரவை 1927-இல் கொண்டு வந்த வகுப்பரிமை இடஒதுகீடு விவரம்:
வேலை வாய்ப்பில்: வேலை வழங்கப்பட வேண்டிய இடங்கள் மொத்தம் 12 என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 12-இல்: பிராமணர் அல்லாத இந்துகளுக்கு 5 இடம்; பிராமணர்களுக்கு 2 இடம், முகமதியர்களுக்கு 2 இடம்; ஆங்கிலோ இந்தியர் உட்படக் கிறித்துவர்களுக்கு 2 இடம்; பட்டியல் வகுப்பார்க்கு 1 இடம்: (மொத்தம் 12 இடம்)
மொத்தம் எத்தனை இடங்கள் வேலைக்கு நிரப்பப்பட்டாலும் மேற்கண்ட விகிதத்தில் நிரப்ப வேண்டும் என்பதே ஆணை!
1948-இல் அப்போதைய காங்கிரசு முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் புதிதாகப் பின் தங்கிய வகுப்பார் என்று ஒரு பிரிவை உருவாக்கி, சுப்பராயன் ஆணையில் திருத்தம் கொண்டுவந்தார். மொத்தம் 12 இடங்கள் என்று இருந்ததை 14 இடங்கள் என்று உயர்த்தி – புதிதாக 2 இடங்களை பின் தங்கிய வகுப்பார்க்கு வழங்கினார் ஓமந்தூரார்.
சுப்பராயன் அமைச்சரவை செயல்படுத்தி – அதில் ஓமந்தூராரல் புதிய சேர்க்கை உருவாக்கப்பட்ட அதே அரசாணை 1021 (G.O.M.S. No. 1021)ஐத்தான் 1950-இல் உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது.
வகுப்புரிமை பற்றிப் பேசும் போதெல்லாம் தி.க.வினரும் தி.மு.க.வினரும் பனகல் அரசர், நீதிக்கட்சி என்று பேசுகின்றனர். புதிய ஆணை போட்டு உண்மையில் செயல்படுத்திய முலமைச்சர் சுப்பராயன் பெயரை அவர்கள் சொல்வதே இல்லை. சுப்பராயன் திராவிடர் அல்லாதவர்; தமிழர் என்பதால் புறக்கணிப்பா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கடலூர் ஏ.சுப்பராயலு பெயர் இருக்கிறது. ஆனால் சுப்பராயன் பெயர் இல்லை. அவர் ஆட்சியில் வகுப்புரிமை ஆணை புதிதாகப் போடப்பட்டு முதல் முதலாகச் செயல்படுத்தப்பட்ட செய்தியும் இல்லை.
சமூக நீதி உணர்வாளர்கள் வரலாற்று உண்மைகளைத் தெரிந்து கொண்டு, சமூக நீதிக்கு, வகுப்புரிமைக்கு சுப்பராயன்-முத்தையா முதலியார், ஓமந்தூரார் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
அதே வேளை நீதிக்கட்சி வகுப்புரிமைக்காக எடுத்த முன்முயற்சியைப் பாராட்ட வேண்டும்!
அதே போல் 19 ஆம் நூற்றாண்டில் பிராமணர் அல்லாதார் இட ஒதுக்கீட்டிற்கு முன் மொழிவு வழங்கிய ஆங்கிலேய அதிகாரிகள் டபுள்யூ.ஆர்.கார்னிஷ் போன்றவர்களையும் நாம் நன்றியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்பனக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையானக் கொள்கை – அரசு அலுவலர்கள் எண்ணிக்கையில் பார்பனர்களுக்கு வரம்புகட்டுவதாகவும், பார்பனர் அல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க கூடாது.”
-Report on the Census of Madras Presidency 1871, Volume -1, Page 197
(சான்று:) கி.வீரமணி ’வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம் பதிப்பு – 2000.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Labels: கட்டுரைகள், திராவிட எதிர்ப்பு!, பெ. மணியரசன்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்