" தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 5 )"-- தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் கட்டுக் கதைகள்; தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
Thursday, November 11, 2021
தமிழ் இந்து ! ஏன்? ( பகுதி - 5 )========================================
தோழர் விடுதலை இராசேந்திரன்
அவர்களின் கட்டுக் கதைகள்
========================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
========================================
நான் திராவிடம், பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை முற்றிலும் எதிர்த்தாலும், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கோவை இராமகிருட்டிணன், தி.வி.க. பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் போன்றோர் மீது மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டவன்.
அதற்கு முதல் காரணம், இவர்கள் பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் தமிழ்நாட்டில் இயங்கி வரும் சமூகப் போராளிகள் என்பதே! அடுத்து, இவர்கள் தமிழ் இன, தமிழ் மொழிப் பற்றாளர்கள்.
அவர்களோடு, எங்களது தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல கூட்டுப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ் ஈழம், தமிழ்மொழிக் கல்வி போன்ற அரங்குகளில் தொடர்ந்து கூட்டமைப்பாக இயங்கியுள்ளோம்.
நான் ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்து, ஆரியப் பிராமண – சமற்கிருதக் கலப்பையும், ஆதிக்கத்தையும் விலக்கும் வகையில் வரம்பு கட்டினேன். எனது இக்கருதுகோளை எதிர்க்கலாம். அதனால் ஏற்படும் “பாதகங்கள்” என்று அவர் கருதுபவற்றை வெளிப்படுத்தலாம். அதில் எல்லாம் தவறில்லை. அது திறனாய்வுத் தருக்கம்! திறனாய்வாளர்களின் எதிர்க்கருத்துகள் இல்லாமல் ஒரு புதிய கோட்பாடு செழுமை பெறாது.
ஆனால், நம்முடைய தோழர் விடுதலை இராசேந்திரன், நான் கூறாதவற்றையெல்லாம், மேற்கோள் குறியின்றி பொய்கூறி, நான் கூறியதாகக் கண்டிக்கிறார். இதோ சிலவற்றைப் பார்க்கலாம்.
“தமிழையும், இந்துவையும் இணைக்கும் மணியரசனின் குழப்பங்கள்” என்பது தோழர் விடுதலை இராசேந்திரனின் கட்டுரைத் தலைப்பு. இதனை 16.10.2021 அன்று நான் வலைத்தளத்தில் படித்தேன். உடல்நலக் குறைவோடுதான் இருந்தேன். அன்று மாலையில் இருந்து உடல்நலக்குறைவால் படுக்கையாகிவிட்டேன். எனவே, காலம் தாழ்ந்து எதிர்வினை ஆற்றுகிறேன்.
“தமிழர்களை இனி ‘தமிழ் இந்து’ என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிவித்திருக்கிறார்” என்பது அக்கட்டுரையில் முதல் சொற்றொடர்.
நான் எங்கே, எதிலே, தமிழர்கள் அனைவரும் தமிழ் இந்துக்கள் என்று கூறினேன். சான்று காட்ட வேண்டுமல்லவா!
தமிழர்களில் இந்துக்கள், முசுலிம்கள், கிறித்துவர்கள் எனப் பல மதத்தவர் இருக்கிறார்கள். தமிழர்கள் அனைவரையும் தமிழ் இந்துக்கள் என்று எப்படிக் கூற முடியும்?
நான் அப்படிக் கூறவில்லை. என் பெயரைப் போட்டு பொய் உரைக்கிறார் தோழர் இராசேந்திரன்.
தமிழர்களில் இப்போது இந்து மதத்தில் உள்ளவர்களைத் தமிழ் இந்து – ஆரிய இந்து என்று பிரிக்க வேண்டும். பிராமணத் தலையீடோ, சமற்கிருத ஆதிக்கமோ தமிழ் இந்துவில் கூடாது. அவற்றை அவர்கள் ஆரிய இந்துவில் பார்த்துக் கொள்ளட்டும் என்பதுதான் எனது கருத்து!
அடுத்து, சில பத்திகளுக்குக் கீழே கேட்கிறார் :
“சரி, ‘தமிழ் இந்து’ அடையாளத்தோடு உருவாகும் தமிழ்த்தேசியத்தின் குடிமக்கள் யார்?”
ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகளில் மதம் ஒருபோதும் வராது. இதையெல்லாம் 1985 வாக்கிலேயே விளக்கி “இந்தியாவில் தேசிய இனங்கள்” என்ற நூலை எழுதியுள்ளேன். தாயகம், பொதுமொழி, வரலாற்று வழியில் உருவான பொதுப் பண்பாடு, பொதுப் பொருளியல் வாழ்வு போன்றவைதாம் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறுகள்.
ஒரு தேசிய இனத்தில் பல மதங்கள் இருக்கலாம். தமிழ்த்தேசிய இனத்தில் இந்து, முசுலிம், கிறித்துவம் உள்ளிட்ட பல மதங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள். கடவுள் மறுப்பு, மத மறுப்பு, நாத்திகர்களும் தேசிய இனத்திற்குள் இருப்பார்கள்.
அதே பத்தியில் தோழர் இராசேந்திரன் கேட்கிறார், “இந்து அடையாளம் வேண்டாம்; சுயமரியாதை – சமத்துவம் – பெண்ணுரிமை என்ற அடையாளமே வேண்டும் என்ற கருத்துடைய பெரியாரிஸ்ட்டுகள், பொதுவுடைமையாளர்கள், தமிழ்த்தேசிய அடையாளத்துக்குள் வர முடியாதா? பல தலைமுறைக்கு முன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு வெளியேறிய இஸ்லாமிய, கிறித்துவர், பவுத்தர் (ஆகியோர்) இந்து அடையாளத்தை ஏற்க வேண்டுமா? தமிழ்த்தேசிய மக்களுக்கான “புதிய குடியுரிமைப் பதிவேடு” ஒன்றை உருவாக்கப் போகிறார்களா? இப்படிப் பல கேள்விகள் எழுந்து நிற்கின்றன” என்கிறார் விடுதலையார்!
பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளையும் அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளையும் விடுதலை இராசேந்திரனுக்குச் சொல்லித் தரவில்லை என்று தெரிகிறது. நான் 1970களிலேயே மார்க்சியப் பள்ளியில், பழங்குடி (Tribe), மரபினம் (Race), தேசிய இனம் (Nationality) ஆகியவை குறித்தும் அவற்றிற்கிடையே உள் வேறுபாடுகள் குறித்தும் படித்தேன். அதேபோல் “மதம்” பற்றியும் மார்க்சியப் பள்ளியில் தெளிவாகப் படித்தேன்.
பொதுவாக மதம் ஒரு தேசிய இனத்தின் அடிப்படைக் கூறு இல்லை என்பதையும், மிகச்சிறு விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதையும் படித்தேன்.
பௌத்தம், கிறித்துவம், இசுலாம் மதங்கள் மரபு இனம் கடந்து, தேசிய இனம் கடந்து, தேசம் கடந்து பரவியுள்ளதை தோழர் இராசேந்திரன் பார்க்கவில்லையா? ஒரே கிறித்துவத்தைப் பின்பற்றும் நாடுகள் தங்களுக்கிடையே முதல் உலகப் போரையும் இரண்டாவது உலகப் போரையும் எதன் அடிப்படையில் நடந்திக் கொண்டன? தேசிய இன அடிப்படையில்!
ஒரே அல்லாவை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஈரானும் ஈராக்கும் நம் காலத்தில் எட்டாண்டுகள் போரிட்டுக் கொண்டனவே. வேறு பல இசுலாமிய நாடுகளும் போரிட்டுக் கொள்கின்றனவே!
ஒரே புத்த மதத்தைச் சேர்ந்த சீனாவும், சப்பானும் கடந்த காலங்களில் போரிட்டது போக – இன்றைக்கும் எலியும் பூனையுமாக இருக்கின்றனவே!
தோழர் இராசேந்திரன் மீது குறை சொல்லிப் பயனில்லை. அவருடைய பேராசான் பெரியார், நான்கு இனப் பகுதிகளும் சேர்ந்திருந்த “திராவிட நாட்டு”க்கு விடுதலை கேட்டார். கடைசியில் 1956இல் தமிழ்நாடு அமைந்தவுடன் அதுவே சரி என்றார். அதன்பிறகு, கன்னியாகுமரி அளவே இருந்தாலும் எனக்குத் தனித்தமிழ்நாடு வேண்டும் என்றார். அந்தப் பல்கலையில் படித்தவர்க்கு தேசிய இனம், மதம் இவற்றிற்கிடையே வேறுபாடு தெரியாமல் போனதில் வியப்பில்லை.
ஒரு தேசிய இனத்தில் பல மதங்கள் இருக்க வாய்ப்புள்ளதுபோல், பல கொள்கையாளர்கள் இருப்பார்கள. முதலாளியப் போக்கு, பொதுவுடைமைச் சிந்தனை, பெண்ணடிமையாளர், பெண் விடுதலையாளர் எனப் பலரும் இருப்பார்கள். மூட நம்பிக்கைகள் இருக்கும். முற்போக்கு அறிவியல் கருத்துகள் இருக்கும். இவற்றில் எவற்றை நாம் வளர்க்கிறோம், எவற்றை எதிர்க்கிறோம்; அல்லது புதிய கருத்தியலை உருவாக்கிச் செயல்படுகிறோம் என்ற பல வாய்ப்புகள் இருக்கின்றன. நம் கருத்தை பெரும்பான்மை மக்களை ஏற்கச் செய்கிறோமா என்பதைப் பொறுத்து அச்சமூகத்தின் திசைவழியும் வளர்ச்சியும் அமையும்.
“தேசியம்” என்றாலே வடிகட்டின அயோக்கியத்தனம் என்று வரையறை கொடுத்தவர் பெரியார்.
“நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்ற ஒரு மேதாவி தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம் என்று அதாவது பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழிபிழைப்பிற்கு மார்க்கமானது என்று கூறியிருக்கிறார்”.
“நான் இந்திய சுயராஜ்யம், இந்தியத்தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும், சுயராஜ்ஜியங்களையும் கண்டும் தெரிந்தும் தான் பேசுகிறேனேயொழிய, கிணற்றுத் தவளையாக இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேசவில்லை”.
- பெரியார், 1934, 1935 ஆண்டுகளில் இக்கருத்துகளைப் பேசியுள்ளார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 1, பக்கம் 380 – 385 – வே. ஆனைமுத்து ஐயா தொகுப்பு).
இத்தாலியின் தேசப்பற்றைப் பேசிய மாஜினி, துருக்கியின் தேசப்பற்றைப் பேசிய கமால் பாட்சா, சீனத்தின் தேசப்பற்றைப் பேசிய மாசேதுங், வியட்நாம் தேசப்பற்றைப் பேசிய ஹோச்சிமின், பாலத்தீனத்தின் தேசப்பற்றைப் பேசிய யாசர் அராபத், தமிழீழத்தேசப் பற்றைப் பேசிய பிரபாகரன் எல்லாருமே பெரியார் வரையறைப்பின்படி வடிகட்டின அயோக்கியர்கள்; பிழைப்பிற்கு வழி இல்லாதவர்கள். இழிபிழைப்பிற்காகத் தேசியத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்! என்னே “ஆராய்ச்சி அறிவியல்”!
பெரும்பாலான திறனாய்வுகளில் பெரியார் எதிர்த்தரப்பினரை, பிழைப்புக்கு வழியில்லாதவர்கள், வயிற்றுச் சோற்று ஜீவனத்துக்குப் பேசுகிறவர்கள் என்பார். புதிய தமிழகம் கோரிப் போராடிய ம.பொ.சி.யையும் அப்படித்தான் திட்டினார். அதாவது ஈரோட்டு வணிகப் பணக்கார ஆணவ உளவியலில் இருந்து, பொதுத் தொண்டுக்கு வந்த பின்னரும் அவரால் விடுபட முடியவில்லை.
தேசிய இன ஆதிக்கவாதிகளும் ஏகாதிபத்தியவாதிகளும் தோன்றுவார்கள். இட்லர், முசோலினி போன்றோரை எடுத்துக் காட்டலாம். ஆனால், தங்கள் தேசிய இன உரிமை மீட்புக்குப் போராடிய, செயல்பட்ட அனைவரும் இட்லர்களோ, முசோலினிகளோ அல்லர். இந்தப் பகுப்பாய்வெல்லாம் பெரியார் பல்கலையில் விடுதலையார் படிக்கவில்லை போலும்! அதனால்தான் தமிழ்த்தேசியத்தில் புதிய குடியுரிமைப் பதிவேடு ஒன்றை உருவாக்கப் போகிறார்களா என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
“தமிழ்த்தேசியமும் தமிழ் இந்துவும் ஒன்றுதான் என்று பெ. மணியரசன் கூறுகிறார்” என்கிறார் விடுதலை இராசேந்திரன். எந்த உரையில் அல்லது எந்தக் கட்டுரையில் நான் அவ்வாறு கூறியுள்ளேன்? சான்று காட்டாமல் தமது எதிர்வாத வசதிக்காக எதிரியின் கூற்றுகள் என்று பொய்யை இட்டுக்கட்டிக் கொள்வது நேர்மையா? தருக்க அறமா?
நான் மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறேன் என்பதை உரிய சான்றுடன் விடுதலை இராசேந்திரன் மெய்ப்பிக்க வேண்டும் என்று அறைகூவல் (சவால்) விடுகிறேன். அவர் கட்டுரை முழுக்க நான் சொன்னதாக அவராக இட்டுக்கட்டிக் கொண்டு விமர்சிப்பது என்ன ஞாயம்? என்ன நாகரிகம்?
என்னைத் தாலிபான் என்ற பொருளில் தமிழ்நாடு மற்றொரு ஆப்கானிஸ்தான் ஆக முடியாது என்கிறார். சாவர்க்கர் போல் – தமிழ் இந்து தேசத்தை உருவாக்க முயலும் மணியரசன் இன்னொரு சாவர்க்கர் போன்றவர் என்று எச்சரிக்கிறார்.
நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தில் தமிழ் இந்து, கிறித்துவர், முசுலிம், புத்தம், கடவுள் மறுப்பாளர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டென்று திரும்பத்திரும்ப சொல்லி வருகிறோம். எந்த மதவெறியும் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் கடவுள் மறுப்பாளர்களுக்கும் சம உரிமை உண்டு என்கிறோம். இதில் தமிழ் இந்து தாலிபன்கள் எப்படி உருவாவர்?
ஆரிய இந்துவில் தாலிபான்கள் உருவாக மாட்டார்கள்; ஆனால், ஆரிய பிராமணியத்தை விலக்கி வைக்கும் தமிழ் இந்துவில் தாலிபான்கள் உருவாவர் என்று புரளியும், பீதியும் கிளப்பினால் என்ன பொருள்? ஆரிய இந்துத்துவா பரவாயில்லை, தமிழ் இந்துவைத் தடுப்போம் என்று பெரியாரியர்கள் கச்சைகட்டுவதாகத்தானே பொருள்!
எனது திராவிட மறுப்பு மற்றும் பெரியார் சிந்தனைகளில் உள்ள தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு போன்றவற்றை நான் எதிர்ப்பது விடுதலை இராசேந்திரன் போன்றவர்களுக்கு என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியிருக்கலாம். அதற்காக நான் சொல்லாதவற்றை நான் சொன்னதாகக் கட்டமைத்துக் கொண்டு என்னைச் சாடினால் – அந்தப் பொய் எத்தனை நாளைக்கு அல்ல எத்தனை மணித் துளிகளுககுத் தாக்குப் பிடிக்கும்? கதிரவன் எழுந்தவுடன் காலை மூடுபனி காணாமல் போவதுபோல் விடுதலை இராசேந்திரன் பொய்கள் காணாமல் போகும்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளமைப்பு சனநாயகம் மிக்க ஒரு சனநாயகக் கட்டமைப்பு கொண்டது. அதன் கொள்கை அறிக்கையும், அமைப்பு விதிகளும் ஒரே நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசத்திற்கு இறையாண்மை உரிமை கிடைத்ததும் எப்படிப்பட்ட சனநாயகக் கட்டமைப்பு அரசில் – அரசியலில் செயல்பட வேண்டும் என்று அந்நூலில் வெளியிட்டுள்ளோம்.
தமிழ்நாடே ஒரு கூட்டாட்சியாய் – ஊராட்சியிலிருந்து – தமிழ்நாடு அரசு வரையான மக்களாட்சி கொண்ட கூட்டாட்சியாய் – முழு சனநாயக ஆட்சியாய் மாற்றப்படும். மக்கள் தங்கள் விருப்பத் தேர்வுக்கேற்ப ஆட்சியாளர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். பல கட்சி சனநாயகம் செழிப்பாக்கப்படும் என்பவற்றைச் சாரமாகத் தெரிவித்துள்ளோம்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தையெல்லாம் ஒரு பொருட்டாக மதித்து அவர்களின் கொள்கை அறிக்கையைப் படிக்க வேண்டுமா என்று விடுதலையார் புறக்கணித்திருந்தால் அதில் தவறொன்றுமில்லை. அது அவர் உரிமை. ஆனால், ஓர் அமைப்பைப் பற்றி அதன் செயல்முறையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி “தீர்ப்பெழுதுவது” தவறு என்று கருதுகிறேன்.
(தொடரும்)
பகுதி - 1
https://www.facebook.com/tamizhdesiyam/posts/1843615429157292
பகுதி - 2
https://www.facebook.com/tamizhdesiyam/posts/1844669489051886
பகுதி - 3
https://www.facebook.com/tamizhdesiyam/posts/1845074199011415
பகுதி - 4
https://www.facebook.com/tamizhdesiyam/posts/1845811998937635
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Labels: கட்டுரைகள், தமிழர்_ஆன்மிகம், தமிழ்_இந்து
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்