<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

" காவிரித் தாய் மார்பறுக்க வரும் ஹல்தரே திரும்பிப் போ! , காவிரி உரிமை மீட்புக் குழு கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!"---- காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

Friday, June 17, 2022


 காவிரித் தாய் மார்பறுக்க வரும்
ஹல்தரே திரும்பிப் போ!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு
கல்லணையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
======================================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
======================================


காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர், நடுநிலை தவறிய நபர்! உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர்.

அவர், உச்ச நீதிமன்றம் விதித்த அதிகார வரம்பை மீறி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்கக்கூடிய ஆவேசத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்த அதிகாரம் ஆணையத்திற்குக் கிடையாது. அண்மையில் இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அறிவுரையைப் பெற்றதாகவும், அது மேக்கேதாட்டில் அணை கட்டுவது குறித்து முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறியதாகவும், அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேக்கேதாட்டு பற்றிய பொருள் விவாதிக்கப்படும் என்றும் 06.06.2022 அன்று செய்தி வெளியிட்டார்.

மேற்படி ஆணையத்தின் கூட்டம் 17.06.2022 அன்று புதுதில்லியில் நடைபெறும் என்று அறிவித்த ஹல்தர், இப்பொழுது அக்கூட்டத்தை 23.06.2022-க்கு மாற்றி வைத்துவிட்டு, தமிழ்நாட்டுக் காவிரி அணைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு, நேற்று (16.06.2022) பில்லிகுண்டுலு பகுதியைப் பார்வையிட்டுள்ளார். இன்று (17.06.2022) – முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றை பார்வையிட்டுவிட்டு, மாலை 3 மணிக்கு திருச்சி கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை அனுமதி குறித்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழுவும், மற்றும் விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க தடையாணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஹல்தரின் நடுநிலை தவறிய மேக்கேதாட்டு ஆதரவுப் போக்கைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பின்னணியில், பருவம் தவறிப் பெய்த மழையினால் மேட்டூர் அணை நிரம்பியிருப்பதையும் காவிரி டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் தாராளமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கர்நாடகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என ஆணையக் கூட்டத்தில் பேசவும், தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேட்டூர் – சரபங்கா கால்வாய்த் திட்டம், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது என்று பொருத்தமற்ற இலாவணிக் கச்சேரி பாடுவதற்காகவும் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டிருப்பதாக ஐயம் ஏற்படுகிறது.

ஏனெனில், அவர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வாராவாரம் / மாதாமாதம் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்துவிடச் செய்து செயல்படுத்திக் காட்டியதே இல்லை! பருவமழை மற்றும் பருவந்தவறிய மழை வெள்ளங்களால் மிகை நீரைக் கர்நாடகம் திறந்துவிட்டதை ஒட்டியும், கர்நாடக அணைகளுக்குக் கீழ்ப் பகுதியிலும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும் மழை நீர் ஓடி வந்ததாலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து, கடந்த சில ஆண்டுகளாக குறுவை – சம்பா சாகுபடி நடந்து வருகிறது. அத்துடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

மனச்சான்று உருத்தலின்றி, நடுநிலை தவறி கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களுக்குத் துணையாக செயல்படக்கூடிய நபர் இந்த ஹல்தர் என்பதை மோடி அரசு புரிந்து கொண்டுதான், இவருடைய பணி ஓய்வுக்குப் பிறகு இவரை ஐந்தாண்டுகளுக்குக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தியது. இவர் இந்திய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே வலிந்து கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பொழுது அந்த மேக்கேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார். நம்முடைய காவிரித் தாயின் மார்பறுக்க வரும் ஹல்தருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று கண்டன முழக்கமெழுப்புவது தமிழ்நாட்டு உழவர்களின் கடமை மட்டுமல்ல, அனைத்து மக்களின் கடமையுமாகும்!

காவிரி உரிமை மீட்புக் குழு உழவர் பெருமக்களும் உணர்வாளர்களும் இன்று (17.6.2022) பிற்பகல் 2.30 மணி முதல் கல்லணையில் திரண்டு, அங்கு வரும் எஸ்.கே. ஹல்தருக்குக் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என்று அறவழியில் முழங்குவார்கள்! வாய்ப்புள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காவிரிக் காப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
==========================

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்