<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும்! "--- தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் கோரிக்கை!

Thursday, March 24, 2022

 

ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை

சிறையில் அடைக்கக் கூடாது
வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும்!
================================
தமிழ்த்தேசியப் பேரிக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் கோரிக்கை!
=================================

தமிழர்களுக்கு எதிரான இனவெறியை ஊட்டினால் போதும் நமக்குச் சிங்களப் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதிய சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அந்நாட்டின் உற்பத்திப் பெருக்கம், ஏற்றுமதிப் பெருக்கம், மக்களுக்குரிய அடிப்படை நல்வாழ்வு போன்றவற்றில் அக்கறையின்றி ஊதாரித்தனமாக ஆட்சி நடத்தி, அரசியல் நடத்தி அந்நாட்டை ஓட்டாண்டி ஆக்கி விட்டன.

சிங்கள மக்களும், தமிழ் மக்களும் உணவின்றித் தவிப்பதையும், எரிபொருளும், எரிவளியும் (சமையல் வாயும்) கிடைக்காமல் அல்லாடுவதையும் நீண்ட வரிசைகளில் நெடுநேரம் காத்துக் கிடப்பதையும் ஊடகங்களில் பார்க்கும் போது உள்ளம் பதைக்கிறது.

சீனாவிடம் தான் எப்போதும் சிங்கள இலங்கை நெருக்கமாக இருக்கும். சீனா 1960களின் தொடக்கத்தில் இந்தியாவின் மீது படையெடுத்துப் போர் நடத்திய போதும், வங்காளதேச விடுதலைப் போரின் போதும் (1971) இலங்கை இந்தியாவின் பகை நாடுகளோடு தான் நெருக்கம் காட்டியது. வங்காள தேசப் போரின் போது மேற்குப் பாக்கித்தான் வானூர்திகள் நமது வான் வெளியில் பறக்கத் தடை போட்டது இந்தியா. அப்போது மேற்குப் பாக்கித்தான் போர் வானூர்திகள் கொழும்பில் இறங்கி எரிபொருள் போட்டுக் கொண்டு – வங்காள தேசம் (கிழக்குப் பாக்கித்தான்) சென்று இந்தியப் படைகள் மீது போர் நடத்த இலங்கை அரசு உதவியது.

அண்மைக் காலமாக சீனாவுடன் மிக நெருக்கம் கொண்டு, துறைமுகங்களையும், தொழில் மண்டலங்களையும் சீன நிறுவனங்களுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இப்போதுள்ள கோத்தபய இராசபட்சே அரசு சீனாவுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறது.

திவாலாகிவிட்ட இலங்கை அரசு இந்தியாவிடம் தொடர்ந்து கடன் உதவி பெற்று வருகிறது. பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா அண்மையில் இரு தவணைகளில் கடன் கொடுத்துள்ளது இலங்கைக்கு! இந்தக் கடன்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதைக் தெரிந்து கொண்டே கொடுக்கிறது மோடி அரசு.

இந்தியாவைக் காங்கிரசு ஆண்டாலும் பா.ச.க. ஆண்டாலும் சிங்களர்களைப் பங்காளிகளாகக் கருதிப் பாசம் காட்டும் பிணைப்பு எப்போதும் உண்டு! ஈழத்தமிழர்களை அயலாராகக் கருதும் போக்குத் தொடர்கிறது.

இலங்கைக்கு இந்தியா அள்ளிக் கொடுக்கும் நிதியில், உ.பி., மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பெற்ற வரிப்பணம் கொஞ்சமும் இருக்காது. அம்மாநிலங்கள் இந்திய அரசுக்குக் கொடுக்கும் வரிப்பணத்தைப் போல் 1 ½ மடங்கு நிதியை இந்திய அரசிடமிருந்து திரும்பப் பெற்று விடுகின்றன. ஆனால் அதிக வரிப்பணம் கொடுக்கும் தமிழ்நாடு கர்நாடகம் மராட்டியம் போன்றவை ஒரு ரூபாய் இந்திய அரசுக்குக் கொடுத்தால் 40 காசுதான் திரும்பப் பெறுகிறது என்று கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த போது காங்கிரசுக்காரரான சித்தராமையா கூறினார்.

இப்பொழுதாவது இந்திய அரசு, தமிழ்நாட்டுத் தமிழர்களின் குரலுக்குப் செவி கொடுத்து, ஞாயம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, சீனப்பிடியிலிருந்து அதை விடுவிக்க வாய்ப்புண்டு; தமிழர்களை அரவணைத்து வாழ்வளிக்க வாய்ப்புண்டு!

கோரிக்கைகள்:
1. வாழ வழியில்லாமல், பட்டினி கிடந்து, பசியோடு குழந்தைகளுடன், குடும்பப் பெண்களுடன் தஞ்சம் தேடித் தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகள் தகுதியில் அரவணைத்து வாழ்வளிக்க வேண்டும். அவர்களைச் சிறையில் தள்ளக் கூடாது. ஏற்கெனவே, சிங்கள அரசு நடத்திய போரில் உயிர் பிழைக்கத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்த தமிழர்களைச் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்ற தலைப்பில் தான் இந்தியா வைத்துள்ளது. அவர்களுக்கு அகதி உரிமை இல்லை. இந்தியக் குடியுரிமை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இப்பொழுது வரும் ஈழத்தமிழர்களுக்கு ஏதிலியர் (அகதிகள்) என்ற தகுதியில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

2. தமிழ்நாட்டு மீனவர்களை அன்றாடம் தாக்குவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் சிங்கள அரசுக்குத் தொடர் வாடிக்கை ஆகிவிட்டது. ஏனெனில் இந்திய அரசு தட்டிக் கேட்பதில்லை.
இந்நிலையில் இந்திரா காந்தி இலங்கைக்குக் கொடுத்த கச்சத் தீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற வெண்டும். தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்கக் கூடாது என்று அந்த அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டும்.

3. இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987-இன்படி, இணைக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு தமிழர் மாகாணங்கள், பின்னர் பிரிக்கப்பட்டுவிட்டன. மீண்டும் அவற்றை ஒருங்கிணைக்கும் சட்ட ஏற்பாட்டைச் செய்யுமாறு இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் இந்திய அரசிடம் இக்கோரிக்கைளை எழுப்ப வேண்டும்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===================================== 

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்