"ஓசூரில் டாட்டா தொழிற்சாலை இந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது! வெளியாரை வெளியேற்றுவோம்!" ---தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
Friday, October 14, 2022
ஓசூரில் டாட்டா தொழிற்சாலைஇந்திக்காரர்களை இறக்குமதி செய்கிறது!
வெளியாரை வெளியேற்றுவோம்!
================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!
================================
ஓசூா் தொடா்வண்டி நிலையத்தில் 29.09.2022 அன்று 860 இளம்பெண்கள் இந்தி மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்து இறங்கினா். இவா்களைத் தனிச்சிறப்புத் தொடா்வண்டியில் அழைத்து வந்தது வடநாட்டு டாட்டா நிறுவனம். கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம், கூத்தனப்பள்ளி கிராமத்தில் உள்ள டாட்டா மின்னணு (TATA Electronic PVT LTD) தொழிற் சாலையில் வேலை பார்ப்பதற்காக அழைத்து வந்துள்ளார்கள். அடுத்தடுத்து சிறப்புத் தொடா்வண்டிகளில் இந்திக்காரா்களை அழைத்து வர உள்ளார்களாம். ஏற்கெனவே இதே தொழிற்சாலையில் ஆந்திரா, கர்நாடகம், மகாராட்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு முடித்தும், பட்டப்படிப்பு முடித்தும் பல இலட்சம் இளம் பெண்கள் வேலையின்றி விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்கள். அவா்களுக்கெல்லாம் இந்தி முதலாளிகள் வேலை தர மாட்டார்கள். இந்திக்காரர்களுக்கே வேலை தருவார்கள்.
மண்ணின் மக்களுடைய வேளாண் நிலங்களைக் கைப்பற்றி, வேதி நச்சு மண்டலமாக்கி, அவா்களை ஊரைவிட்டு வெளியேற்றி தொழில் நடத்தும் டாட்டா போன்ற வடநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழா்களை – மண்ணின் மக்களைப் புறக்கணிக்கின்றன, இந்திக்காரர்களுக்கும் இன்னபிற வெளி மாநிலத்தவா்களுக்கும் வேலை தருகின்றன.
அன்னையின் மடியிலேயே பிள்ளைகளை அனாதைகள் ஆக்கும் இந்த அநீதிக்கு அதிமுக, திமுக ஆட்சிகள் தொடர்ந்து துணை நிற்கின்றன. இப்போதுள்ள மு.க. ஸ்டாலின் அரசு, இந்திக்காரா்களைப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. தொடக்க காலத்தில், “வடவா் நம்மவரும் இல்லை; நல்லவரும் இல்லை” என்று வசனம் பேசி வளா்ந்த கட்சி தி.மு.க.
இப்போது தமிழ்நாட்டில் உள்ள, இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், திட்டம் போட்டு இந்திக்காரர்களையே 90 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடு வரை வேலையில் சோ்க்கிறது இந்திய அரசு. தொடா்வண்டித் துறை, அஞ்சல்துறை, இந்திய அரசு வங்கிகள், வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகங்கள், வானூா்தி நிலையங்கள், துறைமுகங்கள், ஆவடி -திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், கணக்குத் தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட அனைத்திலும் இந்திக்காரா்களுக்கே வேலை! மண்ணின் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இவ்வேலைகளுக்கான தோ்வுகள் அனைத்திலும் மோசடி வேலைகளைச் செய்து இந்திக்காரர்களையே தேர்ச்சி பெறச் செய்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணித் தோ்வாணையத் தோ்விலும் இந்திக்காரா்கள் தோ்வு எழுதி வேலைகளில் சோ்கிறார்கள். இதிலும் ஊழல்! தமிழ்நாடு அரசுப் பணிக்கானத் தோ்வுகளை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் எழுதலாம் என்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016இல் சட்டத் திருத்தம் செய்தது. அதை அப்படியே கடைபிடிக்கிறது திமுக ஆட்சி! தமிழ் ஒரு தோ்வுத் தாளாக இருக்கும் என்று திமுக ஆட்சி புதிய நிபந்தனை போட்டுள்ளது. ”கொடுப்பதைக் கொடுத்து” தமிழில் அதிக மதிப்பெண் வாங்கிவிடுகிறார்கள் இந்திக்காரா்களும் இதர வெளி மாநிலத்தவர்களும்!
அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வடவா்கள் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். தனியார் துறை தொழில் நிறுவனங்களில், உணவகங்களில், கட்டுமானத் தளங்களில், சாலையோரக் கடைகளில், வேளாண் வேலைகளில் எங்கும் இந்திக்காரர்கள். அவா்கள் தமிழா்களின் வாழ்வாதார வேலைகளை மட்டும் பறிக்கவில்லை; தமிழா் தாயகத்தையே பறிக்கிறார்கள். வேலைத்தளங்கள், கடைகண்ணிகள் என அனைத்து இடத்திலும் இந்தியைப் பரப்புகிறார்கள். இந்திச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியை நம்மவா்க்கு உண்டாக்குகிறார்கள்.
இந்த அவலம் தொடா்ந்தால் தமிழ்நாடு தமிழா் தாயகமாக நீடிக்காது. தமிழ்நாட்டை இந்தி மண்டலமாக்க வேண்டும் என்பதே இந்திய ஏகாதிபத்தியவாதக் கட்சிகளான காங்கிரசு மற்றும் பாசகவின் திட்டம்! அத்திட்டத்திற்குத் துணைபோய், தமிழ் இனத்திற்கு இரண்டகம் செய்கின்றன திமுகவும் அதிமுகவும்.
இப்படியே அனுமதித்தால் இந்த வெளியார் வாக்குரிமை பெற்று, தமிழ்நாட்டின் தோ்தல் முடிவுகளைத் தீா்மானிக்கும் ஆற்றல்கள் ஆவார்கள். இவா்கள் பாசக, காங்கிரசு போன்ற இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். இவா்களே வேட்பாளா்களும் ஆவார்கள். வெற்றியும் பெறுவார்கள். திரிபுரா இப்படித்தான் வங்காளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
டாட்டா தொழிற்சாலையில் இந்திக்காரர்களை வெளியேற்ற வாரீா்!
ஓசூா் டாட்டா மின்னணுத் தொழிற்சாலையிலிருந்து, இந்திக்காரா்களை வெளியேற்ற, அத்தொழிற்சாலை முன் அறப்போராட்டம் நடத்துவோம்! விரைவில் நாள் அறிவிப்போம்!
திறந்த வீட்டில் நுழையும் பிராணிகள் போல் வெளியார் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்று இன்றுள்ள நிலையை மாற்ற வேண்டும். நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இருப்பது போல் வெளியார் தடுப்பு உள்நுழைவு அனுமதி (Inner Line Permit) அதிகாரம் தமிழ்நாடு அரசு பெறக் கோருவோம்.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடு வேலைகளும் மண்ணின் மக்களுக்கே வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வணிகம் நடத்தும் வெளி நாட்டினரும், வெளி மாநிலத்தவரும் குறிப்பிட்ட நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் குறைந்தது 30 விழுக்காடு பங்கு தமிழ்நாட்டு மண்ணின் மக்களின் முதலீடாக இருக்க சட்டமியற்ற வேண்டும். படிப்படியாகத் தமிழா்களுக்கு இந்நிறுவனங்களில் 51 விழுக்காடு முதலீட்டுப் பங்கு என்றாக்க வேண்டும். தமிழ்நாட்டுத் தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தனியார் துறை நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை – ஊழியா்களைத் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களிடமிருந்தே பெறும் வாய்ப்பை அவா்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ”மண்ணின் மக்கள் வேலை வழங்கு வாரியம்” அமைத்து அந்தந்த நிறுவனத்துக்குத் தேவையான தொழிலாளிகளை ஊழியா்களை வழங்கிட வேண்டும். அதற்காக வேலை கோருவோர் பட்டியலைப் பராமரிக்க வேண்டும்.
புதிதாகச் சோ்க்கப்பட்ட வடநாட்டுப் பெண்களை வெளியேற்றித் தமிழ் மண்ணின் பெண்களுக்கு வேலை தரக் கோரித் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் தோழா் கோ. மாரிமுத்து அவா்கள் தலைமையில் பேரியக்கத் தோழா்கள் கடந்த 08.10.2022 அன்று மேற்படி டாட்டா மின்னணுத் தொழிற்சாலையின் மனிதவளத் தலைமை அதிகாரி திரு. இரஞ்சன் சட்டோபாத்யாவையும், அடுத்த நிலை அதிகாரிகளான திரு ஜெயசங்கா், திருவாட்டி காமாட்சியையும் நேரில் சந்தித்து கோரிக்கை மடல் கொடுத்திருக்கிறார்கள். அதே கோரிக்கையைக் கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் கடந்த 10.10.2022 அன்று நம் தோழா்கள் கொடுத்திருக்கிறார்கள்.
நம் கோரிக்கையை விரைவாக நிறைவேற்றவில்லை யென்றால், அடுத்து ஒரு நாள் முடிவு செய்வோம், அழைப்போம். வாருங்கள்; கூத்தனப்பள்ளி டாட்டா தொழிற்சாலை முன் கூடுவோம். அறப்போராட்டம் நடத்துவோம்!
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================
Labels: அறிக்கைகள், தமிழ்நாட்டு_வேலை_தமிழருக்கே, வெளியார்_சிக்கல்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்