"“கரும்பு உழவர்கள் நிலங்கள் மீது கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி ஏப்பம்விட்ட ஆலை நிலங்களைக் கைப்பற்றுங்கள்.” ---- உழவர் காத்திருப்புப் போராட்டத்தில் பெ. மணியரசன் எழுச்சி உரை!
Wednesday, December 21, 2022
“கரும்பு உழவர்கள் நிலங்கள் மீது கோடிக்கணக்கில் வங்கிக் கடன் வாங்கி ஏப்பம்விட்ட ஆலை நிலங்களைக் கைப்பற்றுங்கள்.”=========================
உழவர் காத்திருப்புப் போராட்டத்தில் பெ. மணியரசன் எழுச்சி உரை!
=========================
கரும்பு உழவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் நிலங்களை வங்கிகளில் அடமானம் வைத்து 200 கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொண்டும், உழவர்களிடம் வாங்கிய கரும்புக்குப் பணம் தராமல் 100 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டும் மோசடி செய்த தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளிகளையும் அதற்கு உடந்தையாய் இருந்த அதிகாரிகளையும் உரிய வழக்கில் சிறையில் தள்ளவேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் ஆவேசமாகப் பேசினார்.
குடந்தை அண்டக்குடியை அடுத்துள்ள திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை வாயில் முன்பாக – மேற்படி ஆலை நிர்வாகத்தால் மோசடிக்குள்ளான உழவர்கள் கடந்த 30.11.2022 முதல் நீதிகேட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தின் 21-ஆம் நாளான 20.12.2022 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழ்நாடு உழவர் முன்னணி குடந்தைப் பகுதிப் பொறுப்பாளர் தோழர் திருஞானம், ஆவூர் ஆசிரியர் பெ. கோபால் மற்றும் தோழர் தூயவன் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், பட்டீசுவரம் தமிழக உழவர் முன்னணியினரும் கலந்து கொண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தும் கரும்பு உழவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உழவர்களுக்கான கோரிக்கை முழக்கங்களைத் தோழர் நா. வைகறை எழுப்பிட, உழவர்கள் இடியோசைபோல் எதிரொலித்தனர்.
கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தங்க. காசிநாதன், செயலாளர் திரு. நாக. முருகேசன், திருவாளர்கள் இராசேந்திரன், இரவிச்சந்திரன், சரபோஜி ஆகியோரும் திரளான உழவர்களும் பங்கேற்றனர்.
சர்க்கரை ஆலை நிலங்களில் சாகுபடி செய்யுங்கள்
வாழ்த்திப் பேசிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பின்வருமாறு கூறினார்:
“உழவர்களே, நீங்கள் உங்கள் கரும்பு சாகுபடிக் கடனுக்காக வங்கிப் படிவங்களில் கையெழுத்துப் போடும்போது, சூழ்ச்சியாக, சர்க்கரை ஆலைக்கான கடனுக்கு உங்கள் நிலங்களை அடமானம் வைத்ததாக பொய் ஆவணம் தயாரித்துள்ளார்கள். இவ்வாறு உழவர்கள் நிலங்களை அடமானம் வைத்து 200 கோடி ரூபாய் ஆரூரான் சர்க்கரை ஆலை முதலாளி ராம் தியாகராசனும், ஆலை நிர்வாகமும் சுருட்டிக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் உரிய தண்டனைச் சட்டப்பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இதேபோல், எ. சித்தூர் ஆருரான் சர்க்கரை ஆலையிலும் கரும்பு உழவர்களைக் காவு கொண்டுள்ளது மோசடிக் கும்பல்.
பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில் வேறொரு மோசடிக்கும்பல் – அதாவது ஆலை நிர்வாகிகளும் வங்கிகளின் ஊழல் பெருச்சாளிகளும், நூறு கோடிக்கு மேல் உழவர்களின் நிலங்களை மோசடியாக அடமானம் வைத்து ஏமாற்றியுள்ளார்கள். அத்துடன், உழவர்களிடம் வாங்கிய கரும்புக்கு ஆலை நிர்வாகம் பணம் தராமல் ஏமாற்றிவிட்டது. இந்த ஆலைகளையும் மூடிவிட்டார்கள்; கால்ஸ் சாராய குழுமத்திற்கு மேற்படி ஆலைகளை விற்றுவிட்டார்கள். தமிழ்நாடு அரசுக்கு சர்க்கரை ஆலை தேவை இல்லை; சாராய ஆலைதான் தேவை.
தமிழ்நாடு முதலசை்சர் அவர்கள் இதில் போர்க்கால வேகத்துடன் தலையிட்டு, உழவர்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ள கடன்களை விலக்கித் தீர்வு காண வேண்டும். மோசடிக் குற்றவாளிகளைச் சிறையில் தள்ள வேண்டும்.
மோசடி செய்து உழவர்கள் தலையில் கடன் சுமத்தியதுடன் – அவர்களிடம் வாங்கிய கரும்புக்கும் விலை தராமல் – ஆலையையும் அதன் நிலம் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்றது குற்றம். ஆலை நிர்வாகம் மோசடியாக உழவர்கள் மீது சுமத்திய கடனுக்கும், உழவர்கள் விற்ற கரும்புக்கு நிர்வாகம் விலைதராமல் இருப்பதற்கும் தீர்வு காணாமல் கால்ஸ் நிறுவனம் இந்த ஆலையை வாங்கியது குற்றம்.
வெண்ணையை வீட்டில் வைத்துக் கொண்டு வீதியில் நெய்க்கு அலைய வேண்டாம். திருமண்டங்குடி ஆலையின் 440 ஏக்கர் நிலங்களைக் கரும்பு உழவர்கள் கைப்பற்றி – ஒவ்வொருவருக்கும் வரவேண்டிய பணத்திற்கேற்ப நிலங்களைப் பகிர்ந்து சாகுபடி செய்ய வேண்டும். அவ்வாறு வயலில் இறங்கி நிலம் பகிரும்போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆதரவாக மற்ற உழவர்களும் வருவார்கள்.”
“தற்காப்புக்கான சிறந்த உத்தி முதலில் தாக்குதல் தொடுப்பதே என்பர். உங்கள் போராட்டம் வெல்க” என்று பேசி முடித்தார்.
==========================================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
============================
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/tamizhdesiyam
===================================
Labels: அறிக்கைகள், விவசாயம்
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்