"பிற்காலச் சோழர்கள் தலைநகர் தஞ்சையில் தற்கால வரலாறு படைக்க வாரீர்!" ------ தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பேரழைப்பு!
Thursday, May 8, 2025
பிற்காலச் சோழர்கள் தலைநகர் தஞ்சையில்தற்கால வரலாறு படைக்க வாரீர்!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் பேரழைப்பு!
===================================
என்னரும் தமிழர்களே!
இந்தியாவின் தனித்தன்மைகள் இரண்டு! ஒன்று பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பிக்கும் வர்ண-சாதிப் பிரிவுகள்! அவற்றின் வழியாகப் பல்வேறு வடிவங்களில் தொடரும் ஒடுக்குமுறைகள், பாதிப்புகள்! இரண்டு, பல்வேறு தேசிய இனங்கள் – அவற்றின் தாய்மொழிகள் – அவற்றின் மரபுவழித் தாயகங்கள் என்ற பன்முகத்தன்மை! இம்மொழி – இன – தாயகங்கள் மீது இந்தியும் சமற்கிருதமும் நடத்தும் ஆக்கிரமிப்புகள் – ஆதிக்கங்கள்! பாரத மாதா பஜனைகளால் இவற்றை மறைக்க முடியவில்லை! மறுக்க முடியவில்லை! அதேபோல், இந்தி – குசராத்தி மண்டலப் பெரு முதலாளிகள் நடத்தும் பொரு ளாதார வேட்டைகளையும் “இந்திய தேசிய”ப் புகழ்ச்சிகளால் மறைக்க முடியவில்லை!
தமிழ்நாட்டில் 85 ஆண்டுகளாக ஜெபிக்கப்படும் “திராவிட மந்திரமும்” இந்நோய்களுக்கு இன்று வரை தீர்வு காணவில்லை!
இந்திக்காரர்களின் இணைபிரியாக் கூட்டாளிகள் என்று கருதப்பட்ட மராட்டியர்களிடையே கூட இந்தி எதிர்ப்பும், மாநில உரிமைக் கோரிக்கையும் எழுச்சி பெற்றுள்ளன. அம்மாநில பாசக முதலமைச்சர் பட்னாவிஸ் “மகாராஷ்டிராவில் இந்தி கட்டாய மொழிப் பாடமல்ல, விருப்பப்பாடம்தான்” என்று அறிவிக்கிறார்! இந்தி மாநிலங்களில் கூட சமூக நீதிக் கோரிக்கைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளம்புகின்றன! மாநிலக் கட்சிகள் இந்தியாவில் அதிகரித்துவிட்டன!
உச்ச நீதிமன்றமே இந்திய ஆட்சியாளர்களின் – அவர்களின் தமிழ்நாட்டுத் தளபதியான ஆளுநர் இரவியின் எதேச்சாதிகாரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் ஆண்டுக்கணக்கில் முடக்கி வைத்திருந்த தமிழ் நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய பத்து சட்ட முன்வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) கடந்த 8.4.2025 அன்று அரசமைப்புச்சட்ட ஏற்பிசைவு கொடுத்துத் தீர்ப்பளித்தது! அதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 142 உச்ச நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. ஆனால், குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தங்கரிலிருந்து தமிழ் நாட்டு பா.ச.க.வினர் வரை துடிக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தைக் கைக்குள் அடக்கி வைக்க உத்திகள் வகுக்கின்றனர்!
கருணாநிதி முதல்வராக இருந்தபோது மாநில அதிகாரங்களை மீட்க 1969-இல் அமைத்த இராசமன்னார் குழு வழங்கிய பரிந்துரைகளை அவரே “பட்டினி போட்டு” சாகடித்தார்! அவரது தனயன் - இப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் - தமிழ்நாட்டு உரிமைகளை மீட்கப் புதிதாக உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைத்துள்ளார்!
இந்தப் பின்னணியில்தான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தஞ்சையில் 10.5.2025 காரி (சனி)க் கிழமை “கூட்டரசுக் கோட்பாடு மாநாடு” (Conference on Federal State) நடத்துகிறது!
நாம் முன்வைக்கும் தீர்வு
----------------------------------
முதலில், உள்ளதை உள்ளபடி பார்க்கும் மனம் வேண்டும். கற்பனைக்கேற்ப கதை புனையக் கூடாது! இந்திய மண்டலத்தில் இருந்த மன்னர்களை – தளபதிகளை – வீர்ர்களை - மக்களைக் கொன்றும் சிறையில் அடைத்தும் புதிய நாட்டை ஆங்கிலேய வணிகர்கள் 18 ஆம் நூற்றாண்டில் உண்டாக்கினர். அவர்களின் பிரிட்டன் நாடாளுமன்றம் 1773-ஆம் ஆண்டு இந்திய ஒழுங்குமுறைச் சட்டம் (India Regulating Act – 1773) இயற்றி தனது மேற்பார்வையில் இந்தியாவை வைத்தது. “இந்தியா” என்ற பெயர், இலண்டனில் பதிவு செய்யப்பட்ட வெள்ளைக்கார ஈஸ்ட் இந்தியா கம்பெனி (East India Company) என்ற பெயரில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இந்தி மண்டலத்தாரும், ஆரிய பிராமணர்களும், ஆரிய வைசியரும் இருந்தனர்! ஆங்கிலேய இந்தியாவில், மொழி – இன வழி மாநில அமைப்புகள் கோரி அனைத்திந்திய காங்கிரசு மாநாடுகளில் தீர்மானங்கள் போட்டனர். ஆங்கிலேய அரசு மொழி – இன வழி மாநிலங்கள் அமைக்க மறுத்தது.
இந்நிலையில் 1924 பெல்காம் ஏ.ஐ.சி.சி. மாநாட்டுத் தீர்மானப்படி காங்கிரசுக் கட்சி தனது மாநிலக் கமிட்டிகளை மொழி – இன அடிப்படையில் மாற்றி அமைத்தது. அதையொட்டி, அப்போதே அமைக்கப்பட்டதுதான் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி! ஆந்திரப்பிரதேச காங்கிரசுக் கமிட்டியும் தனியே அமைக்கப்பட்டது. அப்போது இவ்விரு பகுதிகளும் சென்னை மாகாணத்தில் இருந்தன!
ஆனால், 1947-இல் இந்தியா விடுதலை பெற்று, அதன் அதிகாரம் காங்கிரசு கையில் வந்தபின், மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்தார் பண்டித நேரு! ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் பொட்டி சிறீராமலு! அப்போது போராடிய ஆந்திர மக்கள் மீது காங்கிரசு ஆட்சி துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தை 1953-இல் பெற்றனர்! பின்னர் இந்தியா முழுவதும் மொழி – இன வழி மாநிலங்கள் உருவாயின!
சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உண்ணாப்போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரை சாகவிட்டது காங்கிரசு ஆட்சி.
1919, 1935 ஆண்டுகளில் ஆங்கிலேய அரசு இயற்றிய சட்டங்களின்படி, மாநில அரசுகளுக்குக் கிடைத்த அதிகாரங்களில் பலவற்றை விடுதலை பெற்ற இந்தியாவில் காங்கிரசு ஆட்சி பறித்தது.
சனநாயகத்தின் குரல் வளையை நெரித்து, சர்வாதிகாரத்தை “நெருக்கடி நிலை” என்ற செயற்கைப் பெயரில் திணித்த இந்திரா காந்தி, 42-வது அரசமைப்புச் சட்ட திருத்தம் என்ற பெயரில், மாநில மக்களின் பல உரிமைகளைப் பறித்தார். வெள்ளையர் ஆட்சிகாலத்திலிருந்து மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை இந்திய அரசின் மேலாதிக்கமுள்ள பொதுப் பட்டியலுக்கு 1976-இல் மாற்றினார்.
சோனியா காந்தி – கருணாநிதி (காங்கிரசு – தி.மு.க.) கூட்டணி, 2004-இல் இருந்து 2014 வரை நடத்திய இந்திய ஆட்சியில், வெள்ளையர் ஆட்சிகாலமான 1937-இல் இருந்து மாநில அரசிடமிருந்த விற்பனை வரிவசூல் உரிமையைப் பறித்து, சரக்கு சேவை வரிக்குள் (GST) திணித்து இந்திய அரசு அதிகாரத்திற்கு மாற்றினர். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுக்கிருந்த உரிமையைப் பறித்து, இந்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வான “நீட்” ஐத் திணித்தனர். பின்னர் இவற்றையெல்லாம் தீவிரமாகச் செயல்படுத்தியது காங்கிரசின் அரசியல் தம்பியான பா.ச.க. ஆட்சி!
இந்திய அரசின் காவல்துறை (CBI), மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல், மாநிலங்களில் எந்தக் குற்ற வழக்கிலும் ஈடுபடக்கூடாது என்று இருந்த தடையை நீக்கி, மாநில அரசின் அனுமதி பெறாமல் நுழைந்து கைது செய்து வழக்கு நடத்தும் அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (NIA) என்ற அமைப்பை உருவாக்கியது காங்கிரசு-தி.மு.க. கூட்டணி ஆட்சி.
தமிழ்நாட்டு வயல்களில் என்ன நெல் விதைப்பது, அதற்கு என்ன விலை வைப்பது என்பது எல்லாம் புதுதில்லி ஆதிக்கத்திற்குப் போய்விட்டன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின், மேலதிகார எசமானர்களாக நியமன அதிகாரிகளான ஆளுநர்கள் செயல்பட, இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 153, 154 தொடங்கி பல விதிகள் இருக்கின்றன! இப்போது பா.ச.க. அரசு அந்த ஆளுநர் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும், இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழ்நாட்டில் தீவிரம் பெற்றுள்ளன. அதற் காகவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்படுகின்றன. இந்திய அரசுத் திட் டங்கள் – சட்டங்கள் அனைத்தும் இந்தி – சமற்கிருதப் பெயர்களில் வருகின்றன. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை இந்தியைக் கட்டாயமாக்கி உள்ளது.
தமிழ்நாட்டையே மூன்று ஒன்றியப் பிரதேசங் களாகப் பிரித்துச் சிதைத்து விடும் திட்டம் ஆர்.எஸ்.எஸ். வசம் உள்ளது. அப்படி நடந்தால் “எங்களுக்கு மூன்று முதலமைச்சர்கள் கிடைப்பார்கள்” என்று திராவிட முகாம் குதூகலிக்கும்!
இந்த நிலையில், தமிழ்நாட்டைக் காக்க – தமிழ்நாட்டிற்குரிய தேசிய இன உரிமைகளை மீட்க, வழிவகைகள் ஆராயும் நோக்கில், தஞ்சை யில் இந்தக் “கூட்டரசுக் கோட்பாடு” மாநாடு 10.5.2025 அன்று முழுநாள் நிகழ்வாக நடக்கிறது!
முற்பகல் இலக்கியக் கருத்தரங்கில், “தமிழர் தொன்மையும், வன்மையும்” என்ற தலைப்பில் பேரா. முனைவர் கோ. தெய்வநாயகம் அவர்களும், “தமிழ் - தமிழர் மறுமலர்ச்சியில் மதுரை (1901), கரந்தை (1911) தமிழ்ச்சங்கங்கள்” என்ற தலைப்பில் பேரா. முனைவர் மு. இளமுருகன் அவர்களும், “தமிழர் ஆன்மிக மொழி தமிழே” என்ற தலைப்பில் வடகுரு மடாதிபதி குச்சனூர்க் கிழார் அவர்களும், “தமிழ் மன்னர்களின் நிலதான அறமும் – அவதூறுகளும்” என்ற தலைப்பில் ஆய்வுச் செம்மல் இரா. மன்னர் மன்னன் அவர்களும் உரையாற்றுகின்றனர்.
மாலை நடைபெறும் கூட்டரசுக் கருத்தரங்கில் “வரிவிதித்து வசூலித்தல்” என்ற தலைப்பில் த.தே,பே. துணைப் பொதுச் செயலாளர் க. அருணபாரதி அவர்களும், “ஆட்சி மொழி” என்ற தலைப்பில் நாம்தமிழர் கட்சியின் இளை ஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும் பாவனம் கார்த்திக் அவர்களும், “உள்ளாட்சியில் தன்னாட்சி” என்ற தலைப்பில் “தன்னாட்சி” அமைப்பின் துணைத் தலைவர் நந்தகுமார் சிவா அவர்களும், “உண்மையான கூட்டரசில் ஆளுநர் பதவி உண்டா?” என்ற தலைப்பில் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச் செல்வி அவர்களும் உரையாற்றுகின்றனர்.
தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து முதலில் சிந்துச் சமவெளிக்கும், அங்கிருந்து தமிழ் நாட்டிற்கும் குடியேறிய வந்தேறிகள் என்று ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ள “சிந்துவிலிருந்து வைகை வரை” என்ற நூலுக்கு மறுப்பாகவும், சிந்துவெளி மற்றும் குமரிக் கண்ட தமிழர் குறித்த முழு ஆய்வாகவும் தக்கார் ம.சோ. விக்டர் அவர்கள் எழுதியுள்ள “பஃறுளியிலிருந்து சிந்துவரை” என்ற நூல் இம் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.
“தமிழ் மேல் ஆணை” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர் தலைமையில் ஆற்றல்மிகு பாவலர்களின் பாவரங்கம், தமிழர் மரபுக்கலை விற்பன்னர்களின் நாட்டுப்புற இசை, மள்ளர் கம்பம் முதலிய நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. என்னரும் தமிழர்களே! வாருங்கள் தஞ்சைக்கு!
எந்தத் தஞ்சைக்கு? பிற்காலச் சோழ மன்னர்கள் தங்கள் பேரரசைக் கூட்டரசாக நிர்வகித்த தஞ்சைக்கு! பிற்காலச் சோழர்கள் வரலாற்றை ஆய்வு செய்த ஜப்பான் நாட்டு அறிஞர் நொபுரு கராசிமா, “சோழப் பேரரசர்கள் ஒற்றை அதிகார மைய ஆட்சியை நடத்தவில்லை. சிற்றரசுகளுக்கு முழு அதிகாரம் கொடுத்து ஒரு கூட்டரசை (Segmentary State) நடத்தினர்” என்று பதிவு செய்துள்ளார்.
சோழர்கள் கூட்டரசுக்கு மட்டும் முன்னோடிகள் அல்லர்; உள்ளாட்சி – ஊராட்சி சனநாயகத்திற்கும் முன்னோடிகள்! சோழர்கள் ஆட்சியில் குடவோலை முறை மூலம் ஊராட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்தனர் ஊர்மக்கள்!
அப்படிப்பட்ட தஞ்சை மண்ணுக்கு – தமிழ் மண்ணுக்கு வாருங்கள்! தமிழ் நாட்டு உரிமைகளை மீட்டெடுக்க, கூட்டரசுக் கோரிக்கைகளை வகுப்போம்! .
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Labels: MakeIndiaFullFederation, இந்திய_சட்டம், கட்டுரைகள், கூட்டரசு_கோட்பாடு, பேரியக்க_மாநாடு

0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்