<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"இந்திய தேசியத்தில் இருந்தாலும் இனத்தேசியத்தில் கால்பதித்தவர் குமரி அனந்தன்! " ---- பெ. மணியரசன் தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

Wednesday, April 9, 2025


இந்திய தேசியத்தில் இருந்தாலும்

இனத்தேசியத்தில் கால்பதித்தவர்
குமரி அனந்தன்!
==================
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
====================

இந்திய தேசியக் காங்கிரசில் இருந்தாலும், இனம், மொழி இரண்டிலும் - தமிழராக வாழ்ந்தவர்; இரண்டின் வளர்ச்சிக்கும் பங்களித்தவர் குமரி அனந்தன் அவர்கள்! இலக்கியச் செல்வர் என்று அவருக்கு அன்பர்கள் சூட்டிய மகுடம் பொருத்தமானது. அவ்வளவு நயம்பட, சூழலுக்கேற்ப தமிழ் இலக்கியச் செல்வத்தைத் தாராளமாக வழங்கியவர்!
இந்தி ஏகாதிபத்தியத் தலைநகராகச் செயல்படுவது புதுதில்லி! அங்குள்ள நாடாளுமன்ற இரு அவைகளிலும் அவற்றின் உறுப்பினர்கள் தமிழில் பேசமுடியாத அவலம் 1952-இல் இருந்து தொடர்ந்தது. 1977-இல் மக்களவை உறுப்பினரானவுடன், மக்களவையில் தமிழில் பேச உரிமை கேட்டார் குமரி அனந்தன். அதிகார பீடம் மறுத்தது. தொடர்ந்து முயன்றார்; 1978-இல் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர்கள் தமிழில் பேசும் உரிமையைப் பெற்றார். அதே போல் பணவிடை (மணிஆர்டர்) படிவம் ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் மட்டுமே இருந்தது. அப்படிவத்தில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்று வாதாடி அவ்வுரிமையையும் பெற்றார் குமரிஅனந்தன்!
ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறியர்கள் பல்லாயிரக்கணக்கில் 1983-இல் இனப்படுகொலை செய்ததைக் கண்டித்து, நெடுமாறன் ஐயா அவர்கள் நடத்திய கடல் பயணப் போராட்டத்தில், அவருடன் சேர்ந்து படகில் ஏறி அவருடன் சேர்ந்து காவல் துறையினரால் தளைப்படுத்தப்பட்டவர் குமரி அனந்தன்.
இந்திய தேசியத்தில் தீவிரமாக இருந்து கொண்டே பிறந்த இனப்பற்றில், தாய்மொழி உரிமை மீட்பில் தன்னளவிற்கு உண்மையாகச் செயல்பட்டவர் குமரி அனந்தன்!
இந்திய தேசியவாத கட்சிகளில் பொறுப்புகளில் இருந்தாலும், பிறந்த தமிழ் இனத்தின் மீது, தாய்த்தமிழ் மீது பற்றும் அவற்றின் உரிமைகள் மீது உண்மையான உணர்வுடனும் செயல்பட்டவர் குமரி அனந்தன்.
மிகச் சிறந்த மேடைப் பேச்சாற்றலை வைத்து, மற்ற பலரைப்போல் நாக்கியல் தொழிலாளியாக மாறி அவ்வப்போது அரசியல் முகாம்களை மாற்றிக் கொள்ளாதவர் குமரிஅனந்தன்.
முழு மதுவிலக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
தமிழ்வழிக் கல்விக்கான போராட்டக் களங்களில் மற்ற அமைப்புகளோடு கூட்டாகப் பங்கேற்றார் குமரி அனந்தன். தமிழ்த்தேசியப் பேரியக்கமும் தமிழ்வழிக் கல்விக்கான கூட்டு இயக்கத்தில் ஐயா குமரி அனந்தன் அவர்களோடும் - அவர் இயக்கத்தாரோடும் கூட்டாகப் பங்கேற்றுள்ளது. குமரி அனந்தன் அவர்கள் அகவை 93-இல் காலமானாலும் - நிரந்தர இழப்பு என்பது துயரமளிக்கும் நிகழ்வாகும்! இதுதான் இயற்கையின் ஆற்றல் என்று அமைதி அடைவோம்! ஐயா குமரி அனந்தன் புகழ் ஓங்குக!

===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

==============================

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்