<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழ்நாட்டில் புத்த பிக்குகளைத் தாக்கியது சரியா..? , தவறா..? --தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

Monday, April 1, 2013


தமிழ்நாட்டில் புத்த பிக்குகளைத் தாக்கியது சரியா..? , தவறா..? 
--தோழர் பெ.மணியரசன் கட்டுரை.

தஞ்சைப் பெரியகோயிலுக்குள் வைத்து சிங்களப் புத்த பிக்கு ஞானலோக தேரோ 16.3.2013 அன்று தாக்கப்பட்டார். சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து 18.3.2013 அன்று இன்னொரு பித்த பிக்குவான டபுள்யு. எம்.கே.பண்டாரா தாக்கப்பட்டார். இத் தாக்குதலில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள்; நாம் தமிழர் கட்சித் தோழர்கள் சிறையில் அடைக் கப்பட்டனர். செய்தி ஊடகங்கள் இவ்வாறு பரபரத்தன.
தஞ்சைப் பெரியகோயிலுக்குத் தொல்லியல் தொடர்பாக அறிவதற்காக 19 பேர் கொண்ட குழுவில் ஒருவராக வந்தவர் ஞானலோக தேரோ. மற்ற 18 பேர் பல்வேறு மாநிலங்களையும் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள்.
சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தில் தாக்கப்பட்ட பண்டாரா ஒரு பித்த பிக்குக் குழுவில் வடபுலம் சென்று திரும்பியவர்.
இவ்விருவருக்கும் ஈழத்தமிழின அழிப்பில் நேரடித் தொடர்பு உண்டா? இத் தனி மனிதர்களைத் தாக்குவது சரியா? தவறா? என்பன போன்ற வினாக்கள் எழுவது இயல்பே!
கடலில் - கர்நாடகத்தில்- கேரளத்தில் நடந்தது என்ன?
தமிழக மீனவர்கள் 600 பேர் சிங்களக் கப்பற் படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களா? இல்லை. அவர்களில் பெரும்பாலோர் தமிழகக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஒரு கொலை வழக்காவது பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதா? இல்லை. இந்தியாவின் பிரதமரோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சரோ “கண்டனம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இலங்கை அரசைக் கண்டித்ததுண்டா? இல்லை. இன்று வரை தமிழகத்தின் அப்பாவி மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்படுகிறார்கள் தடுக்கவில்லை இந்திய அரசு.
ஆனால் இதே இந்திய அரசு இரண்டு கேரள மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இத்தாலி நாட்டுத் தூதரைப் பிணைக் கைதி போல் வைத்துள்ளது.
1991 டிசம்பரில் காவேரிக் கலகம் என்ற பெயரில் நடந்த தாக்குதலில், கர்நாடகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் 100 பேர்க்கு மேல் கன்னட வெறியர்களால் கொலை செய்யப்பட்டார்கள். அக்கொலைகாரர்களில் ஒருவர் மீது கூடக் கொலை வழக்கு நடக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. கன்னட வெறியர்கள் தமிழ்ப் பெண்களைச் சீரழித்தார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் ஏதிலிகளாகத் தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தார்கள். தமிழ்நாட்டில் ஏதிலியர் முகாம்கள் அமைக்கப்பட்டன. இக்குற்றங்களை இழைத்த கன்னட வெறியர்கள் மீது எந்த வழக்கும் நடைபெறவில்லை. யாரும் தண்டிக்கப்படவில்லை.
கர்நாடகத் தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்து விடும்படி கோரிக்கை வைத்துக் கர்நாடகத்தில் போராட்டம் நடத்தினார்களா? இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் காவிரி நீர் கேட்கிறார்கள். அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் கர்நாடகத்தில் வாழ்கிறார்கள்; எனவே கைக்கெட்டிய தொலைவில் உள்ள கர்நாடகத் தமிழர்களைக் கொலை செய்து அவர்கள் வீடுகளை நிறுவனங்களைச் சூறையாடி அட்டூழியம் புரிந்தார்கள் கன்னடர்கள். இவை அனைத்தும் இனப்படுகொலைக் குற்றங்கள்.
2011 நவம்பர் டிசம்பர் மாதங்களில் மலையாளிகள் கேரளத்தில் அப்பாவித் தமிழர்களைத் தாக்கினார்கள். தமிழகத்திலிருந்து வழிபாடு செய்யப்போன அப்பாவி ஐயப்பப் பக்தர்களை அடித்து நொறுக்கினார்கள். கேரள மலைத் தோட்டங்களில் கூலி வேலைக்குச் சென்ற தேனி மாவட்டப் பெண்கள் 400 பேரை சிறைப்பிடித்து 24 மணி நேரம் அடைத்து வைத்தனர். அப்பெண் களில் சிலரை மானபங்கப்படுத்தினர். கேரளம் சென்ற தமிழக ஊர்திகளைக் கொளுத்தினர்; அடித்து நொறுக்கினர். கேரளம் சென்ற அப்பாவித் தமிழர்களைத் தாக்கினர். ஐயப்பன் கோயிலுக்கு வழிபடப் போன சாந்தவேல் என்ற ஓர் எளிய தமிழர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி அவர் சாவுக்குக்காரணமானான் அங்கிருந்த தேநீர்க் கடை மலையாளி. இவை அனைத்தும் இனவெறிக் குற்றங்கள்.
பிரதமர் மன்மோகன் சிங் மலையாள இனவெறியர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. தமிழகம் வந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிய ப. சிதம்பரம். “கேரளத்தில் வரவுள்ள ஒரு இடைத் தேர்தலுக்காக கேரளாவில் கலகம் நடக்கிறது’’ என்று கூறினார். இதைப் பொறுத்துக்கொள்ளாத தில்லி அதிகாரத்தில் உள்ள மலையாளி களும் தில்லி ஆட்சியாளர்களும் ப. சிதம்பரத்தை வருத்தம் தெரிவிக்க வைத்தனர். அவர் பேசியதைத் திரும்பப் பெறச் செய்தனர்.
வேறு வழி என்ன இருந்தது?
தமிழர்கள் மீதான மலையாளிகள் தாக்குதல் தொடர்ந்தது. 2011 டிசம்பர் 7-ஆம் நாள் முற்பகல் தமிழத்தில் உள்ள மலையாளி களுக்குப் பதிலடி கொடுக்கும் போராட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. தஞ்சை, குடந்தை, கோவை, ஓசூர், சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மலையாளிகளின் கடைகளை, நிறு வனங்களை-குறிப்பாக ஆலுகாஸ் நகை மாளிகைகளை மூடச்செய்யும் போராட்டத்தை நடத்தியது. அங்கெல்லாம் ஆலுகாஸ் கடைகள் மூடப்பட்டன. தஞ்சையில் மலையாளிகளின் சில தேநீர்க்கடைகளும் மூடப்பட்டன.
த.தே.பொ.க. தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இச்செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியான பின் தமிழகமெங்கும் உணர்வாளர்கள் மலையாளிகளின் கடைகளை மூடச் செய்யும் போராட்டங்களை அன்றே தொடங்கினர். பத்து நாள்கள் இப் போராட்டம் தொடர்ந்தது. அதன் பின்தான் கேரளத்தில் தமிழர்களைத் தாக்குவதை மலையாளிகள் நிறுத்தினர்.
அந்த நேரத்தில் த.தே.பொ.க. ஒரு முழக்கத்தை முன்வைத்தது. அது இதுதான் “தமிழின அப்பாவிகளை அயல் இனத்தார் தாக்கினால் அந்த அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ் மண்ணில் பதிலடி தருவோம்’’ என்பதுதான் அது.
தமிழர்களாகிய நாம் தமிழ்நாட்டில் வாழும் வேற்று இனத்தவரை, இனவெறி காரணமாக ஒரு போதும் தாக்கியதில்லை. நம் இனத்து அப்பாவி மக்களைக் கேரளத்தில் தாக்கிய பின் பதிலடியாகத்தான் மலையாளிகளின் நிறுவனங்களை மூடும் போராட்டங்கள் நடந்தன. அப்போதும் யாரையும் அடித்துத் துன்புறுத்தவில்லை.
இதைத் தவிர, அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க வேறு வழி என்ன இருக்கிறது? அப்பாவிகளான கர்நாடகத் தமிழர்களை, கேரளம் செல்லும் அப்பாவித் தமிழர்களை, மீன் பிடிக்கச்செல்லும் அப்பாவித் தமிழர்களை இந்தியா பாதுகாக்கவில்லை. அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப்படுவதை, தாக்கப்படுவதைத் தடுக்க இந்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக, அப்பாவித் தமிழர்களைக் கொல்வோர்க்கு – தாக்குவோர்க்குத், துணையாக இந்திய அரசு செயல்படுகிறது.
தமிழர்களுக்குப் பிரதமர் இருக்கிறாரா? குடியரசுத் தலைவர் இருக்கிறாரா? தமிழர்களுக்கென்று படை இருக்கிறதா? ஐ.நா. மன்றத்தில் தமிழர்களுக்கு உறுப்பினர் இருக்கிறாரா? உள்நாட்டில் நம் துயரங்களை ஏனென்று கேட்பார் இல்லை. உலக அரங்கிற்கு நம் அவலங்கள் சென்று சேரவாய்ப்பில்லை.
உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே அயல் நாட்டுக் கொள்கை
இந்தியா, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீது பகையினக் கொள்கை கொண்டுள்ளது. அதன் நீட்சியாக ஈழத் தமிழர் மீதும் பகையினக் கொள்கை கொண்டுள்ளது. ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத்தான் அந்நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை இருக்கும். இந்த உண்மையைத் தமிழின உணர்வாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
2008 – 2009 இல் ஈழத் தமிழர்களை அழிக்க சிங்கள இனவெறி அரசு நடத்திய இன அழிப்புப் போரில் இந்தியா பங்கெடுத்தது. ஆயுதம் கொடுத்து. போர் வல்லுநர்களைக் கொடுத்து, நிதி கொடுத்து, பன்னாட்டு அரசியல் உதவிகளைத் திரட்டித் தந்து தமிழின அழிப்பில் தன் பங்கைச் செலுத்தியது இந்தியா.
“அன்றாடம் ஆயிரம் ஆயிரமாகக் அப்பாவித் தமிழர்கள் கொல் லப்படுகிறார்கள்; போர் நிறுத்தம் செய்ய, இலங்கையை வற்புறுத் துங்கள்’’ என்று இந்திய அரசிடம் அப்போது காங்கிரசு தவிர, தமிழகக் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்தன. போர் நிறுத்தம் கோரி முத்துக்குமார் (29.1.2009) தொடங்கி 18 பேர் தீக்குளித்து மடிந் தனர். பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொது வேலை நிறுத்தம் எனத் தமிழகமே கொந்தளித்தது. “போர் நிறுத்தம் செய்யும்படி கேட்க மாட்டோம்’’ என்று உரத்துச் சொன்னார் அன்றைய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதுவும் அன்றைய முதல்வர் கருணா நிதி வீட்டுவாசலில் நின்று கொண்டு (2008 அக்டோபர் 24) அவ்வாறு சொன்னார்.
2008, 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களை சிங்கள அரசு அழித்தது, இந்தியாவின் துணையுடன்!
போர் விதிகளுக்கு முரணாக, ஐ.நா. மனித உரிமைச் சட்டங் களுக்கு முரணாக, அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களை வான்குண்டு வீசிக்கொன்றது. சிங்களப்படை, போரில்லாப் பாதுகாப்பு மணடலத்திற்கு நயவஞ்சகமாகப் பொதுமக்களை வரவழைத்துக் கொன்றது. சிங்கள அரசு 2009 மே 18இல் போர் முடிந்துவிட்டதாக அறிவித்த பின் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பால்வடியும் முகத்துப் பாலச்சந்திரனை மே 19 ஆம்நாள் சுட்டுக்கொன்றது சிங்களப்படை. தொலைக்காட்சி சேவையில் இருந்த இசைப்பிரியா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பிணமாகக் கிடக்கும் போதும் மானபங்கப்படுத்தப் பட்டார். அவரது மார்பகங்களை அறுத்துத் துண்டித்தனர்.
எத்தனையோ கொடுங்காட்சிகளை சேனல் 4 தொலைக் காட்சியும் மனித உரிமைக் கண்காணிப்பு (பிuனீணீஸீ ஸிவீரீலீts ஷ்ணீtநீலீ) அமைப்பும் வெளிக்கொண்டு வந்து விட்டன. இவற்றைப் பார்த்த கனடா நாடு “காமன் வெல்த் மாநாட்டைக் கொழும்பில் நடத்தக் கூடாது; மீறி நடத்தினால் கனடாப் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்’’. என்று அறிவித்துவிட்டது. “கொழும்பில்தான் அம் மாநாட்டை நடத்த வேண்டும்; அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இராசபட்சேதான் காமன் வெல்த் தலைவராக இருக்க வேண்டும்’’ என்று வற்புறுத்து கிறது இந்தியா.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில நாடுகள் விரும்புகின்றன. இந்தச் சூழ் நிலையை, அரச தந்திர வழியில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் வலுவற்ற ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், அமெரிக்கா முன் வைத்தது. அதை மேலும் நீர்த்துப் போகச் செய்து இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இந்தியா படாதபாடுபட்டது. இதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத் தரகன் சுப்பிரமணியசாமியை இலங்கைக் கும் அமெரிக்காவுக்கும் தூதனுப்பியது இந்தியா.
இந்தியாவின் வற்புறுத்தல்களை ஏற்று, அமெரிக்காவும் திருத்தங்கள் செய்து தனது தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்தது. கொலை காரன் இராசபட்சேயை நீதி வழங்கும் பொறுப்பில் வைத்து, அவனது குற்றங்களுக்கு மூடு திரைபோடும் அமெரிக்கத் தீர்மானம் இந்தியாவின் விருப்பப்படி திருத்தப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்போர் நடக்காத தமிழ்நாட்டில், தனித் தமிழ்நாடு கேட்டு மக்கள் எழுச்சி நடைபெறாத தமிழ்நாட்டில்- 1965 இல் இந்தி திணிப்பை எதிர்த்த பெருந்திரள் மாணவர் கிளர்ச்சியின் போது 300 தமிழர்களை சுட்டுக் கொன்றது காங்கிரசு அரசு. அண்மைக்காலங்களில் 600 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவும், இரண்டாயிரம் மீனவர்களைத் தாக்கி அவர்கள் உடல் உறுப்புகளை ஊனமுறச்செய்யவும் சிங்களப் படைக்கு துணை நின்றுள்ளது இந்திய அரசு. தமிழகத் தமிழர்கள் மீது இந்தியா கொண்டுள்ள இனப்பகையின் நீட்சிதான் ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு இந்தியா துணை நின்ற செயலாகும்.
சட்டப் பாதுகாப்பற்ற தமிழினம்
தமிழின அழிப்புப் போரில் பங்கு கொண்டு, தமிழ்மக்களை அழித்த பின், வெளி நாடுகள் அது பற்றி விசாரிக்க முனைந்தால் அதையும் தடுக்கிறது இந்தியா. இந்த இந்தியா நம் இனத்தைப் பாதுகாக்கும் என்று இனிமேலும் நம்ப முடியுமா? நம் இன மக்களைப் பாதுகாக்க நாம்தான் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.
உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில், வெல்லும் உயிரினம்தான் பிழைக்கும்; மற்ற உயிரினங்கள் அழிந்து போகும் (Struggle for Existence; Survival of the fittest) என்று உயிர்களின் பரிணாம வரலாற்றை எழுதிய சார்லஸ் டார்வின் குறிப்பிடுகிறார். அது போன்றதொரு காட்டுமிராண்டிக்கால இன அழிப்பையும், இன ஒடுக்குமுறையை யும்தான் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் வரலாறு தந்திருக்கிறது. “தமிழ் இன அப்பாவி களைத்தாக்கும் அயல் இனத்தாரைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ் மண்ணில் பதிலடி கொடுப் பதுதான் இப்போது வரலாறு நமக்கு விட்டு வைத்துள்ள ஒரே வழி.
வெளிப்பகையும் உட்பகையும்
தினமலர், தி இந்து, தினமணி, தீக்கதிர், புதிய தலைமுறை போன்ற ஏடுகள் புத்த பிக்குகள் விரட்டியடிக்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. சிறு குழுக்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்வதற்காக இனவெறியைத் தூண்டி விடுகின்றன. அப்பாவி புத்த பிக்குகளைத் தாக்கினால், சிங்களர்கள் மேலும் ஈழத் தமிழர்களைத் தாக்கு வார்கள்; தமிழக மீனவர்களை மேலும் தாக்குவார்கள் என்று கூறிப் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன இவ்வேடுகள். புதிய தலை முறை வேறு வகையில் சாடியுள்ளது. புத்தபிக்குகளைத் தாக்கிய வர்கள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்ச வேண்டும் என்று தின மலர் எழுதுகிறது.
அமைதி வழியில் போராடிய போதும் 1956-இல் ஈழத்தமிழர் களை சிங்களர்கள் இனக்கொலை செய்தார்களே! இலங்கைக்கு எதிராக எதுவும் செய்யாத போதும் அப்பாவித் தமிழ் மீனவர்கள் கொல்லப் பட்டார்களே! எந்தப் போராட்டமும் நடத்தாத தமிழர்களைக் கர்நாடகத்தில் கொன்றார்களே! கேரளத்தில் தமிழர்களைத் தாக்கினார்களே! அதற்கெல்லாம் என்ன விளக்கம் சொல்கின்றன இந்த ஏடுகள்? தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல் லப்படுவதையும் ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் கொல் லப்பட்டதையும் தடுத்திட தினமலர், தி இந்து, தினமணி, தீக்கதிர், புதிய தலைமுறை ஏடுகள் என்ன வழிகாட்டின? எதை வற்புறுத் தின? அதில் எந்த அளவு வெற்றிபெற்றன? அவ்வேடுகள் இன்று எஞ்சியுள்ள தமிழர்களுக்காகக் கவலைப்படுவது உண்மையானது என்றால் தமிழினப் படுகொலைக் குற்றத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பங்குண்டு; அவரையும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கூற வேண்டும்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் போடுவதைக் கூட ஏற்கவில்லை இந்திய அரசின் ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும். பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் கருணாநிதி கடைசியாக, இந்திய நாடாளு மன்றத்தில், ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை எனத் தீர்மானம் போடவேண்டும் என்று காங்கிரசு ஆட்சியாளர்களைக் கேட்டார். அக்கோரிக்கையை ஆளும் காங்கிரசுக் கட்சி, வடநாட்டுத் தலைமை கொண்ட எதிர்க்கட்சிகளான பா.ச.க., ஐக்கிய சனதாதளம், சமாஜ்வாதிக் கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, திருணமுல் காங்கிரசு, சி.பி.எம். ஆகியவை ஏற்கவில்லை. சி.பி.ஐ.கட்சி தமிழ்நாட்டில், ‘இனக் கொலை’ என்கிறது ஆனால் அதன் நாடாளுமன்றத் தலைமை அவ்வாறு கூறுவதைக் கடுமையாக எதிர்க்கிறது. அக் கட்சித் தலைமையும் நாடாளுமன்றத்தில் “இனக்கொலைத்’’ தீர்மானம் போடுவதை எதிர்த்தது.
கருணாநிதி, இனத்துரோகி என்பதை நாங்கள் பல்லாண்டு களாகச் சொல்லி வருகிறோம். கருணாநிதியின் இனத் துரோகத் தைப் பக்கம் பக்கமாக எழுதிவரும் தினமணி – கருத்துப்படம் வெளியிடும் தினமணி, மன்மோகன் சோனியா அரசின் தமிழின அழிப்பு வேலைகளை விலாவரியாக வெளியிட்டதுண்டா? தமிழ்நாட்டு உரிமை களைப் பறிப்போர்க்குத் துணை போகும் சதிகளை விவரமாக வெளி யிட்டது உண்டா? மன்மோகன் – சோனியா ஆட்சியை விமர்சித்து எப்பொழுதாவது எழுதினாலும் தடவிக் கொடுத்து எழுதுவார்கள். அப்போதும் நேரு, படேல் பெருமைபாடி இப்போதைய காங்கிரசை விமர்சிப்பார்கள்.
இந்து ஏடும், தினமலர் ஏடும் சிங்கள அரசுக்கு நெருக்கமான ஏடுகள் என்பது நாடறிந்த உண்மை! இந்து முதலாளி என். ராம் இராசபட்சேயிடம் “லங்கா ரத்னா’’ பட்டம் வாங்கியவர். தமிழர்கள் தற்காப்புணர்ச்சியுடன் திருப்பித் தாக்கத் தொடங்கியிருப்பது இவ் வேடுகளுக்குப் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. எப்போதும் ஒரு நாட்டின் வெளிப்பகை அந்நாட்டின் உட்பகையுடன் உறவு கொண் டிருக்கும்.
தலித்தியப் புத்தர்கள்
தமிழ்நாட்டில் தமிழர்களிடையே ஆள் பிடிப்பதற்காக, சிங்கள ஆட்சியாளர்களும் சிங்களப் புத்தபிக்குகளும், தலித்தியம் பேசும் சிலரைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் புத்தபிரானின் உயர்ந்த அறக்கொள்கைகளை ஏற்று அம்மதத்திற்கு மாறிய தலித்துகள் இருக்கிறார்கள். அது அவர்களின் உரிமை. அதில் நாம் குறை காணவில்லை.
ஆனால் தன்னல ஆதாயங்களுக்காக, சிங்களப் புத்தபிக்குகளின் மறைமுக முகவர்களாகத் தலித்தியர்கள் சிலர் தமிழ்நாட்டில் புத்தமதப் பரப்புரை செய்து, சிங்கள நேயத்தை இங்கு விதைக்கிறார்கள்.
சிங்களப் புத்தமதம் இனவெறி கொண்டது. சிங்கள ஆட்சியாளர் களை விடவும் தீவிரமாகத் தமிழின அழிப்புக் கொள்கையில் உள்ளவர்கள் புத்த பிக்குகளே!
புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி என்ற புத்த மத மந்திரத்தை
யுத்தம் சரணம் கச்சாமி
ரத்தம் சரணம் கச்சாமி
என்று மனதளவில் மாற்றிக் கொண்டவர்கள் சிங்களப் புத்த பிக்குகள்.
விடுதலைப்புலிகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் ஆதரிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு சிங்களப் புத்த மதத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர் சில தலித்தி யவாதிகள். உண்மையான தமிழின உணர்வாளர்கள், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அவர்களை அடையாளம் காண வேண்டும்.
தஞ்சையில் சிங்கள புத்த பிக்குவைத் தஞ்சைப் பெரியகோயி லிலிருந்து வெளியேறும் படிதான் கோரினர் த.தே.பொ.க. தோழர்கள். அந்த புத்தபிக்குவும் அவருடன் வந்த வேற்று மாநிலத் தவரும் எதிர்த்து முரண்பட்டு நடந்ததால், அவரைத் தள்ளி இலேசாக அடித்து வெளியேற்று வதாகத்தான் தொலைக்காட்சி காட்டியது.
சிங்களப் புத்தமத பிக்குகளுக்கு வக்காலத்து வாங்கும் தலித்தி யரான கவுதம சன்னா, புத்த பிக்கு தாக்கப்பட்ட நிகழ்வை சாதிச் சிக்கலாக மாற்ற முயல்கிறார். தஞ்சையில் புத்தபிக்கு தாக்கப் பட்ட வழக்கில் ஒடுக்கப்பட்ட வகுப்புத் (தலித்) தமிழரும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். இது சாதிச் சிக்கல் அன்று. இனச்சிக்கல். இனச்சிக்கலைச் சாதிச் சிக்கலாக மாற்றிக் கொண்டால்தான் சிங்கள புத்த ஆதரவு அரசியலுக்கு வசதியாக இருக்கும் என்று அவர் கருதி இருக்கக்கூடும்.
“உயிர்க் கொலை செய்வது பாவம்; ஆனால் தமிழர்களைக் கொல்வது பாவமல்ல’’ என்பதுதான் சிங்கள புத்த பிக்குகளின் முழக்கம். பிரதமர் பண்டார நாயகா – தந்தை செல்வா போட்ட ஒப்பந்தத்தை 1956 இல் கிழித்தெறிந்து தமிழர்களுக்கெதிரான பெருங் கலவரத்தைத் தூண்டியவர்கள் புத்த பிக்குகள்தாம்! சிறு சிறு உரிமைகளைத் தமிழர்களுக்குத் தர ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டாலும் அதைத் தடுக்க, வீதிக்கு வந்து போராடுவோர் சிங்கள புத்த பிக்குகள் தாம்! சிங்கள புத்த பிக்குகள் பாசிசவாதிகள். தமிழர்களின் சிவன், விநாயகர், பெருமாள், அம்மன் கோயில்களை சிங்களப் படையாட்கள் இடித்துத் தள்ளக் காரணமானவர்கள் புத்த பிக்குகள்தாம். அங்கெல்லாம் புத்த விகாரைகளை இந்த பிக்குகள் நிறுவி வருகின்றனர்.
இத்தனைக்கும், சிங்களப் புத்தர்கள் இந்துக் கடவுகளர்களை வணங்குபவர்கள். இராசபட்சே, ரணில் விக்கிரமசிங்கே போன்ற சிங்களப் புத்தர்கள், இந்தியாவில் வந்து இந்துக் கோயிகளில் அடிக்கடி வழிபடுகிறார்கள். சிங்கள புத்தர்களும் புத்த பிக்குகளும் தங்களை ஆரியர்கள் என்று கூறி பெருமைப்படுபவர்கள். இந்திய ஆளும் வர்க்கமும், சிங்கள ஆளும் வர்க்கமும் ஆரிய இனப்பண் பாட்டில் ஒன்றிணைந்துதான் தமிழினத்தைப் பகையினமாகக் கருதுகின்றன.
தமிழ்நாட்டில் கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் 5 நூற்றாண்டு வரை செழித்திருந்தது புத்த மதம். அப்போது அம்மதப் பிக்குகள் பாலி மொழியைத் திணித்து, தமிழைப் புறக்கணித்தனர். புத்தமதம் முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருந்த போதிலும் அடிப் படையில் அது ஓர் ஆரிய மதம். ஆரிய மேலாண்மையைத் திணித்த மதம்.
வரலாற்றுப் பெருமிதம்
எம்மைப் பொறுத்தவரை, இராசராசப் பேரரசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலில் வைத்து சிங்களப் புத்த பிக்குவை விரட்டியடித்தது வரலாறு தன்னைத் தானே திருப்பிக் காட்டும் பெருமைக்குரிய நிகழ்வாகவே கருதுகிறோம்.
இராசராசப் பெருவேந்தன் காலத்தில் சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்த என்பவன் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். இராசராசன் படை அனுப்பி அவனைப் பிடித்து வரச் சொன்னான். தமிழர் படை சென்றது. மகிந்த ஓடி ஒளிந்து கொண்டான். தமிழர் படை திரும்பி வந்தது. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தொல்லை கொடுத்தான் மகிந்த.
இந்தத் தடவை இராசராசன் மகன் இராசேந்திரச் சோழன் படை கொண்டு போனான் இலங்கைக்கு! ஓடி ஒளிந்தான் மகிந்த. விட வில்லை இராசேந்திரச் சோழன். மகிந்தவைப் பிடித்துத் தஞ்சைக்குக் கொண்டு வந்து சிறையில் அடைத்தான்.
அந்தத் தஞ்சையில் அதே இராசராசன் எழுப்பிய பெருங்கோ யிலில் வைத்து சிங்கள புத்த பிக்குவை விரட்டியடித்தமை, பெருமைக்குரிய செயலாகும்.
சிங்களர்களின் அட்டூழியங்களை அடக்கி வைத்ததால் இராசராசனுக்கு “சிங்களாந்தகன்’’ என்ற சிறப்புப் பட்டம் வழங்கப் பட்டது. ஒட்டுமொத்த இலங்கைக்கும் “மும்முடிச் சோழ மண்டலம்” என்று பெயரிடப்பட்டது. மும்முடிச் சோழன் என்பது இராச ராசனின் சிறப்புப் பட்டங்களில் ஒன்று.
இந்த வரலாறு உணர்த்தும் உண்மையாதெனில், தமிழ்நாட்டில் தமிழர்கள் வலுவாக, இறையாண்மையுடன் ஆளும் இனமாக இருந்தால்தான் ஈழத் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். என்பதுதான்.
சிங்களர் கொட்டத்தை அடக்கிவைத்த இராசராசனின் இந்த வரலாற்று உண்மையைப் பேசாமல் வேறொரு செய்தியைச் சொல்லி திரிபு வேலை செய்கிறார் புதிய தலைமுறை இதழில் ஆசிரியவுரை எழுதிய மாலன் (28.3.2013). “பகைவனுக்கு அருள்வாய்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். “சுமத்ரா நாட்டு மன்னன் புத்தவிகாரை கட்ட வேண்டும் என்று இராசராசனிடம் கேட்ட போது விகாரைக் கட்ட ஆனைமங்கலம் கிராமத்தை தான மாகக் கொடுத்தான் இராசராசன். அவன் கட்டிய கோயிலில் வைத்தா புத்த பிக்குவை தாக்குவது’’ என்று கேட்கிறார். இராச ராசன் சிவன் நெறியைப் பின்பற்றியவன் என்ற போதிலும் மற்ற மதங்களை ஒடுக்க வில்லை என்ற அவனது சமயப்பொறைக்கு எடுத்துக்காட்டு இந்த சான்று. இது எப்படி தமிழின அழிப்புக்குத் தூண்டுகோலாக இருந்த சிங்கள புத்த பிக்குகளின் பாசிசத்தை பொறுத்துக் கொள்ளும் போக்குக்கு சான்றாகும்.
மாலன் தமது திரிபு வேலைக்கு பாரதியாரையும் பயன்படுத்து கிறார். “பகைவனுக்கு அருள்வாய்” என்பது பாரதியாரின் பாடல் வரி அது தவநிலையில் ஒருவர் இறைவனை வேண்டும் பாடல். பாரதியார் புதிய ஆத்திச்சூடி பாடி கொடியவர்களுக்கு எதிராக சீற்றம் கொள்ள வேண்டும் என்ற பொருளில் “ரௌத்திரம் பழகு” என்று பாடியவர்.
பாதகம் செய்வோரைக் கண்டால்
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா!- அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா! என்று பாடியவர்.
தமிழர்களை அயலார் அழித்தால் அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறார் மாலன். மாணவர்களெல்லாம் கொலைகாரன் இராசபட்சேயைக் கூண்டிலேற்று என்று குமரி முனை முதல் கும்மிடிப்பூண்டி வரை முழக்கமிடும் இக்காலத்தில் இராசபட்சே மீது இரக்கம் காட்டும் படி மறைமுகமாக வேண்டுகிறாரோ மாலன்? அதற்காகத்தான் பகைவனுக்கு அருள் வாய் என்ற பாரதியின் வரியை தலைப்பாக்கிக் கொண்டாரோ?
தமிழ் ஈழத்தில் இனப்பேரழிவு நடந்தபின் எஞ்சியுள்ள மக்கள் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பியுள்ள மாணவர் எழுச்சியும் மக்கள் எழுச்சியும்தான் ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுச்சி பெறத் துணையாக இருக்கிறது; தூண்டுகோலாக இருக்கிறது.
ஒரு தவறுக்குத் தீர்வு இன்னொரு தவறா?
“ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது; அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவெறியர்கள் தாக்கியதற்காக இங்கு வந்த புத்த பிக்குகளைத் தாக்கக் கூடாது’’ என்று காந்தியவாதியான தமிழருவி மணியன் கூறுகிறார். நம்மைக் கண்டிக்கிறார்.
வெள்ளைக்காரன் படையும், காவல்துறையும் இந்திய விடுதலைக் குப் போராடியவர்களைத் தாக்கின. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் காந்தி. ஆனால் சுபாஸ் சந்திரபோசு தனிப்படை கட்டி, வெள்ளை அரசின் படையையும் காவல் துறை யையும் தாக்கும் போரை நடத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகச் சிறந்த தலைவராகத்தான் இந்திய அரசாலும் மக்களாலும் சுபாசு சந்திரபோசு மதிக்கப்படுகிறார்.
தமிழருவி மணியன் வாதத்தை ஏற்றுக் கொண்டால் பிரஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம் விடுதலைப்போர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நடத்திய தமிழீழ விடுதலைப் போர் எல்லாமே ஒரு தவறைச் சரி செய்ய இன்னொரு தவறைச் செய்த குற்றச் செயலாகிவிடும்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதரண சிங்கள மக்களைத் தாக்கினாரா? அவரைப் போற்றும் இவர்கள் புத்த பிக்குவை எப்படித் தாக்கலாம் என்று கேட்கிறார் தமிழருவி மணியன். பிரபாகரன் விடுதலை படை அமைத்து நாட்டு விடு தலைக்காக சிங்கள ஆக்கிரமிப்புப் படையோடு போர் நடத்தினார். அவர் சிங்கள மக்களைத் தாக்க வில்லை என்பது சிறப்புக்குரிய செய்தி. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் திரள் எதிர்ப்பைக் காட்டும் வகையில் கையில் எந்த ஆயுதமும் ஏந்தாமல் சிங்கள புத்த பிக்குவை சனநாயக முறைபடி தமிழ்நாட்டை விட்டு வெளியேறும்படி ஆர்ப்பாட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்கள், திட்ட மிட்டு சிங்களர்களை ஆயுதம் கொண்டு தாக்கியது போல் தமிழருவி மணியன் மிகைக் கற்பனை செய்து கொள்வது சரியன்று. புத்த பிக்குவை வெளியேறுமாறு முழக்கமிட்ட போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இது திட்டமிட்ட வன்முறையன்று.
தமிழருவி மணியன் வாதத்தை ஏற்றுக்கொண்டால், இலங் கையில் அப்பாவி மக்கள் எவ்வளவோ பேர் வாழ்கிறார்கள், அவர் களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் இலங்கைக்கு எதிராக நாம் அனைவரும் பொருளாதாரத் தடை கோருவதும் குற்றமாகி விடும்.
இனவெறி அரசுகளான தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக நேரு காலத்திலிருந்து காங்கிரசு அரசு விதித்த பொருளாதாரத் தடையும் தவறாகிவிடும்.
இனவெறி ஆட்சி நடத்தும் நாட்டிற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பது உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட நடை முறை. பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாடுகளுடன் தூதரக உறவு வைத்துக் கொள்வதில்லை. பயணிகள் போக்குவரத்து இருக்காது. விளையாட்டுக் குழுக்கள், வழிபாட்டுக் குழுக்கள் போகவர அனுமதிப்பதில்லை. தென்னாப்பிரிக்கா மீது பொருளா தாரத் தடை விதிக்கப்படிருந்த போது தமிழ்நாட்டி லிருந்து ஆன்மிகச் சொற்பொழிவாளர் பித்துக்குளி முருகதாசு அநாட்டிற்கு ஏதோ ஒரு வழியில் போனார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது பேசப்பட்டது. பொருளாதாரத் தடை என்பது இத்தனை கூறுகளையும் கொண்டது.
இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. ஏழுகோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இறையாண் மையுள்ள அரசுரிமை இல்லாததால் அத்தீர்மானத் தைத் தமிழக அரசால் செயல்படுத்த முடியவில்லை.
பொருளாதாரத் தடையை இரண்டு வழிகளில் செயல்படுத் தலாம். ஒரு வழி அரசு செயல்படுத்துவது. இது சட்டப்படியானது (De Facto). இன்னொரு வழி அரசின் அதிகார வழியில் அல்லாமல், மக்களே செயல்படுத்துவது. இது நடைமுறையில் உள்ளது. (De Facto) எனப் படும்.
தமிழ்நாட்டுத தமிழர்களாகிய நாம் இனவெறி அரசான இலங்கைக்கு எதிராக மக்கள் செயல்படுத்தும் (De Facto) பொருளாதாரத் தடையை செயல்படுத்த வேண்டும்.
விளையாட்டுக் குழுக்கள், ஆன்மிகக் குழுக்கள், சாதாரணப் பயணிகள் உள்பட சிங்களர்கள் யாரும் தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் தடுப்பது நடைமுறை. (De Facto) பொருளா தாரத் தடை ஆகும். பின்னர் இது சட்டப்படியானதாக (De Jure). மாறும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும் தமிழக அரசு இலங்கை விளையாட்டுக் குழுவினர் கலந்து கொள்ளும் ஆசிய விளையாட்டுப் போட்டியை சென்னையில் நடத்த மாட்டோம் என்று ஏற்கெனவே அறிவித்து விட்டது. சிங்களப் படையாட்களுக்குத் தமிழ்நாட்டில் பயிற்சி தரக்கூடாது என்று அறிவித்துள்ளது. சிங்களப் பயணிகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் அது பற்றி இந்திய அரசு தமிழக அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இவையெல்லாம் பொருளாதாரத் தடையின் ஒரு பகுதியே!
எனவே, சிங்களப் பிக்குகளையோ, சிங்களப் பயணிகளையோ தமிழ்நாட்டிற்குள் உலவவிடாமல் திருப்பி அனுப்புவது மக்கள் கடை பிடிக்கும் பொருளாதாரத் தடையின் ஒரு பகுதியே!
வன்முறையும் அறமும்
தழல் ஈகி முத்துக்குமாரின் இறுதி ஆவணத்தை அழகாகப் படித்து, குறுந்தகடு மூலம் தமிழர்களின் நெஞ்சங்களில் பதிய வைத்தவர் தமிழருவி மணியன். அந்த ஆவணத்தில் முத்துக்குமார் சுட்டிக் காட்டிய திருக்குறளை இங்கு எண்ணிப்பார்ப்பது பொருத்தம்.
அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை (76)
அறவழியில் செயல்படுவதற்கு அன்பு தேவை; மக்களின் நன்மைக்காக வன்முறை வழியில் செயல்படுவதற்கும் அன்பு தேவை. அஃதாவது மக்கள் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக அவர்களைக் காப்பாற்றிடக் கடைபிடிக்கப்படும் வன்முறையும் ஒரு வகை அறமே!
நம் மக்களைத் தாக்கியவர்களை, நம் மக்களை அழிக்கத் தூண்டி யவர்களை மற்றும் அவர்கள் சார்பானவர்களைத் தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள், வெளியேறுங்கள் என்று கோருவதும், அவர்கள் எதிர்த்தால் விரட்டி அடிப்பதும் தேவையான மக்கள் திரள் சார்ந்த ஒரு வன்முறையாகும்.
தமிழ் இன அப்பாவி மக்களை அயல் இனத்தார் தாக்கினால், அந்த அயல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தமிழ் மண்ணில் பதிலடி கொடுப்போம்! என்பதுதான் இன்று தமிழர்களைக் காக்க வல்ல கொள்கை!
இந்திய ஏகாதிபத்தியத் தாசர்களும், கங்காணி அரசியல் வாதிகளும் சிங்கள புத்த மத முகவர்களும் செய்யும் குழப்பங்களைப் புறக்கணிப் போம். அறம்- வன்முறை இரண்டிற்கு முள்ள முரண்களையும், அதே வேளை அவ்விரண்டிற்குமிடையே உள்ள உறவுகளையும் ஆய்வு செய்ய முடியாதவர்கள் செய்யும் குழப்பங்களையும் புறக்கணிப்போம்! 
"புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தை" முன்னெடுப்போம். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! இராசபட்சே கும்பலை விசாரிக்கப் பன்னாட்டுக் குற்றவியல் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்படுவதற்குப் போராடுவோம்!

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்