<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தமிழ்நாட்டில் ஸ்டேட் வங்கிகளில் (SBI) புதிதாக வெளி மாநிலத்தவரை வேலைக்குச் சேர்த்தால் வெளியேற்றுவோம்!" -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, November 8, 2016
=========================================
தமிழ்நாட்டில் ஸ்டேட் வங்கிகளில் (SBI)
புதிதாக வெளி மாநிலத்தவரை வேலைக்குச்
சேர்த்தால் வெளியேற்றுவோம்!
==========================
===============
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
==========================
===============
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அரசு (ஸ்டேட் பாங்க்) வங்கிகளில் (SBI) 1,420 பணி இடங்களுக்கு நடந்த தேர்வில் தமிழ்நாட்டுத் தேர்வர்கள் புறக்கணிக்கப்பட்டு, மிகப்பெரும்பான்மையாக கேரள மற்றும் இந்தி மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, நடுவணரசு வங்கிகள், பி.எச்.இ.எல். ஆலைகள், படைத்துறை தொழிற்சாலைகள், பெட்ரோலிய ஆலைகள், வானூர்தி நிலையங்கள் துறைமுகங்கள், வருமானவரி – உற்பத்தி வரி – சுங்கவரி அலுவலகங்கள் எனப் பலவற்றிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்களைப் புறக்கணித்து வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே மிகப் பெரும்பான்மையாக வேலைகளில் சேர்த்து வருகிறார்கள்.

சொந்த மண்ணிலேயே தமிழர்களை அயலாராகவும், அண்டிப் பிழைக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாகவும் மாற்றும் இந்திய அரசின் மறைமுகத் திட்டத்தின் கீழ்தான் – தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழகத் தேர்வர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இது மறைமுக இன ஒதுக்கல் கொள்கையாகும்! தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்கக் கூடாது – அது கலப்பின மாநிலமாக மாற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளும் இந்திய அரசுக்குத் தீவிரமாக உள்ளது.

அன்றாடம் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், தொடர் வண்டித்துறை, நடுவண் வரி அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் மொழிச் சிக்கலால் அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன.

அண்மையில் சென்னைச் சூளைமேடு அஞ்சலகத்தில் “சேது” என்ற தமிழர் தமிழில் முகவரியிட்டு அளித்த விரைவஞ்சலை வாங்க மறுத்த இந்தி ஊழியர் “பிளடி தமிழில் எழுதாதே” என்று பேசி இழிவுபடுத்தினார். சேது விடாப்பிடியாகப் போராடி, தமிழ் முகவரியுடன் அக்கடிதத்தை அனுப்பியதுடன், அந்த இந்தி ஊழியரை மன்னிப்புக் கேட்கவும் வைத்துள்ளார். இதேபோல் தொடர்வண்டித்துறையில் அயல் மொழி ஊழியர்களால் தமிழ் நாட்டில் அடிக்கடி தமிழர்களுக்கு அவமதிப்பும் தகராறும் ஏற்படுகிறது.

அயல் மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் நடுவண் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்படும் போது, மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அயல் இனத்தாரை இந்திய அரசுப் பணிகளில் திணிக்கிற அளவிற்கு மற்ற மாநிலங்களில் அயலார் திணிப்பு நடப்பதில்லை. இனத் தற்காப்பற்ற – கங்காணி அரசியல் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருப்பதே இவ்வாறான ஆக்கிரமிப்புகள் எளிதாக அரங்கேற வாய்ப்பளிக்கிறது.

தேவகவுடா இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த போது (1996 - 1997), இந்திய ஒன்றிய அரசின் தேர்வாணையத்தில் தேர்வெழுதி, பணி ஆணையுடன் வேலையில் சேர பெங்களூர்த் தலைமைக் கணக்காயர் அலுவலகம் சென்ற 18 தமிழர்களை, அங்கு பணியாற்றிய கன்னட ஊழியர்கள் விரட்டி அடித்ததை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்போது அந்த கன்னட ஊழியர்கள், “கர்நாடகாவில் சரோஜினி மகிசி அறிக்கை செயல்பாட்டில் உள்ளது. 90 விழுக்காடு வேலை கன்னடர்களுக்குத்தான் தர வேண்டும்” என்று காரணம் கூறினர். அது போன்ற ஒரு தற்காப்பு ஏற்பாடு தமிழ்நாட்டில் இல்லை, கடைசி வரை அந்த 18 தமிழர்களுக்கும் அந்த பெங்களூர் நடுவண் அலுவலகத்தில் வேலை தரவில்லை.

இப்போது, இந்தியத் தலைமை அமைச்சர் தலையிட்டு, தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றத் தேர்வு செய்துள்ள 1,420 பேர் பட்டியலைக் கைவிடச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டினர் மட்டுமே கலந்து கொள்ளும் நிபந்தனையுடனும் தமிழில் மட்டுமே தேர்வெழுதும் உரிமையுடனும் புதிதாக தேர்வு நடத்தித் தமிழர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், இந்த 1,420 பேர் பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவர் யாரும் வேலை செய்ய அனுமதிக்க மாட்டோம். தமிழ்த்தேசியப் பேரியக்கம் அந்த அயல் மாநிலத்தவர் வேலைக்கு அமர்த்தப்படும் ஸ்டேட் வங்கிகளில் தொடர் மறியல் போராட்டம் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படித் தேர்வெழுதிப் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களும், மற்றுமுள்ள மாணவர்களும் இளைஞர்களும் தங்கள் தாயகத்தில் தங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்