<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

தமிழர் திருநாளுக்கு விடுமுறை இல்லை : தமிழர்கள் முகத்தில் காறித்துப்புகிறது இந்திய ஏகாதிபத்தியம் " -- தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

Tuesday, January 10, 2017

=======================================
தமிழர் திருநாளுக்கு விடுமுறை இல்லை : 
தமிழர்கள் முகத்தில் காறித்துப்புகிறது
இந்திய ஏகாதிபத்தியம்!
=======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
=======================================

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு, வருகின்ற 14.1.2017 அன்று நடுவண் அரசு அலுவலகங்களுக்குத் தமிழ்நாட்டளவில் கூட பொது விடுமுறை இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விரும்புவோர் அன்று தனி நபராக விடுமுறை கோரலாம்; அதிலும் மேலதிகாரி மறுத்தால் விருப்ப விடுமுறையும் கிடையாது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

சைன மத குரு மகாவீரருக்கு ஏப்ரல் 9 அன்றும், புத்த பூர்ணிமாவுக்கு மே 10 அன்றும், சீக்கியர்களின் குருநானக் செயந்திக்கு நவம்பர் 4 அன்றும் இந்தியா முழுமைக்கும் – தமிழ்நாடு உட்பட – இந்திய அரசு கட்டாயப் பொது விடுமுறை விடுகிறது. 

தமிழ்நாட்டில் சைனர்கள் என்பவர்கள் எத்தனை பேர்? அவர்கள் பெரும்பாலும் வடநாட்டு மார்வாடிகளே! தமிழ்நாட்டில் புத்த மதத்தினர் எத்தனை பேர்? தமிழ்நாட்டில் சீக்கியர்கள் எத்தனை பேர்? மிக மிக மிகக் குறைவானவர்களே இருப்பார்கள். அவ்விழாக்களுக்குத் தமிழ்நாட்டில் விடுமுறை உண்டு! ஆனால், தமிழர் தாயகமாக இந்திய அரசால் அமைக்கப்பட்டு – எட்டுக் கோடி மக்கள் தொகையுடன் வாழும் தமிழ்நாட்டில் தமிழர் திருநாள் விழாவாம் பொங்கல் விழாவுக்குத் தமிழ்நாட்டளவில்கூடக் கட்டாயப் பொது விடுமுறையை மறுக்கிறது இந்தியா!

தமிழ்நாட்டிற்கு வெளியே, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தமிழர்கள் சற்றொப்ப இரண்டு கோடிப் பேர் வாழ்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் ஏற்கெனவே கட்டாயப் பொது விடுதறை நாளாகவே பொங்கல் இருந்தது. பின்னர், 2010ஆம் ஆண்டு, காங்கிரசு – தி.மு.க. கூட்டணி ஆட்சியில், தமிழ்நாட்டளவில் மட்டும் பொது விடுமுறை என்று மாற்றினார்கள். இப்போது, நடுவண் பா.ச.க. ஆட்சி, தமிழ்நாட்டிலும் தனிநபர் விருப்ப விடுமுறை நாள் என மாற்றியுள்ளது. 

தமிழர்கள் தங்கள் விழாவுக்குப் “பொங்கல் விழா” என்றுதான் பெயர் சூட்டிக் காலம் காலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்தப் பெயரையும் அழிப்பதற்கு இந்நாளை “மகர சங்கராந்தி” என்று ஆரியப் பார்ப்பனியப் பெயர் சூட்டினாலும், அடிப்படையில் அது தமிழர் விழாதானே என்று இந்திய ஏகாதிபத்தியவாதிகள் கருதி, அவர்கள் பெயர் சூட்டிய “மகர சங்கராந்திக்கும்” பொது விடுமுறை இல்லை என்று முடிவு கட்டிவிட்டார்கள். 

வடநாட்டு இந்துத்துவாவாதிகளும் இந்தியத்தேசியவாதிகளும் தமிழர்கள் வணங்கும் இந்துக் கடவுளை சூத்திரக் கடவுளாகத்தான் பார்ப்பார்கள். தமிழீழத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் மீது சிங்களப்படை குண்டு வீசித் தாக்கியபோது, இந்திய அரசோ, இந்துத்துவா பேசும் பா.ச.க.வோ கண்டிக்கவில்லை. 

இப்போது தமிழீழத்தில் உள்ள இந்துக் கோயில்களைப் புத்தக் கோயில்களாக சிங்கள அரசு மாற்றி வருவதையும், இந்துத்துவா பா.ச.க. அரசோ, இந்தியத்தேசியக் காங்கிரசுத் தலைமையோ கண்டிக்கவில்லை; தடுக்கவில்லை. இந்து மதத்திலும் தமிழர்களை இழிபிறப்பாளர்களாகத்தான் இந்தியா வைத்துள்ளது; இழி பிறப்பாளர்களாக மட்டுமல்ல, தமிழர்களை அயலாராகத்தான் இந்தியா வைத்துள்ளது. 

மீண்டும் பொங்கலுக்குப் பொது விடுமுறை வேண்டும் என்று புதுதில்லிக்குக் கடிதம் எழுதுகின்ற, அறிக்கை விடுகின்ற திராவிடப் பம்மாத்துத் தலைவர்களே, உங்களால்தான் தமிழ் இனம் ஒவ்வொரு அடையாளத்தையும் இழந்து வருகிறது; இந்திய ஏகாதிபத்தியத்திற்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து, காட்டிக் கொடுத்துக் கங்காணி வேலை செய்து பதவியும் பணக் கொள்ளையும் அடித்தவர்கள் – அடிப்பவர்கள் நீங்கள். 1967லிருந்து நீங்கள் ஆளுங்கட்சியாக – எதிர்க்கட்சியாகத் தமிழ்நாட்டில் அதிகாரம் செலுத்துகிறீர்கள் – செல்வாக்கு செலுத்துகிறீர்கள். 

உங்களின் மறைமுக ஆதரவோடுதான் இந்தியா, கச்சத்தீவைப் பறித்தது, தமிழர்களின் கடல் உரிமையைப் பறித்தது; காவிரி உரிமையைப் பறித்தது. காளை விளையாட்டு உரிமையைப் பறித்தது. இப்போது தமிழர் திருநாள் உரிமையைப் பறித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு, பா.ச.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ஆகிய இந்தியத்தேசியவாதக் கட்சிகள் அனைத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு முகவர்கள்! தமிழர்களைத் தங்கள் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதற்காக தமிழர்களுக்காக அவ்வப்போது பாசாங்கு அறிக்கைகள் விடுவார்கள். தமிழர்கள் அவர்களை நம்ப வேண்டாம். 

தமிழர்களே, இந்திய ஏகாதிபத்தியம் தமிழின அழிப்பையோ, தமிழர் அடையாள அழிப்புகளையோ, தமிழர் உரிமைப் பறிப்புகளையோ ஒளிவு மறைவாகச் செய்யவில்லை. வெளிப்படையாகத்தான் செய்கிறது. 

ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களப் போரில், இந்தியா வெளிப்படையாகத்தான் பங்கு வகித்தது. 

கச்சத்தீவு ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று இந்தியா வெளிப்படையாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று இந்தியா வெளிப்படையாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. 

இப்போது, இந்திய ஏகாதிபத்தியம் தமிழர் திருநாள் இந்தியாவில் இல்லை என்பதை வெளிப்படையாகத்தான் அறிவித்துள்ளது. வெளிப்படையாகத்தான் தமிழர் முகத்தில் காறித் துப்பியுள்ளது. இந்தியா துப்பிய எச்சிலைத் துடைத்துக் கொண்டு இந்திய அரசிடம் பல்லிளிக்கும் அரசியலை இனியும் தமிழர்கள் ஏற்கக்கூடாது!

தமிழ்நாட்டில் அண்டிப்பிழைக்கும் அரசியலை நடைமுறைச் சட்டமாக்கிவிட்ட (defacto) திராவிடக் கட்சிகளின் தலைமைகள் இந்திய ஏகாதிபத்தியத்தை அண்டிப் பிழைப்பதைத் தங்கள் இராசதந்திரமாகக் கொண்டவை.

இந்தியத்தேசியவாதக் கட்சிகளோ இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு முவாண்மைகள்! 

இந்தத் திராவிடக் கட்சிகளையும் இந்தியத்தேசியவாதக் கட்சிகளையும் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும்வரை, தமிழ் மொழி உரிமைகள், தமிழ்நாட்டு உரிமைகள், தமிழர் பண்பாட்டுரிமைகள் எதையும் மீட்கவும் முடியாது; காக்கவும் முடியாது; அவற்றை அடுத்தடுத்துப் பறிகொடுத்துக் கொண்டேதான் இருப்போம். 

தமிழ் மொழி உரிமை – தமிழ் இன உரிமை – தமிழ்நாட்டு உரிமை ஆகிய மூன்றையும் ஒரு சேரக் காக்கும் ஒற்றைத் தத்துவம் தமிழ்த்தேசியம்! பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத, கொள்கை உறுதி கொண்ட மக்களின் சனநாயகப் பாசறையாக தமிழ்த்தேசியப் பாசறையைக் கட்டி எழுப்புவதொன்றே தமிழர்களுக்குரிய மாற்று அரசியல் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுதியாக நம்புகிறது. 

இவ்வாறான தமிழர் மாற்று அரசியல் இலட்சியத்தை நெஞ்சிலேந்திக் கொண்டு, தமிழர் திருநாள் பொது விடுமுறை கோரும் போராட்டங்களை மாபெரும் மக்கள் போராட்டங்களாக அங்கங்கே முன்னேடுப்போம்!

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்