<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டுவதைத் தடுத்திட இந்திய அரசுக்கு எதிராக தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!" -- தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

Thursday, February 16, 2017
====================================
காவிரியில் கர்நாடகம் புதிய அணை
கட்டுவதைத் தடுத்திட
இந்திய அரசுக்கு எதிராக
தமிழர் ஒத்துழையாமை இயக்கம்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
====================================
காவிரியில் கசிவு நீர்கூட தமிழ்நாட்டுக்கு வராமல் தடுப்பதற்கு மேக்கேத்தாட்டுப் பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கு, ரூபாய் 5,912 கோடி கர்நாடக அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி. செயச்சந்திரா தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அணையின் மொத்தக் கொள்ளளவு 66.50 ஆ.மி.க. (TMC) என்றும், இதன் மின் உற்பத்தித் திறன் 400 மெகா வாட் என்றும் செயச்சந்திரா கூறியுள்ளார். 

வீணாகக் கடலில் சென்று கலக்கும் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்துவதற்காகவே புதிய அணை கட்டப் போவதாக அமைச்சர் செயச்சந்திரா கூறியுள்ளார். காவிரியில் கடலில் கலக்கும் அளவுக்கு தண்ணீர் பெருக்கு ஆண்டுதோறும் வருவது போலவும், அதைப் பயன்படுத்துவதற்கு புதிய அணை கட்டுவது போலவும் கர்நாடகம் கயிறு திரிக்கிறது. 

கடந்த 2005ஆம் ஆண்டு, மேட்டூர் அணை நிரம்பி சிறிதளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதன் பிறகு, எட்டாண்டுகள் கழித்து 2013இல் மேட்டூர் அணை நிரம்பி சற்றொப்ப 20 ஆ.மி.க. அளவு தண்ணீர் கடலுக்குப் போனது. அதிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைக் கர்நாடகம் தடுத்துப் பயன்படுத்தி, தமிழ்நாட்டை வறட்சியாக்கும் வன்கொடுமைதான் தொடர்ந்து கொண்டுள்ளது. கடலுக்கு மிச்ச நீர் போனது என்ற பேச்சுக்கே இடமில்லை!
இவ்வாண்டு, வேளாண்மைப் பொய்த்து, கருகிய பயிரைப் பார்த்து இருநூறுக்கும் மேற்பட்ட உழவர்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மாரடைப்பால் இறந்தார்கள்.
இன்னொரு இமாலயப் பொய்யைக் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க. தண்ணீரைக் கொடுத்தது போக, மிச்சமுள்ள நீரைத் தேக்கத்தான் புதிய அணை என்பதே அந்தப் பொய்! 

காவிரித் தீர்ப்பாயம் 1991 சூன் 25இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு, 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு போதும், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் திறந்ததில்லை! நயவஞ்சகத்தை நஞ்சாகக் கொடும்பில் அடக்கிக் கொண்டு, நாக்கில் தேன் தடவி கர்நாடக அமைச்சர் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடுவோம் என்கிறார். 

ஆனாலும், கர்நாடக அமைச்சரின் வஞ்சகப் பேச்சில் வழுக்கிக் கொண்டு உண்மை வெளிவந்துவிட்டது! 

“கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளில் நீர் நிரம்பிவிட்டால் மிச்ச நீரை தமிழ்நாட்டிற்குத்தான் திறந்துவிட வேண்டிய நிலை உள்ளது. கிருட்டிணராஜசாகர், கபினி அணைகளை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு இல்லை. எனவே, புதிய அணை கட்ட முடிவெடுத்தோம்” என்கிறார் செயச்சந்திரா. (“Karnataka ends up releasing excess water to Tamil Nadu from its four reservoirs. And there is no scope for expanding the KRS and the Kabini reservoirs. Hence, it is important to take up this project” he stated, Feb 16 - 2017, Deccan Herald News Service).

இப்பொழுது தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும், தமிழ் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி!
இதுவரை இந்திய அரசு, அது காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் காவிரிச் சிக்கலில் காவிரித் தீர்ப்பாய முடிவுகளையோ, உச்ச நீதிமன்ற ஆணைகளையோ செயல்படுத்தாமல் இனப்பாகுபாடு காட்டி அவற்றை முடக்கிப்போட்டது. கர்நாடகத்தின் தமிழர் எதிர்ப்பு வெறிச் செயலுக்கு இந்திய அரசு துணை போனது. 

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியாளர்களும், அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் இந்திய அரசோடு கூட்டணி கொண்டோ அல்லது நல்லுறவு வைத்துக் கொண்டோ செயல்பட்ட போதிலும், காவிரி உரிமையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அவர்களால் இதுவரை முடியவில்லை. இனி என்ன செய்யப் போகிறோம்? 

காவிரிச் சிக்கல் டெல்டா மாவட்டங்களின் உழவர் சிக்கல் என்று சுருக்கக்கூடாது. தமிழ் நாட்டில் சென்னையிலிருந்து, இராமேசுவரம் தீவு வரை, புதுவை – காரைக்கால் உட்பட இருபது மாவட்டங்களுக்குக் குடிநீர் அளிக்கிறது காவிரி! வேளாண்மை இழப்பு ஒரு பக்கம், குடிநீரே இன்றி தவிக்கும் நிலை இன்னொரு பக்கம். தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு வெளியேறப் போகிறோமா, அல்லது அனைத்து மக்களும் அறப்போராட்டம் நடத்தி, காவிரி உரிமையை மீட்கப் போகிறோமா என்பதே நம்முன் உள்ள கேள்வி! 

கர்நாடகத்தின் சட்டவிரோதச் செயல்களை – இனவெறிச் செயல்களைத் தடுக்கும் சட்டக்கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. அதற்கான ஆற்றலை இந்திய அரசமைப்புச் சட்டம் நடுவணரசுக்கு வழங்கியுள்ளது. ஆனால், அதுபோல் இந்திய அரசு செயல்படாமல் தமிழர்களை வஞ்சித்து, இனப்பாகுபாடு காட்டுகிறது. 

சட்டப்படி செயல்படும் வகையில் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்கும் மாபெரும் மக்கள் திரள் அறப்போராட்டங்களை தமிழர்கள் நடத்தியாக வேண்டும். இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய தமிழர் ஒத்துழையாமைப் போராட்டம் தொடங்க வேண்டும்.
ஒத்துழையாமை இயக்கத்தின் கோரிக்கைகள் :
---------------------------------------------------------------------------
1. இந்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திட வேண்டும்.
2. மேக்கேத்தாட்டில் கர்நாடகம் அணை கட்டுவது சட்டவிரோதம் என்று இந்திய அரசு, கர்நாடக அரசுக்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 355இன் கீழ் கட்டளைக் கடிதம் அனுப்ப வேண்டும்.
சட்டப்படியான இவ்விரு கோரிக்கைகளையும் இந்திய அரசு நிறைவேற்றும்வரை, இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். 

“நீதி தவறிய கொடிய அரசுடன் ஒத்துழைப்பது பாவச்செயல்” என்று கூறி காந்தியடிகள் 1920இல் காலனி ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். இனப்பாகுபாட்டுடன் தமிழர்களை வஞ்சிக்கும் இந்திய அரசுக்கு எதிராக, காந்தியடிகள் காட்டிய வழியில், தமிழர் ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும். 

• தமிழ்நாட்டிற்கு வரும் இந்திய அமைச்சர்கள் அனைவருக்கும் கருப்புக்கொடி காட்டுவோம். அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம்.
• இந்திய அரசு கொடுக்கும் விருதுகளைத் தமிழர்கள் வாங்க மறுப்போம். 

• காவிரியில் நீதியை நிலைநாட்டும் வரை தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுப்போம். 

• கர்நாடகப் பொன்னி அரிசி மற்றும் கர்நாடக உற்பத்திப் பொருட்களை வாங்க மறுப்போம். அவை தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுப்போம். 

• நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்துவோம். 

தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் அறப்போராட்டமாக, இந்தத் தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தை செயல்படுத்துவோம். தமிழர் உரிமை மீட்போம்!

Labels:

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்