<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/6955529389241309188?origin\x3dhttp://thozharmaniyarasan.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

"தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்" -- தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

Monday, January 30, 2017

======================================
தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
======================================

தைப்புரட்சி என்று போற்றப்படும் தமிழர் புரட்சி வழங்கியுள்ள பாடங்கள்:

1. இக்கால இளைஞர்களும் - மாணவர்களும் - ஆண்களும் பெண்களும் - சமூகச் சிந்தனை இன்றி நுகர்வு வாழ்வில் தோய்ந்து உதிரிகளாக இருக்கிறார்கள் என்ற வசையைத் தைப்புரட்சி புரட்டிப் போட்டு விட்டது. 

சமூகப் பொறுப்பு, தமிழினப் பொறுப்பு ஆகிய வற்றில் பெரியவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு இளைஞர்கள் இலட்சோப இலட்சமாய்த் தமிழ் நாடெங்கும் களத்தில் இறங்கி விட்டார்கள்! அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர்! எல்லாம் தெரிந்தவர்களே!

2. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள் ளோம்; ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தன்னலப் பூதங்களே தவிர, தமிழர்களுக்கான தற்காப்புத் தலைமைகள் அல்ல என்பதைத் தைப்புரட்சி உணர்த்தி விட்டது. 

அவற்றின் தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சுமந்து கொண்டிருக்கும் புகழ்ச்சிப் பட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை விடவும் பொருத்தமற்றவை என்பதைக் காட்டி விட்டது! 

3. இந்தியன், திராவிடன் என்ற போலி இனப் பெயர்களைத் தைப்புரட்சிப் புயல், வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசி விட்டது. 

“தமிழன்டா!” என்ற முத்திரை முழக்கத்தைத் தைப்புரட்சி நமது பதாகைகளுக்கு வழங்கியுள்ளது. 

“தமிழன்டா” முழக்கத்தில், ஆண்களும் பெண்களும் அடக்கம்; அனைத்து மதங்களும் சாதிகளும் அடக்கம்!

4. இந்தியத் தேசியவாதக் கட்சிகள் - தமிழ் நாட்டில் வெகுமக்கள் கட்சிகளாக - இனி ஒரு பொழுதும் எழ மாட்டா! இந்தியத்தேசியவாதிகள் பெயருக்குக் கட்சி நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற வரலாற்றுப் பாதையை வரையறுத்து விட்டது. 

5. பெரும் பெரும் நாளிதழ்கள் வார ஏடுகள், பெரும் பெரும் தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களைவிட வலிமை மிக்க ஊடகம் ஒவ்வொரு தமிழன் - தமிழச்சி கையிலும் பையிலும் இருக்கின்றது, அது சமூக வலைத்தளம் என்று காட்டிவிட்டது! 

அவற்றின் வழியாக நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள், அழைப்புகள் ஆகியவற்றால்தான் தைப்புரட்சி ஏற்பட்டது.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று 
உடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்தநாளோ?

என்று ஏங்கிக் கேட்டார் பாவேந்தர். அந்நாள் இந்நாள் என்று மெய்ப்பித்தார் அவர் பேரப்பிளைகள்! 

எச்சரிக்கைகள்
==============
1. இசவாதிகள் 
------------------------
தமிழர் எழுச்சியைத் திசை திருப்பிட “இசவாதிகள்” (Isamists) கடுமையாக முயல்வார்கள். “இசவாதிகள்” என்பவர் யார்? வெளிநாட்டில், வடநாட்டில், தமிழ்நாட்டில் முந்தியத் தலைமுறையினர் அவரவர் வாழ்ந்த காலத்தில், அவரவர் எடுத்துக் கொண்ட சிக்கலுக்கேற்ப தயாரித்த சிந்தனைத் தொகுப்புகளை அப்படியே இப்போதும் ஏந்திக் கொண்டு, அந்த சிந்தனைகளுக்கேற்ப தமிழ்ச் சமூகத்தை மாற்றிட முயன்று தோற்போர் ஆவர்!

நோயாளியை ஆய்வு செய்து அவருக்கு வந்திருக்கும் தனித்துவமான நோயை அறிந்து அதற்கான மருத்துவ முறையைக் கையாண்டு, மருத்துவம் பார்ப்பவர் சிறந்த மருத்துவர்! என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி! தமிழ்நாட்டில் மந்திரவாத இசங்களுக்குப் பஞ்சமில்லை! 

ஒட்டுமொத்தத் தமிழர்களின் எழுச்சியைக் கூறுபோட்டுப் பங்கிட்டுக் கொள்ள இசவாதிகள் ஓடி வருவார்கள்! 

2. ஆரிய இந்துத்துவா வாதிகள்
--------------------------------------------------
ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள் - தமிழர் அடையாளங்களை இந்துத்துவா அடையாளங்களாகத் திரித்துக் காட்டித் திருதராட்டிர ஆலிங்கனம் செய்து தமிழர் எழுச்சியைச் சீர்குலைக்க வருவார்கள். எதிரி மீது பாசம் காட்டுவது போல் பாவனை செய்து கட்டித் தழுவி இறுக்கிக் கொன்று விடுவதுதான் திருதராட்டிர ஆலிங்கனம்!

ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள், புராணக் கதைகளற்ற தமிழர் பொங்கல் விழாவை, கருங்கிராந்தி நோய் என்பது போல் சங்கராந்தி என்பார்கள்! தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள்! ஆனால் ஆரியவர்த்த மாநிலங்களான உ.பி., ம.பி., பீகார் போன்றவற்றில் தமிழரின் பொங்கல் விழாவைப் போல் போகி தொடங்கி ஏறுதழுவல் வரை நான்கு நாள் நிகழ்வுகள் இல்லை.

3. இந்திய ஏகாதிபத்திய அரசு
-----------------------------------------------
இந்திய ஏகாதிபத்தியத்தின் நடுவண் அரசு தமிழர்களின் தைப்புரட்சி எழுச்சியைப் பழிவாங்கும் வெறியுடன் குறுகுறு என்று பார்த்துக் கொண்டுள்ளது. என்னென்ன வகைகளில் தமிழர்களை ஒடுக்கி, அடக்கி வைக்கலாம் என்று கருவிக் கொண்டுள்ளது. 

காலம் காலமாக நடந்துவந்த காளை விளை யாட்டான சல்லிக்கட்டை நடத்திட அனுமதி கோரி, தமிழ்நாடெங்கும் இந்தியாவில் எங்குமே காணாத அளவிற்கு, கோடிக்கணக்கான மக்கள் அங்கங்கே குவிந்து, ஆறு நாட்கள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தினார். மோடி அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டி யலிலிருந்து காளையை நீக்கியிருக்க வேண்டும். தானே முன்வந்து விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் - 1960-ஐ திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. 

மாணவர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக செயல்பாட்டில் இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். தில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தபோதுகூட, தம்மால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் மோடி! 

தமிழினத்தின் மீதுள்ள நிரந்தரக் காழ்ப்புணர்ச்சி யால், பா.ச.க. நடுவண் ஆட்சி குறிப்பாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, “தமிழர்களின் ஞாயத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்குப் பணிந்து போவதுபோல் ஆகும்” என்று கருதி, தமிழ்நாடு அரசே சட்டத்திருத்தத்துடன் அவசரச்சட்டம் இயற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது. 

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதைத் தட்டிப் பறித்தது மோடி அரசு! தொடர்ந்து இனப்பாகுபாடு பார்த்துதான் தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது. நம் பண்பாட்டு விழாவான ஏறுதழுவலை தடை செய்வதிலும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியா கொண்டுள்ளது. 

“தமிழ்நாட்டின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம். நடுவணரசின் உளவுத்துறை விவரங்களைத் திரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி கேட்டால், உடனடியாக துணை இராணுவப் படைகளை அனுப்பி வைப்போம்” என்று தில்லி உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இந்து ஆங்கில நாளோடு (24.01.2017) செய்தி வெளி யிட்டுள்ளது. 

4. இனப் பெயரில் போலிகள்
---------------------------------------------
தமிழினம், தமிழ்த்தேசியம் என்ற பெயரிலேயே பதவி வேட்டையாடும் போலிகள் புகுவார்கள்; புதிதாகவும் உருவாவார்கள்! 

5. தைப்புரட்சியைப் புகழ்ந்து அல்லது திறனாய்வு செய்து கட்டுரை எழுதுவோரில் பலர், கடைசியில் திராவிடவாதத்துக்கு ஆதரவாகவோ அல்லது இந்தியத் தேசியத்திற்கு ஆதரவாகவோ எழுதி முடிப்பர். இவ்வாறு தமிழின எழுச்சியை மடைமாற்றுவர். 

தைப்புரட்சியில் பங்கு கொண்ட - தைப்புரட்சியை ஆதரித்த தமிழர்கள் அனைவரும் இந்த எச்சரிக்கை களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அ.இ.அ.தி.மு.க. அரசு
====================
சென்னைக் கடற்கரை, மதுரை, கோவை, திருச்சி, அலங்காநல்லூர் மற்றும் தமிழ்நாடெங்கும் ஆறு நாட்கள் வரை மக்கள் திரள்7 அறப்போராட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதித்ததும், வன்முறை ஏவாமல் இருந்ததும் ஓர் அரசியல் உத்திதான்! 

ஆனால் அதற்கு முன், அவனியாபுரத்தில் 14.01.2017 அன்று அறவழியில் சாலை ஓரமாக இயக்குநர் வ. கவுதமன் தலைமையில் அமர்ந்து, சல்லிக்கட்டு தடை நீக்கிட முழக்கமிட்ட இளைஞர்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்திக் காயப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து, அவர்களைத் தளைப்படுத்தினார்கள். அதனால் அ.தி.மு.க. அரசுக்குப் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டது. 

இப்பின்னணியில் 17.1.2017 அன்று சென்னை மெரினா கடற்கரையில், வெள்ளம் போல் திரளத் தொடங்கிய தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசு கைவைக்கத் தயங்கியது. மாணவர்களும் இளைஞர் களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந் தெல்லாம் வந்து குவிந்தார்கள். 

தமிழ்நாட்டின் பிற பெரு நகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் அங்கங்கே கூடிப் பெருகியது. இரவு பகலாகக் கூட்டம் தொடர்ந்தது. 

சல்லிக்கட்டு உரிமையுடன், காவிரி உரிமை, உழவர் உரிமை, கச்சத்தீவு, பாலாறு, முல்லைப்பெரியாறு எனப் பல உரிமைகள் பேசினர். மீத்தேன் எதிர்ப்பு, கெயல் குழாய் எதிர்ப்பு, வியோ பால் புட்டி - பெப்சி - கோகோ கோலா பாட்டில்கள் உடைப்பு, பன்னாட்டு வேட்டை நிறுவனங்கள் எதிர்ப்பு, பீட்டா வெளியேற்றல் எனத் தமிழ்நாட்டின் முகாமையான வாழ்வியல் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இயற்கை வேளாண்மை, தமிழர் மரபு உணவு பற்றியெல்லாம் உரையாடினர்.

கட்டுக்கோப்பாகவும், தன்னொழுங்குடனும், கண்ணியத்துடனும், ஆண்களும் பெண்களும், மாண வர்களும் இலட்சக்கணக்கில் ஒரே இடத்தில் இரவு பகலாக இருந்து முழக்கமிட்டனர். சுற்றுப்புற தூய்மை பேணினர். 

தாராள மனம் படைத்த தமிழ்ப் பெருமக்கள் உணவு, தின்பண்டம், கழிவறை வசதி எனப் பல உதவிகள் செய்தனர். பொங்குமாங்கடலென மக்கள் குவிந்தனர். 

எனவே வன்முறையை ஏவினால், 1965 மொழிப் போரில் காங்கிரசு காவல்துறையையும் இராணுவத் தையும் ஏவி இரத்தக்குளியல் நடத்தியதுபோல் ஆகிவிடும்; தமிழ்நாட்டில் காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வர அதுவே தொடக்கமாக இருந்தது என்ற வரலாற்றை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, தமிழர் உரிமைக்கான அறப்போராட்டம் நடத்திய மக்களுக்கு உதவியாக இருந்தது.

சல்லிக்கட்டு உரிமை வழங்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு! அந்தச் சட்ட நகலை வெளியிடாமல் மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு, மக்கள் வெள்ளத்தைக் கலைந்து போகச் சொல்லி 23.01.2017 அன்று விடியற்காலையிலிருந்து நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர். 

சென்னைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் கொண்டு வந்து இறக்கினர்; சரக்குந்துகளில் தடிகளையும் கொண்டு வந்தனர். 

பிடித்து இழுத்தும், தள்ளியும், தூக்கி எறிந்தும், அடித்தும், விரட்டியும் மக்களைக் கலைத்தனர். பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள், மாணவிகள் என எல்லாரும் அடிக்கப்பட்டனர். காவல்துறையினரே, தானி வண்டிக்குத் தீ வைத்தனர்; காவல் நிலையத் திற்கும் தீ வைக்கப்பட்டது. 

சல்லிக்கட்டு உரிமையை மீட்டிடும் சட்டம் கொண்டு வந்த பின் தடியடி நடத்தியது ஏன்? அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன்? இதுதான் அரசின் வன்மம்! காவல்துறையின் பொது உளவியல் இதுதான்! 

காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க வில்லை. தமிழ்நாடு அரசு போட்ட சட்டத்தை எதிர்த்து, எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் - தடைப் பட்டியலில் காளை தொடர்வது ஒரு வினாக் குறியே! 

இந்த ஒன்றைத் தவிர, மற்றபடி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்கதே! 

இவ்வாறு இருக்கும்போது, பொறுமையாக இந்த உண்மைகளை விளக்கி, கூட்டத்தைப் பதற்றமின்றி விடை பெறச் செய்திருக்கலாம். 

வரலாறு காணாத அளவிற்கு உலகமே வியக்கும் வகையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சியை அமைதியாகக் கலைய விட்டால், மீண்டும் போராட அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதி, உடலில் மட்டுமின்றி நெஞ்சத்திலும் காயத்தோடு அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கருதியிருக்கலாம். 

அடுத்து வரும் காலங்களில், சனநாயகப் போராட் டங்களை வழமைபோல் அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யலாம். அதேவேளை தமிழர்களை அண்டிப் பிழைக்கும் நுகர்வோராக மாற்றுவதற்கு மேலும் சில இலவசங்களையும் வழங்கலாம். இவ்வாறான இரு வழிகளில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் எழுச்சிக்குப் பிந்திய செயல்முறையை வகுத்துக் கொள்ளும். 

இவ்வாறான அரசின் போக்கை எதிர் கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை. 

தி.மு.க.
========
தைப்புரட்சியாக விளங்கிய தமிழர் எழுச்சியையும், அதில் பங்கேற்றோர் தாக்கப்பட்டதையும் பயன்படுத்தி, மக்கள் செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் உத்திதான் தி.மு.க.வுக்கு இருக்கும். உண்மையான தமிழின உரிமை மீட்பு நடவடிக்கைகளில், தி.மு.க. இறங்குவதற்கு வாய்ப்பில்லை. திருந்துவதற்கும் வாய்ப்பில்லை. அக்கழகத்தின் ஆட்சியில்தான் பல்வேறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. 

சிங்கள அரசு இந்தியாவின் துணையோடு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் நடத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த காலத்தில், அதைக் கண்டித்து 2008 - 2009 ஆண்டுகளில் மேடையில் பேசியவர்கள் மீது “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” (N.S.A.), அரசுக் கவிழ்ப்புப் பரப்புரை (Sedition – 124A) போன்ற சட்டங்களின் கீழ் வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி. 

போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றி வளைத்து, அடித்து நொறுக்கி எலும்புகளை உடைத்துப் படுகாயப்படுத்தியது காவல்துறை (17.02.2009). ஒரு நீதிபதி எலும்பும் முறிக்கப்பட்டது. 

அரசு அமைத்த விசாரணை ஆணையம், குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அறிக்கை கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. 

இது அண்மைக்கால தி.மு.க. அரசியலுக்கான ஒரு சான்று! அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம்! ஏராளம்!

காங்கிரசு கூட்டணி அரசில் தி.மு.க. அமைச்சர் பதவி வகித்தபோதுதான், “காளை” தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது (2011). 

எனவே, அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இனத்துரோக அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்!

மாணவர்களின் வரலாற்று
முன்னெடுப்பும் மக்களின் பங்களிப்பும்
===================================

ஆதிக்க இந்தியை விரட்டிட 1965-இல் மாணவர்கள் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போருக்குப் பின், ஈழத்தமிழர் விடுதலைப்போர் உள்ளிட்ட தமிழர் உரிமைகளுக்கு பலப் போராட் டங்கள் தமிழ் மாணவர்கள் நடத்தியிருந்தாலும், “தைப்புரட்சி” என்ற தமிழர் புரட்சியை முன்னெடுத்த மாபெரும் வரலாற்றுப் பாத்திரம் இன்றையத் தமிழ் மாணவர்களுக்கே இருக்கிறது. 

அடையாளப் போராட்டம் நடத்தாமல், விளம்பரப் போராட்டம் நடத்தாமல், பிரமுகத்தனம் காட்டாமல், இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய மாணவர்களின் நேர்மையும் ஒழுக்கமும் தமிழ் மக்களை ஈர்த்தது. மாணவர் போராட்டமாக முகிழ்த்தது, பெற்றோரும் பங்கேற்ற மாபெரும் தமிழர் வெள்ளமாக மலர்ந்தது. 

மக்களின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்களுக்கும், ஆதரவுச் செயல்பாட்டு வடிவங்களுக்கும் அளவில்லை என்பதை இப்போராட்டத்தில் மாணவர்களும் மக்களும் காட்டினார்கள். 

தலைமை இல்லாப் போராட்டமா?
===============================
இம்மாபெரும் தைப்புரட்சியைத் தலைமை இல்லாப் போராட்டம் என்று ஊடகத்தார் குறிப்பிட்டனர். வெளித்தோற்றத்திற்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால் தான் பெற்ற பிள்ளைகளின் போராட்டத் திற்குத் தமிழன்னைதான் தலைமை தாங்கினாள்; அதாவது தமிழ்மொழி வழி பெற்ற தமிழின உணர்வுதான் தலைமை தாங்கியது. 

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் ஆசான்கள், சான்றோர்கள், வீரர்கள், மாமன்னர்கள் நடத்திய வாழ்வும் வழங்கிய சிந்தனைகளும் வாழையடி வாழையாய் தமிழர்களுக்கு இன உணர்ச்சியையும், அறச்சிந்தனைகளையும், போர்க் குணத்தையும் வழங்கி வருகின்றன. வற்றாத அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே இன்றைய தைப்புரட்சிக்குத் தலைமை தாங்கியது! 

தைப்புரட்சியில் எழுந்த தமிழர் எழுச்சி காட்டாற்று வெள்ளமாய்க் காணாமல் போய்விடும் என்று சிலர் கணிக்கிறார்கள். அப்படிக் காணாமல் போய்விட வேண்டும் என்று தமிழினப் பகைவர்களும் வஞ்சகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

ஒரு சமூக நெருக்கடியில் எழுந்த மக்கள் கொந்தளிப்பு அலை சாதாரண காலத்திலும் அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்ப்பது கற்பனைவாதம்! அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம்! அல்லது எதிரிகளின் எதிர்பார்ப்பு! 

தைப்புரட்சி இளைஞர்களே, மாணவர்களே! உங்களைச் சுற்றி வளைக்கப் பலர் வட்டமிடுவார்கள்! நீங்கள் உங்கள் சொந்த அறிவாற்றல் கொண்டு தேர்வு செய்யுங்கள்! 

நீங்கள் யாரையோ பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டவும் பொறுப்புடைய வர்கள்; உரிமை உடையவர்கள்! 

இசவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! எந்த இசத்திலும் உள்ள முற்போக்கான கருத்துகளை, சமகாலத்திற்குத் தேவையான கருத்துகளை தமிழர் உளவியல் ஏற்கும்; ஆனால் அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளாது. 

தத்துவம் வழிகாட்டவும் செய்யும், வழி மறிக்கவும் செய்யும்!

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, சிறு சிறு தேசிய இனங்களின் அடையாளங்களை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது. பெருந்தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட சிறு தேசிய இனங்கள் விடுதலை பெற உந்துவிசை அளித்து வருகிறது தகவல் தொழில்நுட்பப் புரட்சி!

இரசியப் பேராதிக்கக்திடமிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்தன. பிரித்தானியாவில் ஆங்கிலேயப் பேராதிக்கத்திலிருந்து பிரிந்திட அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர், எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தன. கனடாவிலிருந்து கியூபெக், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா, பாஸ்க், சீனாவிலிருந்து திபெத், உய்கூர் ஆகிய தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன. 

நாம் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி பேர் இருக்கிறோம் இந்தியாவின் இதர மாநிலங்களில் இரண்டு கோடிப் பேர் இருக்கலாம். உலகில் மொத்தம் 12 கோடித் தமிழர்கள் மக்கள் தொகை வாழ்கிறோம். பிரித்தானியா, பிரான்சு தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்!

உலகத்தின் இன்றையப் போக்கு தேசிய இன இறையாண்மையை உறுதிப்படுத்துவதுதான். உலகமயம் என்ற பெயரில் வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எல்லை கட்டி வெளியே தள்ள தேசிய இனத் தாயக உரிமையும், தாயக வரலாற்று - பண்பாட்டு உளவியல் உணர்ச்சியும் மிகமிக இன்றியமையாதவை!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பன்னாட்டு வேட்டை நிறுவனங்களை வெளியேற்றும்; தடுக்கும்! தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும்! வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மக்களாகிய தமிழர்களை தமிழ்நாட்டிலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்றி வருகிறார்கள். வெளியாரை வெளியேற்றாவிட்டால் தமிழர் வாழ்வுரிமை பாதிக்கப்படும். 

தமிழ்த்தேசிய இறையாண்மையே, ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கும்! 

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள், ஏறுதழுவுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டுரிமைகளைக் காக்கும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, கச்சத்தீவு, கடல் உரிமை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி உரிமைகளை மீட்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பெப்சி - கோக்கோ கோலா, வியோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களை விரட்டும்; உள்நாட்டு மரபு உற்பத்திகளை வளர்க்கும்! மண்ணுக்கேற்ற புதுமைகளைப் படைக்கும்!

தமிழர் அறம் மனித சமத்துவத்தை நிலைநாட்டும்!

தைப்புரட்சியில் தமிழர்களாக ஒருங்கிணைந்த இந்து, முசுலிம், கிறித்துவ மக்கள் ஒற்றுமையைத் தமிழ்த்தேசியமே வளர்க்கும்; சாதியைப் பின்னுக்குத் தள்ளி தமிழராய் ஒருங்கிணைந்த இன உணர்ச்சியைப் பெருக்கும்!

ஆணும் பெண்ணும் சமமாய்க் களம் கண்ட தைப்புரட்சியில் சமத்துவத்தைத் தமிழ்த்தேசியமே தொடரும்; தலைவன் - தலைவி என்ற சங்ககால சமத்துவத்தை மேலும் மேன்மைப்படுத்தும்!

இந்தியன், திராவிடன் என்ற அயல் இன ஆதிக்கப் புனைவுகளைப் புறந்தள்ளுங்கள்! தமிழராய்த் தலை நிமிருங்கள்!

“தமிழன்டா!”

Labels: ,

0கருத்துக்கள்:

Post a Comment

<< முகப்பு பக்கம்


தோழர் மணியரசன்
அவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை இத்தளத்தில் காணலாம்.
வாசகர்களின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

Web This Blog

தொகுப்பு

முந்தைய பதிவுகள்

தோழமைத் தளங்கள்