உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை என்று காட்டிக் கொள்கிறதா? -- தோழர் பெ. மணியரசன்
Wednesday, March 22, 2017
========================== ==================
உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக்
கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை
என்று காட்டிக் கொள்கிறதா?
========================== ==================
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
========================== ==================
காவிரி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அமிதவராய், நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நேற்று (21.03.2017) கூடி, சில உரையாடல்களை நடத்திவிட்டு, வழக்கை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து 11.07.2017 அன்று ஒத்தி வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஓரங்க நாடகம் கடந்த 2016 – மார்ச் 28ஆம் நாள் முதன் முதலாக அரங்கேறியது. அப்பொழுது, நீதிபதி செலமேஷ்வர் தலைமையில் நீதிபதி ஆர்.கே அகர்வால், நீதிபதி எ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு காவிரி வழக்கை - தனிக்கவனம் செலுத்தி தொடர்ந்து விசாரித்து விரைந்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அமர்வு என்று கூறிக்கொண்டது. ஆனால், நேற்று வரை ஓராண்டு காலத்தில் இந்த சிறப்பு அமர்வு சாதித்தது என்ன என்ற கேள்வி தமிழர்கள் நெஞ்சில் கனலாய் எரிகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஓரங்க நாடகத்தில், நகைச்சுவைக் காட்சிக்குப் பஞ்சமில்லை! தொடர்ந்து நாலாவது அமர்வாக கர்நாடகம் 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று நேற்றும் சிறப்பு அமர்வு “கட்டளையிட்டுள்ளது”.
இதுவரை ஏன் திறந்துவிடவில்லை என்ற வினாவுக்கோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாத குற்றத்திற்காக கர்நாடக முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் போடவில்லை என்ற கேள்விக்கோ உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கவில்லை.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறது என்று தோன்றுகிறது அல்லது இவ்வாறு நாடகமாடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு கொஞ்சம்கூட வெட்கமில்லை என்று கருத நேரிடுகிறது.
காவிரி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற நரேந்திர மோடி அரசின் சட்ட விரோத முடிவை தகர்த்து, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு என்று 09.12.2016 அன்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றம், காவிரி வழக்கில் ஏற்கெனவே தான் கட்டளையிட்டபடி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசுக்கு ஏன் கட்டளையிடவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன் தமிழர்களுக்கு சம நீதி இல்லை என உச்ச நீதிமன்றம் கருதுகிறதா?
கடந்த 15.03.2017 அன்று நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மக்களவையில் முன் வைத்துள்ள “மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம் – 1956” – திருத்த முன் வடிவிற்கான நோக்கம் குறித்த அறிக்கையில், காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்படும் என்றால், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு இரத்து செய்யப்படும் என்று பொருள்! காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்த பின், புதிதாக உருவாக்கப்படும் அனைத்திந்தியாவுக்கான ஒற்றைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசை புதிதாக மனுப் போடச் சொல்கிறார், உமாபாரதி!
இந்த அநீதி பற்றி தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்றத்தில் எடுத்துப் பேசியதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்றமும் அது பற்றி கருத்து எதுவும் கூறவில்லை. உமாபாரதி முன்வைத்துள்ள சட்ட முன் வடிவு ஏற்கப்பட்டு, காவிரித் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டு அதன் தீர்ப்பும் இரத்து செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு உச்ச நீதிமன்றம் சூலை மாதம் தொடங்கி எந்த வழக்கை விசாரிக்கும்?
இந்திய அரசு தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைக்கு எதிராக நயவஞ்சகமாக செயல்படுகிறது என்பதை கடந்த பல ஆண்டுகளாக நாம் அடையாளம் கண்டு வந்தோம். இப்பொழுது உச்ச நீதிமன்றமும் தமிழர்களுக்கு எதிராக திரும்பியுள்ள அநீதி, சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது.
இதற்கெல்லாம் சட்டப்படியான மற்றும் அரசியல் வழிகளின்படியான எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமிழ்நாடு அரசு யாரோ எவரோ போல் இருப்பது – எட்டுக் கோடித் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல, இழிவுபடுத்தும் செயலும் ஆகும்!
இவ்வாறான பின்னணியில், அனைத்துப் பகுதித் தமிழ் மக்களும் அங்கங்கே ஒருங்கிணைந்து இருபது மாவட்டங்களுக்குக் குடிநீரும், பன்னிரெண்டு மாவட்டங்களுக்குப் பாசன நீரும் அளிக்கும் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மக்கள் திரள் போராட்டங்கள் நடத்துவதே நம் உரிமையை மீட்டுத்தரும்!
வருகின்ற 28.03.2017 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் – காவிரித் தாய் காப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களும் வருமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான வழியில் காவிரி வழக்கை நடத்திக் கொண்டிருப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
Labels: அறிக்கைகள், காவிரி உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்