தீர்ப்பு தீர்வாகாதாம் : காவிரித் தீர்ப்பை காலி செய்ய புதிய சட்ட மசோதா -- தோழர் பெ. மணியரசன்
Saturday, April 1, 2017
========================== =====================
தீர்ப்பு தீர்வாகாதாம் :
காவிரித் தீர்ப்பை காலி செய்ய புதிய சட்ட மசோதா
========================== =====================
தோழர் பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.
========================== =====================
காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்து, அதன் இறுதித் தீர்ப்பை இரத்து செய்யும் நோக்கம் கொண்ட, இந்திய அரசின் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுத் திருத்தச் சட்டம் – 1956, நாடாளுமன்ற மக்களவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, 15.3.2017 அன்று இதை மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இதன்படி, “மாநிலங்களுக்கிடையலான தண்ணீர்ப் பூசல் தீர்ப்பாயம்” என்ற பெயரில் இந்தியா முழுமைக்குமான புதிய ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
“இந்தத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட நாளில் மற்றும் அந்நாளுக்குப் பின் செயல்பாட்டில் உள்ள தீர்ப்பாயங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படும். கலைக்கப்படும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும்”.
“ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கு முன் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்த (Adjudicated and settled) – முந்தையத் தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்ப் பூசல் சட்டத்திருத்தம் – 2017இல், மறுபடியும் விசாரிக்கப்பட மாட்டாது.
இதில் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வந்த (Adjudicated and settled) என்பதன் பொருள் என்ன? விசாரிக்கப்பட்டு, இறுதித்தீர்ப்பு வழங்கப்பட்ட (Adjudicated and finaly awarded) என்ற சொற்களுக்கு மாறாக – “முடிவுக்கு வந்த” என்ற சொற்களை ஏன் போட்டது மோடி அரசு?
சட்ட அகர முதலி அளிக்கும் விளக்கத்தின் படி ஒரு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு (Adjudication) என்பது தொடர்புடைய தரப்பார் அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆணை ஆகும்.
ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டாலே அது அந்தக் கட்டத்தில் தீர்வு காணப்பட்டது (Settled) என்று பொருள். காவிரிச் சிக்கல் பொருத்தளவில் தீர்ப்பு தீர்வாகாது என்கிறதா மோடி அரசு?
தீர்ப்பாயம் என்பது நீதிமன்றம். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஓர் அமர்வு! அது வழங்கிய தீர்ப்பை – முடிவுக்கு வந்த தீர்ப்பு, முடிவுக்கு வராதத் தீர்ப்பு என்று பிரிப்பதேன்?
ஒரு நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்பைச் செயல்படுத்துவது அரசின் பொறுப்பும் அதிகாரமும் ஆகும். முடிவுக்கு வந்த தீர்ப்பு என்பதற்கு என்ன பொருள் என்று இச்சட்டத்திருத்தத்திற்கான நோக்கங்களும் காரணங்களும் என்ற அறிக்கையில் (Statement of Objects and Reasons) நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி விளக்கம் கூறியுள்ளார்.
“மொத்தம் எட்டு தீர்ப்பாயங்கள் தீர்ப்புகள் வழங்கின. இவற்றில் மூன்று தீர்ப்புகளை மட்டுமே தொடர்புடைய மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன. காவிரித் தீர்ப்பாம் 26 ஆண்டுகளாகவும் இரவி பியாஸ் தீர்ப்பாயம் 30 ஆண்டுகளாகவும் செயல்பாட்டில் உள்ள போதிலும், அவற்றால் இன்று வரை வெற்றிகரமான தீர்ப்புகளை உருவாக்க முடியவில்லை. மேலும் இவற்றின் செயல்பாட்டிற்குக் காலவரம்பு கிடையாது”.
காவிரித் தீர்ப்பாயத்தால் வெற்றிகரமான தீர்ப்பை உருவாக்க முடியவில்லை என்று உமாபாரதி சொல்வதன் பொருள் என்ன? தொடர்புடைய மாநிலங்கள் இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்று பொருள்! இதில் உள்ள உண்மை என்ன?
காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5-இல் இறுதித் தீர்ப்பு வழங்கியபோது, தமிழ்நாட்டுக்கு மிகவும் குறைந்த அளவு நீரே (192 ஆ.மி.க.) ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுப்போட்டது. கர்நாடகமோ, தமிழ்நாட்டிற்கு அதிகமான தண்ணீர் ஒதுக்கப்பட்டுவிட்டது என்று மறுசீராய்வு மனுப் போட்டது. கேரளம், புதுவை மாநிலங்களில் சிக்கல் இல்லை.
பின்னர் தமிழ்நாடு அரசு 192 ஆ.மி.க. தீர்ப்பை நிறைவேற்றினால் போதும் என்ற நிலைக்கு வந்துதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. ஆனால் கர்நாடகம், தீர்ப்பாய விசாரணையின் போது, 30 ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என்று வாதாடியது. அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறது.
மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படாத தீர்ப்பு என்று காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை உமாபாரதி கூறுவது முழு உண்மையல்ல. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாத தீர்ப்பு என்று நேரடியாகக் கூறிட, உமாபாரதிக்கு கூச்சம் இன்னும் மிச்சமிருக்கும் போலும்!
கர்நாடகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத தீர்ப்பு என்பதால் – அத்தீர்ப்பை வழங்கிய காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்திட மோடி அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகம் வெளியே காட்டிக் கொள்ளாமல் கொண்டாடிக் களிக்கிறது.
தமிழ்நாட்டில் மோடி அரசின் இந்த மோசடியை காவிரி உரிமை மீட்புக் குழுதான் முதன் முதலில் பொது அரங்கத்தில் அம்பலப்படுத்தி, செய்தியாளர் சந்திப்பில் கூறியது. ஆனால் தமிழ்நாடு அரசோ அல்லது முதன்மை எதிர்க் கட்சியோ, தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிரந்தரமாகக் காவு கொடுக்கும் மோடி அரசு நாடாளுமன்ற மக்களவையில் 15.3.2017 அன்று முன்வைத்துள்ள மேற்கண்ட திருத்த முன்வடிவு பற்றி வாய் திறக்கவில்லை.
தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் காவிரி உரிமையைக் காப்பதில் உண்மையான அக்கறை அற்று, அவ்வப்போது அடையாள முயற்சிகளை – கணக்குக் காட்டும் போராட்டங்களை எடுப்பதுதான், கர்நாடகத்திற்கும் இந்திய அரசுக்கும் துணிச்சல் கொடுத்து தமிழ்நாட்டிற்கு எதிரான வன்முறைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் முறையே எடுக்கின்றன.
ஓர் உரிமை இயல் வழக்கில், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு வழக்கில் உள்ள அனைத்துத் தரப்பையும் கட்டுப்படுத்தும். மாறாக – வழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தீர்ப்பைக் கட்டுப்படுத்துவார்களா?
தீர்ப்புதான் அனைவரையும் கட்டுப்படுத்தும். தீர்ப்பைச் செயல்படுத்த மறுககும் தரப்பின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
காவிரித் தீா்பாயத்தின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, அரசிதழில் அதை வெளியிட ஆணையிட்டு, நடுவண் அரசும் 19.2.2013 அன்று அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அதன்பிறகு அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குரிய சட்ட ஏற்பும், அங்கீகாரமும் பெற்றுள்ளது.
மாநிலங்கள் ஏற்கவில்லை, எனவே புதிதாக உருவாக்கப்படும் ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கு காவிரி வழக்கை அனுப்புகிறோம் என்று காரணம் கூறி, சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2016 செப்டம்பர் 20ஆம் நாள் ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. கடைசி நேரத்தில் “அதை நாடாளுமன்றம்தான் அமைக்க வேண்டும்” என்று கூறி நரேந்திர மோடி அரசு தடுத்தது. இப்போது நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிரந்தரமாகத் தடுக்கும் சட்ட முன் வடிவை முன் வைத்துள்ளது.
இந்தப் புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்தின் சிறப்பு என்று மோடி அரசு கூறுவது என்னவெனில், இத்தீர்ப்பாயத்திற்கு வந்த வழக்கை – சமரசப் பேச்சு நடத்தி இணக்கம் காண ஒன்றரை ஆண்டு காலவரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் சமரசம் வரவில்லை எனில் மேற்படி ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் அமர்வு (Bench) மூன்றாண்டுகளுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற காலவரம்பாகும். அடுத்து 70 அகவைக்கு மேல் உள்ள நீதிபதி பதவி விலக வேண்டும்.
இவை தவிர, இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் புதிய வழிமுறை எதுவும் கூறப்படவில்லை. இத்தீர்ப்பையும் நடுவண் அரசுதான் நிறைவேற்ற வேண்டும். இதே நடுவண் அரசுதான்! அது எப்படி இருக்கும்?
(தஞ்சையில் 28.03.2017 தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றும் வரும் காவரித்தாய் காப்பு முற்றுகைப் போராட்டக் களத்திலிருந்து, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் எழுதி அளித்த கட்டுரை).
Labels: கட்டுரைகள், காவிரி உரிமை
0கருத்துக்கள்:
Post a Comment
<< முகப்பு பக்கம்